திருப்பம்-03

 திருப்பம்-03




மாடிக்கு வந்தவர்கள் பசுமை எழில் கொஞ்சும் சுற்றுப்புறத்தைப் பார்த்தபடி நிற்க,


சங்கமித்ராவின் படபடப்பு கொஞ்சம் அதிகமானது.


'என்ன இவங்க எதுமே பேச மாட்றாங்க. எதாது ஆரமிச்சா நானும் பேசுவேன்ல?’ என்று எண்ணியவள், அவனை நோக்க,


“ரொம்ப நேரமா என்னையேதேம் பாக்கீய. பேச மாட்டீயளா?” என்று கேட்டான்.


அவன் கேட்டதில் திடுக்கிட்டவள், “அ..அப்படிலாம் இல்லை” என்று தடுமாற,


“ரிலாக்ஸ்” என்று அவளைப் பார்த்து புன்னகைத்தவன், “நான் திருமாவளவன். எங்க குடும்பம் ரொம்ப பெருசு. எனக்கு ரெண்டு அக்கா, ஒரு தங்கை, ஒரு ட்வின் பிரதர். குடும்பமா எல்லாருமே சேந்து தொழில் பண்றோம். மூத்த அத்தான் மட்டும் தனியா சூப்பர் மார்கெட் வச்சு நடத்துறாங்க. அக்காங்க ரெண்டு பேருமே பக்கத்துல ஒரே ஊர்லதான் கட்டித்தந்திருக்கோம்” என்று கூற,


“த..தெரியுங்க” என்றாள்.


அவளுக்குப் புரியுமோ? புரியாதோ என்று தனது வட்டார வழக்கை விடுத்து சாதாரணமாகவே பேசினான். பிற இடங்களில் கல்லூரி பயின்று வந்தவனுக்கு அப்படிப் பேசுவதொன்று சிரமமாக இருக்கவில்லை.


“இருந்தாலும் என் பக்கமிருந்து நான் சொல்லனும்ல?” என்றவன், “ரொம்ப பெரிய குடும்பமா இருக்கேனு உனக்குக் கண்டிப்பா பயமா தான் இருக்கும். பட் நீ பயப்படவேண்டாம். என் குடும்பம் அப்படிங்குறதுக்காக சொல்லலை. நிஜமாவே எங்க குடும்பம் ரொம்ப கலகலப்பாதான் இருக்கும். அதுக்காக எல்லாருமே ஒத்த கருத்துள்ள மனிதர்கள் கிடையாது. கைக்கு அஞ்சு விரல் மாதிரி முரணான குணங்களும் எங்களுக்குள்ள இருக்கு. அதை ஒருத்தருக்கொருத்தர் அனுசரிச்சு நடந்துக்கும்வரை எங்களுக்குள்ள பிரச்சினைனு வந்தது இல்லை” என்று கூற,


அவனை ஆச்சரிமாய் பார்த்து நின்றாள்.


“என் ஃபேமிலி பேக்கிரௌண்ட் இதுதான். மத்தபடி என்னைபற்றி சொல்லனும்னா.. நான் ஒரு ஆவ்ரேஜ் ஸ்டூடென்ட். படிச்சு முடிச்சதும், எங்க ரப்பர் தோட்டம், தேங்க தோட்டம், அப்றம் எங்க சரக்கோட ஏற்றுமதி வேலையெல்லாம் என் கைல எடுத்துகிட்டேன். வீட்டில் அவங்கவங்க பார்க்கும் வேலைக்கான தனிப்பட்ட சம்பாத்தியம் அவங்கவங்களுக்குதேம்” என்றவன், “வேற என்னை பற்றி உங்களுக்கு என்ன தெரியனும்னாலும் கேளுங்க” என்றான்.


'ஏ அப்பா.. எவ்ளோ பேசுறாரு’ என்று அவள் மனதோடு நினைக்க,


“நான் கொஞ்சம் டாகடிவ். நிறைய பேசுவேன். ஆனா இடத்துக்கு தக்க இருந்துப்பேன்” என்று கூறினான்.


தான் மனதில் நினைத்ததற்கு பதில் கொடுத்தவனை சற்றே அதிர்ந்து பார்த்தவள், ‘இப்ப நான் என்ன பேச?’ என்று யோசிக்க,


“உன்னைப் பத்தி சொல்லு. நீ என்ன பண்ற?” என்று கேட்டான்.


“நான் சங்கமித்ரா. பயாலஜி படிச்சுட்டு மொடிகல் கோடரா வர்க் பண்றேன்” என்றவள் கொஞ்சம் தயங்க,


“எது சொல்லனும்னாலும் தயங்காம சொல்லுமா” என்று கூறினான்.


“நி..நீங்க ல்..லவ்” என்று அவள் தடுமாற,


“இல்லமா. நான் யாரையும் லவ்லாம் பண்ணதில்லை” என்று சிரிப்போடு கூறியவன், “நீ?” என்று கேட்டது தான் தாமது.


“அய்யோ இல்ல இல்ல” என்று படபடப்பாய் தலையசைத்தாள்.


“கூல் கூல்.. என்ன கொலை பண்ணியானா கேட்டேம்? காதல் தானே?” என்று அவன் கூற,


“இல்ல.. அப்பாக்கு லவ் மேரேஜ்லாம் சுத்தமா பிடிக்காது. அதனால நானும் சின்ன வயசுலருந்தே லவ்லாம் பிடிக்காம தான் இருந்தேன்” என்றாள்.


“இருந்தேன்னா? அப்ப இப்போ லவ் பிடிக்குமா?” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன், ஒற்றை புருவம் உயர்த்தி அவன் கேட்க, திருதிருவென விழித்தாள்.


“என்னமா?” என்று அவன் கேட்க,


“இ.. இல்ல..” என்று வெகுவாக தயங்கியவள், “உங்களுக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா?” என்று கேட்க,


“எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. உனக்கு சம்மதம்னா மேற்கொண்டு பேசலாம்” என பளிச்சென்று கூறினான்.


'உன்னோட இயல்பை மறைக்காம வெளிப்படுத்தும்போது அதை அவங்க எப்படி கையாலுறாங்க என்பதில் உன் பதில் இருக்கும்’ என்று அவிநாஷ் கூறியது அவளுக்கு நினைவிலாட,


“அப்பாக்கு லவ் மேரேஜ்னா சுத்தமா பிடிக்காது. அதெல்லாம் ரொம்ப தப்புனு நினைப்பாங்க. அப்பா கொஞ்சம் ஓல்ட் ஜெனரேஷன் இல்லையா? அதனால தான். மத்தபடி அப்பா ரொம்ப நல்லவங்க” என்றவளைப் பார்க்க அவனுக்கு சிரிப்பாக வந்தது.


“ம்ம்..” என்று அவன் கூற,


“நானுமே லவ்னா கெட்ட விஷயம் போலனு தான் இருந்தேன். ஸ்கூல் படிச்சு முடிக்கும்வரை லவ்னா கெட்ட வார்த்தை ரேஞ்சுக்கு யோசிச்சு வச்சுருந்தேன்” என்று கூறினாள்.


'அடப்பாவி' என்று மனதோடு நினைத்துக்கொண்டவன், “ம்ம்..” என்க,


“ஆனா காலேஜ் போனபிறகு லவ் மேலருந்த அபிப்ராயம் கொஞ்சம் மாறிச்சு” என்றவள் பதட்டமாய் அவனைப் பார்த்து, “அதுக்காக யாரையும் லவ்லாம் பண்ணலை” என்றாள்.


“அட நான் என்ன உன்னை ஜட்ஞ் பண்ணி மார்க் போடவா வந்திருக்கேன்” என்று அவன் சளிப்பாய் கூற,


“ச்ச ச்ச.. அப்படியில்ல..” என்றவள் மீண்டும் தன் கதைக்கு வந்து, “நான் நிறைய நாவல்ஸ் படிப்பேன். என்கூட படிச்ச வேலைபார்த்த சில பொண்ணுங்களுக்கு லவ் மேரேஜ் தான். சிலர் ஆஃப்டர் மேரேஜ் லவ். அதெல்லாம் பாக்கும்போது லவ் மேல ஒரு க்ரேஸ் வந்துச்சு” என்றாள்.


“ம்ம்..” என்று தற்போது அவள் பேச்சை கொஞ்சம் சுவாரசியமாய் அவன் கவனிக்க,


“ஆனா லவ் பண்ற அளவுலாம் எனக்கு தைரியம் கிடையாது. அப்பானா எனக்கு ரொம்ப இஷ்டம். அப்பாக்கு பிடிக்காததை செய்ய முடியாது என்னால. அதான் அப்பாவா பார்த்து காட்டுற மாப்பிள்ளைய..” என்று இழுத்தாள்.


“சோ நம்ம லவ் பண்ணனும்னு ஆசைப்படுற?” என்று கைகளைக் கட்டிக்கொண்டு புன்னகை முகமாய் அவன் கேட்க,


வியர்த்துவிட்டது அவளுக்கு.


“லவ் பண்ணனும்னு ஆசை” என்று வெகு தயக்கத்துடன் அவள் கூற,


அவன் புறம் பெரும் அமைதி!


தன் கை வளைகளில் இருந்த ஜிகினாவை உதிர்த்தபடியே சிரம் தாழ்த்தி நின்றிருந்தவளது குழந்தைத்தனமான ஆசை அவனை சுவாரசியப்படுத்தியது.


பார்ப்பதற்கு முதிர்வானப் பொண்ணாய் தெரிபவளிடம் இப்படியொரு குழந்தைத்தனமான ஆசையை அவன் எதிர்ப்பார்த்து வரவில்லை!


அவள் பேச்சில் பெரும் தயக்கம் தெரிந்ததிலேயே காதலை எந்த அளவு அவள் தள்ளி நிறுத்தி வைத்திருக்கின்றாள் என்றும், தயக்கத்தைத் தாண்டிய ஏக்கத்தில், காதல் மீது எத்தனை ஆசை வைத்திருக்கின்றாள் என்றும் அவனால் உணர முடிந்தது.


“எனக்கு காதல் மேல நம்பிக்கை இல்லாம எல்லாம் இல்லை. அப்பா அம்மாவா பொண்ணு பார்க்கும் முன்ன யார்மேலயாது லவ் வந்தா கண்டிப்பா லவ் மேரேஜ் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். ஆனா அப்படிலாம் யார்மேலயும் லவ் ஃபீல் வந்ததில்லை” என்றவன், ஆழ்ந்த குரலில், “ஐ லவ் டு லவ்.. லவ் கம் அரேஞ் கேள்வி பட்டிருக்கேன். ஆனா இந்த அரேஞ்ச் கம் லவ் புதுசாருக்கு” என்று கூற,


அவனை பதட்டமாய் நிமிர்ந்து பார்த்தவள், “எனக்கு கல்யாணம் ஜோக் இல்லை. யாரையாவது விரும்பி, அப்பாவை எதிர்த்து எல்லாம் என்னால முடியாது. ஆனா அப்பா காட்டுறவரை நிறைய ல்..லவ் பண்ணி கல்யாணம் செஞ்சுக்கனும்னு ஆசை. அதான்… நி.நீங்க தப்பா எடுத்துக்காதீங்க” என்று கூறினாள்.


காற்றில் அசைந்தாடும் அவள் குடை ஜிமிக்கிகளைப் பார்த்தவன், பதட்டமும் தயக்கமும் போட்டிப்போடும் அவள் முகம் நோக்கி, ‘கியூட்’ என்று நினைத்துக் கொண்டான்.


“எனக்கு சம்மதம்” என்று அவன் கூற,


பட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.


தனது அலைபேசி இலக்கங்களை அவளிடம் கொடுத்தவன், “லவ் பண்ண நான் ரெடி” என்று கூற,


புரிந்தறியா உணர்வில் படபடக்க அவனைப் பார்த்தாள்.


“காதல் ஒன்னும் தப்பில்லைமா. உன் பக்கம் புரியுது. உன் ஆசையும் புரியுது. நான் உன்னை தப்பாலாம் நினைக்கலை. எனக்கு உன்னைக் காதலிக்க எந்த ஆட்சேபனையும் இல்லை. தானா ஒருத்தர் மேல் பிறக்கும் உணர்வைக் காதல்னு சொல்வாங்க. இங்க இவர்தான்னு காட்டப்படும் ஒருத்தர்மேல அந்த இயல்பான காதல்… வித்தியாசமா இருந்தாலும் ரசிக்கும்படியாதான் இருக்கு” என்று புன்னகையுடன் அவன் கூற,


“கல்யாணம் பண்ணி கணவன் மேல வருமே.. அதுவும் காதல் தானே?” என்று மெல்லிய குரலில் கூறினாள்.


“நிச்சயமா..” என்றவன், “எனக்கு காதல் புதுசில்ல. ஐ மீன்.. காதல் உன்னைப்போல் புதுமையான உணர்வில்லை.

ஆனா உன் காதல் அகராதி புதுசு. போகப்போக புரிஞ்சுக்குறேன்” என்று கூற,


அவனை ஆச்சரியமும் வியப்புமாய் பார்த்தாள்.


அதில் புன்னகைத்துக் கொண்டவன் கீழே வர,


தானும் சிரம் தாழ்த்தியபடி வந்து நின்றாள்.


மணமக்களிடம் அவரவர் விருப்பம் கேட்கப்பட, இருவரும் சம்மதம் கூறியதில், தெய்வநாயகி சென்று தங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த பூவையும் ஆரத்தையும் அவளுக்கு அணிவித்து நிச்சயத்திற்கான தேதியையும் குறித்துக் கொண்டார்.


அதன்படி அனைவரும் புறப்பட, மாடியில் சென்று நின்றுகொண்டவளை வாகனத்தில் ஏறும் முன், நிமிர்ந்து பார்த்தவன், பளிச்சென்ற புன்னகையைச் சிந்திவிட்டுச் சென்றான்.


“சிரிப்பெல்லாம் பலமாருக்கு?” என்று அவளருகே வந்த சங்கீதா கேட்க,


மெல்லிய புன்னகையை பதிலாகக் கொடுத்தாள்.


“உனக்கு ஓகேதான?” என்று சங்கீதா கேட்க,


“ம்ம்.. ஓகேதான் சங்கி” என்று புன்னகைத்தாள்.


அப்போது அங்குவந்த அவிநாஷ், “பாப்பா..” என்க,


அத்தானை நிமிர்ந்து பார்த்து, “நீங்க சொன்னது சரிதான் அத்தான். நம்ம இயல்பை வெளிப்படுத்தும்போது அவங்க எப்படி அதை கையாளுறாங்க என்பதுலயே நம்ம பதில் தெரிஞ்சுடும்” என்று வானில் உலா வரும் மேகங்களைப் பார்த்தபடி கூறினாள்.


“ஆஹாங்.. சங்கு.. டயலாக்கா?” என்று சங்கீதா கேலியில் இறங்க,


“கீதா..” என்று மனைவியை அடக்கியவன், சங்கமித்ரா தோளில் கரமிட்டு அரவணைத்துக் கொண்டு, “உனக்கு ஓகேதானேடாமா? அவங்கள பிடிச்சிருக்கா? மாமாக்காகலாம் யோசிச்சு சொல்லக்கூடாது” என்று கேட்டான்.


இமைகள் சிறகடிக்க, அவனுடன் பேசிய சொற்ப நிமிடங்களை அசைபோட்டவள், “புடிச்சிருக்கு அத்தான்” என்று கூற,


“சந்தோஷம்டா. உனக்கு என்ன தோன்றினாலும் அத்தான்ட சொல்லு. எதுக்கும் பயப்பட வேணாம். ச்சில் அன்ட் ரிலாக்ஸ். ஓகே?” என்று அவிநாஷ் கூற,


அவனை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தவள், “எனக்குதான் அப்பா போல ஒரு அத்தான் இருக்காங்களே? அப்றம் ஏன் பயப்படனும்?” என்று கூறினாள்.


“ச்ச! எனக்கு ஒரு அக்கா இல்லாம போயிட்டா. இருந்திருந்தா நானும் இப்புடி ஒரு அத்தானப் பிடிச்சிருப்பேன்” என்று சங்கீதா கூற,


“ம்ஹும் சங்கி.. அத்தான்லாம் யுனிக் பீஸ். ஏதோ நான் செஞ்ச புண்ணியம் எனக்கு இப்புடி ஒரு சுவீட் அத்தான் கிடைச்சிருக்காங்க” என்று சங்கமித்ரா கூறினாள்.


அக்கா தங்கைகளின் பேச்சு செல்ல சண்டையாக மாறி வாக்குவாதம் துவங்க, இருவருக்கும் இடையில் ஆடு திருடியவன் போல் மாட்டிக் கொண்டு முழித்தவனை ஆபத்பாந்தவனாய் தோன்றிய அவன் மாமியாரே காத்து சென்றார்.





Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம் -02