திருப்பம்-08

 திருப்பம்-08



அந்த மாபெரும் ஜவுளி அரங்கத்தில் மொத்த குடும்பமும் கூடியிருந்தனர்.


இம்முறை பிள்ளைகளுடன் பள்ளிக்கு செல்லவிருப்பதால் தீபிகாவும் மகாதேவனும் வர மறுத்துவிட, 


திரிபுராவும் தான் வர விருப்பப்படாததை நாசூக்காக தெரிவித்தாள்.


“இப்ப எதுக்குடி இப்படி ஒதுங்கி ஒதுங்கி நிக்குறவ?” என்று தெய்வா அதட்டியே கேட்டுவிட,


“ஆமா மூத்தவனு எனக்கு உரிம கொடுத்து எல்லாம் சொன்னீயளா நீங்க? நீங்களா பொண்ணு போட்டோ பாத்து, ஜாதகம் எல்லாம் பாத்து முடிவு பண்ண பொறவு, பொண்ணு பாக்கும் முன்னுக்க தான எனக்கு சொன்னீய? அதுவும் அசலூர்காரி” என்று திரிபுரா கூறினாள்‌.


“ஏ அவ அம்மா இந்த பக்கட்டுதான்டி” என்று தெய்வா ஆதங்கமாய் கூறினார்.


“அம்மா பக்கமா ம்மா முக்கியம்? ஐயா எந்த பக்கமுனுல பாக்கனும்?” என்று திரிபுரா கேட்க,


தெய்வா குழப்பமாய் விழித்தார்.


“பொண்ணு பாக்க நான் வரலங்கேன் சரினுட்ட. உன் ரெண்டாது மவ, மருமவேன்னு கூட்டிட்டு போய் அறிமுகம் பண்ணிவச்சிருக்க. எனக்கு இப்ப அங்கன ரெண்டாம்பச்சமால்ல மருவாத இருக்கும்?” என்று திரிபுரா கேட்க,


“நீ வாடி. உன்ன மரியாத கொறவா நடத்த அம்மா விட்டுடுவேனா?” என்று அவளை எப்படியோ பேசி, சரிகட்டி சிவபாதசேகரனையும் சேர்த்து வரவைத்திருந்தார்.


சங்கமித்ரா, சச்சிதானந்தம், மற்றும் தாட்சாயணி கடை வாசலிலேயே இவர்களுக்காக காத்திருக்க,


சுயம்புலிங்கம், தெய்வநாயகி, திருவிக்ரமன், கார்த்திகா, ஒளிசுடர், திரிபுரா, சிவபாதசேகரன், வடிவேலு மற்றும் திருமாவளவன் வந்து சேர்ந்தனர்.


“வாங்க சம்மந்தி, வாங்க சம்மந்தியம்மா, வாங்க மாப்பிள்ளை” என்று வரிசையாய் ஒவ்வொருத்தருக்கும் சச்சிதானந்தம் மற்றும் தாட்சாயணி வணக்கம் வைக்க, சங்கமித்ராவும் கரம் கூப்பி அனைவரையும் வணங்கினாள்.


தெய்வநாயகி தன் கணவரிடம் கண்காட்ட, சுயம்புலிங்கம் தனது மூத்த மகள் மற்றும் மருமகனை முறையே அறிமுகம் செய்துவைத்தார்.


மனம் நிறைந்த புன்னகையுடனும் மரியாதையுடனும் அவர்களுக்கும் வணக்கம் கூறியவர்களைக் கண்டு தெய்வா புன்னகைத்து மகளை நோக்க, அவளும் சளிப்பாய் தலையசைத்தாள்.


“வாங்க உள்ள போவலாம்” என்று சுயம்புலிங்கம் கூற, “இந்தோ சம்மந்தி. மூத்த மருமகனும் மகளும் வர்றதா சொன்னாங்க. இந்த கடை அவங்களுக்கு தெரியாது. வந்துட்டாங்களானு கேட்டுட்டு வரேன்” என்ற சச்சிதானந்தம், “நீங்களாம் உள்ள போங்க. தாட்சா, நீயும் பாப்பாவக் கூட்டிட்டுப் போமா” என்று கூறினார்.


அனைவரும் அதை சாதாரணமாக கடந்தபோதும், தெய்வநாயகிக்கு மனதோடு கொஞ்சம் நெருடியது. தனது மகனுக்கு மருமகன் என்ற மரியாதை இரண்டாம் பட்சமாகத்தான் கிடைக்குமோ? என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை அவராள்.


அனைவருமாக உள்ளே செல்ல, சங்கமித்ராவின் நீல நிறப் புடவையைக் கண்டு கார்த்திகாவும் விக்ரமனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.


பெரியவர்கள் முன்னே நடக்க, இளையவர்கள் பின் தங்கி நடந்தனர். ஆனால் சங்கமித்ரா அம்மாவுடன் முன்னேயே சென்றிருந்தாள்.


“தங்கபுள்ள.. ஒருத்தேன் காலைல ஒத்த சட்டைக்கு அக்கப்போரு கூட்டினியான்ல? இப்பதேம் புரியுது” என்று வேலு கூற,


“பின்னல்லாம்? கலர் கோட் மாறிபுடும்ல?” என்று விக்ரம் கூறினான்.


“ம்ம்.. எம்புள்ள இம்முட்டு உச்சா போனதுக்கு, நீல சட்டத்தான் தந்தா ஆச்சுனு எம்புட்டு ஒடக்கு?” என்று கார்த்திகா கூற,


“நீ வேறமா. நீல சட்ட எடுத்துட்டு வராட்டி சவட்டி (மிதித்து) தள்ளிருப்பாம் என்னைய” என்று வேலு கூறினான்.


அனைவரும் கொள்ளென்று சிரிக்க, சங்கமித்ரா மெல்லத் திரும்பிப் பார்த்தாள்.


அனைவரது கேலி கிண்டலில் வெட்கப் புன்னகை சிந்த நடந்துவரும் வளவன், தன் சிகை கோதிக் கொள்ள, அவனது சுருள் கேசத்தை ஆசையோடு பார்த்துத் திரும்பிக் கொண்டாள்.


அனைவரும் புடவை எடுக்கும் தளத்திற்கு வர,


ஐந்து நிமிடத்தில் அவிநாஷ் மற்றும் சங்கீதாவுடன் சச்சிதானந்தமும் வந்து சேர்ந்தார்.


கிட்டத்தட்ட அரைமணி நேரம் யார் யாருக்கு முறை செய்ய வேண்டும், யார் யாருக்கு உடை எடுத்துக் கொடுக்க வேண்டும், எத்தனை சடங்குகளுக்கு உடை வாங்க வேண்டும் என்று இருவீட்டின் முறைபடி பேச்சுக்கள் ஓடிக் கொண்டிருந்தது.


சச்சிதானந்தம் அனைத்தையும் அவிநாஷை முன் நிறுத்திக் கேட்டுக்கொண்டே செய்தார். அவனும் அவருக்கு மகன் போல் துணை நின்று பக்கபலமாய் தானிருப்பதை உணர்த்திக் கொண்டிருந்தான். அதில் பெரியவருக்கு ஒரு தைரியம்.


அனைத்தும் முடிவு செய்யப்பட, ஒவ்வொரு பக்கமும் புடவைகள் எடுக்கப்பட்டது.


சங்கமித்ராவும் அவர்களுடன் அமர்ந்துகொண்டு புடவையைப் பார்வையிட்டாள்.


அவள் அருகே சங்கீதாவை அமர்த்தி பருக நீர் கொடுத்து அவள் வியர்வை முத்துக்களைத் துடைத்துவிட்டவன், “பாப்பா புடிச்சதை எடு. விலை எல்லாம் பாக்காத. எதுனாலும் வாங்கலாம் சரியா?” என்று சங்கமித்ராவிடம் கேட்க,


அவன் தன் அக்காவை கவனிப்பதை ரசனையாய் பார்த்தவள், “ம்ம் ம்ம்” என்றாள்.


அவளைத் திரும்பிப் பார்த்தவன் அவளது நக்கல் புரிந்து புன்னகைத்தவனாய், “வாண்டு” என்று அவள் மூக்கை பிடித்து நிமிண்டிவிட்டுச் சென்றான்.


“மக்ளே இதப்பாரு” என்று தெய்வா ஒரு புடவையைக் காட்ட,


“நல்லாருக்குத்தை” என்றாள்.


“பாரு. உனக்கு புடிச்சதா பாரு” என்று கூறியபடி அவரும் தேட, இவளுக்கு எதை எடுப்பதென்றே புரியவில்லை.


அவள் இரண்டு புடவைகள் காட்ட, அதில் ஏதாவது ஒரு குறை கூறி திரிபுராவும், தெய்வாவும் மறுத்திருந்தனர்.


“உங்கம்மாவும் அக்காவும் அந்த புள்ளைய எடுக்க விடமாட்டாவ” என்று கார்த்திகா விக்ரமிடம் கூற,


அவனுக்குமே அதுதான் தோன்றியது.


இவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த வளவனும் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தான்.


அழகாய் மயில் கழுத்து நிறத்தில், மருதாணிப்பச்சையில் பட்டைக் கரை வைத்து, ஒளியில் மினுமினுக்கும் ஒரு புடவை அவளை வெகுவாய் கவர்ந்தது.


அதை எடுத்துப் பார்த்தவள் மென்மையாய் வருட, “விரிச்சு காட்டட்டுமா மேம்?” என்று கேட்ட பணிப்பெண், அதை விரித்துக் காட்டினாள்.


அவள் சந்தன நிறத்திற்கு மிக அழகாய் பொருந்திப்போகும் வகையில் அட்டகாசமாய் இருந்த புடவையை அவள் பார்த்துக் கொண்டிருக்க, அடர் பச்சையில் பளீர் சிவப்பு கரை வைத்தப் புடவையைக் காட்டிய திரிபுரா, “உன் நெறத்துக்கு இது நல்லாருக்கும்ல” என்று கொடுத்தாள்.


புன்னகையுடன் சங்கமித்ரா அதை வாங்கிப் பார்க்க, அது அழகாய் இருந்த போதும் இந்த புடவையில் உணர்ந்த பிடித்தத்தை அதில் உணர இயலவில்லை.


“நல்லாருக்குல? ஒனக்கு கட்டினா நல்லாருக்கும்” என்று அவள் அதை எடுக்க வழியுறுத்தும் விதமாய் திரிபுரா பேச, மெல்ல புன்னகைத்து சமாளித்தாள்.


கண்கள் அந்த புடவையின் பக்கம் செல்ல, “ம்மா.. இந்தா இதப்பாருவ. இந்த பச்ச உம்மருமவளுக்கு தோதாருக்கும்” என்று திரிபுரா கூறினாள்.


தன்னைப் போல் இன்னொரு பெண்ணின் திருமணம், அவள் விருப்பம் முக்கியம் என்பதெல்லாம் திரிபுரா மனதில் இல்லை. தான் என்ற முதன்மை உணர்வு தான் அங்கேயும் அவளுக்கு எழுந்தது.


சிவபாதசேகரனை அழைத்து அந்த புடவையைக் காட்டி அவள் கேட்க, “அவோளுக்கு பிடிச்சா எடுக்கட்டும்” என்றுவிட்டான்.


சிவபாதசேகரன் பெரிதாக அவர்கள் குடும்ப விவகாரங்களிலெல்லாம் தலையிட விரும்ப மாட்டார். தான் உண்டு தன் பணி உண்டு என்றுதான் இருப்பார். அதேநேரம் மனைவி தலையிடுவதிலும் கவனம் கொள்ள மாட்டார். அவள் அவ்வீட்டு மூத்தப் பெண், அதனால் பேசுகின்றாள் என்பதாய் கடந்துவிடுவார்.


இவற்றைப் பார்த்த அவிநாஷ், அந்த புடவையை எடுக்க உதவும் விதமாய் முன்வர, “அம்மா.. அந்தா அந்த மயில் கழுத்து பொடவைய எடுங்க” என்று வளவன் கூறினான்.


தெய்வாவும் அதனை எடுத்துப் பார்க்க, “அது நல்லாருக்குல” என்றான்.


சங்கமித்ரா அவனைத் திரும்பியும் பார்க்கவில்லை. ஆனால் உள்ளம் மத்தளம் இசைத்துக் கூத்தாடிக் கொண்டிருந்தது. 


“ஒனக்கு புடிச்சுருக்காமா?” என்று பெயருக்கு தெய்வா அவளிடம் கேட்டார். தன் மகன் பிடித்துள்ளது என்று கூறி, அதை அவள் மறுத்திவிடக்கூடாது என்று அதிகபட்சமாக எல்லா மாமியாரையும் போலத்தான் அவருக்கும் தோன்றியது.


“ம்ம் பிடிச்சிருக்கு அத்தை” என்று அவள் கூற,


“அப்ப இத நிச்சயத்துக்கு எடுப்பம்” என்றுவிட்டார்.


திரிபுராவிற்கு வந்ததே கோபம்.


“அம்மா இதுகூட நல்லாருக்கே” என்று அவள் தான் எடுத்தப் புடவையைக் காட்ட,


மகளின் குணம் புரிந்தவராய், “இத கல்யாணத்துக்கு காலையில முகூர்த்தத்துக்கு முன்னுக்க கட்டிக்கிடட்டும்” என்று கூறினார்.


அதன் பிறகுதான் ஏதோ கொஞ்சம் போல், திரிபுராவுக்கு மனம் சமன்பட்டது.


“நீ நடத்துலே நடத்து” என்று வேலு அவன் காதில் கிசுகிசுக்க,


“பாவம்லே. இந்தம்மாவும் அக்காவும் அவியள பாக்க வுடுதாவளா?” என்று வருத்தமாய் கூறினான்.


“உங்கம்மாவும் அக்காவும் எப்படித் தெரியுமா? அவியளும் ஒருப்படியா பாக்க மாட்டாவ, மத்தவிளயும் பக்கா விடமாட்டாவ” என்று வேலு கூற,


“சும்மாருலே” என்றான்.


“என்னட்டி மசமசனு நிக்குறவ? அதான் இம்புட்டு மலத்து (கவிழ்த்து) போட்டிருக்காவல்ல? போய் ஒனக்கும் எடு” என்று தெய்வா கார்த்திகாவிடம் கூற,


'ஹப்பா ராஜமாதா உத்தரவு போட்டுட்டாவ' என்று மனதோடு நினைத்துக் கொண்டவள், “சரிங்கத்த” என்றாள்.


“அப்படியே போய் தனத்துக்கும் எடுத்துடு” என்றவர், “டேய்.. அவோளோட போயி தீபிக்கும் மாப்பிள்ளைக்கு எடுத்துடுடா” என்று விக்ரமனிடமும் கூற,


“ம்ம் சரிம்மா” என்ற விக்ரமன் வேலுவைப் பார்த்தான்.


“சரிடா மாப்ள.. நீ பாத்துட்டு இரு. நான் போய் விக்ரம் கூட பாத்துபோட்டு வரேம்” என்று வேலு கூற,


“என்னடா எங்கன போற?” என்று கேட்டான்.


“மண்டைக்கு வழியில்லாதவனோட (ஒன்றுக்கும் ஆகாத) ஒக்காந்து எனக்கென்னலே ஆவப்போது? நீ கெட. நான் விக்ரம் கூட போய்வாரேம்” என்று கூறியபடி வேலு நகர,


'என்னமோ திருட்டு கோட்டு சோலியாருக்குதாவ' என்று நினைத்துக் கொண்டான்.


இப்படியே நேரம் செல்ல, அத்தனைக் கூட்டத்திற்கு நடுவிலும் கூட, தங்கள் கண் பார்வையில் ஒருவரை ஒருவர் உணர்ந்த வண்ணமாகவே அமர்ந்திருந்தனர்.


அங்கே விக்ரம் மகளைத் தோளில் போட்டுக் கொண்டு, “கார்த்தி ஒனக்கு பொறவாட்டி மித்தவோளுக்கு பாப்பம்” என்று கூற,


இடுப்பில் கைவைத்து விக்ரமையும் வேலுவையும் பார்த்தவள், “பாவம் எங்கொழுந்தருதேன் ஒன்னும் புரியாம இருக்காவ. எனக்கு தெரியாமல்ல? தனத்துக்கு அண்ணா எடுக்கப்போறாவ. அதான?” என்று கேட்க,


ஆண்கள் இருவரும் அதிர்ந்து திருதிருவென விழித்தனர்.


“இஞ்சார்ரா.. ஆம்பளங்கை நீங்க பேசிகிடுதாப்ல பொம்பளைங்க நாங்களும் பேசிகிடுவம்ல? தனம் உங்கட்டலாம் சொல்லுதோயில்லியோ எங்கிட்ட எல்லாம் பேசிகிடும்” என்று கார்த்திகா கூற,


“கார்த்தி” என்று புன்னகையாய் ஆச்சரியம் கொண்டான், விக்ரமன்.


ஆம்! தனலட்சுமியும் வடிவேலுவும் அவளது கல்லூரி காலத்திலிருந்தே காதல் பறவைகள். இன்னும் சொல்லப் போனால், பள்ளிப்பருவம் முடியும் தருவாயிலிருந்தே ஒருவர் மீது மற்றவருக்கு சின்ன ஈர்ப்பு இருக்கவே செய்தது. அவள்மீதான தன் ஈர்ப்புக்குக் காதலென்று மகுடம் சூட்டாது அமைதி காத்தவன் அமைதியைத், தன் நேசம் கொண்டுதான் கொஞ்சம் கொஞ்சமாய் தகர்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அதை அவர்கள் சொல்லிக்கொண்டதே ஒரு வருடம் முன்புதான்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02