திருப்பம் -01
திருப்பம்-01
அந்த வீடு மொத்தமும் பெரும் பரபரப்பாக இருந்தது. “ஏம்மா.. அந்த பெட்டிய எடுத்துட்டு வர இம்புட்டு நேரமா ம்மா ஒனக்கு? சீக்கிரம் கொண்டா” என்று தீபிகா குரல் கொடுக்க,
“ஆ… யக்கா. ஒன் அனக்கத்துக்கு (சத்தத்துக்கு) ஊரே கூடும் போல. எம்புட்டு கத்துற? ஒன்னய வச்சுட்டு மாமா எப்படித்தேம் குடும்பம் நடத்துறாவளோ?” என்று சத்தம்போட்டபடி, தனலட்சுமியான அவளது தங்கை வந்தாள்.
“நல்லா பேசுவடி. ஒனக்கு வாய் கூடிதேம் போச்சு. சீக்கிரம் கால்கட்ட போட்டு அனுப்பினாதேம் சரி ஒனக்குலாம்” என்று தீபிகா கூற,
“மைணி.. அத்தே குறுக்கு வலிக்குனு ரூம்ல உக்காந்துருக்காவ. இந்தாங்க பெட்டி” என்றபடி தீபாகவின் தம்பியும், தனாவின் அண்ணனுமான திருவிக்ரமனின் மணைவி, கார்த்திகா வந்தாள்.
“கார்த்தி, இப்பென்ன இந்தம்மாக்கு குறுக்கு வலி? ஓம்புருஷனெங்க? காரெல்லாம் ரெடியா? பெட்டிய கொண்டுபோய் அதுல வையு” என்று தீபிகா கூற,
கார்த்திகாவும் சரியென்று நகர்ந்தாள்.
தீபிகாவின் கரம் பற்றிய தனம், “திரியக்கா பொண்ணு பாக்க வரலியாம். அம்மா ஃபோன் பேசுறேம்னுதேம் உள்ள போனாவ க்கா” என்று கூற,
தீபிகாவிற்கு எங்கேயோ இடித்தது.
“இந்த திரி என்னத்தத் திரிக்க காத்துருக்காளோ தெரியிலியே” என்று புலம்பியவள், “எங்கடி ஏம் வீட்டுக்காரரு?” என்று கேட்க,
“அண்ணன ரெடி பண்ண ரூமுக்கு போனாவ” என்று கூறினாள்.
“சரியாபோச்சுடி.. இவிய உள்ளக்கருத்து வந்தமாதிரிதேம்” என்ற தீபிகா, “சரிசரி.. நீ போயி அவியளயெல்லாம் கெளப்பு. நான் அம்மாவ பாத்துட்டு வரேம். அப்பா விக்ரம் கூடத்தான வெளிய போனாவ? கார்த்திய கூப்டு என்னனு விசாரி” என்ற தீபிகா அன்னையின் அறைக்குள் சென்றாள்.
“அம்மா..” என்று உள்ளே வந்தவள், கையிலுள்ள அலைபேசியை பார்த்தபடியே குழப்பமாய் அமர்ந்திருந்த அன்னையைக் கண்டு அருகே அமர,
“தீபி.. என்னடி? எல்லாம் ரெடியா? போலாமா?” என்றார்.
“எல்லாம் ரெடிதேம். நீ என்ன இங்கிட்டு உக்காந்துருக்கவ?” என்று தீபிகா கேட்க,
“உங்கக்கா திரிபுரா வரவேயில்லியே.. ஃபோனடிச்சு கேட்டாலும் எகன மொகனயாதேம் பதில் பேசுறா. என்னமோ சரியில்லையோனு படுது” என்று கூறினார்.
'ம்க்கும்.. அந்த சீமந்த புத்திரி என்னத்தயோ திரிக்கக் காத்திருக்கா. இங்க எங்கிட்ட புலம்பிட்டு அவ திரிக்க ஆரமிச்சா கூடசேந்துதேம் திருகப்போற’ என்று அன்னையை நினைத்து அழுத்துக் கொண்டவள், “ஏதாது வேலையாருக்கும் ம்மா. அவ வீட்டுகாரவ கூட ஏதும் ஒடக்காருக்கும் (சண்டையாருக்கும்). நீ வா. நல்ல நேரத்துக்குள்ள போவனும்ல?” என்று கூற,
“ம்ம்..” என்று எழுந்தார் தெய்வநாயகி.
கன்னியாகுமரி மாவட்டத்தில், நார்கர்கோவிலிலுள்ள ஆளூரே அவ்வூர்!
நாகர்கோவிலில் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் காட்சிகளோடு பசுமை மாறாது விளங்கும் இவ்வூரில், தான் அக்குடும்பத்தின் வாசம்!
நாகர்கோவிலைப் பூர்வீகமாகக் கொண்டு காலப்போக்கில் வேறு ஊர்களுக்கு பிழைப்பிற்காக பிரிந்து சென்று, கடந்த தலைமுறையில் மீண்டும் சொந்தவூர் திரும்பிய தெய்வநாயகி தான் அவ்வீட்டின் தலைமையரசி!
அந்த காலத்திலியேயே அவர்களைவிட நல்ல வசதியில் இருந்த, சுயம்புலிங்கத்துடன் திருமணம் செய்துவைக்கப்பட, அவ்வூரிலேயே அவர்களது வாசமும் தொடர்ந்தது.
சுயம்புலிங்கம் ஊரே மதிக்கும் நல்ல மனிதர். வயல், ரப்பர் தோட்டம், தென்னந்தோப்பு, ரைஸ் மில், பூக்காடு என்று மிகுந்த செழிப்போடு வாழ்பவர். தன்னிடம் உதவி என்று கேட்டு வந்தவருக்கு இல்லை என்று சொல்லாத நற்குணம் படைத்தவர். இயல்பிலேயே தனக்குப்போகத்தான் தானமும் தர்மமும் என்று பழகியிருந்த தெய்வநாயகிக் கூட கணவனின் இக்குணத்தில் கவர்ந்திழுக்கப்பட்டார் என்பது தனி கதை.
இருவருக்கும் திருமண வாழ்வின் பரிசாக மூத்த மகள் திரிபுரசுந்தரியும், அவளையடுத்து நான்கு வயது வித்தியாசத்தில் தீபிகா, அடுத்து திருவிக்ரமன், திருமாவளவன் என்று இரட்டைப் பிள்ளைகளும், இறுதியாக, தனலட்சுமி என்ற பெண் பிள்ளையும் உதித்து, வம்சத்தைத் தழைக்கச் செய்தனர்.
அசலூரிலிருந்து ஆயிரமாயிரம் வரண்கள் வந்தபோதும், தன் மகள் தன் கண்ணெதிரேதான் வாழ்க்கை வாழவேண்டும் என்ற பிடிவாதம் கொண்ட தெய்வநாயகிக்காக, திரிபுரசுந்தரியை அவ்வூரிலேயே தூரத்து சொந்தத்தில் வந்த, சிவபாதசேகரனுக்கு மணம் முடித்து வைத்தனர்.
அவளையடுத்து தங்களின் ரப்பர் தோட்டத்தோடு ரப்பர் ஆலையம் கட்டுவதற்கு தொழில் துணைவராக வந்த மகாதேவன், தீபிகா மீது காதல் வயப்பட, அவனது குணநலன்களில் பெரும் திருப்தி கொண்ட சுயம்புலிங்கமும் மனமாற திருமணம் முடித்து வைத்தார். ஊர், வசதி, சனம் என பெரிதும் வித்தியாசம் இல்லாததால் தெய்வநாயகியும் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இனிதாக முடிந்த திருமண வாழ்வின் சாட்சியாய், இரண்டு வருட இடைவெளியில் ஆண் ஒன்று பெண் ஒன்றென பெற்று, மகிழ்வானன், தேவிகா என பெயரிட்டு மகிழ்ந்தனர்.
தீபிகாவின் திருமணத்தையடுத்து, திருவிக்ரமனுக்கு, அசலூரிலிருந்து கார்த்திகாவை மணம் முடிக்க, ஊள்ளூர் சம்பந்தம் எடுக்கவில்லையென தெய்வநாயகி ஒரு ஆட்டம் ஆடிவிட்டுதான் ஓய்ந்தார்.
திருமணமான ஐந்து மாதத்திலேயே தாம்பத்திய வாழ்வின் சாட்சியாய், கார்த்திகா கருவுற்று, அழகிய ரோஜா மொட்டாய் ஒரு பெண் குழந்தையை ஈன்று, ஒளிசுடர் என்று பெயரிட்டு தற்போது ஒன்றரை வயது மகளைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆனபின்பும்கூட தனக்கென்று ஒரு பிள்ளை செல்வம் இல்லாததில் திரிபுரசுந்தரிக்கு பெரும் வருத்தம். இயல்பிலேயே தான் தான் எல்லா இடத்திலும் முதன்மை வகிக்க வேண்டும் என்று குணமுடையவள் திரிபுரா.
முதல் பெண், வீட்டின் மூத்த வாரிசு, புகுந்த வீட்டின் மூத்த மருமகள் என்று அனைத்திலும் முதலாக இருப்பவளுக்கு அதில் ஒரு தனி கர்வமும் உண்டு. ஆனால் குழந்தை செல்வத்தில் மட்டும் பின்தங்கியிருக்க, அவளது கர்வம் சற்றே ஆட்டம் கண்டு, அதன்மூலமாக தனது அன்னையிடம் அதிக சலுகைகளையும் பெற்று வருவது அவள் உடன் பிறந்தோருக்கே சற்று மனத்தாங்களாகத்தான் இருந்தது.
மற்ற நால்வரும் திரிபுராவிடம் அதிகம் சிரித்துப் பேசிக்கொள்ள மாட்டர் என்றாலும் கூட, அவளை ஒதுக்கியெல்லாம் வைத்ததில்லை. அதைகூட திரிபுரா தன்மீதான மரியாதை என்ற கண்ணோட்டத்திலேயே பார்த்து வந்தாள்.
இப்படியான குடும்பத்தில் அடுத்து தனது வாசத்தை பதிவுசெய்ய காத்திருப்பவளை, பெண்பார்க்க வேண்டி செல்வதற்கே இந்த பரபரப்பு!
வீட்டிற்குள் நுழைந்த சுயம்புலிங்கம், “ஏ மக்கா” என்று உரக்க அழைக்க,
வெளியே மகிழுந்தின் அருகே தன் மகளைத் தோளில் போட்டுத் தட்டிக் கொண்டிருந்த திருவிக்ரமன், சமையலறையில் வேலைகளை முடித்திருந்த கார்த்திகா மற்றும் தனலட்சுமி, அறையிலிருந்து தீபிகா மற்றும் தெய்வநாயகி ஆகியோர் கூடத்திற்கு வந்தனர்.
“மாப்பிள்ளை எங்கத்தா?” என்று தீபிகாவைப் பார்த்து சுயம்புலிங்கம் வினவ,
“தம்பி ரூமுலதேம் ஐயா” என்றவள்,
“ஏங்க” என்று குரல் கொடுத்தாள்.
ஆறடிக்கும் சற்றே கூடுதல் உயரத்தில், சிக்ஸ் பேக் தேகமெல்லாம் இல்லாமல், உயரத்திற்கு ஏற்ற உடல்வாகோடும், முசுமுசுவென்று கருகருத்த பெரிய சுருள் கேசத்துடனும், பட்டு வேட்டி சட்டையுடனும் தயாராக இருக்கும் தன் மச்சானின் தோளில் கரமிட்டபடி வந்தான், மகாதேவன்.
“அத்தான்.. அண்ணாவ செம்மயா ரெடி பண்ணிட்டீய போங்க” என்று தனலட்சுமி கூற,
அனைவரும் திருமாவளவனைப் பார்த்து அழகாய் புன்னகைத்தனர்.
திராவிட நிறம், முறுக்கிய மீசை, மழித்தெடுக்கப்பட்ட தாடியின் பலனாய் வளுவளுவென மின்னிய கன்னங்கள், அடர்ந்த கண்கள், அதன்மேல் படர்ந்த புருவமென அழகனாகவே இருந்தான் வளவன்!
அவனை அப்படியே உரித்து வைத்தார் போன்ற தோற்றத்தில் இருக்கும் விக்ரமனிடம் உள்ள ஒரே வித்தியாசம், அவனது கேசம் மட்டும் தான்.
வளவனுக்கு புதர் போன்ற சுருள் முடியாக இருக்க, விக்ரமனுக்கு படிய சீவி நிற்கவைத்த நேர் கேசமாக இருக்கும். அதனால் அவ்வீட்டில் அவர்களை அடையாளம் காண பெரிதாக எந்த சிரமமும் இருந்ததில்லை.
“இந்த முடிதாம்லே ஒனக்கு ஹைலைட்டே” என்று மகாதேவன் கூற,
“அடபோங்கத்தான். குறுவி கூடு மாதிரி இருக்குனு பொண்ணு நம்பட்டியாலயே (மண்வெட்டி) பத்திவிடாமருந்தா சரி” என்று வளவன் சிரித்தான்.
“ஒனக்கென்னடா கொற.. ராசாவாட்டம் இருக்கம்ல ஏம் புள்ள?” என்று தெய்வநாயகி திருஷ்டி எடுத்தபடி வினவ,
“கொறையெல்லாம் இல்லை. மண்டையில கொஞ்சம் நெறயத்தேம் இருக்கு” என்று சிரித்தான், விக்ரமன்.
“அடிங்” என்று வேட்டியின் நுனியைப் பிடித்துக் கொண்டு தன் இரட்டயனைத் தூறத்த வந்தவன், தந்தையின் பார்வையில் நல்ல பிள்ளையாய் மாற, “அந்த பயம் இருக்கட்டும்” என்று கூறிய விக்ரமனும் தந்தையின் பார்வையில் கப்சிப் ஆனான்.
அவர் கெடுபிடியான தந்தையெல்லாம் இல்லை. நல்ல விசேஷம் என்று கூடி செல்ல இருக்கையில் இந்த விளையாட்டையெல்லாம் மூட்டைக்கட்டிவையுங்கள் என்று பொறுப்பை நினைவுருத்துவதே அவர் நோக்கம்.
“திரிபுரா வரலையா நாயகி?” என்று சுயம்புலிங்கம் வினவ,
“வரலையாமுங்க” என்று சோர்வாகக் கூறினார்.
'ஏன்?’ என்று கேட்டு மனைவியின் புலம்பலை சம்பாதித்து ஒரு நல்ல காரியத்திற்கு செல்ல வேண்டாம் என்று எண்ணியவர், “சரிசரி.. மாப்பிள்ள, தீபிகா, தனம், வளவன் ஒரு காருல போவட்டும். நாம கார்த்தி, பாப்பா, மகிழு, தேவி, விக்ரமன் ஒரு கார்ல போவோம்” என்று கூற,
சரியென்ற தலையசைப்போடு அனைவரும் புறப்பட வெளிவந்தனர்.
“ஐயா.. நந்தியப் பாத்துட்டுப் போவமே” என்று வளவன் கேட்க,
“ஆரும்லே நீயு.. வந்து பாத்துகிடுவம் வா” என்று மகாதேவன் கூறினான்.
“இல்ல அத்தான். அவேம்தேம் எனக்கு ராசி. அவேன பாத்துட்டுப் போவமே” என்று வளவன் இறைஞ்சுதலாய் கேட்க,
மற்றவர்களுக்கு மறுக்கத் தோன்றவில்லை.
“கொட்டாவுக்கு விடும்லே வண்டிய” என்று அவர் கூற,
வண்டி அவர்களது வயலின் அருகே சென்று நின்றது.
“இந்தா வந்துடுதேம்” என்று இறங்கிய வளவன், வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வரப்பின் வழியே ஓடினான்.
“ஏ மோனே பாத்து போலே..” என்று கத்திய சுயம்புலிங்கம், “அவேம் கூட போலே” என்று அடுத்த வண்டியிலிருக்கும் விக்ரமிடம் கூற, அவனும் தம்பியைத் தொடர்ந்து சென்றான்.
“கெளம்பிப் போற நேரத்துக்கு இது ஆவனுமா இப்ப?” என்று தெய்வநாயகிக் கேட்க,
“அவேம் மனச சந்தோசமா வச்சுக் கூட்டிட்டுப் போனாதேம் நல்ல முடிவா எடுப்பியாம். வுடு நாயகி” என்று சுயம்புலிங்கம் கூறினார்.
ஓட்டமாய் ஓடியவன் வயலைத் தாண்டி, வந்து, “நந்தி..” என்று கத்தி அழைக்க,
மாட்டுக் கொட்டகையிலிருந்து, ஜல்லிக்கட்டிற்கு சீரிப் பாய்வதைப் போல் பாய்ந்து வந்தான், நந்தி என்ற காளை.
ஆம் காளையே! அவன் நேசம் மிகுந்த காளையது. உடன் பிறந்தோனைப் போல் அவன் உணர்வோடு கலந்திட்டக் காளையது!
நந்தியை ஆரத்தழுவிய வளவன், “அண்ணே ஓம் அண்ணிய பாக்கப் போய் வாரேம்லே” என்க, மாடு வேகமாய் தலையாட்டியது.
அவர்களின் மற்ற மாடுகளும் வெளியே வர, “லேய்.. அம்புட்டு பேரும் வாராய்ங்க.. போய் வந்து நீயு ஓன் தம்பிய அணச்சுக்க. இப்பம் வாலே போவம்” என்று தம்பியை இழுத்து வந்தான் விக்ரமன்.
தெய்வநாயகிக்கு தெரிந்தவர் மூலமாக வந்த சம்மந்தமே அது. இவர்கள் அளவு வசதியில்லை என்றாலும் சற்றே நடுத்தரத்திற்கு கொஞ்சம் கூடுதலான தரம் கொண்ட குடும்பமே பெண் வீடு!
அரசு வங்கியில் பணி புரியும் சச்சிதானந்தம், தனியார் கல்லூரியில் துறைத்தலைவராக பணிபுரியும் மனைவி தாட்சாயினி. அவர்களுக்கு சங்கீதா, சங்கமித்ரா என்ற இரண்டு பெண் பிள்ளைகள்.
மூத்தவள், பக்கத்து ஊரில் தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் அவிநாஷை திருமணம் செய்துகொண்டு தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக பட்டம் பெற்றிருக்கின்றாள்.
இரண்டாமவள்… உயிரியலில் இரண்டு பட்டம் முடித்து, மருத்துவக்குறியீடு படித்து, ஒரு நிறுவனத்தில் மறுத்துவக்குறியீட்டாளராக (medical coding) பணி புரிந்து வருகிறாள்.
தன்னவன் என்ற வட்டத்தில் இதுவரை யாரையும் நுழைத்துக்கொள்ளாமல் ‘சிங்கில்டா.. கெத்துடா' என்று சுற்றிக் கொண்டிருந்தவளது வாழ்வில் திடீர் திருப்பமாய் வந்து, தித்திக்கும் பூகம்பத்தைப் படைக்க வந்துகொண்டிருக்கின்றான், திருமாவளவன்.
Comments
Post a Comment