திருப்பம்-09
திருப்பம்-09
வடிவேலு ஒருநாள் இவர்கள் வீட்டிற்கு வந்து இரவு புறப்படும் வேளை, கதவை அடைத்துவருவதைப்போல் வெளியே தனலட்சுமியும் சென்றாள்.
அவளைக் கண்டு எப்போதும் மனதில் எழும் மின்னலுடன் புன்னகைத்தவன், “வரேம்லே” என்க,
“எப்போ வருவீய?” என்று கேட்டாள்.
அவளது கேள்வி புரியாமல் விழித்தவன், “என்னம்மா?” என்க,
கண்கள் பனிந்தது அவளுக்கு.
கிட்டதட்ட ஆறு வருடமாக அவனை விரும்புகின்றாள். சொல்லிக்கொள்ளவில்லை என்றாலும் கூட அவனுக்கும் தன்னைப் பிடிக்கும் என்று அவனது பார்வையில் உணரப்பெற்றுத்தான் வருகின்றாள். அவனுமே தனத்தின் பார்வை, சிலநேரம் மறைமுகமாய் அவள் உள்ளம் வெளிப்படும் விதம், மற்றும் அவள் பேசும் கேலி பேச்சுக்களை வைத்து அறிந்து தான் இருந்தான் அவள் ஆசையை!
இருப்பினும் கூட இருவரும் வெளிப்படையாய் பேசிக்கொள்ளவில்லை. தங்கள் வீட்டு பிள்ளையாய் நம்பி உள்ளே அனுமதிக்கும் அக்குடும்பத்தாரை மனதில் வைத்து அவள் படிக்கும் வரை பொறுத்திருக்கத்தான் காத்திருந்தான். அவன் எண்ணம் அவளும் உணர்ந்தாள் போலும். படித்து முடிக்கவுள்ள தருவாயில் அவனிடம் தன் உள்ளம் உரைத்திட வந்துவிட்டாள்.
அவள் இதழ்களில் அழகிய நாணப் புன்னகை, கண்களில் கண்ணீரின் நிறைவு!
இரும்புக் கதவின் சாயத்தை உரித்துக் கொண்டே, “எனக்கு ஒங்க மேல சினேகமுண்டு” என்று கூற,
“ஏம்லே? என்னது? கேக்கல?” என்று கேலியாய் கூறியபடி அருகே வந்தான்.
அதில் சிரித்துக் கொண்டவள், “ஒங்களுக்கு தெரியும்னு எனக்கு தெரியும்” என்று கூற,
தயக்கத்துடன் அவள் கரத்தின் மேல் தன் கரம் வைத்தவன், “பிடிக்காமென்ன?” என்று கூறினான்.
அதில் உடல் சிலிர்த்தவள், “நான் மேல படிக்க போறேம்” என்று கூற,
“படிம்லே.. ஆரு வேணாங்கா” என்றான்.
“அதுக்காக கல்யாணத்த ஒதுக்கவெல்லாம் வேணாம்” என்று அவள் கூற,
பக்கென்று சிரித்தவன் அவள் தலை வருடி, “நீ பாவடச்சட்ட போட்டப்பவே ஒனக்கு மனசுக்குள்ள பொடவ கட்டி குடிவச்சுபுட்டேம் புள்ள. நீ படி. அம்மா மட்டுந்தேம். ஒரே பய. சொந்தமா நாலு காசு சம்பாதிச்சு வீடு காடு வாங்கிட்டு வந்து பேசுதேம்” என்று கூறினான்.
கண்களில் கண்ணீருடன் கை நீட்டியவள், “வுட்டுபுட கூடாது. நான் விடவும் மாட்டேம் சொல்லிட்டேம்” என்று கூற,
அவள் கரத்தை அழுந்த பற்றிக் கொண்டு, “விடுப்புட முடியுமாலே? மனசுக்குள்ள ஒட்டிக்கிட்ட புள்ள” என்றவன், “வாரேம்” என்று புறப்பட்டிருந்தான்.
அதையடுத்து தற்போது ஒருமாதம் முன்புதான் தனத்தின் கல்லூரி பக்கமாக அவளைப் பார்க்க சென்றபோது இருவருமாய் கோவிலுக்குச் சென்று விக்ரமிடம் மாட்டிக் கொண்டனர்.
கைநிறைய மல்லிகையை வாங்கிய வேலு அதை அவளுக்கு அணிவித்துவிட்டுத் திரும்ப, கோவில் வாசலில் தனது வண்டியில் அமர்ந்துகொண்டு கரங்களை மார்பிற்குக் குறுக்கே கட்டிக் கொண்டு அழுத்தமான பார்வையோடு அமர்ந்திருந்தான் திருவிக்ரமன்.
குளிருக்காக தலையை மறைத்து குள்ளா போன்று அணிந்திருந்தமையால் அது விக்ரமனா வளவனா என்று இருவருக்குமே தெரியவில்லை.
“ஆத்தே அண்ணே” என்று பயந்தபோதும் தனலட்சுமி வேலுவின் கரத்தை மிக இறுக்கமாய் பிடித்துக் கொண்டாள்.
அவளையும் அவள் கரத்தையும் பார்த்த வேலுவிற்கு தோன்றியதெல்லாம் ஒன்றுதான். பயத்திற்கு பற்றுகோலாய் தன்னைப் பற்றிக்கொள்ளும் அவள் கரங்களுக்கும் காதலுக்கும் என்றும் துரோகம் இழைத்துவிடக் கூடாது என்பதே.
தைரியத்தைத் திரட்டிக் கொண்டு அவன் முன்னே வந்தவன், “ஏம்லே ஒந்தக்கச்சிய எனக்குக் கட்டித்தானா தரமாட்டியா? எனக்கு உரிமையில்லையா?” என்று கேட்க,
அழுத்தமான பார்வையோடு தனத்தைப் பார்த்தான்.
பயத்திலும் கூட துணிவாய், “அவியல ரொம்ப பிடிக்கும் அண்ணே. கோபமுன்னா திட்டுவ. அடிக்கனும்னாலும் நாலு வப்பு செவுல்ல வச்சு கூட்டிகிட்டு போங்க. ஆனா அவியள விட்டுபுட மட்டும் சொல்லிபுடாதீய” என்று கூற,
வேலுவிற்கு கண்கள் கலங்கிவிட்டது. தனக்காக ஆசை அண்ணனிடம் அடிவாங்கவும் அவள் துணிந்திருப்பதை எப்படி எடுத்துக்கொள்ளவென்றே புரியவில்லை அவனுக்கு.
“மாப்ள” என்று வேலு அழைக்க, தன் தலைப்பாகையைக் கழட்டினான் விக்ரம்.
அதில் வந்திருப்பது விக்ரமன் என்பதைக் கண்டு இருவரும் அதிர்ந்த போதும், ‘என்றாவது ஒருநாள் தெரியப்போவது தானே?’ என்று தங்களைத் தேற்றிக் கொண்டனர்.
“விக்ரம்” என்று வேலு அழைக்க,
“எங்கூட வளந்தவம்லே நீ. ஒன்னைய தெரியாத எனக்கு?” என்று கேட்டு அவன் மனதை குளிர்வித்தான்.
தனம் கண்ணீருடன், “அண்ணே” என்று அவனை அணைக்க, “இப்படிலாம் வெளிய சுத்தும்போது வீட்டுலருந்து நம்ம கூப்பிட யாராது வருவாவோனு தெரிஞ்சுருக்கனும். வெளிய போவுறதா இருந்தா சொல்லிவையு” என்று கூறியவன், “அடிக்கடியெல்லாம் வரக்கூடாது” என்று கண்டிக்கவும் செய்தான்.
“நானே எப்போவாதுதாம்லே கூட்டியாரேம்” என்று வேலு கூற,
சரியென்று சமரசம் பேசி தனத்தை அழைத்துச் சொன்றான்.
ஆனால் இதில் யாருமே அறியாத ஒன்று, தனது ஆசையை ஆரம்பத்திலிருந்தே கார்த்திகாவிடம் தனம் கூறிக்கொண்டே இருப்பது தான்.
“என் நாத்துனா எங்கிட்ட அம்புட்டயும் சொல்லிடுவா. ஒங்களபோல திருட்டுகோட்டெல்லாம் இல்ல” என்று கார்த்திகா கூற,
விக்ரமும் வேலுவும் ஒருவரை ஒருவர் அதிர்வாய் பார்த்துக் கொண்டு சிரித்துவிட்டனர்.
“சரி சரி. அண்ணே தனத்துக்கு எடுக்கட்டும். நீங்க வாங்க. எனக்கு, தீபி மைணிக்கு மகா அண்ணேனுக்குலாம் எடுக்கனும்ல?” என்று கார்த்திகா அழைக்க, புன்னகையாய் தலையசைத்தான்.
“கத்தரிப்பூ கலருல எடுப்பமாடி ஒனக்கு? அன்னிக்கு ஒரு கடையில பாத்து நல்லாருக்குதுனு சொல்லிட்டு இருந்தியே?” என்று என்றோ அவள் பேசியதை நினைவு வைத்து விக்ரமன் கேட்க,
களுக்கென்று சிரித்தபடி தலையசைத்தாள்.
இப்படியே அவரவர் பேச்சோடும், சிரிப்போடும், செல்ல சிணுங்கள்களோடும், கேலிகளோடும் துணி எடுக்கப்பட்டது.
“சங்கீ.. உனக்கு அத்தான் எதும் பாக்கலையா?” என்று சங்கமித்ரா கேட்க,
“பாக்காம என்ன?” என்று கேட்டாள்.
“எங்க? வந்ததுலருந்து உன்னத்தான் பாக்குறாரு. உனக்கு புடவைய பாத்த மாதிரி இல்ல” என்று இவள் கேலி செய்ய,
“கொழுப்புடி உனக்கு” என்று அவள் தோளில் அடித்தாள்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்க, “கீதாமா.. உனக்கு இதுல எது புடிச்சுருக்கு?” என்றபடி அவிநாஷ் ஐந்து புடவைகளுடன் வந்தான்.
“ஹப்பாடியோ” என்று சங்கமித்ரா கன்னத்தில் கை வைக்க,
“கண்ணு வைக்காதடி” என்று சங்கீதா கூறினாள்.
“நான் ஏன் வைக்குறேன்?” என்று அவள் கூற,
“அதான, அவளுக்கும் கேட்க ஆள் வந்துடுச்சு கீதா” அவிநாஷ் கேலியில் இறங்கினான்.
“அத்தான்” என்று வெட்கம் கொண்டு சிணுங்கியவளைத் தூரத்திலிருந்தே ரசித்துக் கொண்டிருந்தான் திருமாவளவன்.
ஒருவழியாக புடவைகள் எடுத்து முடித்து, அனைவரும் கடையைவிட்டு வெளியே வர,
சங்கமித்ரா தவிப்போடு அவளவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கையில் இருக்கும் கடிதத்தை அவனிடம் கொடுத்து, முந்தைய கடிதத்திற்கு இன்னும் பதில் மடல் வாங்கியிருக்கவில்லையே? அதோடு அவனுடன் ஒருபுகைப்படம் வேறு எடுக்க ஆசை கொண்டிருந்தாள். அதில் இப்படி மண் விழும் விதமாய் அவன் அருகே கூட அவளை அமர விடாமல் சுற்றியிருந்த பெரியோர் பட்டாலம் தடா போட்டுவிட்டனரே?
“பாப்பா எதும் வேணுமா?” என்று அவிநாஷ் அவள் முகம் கண்டு கேட்க,
அத்தானை நிமிர்ந்து பார்த்தவள் இல்லையென்று தலையசைத்தாள். ஆனால் விழிகளில் அப்பட்டமான தவிப்பு.
அது அவிநாஷுக்கும் புரிந்தது போலும். “மாமா வந்தது வந்தாச்சு. மணி வேற ஆச்சு. எல்லாருமா சாப்பிட்டுட்டுப் போலாம்ல?” என்று அவிநாஷ் கேட்க,
மாப்பிள்ளைப் பக்கமிருந்து விக்ரமனும், “நானும் நினைச்சேங்க. மணியாச்சுல்ல? இனிபோயி அண்டைய பத்த வச்சு ஆக்கனும்னா நேரமாவும். இப்பவே உப்புகுத்தியெல்லாம் (குதிக்கால்) நோவுது” என்று கூறினான்.
இருவீட்டிலிருந்தும் ஒருவர் பேசி முடிவு செய்ததில் இரண்டு பக்க ஆட்களும் ஏற்றுக்கொள்ள,
பெரிய உணவகம் ஒன்றை நோக்கிச் சென்றனர்.
மதியம் மூன்று மணியானபோதும் கூட அவ்வுணவகத்தில் கூட்டம் இருக்கத்தான் செய்தது.
ஆங்காங்கே இடம் கிடைக்கும் வண்ணம் இருக்க,
“இந்தாமா மாசமாருக்க பொண்ணு நீதாம். நீபோய் எடங்கிடைக்குற எடத்துல போய் உக்காந்து சாப்பிடு மொத” என்று தெய்வா கூற,
சங்கீதாவும் புன்னகையாய் தலையசைத்தாள்.
முதலில் கிடைத்த இடத்தில் மனைவியை அமர்த்தியவன், அவளோடு தனது மாமியாரையும் அமர்த்திவிட்டு வந்தான்.
அவிநாஷும் வேலுவும் சேர்ந்து, ஆட்கள் எழும் இடங்களில் வீட்டு ஆட்களுக்கு இடம் பிடித்துக் கொடுத்து முதலில் பெரியோர், பிறகு திரிபுரா மற்றும் அவளது கணவனை அமர்த்தினர்.
சரியாக ஆறு பேர் கொண்ட ஒரு குழு உணவை முடித்துக் கொண்டு எழுந்திட, அவ்விடத்தை, அவிநாஷ், சங்கமித்ரா, திருமாவளவன், வேலு, கார்த்திகா, விக்ரம் மற்றும் ஒளிசுடர் பிடித்துக் கொண்டனர்.
உள்ளே அவிநாஷ் அமர, அவனையடுத்து சங்கமித்ரா அமர்ந்துகொண்டாள்.
எதிர்ப்புரம் கார்த்திகா, விக்ரமன் மற்றும் வேலு அமர்ந்துகொண்டு, குழந்தையை மடியில் வைத்துக் கொள்ள, புன்னகையுடன் வளவன் சங்கமித்ராவின் அருகே அமர்ந்து கொண்டான்.
உள்ளுக்குள் தூவிய மழைச்சாரலில் இன்பமாய் நனைந்தபோதும் மனம் படபடக்கவே செய்தது.
பதட்டத்தோடு யாரும் ஏதும் கூறிவிடுவரோ என்று அவள் சுற்றி முற்றி பெரியோரைப் பார்க்க, “பாப்பா” என்று அவளுக்கான உணவை எடுத்து வைத்து அவிநாஷ் அழைத்தான்.
சட்டெனத் திரும்பியவள் விழிகளில் தெரிந்த பயத்தைக் கண்டு சிரித்துக் கொண்டவன், “எல்லாரும் சாப்பிட்டுட்டு தான் இருக்காங்க. ஒன்னும் சொல்ல மாட்டாங்க” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய் கூற, மென்மையான புன்னகையுடன் தலையசைத்தாள்.
வந்திருந்த உணவு வகைகளில், மட்டன் வருவலை அவன் தட்டிற்கு இவள் இடம் பெயர்க்க, சிக்கன் சுக்காவை இவள் தட்டிற்கு அவன் இடம்பெயர்க்க, இவற்றைக் கண்டபோதும் எதுவும் பேசி அவர்களை சங்கடப்படுத்தாமல் அனைவரும் அமைதியாய் உண்டனர். நடுநடுவே குழந்தையை வைத்து கார்த்திகாவிடமும் தயங்கியபடி மித்ரா பேச்சு வளர்க்க, அவள் முயற்சி புரிந்த கார்த்தியும் அவளோட நன்கு பேசினாள்.
காரமான உணவுகளை ருசிபார்த்ததோடு சங்கமித்ரா நிறுத்திவிட, வளவன் காரமான உணவாக தெரிவுசெய்து வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தான்.
'நிறையா காரம் சாப்பிடுறவங்களுக்கு கோபம் சுள்ளுனு வருமாம். இவங்களுக்கு ரொம்ப கோபம் வருமோ?’ என்று மனதோடு நினைத்துக் கொண்டு உண்டு முடித்தவள் அவனோடு கை அலம்ப எழுந்து சென்றாள்.
இருவருமாக கைகளைக் கழுவிக் கொள்ள,
தனது கைக்குட்டையில் துடைத்துக் கொண்டவள் அவனிடம் அதை நீட்டினாள்.
சின்ன சிரிப்போடு அதை வாங்கிக் கொண்டவன், சுற்றி முற்றி பார்த்துக் கொண்டு தனது சட்டைப் பையிலிருந்து கடிதத்தை எடுத்து நீட்ட, தானும் பத்திறப்படுத்திக் கொண்டுவந்த கடிதத்தை அவனிடம் கொடுத்தாள்.
புன்னகையாய் வாங்கி உள்ளே வைத்தவன், ‘போலாமா?’ என்று கண்களால் வினவ,
“உங்க கூட ஒரு ஃபோட்டோ எடுக்கனும்” என்று தயக்கமாகக் கேட்டாள்.
கரத்தினை மார்பிற்குக் குறுக்கே கட்டிக் கொண்டவன் அவளை ஒற்றை புருவம் உயர்த்தி சிரிப்போடு பார்க்க, “ஒரே கலர்ல போட்டுட்டு வர சொன்னதே ஃபோட்டோ எடுக்கலாம்னு தான்” என்று சிரம் தாழ்த்தி மெல்லொலியில் கூறினாள்.
“வெளிய வச்சு எடுப்பம்” என்று அவன் கூற,
“எல்லாரும் இருப்பாங்க” என்று கூறினாள்.
“வேலுவவிட்டு எல்லாம் முன்ன போனபொறவாட்டி எடுக்க சொல்லுறேம்” என்று அவன் கூற,
கண்களில் உற்சாகத்தைத் தேக்கி தலையசைத்தாள்.
சொன்னதைப்போல் நண்பனின் காதில் சென்று அவன் விடயத்தைக் கூற,
“ஏம்லே கள்ளக்காதலா பண்ணுதீய? கட்டிக்கப் போறவக்கூட இன்னும் நாலு போட்டோ எடுக்கலையா? பரிகேடுலே. பரிகேடு” என்று கேலி செய்தான்.
“நளியடிக்காத உதவுடா” என்று வளவன் கூற,
“தலையெழுத்துடா. சேத்துமாத்தா வாங்குதேம்லே.. வாங்குதேம்” என்று கூறினான்.
எப்படியோ பெரியோரை முன்னே நடத்திச் செல்ல, பேச்சு சுவாரஸ்யத்தில் அவர்களும் பின்னே திரும்பவில்லை.
அதற்குள் அவளைத் தன் தோள் வளைவில் இழுத்துக் கொண்ட வளவன், சுயமி எடுக்க,
அவன் கைபட்டதில் அதிர்ந்து உடல் சிலிர்த்து அவனைப் பார்த்தாள்.
“அங்க ஃபோன பாரும்லே. என்னைய பாக்க. யாரும் திரும்பிடப் போறாவ” என்று வளவன் கூற,
அலைபேசியைப் பார்த்தவள் மெல்ல புன்னகைத்தாள்.
நாணம் படர்ந்த விழிகளில் சந்தோஷத்திற்குத்தான் பஞ்சமேது?
புகைப்படம் எடுத்ததும் அவளை விட்டவன், “அழகாருக்கா?” என்று கேட்க,
“சூப்பராருக்கு. எனக்கு அனுப்பி வைங்க” என்று கூறினாள்.
சிரித்தபடி அவள் கன்னம் தட்டியவன், “போட்டேக்கு எம்புட்டு அக்கப்போறாருக்கு” என்று கூற,
“வித்யாசமா பேசுறீங்க” என்றாள்.
“நம்ம பாஷ அதேம். ஒனக்கு புரியமாட்டிக்குனுதேம் அப்படி பேசல” என்று அவன் கூற,
“புரியலைனா சொல்லிக்குடுங்க. நானும் தெரிஞ்சுக்குறேன்” என்று கூறினாள்.
“ஆமா ஆமா. நிறைய சொல்லிக்குடுக்க வேண்டி இருக்கு. ஒன்னும் தெரியலை. தோள்ள கைபோட்டதுக்கே பயந்தாரியா துள்ளுரவ” என்று இருபொருள்பட அவன் பேச,
அவனை விழிகள் விரிய பார்த்தவள், பதிலாற்றத்தெரியாமல் தடுமாறினாள்.
அதில் சிரித்துக் கொண்டவன், “வா. தேடப்போறாவ” என்று கூறி அவள் கரம் பற்றி அழைத்துக் கொண்டுவந்து கூட்டத்தோடு கலந்தான்.
பின் இருவீட்டாரும் பரஸ்பரம் விடைபெற்றுக் கொள்ள,
தன் மாமனார் மாமியாரை வணங்கியவளும் அவனிடம் கண்களால் விடைபெற்று மற்றவர்களிடமும் கூறிக் கொண்டு, அன்னை தந்தையுடன் புறப்பட்டாள்.
Comments
Post a Comment