திருப்பம்-11
திருப்பம்-11
இரவுணவை முடித்த அவிநாஷ், கிளம்பும் முன் சங்கமித்ராவை தனியே அழைத்துச் சென்று “பாப்பா” என்று பரிவாய் அழைக்க,
“நான் வேணும்னே அழல அத்தான். நிஜமாவே சட்டுனு அதட்டிட்டா எனக்கு அழுக வந்துடுது. நானும் அதை கண்டிரோல் பண்ணத்தான் பாக்குறேன். நிஜமா அவங்க திட்டிட்டாங்கனு கோபம் கூட இல்ல. பட்டுனு அதட்டவும் கண்ணீர் வந்துடுது” என்று கண்களில் நீர் வழிய இயலாமையோடு அவள் கூறினாள்.
“ஒன்னுமில்லடா. இதை மாத்திக்குறேன் பெயர்ல ஒரு இன்ஸெகியூரா உன் மைண்ட்ல ஏத்திக்குற நீ. அதனாலதான் உன்னால மாத்த முடியலை. முதல்ல இதை ஒரு குறையா பாக்குறதை நிறுத்து. இதெல்லாம் இயல்பா வர்றது தான். சட்டுனு யாராது அடிச்சா கோவம் வரும்ல? அதுபோல இதுவும் ஒரு உணர்வு. அவ்வளவு தான். ரொம்ப காம்ப்லிகேட் பண்ணாத. பக்குவம் தேவைதான். அதுக்காக கல்யாணத்துக்காக இதை மாத்திக்குறேன் அதை மாத்திக்குறேன்னு முயற்சி பண்ணி கஷ்டபடுத்திக்காத” என்றான்.
கண்ணீரோடு அவனைப் பார்த்தவள், “இதான். இதுக்கு தான் அத்தான் நான் உங்கட்ட உரிமையா இருக்கேன்” என்று கூற,
“நீ என் பாப்பாடா” என்று அவள் கன்னம் கிள்ளினான்.
பின் நிலைமை சீராகிட, அவர்களை அனுப்பி வைத்துவிட்டு வந்தவள் மணியைப் பார்க்க அது பத்தைத் தாண்டியிருந்தது.
'அட ராமா. மணி பத்து பத்து. வந்துடுவாரா? அம்மா வீட்ட பூட்டிட்டா நான் எப்படி போவேன்? அய்யோ பயமாருக்கே. போங்கனு சொல்லி அவர எப்படி அனுப்ப? அச்சோ பயமாருக்கே’ என்று யோசித்துக் கொண்டிருந்தவளிடம் வந்த தாட்சாயணி, “படுக்கப்போலையாடி?” என்று கேட்டார்
“அ..அம்மா தூக்கம் வரல” என்று அவள் கூற,
“என்ன நீ? பசிக்கலங்குற தூக்கம் வரலங்குற?” என்று கேட்டார்.
“தாட்சா அவ போக்குல விடேம்மா” என்று கூறிய சச்சிதானந்தம், நாட்கள் நெருங்குவதில் மகள் திருமணம் குறித்த பதட்டத்தில் உள்ளதன் வெளிப்பாடாகவே இதைக் கருதினார்.
வீட்டு சாவியை அவளிடம் கொடுத்தவர், “எனக்கு ரொம்ப டயர்டாருக்கு சங்கு. இன்னிக்கு பயங்கர அலைச்சல் வேற. நாங்க படுக்குறோம். நீ படம் கிடம் பாக்குறதுனா பாரு. கதவெல்லாம் பூட்டி, சாவிய டிராயர்ல வச்சுடு” என்று கூறிவிட்டுச் சென்றார்.
அந்த சாவியைப் பார்த்த பின்பு தான் அவளுக்குப் பாதி மூச்சே வந்தது.
'ஹப்பா' என்று பெருமூச்சுடன் அவள் அமர,
'அப்ப அவர் கூப்டா போவப்போறியா?’ என்று மனம் கேள்வி கேட்டது.
'அச்சுச்சோ. இதை யோசிக்கலையே. இப்ப நான் என்ன செய்ய? போகவா வேண்டாமா? ம்ஹும். இது சரிவராது. அம்மா நடுல முழிச்சு வந்து நான் இல்லாமருந்தா பயந்துடுவாங்க. போகக்கூடாது. வரமுடியாதுனு சொல்லிடனும்’ என்று மனதோடு அவள் வாதம் நடத்திக் கொண்டிருந்தாள்.
கதவுகளையெல்லாம் பூட்டிக்கொண்டு வந்து தொலைகாட்சியில் ஏதோ ஒரு அலைவரிசையை ஓடவிட்டுக் கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு பதட்டம் அத்தனை அதிகமாக இருந்தது.
'இப்ப என் பீபீய செக் பண்ணா நூத்தம்பது இருக்கும்’ என்று மனதோடு புலம்பியவள் அலைபேசியைப் பார்த்தாள்.
புலனத்தில் அவன் குறுஞ்செய்தி படிவத்தைத் திறந்து வைத்துக் கொண்டு, ‘அய்யோ கடவுளே என்ன செய்ய?’ என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.
'நான் வரமாட்டேன். நீங்களும் வராதீங்க’ என்று எழுதுவதும், அழிப்பதுமாய் அவள் போராட்டம் தொடர,
மணி பத்தரையானது.
அடுத்த ஐந்து நிமிடத்தில், “நான் வந்து அஞ்சு நிமிஷம் ஆகுது. என்னத்த டைப் பண்ணி, இரேஸ் பண்ணி விளையாடிட்டு இருக்க?’ என்று குறுஞ்செய்தி அனுப்பினான்.
அவ்வளவேதான்! நெஞ்சே வெடித்துவிடும் போல் வேகமாகத் துடித்தது.
கைகால்கள் எல்லாம் நடுங்கியது.
‘நிஜமாவே வந்துட்டாரா?’ என்று கேட்டுக் கொண்டவள் மெல்ல எழுந்து கதவின் அருகே இருக்கும் சாளரத்தைத் திறந்துப் பார்க்க, அவர்கள் வீட்டு வாசலில், அவனது வாகனத்தில் அமர்ந்தபடி வீட்டையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
'போச்சு' என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
அன்னை தந்தையின் அறைக்குள் பூனை நடையிட்டுச் சென்றவள், அவர்கள் உறக்கத்தைப் பரிசோதிக்க, ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தனர்.
மெல்ல வெளியே வந்தவள், வீட்டுக்கதவைத் திறந்துக் கொண்டு வாசலில் இருக்கும் கம்பிக் கதவிடம் வந்தாள்.
தோரணையாய் வண்டியில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் அவளைக் கண்டதும் நிமிர்ந்து நின்று புன்னகைக்க,
'வரமாட்டேன்னு சொல்லிடு சங்கு’ என்று மனம் கூவியது.
“போவமா?” என்று அவன் கேட்க,
எல்லா பக்கமும் தலையை உருட்டி வைத்தாள்.
இருளில் வீதி விளக்கின் சின்ன ஒளியில் அழகாய் மின்னியது அவள் முகம். அள்ளி அணைத்து முத்தம் பதித்தால் தான் என்ன? என்றே தோன்றியது அவனுக்கு. தன் எண்ணத்தில் உள்ளுக்குள் திடுக்கிட்டவன் தன் பிடறி முடியைக் கோதிக் கொண்டு, குரலை செறும,
“அம்மாவோ அப்பாவோ முழிச்சுட்டா?” என்று கேட்டாள்.
“அதேம் பிரச்சினையா? கூப்பிடு அத்தைய. நானே பெர்மிஷன் வாங்கித்தரேம்” என்று அவன் கூற,
“அம்மாடி! சும்மாருங்க” என்று பதறினாள்.
“அப்ப என்ன பண்றது?” என்று அவன் கேட்க,
அவளுக்கு ஆசைக்கும் அச்சத்திற்கும் இடையே பெரும் போராட்டம் நிகழ்ந்தது.
“எனக்கு பயமாருக்கு” என்று அவள் கூற,
“அப்ப ஆசையா இல்லயா?” என்று நமட்டு சிரிப்போடு கேட்டான்.
அவனைப் பாவம் போல் பார்த்தாள்.
“சின்ன ரௌண்ட் தான். கொஞ்சந் தூரம் போயிட்டு கூட்டிகிட்டு வந்துடுவேம்” என்று அவன் கூற,
அவள் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் அச்சத்திலிருந்து ஆசைப் பக்கம் சரிந்தது.
“பயமாருக்குங்க” என்று அவள் கூற,
அவளை ஆழ்ந்து பார்த்தவன், “ஸ்விக்கி டெலிவரி கேர்ளா மாறினப்ப பயமால்லயோ?” என்று கேலி செய்தான்.
“ப்ச்” என்றவள், “என்ன பண்றது இப்ப?” என்று அவனிடமே கேட்க,
“நீ தான் சொல்லனும். உனக்கு பிடிச்ச நான் இருக்கேம், நம்ம பைக் இருக்கு, நம்ம இரவு இருக்கு, நம்ம நிலாருக்கு” என்று அவன் அடுக்கிக் கொண்டே போனான்.
'அச்சோ.. நோ சங்குமா நோ. முடியாது சொல்லிட்டு உள்ள ஓடிடு. அம்மாக்கு தெரிஞ்சா வெளக்கமாத்தடிதான்’ என்று மனதோடு கூறிக் கொண்டாள்.
“இத்தன வெறையலா புள்ள?” என்று அவன் சிரிக்க,
“ஆங்?” என்று விழித்தாள்.
“இவ்ளோ நடுக்கமானு கேட்டேம்” என்று அவன் கூற,
“ப்ச்..” என்று திரும்பி வீட்டைப் பார்த்துச் சென்றாள்.
சிரித்தபடியே அவன் அவளை நோக்க, வீட்டுக்கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு வந்தாள்.
எதையோ சாதித்துப் பதக்கம் வென்றுவிட்டதைப் போல் பல்லைக் காட்டினான் திருமாவளவன்.
வாசல் கதவை சத்தமின்றி மெல்லத் திறந்து வெளிப்பக்கம் பூட்டியவள், சாவியை பத்திரப்படுத்தத் தன்னிடம் சட்டைப்பை உள்ளதா என்று தேடினாள்.
“கொண்டா” என்று அதை வாங்கித் தன் பையில் போட்டுக் கொண்டவன், அவளுக்கொரு தலைகவசத்தை நீட்ட, நடுநடுங்கும் கரங்களுடன் அதை வாங்கிப் போட்டுக்கொண்டவள், “பயமாருக்குங்க” என்று கூறினாள்.
“ஒனக்கு இஷ்டமில்லனா போவவேணாம் மித்து” என்று அவன் கூற,
“ப்ச்” என்றாள்.
'இஷ்டமில்லனு சொன்னேனா?’ என்ற கேள்வி அவளது கோபம் கசியும் கண்களில் தெரிந்தது.
லேசாய் சிரித்துக் கொண்டவன், “வா” என்க,
தயக்கத்துடன் அவன் பின்னே சென்றாள்.
ஏறி அமர அவன் தோளைப் பற்றிக் கொள்ள வேண்டுமே? தயக்கம் தீயாய் தகித்தது. ஆசை அனலாய் எறிந்தது.
'அச்சோ…’ என்று அவள் மனம் பதைக்க,
“தோள பிடிச்சு ஏறு மித்ரா” என்றான்.
“ம்..ம்ம்” என்றவள், அவனைப் பிடித்துக் கொள்ளாமல் ஏற முயற்சித்து ஏறி அமர்ந்தும்விட்டாள்.
இருவருக்கும் இடையே குட்டியாய் ஒரு இடைவெளி.
“போவமா?” என்று அவன் கேட்க,
“ம்ம்” என்றாள்.
அமைதியாய் வண்டியை இயக்கியவன், புறப்பட, அது இயங்கிய விசைக்கு குலுங்கி அவன் முதுகில் மோதிக் கொண்டு பதறி விலகினாள்.
அவனுக்கு அப்படியொரு சிரிப்பு வந்தது.
வண்டியை மிதமான வேகத்தில்தான் செலுத்தினான்.
முகத்தில் வந்து மோதும் குளிர் காற்றைக் கண்கள் மூடி ரசித்தவள், பிடிமானம் இல்லாமல் தடுமாறி ஒரு கட்டத்தில் அவன் தோளைப் பற்றிக் கொண்டாள்.
“எப்படியிருக்கு?” என்று அவன் கேட்க,
“ரொம்ப நல்லாருக்குங்க” என்று மனம் குதூகலிக்கக் கூறினாள்.
வானில் அவர்களுடனே பயணிக்கும் நிலவு, இருளோடு உருவாடி ஈரத்தைக் களவாடிக் கொண்டு சுதந்திரமாய் திரியும் தென்றல் காற்று, அவன் அருகாமை, அவனுடனான பயணம். அம்மம்மா.. அவளால் அந்தத் தருணம் கொடுத்திடும் இதத்தை வார்த்தைகளில் வடித்திட இயலவில்லை.
ஒரு சாலையோரத் தேநீர் கடையில் வண்டியை நிறுத்தியவன், “சாரே ரெண்டு மசால்டீ” என்று கூறினான்.
அவள் கீழே இறங்கிக் கொண்டு, “எதுக்குங்க இப்ப டீலாம்?” என்று கேட்க,
“நீதான இன்னிக்கு லெட்டர்ல மசால் டீனா ரொம்ப பிடிக்கும்னு சொன்ன? என்ன அது எங்கையால போட்டுத்தர ஆச பட்ட. இப்ப அதுமுடியாதுனு தான் கடைல வாங்குறேம்” என்று கூறினான்.
சின்ன புன்னகையுடன் அவள் தலையசைக்கத் தேநீரை வாங்கி நீட்டினான். தலைகவசத்தைக் கழட்டாமல் அதை கொண்டு சென்று அவள் இடித்துக் கெள்ள, அதைப் பார்த்து பக்கென்று சிரித்து வைத்தான்.
'அச்சோ' என்று நாக்கைக் கடித்துக் கொண்டவளுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
வளவன் அவள் கவசத்தை எடுத்து வைக்க,
தனக்கு வந்து தேநீரை வாங்கிக் கொண்டு அவளைப் போல் தானும் மூக்கொடைபட்டுக் கொண்டான்.
அவனும் தன்னைப்போல் தலைக்கவசம் கழட்டாததைப் பார்த்தவள் கலகலவென்று சிரித்தாள்.
கண்களின் ஓரம் ஈரம் எட்டிப்பார்க்குமளவு சிரிப்பு வந்தது.
அவள் சிரிப்பை சிந்தை கலையாமல் கண்டு ரசித்தவன், தேநீரோடு சேர்த்து அவளையும் பருகினான்.
தேநீர் கோப்பை காலியானதும் மீண்டும் பயணம் தொடர, அவளையும் அறியாமல் இடைவெளி குறைந்தது.
பட்டும் படாமல் பற்றியிருந்த தோளை சற்று இறுக்கமாய் பற்றிக் கொண்டாள். முடியா தொடராய் அமைய அசைகொண்ட பயணமும் முடிவடைய, அவள் வீட்டு வாசலில் இறக்கிவிட்டான்.
“ஹாப்பி?” என்று அவன் கேட்க,
மனதோடு நெகிழ்வாய் உணர்ந்தாள்.
“என்னமா?” என்று அவன் கேட்க,
“தேங்க்ஸ்ங்க” என்று மனமாரக் கூறினாள்.
“வேத்தாளாக்கும் நானு? தேங்ஸ் சொல்றவ?” என்று கேட்க,
“மனசார நன்றி சொன்னா ஏத்துக்கனும்” என்று கூறினாள்.
அதில் சிரித்தவன், “சரிங்க மேடம்” என்க,
“பாத்து போங்க” என்றபடி திரும்பினாள்.
“ஏ தாக்கோலு” என்று அவன் சாவியை எடுத்து நீட்ட,
“ஆங்?” என்று விழித்தாள்.
“சாவிமா.. தாக்கோல்னா சாவி” என்று அவன் கூற,
“நிறையா புதுசா பேசுறீங்க” என்றவள், “ஆனா நல்லாருக்கு” என்று கூறினாள்.
ஆடவன் புன்னகைத்துக் கொள்ள, சாவியை வாங்கிக் கதவைத் திறந்தவள் உள்ளே சென்று பூட்டிக் கொண்டாள்.
“பாத்து போங்க” என்று அவள் கூற,
“ம்ம். நீயும் போய் தூங்கு” என்று கூறி புறப்பட்டான்.
இருவர் மனமும் பெரும் இதத்தை உணர்ந்தது. ஆனால் அதன் ஆயுள் நாளையோடு முடிவடைய உள்ளதென்று தெரிந்தால்?
Comments
Post a Comment