திருப்பம் -02

 



திருப்பம்-02


அந்த அழகிய அளவான வீட்டில் தனதறையில் கண்ணாடி முன் அமர்ந்துகொண்டு படபடக்கும் மனதை சமன் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தாள், சங்கமித்ரா.


அவளுக்கு நகைகளை அணிவித்துக் கொண்டிருந்த சங்கீதா, “ஓய் சங்கு.. என்னடி டல்லடிக்குற?” என்று கேட்க,


“பொண்ணு பாக்கும்போது உனக்கு எப்படியிருந்துச்சு சங்கீ?” என்று கேட்டாள்.


அவள் கேள்வியில் கிளுக்கிச் சிரித்த சங்கீதா, தன் வயிற்றைத் தாங்கிபிடித்தபடி எழுந்து அவள் முன் வந்து அமர்ந்து, அவள் கையில் தங்க வளைகளை அடுக்க,


“ப்ச்” என்று அக்காவை முறைத்தவள், புடவைககுத் தோதாக இரண்டு நாட்களாய் அவள் தேடி அலைந்து வாங்கிய கண்ணாடி வளையலை எடுத்து வந்தாள்.


“சங்கு, அம்மா திட்டுவாங்க” என்று சங்கீதா கூற,


“எனக்கு இதான் பிடிச்சிருக்கு சங்கீ” என்றவள், தங்கத்தாலான நான்கு பட்டை வளைகளை எடுத்து, இரண்டு வளைகளுக்கு நடுவே கொஞ்சம் கண்ணாடி வளையலை வைத்து, கைகளில் அணிந்தாள்.


சங்கீதா தங்கையை புன்னகையாய் பார்க்க, “எப்படி சங்கீ அத்தான ஓகே பண்ண?” என்று கேட்டாள்.


அப்போதே உள்ளே நுழைந்த அவிநாஷ், “ஏன் பாப்பா? உங்கக்கா என்னை ஓகே பண்ணதுல உனக்கென்ன வருத்தம்?” என்று கேட்க,


“ஒரு நல்ல மனுஷன எங்கக்கா எப்படி கண்டுபிடிச்சானு தெரிஞ்சுக்கனும்ல அத்தான்” என்று கேட்டாள்.


அதில் பெருமை பொங்க புன்னகைத்த சங்கீதா கணவனைப் பார்க்க, அவனும் புன்னகையாய் அவள் தலைகோதி, “உன்னோட வெளிப்படையான நிஜத்தை எதிரிலிருப்பவர் எப்படி கையாளுறாங்கங்குறதுல இருக்கு உன்னோட பதில்” என்று கூறினான்‌.


“மாப்பிள்ளை.. சின்ன மாப்பிள்ளை வீட்லருந்து கிளம்பிட்டீங்களாம்” என்றபடி சச்சிதானந்தம் வர,


“எல்லாம் தயாராதான் இருக்கு மாமா. பாப்பாவும் ரெடியாருக்கா. நீங்க பதட்டப்படாம இருங்க” என்று கூறினான்.


இரண்டாம் மகளின் கோலம் கண்டு மனம் நிறைய புன்னகைத்தவர், “அழகாருக்கடா செல்லம்” என்று கூற,


“அப்பா நானு?” என்று சங்கீதா கேட்டாள்.


“உன்னை சொல்லத்தான் அத்தான் இருக்காருல? எங்கப்பாவை என்னைக் கொஞ்சவே விடமாட்டியா?” என்று சங்கமித்ரா கேட்க,


“ஏன் உனக்குனுகூடத்தான் ஒருத்தர் வரப்போறாரு. பிறகு அப்பாவைக் கொஞ்ச வேண்டாம்னு சொல்லிடுவியா?” என்று சண்டை பிடித்தாள்.


“அடடடடா… ஒருத்தி பிள்ளைபெத்தெடுக்கப்போறா. இன்னொருத்தி கல்யாணம் பண்ணிக்க போறா. இன்னும் அப்பா வேட்டிய புடிச்சு சண்டைக்கு நில்லுங்க” என்று சத்தம்போட்டபடி தாட்சாயணி வர,


“உனக்கு பொறாமை மம்மீ” என்று கூறினர்.


“மாப்பிள்ளை. நீங்க ஏதும் சாப்பிட்டீங்களா? காபி எதும் போட்டுக் குடுத்தியா சங்கிமா” என்று மாப்பிள்ளையிடம் துவங்கி சங்கீதாவிடம் அவர் முடிக்க,


“அத்தை.. நான் சாப்பிட்டுத்தான் வந்தேன். இது என் வீடு. எது வேண்டும்னாலும் நானே எடுத்துப்பேன். நீங்க பதறாதீங்க” ஒன்று கூறினான்‌.


அவிநாஷ் அவன் வீட்டிற்கு ஒரே மகன். தன் தாய் தந்தையைப் பார்த்துக்கொள்வதைப் போலத்தான் தன் மனைவியின் பெற்றோரையும் நடத்துவான். அத்தனை அக்கறையும் பாசமும் வைத்து பார்த்துக்கொள்ளும் மாப்பிள்ளை மேல் பாசத்தைத் தாண்டிய ஒரு மரியாதை சச்சிதானந்தம் மற்றும் தாட்சாயணிக்கு உண்டு. அதுவும் திருமணமுடிந்து இரண்டு வருடங்களுக்குப் பின் கருவுற்ற போதும், புகுந்தவீட்டில் தங்கள் மகளை ஒருசொல் பேசவிடாது அவன் பார்த்துக்கொண்ட அழகில் மேலும் அவன் மீது மரியாதை பெருகியது.


ஆனால் சங்கமித்ரா அத்தானை அப்பா போல் பாவித்து அத்தனை உரிமையுடனும் பாசத்தோடும் நடந்துக்கொள்வாள். தனக்கு எது வேண்டுமென்றாலும் தந்தையிடம் கேட்பதைவிடவும் உரிமையாய் அவனிடம் தான் கேட்பாள். அவனும் அவளைத் தன் மூத்த மகள் போலவே பாவித்து நடத்துவான். 


சமயங்களில் சங்கீதா கூட தன்னவன் தன் தங்கைமீது கொள்ளும் பாசத்தில் உடைமை கொண்டு செல்லமாய் சண்டையிடவும் செய்வாள். அதையெல்லாம் தன் செல்ல வார்த்தைகளில் சரிகட்டி அனுசரித்து அன்போடு பார்த்துக் கொள்வான்.


சில இடங்களில் புதிதாக பார்ப்போர், சங்கமித்ராவை அவிநாஷின் தங்கையா என்று கேட்பது கூட உண்டு. அப்போதெல்லாம், “எந்தங்கச்சிதான் எனக்கு நாத்துனார் குறையைத் தீர்த்து வைப்பா போல” என்று கேட்டு சங்கீதா சிரித்துக் கொள்வாள்.


அவ்வீட்டில் எந்த முடிவானாலும் அது அவிநாஷைக் கேட்டுத்தான் எடுக்கப்படும். அதில் சங்கீதாவிற்குக் கொஞ்சம் பெருமையும் உண்டு.


இங்கு பெரிதாக சொந்தமெல்லாம் அழைக்காமல், தங்கள் மூவர், மூத்த மகளின் புகுந்த வீட்டார் மட்டுமே என எளிமையான முறையில் இவர்கள் தயாராக இருக்க,


இரண்டு மகிழுந்தில் பெரும் பட்டாளத்துடன் வந்திறங்கினான், திருமாவளவன்.


பெண் வீட்டார் அனைவரும் வாசலில் வந்து நின்று வரவேற்க, முதல் மகிழுந்திலிருந்து, தனது மகள் மற்றும் மனைவியுடன் இறங்கிய திருவிக்ரமனைக் கண்டு முதலில் அதிர்ந்துவிட்டனர்‌.


இரண்டாம் மகிழுத்திலிருந்து, புன்னகை முகமாய் இறங்கிய திருமாவளவனைப் பார்த்த பின்புதான், அவன் இரட்டையன் என்பதே அவர்களுக்கு நினைவு வந்தது.


“வாங்க சம்மந்தி, வாங்க மாப்பிள்ளை” என்று வரிசையாக அனைவருக்கும் வணக்கம் வைத்து உள்ளே கூட்டிவர, பெரியோர் இருவரும் நாற்காலியிலும் மற்ற அனைவரும் கீழே ஜமுக்காளத்திலும் அமர்ந்தனர்.


தங்கையின் அறைக்கு வந்த சங்கீதா, “என்னடி குடும்பம் ரொம்ப பெருசோ?” என்று கேட்க,


“ம்ம்.. அவங்க கூட பிறந்தவங்களே நாலு பேராம் க்கா” என்று கொஞ்சம் பயத்துடன் தான் கூறினாள்.


தந்தை பார்த்து முடிவு செய்வதற்கு பெரிதாக மகள்கள் இருவருமே வேண்டாமென்றதில்லை. அதற்காக தந்தை காட்டுபவனுக்கு தலையை நீட்டிவிடும் ரகமெல்லாம் இல்லை. தனக்கு பிடிக்காத பட்சத்தில் ஏற்க வேண்டாம் என்ற மனப்பான்மையோடுதான் இருந்தாள்.


அத்தனை பெரிய குடும்பமா என்று அவள் பயந்தபோதுகூட தாட்சாயணி, “நல்ல வசதி மட்டுமில்ல, நல்ல பண்போட உள்ள குடும்பம். ஊருலயே பெரியாளுனு எல்லாரும் சொல்றாங்க. நேருல பாரு. உனக்கு பிடிக்கலைனா வேணாம்” என்று கூறியிருந்தார்.


“சரி நீ பயப்படாத. பாப்போம்” என்று சங்கீதா கூற,


வெளியே சுயம்புலிங்கம் தன் குடும்பத்தாரை முறையே அறிமுகம் செய்துவைத்தார்.


“எங்க மூத்த மோளேயும் மருமவனும் கொஞ்ச வேலையால வரமுடியாம போச்சு. இவ எங்க ரெண்டாது மோளே தீபிகா, மருமவன் மகாதேவன். பிஸ்நஸ் பண்றாவ” என்று அவர்களைக் காட்ட,


இருவரும் புன்னகையுடன் வணக்கம் வைத்தனர்.


“இவிய அவிய பிள்ளைங்க” என்று குழந்தைகளையும் அறிமுகம் செய்ய,


குழந்தைகளும் மரியாதையுடன் எழுந்து நின்று வணக்கம் கூறி அமர்ந்து கொண்டனர்.


குழந்தைகளையும் மிகுந்த பண்போடு வளர்த்திருப்பதே, பெண்வீட்டாரை அதிகம் கவர்ந்தது.


“இது எங்க மோனே திருவிக்ரமன். திருமாவளனோட பொறந்த ரொட்டையன். வயல் வரப்பு எல்லாத்தையும் இவன்தேம் பாத்துக்குறியான். இவ எங்க மருமவ கார்த்திகா. விக்ரம் வேலையோட பட்டைய கணக்காளரா இருக்கா. வரவு செலவு அம்புட்டு அவோ கையிலதேம். மில்லு நடத்துறாவ. இது எங்க பேத்தி” என்று மகன் குடும்பத்தை அவர் அறிமுகம் செய்ய,


அவர்களும் புன்னகையுடன் வணக்கம் வைத்தனர்.


“இது எங்க கடைகுட்டி தனலட்சுமி. பீ.எச்.டீ பண்ணிட்டு இருக்கா” என்றவர், “இவன்தேம் திருமாவளவன். ஏத்துமதி எறக்குமதி தொழாலு, ரப்பர் தோட்டோம் தேங்க தோட்டமெல்லாம் இவேன்தேம் பாத்துக்குறியான்” என்று கூற,


புன்னகையுடன் தனது வருங்கால அத்தை மாமாவிற்கு வணக்கம் வைத்தான்.


“எல்லாருக்கும் வணக்கங்க. இது என் சம்சாரம் தாட்சாயணி. இவர் எங்க மூத்த மருமகன் அவிநாஷ். ஐ.டி கம்பெனில வேலை பாக்குறாரு. எங்க குடும்பத்து ஆணிவேருனே சொல்லலாம். எங்களுக்கு மகன்போல” என்று தனது மூத்த மருமகனை தாங்கள் எந்த இடத்தில் வைத்துள்ளோம் என்பதையும் காட்சிபடுத்தும் விதமாய் சச்சிதானந்தம் கூற,


அதில் எவ்வித தலைகணமும் இன்றி, அனைவருக்கும் மரியாதையாய் வணக்கம் கூறினான்.


எல்லோரும் சச்சிதானந்தத்தின் பேச்சை நல்விதமாக எடுத்துக்கொண்டபோதும் தெய்வநாயகி, ‘அப்ப எம்மகனுக்கு இங்க ரெண்டாம்பட்சமாதான் மரியாதை கிடைக்குமா?’ என்று மனதோடு சந்தேகம் கொண்டார்.


“ரொம்ப நல்லதுங்க. நல்லநேரம் முடியறதுக்குள்ள பொண்ண பாத்துடுவோமா?” என்று சுயம்புலிங்கம் கேட்க,


“ஆட்டுங்க” என்றவர், “தாட்சா” என்றார்.


அவர் மனைவியும் சிறு தலையசைப்புடன் உள்ளே சென்று “சங்கு” என்க,


அவளுக்கு பதட்டம் அதிகரித்தது.


“மாப்பிள்ளை கண்ணுக்கு லட்சனமா இருக்காகடி. அவங்க குடும்பமும் நல்லவிதமா இருக்கு. சின்ன பிள்ளைங்ககூட மரியாதையா நடந்துக்குறாங்க. உன் மாமியாருதான் கொஞ்சம் அமைதியாவே இருக்காங்க. நாகர்கோவிலு வட்டார வழக்கு பேச்சுல அப்புடியே அம்முடுது‌. பேச்சு புரிஞ்சுக்குறதுலாம் ஒரு பிரச்சனைனு நீ பயப்படாத” என்று கூறியபடி, தேநீர் கோப்பைகள் அடங்கிய தட்டை எடுத்துக் கொடுக்க,


இவளுக்கு கைகள் நடுங்கியது.


“ஏம்மா.. நீ சும்மாரு. அவளே பதட்டத்துலயிருக்கா” என்ற சங்கீதா, “இந்தாடி.. பொண்ணு தான் பாக்காங்க. பதட்டப்படாம போய் கொடு. எதுவும் பயப்படாம ரிலாக்ஸா போ. பேசிட்டு நீ எது முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதம் தான்” என்று கூறி அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.


தன் இரட்டையனுடன் பேசிக்கொண்டிருந்த திருமாவளவன் அவள் கொலுசொலியின் அரவம் உணர்ந்து திரும்ப, அழகிய இளநீல பட்டுடுத்தி, அளவான ஒப்பனை மற்றும் ஆபரணங்களுடனும், படபடப்பை மறைக்கும் மெல்லிய புன்னகையுடனும் நடந்து வந்தாள், சங்கமித்ரா.


“என்னலே? ஸ்பார்க் ஆவுதா? படபடனு பட்டாம்பூச்சிலாம் பறக்குதா?” என்று கல்லூரி காலத்தில் அவன் விட்ட வாக்கியங்களையெல்லாம் திரட்டி விக்ரம் கேலி செய்ய,


“ஏம்லே?” என்று முறைக்க முயன்றும் சிரித்து வைத்தான்.


வரிசையாக அனைவருக்கும் தேநீர் கொடுத்து விக்ரமனிடம் வந்தவள், நிமிர்ந்து பார்க்க, “மாப்பிள்ளை அவன்மா” என்று படபடவெனக் கூறினான்.


‘தெரியும்’ என்று கூறவந்த வார்த்தையை உள்ளேயே விழுங்கிக் கொண்டு சின்ன புன்னகையுடன் தலையசைத்தவள், வளவனிடம் வர,


அவளை தலைமுதல் கால்வரை மென்மையாய் தன் கண்கள் கொண்டு வருடியவன் கோப்பையை எடுத்துக் கொண்டான்.


ஐந்தரையடி உயரம்.. பெண்களில் சற்றே கூடுதல் உயரமாகத்தான் இருப்பாள் அவள். சந்தன நிறத்தில், உயரத்திற்கு ஏற்ற உடல்வாகும், கொஞ்சம் பூசிய கன்னங்களும் என அவன் கண்களுக்கு அழகாகத்தான் தெரிந்தாள்.


அனைவருக்கும் தேநீர் கொடுத்து முடித்தவள், வந்து சபையில் வீழ்ந்து வணங்கி எழ,


சங்கீதா அவள் அருகே வந்து அவள் தோள்களைப் பற்றிக் கொண்டாள்.


மனைவியிடம் பேசுவதைப்போல் அருகே வந்த அவிநாஷ், “பாப்பா ச்சில்” என்க,


அத்தானை நிமிர்ந்து பார்த்து மெல்ல புன்னகைத்தாள்.


“தட்ஸ் மை கேர்ள். எதுவும் பயப்படாம பேசு. உன் முடிவு என்னவோ அதுதான்” என்று அவளுக்கு தைரியம் கொடுத்துவிட்டுச் சென்றான்.


விக்ரமன் மகாதேவனை நோக்க, அவனும், “கட்டிக்கப்போறவிய நாலு வார்த்த பேசிக்கட்டும் மாமா” என்று கூறினான்.


சுயம்புலிங்கமும் சச்சிதானந்தத்தை நோக்க, அவரும், “பாப்பா.. மாப்பிள்ளையைக் கூட்டிட்டு மச்சுக்குப்போய் (மாடிக்கு) பேசிட்டு வாடா” என்று கூறினார்.


சிறு தலையசைப்புடன் வளவனைக் கண்டவள், முன்னே செல்ல, வளவனும் எழுந்து சென்றான்.




Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03