திருப்பம்-05
திருப்பம்-05
“அண்ணா..” என்று சப்தம் போட்டபடி தனலட்சுமி வீட்டினுள் நுழைய,
கூடத்தில் அமர்ந்து கார்த்திகாவுடன் வேலை விடயமாகப் பேசிக் கொண்டிருந்த விக்ரமன் நிமிர்ந்தான்.
கார்த்திகா, கணக்கியல் படித்தவள். விக்ரமன் வேளாண்மை தொழில்நுட்பம் பயின்றவன். அவனது வரவு செலவு மொத்தமும் கார்த்திகா கையில் தான். மேலும் ரைஸ் மில் பொறுப்பு மொத்தமும் அவளுடையது. அதுகுறித்து இருவரும் பேசிக் கொண்டிருக்க, அங்கு வந்த தனலட்சுமி, “மொட்டையா ஏதோ கடுதாசி வந்துருக்கு” என்றாள்.
“கடுதாசியா? இந்த காலத்துல யாருமா அது கடுதாசி போடுற ஆளு?” என்றபடி சுயம்புலிங்கம் வர,
“தெரியலையே ஐயா” என்றாள்.
சமையலறையிலிருந்து தேநீருடன் வந்த தெய்வநாயகி, “யாரும் உங்க பக்க சொக்காரவளா (பங்காளி) இருக்கப்போறாவ. என்னதுனு பாருங்க” என்று கூற,
தனதறையிலிருந்து அலைபேசியில் தனது நண்பனிடம் வேலை விடயமாகப் பேசிக்கொண்டு வெளியே வந்தான் திருமாவளவன்.
“நீ இங்க கொண்டா” என்று அதை வாங்கிய கார்த்திகா, முன் பின்னாக திருப்பிப் பார்க்க, தற்செயலாய் அதை கண்டவன், அந்த மடலின் பின்புறமிருந்த சங்குப்பூ வரைபடத்தைக் கண்டு துணுக்குற்றான்.
“லே இர்ரா” என்று நண்பனிடம் கூறியவன், “மைணி, என்னதது?” என்று கேட்க,
“ஏதோ கடுதாசி கொழுந்தரே” என்றாள்.
'ஆத்தீ… மித்தூஊஊ’ என்று மனதோடு அதிர்ந்தவன், “ம..மைணி.. அது எனக்குதேம்” என்று கூற,
“ஏம்லே ஒனக்குனா பேரு போட்டிருக்கும்ல?” என்று சுயம்புலிங்கம் கேட்டார்.
“இல்ல.. அது..” என்று யோசித்தவன், “ம்ம்.. ஒரு டீலர் பத்தி விசாரிக்க நம்ம வேலுட்ட சொல்லிருந்தேம். அவிய சீ.பீ.ஐ ஆபிஸ்லருந்து அனுப்பிருப்பம்ல? அதேம் பேரு போடாம வந்துருக்கு” என்று இஷ்டத்திற்கு அடித்துவிட,
“நா எப்பம்லே உனக்கு இந்த சோலியெல்லாம் பாத்து கொடுத்தேம்? ஏம்லே உம்மூப்லுட்ட (அப்பா) என்ன கோர்த்துடுற? உங்கூட்டுக்காரனா இருக்கம் படாதபாடு படுறேம்லே” என்று அவன் காதுகளில் கதறிக் கொண்டிருந்தான் அவனது உற்ற தோழன் வடிவேலு.
“மிண்டாதிரும்ல (பேசாமயிருடா)” என்று மெல்லிய குரலில் அலைபேசியில் கூறியவன்,
“கொண்டாங்கண்ணி” என்று அதை வாங்க,
அவனை சந்தேகமாய் பார்த்தபடியே அதனைக் கொடுத்தாள்.
“வேலு.. சொன்ன இடத்துக்கு வந்துடு” என்றபடி அவன் நகரவும்,
“எங்கனலே வரச்சொன்ன நீ? அம்மாசிக்கு (அம்மாவாசைக்கு) பொறந்தவனே. உங்கய்யாட்ட என்னத்த மறைக்க?” என்று வடிவேலு கேட்க,
“அறுப்பாதடா (திட்டாதடா). நேருல சொல்றேம்” என்றான்.
“வந்துத்தொல” என்று அழைப்பைத் துண்டித்த அடுத்த ஒரு மணி நேரத்தில், இருவரும் ரப்பர் தோட்டத்தில் இருந்தனர்.
இங்கிருந்து எடுக்கப்படும் ரப்பர் நேரே மகாதேவனின் தொழிற்சாலைக்கு தான் செல்லும். அதுபோக மீதியாவும் ஏற்றுமதிக்கு அனுப்பப்படும். மேலும் இவர்களது வயலில் விளையும் பொருட்களுக்கான ஏற்றுமதி, தனியே வளவனுக்கென்று இருக்கும் சின்ன பூந்தோட்டத்தின் ஏற்றுமதியெல்லாம் இவனும், இவனது உற்ற தோழன் வடிவேலும் தான் பார்த்துக்கொள்வர்.
“ஏம்லே அனக்கத்த காணும்?” என்று அமைதியாய் தோட்டத்தை மேற்பார்வை பார்த்தபடி புன்னகையாய் நடந்துவரும் நண்பனைப் பார்த்து வடிவேலு கேட்க,
“போன சோலி என்னாச்சு?” என்று கேட்டான்.
“அந்த டீலரு ஒத்தவருவம்னு தோனல மாப்ள. வேணாம்னுட்டேம்” என்று வடிவேலு கூற,
“ம்ம்..” என்றான்.
“என்னைய அனுப்பிட்டு பொண்ணு பாக்க போன சோலி என்னாச்சு?” என்று வடிவேலு கேட்க,
இவன் இதழ்களில் அழகிய புன்னகை வந்துபோனது.
“ஏ மக்கா… என்ன சிரிப்பெல்லாம் பலமாருக்கு?” என்று வடிவேலு கேட்க,
“அடிக்கடி எனக்கு கடிதாசி வரும்லே. நீதான் அனுப்புவ நெனவுல வச்சுக்கோ” என்று கூறினான்.
“இப்பதாம்லே சங்கதி புரியுது. உம்போதைக்கு நான் ஊறுகாயா?” என்று வடிவேல் கேட்க,
“என்ன மாப்ள?” என்று பாவம் போல் கேட்டான்.
“ஏம்லே நான் உம்மாப்ளனு உங்கொள்ளி கண்ணுக்கு தெரியுதா? சந்தோசம்தேம்” என்றவன், “பேரென்ன? உனக்கு புடிச்சுருக்கா?” என்று கேட்க,
அழகாய் புன்னகைத்தவன், “சங்கமித்ரா” என்றான்.
“உள்ளூரா அசலூரா? உங்கம்மை அசலூருல பாக்காதே” என்று வடிவேலு கேட்க,
“இப்ப இருக்குறது உள்ளூருதேம். ஆனா அசலூருக்காரவ தாம்லே. அவங்க அம்மாக்கு இந்த பக்கட்டுதான் சொந்தம்போல” என்று கூறினான்.
“ம்ம்.. நானுந்தான் இருக்கேம்லே. எங்கம்மாவும் பொண்ணு பாக்குதாவ. கேட்டேபுட்ருச்சு. வாரியில அடி வாங்குறதுனு ஆவிபோச்சு. அதை எங்கையாலேயே வாங்கனுமா? ஒரு பொண்ண கட்டிவச்சு அதுகையால வாங்குறதுதானனு. வாலாமடையா திரியதேன்னு கத்துது. இதுகிட்ட எஞ்சோலிய புரியவைக்குறதுக்கே பாதி சீவன் செத்துபோவுதுடா” என்று சோகம் போல் வேலு கூற,
வாய்விட்டு சிரித்த வளவன், “எல்லாம் நேரங்கூடி வரும்லே. அப்பறம் வாரி, வட்டிலு, குத்துப்போணினு வித விதமான பொருளுல, கன்னாமண்டைலருந்து கறண்டங்காலுவர வெளு வெளுனு வெளுத்துபுட ஒருத்தி வந்துடுவா” என்று கூறினான்.
நண்பன் கூறியதில் வாய்விட்டு சிரித்தவன், “அசலூருங்குற. நம்மூட்டு பாஷைய புடிச்சுகிடுமா?” என்று வடிவேலு கேட்க,
“அவ சென்னைல படிச்சவடா. நான் மிந்தாநேத்து எல்லு நோவுதுன்னதுக்கே ஆங்குட்டா” என்று சிரித்தான்.
“சரியாபோச்சு. பொறவு நாம்பேசினா பேபே பெப்பெப்பேதேம் மாப்ளோய்” என்று வடிவேலு சிரிக்க,
“பேச பேச பழகிபுடுவாடா” என்றான்.
“ம்ம்.” என்று பெருமூச்சு விட்டவன், “ஏம்லே.. பேசுகிறீங்களாக்கும்?” என்று கேட்க,
“ரெண்டு மொற பேசினோம்” என்றான்.
“பரிகேடுடா (அவமானம்டா).. பாத்துட்டு வந்து பத்துநாள்ள ரெண்டு மொற பேசினத பெரும பொங்க வேற சொல்றம்ல” என்று வடிவேலு சிரிக்க,
“பேசவே வெறையலாருக்குடா (நடுக்கமாக) அவளுக்கு. வெள்ளந்தி” என்றான்.
“அதான் கடுதாசி போடச்சொல்லிடீயலாக்கும்?” என்று வேலு கேட்க, புன்னகையாய் தலையசைத்தான்.
“சரி சரி. நீ அப்படி உக்காந்ரு. நான் அங்கிட்ட வேலையாவுதானு பாத்துட்டு வரேம்” என்று வடிவேலு செல்ல,
சரியெனச் சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்தவன் அவளது கடிதத்தைப் பிரித்தான்.
அதன் உள்ளிருந்த நீல நிற சங்குப்பூவை மென்மையாய் வருடியவன் அதனை பதமாய் எடுத்துத் தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டு மடலைப் பிரித்தான்.
‘என் அன்புள்ள திருமாலுக்கு,
கடிதம் எழுதுனு சொல்லிட்டீங்க. என்ன எழுத எப்படி துவங்கனே தெரியலை எனக்கு. காதலுக்கு என்னோட விளக்கம் கேட்டீங்கள்ல. எனக்கு நிறைய இருக்கு. என் பிரெண்ட்ஸ்லாம் காதலிக்கும்போது நிறைய லவ் பாட்டுலாம் ஸ்டேடஸ் வைப்பாங்க. எனக்கும் அப்படி வைக்கனும்னு ஆசை. சின்னப்பிள்ள தனமாருக்குல? கேலி பண்ணாதீங்க’ என்று அவள் எழுதியிருப்பதை வாசித்தவன் முகம் காலைத் தாமரையாய் மலர்ந்து புன்னகைத்தது.
‘அப்றம் எனக்கு உங்களுக்கு பிடிச்சது சமைச்சு குடுக்கனும்னு ஆசை. ஒரு படத்துல அவ லவ்வர்கு யாருக்கும் தெரியாம சமைச்சு சாப்பாடு கொண்டு போவா. அதை ருசிச்சு சாப்பிட்டு அவன் நல்லாருக்குனு சொல்லுறது ரொம்ப அழகாருக்கும். அந்த எஃபோர்ட் ரொம்ப அழகாருக்கும். அதனால அப்படி எனக்கும் திருட்டுத்தனமா சமைச்சுத்தரனும்னு ஆசை.
அப்றம் அப்றம் நாம.. ரெண்டு பேருமா' என்று எழுதி அடித்து அடித்து வைத்திருந்தாள்.
எதையோ சொல்ல வந்து தயங்கி அதை அவள் அடித்துவிட்டது படித்துக் கொண்டிருந்தவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.
அடுத்துள்ளதை அவன் வாசிக்க, ‘எப்போமே இல்லாம எப்போவாச்சும் ரொம்ப ஃபீலிங்கா இருக்குற நேரம் ஐ லவ் யூ சொல்லிக்கனும். சாரி தப்பா நினைச்சுக்காதீங்க’ என்று இருந்தது.
'அடியே லவ்வுனா எனக்கு இம்புட்டு பயமாடி?’ என்று நினைத்தவனுக்கு அப்படியொரு சிரிப்பு வந்தது.
'அப்றம் குட்டி குட்டியா கிஃப்ட்ஸ். விலையெல்லாம் பெருசில்ல. சின்னச்சின்னதா கியூட்டா, லவ்லியா இருக்கனும். அதாவது.. எனக்கு பூனா ரொம்ப பிடிக்கும். அதுவும் கணகாம்பரம்னா அவ்ளோ பிடிக்கும். எதிர்பாராத நேரம் கணகாம்பரம்பூ வாங்கித்தந்து சர்ப்பிரைஸ் பண்ணனும்னு ஆசை’ என்று எழுதியிருக்க,
“கணகாம்பரத்தோட்டமே வாங்கிடுவம்” என்று கூறிக் கொண்டான்.
‘போதும்.. நிறையா சொல்லாம கொஞ்ச கொஞ்சமா சொல்றேன். பை. நல்லா சாப்பிட்டு உடம்ப பாத்துக்கோங்க. வீட்ல எல்லாரையும் விசாரிச்சதா சொல்ல வேணாம். ஆனா விசாரிச்சுக்குறேன்’ என்று அக்கடிதம் முடிந்திருக்க,
முப்பத்திரெண்டு பற்களும் புன்னகைக்க அதைப் பார்த்தான்.
“என்ன மாப்ள? மோவாயெல்லாம் பல்லாத்தேம் இருக்கு?” என்று கூறியபடி வடிவேல் வர,
காகிதத்தை மடித்து அதன் உரையில் வைத்தவன், முகத்தில் சின்ன வெட்கத்தின் சாயல்.
“ப்பா.. உம்மொவத்த பாத்தா லாந்தலாருக்குற வானங்கூட பளிச்சுன்னு வெறிச்சிடும்டா. அப்படிக்கு என் தங்கச்சி என்னத்த எழுதினாளோ” என்று வேலு கேலியில் இறங்க,
“ஒரு கனாகம்பரச்செடி வாங்கனும்லே” என்று நண்பன் தோளில் கை போட்டபடி கூறினான்.
“அதுசரி” என்று சிரித்தவன், “ஆட்டும்டா. வாங்கிடுவோம்” என்று கூற,
புன்னகையாய், “என் ரூமு தின்னையில வைக்குறாப்ல வாங்கு” என்று கூறி புன்னகைத்தான்.
அங்கு தனது வேலையிடத்தில் அமர்ந்துகொண்டு, ‘லெட்டர் போயிருக்குமா? படிச்சாரா? எதுமே பதில் வரலையே? என்னவாருக்கும்?’ என்று பலவாறு யோசித்துத் தன் குட்டி மூளையைக் குடைந்துக் கொண்டிருந்தாள் சங்கமித்ரா.
அவள் இப்படி அல்லல் படுவாள் என்று தெரிந்ததாலோ என்னவோ? 'லெட்டர் வந்துடுச்சு. என் பதில் மடலுக்காக காத்திரு’ என்று அவனிடமிருந்து குறுஞ்செய்தி வர, அதைப் பார்த்தவளுக்கு மனதில் இன்பப் படபடப்பு தான்.
'அச்சோ.. எப்ப வருமோ?’ என்று அவள் காத்திருக்க, அந்த காத்திருப்பின் சுகம் இன்பமாய் கரைந்தது.
அடுத்த இரண்டு நாளில் அவளுக்கான பதில் கடிதமும் வந்தது.
“என்னதிது பேரு ஏதுமே இல்லாம மொட்ட கடிதமா வந்துருக்கு?” என்று தாட்சாயணி கேட்படி உள்ளே வர,
தனது தமக்கையுடன் அமர்ந்து முறுக்கு உண்டுகொண்டிருந்த சங்கமித்ராவின் விழிகள் விரிந்தது.
'அச்சோ.. அவங்க லெட்டரோ?’ என்று எண்ணியபடி, “க்..குடுங்கம்மா நான் பாக்குறேன்” என்றாள்.
கடிதத்தின் பின்புறம் லட்சுமி திருமாலுக்கு மாலை அணிவிப்பதைப்போன்ற ஒரு படம் வரையப்பட்டிருக்க, அதை கண்ட பின்பும் தான் அவளுக்கு அறிமுகம் வேண்டுமா?
“யாரு லெட்டர் சங்கு?” என்று கேட்ட சங்கீதா, “ஸ்ஸ்.. ஆ” என்று வயிற்றைப் பிடிக்க,
“ஏ சங்கி என்னாச்சு?” என்று பதறினாள்.
“சூடு கண்டு வலிக்குதுடி” என்று தன் வயிற்றைத் தேய்த்தபடி அவள் கூற,
“இரு சங்கி. அம்மா எண்ணை எடுத்துட்டு வரேன். சங்கு, நீ போய் ஒரு துணி கொண்டுவா” என்று தாட்சாயணி வேலை ஏவினார்.
'அன்பு அக்கா.. உன் சூடுகூட எனக்கு சுகமா இருக்கு' என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள், தன் அறைக்குள் சென்று, கடிதத்தைப் பத்திரப்படுத்திவிட்டு துனியுடன் வந்தாள்.
“உருல ஆரமிச்சுச்சாடி குழந்தை?” என்று தாட்சாயணி கேட்க,
“அதெல்லாம் அசைவு தெரியுதும்மா. அஞ்சு முடியப்போகுதுல?” என்று சங்கீதா கூறினாள்.
“ரொம்ப வலிக்குதா சங்கி?” என்று சங்கமித்ரா அவள் வயிற்றில் கை வைக்க,
புன்னகையாய் அவள் கன்னம் தட்டியவள், “இதெல்லாம் ஒரு மெமரீஸ்டி சங்கு. உனக்கும் பாரு.. அடுத்து இன்னும் ஒரு வருஷத்துல இப்படித்தான் வந்து உக்காந்துப்ப” என்று கேலி செய்தாள்.
“ச்ச ப்பே” என்று நாணம் கொண்டு கூறியபோதும் அவள் முகம் செவ்வரளியாய் சிவந்துதான் போனது.
கேலியும் கிண்டலுமாக பொழுது செல்ல, இரவு எப்போதடா உணவை முடித்துக் கொண்டு அறைக்கு செல்வோம் என்று காத்துக்கிடந்தாள்.
அவிநாஷும் இரவு உணவுக்கு வந்துவிட, அவர்கள் உண்டு, சில நிமிடங்கள் பேசிவிட்டுச் செல்ல மேலும் நேரமெடுத்தது.
“என்ன பாப்பா ரொம்ப ரெஸ்லெஸா இருக்க?” என்று அவளிடம் அவிநாஷ் தனியாக வந்து கேட்க,
மணியைப் பார்த்தவள், “பத்தாகப்போகுதே.. குட் நைட் சொல்ல வேண்டாமா?” என்று தூக்க கலக்கத்தில் பிதற்றினாள்.
“யாருக்கு குட்நைட்?” என்று அவன் புரியாமல் கேட்க,
“அ..ஆங் அத்தான். ய..யாருக்கு குட் நைட்?” என்று தடுமாறினாள்.
“நீதான பாப்பா குட் நைட் சொல்லனும்னு சொன்ன?” என்று அவன் கேட்க,
“நான் தான் சொன்னேனா?” என்று தலையை சொறிந்தவள், “எனக்குத்தான் அத்தான். எனக்கு நானே குட் நைட் சொல்லி படுக்கனும்ல? அதை சொன்னேன். தூக்கமா வருது” என்று கண்ணை வேறு கசக்கிக் கொண்டாள்.
“உன் கண்ணுல ஒரு திருட்டுத்தனம் தெரியுதே?” என்று அவன் சந்தேகமாய் கேட்க,
“அப்ப சரி. நீங்க தனியா போய் யோசிச்சு நாளைக்கு கண்டுபிடிச்சுட்டு வாங்க. எங்கக்கா இங்கயே இருக்கட்டும்” என்றாள்.
“ஏதே?” என்று அதிர்ந்தவன், “நாளைக்கு வந்து உன்ன வீச்சுக்குறேன்” என்று செல்லமாய் அதட்டிவிட்டுச் சென்றான்.
ஒருவழியாக அவர்களை அனுப்பிவிட்டு அறைக்குத் திரும்ப இருந்தவளை சோதிக்கவென்றே அடுத்த சம்பவம் நிகழ்ந்தது.
“சங்குமா.. அப்பாக்கு கால் ரொம்ப வலிக்குது. அந்தத் தைலத்தை கொஞ்சம் தேச்சு நீவிவிட்டுட்டுப் போறியா?” என்று சச்சிதானந்தம் கேட்க,
“ஆங் ப்பா? தைலமா? இதோ வரேன்” என்று சோர்வாய் கூறியபடி வந்தாள்.
“தூக்கம் வந்துடுச்சாடா? முடியலைனா போய் படு” என்று அவர் கூற,
“இல்லப்பா இருக்கட்டும்” என்றபடி சென்று தைலத்தை எடுத்து வந்து தேய்த்து விட்டாள்.
இப்படி அப்படியென மணி பத்தரையைக் கடந்திருந்தது.
ஒருவழியாகத் தன் அறைக்குள் வந்து கதவடைத்தவள் சென்று மேஜையில் அமர்ந்து அந்த கடிதத்தைப் பிரித்தாள்.
'அன்புள்ள மித்துவிற்கு,
காதலுக்கு எவ்ளவோ கனவுகள் கேட்டுருக்கேன். ஆனா உன்னோடது ரொம்ப வித்தியாசமா இருக்குமா. ஸ்டேடஸ் தானே? வையேன். நானும் எப்படிலாம் நீ ரசிச்சு வைக்குறனு தெரிஞ்சுக்குறேன். ஆனா என்னையும் வைனு சொல்லிடாத. சத்தியமா முப்பது வயசாகப்போற நான் வெடலப்பையன் மாதிரி வச்சா.. எனக்கே வெக்கமாருக்கும்மா' என்று எழுதியிருப்பதைப் படித்தவளுக்கு இப்போதே வெட்கம் படர்ந்த அவன் முகத்தைக் கண்டுவிடும் ஆர்வம்.
'அதுவுமில்லாம வேலை சம்மந்தமா நிறைய பேரோட நம்பர் இருக்கு. அதுல யாரு பாக்க யாரு பாக்க வேணாம்னு நான் ஹைட் பண்ணவே ரெண்டு நாள் ஆகும். அதனால நீ வை. நான் பாக்குறேன்' என்று எழுதியிருப்பதை வாசித்தவளுக்கு மனமெல்லாம் குளுகுளுவென சாரல் வீசியது.
'கனகாம்பரம், ஐ லவ் யூ லாம் நீ எதிர்பாரதப்ப தான் அத்தான் சொல்லுவேம். அப்றம் சமைச்சு தர்றது. கேட்க சுவாரசியமா இருக்கு. என்னிக்கு சமைச்சுத்தரப்போற? எனக்கு நல்லா காட்டமா மட்டன்ல எது வச்சாலும் பிடிக்கும்’ என்று வாசித்தவள், “ஏ அம்மா.. நமக்கு காரமே ஆகாது. இவரு காரத்தை வெளுத்து கட்டுவாரு போலயே?” என்று முனுமுனுத்துக் கொண்டாள்.
'உன் காதல் ஆசையெல்லாம் கேட்க எனக்கே சுவாரஸ்யமா இருக்கு மித்து. உன் அடுத்த கடிதத்துக்காக காத்துட்டுருப்பேன். ஏ ஒரு முக்கியமான வெசயம். பிழையா எழுதினாக்கூட சரி. அதை அடிக்காத. என்ன தோனுச்சோ அதை அப்படியே எழுதி அனுப்பு. அப்றம்.. இங்க எல்லாருமே நலம். அங்கயும் நான் விசாரிச்சதா சொல்ல வேணாம். ஆனா விசாரிச்சுக்குறேன்' என்பதோடு அவனது கடிதம் முடிந்திருந்தது.
அக்கடிதத்தைக் கண்களில் மின்னலோடு பார்வையிட்டவள் வேகமாய் அலைபேசியை எடுத்து, ‘லெட்டர் வந்துடுச்சு' என்று குறுஞ்செய்தி அனுப்ப,
அவனிடமிருந்து ஒரு காணொளி வந்திறங்கியது.
'காதல் கடிதம் தீட்டவே.. மேகம் எல்லாம் காகிதம். வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்' என்ற பாடலைத் தாங்கி அக்காணொளி ஒலிக்க,
அவள் முகத்தில் அழகாய் ஒரு நாணப் புன்னகை.
“நான் தான் வைக்க மாட்டேன்னு சொன்னேன். உனக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லலை” என்று கண்ணடிக்கும் முகவடிவ பொம்மைகளோடு அவன் அனுப்ப, இவளும் சிரிக்கும் பொம்பைகளை அனுப்பி வைத்தாள்.
அடுத்த ஐந்தாம் நிமிடம், அக்காணொளி அவளது புலன நிலைபாடில் ஒளிர்ந்து, அவர்களது முதல் காதல் ஆசையை நிறைவேற்றியது!
Comments
Post a Comment