திருப்பம்-12
திருப்பம்-12
"ஹலோ" என்று அழுத்தமான குரல் காதில் விழ,
தன் நெஞ்சாங்கூட்டை அழுத்திக் கொண்டவள் அலைபேசியை சற்றே இறுக்கிப் பிடித்து, "ம்ம்" என்று மெல்லிய ஒலியில் முனகினாள்.
"ஓன் முடிவு என்ன?" என்று எவ்வித பூசலுமின்றி அவன் பளிச்சென்று கேட்டுவிட,
இங்கு பெண்ணவளுக்கு வியர்த்து வழியத் துவங்கியது.
"கேள்வி கேட்டேம்" என்ற இரண்டே வார்த்தையில் அவள் நெஞ்சில் நீர் வற்றச் செய்திருந்தான்.
பதில் பேசிட இயலவில்லையா? தைரியமில்லையா? என்று அவளுக்கே தெரியவில்லை!
"அ..அப்பா என்ன சொல்றாரோ.." என்று கூறுவதற்குள் கண்களில் நீர் வழியத் துவங்க, இதழ் கடித்து அடக்க முற்பட்டாள்.
"ஓம் மனசுக்கு என்ன படுதுனு கேட்டதாதேம் நெனவு" என்று வார்த்தைகளில் பெரும் அழுத்தம் காட்டினான் திருமாவளவன்.
"நானா என்ன முடிவு செய்ய?" என்று வாய்க்குள் அவள் முனகியது அவனுக்குக் கேட்காமல் இல்லை.
"கல்யாணம் பண்ணப்போறவிய யாரு?" என்று மீண்டும் அழுத்தமாய் அவன் குரல் ஒலிக்க,
"எல்லாம் தெரிஞ்சே பேசுற உங்கக் கிட்ட என்ன பதில் சொல்றதுனு எனக்கு தெரியலைங்க" என்று கதறும் குரலைக் கட்டுப்படுத்திக் கூறிவிட்டாள்.
சிலநிமிட மௌனத்திற்குப் பின், "எங்கம்மா பண்ண பிரச்சினையால உங்கப்பா ரொம்ப கோபமா இருக்காரோ?" என்று அவன் கேட்க,
"ஹ்ம்.." என்று பெருமூச்சோடு பதில் தந்தவள், "எனக்கு இப்ப உங்கக்கிட்ட பேசுறதுகூட சரியானதா தெரியலைங்க. என்ன முடிவு எடுக்கனும்னு எனக்கு சத்தியமா தெரியலை" என்றாள்.
மீண்டும் மௌனம்...
"ஒங்கைய்யா மாப்பிள்ளனு ஒனக்குக் காட்டினது யார?" என்று அவன் கேட்க,
அவளிடம் பெரும் அமைதி.
"என் பக்கம் உங்களுக்குத் தெரியும்" என்று அவள் குறைந்த குரலில் கூற,
ஒரு ஆழ்ந்த மூச்சை வெளியேற்றியவன், "போய் சொல்லு. ம்ஹும்.. நீ சொல்ல வேணாம். திருமாவளவன் வெட்ஸ் சங்கமித்ரானு தான் பத்திரிகை இந்த ஜென்மத்துல ஒனக்கு. இத ஒங்கைய்யாவே சொல்வாவ" என்றவன், "எனக்கும் கல்யாணம் ஒன்னும் ஜோக் இல்ல மித்ரா" என்று அழைப்பைத் துண்டித்தான்.
கைகள் நடுங்க தனது அலைபேசியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
கண்களில் நீர் வற்றாது பொழிந்து கொண்டிருந்தது. சற்று முன் வரை அவள் இருந்த மனநிலை என்ன? இப்போதிருக்கும் நிலையென்ன? என்று யோசித்துக் கூட பார்க்க இயலவில்லை.
வேலை முடித்து அழுப்பை மீறிய உவகையுடன் காதல் பாடலைப் புலனத்தில் நிலைபாடாக வைத்துவிட்டு சந்தோஷமாய் அவள் வீடு திரும்ப, “இந்த சம்மந்தமே நமக்கு வேணாம்” என்று சச்சிதானந்தம் கத்திக் கொண்டிருந்தார்.
அந்த வார்த்தைகளில் அதிர்ந்து போய் அவள் வாசலில் நின்றுவிட,
“என்னங்க என்ன பேசுறீங்க?” என்று தாட்சாயணி பதறினார்.
“காலையிலருந்து எவ்ளோ பேசுறோம். அவங்க மனசிறங்கல தான? அதென்ன வார்த்தை? மூத்த மருமகனத்தான் தாங்குறோமாம். மாப்பிள்ளை காதுல விழுந்தா எத்தனை வருத்தம் அவருக்கு? அவர சங்கடப்படுத்தி ஒரு கல்யாணத்த இந்த வீட்ல நடத்தனுமா தாட்சா? நமக்கு ஆம்பளப்பிள்ள இல்லாத குறைய தீத்தவரு அவரு” என்று சச்சிதானந்தம் கத்த,
தன் காதுகளில் விழும் வார்த்தை உண்மை தானா என்று அதிர்வாக நின்றிருந்தாள் பெண்.
“என்னவாகிப் போச்சு? என் பொண்ணுக்கு என்ன குறை? அவளுக்கு ராசா மாதிரி மாப்பிள்ளை பார்த்து குறிச்ச தேதில கட்டிவைப்பேன். இந்த மாப்பிள்ளை கூட நம்ம பொண்ணு ஒன்னும் மத்த பொண்ணுங்க மாதிரி ஃபோன் அது இதுனு பேசி பழகலையே? அப்றம் என்ன?” என்று சச்சிதானந்தம் கூற,
பயத்தோடு அதிர்ந்து தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள்.
அழுகை அருவியாய் வந்தது.
வீட்டிற்குள் நுழைய முடியாமல் வாசலிலேயே தேங்கி நின்றுவிட்டாள்.
'இன்னும் பேசி பழகலை தானே?’ என்ற வார்த்தை அவளைத் தீயாய் சுட்டது. என்ன கூறிவிட இயலும் அதற்கு? 'நீங்களா பாத்த பையனத்தானப்பா விரும்பினேன்?’ என்று மனம் அடித்துக்கொள்ள, விக்கி அழவேண்டும் போல வந்தது.
என்ன முயன்றும் கட்டுப்படுத்த இயலாத கண்ணீரை பெற்றோரிடம் வெளிக்காட்டிட பயம் எழுந்து நெஞ்சை அடைத்தது.
“காலைல தாலி செய்யச் சொல்லி கேட்க கூப்பிட்டாங்க. பெரிய மாப்பிள்ளை வரவும் வரேன்னு சொன்னேன். என்ன நினைச்சாங்களோ? கொஞ்ச நேரத்தில் அவங்க வீட்டம்மா ஃபோன போட்டு கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டாங்க. கேட்டா எல்லாத்துக்கும் பெரிய மாப்பிள்ளைனு அவரயே தலைல தூக்கி வச்சிருக்கீங்க. என் பிள்ளைக்கு ரெண்டாம் பட்சமா மரியாதை கிடைக்கும் வீட்ல பொண்ணு எடுக்க விரும்பலனு சின்னப்புள்ளத்தனமா பேசுறாங்க” என்று சச்சிதானந்தம் யாரிடமோ அலைபேசியில் பேசுவது அவளுக்கு நன்றாகவே கேட்டது.
“அதுவும் பெரிய மாப்பிள்ளைக்கான மரியாதைய குறைச்சுக்கோங்க பொதுவிடத்துலனு வேற சொல்றாங்க” என்று அவர் உள்ளே கத்த, நெஞ்சை பிடித்துக் கொண்டு திடுக்கிட்டாள்.
'என் அத்தானுக்கான மரியாதையைக் குறைப்பதா?’ என்று நினைக்கவே உள்ளம் பதறியது அவளுக்கு.
கிட்டத்தட்ட அரைமணி நேரம் சொந்த வீட்டின் வாசலில் மறைந்து நின்றுகொண்டு கண்ணீர் வடித்தாள். கொடுமையாய் உள்ளம் வதைபட்டது. காதல் தோல்வியில் தோழிகள் கண்ணீர் சிந்தும்போது தாய் தகப்பனை விட இதென்ன அத்தனை முக்கியமா? அத்தனை வேதனையா? என்று அவள் யோசித்ததுண்டு. ஆனால் தற்போது தனக்கென்று வருகையில் தான் அதன் நரக வேதனையை உணர முடிந்தது.
முகத்தை துப்பட்டாவில் அழுத்தமாய் துடைத்துக் கொண்டு மூச்சை இழுத்துவிட்டவள், சோர்வாக நுழைவதைப் போல் நுழைய, மகளைக் கண்ட தாட்சாயணி பரிதாபமாக கணவரைப் பார்த்தார்.
'என் மகள் என் முடிவுக்கு முடியாதென்று கூறிவிடமாட்டாள்' என்ற அபார நம்பிக்கையோடு எழுந்த சச்சிதானந்தம், “பாப்பா. உனக்கு இந்த கல்யாணம் வேணாம்டா” என்று கத்திக் கூற,
தெரிந்த விடயத்தை மீண்டும் தந்தை வாய்வழிக் கேட்க, நெஞ்சம் அடைத்தது.
“ஏ..ஏன் ப்பா?” என்று கேட்டவளுக்குப் பயத்தில் கண்கள் கலங்கியது.
“அதட்டி பேசாதீங்க. பிள்ள பயப்படுறா” என்று தாட்சாயணி மகளை வந்து ஆதரவாய் பற்றிக் கொள்ள,
“உன் அத்தான்மேல நீ எவ்வளவு மரியாதையும் பாசமும் வச்சிருக்க? அவர அசிங்கப்படுத்தும் குடும்பத்துக்கு நீ மருமகளா போகனுமா?” என்று கேட்டார்.
என்ன கூறிவிட இயலும் அவளால்? அவள் பதிலை அவர் எதிர்ப்பார்க்கவும் இல்லை போலும்.
“அப்பா மேல நம்பிக்கை இருக்கு தானேடா? இவர விட நூறு மடங்கு பெரியாளா பாத்து குறிச்ச தேதில நான் உனக்குக் கட்டி வைக்குறேன்டா” என்று மார் தட்டிக் கூறியவர், “குணமுள்ள குடும்பம்னு சம்மதம் பேசினா, நான் புள்ளயா நினைக்குற என் மாப்பிள்ளையவே கொறவா நடத்த சொல்றாங்களே? ஒரு கண்ணுல வெண்ணையும் இன்னொரு கண்ணுல சுண்ணாம்பயும் வைக்க முடியுமா?” என்க,
'என் விருப்பத்தக் கேக்க மாட்டீங்களா ப்பா?’ என்று அவள் மனம் ஊமையாய் கதறியது.
“ஏங்க ஒருவார்த்த அவளையும் கேளுங்கங்க” என்று தாட்சாயணி பயத்தோடு கூற,
“அவ என் பொண்ணுடி. என் முடிவுக்கு மறுபேச்சு பேசமாட்டா” என்றவர், “அப்பா எது முடிவு பண்ணாலும் உனக்கு நல்லதா தான் அமையும்னு உனக்கு நம்பிக்கை இருக்குலடா?” என்று கேட்டார்.
ஆம் என்றும் கூற இயலாமல் இல்லையென்றும் கூற இயலாம் வதைபட்டு மனதால் மடிந்து துடித்தாள். வாழ்க்கையில் முதன்முறை பெற்றோர் சொல் பேச்சுக் கேட்டு நடப்பதை அறவே வெறுத்து நின்றாள். தனக்காகக் குரல் கொடுக்க இயலாத தன் இயலாமையை வெறுத்தாள். தன்னவன் மீதான நேசத்திற்காக குரல் கொடுக்க இயலாதத் தன் பயத்தை வெறுத்தாள்.
அவள் மௌனம் கண்டு சச்சிதானந்தம் பதற, தந்தையின் பதட்டம் தாழ இயலாமல் துக்கத்தை மென்று விழுங்கியவள், “உ..உங்க இஷ்டம்ப்பா” என்றதோடு அறைக்குள் ஓடிவிட்டாள்.
'என்ன இருந்தாலும் முடிவானத் திருமணம் இல்லையென்று ஆவது அவளுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் கடந்துவிடுவாள்' என்றே பெற்றோர் நினைத்துக் கொள்ள,
தன் காதல் மடிந்து போனதில் உள்ளே ஊமையாய் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள் சங்கமித்ரா.
அங்கு தன் வீட்டு மொட்டை மாடியில் ரௌத்திர மூர்த்தியாக தலையைத் தாங்கிய வண்ணம் அமர்ந்திருந்தான், திருமாவளவன்.
மித்ராவைப் போல் தான் அவனுக்கும். வீட்டிற்கு மிக இனிமையான மனநிலையோடு நுழைந்தவனுக்கு வீடே கலேபரமான சூழலில் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் புரிந்தது. அந்த கலேபரம் தன் வாழ்வைப் பற்றியப் பேச்சினால் என்பதில் மேலும் அதிர்ந்தான்.
“அவ என்ன பெரிய ஒலக அழகியா? அவளவிட அழகியா, மாப்பிள்ளனு என் மவேன் நிழலுக்கு அஞ்சுற சனமா பாத்து குறிச்ச தேதில நாங்கட்டி வைக்கேம்” என்று தெய்வநாயகி கத்த,
“எகன மொகனயா பேசாத நாயகி. இத்தன வயசுக்கு பொறவு பிள்ளைய முன்னுக்க ஒன்னய கைநீட்டின பாவம் எனக்கு வேணாம்” என்று சுயம்புலிங்கம் கத்தினார்.
“என்னயவே கைநீட்டுவியளா?” என்று கத்தியவர் குழப்பமான பார்வையோடு உள்ளே வந்த மகனிடம் விரைந்து,
“ஏம்லே, ராசா, அம்மா பேச்ச கேப்பிய தான?” என்றார்.
அவன் புரியாதுத் தன் தந்தையை நோக்க,
“இந்த கல்யாணம் உனக்கு வேணாம்யா” என்று அவன் இதயத்தில் இடியை இறக்கினார் தெய்வா.
தாயை அதிர்ந்து பார்த்தவன் தந்தையை நோக்க,
“உங்கம்மைக்கு கோம்பலே. அவிய மூத்த மாப்பிள்ளைக்கு நெறயா மருவாத தாராவளாம். நீ போனா ரெண்டாம் பட்சமாயிடுவனு வேணாங்குறா. இதெல்லாம் பொண்ணு பாக்க மின்னுக்க தோனலையா? நமக்கும் ரெண்டு மாப்பிள்ளை இருக்காவ நாயகி. கேட்டா தப்பா நெனக்க போறாவ” என்று கத்தினார்.
“நீங்க சும்மாருங்கப்பா. உங்கள போல அவிய என்ன சமமாவா நடத்துறாவ?” என்று திரிபுரா கூற,
“அக்கா என்னத்தயாது சொல்லி அம்மாவ ஏத்தாத” என்று விக்ரமன் கத்தினான்.
கார்த்திகாவும் தனலட்சுமியின் பயமும் படபடப்புமாய் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“நான் என்னம்லே ஏத்தி விடுதேம்? அவிய நடத்துனதத்தேம் பாத்தியல்ல? மூத்த மருமகேன் மூத்த மருமகேன்னு அவோள வச்சிட்டுத்தான அத்தனயும் செய்றாவ?” என்று தம்பியைப் பார்த்து கத்தியவள், “அம்மா எனக்கென்னமே அவியதேம் இந்த புள்ள கண்ணாலத்துக்கு காசு போடுதாவனு தோணுது. அதேம் அவியளயே புடிச்சு தொங்குறாவ. நாளபின்ன கட்டிக்கொடுத்தா உம்மவந்தேம் அவியள பாத்துகிடனும் போல?” என்று கூடக் கொஞ்சம் ஏற்றிவிட்டாள்.
“அக்கா” என்று விக்ரம் கத்த,
“சும்மாருலே. சம்மந்தப்படவனே அனக்கத்தக்காட்டாமதேம் இருக்கியான்” என்று கத்தினாள்.
திரிபுராவுக்குத் தன்னை முதன்மைப் படுத்தாத திருமணத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே ஒட்டுதல் இல்லை. வேறு ஊர் பெண் என்பது, தாங்கள் இல்லாது பெண் பார்த்தது என்று அனைத்தும் அவளது தான் என்ற அகங்காரத்தை வெகுவாக பதம் பார்த்தது.
தெய்வாவும் சற்றே குழப்பமான மனநிலையில் நிலையான முடிவில் இல்லாதிருக்க, தன்னை முதன்மைப்படுத்தவில்லை என்பதை அவ்வப்போது அவரிடம் ஒரு குறையாக முன்வைத்துக் கொண்டே இருந்தாள். அவளுக்கு விருப்பம் இல்லை என்பதைப் பதிவு செய்துக் கொண்டே இருந்தாள் என்றும் கூறலாம்.
இப்படியான குழப்ப சூழலில் தாலி செய்வது பற்றிய பேச்சு வர, சச்சிதானந்தம் இயல்பாய் முன் வைத்தத் தன் மூத்த மருமகனின் வருகை அவரை கோபம் கொள்ள வைத்தது.
அப்போதும் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று அவர் கேட்கவில்லை தான். மூத்த மருமகனைத் தூக்கி நிறுத்துவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். என் மகனுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று கோபித்தார். இரண்டாம் பாதியை மட்டும் அவர் கூறியிருந்தால் கூட சச்சிதானந்தம், இயல்பான பெற்றோரின் எண்ணமாக கடந்திருப்பார். தன் மூத்த மருமகனுக்கான மரியாதை அங்கு அடிவாங்குவதைக் கண்டவர், இன்னும் வராத மருமகனுக்காக இத்தனை காலம் தங்களைத் தாங்கிய மருமகனை இறக்குவதா? என்ற கோபத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
வாதங்கள் முற்றி, வார்த்தைகள் தடித்து வாழ்வே இல்லையென்றான நிலைக்கு வந்து நிறுத்தியிருந்தது.
Comments
Post a Comment