திருப்பம் -06
திருப்பம்-06
அன்று வாசலுக்கும் வீட்டுக்கும் நடையாய் நடந்து கிடையாய் கிடந்தான் திருமாவளவன். தேங்காயைத் திருவிக் கொண்டே அவன் நடைபயணத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த கார்த்திகா, “என்ன கொழுந்தரே, காலைல சாப்டது செரிக்கிலியாக்கும்?” என்று கேட்க,
அவளைப் பார்த்து அசடு வழிய சிரித்தான்.
'என்னமோ சரியில்லயே?’ என்று அவள் நினைக்க, தபால் காரர் வெளியிருந்து சப்தம் கொடுத்தார்.
வேக வேகமாய் வெளியே சென்றவன் தபால் காரரிடம் பேசி மடலை வாங்கிக் கொண்டு திரும்ப,
இருபக்கமும், இடுப்பில் கரம் ஊன்றி அவன் வழியை மறைத்துக் கொண்டு நின்றிருந்தாள், கார்த்திகா.
“ம..மைணி” என்று திருமாவளவன் தடுமாற,
“என்ன கொழுந்தரே.. என்னமோ திருட்டுகோட்டு வேலையாவுது போல?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்டாள்.
திருதிருவென விழித்தவன், “அப்புடிலாம் இல்ல மைணி” என்று கூற,
குழந்தையோடு அங்கு வந்த விக்ரமன், “ஏம்லே என்ன நடக்குதிங்க?” என்று கேட்டான்.
“ஒங்க தம்பி என்னமோ மறைக்காவ” என்று வளவன் பின்னே எட்டி எட்டிப் பார்த்தபடி கார்த்திகா கூற,
“என்னதுலே?” என்று சிரிப்பாக விக்ரம் கேட்டான்.
“ச்ச.. என்னடா நீயும்? மைணிதான் புரியாம பேசுதாவனா” என்றவன், ‘அய்யோ.. நளி (கேலி) பேசியே சாவடிப்பாவலே' என்று மனதோடு சிணுங்க,
ஒளிசுடர் வளவனைப் பார்த்து தன் தந்தையென்று நினைத்து, “ப்பா” என்று கைகளை நீட்டினாள்.
இது அங்கே வாடிக்கையாக நடப்பது தான். முடியை வைத்து வித்தியாசம் காணுமளவு பிள்ளைக்கு விவரம் இல்லாததால், விக்ரமனையும், வளவனையும் தந்தையென்றெண்ணி மாறி மாறி கரம் நீட்டி அழைப்பாள். அதை வைத்து அவளிடம் விளையாடி, குழம்பிய பிள்ளையை அழவிட்டு இவர்கள் சிரிப்பதெல்லாம் அழகிய தருணங்களாய் அவர்கள் நினைவோடு சேமிக்கப்படும்.
“கொழுந்தரே.. மவ கூப்பிடறா” என்று அடக்கப்பட்ட சிரிப்போடு கார்த்திகா சொல்ல,
'அண்ணே மவளே.. லந்து பண்ணுதடி இப்பவே' என்று மனதோடு செல்லமாய் திட்டியவன் கடிதத்தைத் தன் சட்டைப் பையில் வைத்துவிட்டு மகளை அள்ளிக் கொண்டான்.
அவனது புதர் முடியில் கை நுழைத்திழுத்து அவள் விளையாட, “ஆ.. ராங்கி வலிக்குடி” என்றவன் ஒளியைத் தள்ளிப் பிடித்து, “மூக்க கடிக்கப்போதேம் பாரு” என்று விளையாட்டு காட்ட, குழந்தை பொக்கை வாய் திறந்து சிரித்தாள்.
அந்த இடைவேளையில் அவன் பையிலிருந்த அந்த கடிதத்தை எடுத்திருந்த கார்த்திகா, “இதுதேம் இதுதேம்.. என்னனு விசாரிங்க” என்று விக்ரமனிடம் கொடுக்க,
“மைணி..” என்று அதை வாங்க முற்பட்டவன் விக்ரமனைப் பார்த்து, “லேய்.. வேல வெசயமா வந்துருக்குது. குடும்லே” என்று கூறினான்.
கரங்களை மார்பிற்குக் குறுக்கே கட்டிக் கொண்டு இரு விரலில் அந்த கடிதத்தைப் பிடித்துக் கொண்டு பார்வையிட்டவன், அதன் பின் பக்கம் இருக்கும் சங்குப்பூ வரைபடத்தைக் கண்டதும் கண்டுகொண்டான்.
அப்படியொரு சிரிப்பு வந்தது அந்த இரட்டையனுக்கு.
“வேலையாக்கும்? என்ன வேலைலே?” என்று கேட்டவன், “பூந்தோட்டத்துல இந்தமொற சங்குப்பூதேம் மணக்கும் போல?” என்று கேலியில் இறங்க,
வளவனுக்கு வெட்கம் வந்துவிட்டது.
யார் கூறியது வெட்கம் பெண்களுக்கு உரித்தானதென்று? காதலியைக் கொண்டு நடத்தும் கேலிகளில் நாணம் கொண்டு, சிரம் தாழ்த்தி, பிடறியைக் கோதும் ஆண்களின் முகத்தில் மின்னும் வெட்கத்திற்குத்தான் எத்தனை மதிப்பு?
தம்பியின் வெட்கம் கண்டு அட்டகாசமாய் சிரித்த விக்ரமன், அவனை சீண்டிப்பார்க்கும் பொருட்டு, “இந்தா கார்த்தி.. இத என்னனு பாரு” என்று நீட்டினான்.
“ஏம்லே?” என்றவன் குழத்தையை அவன் கையில் கொடுத்துவிட்டுத் திரும்பிப் பார்க்க, கார்த்தி அங்கில்லையே.
“மைணி” என்று கத்தியபடி அவன் உள்ளே வர, நீள்விருக்கைக்கு பின்னே நின்றுகொண்டு, “என்ன கொழுந்தரே, வேணுமா?” என்று மடலை ஆட்டியபடி கேட்டாள்.
“மைணி கொடுத்துபுடுங்க. யாரும் வந்துடப்போறாவ” என்று கூறியவன் சுற்றி முற்றி பார்க்க,
“தனம் காலேஜு போயிட்டா. அத்த மாமா கோவிலுக்கு போயிருக்காவ. நாம நாலு பேருதேன் இருக்கம். யாரும் வாரததுதேன் பிரச்சினைனா வெசனப்படாதீய” என்று கூறி அவள் கிளுக்கிச் சிரித்தாள்.
“மைணி” என்று அவன் அவளைத் துறத்த, அவள் நீள்விருக்கையைச் சுற்றிச் சுற்றி ஓடி போக்குக் காட்டினான்.
ஒருவழியாக, அவளைப் பிடித்துவிட்டவன், “மைணி குடுங்க” என்க, தனக்கு பின்னே மறைத்துக் கொண்டு, “முடியாது முடியாது” என்று சிரித்தாள்.
எப்படியோ அவளிடமிருந்து அவன் அதை பிடுங்கிவிட, எட்டி பறிக்கும் முயற்சியில் விழப் பார்த்தவளை, “அய்யோ மைணி பாத்து” என பிடித்து நிறுத்தினான்.
அவர்கள் சேட்டைகளை ரசித்துக் கொண்டிருந்த விக்ரமனும், “இந்தா பாத்துடி” என்று பதறிக் கொண்டுவர,
திரிபுரா உள்ளே நுழைந்தாள்.
உள்ளே நுழையும்போது வளவன் கார்த்திகாவைப் பிடித்திருப்பதைக் கண்டு முகத்தை அஷ்டகோணக்தில் சுருக்கியபடி அவள் வர,
“எனக்கொன்னுமில்ல” என்று சிரித்தபடி நகர்ந்தவள், “பொழச்சு போங்க” என்று கூறினாள்.
அதில் பக்கென்று சிரித்த விக்ரம் திரும்ப, முகம் சுருக்கியபடி உள்ளே வந்தாள் திரிபுரா.
“வா க்கா” என்று அவன் கூற,
“வரம்லே” என்றபடி வந்து அமர்ந்தாள்.
“மைணி வாங்க” என்று கார்த்திகாவும் இன்முகமாய் வரவேற்க,
“காலங்காலையில என்னதிது கொழுந்தரோட வெளாட்டு? அறியாதவ யாரும் வந்தாவனா என்ன நெணப்பாவ?” என்று கேட்டாள். தவறாக நினைத்து அவள் கேட்கவில்லை. அப்படியெல்லாம் தன் சொந்தங்களின் நடத்தையை தவறாகக் கூறுமளவு அவள் மோசமும் இல்லை. ஆனால் வேறு யாரும் பார்த்தால் தவறாக நினைப்பர் என்று உறுதியான நம்பிக்கை இருந்ததால் அவ்வாறு கேட்டுவிட்டாள்.
கார்த்திகா முகம் சட்டென வாடிவிட, “எம்பொண்டாட்டியும் தம்பியும் எப்புடினு எனக்கு தெரிஞ்சாமட்டும் போதும் க்கா. போறவோ வரவோளுக்குலாம் என்னத்துக்கு தெரியனும்?” என்று சிரித்தபடியே நறுக்கென்று விக்ரமன் கூறினான்.
“சரிதேம்ல” என்ற திரிபுராவும் அத்தோடு அந்த பேச்சை விட்டுவிட்டாள்.
அவள் பேசியது சுருக்கென்று இருந்தாலும் கூட, ‘மைணிக்கு இப்படி பேசுறதென்ன புதுசாக்கும்?’ என்று எப்போதும் போல் அவள் பேச்சை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் கார்த்திகா சென்றுவிட்டாள்.
வளவன் கையிலிருக்கும் கடிதத்தைப் பார்த்த திரிபுரா, “என்னம்லே கடிதாசி?” என்று கேட்க,
“அவேன் வேலை வெசயமா ஏதோவாம். நீ போய் ரெடியாவுலே. இன்னிக்கு அரிசி மூட்ட அனுப்பனும்ல? வடிவேலுவயும் வரச்சொலிட்ட தான? போ” என்று விக்ரமே தம்பியைக் காத்து அனுப்பிவைத்தான்.
திரிபுராவிற்கு கார்த்திகா அசலூர் என்பதாலேயே ஒரு ஒதுக்கம் எப்போதும் உண்டு. நாத்தனார் கொடுமையெல்லாம் செய்ததில்லை என்றாலும், சுறுக்கென்று பேசிவிடுவது, ஒட்டுதலற்று நடந்துகொள்வதெல்லாம் சிறப்பாக நடைபெறும். ஆனால் ஒளிசுடர் மீது கொள்ளை பிரியம் அவளுக்கு.
தப்பித்தோம் பிழைத்தோமென்று மேலே தனதறைக்கு வந்தவன் வேகமாக, கடிதத்தைப் பிரித்தான்.
கடிதத்தின் உறையை பிரிக்க, அதில், ‘கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன் பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ?’ என்று எழுதியிருந்தது.
அதை கண்டு மிக அழகாய் புன்னகைத்தவன் மனம், ‘பொன்னே உன் கடிதத்தை பூவாலே திறக்கின்றேன், விரல் பாட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ?’ என்று பாடிக்கொண்டது.
தன் பச்சரிப்பற்கள் பளபளக்க புன்னகைத்தவன், தன் சுருள் கேசத்தைக் கோதிக் கொண்டு அதனுள் இருந்த சங்குப்பூவை எடுத்தான்.
அதற்கென்றே அவன் வாங்கி வைத்திருக்கும் கண்ணாடி குடுவையைத் திறந்தவன், அதனுள் பூவை பத்திரப்படுத்திவிட்டுக் காகிதத்தைப் பிரித்தான்.
'அன்புள்ள திருமாலுக்கு,
எப்படி இருக்கீங்க? இந்த லெட்டர் காதல் ரொம்ப அழகாருக்கு. எனக்கு நிஜமாவே ஏதோ வீட்டுக்குத் தெரியாம லவ் பண்ற ஃபீலா இருக்குது தெரியுமா? லெட்டர் வந்தா வீட்ல சமாளிச்சு அதை பத்திரப்படுத்தி வந்து படிக்குறதுக்குள்ள.. ஹப்பா. பெரிய வேலைதான். அப்போலாம் ஃபோன் இல்லாம லெட்டர்ல காதல வளத்தவங்கலாம் இப்படித்தான ஃபீல் பண்ணிருப்பாங்க' என்று அவள் எழுதியதைப் படித்தவனுக்கு அழகாய் புன்னகை மலர்ந்தது.
‘அடித்தல் திருத்தல் இல்லாம எழுதனுமா? சொல்லத் தயக்கமானு தெரியலை. ஆனா நான் சொன்னதை நீங்க செய்ய முன்வந்துடுவீங்க. அதை ஏற்க என்னால முடியுமானு தெரியலையே? நைட்டு திருட்டுத்தனமா பைக் ரைட் போகனும்னு ஆசை. ஆனா நீங்க கூப்பிட்டா வர்றதுக்கு எனக்கு தைரியம் இல்லயே?’ என்று அவள் எழுதியிருப்பதை வாசித்தவன் வாய்விட்டு சிரித்துவிட்டான். 'சரியான பயந்தாரிடி நீ' என்று நினைத்துக் கொண்டவன் வாசிப்பைத் தொடர,
‘எப்போவாது கோவில்ல மீட் பண்ணிக்கனும். தனித்தனியாதான் வரனும். தனித்தனியாதான் போகனும். ஆனா நாம ரெண்டுபேரும் ஒன்னா வந்துருக்கோம்னு நமக்கு மட்டுந்தான் தெரியனும். பிராகரத்தை சுத்தி வரும்போது யாருக்குமே தெரியாம உங்களுக்கு விபூதி வச்சுவிட்டுட்டு ஓடிடுவேன். துறத்திட்டுலாம் வந்துடாதீங்க. அப்றம் பயத்துல கோவில விட்டே ஓடிடுவேன்' என்று அவள் எழுதியதை வாசித்தவன் கண்களில் நீர் வர சிரித்தான்.
‘சின்னப்புள்ளத்தனமா இருக்குனு நினைக்காதீங்க. இதுலாம் நான் லவ் பண்றவங்க கிட்ட நோட்டிஸ் பண்ண சின்னச் சின்ன கியூட்டான விஷயம். எனக்கு இதெல்லாம் பாக்கும்போது லைட்டா ஆசையாருக்கும். லவ் பண்ற அளவு நமக்கெங்க தைரியம் இருக்கு? ஆனா இப்ப நம்ம லவ் பண்ணும்போது நல்லாருக்குங்க' என்று வாசிக்கும்போதே அவள் எத்தனை உற்சாகமாய் இதனை கூறுகின்றாள் என்று அவனால் உணர முடிந்தது.
'நிஜமா இப்படிலாம் நடக்கும்னு ஒரு பத்து நாள் முன்ன என்கிட்ட யாராது சொல்லிருந்தா நம்பிருக்கவே மாட்டேன். இன்னும் சொல்லப்போனா பொண்ணு பாக்க வந்தப்ப உங்ககிட்ட இந்த ஆசையை சொல்லனும்னு கூட நான் நினைக்கலை. ரொம்ப படபடப்பா இருந்தப்ப எங்க அவி அத்தான் தான் வந்து உன்னோட நிஜத்தை வெளிப்படுத்தும்போது எதிரிருப்பவங்க எப்படி ரியாக்ட் பண்றாங்க என்பதில் உன்னோட பதில் இருக்குனு சொன்னாங்க. சின்னப்பிள்ளத்தனமான விஷயம் தான். அதை நாம எல்லார்கிட்டயும் காட்டி, இன்னஸன்னு பெயர் வாங்க ஆசைப்பட மாட்டோம்ல? ஆனா நமக்கே நம்காகனவங்க கிட்ட, நம்ம தனிமைல வெளிப்படுத்தும்போது அதை உதாசீனப்படுத்தாம அவங்க நம்ம மனம் போல ஏத்துக்கும்போது.. அது ஒருமாதிரி நல்லாருக்குங்க' என்று அவள் எழுதியதை வாசித்தவனுக்கு, அவளது மனத்திருப்தியை உணர முடிந்தது.
'சரிசரி.. இன்னிக்கு இதுபோது. அப்றம் ஒரு முக்கியமான விஷயம். வர்ற சண்டே நம்ம நிச்சயத்துக்கு கல்யாணத்துக்குலாம் துணி எடுக்கப்போறோம்' என்று அவள் எழுதியிருக்க, ‘அட ஆமால்ல?’ என்று நினைத்துக்கொண்டான்.
‘அம்மா என்னை புடவைதான் கட்டனும் சொல்லிட்டாங்க. நான் அனார்கலி தான் போடலாம்னு இருந்தேன். ஆனா ராஜமாதா ஸ்டிரிக்ட் ஆர்டர் போட்டாச்சு. சரினு நானும் ஒரு ப்ளூ கலர் புடவை தான் எடுத்து வச்சுருக்கேன். நீங்களும் முடிஞ்சா நீலகலர் சட்டைப் போட்டுட்டு வாங்க. உங்க பதில் கடிதத்தை அங்க வாங்கிக்குறேன். அப்றம் இன்னொன்னு.. இன்னிக்கு மதியம் உங்களுக்கு நான் சாப்பாடு தருவேன். எப்ப எப்படி யார் மூலமா வரும் என்பது சர்பியைஸ். உங்க ரப்பர் தோட்டத்துக்கு சாப்பாடு வரும். இங்கயும் எல்லாரும் நலம். அங்க எல்லாரையும் விசாரிச்சேன்னு சொல்ல வேணாம். ஆனா விசாரிச்சுக்குறேன்' என்பதோடு அவள் கடிதம் முடிவடைய,
நெஞ்சை நீவிக் கொண்டவன் முகம் பூரித்து புன்னகைத்திருந்தது.
தற்செயலாய் நிமிர்ந்தவன், தன் முன் இருக்கும் கண்ணாடியில் தன் முகம் காண, அவன் உள்ளத்து உவகை முகத்தில் அத்தனை அழகாய் மின்னியது.
'இதுதான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்றதோ?’ என்று நினைத்தவன் இதழ்கள் இன்னும் விரிய,
அலமாரிக்கு சென்று கடிதத்தைப் பத்திரப்படுத்திவிட்டு, தன்னிடமுள்ள ஒரு நீலநிற சட்டையை எடுத்தான்.
அந்த சட்டையைப் புகைப்படம் எடுத்துக் கொண்டவன் அவளுக்கு புலனத்தில் அனுப்பி வைக்க,
அதைப் பார்த்த அடுத்த பத்தாம் நிமிடம் தனது புடவையின் புகைப்படத்தை அனுப்பினாள்.
“அழகாருக்குமா” என்று அவன் குறுஞ்செய்தி அனுப்ப,
புன்னகைக்கும் பொம்மைகளை அனுப்பி வைத்தாள்.
Comments
Post a Comment