திருப்பம்-07

 திருப்பம்-07





'யார்கிட்ட குடுத்துவிடப்போறா சாப்பாட்ட? அய்யோ விக்ரம் வேற வயலுக்கு கூப்டானே? யாரு மூலமா குடுக்கப்போறாளோ எப்படித்தரப்போறாளோ?’ என்று உள்ளுக்குள் சிணுங்கலாய் பதட்டம் கொண்டு தயாராகிச் சென்றான் திருமாவளவன்.


கீழே வந்தவனைப் பார்த்து முறைத்த வடிவேல், “ஏம்லே.. விக்ரம் வயலுக்கு போவம் வானு என்னைய கூப்டுட்டு, நீ உள்ளார என்ன குத்துபோணி வெளக்கிட்டிருந்தியாக்கும்?” என்று கத்த,


அவனுக்கு தேநீருடன் வந்த கார்த்திகா, “இல்லண்ணே கொழுந்தரு உள்ளக்க சங்குப்பூ பறிச்சுட்டு இருந்தாவ” என்று கேலி செய்தாள்.


“சங்குப்பூவா?” என்று புரியாதபடி மகளுக்கான கருப்பட்டிக் காப்பியுடன் தெய்வா வர,


கார்த்திகாவிற்கு பக்கென்று ஆனது.


'ஆத்தீ.. எல்லாம் வந்துட்டாவனு நெனவில்லாம பேசிட்டோமே' என்று அவள் வளவனை நோக்க,


“ஆமா.. உள்ளார பூ பறிச்சுகிட்டு இருந்தேம்” என்று சமாளித்தவன், “விக்ரம் கிளம்பிட்டானா மைணி?” என்று கேட்டான்.


“இப்பத்தேம் போனாவ” என்று அவள் கூற,


“நீங்க எப்போ வாரிய தங்கபுள்ள? கணக்கு பாக்கணுமில்ல?” என்று வடிவேல் கேட்டான்.


“இந்தா அண்டைல ஒள வச்சுட்டேம். மரக்கறிய வெட்டிகுடுத்துப்போட்டு வரேம். நீங்க போவ” என்று கார்த்திகா கூற,


“நான் சோலிய பாத்துகிடுதேம். நீ போய்வா” என்று தெய்வா கூறினார்.


“இருக்கட்டுந்த்த. இத மட்டும் முடிச்சுட்டு போறேம்” என்று அவள் கூற, சரியென்று விட்டுவிட்டார்.


வளவனும் வடிவேலும் புறப்பட்டுச் செல்ல, வயலை அடைந்தவர்கள் நாசியெங்கும் மண் வாசம் நிறைந்தது.


அங்கே வந்த விக்ரம், “ஏம்லே.. அரிசியும் உமியும் பிரிச்சு வச்சுட்டாவ. எப்போம் கொடுப்போமே, அவியலுக்கும், பெரியத்தான் சூப்பர் மார்கெட்டுக்கும் அனுப்புறது போவ, மீதி மூட்டைய வச்சுருக்கேம். எத்தனையுனு எண்ணிப்பாத்துகிட்டு சொல்லு. ஏத்தத்துக்கு அனுப்பிடுவோம்” என்று கூற,


“சரிடா” என்று கூறினான்.


வடிவேலுவைப் பார்த்து, “என்னம்லே அணக்கத்தக் காணும்?” என்று விக்ரம் கேட்க,


“அப்படிலாம் இல்லயே” என்றான்.


“ம்ம்..” என்று அவனை ஏற இறங்கப் பார்த்த விக்ரம், “மில்லுக்கு வாங்க” என்று கூறிவிட்டுச் சென்றான்.


“என்னம்லே? நானும் பாக்கேன் விக்ரம பாத்தாளே பம்புத?” என்று வளவன் கேட்க,


“எல்லாம் காரணமாத்தான். பொறவு சொல்லுவேம். வா” என்று வடிவேலு கூறினான்.


“ம்ம்” என்று கூறிய வளவனும் சுற்றி சுற்றிப் பார்த்தபடியே நடக்க,


“யாரையோ தேடுதாப்ல இருக்கு?” என்று வேலு கேட்டான்.


“நான் யாரலே தேடப்போறேம்?” என்று கேட்டபோதும் அவன் மனம், ‘யாரை அனுப்பி வைக்கப்போறா?’ என்றே எண்ணியது.


சில நிமிடங்களில் கார்த்திகாவும் வந்துவிட, அனைவருமாக அமர்ந்து எத்தனை மூட்டை எங்கெங்கு அனுப்ப வேண்டும், ஏற்றுமதிக்கு எத்தனை, எவ்வளவு செலவு என்பதைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டனர்.


“தங்கபுள்ள.. ஏத்தத்துக்கு இந்தமொற காசு ஏறுது. கப்பலுல செலவு கூடுது” என்று வடிவேலு விவரத்தைக் கூற,


“சரக்கு ஏத்ததுக்கு பேப்பரெல்லாம் காட்டுங்க பொறவு பேசுதேன் அதப்பத்தி” என்றாள்.


“நீ கேப்பனு தெரியும்லே. அதேம் கையோடு எடுத்தாந்தேன்” என்று வடிவேலு ஆவணங்களை சமர்ப்பிக்க, அனைத்தையும் பார்வையிட்டு ஒப்புக் கொண்டாள்.


குடும்பம் வேறு, தொழில் வேறு என்பதில் அனைவருமே உறுதியாக இருப்பதாலேயே இப்படியான பேச்சுக்களும் தயக்கமின்றி வெளிவரும்.


அனைவரும் பேசிமுடிக்க, “ஆ.. வவுறு கூவுது. ஏ மக்கா சாப்பிடப் போவமா?” என்று வேலு கேட்க,


“வீட்டுக்கு வாங்கண்ணே. சாப்பிட்டுப்போங்க” என்று கார்த்திகா அழைத்தாள்.


மணியைப் பார்த்தவன், “சரிமா வரேம்” என்று கூறி, “போவமாலே?” என்று வளவனைப் பார்க்க,


“நீங்க போங்க. நான் ஓரெட்டு மகா அத்தான்னைப் பாத்துட்டு வரேம்” என்றான்.


“என்னத்துக்குலே? அவுக சாப்பிடப்போயிருப்பாவ. நீயும் வா. சாப்டு போய் பாப்பம்” என்று வேலு அழைக்க,


'இவன் வேற வெவரம் புரியாம' என்று நினைத்துக் கொண்டு, “நீ போலே. நான் பொறவு வாரேம்” என்று கண்களை உருட்டிக் கூறினான்.


'ரைட்டு. மாப்ள ஏதோ காரணமாத்தேன் சொல்லுது' என்று நினைத்தவன், “சரி வா தங்கபுள்ள” என்று எழுந்து விக்ரமனைப் பார்க்க,


அவனும் எழுந்துகொண்டான்.


மூவருமாக புறப்பட, இவனும் வெளியே வந்து ரப்பர் தோட்டத்திற்குச் சென்றான்.


'ஏட்டி.. பசிக்கு. எங்க இருக்க?’ என்று எண்ணியபடி அலைபேசியை நோண்டிக்கொண்டு வந்தவனை நோக்கி, தோட்டத்து வாசலிலேயே, ‘ஸ்விக்கி’ என்ற உணவு வினியோகத்தாரின் உடையில் நின்றிருந்த பெண் வந்தாள்.

 

“சார் உங்களுக்கு ஃபுட் வந்துருக்கு” என்று கூற,


“நான் ஏதும் ஆர்டர் பண்ணிலேயே” என்று அசட்டையாய் கூறினான்.


“நீங்க தானே திருமால்?” என்று அந்த பெண் கூற,


அந்தப் பெயரும் குரலும் அவன் மூளைக்குள் மணியடித்தது.


சட்டென நிமிர்ந்து பார்க்க, தலைகவசம் மறைக்காத மாண் விழிகள் தலைவன் மனக்கவசம் உடைத்து ஊடுருவியது.


சுற்றி முற்றிப் பார்த்தவன் அவள் கரம் பற்றி தோட்டத்திற்குள் மறைவாய் அழைத்துவர,


பதறிப்போனவள், “ஏங்க.. சாப்பாட பிடிங்க. பிரேக் முடியுமுன்ன நான் ஆபிஸ்கு போகனும்” என்றாள்.


அவளைத் தலைமுதல் கால் வரைத் தன் பார்வையால் அலசியவன், “இதான் அந்த சர்பிரைஸா?” என்று கேட்க,


“ஏன் சர்பிரைஸா இல்லையா?” என்று கேட்டாள்.


இதழ் மடித்த சிரிப்போடு அவளைப் பார்த்து, “இல்லாமப் போவுமா?” என்றவன், “இவ்ளோ தைரியம் இருக்கா உனக்கு?” என்று கேட்டான்.


“ம்க்கும். இப்ப நீங்க வாங்கிக்கலைனா வச்சுட்டு ஓட்டமா ஓடிடுவேன்” என்று மெல்லிய குரலில் அவள் முனகலாய் கூற,


அவள் கண்களில் அப்பட்டமான அச்சம் தெரிவதைக் கண்டான்.


அதில் சிரித்துக் கொண்டவன் கை நீட்ட, தான் கைமணக்க தயாரித்த மட்டன் பிரியாணியை அவனிடம் சேர்ப்பித்தாள்.


“தேங்ஸ்” என்று அவன் கூற,


புன்னகைத்துக் கொண்டாள்.


“சாப்டு எப்படி இருக்குனு சொல்லுங்க” என்று ஆசையாய் அவள் கேட்க,


“சொல்லிடுவம்” என்றான்.


அதற்குமேல் இருப்பாளா அவள்? ஓடாத குறையாய் அங்கிருந்து சென்றவள் வண்டியில் ஏறி அமர்ந்ததும் அவனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு புறப்பட்டிருந்தாள்.


செல்பவளை சிறு புன்னகையோடு பார்த்தவன், தோட்டத்தில் இருக்கும் சின்ன ஓட்டு வீட்டிற்குச் சென்றான்.


அங்கே உள்ள கிணற்றில் தண்ணீர் மொண்டு முகம், கை, கால் எல்லாம் கழுவிக் கொண்டு, நீர் பருகியவன் சென்று அவள் கொடுத்த உணவைப் பிரிக்க, சின்னக் காகித அட்டை ஒன்று அதில் இருந்தது.


அதை எடுத்துப் பார்க்க, ‘எனக்குக் காரம் சமைச்சும் பழக்கமில்ல சாப்பிட்டும் பழக்கமில்லை. நீங்க காட்டமா கேட்டதால கூடத்தான் மிளகா வச்சு அறைச்சேன். காரம் கொறச்சோ கூடயோ இருந்தா மன்னிச்சுகிடுங்க' என்று எழுதியிருந்தது.


புன்னகையுடன் அந்த அட்டைக்கு ஒரு முத்தம் வைத்தவன் உணவைத் திறக்க, பிரியாணி வாசம் அவன் நுரையீரலைக் காதலோடு முத்தமிட்டுத் தழுவியது.


உணவை அள்ளி முதல் வாய் அவன் வாயில் வைக்க, அவன் வீட்டில் சமைப்பதைப் போல் காரமில்லை என்றாலும், காரம் இருக்கத்தான் இருந்தது.


'இதுவே காட்டமா? எப்பிடிடி நம்ம வீட்ல சாப்பிடப்போற?’ என்று உண்மையில் அவளுக்காக மனம் பதைபதைத்தாளும், அவள் குடுத்த உணவை ருசித்து ரசித்து, அதன் காதலை ஆழ்ந்து அனுபவித்தவனுக்கு மற்ற சிந்தனைகள் எல்லாம் பின்னுக்குச் சென்றுவிட்டன.


ஒவ்வொரு வாயையையும் ரசித்து உண்டவன், உணவை முடித்து பாத்திரத்தைக் கழுவியதும், அவளுக்கு, ‘அற்புதமா இருந்துச்சு மித்து' என்று மனமார செய்தி அனுப்பினான்.


அதைப் பார்த்து மனமார புன்னகைத்தவளும் நன்றி அனுப்புவிட்டுக் குதூகலத்துடன் பணியைத் தொடர்ந்தாள்.


வீட்டிற்கு வந்து சேர்ந்த வளவனைப் பார்த்த வடிவேலு, “என்னம்லே அத்தானப் பாத்தாச்சா?” என்று கேட்க,


“ம்ம்.. பாத்தேம்லே” என்று அவன் அருகே அமர்ந்து தோளில் கரம் போட்டான்.


அவன் கரத்திலிருந்து பிரியாணியை வாசம் பிடித்தவன், “அத்தான் பிரியாணி போட்டாவ போல?” என்று நக்கலாய் கேட்க,


“ஆமாலே அங்கனயே சாப்பிட்டுப்போவ சொன்னாவ” என்று கூறினான்.


அந்நேரம் பார்த்து “சாப்பாடு சூப்பருத்தா” என்று கூறியபடி சமையலறையிலிருந்து கரத்தைத் துண்டில் துடைத்துக்கொண்டு மகாதேவன் வெளியே வர, வளவன் அவரைக் கண்டு பேய் விழி விழித்தான்.


அங்கு வந்த கார்த்திகா, “என்ன கொழுந்தரே.. அண்ணாவ பாத்தாச்சா?” என்று கேட்க,


அவன் கட்டிவிட்டக் கதையைக் கார்த்திகா வழி கேட்டிருந்த மகாதேவனும் நமட்டு சிரிப்போடு அவனைப் பார்த்து நின்றார்.


“அட தங்கபுள்ள நீ என்ன? அவன் அத்தானுக்கு நீயு சுண்டவத்தக் கொழம்புதேம் ஊத்திருக்க. அவேம் அத்தான் மச்சானுக்கு பிரியாணி போட்டிருக்காவ” என்று நண்பனின் கையைப் பிடித்து ஆட்டியபடி வடிவேலு கேலி செய்ய,


மகாதேவன் வாய்விட்டு சிரித்தான்.


“ஆனாலும் ஒரு கூரோட நீயு ப்ளான் போட்டிருக்க வேணாமாலே? ஒரு வார்த்த இந்த அத்தாங்கிட்ட சொல்லிருந்தா நானும் இங்கன வராம வேற எங்குட்டாது போயிருப்பேம்” என்று மகாதேவன் சிரித்தபடி கூற,


“அய்யோ அத்தான்.. நீங்களுமா?” என்று அவர் கேலியில் மனதோடு சிணுங்கினான்.


“அட என்ன அண்ணே நீங்க? பொறவு மட்டன் பிரியாணிக்கு நீங்க பங்குக்கு வந்துட்டீயனா என்ன செய்ய?” என்று வடிவேல் சிரிக்க,


“அப்புடி நெனச்சிருப்பியானோ?” என்று கேட்டவர், “லேய்.. அம்புட்டுக்கு வெவஸ்தகெட்டவேம் இல்லலே. அதுலாம் ஓம் அவிய ஒனக்காவ குடுத்தது. அதுலலேம் பங்கு கேட்டு வரமாட்டியேம் ஆமா” என்று சிரித்தான்.


அதில் முகம் சிவக்கப்பெற்ற வளவன், “போங்கய்யா எனக்கு வேல கெடக்கு” என்று மேலே சென்றுவிட,


“பய காதல் மோடுக்கு வந்துபுட்டான்” என்று கூறி வடிவேலு சிரித்தான்.


அறைக்குத் திரும்பிய வளவன் முகம் அத்தனை பூரித்து இருந்தது.


கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டவன், ‘காதல் ரொம்ப அழகானதுடி மித்ரா… அதுபத்தித் தெரியாமயே அத எனக்கு உணரவச்சுட்டு இருக்க' என்று எண்ணிக் கொள்ள, அவன் உள்ளம் உவகையில் பூத்திருந்தது.


சரியாய் அந்நேரம் பார்த்து அவன் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததாய் ஓசையெழ, அதையெடுத்துப் பார்த்தான்.


அவளிடமிருந்து ஒரு சிரிக்கும் பொம்மை செய்தியில் வந்திருந்தது. அவள் சுயவிவரப்படத்தைச் சுற்றி பச்சை நிற வளையம் சுற்ற, அவள் நிலைபாடு வைத்திருப்பதைத் தனக்குத் தெரியப்படுத்தத்தான் இந்த குறுஞ்செய்தி என்று புரிந்தது அவனுக்கு.


சிறு புன்னகையுடன் அவன் அதைத் திறக்க,


‘கனவு கண்டு எந்தன்

கண்கள் மூடிக் கிடந்தேன்

காற்று போல வந்து கண்கள்

மெல்லத் திறந்தேன்

காற்றே எனைக் கிள்ளாதிரு

பூவே என்னைத் தள்ளாதிரு

காற்றே எனைக் கிள்ளாதிரு

பூவே என்னைத் தள்ளாதிரு

உறவே உறவே

உயிரின் உயிரே

புது வாழ்கை தந்த வள்ளலே' என்ற பாடல் ஒலித்தது.


அதைக் கண்டவன் இதழ்கள் பூவாய் மலர்ந்து, தன்னைப் போல் பாடலை முனுமுனுக்க,


இதய வடிவங்களை அதற்கு பதிலாய் அனுப்பினான்.


அதைக் கண்டு முகம் சிவந்தவளும், ‘இதுவும் நல்லாதான் இருக்கு' என்று நினைத்துக் கொள்ள,


இவர்களை வைத்து விதி ஆடப்போகும் ஆட்டம் சற்றுத் தொலைவில் நின்று கேலியாய் சிரித்துக் கொண்டது.




Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02