திருப்பம் -04

 


திருப்பம்-04


அழகிய இரவு பொழுது…


தனது புலனத்தில் நிலைபாடு வைப்பதற்காக ஒரு காதல் பாடலை எடுப்பதும் வைப்பதுமாய் போராடிக் கொண்டிருந்தாள், சங்கமித்ரா.


“சங்கு என்ன பண்ற? சாப்பிட வானு எத்தனைத் தடவ கூப்பிடுறது?” என்று தாட்சாயணி கத்தி அழைக்க,


“ப்ச்” என்ற சளிப்போடு எழுந்து சென்றாள்.


கூடத்தில் அமர்ந்து கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்த சச்சிதானந்தம் மகளின் சிடுசிடுப்பான முகம் கண்டு, “இப்ப எதுக்குடி பிள்ளைய அதட்டுற?” என்று கேட்க,


“எவ்வளவு நேரமா கூப்பிடுறது சாப்பிட? வா வானு வெத்தல பாக்கு வச்சு அழைக்கனுமா உங்க பொண்ணுக்கு? போற வீட்ல ஆக்கிபோட்டுட்டு கடைசில உக்காரும்போதுதான் நான் கெஞ்சுறது புரியும்” என்று கத்திவிட்டுச் சென்றார்‌.


இப்படி பட்டென அன்னை திட்டியதிலும், திருமணம் குறித்தான பயத்தை விதைப்பதைப் போன்ற பேச்சிலும் கண்கள் கலங்கிவிட்டது சங்கமித்ராவுக்கு.


காலை அவள் இருந்த மனநிலையென்ன தற்போது இருக்கும் மனநிலை என்ன? 


மகளின் முகவாட்டம் கண்ட சச்சிதானந்தம், “ப்ச்.. உங்கம்மா ஏதோ கோபத்துல பேசிட்டு போறாடா செல்லம். நீ வா சாப்பிடலாம்” என்று அழைக்க,


இமையோரம் வடிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள்.


தட்டில் உணவுடன் வந்த தாட்சாயணி, “ஒன்னு சொல்லிடக்கூடாதாடி?” என்க,


“தாட்சா..” என்று சச்சிதானந்தம் அழுத்தமாய் அழைத்தார்.


மனைவி திட்டும்போது இப்படியெல்லாம் அவர் குறுக்கிடவே மாட்டார். அதேபோல் தாட்சாயணியும் கணவன் திட்டும்போது குறுக்கே செல்ல மாட்டார். பெற்றோராய் இருவருக்கும் பிள்ளைகளைக் கண்டிக்க உரிமை இருப்பதால், ஒருவர் கண்டிக்கும்போது அவரை அவமதிக்கும் விதமாய் மற்றவர் சென்று பரிந்துகொள்ள மாட்டர். 


ஆனால் இன்னும் இரண்டு மாதங்களில் மகள் புகுந்த வீடென செல்லவுள்ள நிலையில், முடிந்தளவு அவள் இஷ்டம் போல இருக்க விட்டுவிடவே நினைத்தார் சச்சிதானந்தம்.


தாட்சாயணியும் கோபமாய் உள்ளே சென்றுவிட, அன்னை திட்டியதில் அழுகை வரப்பெற்றவளுக்கு உணவு இறங்க மறுத்தது. இன்னொரு தோசையுடன் வந்த தாட்சாயணி, மகள் தட்டிலிட்டதையே உண்ணாமல் இருப்பதைக் கண்டு, “சங்கு.. இப்ப அம்மா என்ன சொல்லிட்டேன்? அம்மா உன்னைத் திட்டக்கூடாதா? எதுனாலும் சாப்பாட்டுல காட்டாத” என்று அமைதியாய் கூற,


சரியென்ற தலையசைப்புடன் உண்டாள்.


'ஹ்ம்.. உங்க அக்கா அளவுகூட இல்லடி நீ’ என்று நொந்துகொண்ட தாட்சாயணி, தன் மகள் போகுமிடத்தில் எப்படி பிழைத்துக் கொள்வாளோ என்று வருத்தமுற்றார்.


சங்கமித்ரா சட்டென முகத்தில் அறைந்தார் போல் எல்லாம் பேசி பழகாதவள். சங்கீதாவும் அப்படித்தான் என்றாலும் தன்னை அதட்டி பேசும் தருணங்களில் இப்படி வருத்தமெல்லாம் கொள்ள மாட்டாள். 


சங்கமித்ரா இடத்திற்கு தக்க முதிர்வோடும் பக்குவத்தோடும் நடந்து கொள்பவள் தான் என்றாலும் சட்டென அனைவர் முன்பும் எதாவது சொல்லிவிட்டாள் சங்கோஜத்தில் கண்ணீர் வந்துவிடும். வெளியிடங்களில் தங்கி, படித்து பக்குவமாய் நடந்துகொள்பவளாகவே இருந்தாலும், இந்த சில பிறவி குணங்களை அவளால் மாற்றிக்கொள்ள இயலவில்லை.


அதற்கு பயந்தே எப்போதும் அதிக ஆட்கள் இருக்கும் நேரம் கவனமாகவும் பொறுப்பாகவும் நடந்து கொள்வாள். சில சமயம் நம்மிடம் உள்ள குறைகள் கூட நம்மை நல்வழிப்படுத்தும் என்ற கருத்தையும் இதனில் பாடமாய் படித்துக் கொண்டாள்.


உண்டு முடித்து அன்னைக்கு உதவிவிட்டு அறைக்கு செல்லவிருந்த மகள் கரம் பற்றி, “அம்மா சொல்றேன்னு நினைக்காத சங்கு. போற இடத்துல பேச்செல்லாம் சுலபமா வாங்குற போலதான் இருக்கும். எவ்வளவு தாங்குற குடும்பமா இருந்தாலும் சில அவசியமான அதட்டலும் வரத்தான் செய்யும். இப்படி வீச்சுனு அழுதா என்ன நினைப்பாங்க? ஒன்னு உம்மேல தப்பில்லைனா பொறுமையா எடுத்து சொல்லனும். இல்ல அமைதியா தலையாட்டிட்டு கடந்து போயிடனும். இப்படியெல்லாம் அழுதுட்டு இருந்தா என்ன வளர்த்தாங்களோனு பேசிடுவாங்கடா” என்று அக்கறையாய் அறிவுரை வழங்க,


“சட்டுனு எதாது பேசிட்டா அ..அழுக வந்துடுது ம்மா. நா.. நான் என்ன பண்ணட்டும்?” என்றாள்.


“உன் குணம் இதுதான்னு எனக்கு அப்பாக்கு தெரியும் கண்ணா. அவங்களுக்கு தெரியுமா? இதென்ன ஒத்த சொல்லுக்கே அழுறானு நினைச்சுடுவாங்கள்ல? அதுக்குதான் சொல்றேன்டா” என்று அவர் புரியவைக்க,


“புரியுது ம்மா” என்றாள்.


“நீ சின்னப் பொண்ணு இல்லைடா. கல்யாணம் பண்ணிக்கப் போற. கல்யாணம்னா பொண்ணுங்க அவங்க சுயம் தொலைக்கனுமா? இப்படி மாறனுமா? அப்படி மாறனுமானுலாம் இல்லை. கல்யாணம்னு வந்துட்டா ஆணோ, பெண்ணோ அதுக்கான பக்குவத்தை வளர்த்துக்கனும். ஆண் வேற மாதிரி பக்குவமடைவான்னா பொண்ணு வேற மாதிரி பக்குவமடைவா. அதுக்குத்தான் அம்மா சொல்றேன்” என்று கூறிய தாட்சாயணி, “நீ தொட்டதுக்கெல்லாம் அழுகுற குணமில்லைனு அம்மாக்கு தெரியும். ஆனா அவங்களுக்கு தெரியாதுல? பக்குவமா நடந்துக்கனுதான் சொல்றேன்” என்று கூற,


“சரிம்மா” என்று நல்ல பிள்ளையாய் தலையசைத்தாள்.


“ம்ம்.. சமத்து” என்று அவர் கூற,


சிரிப்போடு அன்னையை அணைத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.


'என்னடி சங்கு.. இப்படியா பொசுக்குனு அழுவ? அம்மா சொல்றதும் சரிதான? இனிமே இந்த விஷயத்துல கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோ' என்று தனக்குத்தானே அறிவுரைக் கூறிக் கொண்டு அலைபேசியை எடுத்தவளுக்கு மீண்டும் எதற்காக அதனுடன் போராடிக் கொண்டிருந்தோம் என்று நினைவு வந்தது.


அழகிய வண்ண பூக்களை வண்டுகள் மொய்க்கும் காட்சியோடு, ‘’சித்திரமே செந்தேன் மழையே

முத்தமிழே கண்ணா அழகே

கா~~தல் நாயகனே~~~

காதல் நாயகன் பார்வை கண்டதும்

நான் எனை மறந்தேன்…’ என்ற பாடலைக் கொண்ட காணொளி ஒன்று அவள் அலைபேசியில் மின்னியது.


அதை புலன நிலைபாடில் வைக்கத்தான் இத்தனை போராட்டம்.


அவள் காதல் பாடல்கள் வைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் தற்போது வெறும் கருப்பு வெள்ளையாய் இருந்த உருவமற்ற பிம்பம், வண்ணம் பூசி, முக அபிநயங்கள் காட்ட ஒருவன் வந்துவிட்டானே?


ஒருவார காலம் ஆகிறது அவன் பெண் பார்த்துவிட்டுச் சென்று. காலையிலும், இரவிலும் வணக்கம் என்பதைத்தவிர ஏதுமில்லை என்ற நிலையை இன்று காலை அவன்தான் அழைத்து, அதை மாற்றியமைத்திருந்தான்.


பேசுவதற்கு அச்சப்பட்டப்போதும், ஆசையில்லாமல் இல்லையே! தற்போது அவனுக்காக நிலைபாடு வைக்க ஆசை எழவும், ‘சின்னப்புள்ளத்தனமா நினைக்க மாட்டாரா?’ என்று நூறாவது முறையாக எண்ணம் தோன்றியது.


அவனைப் பிடித்திருக்கின்றதா என்றால் நிச்சயம் பிடித்தம் உள்ளது. அந்த பிடித்தத்தில் காதலுக்கென்று அவள் பல சாயங்களைத் தயார் செய்து வைத்திருக்கின்றாள். அவற்றை பூசத்தான் நாணம் தடை செய்கிறது.


அவன் அவளைவிட ஐந்து, ஆறு வயது மூத்தவன். அவனுக்கும் தனக்குமான இந்த வயது வேற்றுமை, தனது செயலை சிறுபிள்ளைத்தனமாய் காட்சிபடுத்தி, கேலி பேச வைத்துவிடுமோ என்று அச்சம் கொண்டாள். 


அவளுக்கு யார் கூறுவது? காதலே சிறுபிள்ளைத்தனத்தின் உச்சம் தான் என்று? பிறர் செய்து காண்கையில் விளையாட்டாகவும், சிறுபிள்ளைத்தனமாகவும் இருக்கும் சின்னச் சின்ன செயல்கள் காதலில் திழைத்திருப்போருக்குத்தான் எத்தனை அழகான செயல்கள்!


தொலைவில் இருப்பவளை எண்ணி என் பசி போக்கிக்கொள்கிறேன் என்று காதலன் பிதற்றுகையில் சிரிப்பாக இருப்பவை, காதல் வயப்பட்டுவிட்டால் அத்தனை அழகாய் உணரப்பெறும்… அதுதான் காதலுக்கே உரித்தான விந்தை!


இவள் இப்படி அந்த காணொளியை பத்து முறை பார்த்து பார்த்து ஓய்ந்துவிட, ‘என்ன இன்னும் குட் நைட் வரக்கானும்?’ என்று அவள் எண்ணத்தின் நாயகனிடமிருந்தே குறுஞ்செய்தி வந்தது.


நேரம் தவரமால் ஒன்பதரையிலிருந்து பத்துமணிக்குள் இரவு வணக்கம் போட்டுவிடுபவள், இன்று இந்த அக்கப்போரில் அதை மறந்தேவிட்டாள்.


அவள் குறுஞ்செய்தியைப் பார்த்து பழகியிருந்த திருமாவளவனும் இன்று, ‘என்ன மேடம ஆளக் காணும்?’ என்ற எண்ணத்தோடு குறுஞ்செய்தி அனுப்ப, அவளுக்கு உள்ளுக்குள் ஒருவிதமாய் குளிர்சாரல் வீசியது…


காதல் தானாக பார்த்து, தானாக உணரப்பெற்ற ஒருவரிடம் தான் வருமா என்ன? இவர் உனக்கானவர் என்று காட்டப்பட்டு அந்த உரிமை கொடுக்கும் உவகையில் பிறக்கும் காதல் தான் எத்தனை அழகு? அந்த வகையில் இந்த ஒரு வார காலத்திற்குள் அவனுக்கும் தனக்குமான காதல் வாழ்வு என்ற கற்பனைக்கு தேவையான வண்ணங்களையெல்லாம் திரட்டி காதலிக்க தயாராகிவிட்டாள் பெண்!


அவ்வகையில் காதலின் முதல்படியான ஈர்ப்பு, அவளிடம் நன்றாகவே வேலை செய்தது.


அவன் குறுஞ்செய்தியைப் பார்த்துவிட்டவளுக்கு சட்டென பதில் அனுப்பிட வரவில்லை. சில நிமிடங்களுக்குப் பின், “இல்ல.. ஏதோ யோசனைல மறந்துட்டேன்” என்று பதில் அனுப்பினாள்.


“என்ன யோசனை?” என்று அவன் கேள்வி கேட்க,


'உங்க யோசனைதான்' என்றா கூற இயலும்?


இதயம் படபடக்க அவள் மௌனம் காக்க, அவன் அழைப்பு விடுத்துவிட்டான்.


சட்டென சப்தம் வராதிருக்க, ஒலியை அணைத்தவள், மூச்சு ஏகத்திற்கும் வாங்கியது.


வெளியே விளக்கு எறிந்து கொண்டிருப்பதே இன்னும் அன்னையும் தந்தையும் தூங்க செல்லவில்லை என்பதை அவளுக்கு உணர்த்தியது!


'அய்யோ ராமா.. என்ன இவரு கால் பண்றாரு.. இப்ப எப்படி அடென்ட் பண்ணி பேச? வெளிய அம்மா அப்பா வேற முழிச்சிருக்காங்க' என்று படபடப்பாக மனம் யோசிக்க, ‘அய்யோ கால் கட்டாகிடுமோ?’ என்ற பயமும் மனதை பிசைந்தது.


அழைப்பு முடியவிருக்கும் தருவாயில் தன் முரணான எண்ணங்களை ஓரம் கட்டிவிட்டு, ஏற்றுவிட்டாள்.


“கைல ஃபோன வச்சுட்டு அட்டென்ட் பண்ண இம்புட்டு யோசனையா?” என்று கேட்டவன் குரலில் இருந்த சிரிப்பு, அவனது சிரித்த முகத்தை அவளுக்கு நினைவு படுத்தியது.


“இ..இல்லங்க” என்று சமாளிக்க அவள் முயற்சி செய்ய,


“வீட்ல ஃபோன் பேசக்கூடாதுனு யாரும் சொன்னாவளா?” என்று சரியாக அவளைப் புரிந்துகொண்டு கேள்வி எழுப்பினான்.


அதில் கொஞ்சம் திடுக்கிட்டாலும், “ம்ம்..” என்று அவள் கூற,


“கல்யாணம் நிச்சயம் ஆன பின்ன ஏதும் தடங்கள் வந்துட்டா மனசுக்கு சங்கடமாகிடக்கூடாதுனுதேம் இப்புடி சொல்வாவமா” என்றான்.


“ப்ச்.. எனக்கு தெரியாதா?” என்று கேட்டவள் குரலில் மிளகின் காட்டம்!


‘இப்படியா அச்சாணியமா பேசுவாங்க?’ என்று மனதோடு அவள் முனுமுனுப்பதைக் கேட்டது போல் சிரித்தவன், “நீதேம் லவ் பண்ணனும்னு கேட்ட? அதனலதான் நான் காதல் பயிர் வளக்கலாமேனு கூப்பிட்டேன். உனக்குதான் பேச தயக்கமா இருக்கு. எனக்கு இல்லையே.. அதான் நாம முதல் படிய வைப்போமேனு கூப்பிட்டேன். உனக்கு தயக்கமாயிருந்தா பிரச்சினை இல்லைமா” என்று முடிந்தளவு தங்கள் வட்டார வழக்கு கலக்காது அவளுக்குப் புரியும்படியே அவன் கூற,


“இல்ல இல்ல” என்று வேகமாய் மொழிந்தாள். எங்கே அழைப்பைத் துண்டித்துவிடுவானோ? என்ற பதட்டம் அவளுக்கு.


அவள் அவசரத்தில் இதழ் விரித்து தன் பச்சரிப் பற்கள் மின்ன புன்னகைத்தவன், “என்னமா?” என்க,


“இல்ல.. அம்மா பேசக்கூடாதுனு சொன்னதால கொஞ்சம் தயக்கம் தான்” என்று இழுத்தவள், “மத்தபடி எனக்கு பேச வேண்டாம்னுலாம் இல்லை” என்று கூறினாள்.


“ஆஹாங்? அப்ப லவ் பண்ணலாம்னு சொல்ற?” என்று உற்சாகக் குரலில் அவன் கேட்க,


மெல்லிய குரலில், “ம்ம்” என்றாள்.


“சரி சொல்லு.. உன் பார்வையில் லவ்னா எப்படி பண்ணனும்?” என்று அவன் கேட்க,


திகைத்து விழித்தவள், “எப்படினா?” என்று புரியாமல் கேட்டாள்.


“ம்ம்.. ஒவ்வொருத்தர் பார்வையில் காதலுக்கு ஒவ்வொரு வெளிப்பாடு இருக்கும். ஒவ்வொருத்தர் வெளிய போகனும், டைம் ஸ்பென்ட் பண்ணனும், இப்படி விதவிதமா ப்ரபோஸ் பண்ணனும், கட்டிப்பிடிக்கனும், இப்படி எல்லாம் ஃபோட்டோஸ் எடுத்துக்கனும்னு விதவிதமான கற்பனைகள் வச்சிருப்பாங்க. அப்படியான உன் கற்பனைகள் என்ன?” என்று அவன் கேட்க, இவள் அதிர்ந்தே விட்டாள்.


இப்படி எல்லாம் அவளுக்கும் பல ஆசைகள் உள்ளது தான். ஆனால் எடுத்த எடுப்பில் இப்படி பளிச்சென்று கேட்பவனிடம் என்னவென்று கூறுவது?


“ஹலோ? லைன்ல இருக்கியா?” என்று திருமாவளவன் கேட்க,


“அ..ஆங் இருக்கேன்” என்றாள்.


“ம்ம்.. சொல்லுமா” என்று அவன் கேட்க,


“அது எனக்கு நிறையா இருக்கு. ஆனா எதை எப்படி சொல்லனு தெரியலை” என்றாள்.


இவனுக்கு அவளது பேச்சில் சிரிப்பு தான் வந்தது. அவளுக்கு ஆசைகள் ஆயிரம் உள்ளது. ஆனால் அச்சமும், தயக்கமும் அதற்கு இணையாக இருக்கின்றது. அந்த அச்சத்தினையும் தயக்கத்தினையும் தாண்டி தன் ஆசையை வெளிப்படுத்த இயலாமல் அவள் தடுமாறுவதும் அவனுக்குப் புரிந்தது.


“அப்ப நான் ஒரு ஐடியா சொல்லவா?” என்று அவன் கேட்க,


“என்னதுங்க?” என்றாள்.


“இப்ப நமக்குள்ள ஒரு டீலிங் போட்டுக்கலாம். நானும் நீயும், பொண்ணு பார்த்த சம்பவத்தை மறந்துடு” என்று அவன் கூற,


“என்ன?” என்று அதிர்ந்தாள்.


“கூல் கூல்.. முழுசா கேளு மித்து” என்றவன், அவளைச் செல்லமாய் அழைத்த அந்த மித்து பெரும் சொத்தாய் அவளுள் மனவறை பொக்கிஷத்தோடு சேர்ந்தது.


“நானும் நீயும் வேற எங்கயாது எதேர்ச்சியா மீட் பண்ணிருக்கோம். உனக்கு என்னையும் எனக்கு உன்னையும் பிடிச்சு போச்சு” என்று அவன் கூற, இவளுக்கு மனசுக்குள் மத்தாப்பு தான்!


“இப்ப நம்ம லவ்வர்ஸ். ஓகேவா?” என்று அவன் கேட்க,


உற்சாகமாய், “ம்ம்” என்றாள்.


அதில் சிரித்துக் கொண்டவன், “நீ எனக்கு என்ன பண்ற, லவ் லெட்டர் எழுதித்தர” என்று அவன் கூற,


“லவ் லெட்டரா?” என்று வாயில் கை வைத்தாள்.


“ம்ம்.. லவ் லெட்டர் தான். ஒரு லவ்வரா நீ எப்படி லவ் பண்ண ஆசைப்படுற, என்ன பேச ஆசைப்படுறனு உன் கைப்பட எழுதி, அதை லெட்டரா எனக்கு போஸ்ட் பண்ணு. அதைபடிச்சு நானும் உனக்கு பதில் அனுப்புறேன். ஃபோன்லயோ, மெசேஜ்லயோ பேசுனா நான் பேச பேச உடனுக்குடன் உனக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் வரும் தயக்கம், இதுல இருக்காது பாரு” என்று திருமாவளவன் கூற,


இவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஆனால் அவன் பேசுவதெல்லாம் மிகவும் பிடித்திருந்தது. அவன் வயதிற்கு, தன் பக்குவத்திற்கு இறங்கி பேசுவது அவளுக்கு ஜில்லென்ற உணர்வைத்தான் கொடுத்தது.


“ஹலோஓ..” என்று அவன் உரக்க அழைக்க,


“இருக்கேன் இருக்கேன்” என்றாள்.


“எங்க இருக்க? பாதி நேரம் ட்ரீம்ஸ்ல என்கூட டூயட் ஆடப்போய்ருவ போல?” என்று இயல்பாய் அவன் கேலியில் இறங்க,


இவள்தான் ஆவென வாய்ப் பிளந்து விழித்தாள்.


“சரி ஓகே.. லெட்டர் தூது ஓகேவா?” என்று அவன் கேட்க,


“ம்ம்..” என்று புன்னகையாய் கூறினாள்.


“அப்றம் ஒரு முக்கியமான விஷயம்” என்று ஒரு இடைவெளி குடுத்தவன், “லெட்டர்ல ஃப்ரம் டூல உன் பெயரோ என் பெயரோ போடவே கூடாது. ஆனா அது நீதான்னு எனக்கு காட்டிக்குடுக்குற எதாவது ஒரு அறிகுறி அதுல இருக்கனும்” என்று கூற,


“ஏன்?” என்று கேட்டாள்.


“நீ லெட்டர் போடுறனு வீட்ல யாரும் பார்த்தா?” என்று அவன் கேட்க,


இவளும் பதட்டமாய், “அச்சுச்சோ.. ஆமா ஆமா. அப்றம் கேலி பண்ணப்போறாங்க” என்றாள்.


“ம்ம்..” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் தலையாட்டியவன், “காத்திருப்பேன்.. உன் கடித்தத்துக்கு” என்று கூற,


“எப்படி அனுப்புறேன்னு பாருங்க” என்று புன்னகைத்தாள்.


பின் இருவரும் அவரவர் நலன்களைப் பேசி விசாரித்துக் கொண்டு வைக்க, அவனுக்கு காதல் மடல் எழுதப்போவதை நினைத்துப் பெரும் ஆர்வத்துடன் உறங்கிப் போனாள்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02