திருப்பம்-14

 திருப்பம்-14



தனதறையில் விட்டத்தை வெறித்தபடி கால்களைக் கட்டிக் கொண்டு சாய்ந்தமர்ந்திருந்தாள் சங்கமித்ரா.


வெறும் பத்து நாட்கள் பழக்கமான ஒருவனுக்காக நீ ரண வேதனைப்பட்டுக் கண்ணீர் வடிப்பாய் என்று யாரும் ஜோசியம் பார்த்துக் கூறியிருந்தால், கொள்ளென்று சிரித்திருப்பாள். ஆனால் இன்று?


அவள் அறைக்கு வெளியே அவிநாஷ் மற்றும் சச்சிதானந்தத்திற்கு இடையே பெரும் வாக்குவாதம் ஓடிக் கொண்டிருந்தது.


“மாமா என்ன இது? யாருக்காருந்தாலும் தோன்றுறது தான். ஏன் எங்கம்மாக்கு தோன்றாதா? ஒரு மாப்பிள்ளையா தன் பையனுக்கான உரிமையை அவன் புகுந்து வீடு குடுக்கனும்னு நினைக்க மாட்டாங்களா? ஏன் நீங்க உங்க பொண்ணுக்கு அவ புகுந்த வீட்டில் சமமரியாதைக் கிடைக்கனும்னு எதிர்ப்பார்க்க மாட்டீங்களா?” என்று அவிநாஷ் கேட்க,


“ஆமா மாப்பிள்ளை. நிச்சயம் சம மரியாதையை எதிர்ப்பார்ப்பேன். இன்னொருத்தருக்கான மரியாதை குறைக்கக் கேட்க மாட்டேன்” என்று சச்சிதானந்தம் கூறினார்.


“அய்யோ மாமா.. இதென்ன மாமா சின்னப்பிள்ளத்தனமா?” என்று அவன் ஆற்றாமையாய் கேட்க,


“அவங்க தான் மாப்பிள்ளை அப்படி நடந்துக்குறாங்க. அப்படி ஒரு குடும்பத்துல என் பொண்ணு ஒன்னும் வாக்கப்பட்டு போக வேணாம். அவர விட்டா வேற பையன் கிடைக்க மாட்டாரா என்ன?” என்று கேட்டார்.


'வேறு பையன் கிடைப்பான். ஆனா அவ மனசுக்கு பிடிச்சவனா ஆக முடியுமா?’ என்று ஆற்றாமையாய் எண்ணிய அவிநாஷ் சங்கீதாவைப் பார்த்தான்.


அவளும் கணவனைத் தான் கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தாள். வண்டியில் வந்து கொண்டிருக்கும்போது அவன் பேசியவை மனதில் ஓடியது.


விடயம் அறிந்ததும் தன்னவளையும் கூட்டிக் கொண்டு மகிழுந்தை மாமனார் வீட்டை நோக்கி கிளப்பினான்.


“என்ன கீதா இது? எதுக்கு இப்படி சின்ன விஷயத்துக்குப் போய் கல்யாணத்த நிறுத்துற அளவு போறாங்க?” என்று அவிநாஷ் பதட்டமாய் கேட்க,


“அப்பாக்கு உங்க மேல ரொம்ப மரியாதைங்க. ஆனா அது இந்த அளவுக்குனு நான் எதிர்ப்பார்க்கலை” என்று தங்கை வாழ்வை நினைத்து வருத்தமாய் கூறினாள்.


“இந்த பாப்பாவும் வாயைத் திறந்து பேச மாட்டாடி. இவர் தான் வேணும்னு சொல்றதுதான?” என்று ஆற்றாமையும் கோபமுமாய் அவன் கேட்க,


“சொல்ல விட்டிருப்பாங்கனு நினைக்குறீங்களா? குறைஞ்சது அந்த அவகாசமாது இருந்திருக்குமா?” என்று கேட்டவள், “அப்படி சொல்லிருந்தா சளங்கையே இல்லாம சாமியாடிருப்பாங்கங்க அப்பா. அப்பாக்குக் காதல்னா சுத்தமா பிடிக்காதுனு தெரியும் தான? அவங்க மேல உள்ள பயத்துலதான் இவ லெட்டர் மேட்டரயே அவ்ளோ பயந்து பயந்து மறைச்சா” என்று கூறினாள்.


'மண்ணாங்கட்டி' என்று வாய்க்குள் முனங்கியவனுக்கு நேற்று ‘பிடிச்சிருக்கா?’ என்ற அவன் கேள்விக்கு அவள் முகம் காட்டிய வர்ணஜாலங்கள் மனதில் வந்துபோனது.


“கல்யாணம் பண்ணிட்டு காதலிச்சா மட்டும் ஆகுமாடி?” என்று கோபமாய் கேட்டவன், “என் பாப்பா சந்தோஷமா இருக்கனும்னு சொன்னேன்டி நேத்து. இன்னிக்கு நானே அவ வாழ்க்கைய நரகமாக்கிடுவேனோனு பயமாருக்கு கீதாமா” என்று வேதனையோடுக் கூற,


“ஏங்க என்ன பேசுறீங்க? இதுக்கு நீங்க எப்படி பொறுப்பாக முடியும்?” என்று கேட்டாள்.


“நேரடியா இல்லைனாலும் சண்டைக்குக் காரணம் என்னில் தான் துவங்கிருக்கு கீதா. மாமாவை எப்படியாது சம்மதிக்க வைக்கனும். தாங்க மாட்டாடி அவ” என்று வருத்தமாய் கூறியவன், “யோசிச்சுப்பாரு கீதா. கல்யாணத்துக்கு முன்னாடி நாள் வந்து நம்ம கல்யாணம் இல்லனு சொல்லிருந்தா அந்த இடத்துல உனக்கு எப்படி இருந்துருக்கும்?” என்று கேட்டான்.


நினைக்கவே உள்ளம் பதறியது சங்கீதாவிற்கு. எத்தனை பேச்சுவார்த்தைகள்? எத்தனை அரட்டைகள்? எத்தனை காதல் முன்மொழிவுகள்? அவையெல்லாம் இல்லையென்றாகியிருந்தால்? தைரியமாக இருக்கும் தனக்கே பெரும் அதிர்வாக இருக்கும் கேள்விக்கு, தன் அப்பாவித் தங்கை அனுபவப்பூர்வமாய் உணருவதை எண்ணவே பதைபதைத்தது அக்காளுக்கு.


“சரிபண்ணிடலாங்க” என்று அவன் தோள் தொட்டு அவள் கூற,


“பண்ணனும் கீதா” என்று அழுத்தமாய் கூறியிருந்தான்.


தற்போது மாமனாரிடம் தன்னால் இயன்ற வரை போராடுகின்றான். அவர் கரைய மறுக்கின்றார்.


கோபத்துடன் எழுந்தவன் சங்கமித்ரா அறைக்குள் நுழைய, அல்லிக்கொடியவள் அகதியாய் அமர்ந்திருந்தாள்.


கதவைத் திறந்து அவன் உள்ளே வந்தது அறிந்தும் நிமிர்ந்து அத்தான் முகம் பார்க்கும் திராணி அவளுக்கில்லை.


அவள் அருகே வந்து அமர்ந்த அவிநாஷ், நடுநடுங்கும் கரத்துடன் அவள் தலையில் கரம் வைத்தான்.


அவள் உடல் இறுக்கம் பெற்றது.


அமைதியாய் உள்ளே வந்த சங்கீதாவும் அவன் அருகே அமர,


வேதனையோடு மனைவியைப் பார்த்தான்.


அவன் தோள் தொட்டுக் கண்கள் மூடித் திறந்து ஆறுதல் கூறியவள், ‘பேசுங்க’ என்று கண் காட்டினாள்.


“பா..பாப்பா” என்று அவன் அழைக்க,


மெல்ல, மிக மெல்லமாய் அத்தானைத் திரும்பிப் பார்த்தாள்.


அழுது களைத்துப் போன காய்ந்த விழிகள் அவனை குற்றுயிராய் வதைத்தது.


“பாப்பா” என்று அவன் தடுமாற, அந்த ஆறடி ஆண்மகனுக்கு கண்கள் சிவந்து போயின.


அதில் பதறி நிமிர்ந்த சங்கமித்ரா, “அத்தான், நீங்க ஏன் இப்ப ஃபீல் பண்றீங்க? இதுல உங்களாலனு எதுவுமே இல்ல” என்று கூற,


“டேய் விளையாட்டு இல்லடா. மாமாட்ட பேசு” என்று கூறினான்.


“இல்ல அத்தான். உங்கள என் அப்பா போல” என்று கூற வந்து இடவலமாய் தலையாட்டி, “என் அப்பாக்கும் மேலா பாக்குறேன். உ..உங்களப்போய் அவமதிச்சு” என்று குரல் கமரக் கூறியவள், “உங்களுக்கு மரியாதைக் குடுக்காத இடம் எனக்கும் வே..வேணாம்” என்றாள்.


காய்ந்து போன விழிகளைக் கரித்துக் கொண்டு கண்ணீர் வந்தது. 'வேணாமா?’ என்று கண்ணுக்குள் வந்து கேட்டவனுக்குத் தான் தன்னால் துரோகம் செய்திய இயலுமா? என்று தவித்தாள்.


அவள் தாடையை இறுக்கமாய் பற்றிய அவிநாஷ், “என் கண்ணப்பாத்து திருமாவளவன் இந்த சங்கமித்ராக்கு வேணாம்னு நீ சொல்லிடு பாப்பா. நான் அடுத்த வார்த்தை பேசாம கிளம்பிடுறேன்” என்று கூற,


அவனை அதிர்வாய்ப் பார்த்தாள்.


“ம்ம் சொல்லு” என்று அவிநாஷ் கூற,


“தி.. திருமால்.. திருமாவளவன் இ. இந்த சங்..கமித்ராக்கு” என்றவளுக்கு அடுத்த வார்த்தையைக் கூற இயலவில்லை.


கண்களை ஆக்கிரமித்த கண்ணீர் கன்னம் தாண்டியது. தொண்டைக்குழிக்குள் நெருஞ்சிப்பழம் ஒன்று சிக்கிக் கொண்டு துடிக்கச் செய்தது.


“அ..அவங்க எனக்கு” என்று வார்த்தைகளைக் கோர்க்க முடியாமல் துடித்தவள், “அத்தான் ப்ளீஸ்” என்ற கதறலுடன் அவனை அணைத்துக் கொண்டாள்.


வெடித்து அழுதிடத்தான் ஆசை. சப்தம் கேட்டு தாய் தந்தையர் வந்துவிடுவரே என்ற அச்சத்தில் தன் வாயைப் பொத்திக் கொண்டு அக்காள் கணவனின் மார்பில் சாய்ந்து கதறினாள்.


அவிநாஷ் கண்கள் கலங்க அவளை ஆதரவாய் அணைத்துக் கொண்டு சங்கீதாவைப் பார்க்க, அவளும் கண்ணீரோடு தங்கையை வேதனையாய் பார்த்தாள்.


“மு..முடியல அத்தான்” என்று அவள் தவிப்பாய் மொழிந்த வார்த்தை நூறாய், ஆயிரமாய் அவள் சிதைவதன் வலியை உணர்த்தியது.


அழுத்தமாய் அவள் தலை கோதிய அவிநாஷ், “பாப்பா” என்க,


“ஏன் அத்தான் இப்படிலாம் நடந்துச்சு?” என்று ஆற்றாமையும் அழுகையுமாய் கேட்டாள்.


அவனிடம் பதிலேது?


“அ..அப்பா அவங்களவிட நூறு மடங்கு உயர்ந்தவரா பார்த்து கட்டிவைக்குறேன்னு சொல்றாங்க அத்தான். கோடி பேர் வந்தாலும் அவங்களாயிட முடியாதே?” என்று கேட்டு அவள் வெதும்ப,


“சரி பண்ணிடலாம்டா பாப்பா” என்று அவளை ஆறுதல் படுத்த முயன்றான்.


இடவலமாய் தலையாட்டி கைகளில் முகம் புதைத்தவள், “நா.. நான் நான் பாட்டுக்கு தான அத்தான் இருந்தேன். ஏ..ஏன் மாப்பிள்ளை பார்த்தாங்க? ஏன் இவர் தான் உனக்குனு முடிவு செஞ்சாங்க? உன் வாழ்க்கை இனி இவரோடதான்னு ஏன் நம்பிக்கைக் கொடுத்தாங்க? இ.. இப்ப இதெல்லாம் எதுமே இல்லைனு ஏன் அத்தான் பறிச்சுக்குறாங்க?” என்று வலி நிறைந்த வார்த்தைகளோடு அவள் குமைய, சங்கீதா தங்கையை ஆதரவாய் அணைத்துக் கொண்டாள்.


“முடியல சங்கி. சத்தியமா முடியல” என்று அழுத சங்கமித்ராவுக்கே தன்னை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. 


காதலா? இதுதான் காதலா? பத்து நாளில் பூத்து, பட்டுப்போன மலர் ஒன்று தன் வேர்களை வெந்துபோக வைப்பது தான் காதலா? இதில் இத்தனை வலி உள்ளதா? என்று நினைத்து நினைத்து மறுகினாள்.


“டேய் சரியாகிடும்டா. கலவரம் இல்லாத கல்யாணம் ஏது? இதெல்லாம் சின்ன பிரச்சினை. இதுக்குப் போய் ஏன் நீ எல்லாமே முடிஞ்சுடுச்சுனு நினைக்குற? நாங்களாம் இல்ல?” என்று சங்கீதா ஆறுதல் கூற, எதுவும் அவளிடம் வேலை செய்யவில்லை.


அவளை சமாதானமும் செய்ய இயலாமல், அவள் கண்ணீரையும் காண இயலாமல் தவித்தனர்.


“இங்க பாரு பாப்பா” என்று அவிநாஷ் அவள் முகம் நிமிர்த்த கண்ணீரோடு அவனை ஏறிட்டாள்.


“அத்தான் உனக்கு பிராமஸ் பண்ணித்தரேன்” என்று அவள் கரம் பற்றியவன், “எப்பாடுப் பட்டாவது. உன்னை அவருக்குக் கட்டிவைப்பேன். நீ எதுக்கும் பயப்படாத” என்று கூற,


சட்டென கரமெடுத்துக் கொண்டு கண்களைத் துடைத்தவள், “வேணாம் அத்தான். எனக்கு எந்த நம்பிக்கையும் வேணாம். என்னால யாருக்கும் சங்கடமும் வேணாம்” என்று கூறினாள்.


அவள் மனம் பட்ட ரணம் அந்த வார்த்தைகளில் தெள்ளத்தெளிவாய் விளங்கியது.


அவிநாஷ் ஏதோக் கூற வர, “எல்லா காயத்தையும் உடனே சரிசெய்ய முடியாதுங்க. சிலத ஆரப்போட்டுத் தான் சரிசெய்ய முடியும். ரெண்டு பக்க ஆட்களும் கோபத்துல இருக்காங்க. இப்ப நாம பேசுற எதுவும் எடுபடாது. ஒரு நாளாவது போகட்டும். நாம பேசி புரியவைக்கலாம்” என்று சங்கீதா கூறினாள்.


மனமே இல்லாத போதும் மனையாள் கூறுவதற்கு மறுப்புக் கூறவில்லை அவன். ஏதும் பேசாமல் வேதனையோடு சங்கமித்ரா தலை வருடிவிட்டு அவன் வெளியேற, அறை வாசலில் சிலை போல நின்று கொண்டிருந்தார் தாட்சாயணி.


அத்தையை சற்றும் எதிர்பாராத அவிநாஷுக்கு அனைத்தையும் அவர் கேட்டுவிட்டார் என்பதை அவரது உறைநிலையே உணர்த்தியது.


வேதனை பொங்க அவர் மருமகனை நோக்க, அறையை ஒரு பார்வைப் பார்த்துக் கொண்டவன், “அவள வதைச்சுடாதீங்க அத்தை” என்றுவிட்டுச் சென்றான்.


சுடச்சுட நிகழ்ந்த சண்டை மெல்ல மெல்ல ஆறத் துவங்கியது.


ஒரு நாள் கடந்தது. மறுநாள் மாலை வேலை முடித்து வீட்டிற்கு வர விருப்பம் இல்லாத சங்கமித்ரா, தன் தாயிடம் கூறிவிட்டு கோவிலுக்குச் சென்றாள்.


அவள் எப்போதும் வெள்ளிக் கிழமை தோறும் வரும் கோவில் தான் வடசேரி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்.


தற்போது வீட்டிற்கு செல்ல மனம் விரும்பாததால் அக்கோவிலை நோக்கித் தன் வண்டியைக் கிளப்பினாள்.


'கிடைக்குமா? கிடைக்காதா?’ என்று ஏக்கத்திற்கும், பயத்திற்கும் இடையில் தவித்துக் கொண்டிருந்தது அவள் மனம்.


கோவிலை அடைந்தவள், சந்நிதிக்குள் சிரித்த முகமாய் நிற்கும் பால கிருஷ்ணரைக் கண்டு வேதனை பொங்கும் விழிகளை கட்டுப்படுத்த முயன்றாள்.


கரம் கூப்பிக் கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டவள் மனம் தீயாய் எறிந்தது. 'ஏன் இப்படி பண்றீங்க? அ..அவர வேணாம்னு என்னால சொல்லிட முடியுமா? அப்றம் ஏன் இப்படி?’ என்று மனதோடுக் கேட்டுக்கொண்டவளுக்கு இறுக மூடிய விழியிலிருந்து கண்ணீர் உருண்டோடுவதை உணர முடிந்தது.

Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02