திருப்பம்-10

 திருப்பம்-10



வீட்டிற்கு வந்ததும் குளித்து உடைமாற்றிய சங்கமித்ரா தனது கைப்பையைத் தேட, அது கூடத்தில் இருப்பதாய் நினைவு வந்தது‌.


விரைந்து வெளியே வந்தவள் தனது கைப்பையைத் தேடி எடுத்து அதனுள் கடிதத்தை ஆராய்ந்தபடியே நகர, மூத்த மகளுக்கும் மருமகனுக்கும் பழச்சாறு வழங்கிவிட்டு வந்த தாட்சாயணி மீது மோதிக் கொண்டாள்.


அதில் கைப்பைக் கீழே விழுந்து கடிதம் சரிந்து சங்கீதா காலடிக்கு வந்துவிட,


“ஏன்டி முன்ன பார்த்து நடக்க மாட்டியா?” என்று சப்தம் போட்டுவிட்டு சமையலறைக்குள் சென்றுவிட்டார், தாட்சாயணி.


அன்னையை முறைத்துப் பார்த்துவிட்டு குனிந்தவள் தன் பையை எடுத்துக் கொண்டு உள்ளே ஆராய, அவன் கொடுத்த கடிதம் தான் அங்கில்லையே?


சுற்றி முற்றி தன் பார்வையால் அதைத் தேடியவளுக்கு அந்த நிமிடம் உண்மையில் பெரும் படபடப்பே எழுந்தது. யாரும் பார்த்துவிடுவர் என்றெல்லாம் தற்போது பயமில்லை. ஆனால் அவன் கொடுத்த கடிதத்தை வாசிக்க வேண்டுமே என்ற அவாவில் தான் பதட்டம் வந்தது.


லேசாக விசிலடிக்கும் சப்தம் காதில் விழவும், பாவை நிமிர்ந்து பார்க்க, தனது இருவிரலுக்கிடையில் அக்கடிதத்தை வைத்து ஆட்டியபடி மனைவியோடு அமர்ந்திருந்தான், அவிநாஷ்.


அவன் கையில் அக்கடிதத்தைப் பார்த்ததும் பயம் வந்துவிட்டது.


பட்டென எழுந்து நின்றவள், மெல்ல அக்காவையும் அத்தானையும் நெருங்க, சங்கீதா வந்த சிரிப்பை அதக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.


“என்னதிது?” என்று அவிநாஷ் வினவ,


“ல..லெட்டர்” என்று தத்திப் பித்திக் கூறினாள்.


“யார் குடுத்தாங்க?” என்று மீண்டும் அவன் கேள்வி எழுப்ப,


இதழ் கடித்து தலை குனிந்தாள்.


நாணமா? அச்சமா? அவளுக்கே புரியவில்லை. வியர்த்து வழிய சேட்டை செய்து அகப்பட்டக் குழந்தையைப் போல் நின்றுகொண்டிருந்தாள்.


அவள் கோலம் கண்டு அடக்கமாட்டாது சங்கீதா சிரித்துவிட, அவிநாஷும் மனைவியைத் தொடர்ந்து சிரித்து விட்டான்.


அவர்கள் சிரிப்பில் தான் இன்னும் கூச்சம் வந்து ஒட்டிக் கொண்டது அவளுக்கு.


அவள் கரம் பற்றித் தங்களுக்கு நடுவே அமர்த்திக் கொண்ட அவிநாஷ், “என்ன பாப்பா இது? நம்பர் இருக்கு தானே உங்கட்ட?” என்று கேட்க,


“இருக்கு அத்தான்” என்று கூறினாள்.


சங்கீதா மேலும் சிரிக்க, “ச்சூ.. கீதா.. பாப்பா சங்கடப்படுறா சிரிக்காத” என்று தனது சிரிப்பைக் கட்டுப்படுத்தியவண்ணம் அவிநாஷ் கூறினான்.


சங்கீதாவும் சிரமப்பட்டுத் தன் சிரிப்பை அடக்க, அக்காவை முறைத்த சங்கமித்ரா, “அம்மா ஃபோன்லலாம் அடிக்கடி பேசக்கூடாதுனு சொல்றாங்களே அத்தான்” என்று பாவமாய் கூறினாள்.


“அவங்க பேசிக்கக் கூடாதுனு அப்படி சொல்றாங்கடி மண்டு. ஃபோன்ல பேசாம லெட்டர்ல பேசினா ஆச்சா?” என்று சங்கீதா தங்கையை வலிக்காமல் கொட்டியபடிக் கூற,


“கீதா” என்று மனைவியைச் செல்லமாய் கண்டித்தான்.


“இல்ல அப்படியில்ல.. எனக்கு பேச தயக்கமாருக்கு. அவங்க பேசினா சட்டுனு பதில் பேசிட முடியல. லெட்டர் எழுதினா அப்படி இல்லை தானே? படிச்சு பொறுமையா எழுதி அனுப்பலாம். தயக்கமாவும் இருக்காதுல? அதான் அவங்க லெட்டர்ல பேசலாம்னு சொன்னாங்க” என்று சங்கமித்ரா கூற, 


அவள் கண்களில் மின்னி மறைந்த ஒலியைக் கண்டு சங்கீதாவும் அவிநாஷும் அர்த்தமாய் புன்னகைத்துக் கொண்டனர்.


“உனக்கு பிடிச்சிருக்காடா பாப்பா?” என்று அவிநாஷ் வினவ,


அவள் கண்களில் நாணம் படர்ந்தது.


‘ரொம்ப பிடிச்சிருக்கு' என்று சொல்லத் துடித்தபோதும், “ம்ம்..” என்று கூறி தலையாட்டவே செய்தாள். ஆனால் சொல் கொடுத்திட இயலா உணர்வை அச்செயல் கொடுத்தது.


பரிவாய் அவள் தலைகோதியவன், “ஹாப்பியா இருடா” என்று கூற,


புன்னகையாய் தலையசைத்தாள்.


“அதுயிருக்கட்டும்.. லெட்டருக்கு இவ்வளவு பதட்டப்படுறியே அப்படி அதுல என்ன இருக்கு?” என்று சங்கீதா கேலியில் இறங்க, 


“ச்ச என்ன சங்கி நீ? எங்க லெட்டர் ஃபார்மலா தான் இருக்கும்” என்று கூறினாள்.


“உன்னை வச்சிட்டு இன்ஃபார்மல் லெட்டரெல்லாம் எழுதிட முடியுமா?” என்று கேட்டு சங்கீதா சிரிக்க,


“சங்கீஈஈ’’ என்று சிணுங்கினாள்.


அதில் வாய்விட்டு சிரித்த அவிநாஷ், “இந்தா போ. இங்கருந்தா உன்னை வெட்கப்படவச்சே உங்க அக்கா படுத்தியெடுத்துடுவா” என்று கூற,


லெட்டரை பிடுங்காத குறையாய் வாங்கிக் கொண்டு ஒடியேவிட்டாள்.


அவள் சென்ற திசை பார்த்து மனமார புன்னகைத்த அவிநாஷ், “பாப்பா லைஃப் ஹாப்பியா அமைஞ்சுடனும் கீதா” என்று கூற,


தன்னவனை புன்னகையுடன் பார்த்து தோள் சாய்ந்தவள், “அவ முகத்தைப் பார்த்தா தெரியல? அதெல்லாம் நல்லா அமைஞ்சுடும்” என்றாள்.


“இல்லடா அவரு அம்மாவையும், மூத்த அக்காவையும் பார்த்தா மனசுக்கு என்னமோ நெருடலா இருக்கு” என்று அவன் கூற,


“பொண்ணுக்கு புகுந்த வீடுங்குறது புது தேசம் மாதிரி. சிலருக்கு எல்லா உறவும் நல்லா அமையும். எனக்கு அமைஞ்ச மாதிரி” என்று கூறினாள்.


அவளைப் பார்த்து புன்னகைத்த அவிநாஷ் செல்லமாய் அவள் நெற்றியோடு தன் நெற்றி முட்ட,


அதில் சிரித்துக் கொண்டவள், “எனக்கும் அத்தைக்கும் மனத்தாங்கல் வராம இல்லை. ஆனா மித்த இடங்கள்ல உள்ளபோல இல்லாம நானும் அத்தையும் பிரெண்ட்ஸ் மாதிரி தான் இருக்கோம். நான் ரொம்ப ரேர் கேட்டகரி. எல்லாருக்கும் இப்படி அமையாதுங்க. குடும்பம்னா அதுல மூனு பேர் அனுசரணையா இருந்தா ரெண்டு பேர் முரடாதான் இருப்பாங்க. அவ மாமனார் தங்கமான குணமாருந்தாரு. அவங்க வீட்டு மூத்த மருமகளுக்கு, தான் பெத்த மகளுக்கு இணையா பார்த்து பார்த்து செஞ்சாரு. அந்த பொண்ணு விலை குறைவா புடவை எடுத்துருந்துது நாம யாரும் கவனிச்சோமா? அவர் கவனிச்சு கூட ரெண்டு புடவை வச்சுக்கோமானு வாங்கித்தந்தத பார்த்தேன். அந்த பொண்ணும் ரொம்ப தங்கமான குணமாதான் இருக்காங்க. சங்கு தனியா ஃபீல் பண்ணக்கூடாதுனு அப்ப அப்ப அவகூட வந்து உக்காந்து பேசி நம்பர்லாம் குடுத்துட்டு போனாங்க. பொண்ணு பார்க்க வந்தப்ப இருந்த இன்னொரு அக்காவும் கூட நல்லவிதமா தான் இருந்தாங்க. இத்தனை பேர் நல்லவிதமா அமையும்போது ஒன்னு ரெண்டு போர் கொஞ்சம் அப்படி இப்படி இருக்குறது இயல்புதாங்க” என்று கணவனுக்கு நீண்ட விளக்கம் கொடுத்தாள்.


“ம்ம்” என்று அவள் தலைமீது தன் தலை சாய்த்தவன், “பாப்பா வெகுளியா இருக்குடா. கொஞ்சம் அவங்களோட ஒன்றிபோக பழகிக்கனும்” என்று கூற,


“அதெல்லாம் போகப்போக பழகிடுவாங்க. நீங்க எங்கப்பாக்கு மேல பயப்படுறீங்க” என்று கூறினாள்.


அதில் சிரித்துக் கொண்டவன், “சும்மா ஒன்னும் அவள பாப்பானு கூப்பிடலடி. மாமாவும் அத்தையும் என்கிட்ட எவ்ளோ அன்பாருந்தாலும் அதுக்கும் முன்ன மரியாதைனு ஒரு தடுப்பு இருக்கு. ஆனா பாப்பா என்கிட்ட உரிமையோட இருப்பா. எது வேணும்னாலும் என்கிட்ட உரிமையா கேட்பா, சண்ட போடுவா, கொஞ்சுவா. எல்லாம் அப்பாகிட்ட ஒரு அஞ்சு வயசு குழந்தை எடுத்துக்கும் உரிமைய போல கீதா. நமக்கு மூத்த பொண்ணு மாதிரி அவ” என்று கூற,


கண்கள் பனிய புன்னகையாய் அவனை அணைத்துக் கொண்டு, “நான் ரொம்ப லக்கீங்க” என்று கூறினாள்.


அங்கு உள்ளே வந்தவள் ஆர்வமாய் கடிதத்தைப் பிரித்து வாசித்துக் கொண்டிருந்தாள்.


‘அன்புள்ள மித்துக்கு,


காதல் மேல நம்பிக்கையே இல்லாம இருந்தனு சொல்லிட்டு இப்படி கலர் கலரா கற்பனை வச்சுருக்கியே? காதல் மேல நம்பிக்கை இருக்கும் நான் கூட இப்படியெல்லாம் கற்பனை பண்ணதில்லமா. நமக்கில்லைனு நாம முடிவு செய்யும் விஷயங்களில் தான் ஆசைகளும் கனவுகளும் அதிகம் வரும்னு சொல்வாங்க‌. உனக்கு இல்லைனு நீ முடிவானதால தான் இத்தனை அழகான கனவுகள் இருக்கு போல உனக்கு. நல்லது தான். அதனால தானே அந்த கற்பனைல எனக்கு இடம் கிடைச்சிருக்கு?’ என்று வாசித்தவள், இதழ் கடித்துத் தன் வெட்கம் அதக்கிப் புன்னகைத்தாள்.


'சரி உன் கனவுகள் வரிசை பட்டியல் நிறையா இருக்கு. கூடவே என்னோடதும் சேர்த்துக்கோயேன்' என்பதை வாசித்தவளுக்கு கெஞ்சுதலாய் அவன் கேட்கும் குரல் காதில் ஒலித்து சிரிப்பு வந்தது.


‘உனக்குப் பாட்டுப்பாட வருமா? வரலைனாலும் பரவால. எனக்காக பாடி ரெகார்ட் பண்ணி அனுப்பு. எனக்கு பாட்டு கேட்க ரொம்ப பிடிக்கும். எப்பவும் வேலை நேரத்துல அளுப்புத் தெரியாம இருக்க பாட்டு கேட்டுட்டே வேலைப் பார்ப்பேன். வீட்ல கூட அப்பப்ப ஹம் பண்ணிட்டு இருப்பேன். விக்ரம் கேலி செய்வான். நாளைபின்ன கல்யாணம் பண்ணிட்டு ஒரு பல்லவிய ஹம் பண்ணுவ உன் பொண்டாட்டி சரணம் வாசிப்பா ஒரே கச்சேரியா இருக்கும்னு கேலி செய்வான். சிரிச்சுட்டு போடானு சொன்னாலும் இமேஜின் பண்ண நல்லாருக்கும். அதனால எதாது பாடி அனுப்பிவிடு' என்று வாசித்தவள், “கவலைப்படாதீங்க. சூப்பரா பாடலைனாலும் கொஞ்சம் நல்லாதான் பாடுவேன்” என்று முனுமுனுத்துக் கொண்டாள்.


'அப்றம் எனக்கும் நிறையா கனவுலாம் இருக்கு. ஆனா அதெல்லாம் கல்யாணத்துக்குப் பிறகுதான் செய்ய முடியும்’ என்பதை வாசித்தவள் விழிகள் வட்டமாய் விரிந்துக் கொள்ள, ‘அடப்பாவி’ என்று வாயில் கைவைத்துக் கொண்டாள்.


'ஏ ஏ.. முட்டக்கண்ண சுருக்கு. நீ நினைக்குற மாதிரியெல்லாம் இல்லை. சோகத்தில் தோள் சாயுறது, காலைல முகம் பார்த்து காலை வணக்கம் சொல்லி எழுறது, நைட் பால்கனில ஒன்னா உக்காந்து நிலாவ ரசிக்குறது. இப்படிலாம் தான் சொல்றேன். கற்பனைக்கு கடிவாளம் போடுடி கேடி' என்று வாசித்தவள் பெருமூச்சு ஒன்று விட்டுக் கொள்ள, அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது.


‘அவ்ளோதான் இன்னிக்குக் கோட்டா. எல்லாரையும் விசாரிச்சேன்னு சொல்ல வேணாம். ஆனா விசாரிச்சுக்குறேன். அப்றம் ஒரு முக்கியமான விஷயம். உனக்கு தயக்கமாருந்தாலும் பரவால. உன் ஆசைனு சொல்லிட்டல்ல? நைட் பத்தரைக்கு உங்க வீட்டு வாசல்ல என் பைக் நிற்கும். சந்திப்போமா?’ என்பதோடு அக்கடிதம் நிறைவு பெற்றிருந்தது.


“என்னது?” என்று அதிர்ந்து எழுந்தவள் மணியைப் பார்க்க, மணி அப்போதுதான் எட்டைத் தொட்டிருந்தது.


“நிஜமாவே வருவாங்களா? அச்சுச்சோ? என்ன விளையாட்டு இது? எல்லாம் என் தப்புத்தான். சொல்லிருக்கவே கூடாது” என்று புலம்பியபடி அவ்வறையில் பதட்டமாய் நடை பயின்றவள்,


“ம்ஹும் ம்ஹும். போகவேக் கூடாது. முடியாதுனு சொல்லிடனும்” என்று கூறிக்கொண்டாள்.


அவன் வந்து நின்றுவிட்டால் முடியாதென்று அவளால் கூறிட இயலுமா? யோசிக்கவே மனம் படபடவென அடித்துக் கொண்டது பெண்ணவளுக்கு.


அறைக்குள் மூச்சு முட்டுவதைப் போல் உணர்ந்தவள் வெளியே வர, “இவ்ளோ நேரமாவாடி படிச்ச? கதையா எழுதிக் குடுத்தாரு?” என்று சங்கீதா கேலி செய்தாள்.


அவளை உண்மையான கோபத்துடன் முறைத்தவள், “சும்மாரு சங்கி” என்க,


“எம்மாடி. என்னடி வெள்ளுங்குற. லெட்டர்லயே சண்டையா?” என்றாள்.


சங்கமித்ரா இருக்கும் பதட்டத்தில் அக்காவின் பேச்சை ரசிக்க முடியாது முறைக்க,


“சரி சரி முறைக்காத” என்று அமைதியானாள்.


கடிகாரத்தைப் பார்ப்பதும், நொடி முள் நகர்வில் பதட்டம் கொள்வதுமாய் அவளது நேரம் கடந்தது.


அனைவரையும் அழைத்து தாட்சாயணி உணவிட, “எனக்கு பசிக்கலமா. நீங்க உக்காருங்க நான் பரிமாறுறேன்” என்று கூறினாள்.


“என்னடி அதுக்குள்ள பொறுப்பாருக்க ட்ரெயின் ஆகுறியா என்ன?” என்று தாட்சாயணியும் அவள் காலை வார,


“அம்மா..” என்று பல்லைக் கடித்தாள்.


“சரிசரி கடிக்காத” என்றவர், “நைட்டு நேரம் சாப்பிடாம படுக்காத. உக்காரு” என்று கூற,


“நெஜமாவே பசிக்கலம்மா. மதியம் லேட்டாதான சாப்டோம்? ஹோட்டல் சாப்பாடு வேற ஹெவி. நீங்க உட்காருங்க” என்று கூறினாள்.


அனைவருக்கும் உணவிட்டு, அவ்வப்போது கடிகாரத்தையே பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.


'நிஜமாவே வருவாங்களா? நாம தூங்கிட்டா போயிடுவாங்கள்ல? குட் நைட் சொல்லிட்டுப் படுத்துடுவோமா?’ என்று அவள் யோசிக்க,


“சங்கமித்ரா” என்று தாட்சாயணி அதட்டி அழைத்தார்.


அன்னையின் அதட்டலான அழைப்பில் அவள் திடுக்கிட்டு சுயம் பெற,


“அப்பாக்கு தோசை வை. சாப்பாடு பரிமாறுறேன்னு சொன்னா போதாது. கவனம் இங்க இருக்கனும்” என்று சத்தம் போட்டார்.


பிறகென்ன? வழக்கம் போல் அவள் கண்கள் கலங்கத் தயாரானது.


“அம்மா ஏம்மா அதட்டுற அவள?” என்று சங்கீதாவே தங்கைக்குப் பரிந்துகொண்டு வர,


“பின்ன சாப்பாடு போடுறேன்னு வந்துட்டு எந்த கோட்டைய கட்ட யோசனை? அப்பா கூப்பிடுறதுகூட தெரியாம” என்று கூறினார்.


“சாரி ம்மா” என்றவள் தந்தைக்கு தோசையை வைத்து சட்னி வைக்க, 


“போதும்டா” என்றவர், “சும்மா பிள்ளைய அதட்டாதடி” என்று கூறினார்.


'நோ நோ சங்கு. அழக்கூடாது. அழக்கூடாது. அம்மா நல்லதுக்குதான் சொல்றாங்க’ என்று தனக்குள் அசைபோட்டுக் கொண்டபோதும் அவள் கண்கள் தழும்பிவிட்டது.


அவளுக்கும் புரியத்தான் செய்கிறது. வருத்தமோ கோபமோகூட இல்லை. ஆனால் சட்டென்று திட்டிவிட்டால் கண்கள் மடை திறந்த வெள்ளமாய் பொழிந்துவிடுகின்றது.


“ஒன்னு சொல்லிடக்கூடாதுடி உன்ன. சொல்லு தாங்கா செல்லகுமாரி” என்று தாட்சாயணி கூற,


“அம்மா சும்மா திட்டாதம்மா. நானும் உள்ளுக்குள்ள அழக்கூடாது அழக்கூடாதுனுதான் சொல்லிக்குறேன். நீ சட்டுனு அதட்டிடுற. அதுல ஜெர்க் ஆகியே எனக்கு அழுக வந்துடுது” என்று கூறினாள்.


இதழ் கடித்துத் தன் சிரிப்பை அடக்கிய தாட்சாயணி, ‘இன்னும் குழந்தையாவே இருக்கா உங்க பொண்ணு’ என்று கணவனை நோக்க, சச்சிதானந்தம் புன்னகையாய் மகளைப் பார்த்தார்.


சங்கீதா ஒருபடி மேலே சென்று சிரித்தேவிட, அவிநாஷ் சங்கமித்ராவைப் பாவமாய் பார்த்தான்.


“சிரிக்காத சங்கி” என்று கூறியவள் தன் கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொள்ள,


“கீதா” என்று மணையாளை அதட்டிய அவிநாஷ், “இங்கவா பாப்பா” என்று அவளை அருகே அழைத்து அமர்த்திக் கொண்டான்.


ஒரு தோசையை எடுத்துப் போட்டுக் கொண்டு, அதை பிட்டு அவளுக்கு ஊட்டியவன், “ஒன்னு மட்டும் சாப்பிடு” என்க,


“பசிக்கல அத்தான்” என்றாள்.


“பிறகு நைட்டு பசிக்கும்” என்று அவன் கூற,


சச்சிதானந்தம் சிறு பிராயத்தில், அழுது முடித்து உண்ண மறுத்து அடம் செய்த தன் மகளை சமாதானம் செய்து ஊட்டிய காட்சியை நினைவிலிருந்து மீட்டு, சுகித்து மகிழ்ந்தார்.


சங்கீதா “எனக்கு ஆ” என்று வாய் திறக்க,


“இப்பத்தான் கேட்பியா? உன் புருஷர் தான? அப்றம் வீட்ல வச்சு ஊட்டுவாரு போ” என்று கூறினாள்.


“போடி எனக்கு எங்கப்பா ஊட்டுவாரு” என்று சங்கீதா தந்தை பக்கம் திரும்ப, அவரும் புன்னகையாய் மகளுக்கு ஊட்டினார்.


அமைதியாய் ஒருவருக்கொருவர் ஊட்டி அந்த உணவு வேளையை அற்புதமாய் முடித்துக் கொண்டனர்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02