பக்கங்களில் ஏக்கங்கள்

                     
பக்கங்களில் ஏக்கங்கள்... 





அந்தக் காலைப் பொழுது, வானின் இளநீல நிறம் மெல்ல மெல்ல வந்துக் கொண்டிருந்த பொழுதில், அரைகுறை உறக்கத்தில் இருந்த அகல்யாவை, வந்து எழுப்பினார், அவள் தாய் ஆதிரை. 

"அடியே.. உன்னால தினம் நான் திட்டு வாங்குறேன். சீக்கிரம் எழுந்திரினு சொன்னா கேட்கவே மாட்டியா?" எனத் தாய் தன் வசவைத் துவங்க, 

மிகவும் சிரமப்பட்டு எழுந்தாள். 

"அம்மா.. நான் என்ன வேணும்னா தூங்குறேன்? முடியலைமா" எனக் கூறிய மகளைப் பார்க்க, 

ஆதிரைக்கு பாவமாகத் தான் இருந்தது. 

"மணி ஏழு. போ" என்றுவிட்டு தனது சமையல் வேலையைப் பார்க்கச் சென்றார். எப்போதும் அவளை வாட்டும் மாதவிடாய் பிரச்சனையினால் அதிகமான அசதி ஏற்படவே, தூங்கிப் போய்விடுகிறாள். 'தொடர்ந்து சென்று பார்க்க வேண்டிய மருத்துவர் பக்கம் சென்றே ஆறு மாதம் ஆகிவிட்டது. இதில் வலியை என்ன செய்ய முடியும்?' என்ற விரக்தி அவளுக்குள். 


அகல்யா முதலாம் ஆண்டு இளநிலை, உயிரியல் பயிலும் மாணவி. ஏதேதோ படிக்க வேண்டும் என்று கனா கொண்டிருந்தவள், இன்று ஏதோ ஒன்றை படிக்க வந்துவிட்டாள். வந்த இடத்தில் தனது சந்தோஷத்தைத் தேடித் தேடி, அனுபவித்து மகிழ்ந்து கொள்ளும் பெண். 

குளித்துத் தயாராகி வந்த பெண்ணிடம் அன்றைய அர்ச்சனை துவங்கியது. 


"காலைல எழுந்து படிடி. காலைல நீ எழுந்திருக்க மாட்டேங்குர, உனக்கு பதில் நான் திட்டு வாங்குறேன்" என அழுத்துக் கொண்ட ஆதிரை "எனக்கு உன் நிலைமை புரியுதுடா. ஆனா என்ன பண்ண?" எனத் தன் இயலாமையைக் கூறி சமையலறை சென்றார். 


அழுப்பான உணர்வுடன் தயாரான அகல்யா, கல்லூரி சென்றதும் தோழிகளுடன் சேர்ந்து கலகலப்பாக மாறிப் போனாள். 


வீட்டுப் பிரச்சனை வீட்டோடு மறந்துவிடுவாள், அப்படி ஒரு ரகம். ஆனால் மனதில் பல ஏக்கம். யாரிடமும் சொல்லமுடியாத ஒரு தவிப்பு. வீட்டின் சிக்கல்களை பகிர்ந்துக் கொள்ளும்போது நம் தந்தையையோ தாயையோ தவறாக கருதி விடுவாரோ என்ற ஐயம். அவ்வப்போது கண்களில் தேங்கும் கண்ணீரைக் கூட, சந்தோஷப் பட இருக்கும் செய்திகளை மனதில் நிறுத்தித் தன்னை திசை திருப்பிக் கொள்வாள். 


அன்று பாவையின் மனம் மிகுந்த மனவேதனையுடன் இருந்தது. தனியே படிப்பதற்கு அறைக்கு வந்தவளுக்கு கண்ணீர் நில்லாமல் வழிந்தது. கத்திக் கூட அழ முடியாது மௌனியாக இருந்தாள். 


அவள் கண்ணில் மேஜையில் இருந்த ஒரு புது நாட்குறிப்புப் பட்டது. என்ன தோன்றியதோ? அதை எடுத்தாள். மனதை அந்த புத்தகத்தில் வடிக்க வேண்டி பேனாவை எடுத்தாள். 


முதல் பக்கம்.. 
'மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. யார் கிட்ட சொல்ல, எங்கிருந்து சொல்லணு தெரியலை. அப்படியே சொன்னாலும் எப்படி எடுத்துப்பாங்கனு தெரியலை. சொல்லாமலே எனக்குள்ள பூட்டிவைக்கவும் முடியலை. உன்கிட்ட சொன்னா நீ யார்கிட்டயும் சொல்ல மாட்ட தானே? 
நான் காலேஜ் உள்ள நுழையும் ஒவ்வொரு நாளும் இந்த மூணு வருஷம் சீக்கிரம் முடிஞ்சுடனும்னு வேண்டிக்குரேன். என் ஃபிரண்ட்ஸ்லாம் ஏன் அப்படி வேண்டிக்குற? உனக்கு என்ன கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசையா? 

மூணு வருஷம் முடிஞ்சா அடுத்து வீட்டுல அது தான் பேசுவாங்கனு சொல்றாங்க. ஆனா அவங்க கிட்ட என் மனசுல உள்ளத நான் எப்படி புரிய வைப்பேன்? பதின் வயசு பசங்க.. இந்த வயசுல உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்க முடியும்னு எல்லாரும் கேக்குறாங்க. அவங்களுக்கு என் கவலை என்ன புரியும்? பதின் பருவம் உள்ள குழந்தைகளுக்கு தான் அதிக கவலைகள் இருக்கும்னு நான் எப்படி புரிய வைக்க? தினமும் ஏன் இந்த மூணு வருஷம் சீக்கிரம் போகணும்னு வேண்டுறேன் தெரியுமா? 

இந்த பருவத்துல தான் நிறைய ஆசைகள் வரும். காதல் ஆசைய சொல்லலை. அதுல எனக்கு இஷ்டமே இல்ல. ஆனா எனக்குனு நிறைய ஆசைகள் இருக்கு. இந்த நாட்டையே ஆளனும், கோடிக் கோடியா பணம் சம்பாதிக்கணும்னுலாம் எனக்கு ஆசை இல்ல. ஆயிரம் ஆயிரம் சின்னச் சின்ன ஆசைகள். ஃபிரண்ட்ஸ்லாம் ஃபேமிலி ட்ரிப் போனோம்னு சொல்லும்போதும், சித்தி பொண்ணு அவங்க குடும்பமா போன ட்ரிப் ஃபோட்டோஸ் காட்டும்போதும் தோனும். நம்மளும் அப்படி போனுமேனு. ஆனா நினைவு தெரிஞ்சு குலதெய்வம் கோவிலுக்குக் கூட போனதில்லை. முதலும் கடைசியுமா என் ஒரு வயசு மொட்டைக்கு போனது. அட்லீஸ்ட் பக்கத்து தெருவுல உள்ள கோவிலுக்குனாலும் குடும்பமா போகணும்னு ஆசை. 

இதுவரை அப்பா படத்துக்குக் கூட்டிட்டே போனதில்லை. படத்துக்குப் போகணும்னுலாம் ஆசை இல்லை. ஆனா அம்மா அப்பா கூட போகணும்னு ஆசை. ஆனா அப்பாக்கு அப்படி தேடர் போகலாம் புடிக்கவே புடிக்காது. என்னென்னமோ படிக்க ஆசைப் பட்டேன். ஆனா அதில் பாதி அப்பாக்குப் பிடிக்கலை. கடைசில போகவே மாட்டேன்னு சத்தியம் பண்ணி சொன்ன காலேஜ்க்கு தான் இப்போ போய் படிக்குறேன். கவிதை எழுத ரொம்ப புடிக்கும்.. ஆனா ஆசையா எழுதிட்டு போய் வாசிக்கும்போது இந்த நேரத்துக்கு நாலு கேள்வி படிக்கலாம், போய் இருக்குற வேலைய பாருனு அப்பா சொல்லும்போது கஷ்டமா இருக்கும். 

முந்தின நாள் உடம்பு முடியாம வலில அந்த கத்து கத்தினப்போ அப்பா வந்து தட்டிக் கொடுத்து ஒன்னுமில்லைனு சொன்ன அந்த நொடி உண்மைலயே எல்லாத்தையும் மாயமா மறைய தான் வச்சது. அதுக்குள்ள இந்த பாலா போன ஃபோன் வரவும், அப்பா அவங்க வேலையைப் பார்க்க போயிட்டாங்க. அம்மாக்கு என்மேல அளவில்லாத பாசம். ஆனா உடம்பு முடியாத காரணம் சில சமயம் கோவப் பட்டுடுவாங்க. ஆனா நான் துவண்டு போகுற ஒவ்வொரு நொடியும் என்னை ஆறுதல் படுத்தும் ஜீவன். 

அப்பா பேசின வார்த்தையில் நான் காயப்பட்டுப் போகும்போது, விடுடி உங்கப்பாவ பத்தி உனக்குத் தெரியாதானு ஒத்த வார்த்தையில தேத்திடுவாங்க. இதோ, அஞ்சு மாசம் ஆச்சு ஹாஸ்பிடல் போயி. நேத்து கூட போகலாமா அப்பானு கேட்டேன். அமைதியா முடியாதுனு ஒரு தலையசைப்போட கிளம்பிட்டாங்க. 

பாட்டு கேட்க ரொம்ப புடிக்கும். ஆனா அடுத்த ரெண்டாவது பாட்டு கேக்கும்போதே இதுலாம் எப்ப வேணும்னாலும் கேட்டுக்கலாம், நமக்கு படிப்பு தான் முக்கியம்னு ஒரு வாக்கியம் வந்து காதை அடைச்சுடும். 

ஏ டைரி! இப்போ புரியுதா நா ஏன் இந்த மூணு வருஷம் சீக்கிரம் கடக்கணும்னு நினைக்குறேன்னு? இந்த பதின் பருவம் பொல்லாத பருவம். ஆசைகள் பலதை விதைக்கும் பருவம். அந்த ஆசைகள் எதுவும் நடக்காதுணு தெரியும்போது ஏக்கம் உருவாகும். ஒரு கட்டத்தில் அது விரக்தியா மாறி வெறுப்பில் கொண்டு வந்து முடிஞ்சுடும். அப்படி ஒரு நிலைமை வருறதுக்குள்ள இந்த பருவத்தை நான் கடந்து போயிடனும். 


கிடைக்காததை நினைத்து மருகும் நெஞ்சுக்கு கிடைச்சதை கொடுத்து சந்தோஷப் பட தூண்டும் என் முயற்ச்சி அலுத்துப் போகும்முன் இந்த பருவம் முடிஞ்சுடனும். அந்த வெறுப்பு என்னும் கனல் என்னை வதைக்குறதுக்குள்ள இந்த பருவம் முடிஞ்சுடனும் ' என்று எழுதிக் கொண்டே சென்றாள். நாட்குறிப்பின் பல பக்கங்கள் சரசரவென நிரப்பப்பட்டது. 


பின்பு அடுத்த பக்கம் திருப்பியவளின் வரிகள்..  
'ஆனா இதுல யாரையும் குற்றம் சொல்ல முடியாது. ஏ டைரி! உன்கிட்ட சொன்னத ஃபிரண்ட்ஸ் யார்கிட்டயாவது சொன்னா, எங்க அப்பாவ தப்பா நினைச்சுடுவாங்களோனு பயமா இருக்கு. ஆனா இதுல அப்பா தப்பு என்ன இருக்கு சொல்லு. ஃபேமிலி ட்ரிப்லாம் போக அப்பாக்கு எங்க நேரம் இருக்கு? என்னிக்கு லீவு இருக்கு? இருக்குற ஒரு சண்டேவ அவரு ஓய்வெடுக்க செலவழிப்பாரா? ஊர் சுத்த செலவழிப்பாரா? 

அப்பா அம்மா கூட படம் போகணும்னு ஆசை இருக்கு தான். ஆனா படுத்துக்கான டிக்கெட் காசு? மூனுபேருக்கும் டிக்கட் எடுக்கவே ஆயிரம் ஆயிடும். இது போக அங்க போனா நான் சும்மாவா இருப்பேன்? ஏதாவது சாப்பிட கேட்பேன். அப்போவும் ஒரு செலவு. இது இருந்தா பீஸ்க்கு உதவும், பாங்க்ல போட்டு சேமிக்கலாம்னு அப்பா யோசிக்குறாங்க. பாட்டு கேட்கும்போதும், கவிதை எழுதும்போதும் போய் படிக்க சொல்றது எனக்கு கஷ்டமா தான் இருக்கும். ஆனா அப்பா யோசிக்குறது வேற. 

அவர் படிக்காதவர். படிக்காம தான் பட்ட கஷ்டத்தையும், படும் கஷ்டத்தையும் தன் பிள்ளை படக் கூடாதுனு நினைக்குறார். அதில் அவர்கிட்ட என்ன தப்பு காண முடியும்? இருந்தாலும் எனக்குனு எங்கப்பா அம்மா செலவழிக்கும் நேரம் எனக்குத் தேவை.. அதை விட்டுக் கொடுக்க மனம் கசந்து போகுது. இது சுயநலமானு கூட தெரியலை. ஆனா மனசு ஏங்குது. அழும்போது ஒத்த நிமிஷம் அப்பா சொன்ன 'ஒன்னுமில்லை டா' அப்படிங்குற வார்த்தையே அவ்வளோ சந்தோஷமும் தைரியமும் தருதே, அப்போ எனக்குனு கொஞ்சமே கொஞ்சம் நேரமெடுத்தா எப்படி இருக்கும்? என் ஒவ்வொரு ஆசையும் என் குடும்பத்துடனான என் நேரம் தான். எனக்கு வேற எதுவும் வேணாம். 

என்னால பாட்டு கேட்டாலும் படிக்க முடியும். கவிதை எழுதினாலும், பாடத்துல நல்ல மார்க் எடுக்க முடியும். அதை அப்பா புரிஞ்சுகிட்டா போதும். என் கூட சிரிச்சு பேசி ரெண்டுபேரும் கொஞ்சம் நேரம் செலவழிச்சா போதும். எனக்கு யானை பலம் கிடைச்ச போல இருக்கும்.' என்று எழுதினாள். 


முடித்துவிட்டு புத்தகத்தை மூடப் போன அகல்யா மீண்டும் விட்ட பக்கத்தில் 'ஏ டைரி! உன்கூட பேசினது மனசுக்கு லேசா இருக்கு.. உன் பக்கங்கள் முழுக்க என் ஏக்கங்களால நிறப்பி வச்சுட்டேன். ஏதோ பாரம் குறைஞ்ச போல இருக்கு. தாங்க்ஸ் டைரி' என எழுதிவிட்டு மூடினாள். 


அப்போது "படிக்காம என்னத்த பண்ணிக்கிட்டு கிடக்க? மறுபடியும் கவிதை எழுதுரியா? படிக்குற நேரத்துல தேவையில்லாத வேலையை பாக்காதனு சொன்னா எங்க கேக்குற?" என தலையிலடித்துக் கொண்டு சென்ற தந்தையை கண்களில் தேங்கிய கண்ணீருடன், 

உதட்டில் சிறு முருவலைக் கிளப்பிவிட்டுக் கொண்டு பார்த்தாள். 

பின் படிக்க ஆரம்பித்து சில மணிதுளிகளில் "அகல்யா.. அப்பா கூப்பிடுராங்க.." என்ற தாயின் குரல் கேட்க, "இதோ வந்துட்டேன் ம்மா" என மடியில் கிடந்த அத்தனையையும் கீழே சிதரவிட்டுக் கொண்டு ஓடினாள். 


நமது வாழ்க்கையில் நமக்கு தான் கஷ்டம் உள்ளது என எண்ணும்போது ஒன்றை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். நம்மை விடவும் கஷ்டத்தில் உள்ளவரும் வாழ்ந்துக் கொண்டுதான் உள்ளனர். அப்படி ஒரு ரகத்தில் தான் அகல்யா போகின்றாள். 

இன்று நம்மில் பலர் குடும்பத்திற்காக ஓடுவதாகச் சொல்லிக் கொண்டு குடும்பத்தைவிட்டு ஓடிக் கொண்டிருக்கின்றனர். குடும்பம் நடத்த பணம் மட்டும் தான் தேவை என்று நமது எண்ணம் சென்றுவிட்டதை இங்கு நாமே அறியாமல் இருப்பது தான் நமது மடமை. நாளைய எதிர்காலதிர்காக பாடுபட வேண்டும் தான். ஆனால் அது இன்றய சின்னச் சின்ன சந்தோஷங்களை துளைக்கும் அளவிற்கு இருக்கக் கூடாது. இன்றய கலியுகத்தில், பிறந்த குழந்தைக்குக் கூட பாதுகாப்பு கிடையாது. 


இந்நிலையில் யாரிடமும் 'உன் வயசில் என்ன கவலை இருந்திட போகிறது?' என மட்டும் கேட்டுவிடாதீர்கள். வேதனைக்கும் வயதிற்கும் சம்மந்தமே இல்லை. 
இதோ அகல்யாவின் ஏக்கங்கள் காகிதப் பக்கங்களில்.. இது போன்ற பல குழந்தைகளின் ஏக்கங்கள் எழுதவே பக்கம் அறியாத நிலையில் உள்ளன. உழைப்பு முக்கியமே.. எதிர்காலத்தை செப்பனிடும் கருவி அதுவே. ஆனால் அது இன்றைய நிம்மதியை குலைக்காத வகையில் சமமாக நடத்தும் யுக்தி நம் கையில் தான். 

இன்றைய நாட்களை விட்டபின் நாளை 'மகளின் குழந்தை பருவத்தில் எவ்வளவு அழகாக பாடுவாள்? எத்தனை அழகான கவிதை எழுதினாள்? அவள் குரலை நேரில் கேட்பது போலில்லையே இந்த அலைபேசியில் கேட்பது' என வருந்தி ஒரு உபயமும் இல்லை. 


குருவிக் கூடான வாழ்விது. இதில் மகிழ்ச்சி குடும்பத்துடன் பறப்பது. அதை விடுத்து ஓடினாள், இறுதியில் ஓட்டம் முடியும் இடம் வரும், ஓட்டத்தில் துளைத்ததன் வீரியமும் புரியவரும். 
மகிழ்ந்திருங்கள்!
மகிழ்வித்திருங்கள்! 
                                                  -ஆண்டாள் வெங்கட்ராகவன் 
               


Comments

Post a Comment

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02