திருப்பம்-15
திருப்பம்-15
'எப்படி இருக்கு தெரியுமா? நா.. நான் கேட்டேனா? நீயா கொடுத்த. இப்ப நீயே எடுத்துக்கப் பாக்குற. இது நியாயமா? வலிக்குது. சந்தனம் குடுத்த திரிவக்ரா பாட்டியோட கூன் முதுக மறையவச்ச மாதிரி என் அப்பாவோட கோபத்தையும் மறைய வைக்க மாட்டியா?’ என்று உள்ளே குழந்தையாய் எழுந்தருளியிருக்கும் கண்ணனிடம் குழந்தைப் போல் சண்டையிட்டாள்.
'எடுத்துப்பியா என்கிட்டருந்து அவர? நான் தரமாட்டேன். எ..என்னை.. அவர் என்னை எப்படி புரிஞ்சுக்குறார்னு பார்த்தத் தானே? அப்பா ஆயிரம் பேரை நிறுத்தலாம். ஆனா என் ஆசை புரிஞ்சு, என் பயம் அறிஞ்சு, எனக்காக அவங்க லெட்டர் அனுப்பிடுவாங்களா? அனுப்பினாலும்தான் இவரைப்போல என்னை வெறும் காகித வார்த்தைகளால் உணர்ந்துட முடியுமா?’ என்று மனதோடு இறைவனிடம் மன்றாடிக் கொண்டிருந்தவளுக்கு மெல்லிய விசும்பல் எழுந்தது.
இதழ் கடித்து அடக்கினாள்.
'ப்ளீஸ். எனக்கு இந்த சோகத்தைக் கொடுத்துடாத. என்னால இதை தாங்கவே முடியலை. ஒரு நாளுக்கே செத்துடுவேன் போல இருக்கு. என்னால இதை தாங்கவே முடியலை. ப்ளீஸ். எனக்கு உதவி பண்ணு. இதை சரி செய்' என்று வேண்டிக் கொண்டு சங்கமித்ரா கண் திறக்க, அவளுக்கு எதிரே, அவள் மனதை கொள்ளை கொண்ட கண்ணன் நின்றிருந்தான்.
நம்ப இயலவில்லை. ‘கோவில்ல தானே இருக்கேன்?’ என்று பக்கவாட்டாய் அவள் திரும்பிப் பார்க்க, சந்நிதியினுள் அந்த மாயக் கண்ணன் கள்ளமில்லா புன்னகையுடன் நின்றிருந்தான்.
மீண்டும் பாவை தனக்கு முன்னே நோக்க, வேதனையை மறைக்கும் அழுத்தமான விழிகளுடன் அவள் மனதை கொள்ளை கொண்ட மன்னன் நின்றிருந்தான்.
அப்பட்டமான ஆச்சரியத்தைத் காட்டிய அவள் பால் முகத்தை அந்த வேதனையிலும் ரசிக்கவே செய்தன, அவன் விழிகள்.
கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மணியடிக்கும் சப்தம் ஒன்று பலமாய் கேட்க, திடுக்கிட்டு சுயம் அடைந்தவள் சந்நிதியைக் கண்டாள்.
அவள் எப்போதும் வரும் வாடிக்கையான பக்தை என்பதால் ஐயருக்கு அவளைத் தெரிந்தே இருந்தது. ஆனால் இன்று ஏதோ மன பாரத்துடன் வந்து நின்று அவள் கண்ணீர் வடிப்பதால் அவரும் அமைதியாக உள்ளே சென்று அப்போதே திரும்பியிருந்தார்.
“எதுவும் வருத்தப்படாதமா கொழந்த. அந்த பகவான் இருக்கான். அந்த கள்ளமில்லாத கண்ணன் உனக்கு நல்லது மட்டுந்தான் பண்ணுவான். அவனுக்கு அவன் பக்தா அழுதா மனசு தாங்காதுமா” என்று அவ் ஐயர் கூற,
சொல்ல இயலாத நிம்மதியை அந்த வார்த்தைகள் கொடுத்தது.
கரம் கூப்பித் தனக்கான குங்குமத்தை வாங்கிக் கொண்டு, நன்றி கூறினாள்.
ஐயர் திரும்பி வளவனிடம் நீட்ட, அவன் வாங்க மறுத்துவிட்டான். பார்வை எல்லாம் பாவை மேல்தான்.
அவன் வாங்காததன் அர்த்தம் அவளுக்குப் புரிந்தது. அவள் கடிதம். அதில் அவள் எழுதிய வார்த்தைகள். ‘பிரகாரம் சுற்றும்போது வந்து வச்சுவிடுவேன்னு சொன்னல்ல?’ என்ற கேள்வியை அவன் விழிகள் தாங்கி நிற்க, மீண்டும் அவள் கண்கள் உடைப்பெடுத்தது.
கண்ணனைத் தரிசித்துவிட்டு அவள் பட்டென நகர்ந்து விட,
ஐந்தடி இடைவெளியில் அழுத்தமான அடிகளோடு அவளைப் பின் தொடர்ந்தான்.
மிக மிக மென்மையாய், மெதுவாய் அடி வைத்தவள் முழு பிராகத்தை சுற்றி முடிக்க எத்தனை மெதுவாக இயலுமோ அத்தனை மெதுவாக சென்றாள்.
'நான் ஆசையா எழுதின வரிகள் இப்படியான ஒரு சூழல்ல தான் நெனவா நடக்கனுமா?’ என்று வருத்தம் கொண்டவள், லேசாய் திரும்பிப் பார்க்க, அவளைப் பார்த்தபடிதான் நடந்து வந்துக் கொண்டிருந்தான்.
'பிடிச்சிருக்கா?’ என்று அவனைப் பார்த்த நொடி அவள் மனமே அவளிடம் கேள்வி கேட்டது.
'பிடிச்சிருக்குதான் ஆனா முடியலையே' என்று மறுகியவள், பிரகாரம் சுற்றி முடித்திட, மீண்டும் அடுத்த சுற்று சுற்றினாள்.
இப்படியே மூன்று முறை சுற்றிவிட்டாள். அவனும் சளிக்காமல் அவள் பின்னோடே சுற்றினான்.
நான்காம் சுற்று பாதியைக் கடந்தவள் அப்படியே நின்றுவிட, அவனும் நின்றிருந்தான். கண்களை அழுந்த மூடித் திறந்த சங்கமித்ரா, நுரையீரலை நிறைக்குமளவு காற்றை இழுத்து சுவாசித்துவிட்டுத் திரும்ப, கரங்களை மார்பிற்குக் குறுக்கே கட்டிக் கொண்டு அழுத்தமாய் அவளைப் பார்த்து நின்றான்.
அவன் பார்வையின் வீச்சைத் தாங்க இயலவில்லை அவளால். தனது கைப்பையைத் திறந்தவள் அதிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்தாள். அங்கே சுவர் திண்டில் அதை வைத்தவள் விறுவிறுவென அவன் அருகே சென்று குங்குமத்தை அவனுக்கு வைத்துவிட்டு, கண்ணீர் கறைபுரண்டு ஓட, எழுந்த கேவல் ஒலியை அடக்கிக் கொண்டு ஓடாத குறையாய் நகர்ந்து சென்றாள்.
செல்பவளையே ஆழ்ந்த பார்வைப் பார்த்து நின்றவன், சுவரில் சிறகடிக்கும் அவள் கடிதத்தின் அருகே சென்றான்.
பிரித்ததும் எப்போதும் போல் சங்குப்பூ இடம்பெற்றிருந்தது. ஆனால் கொஞ்சம் வாடி வதங்கிய பூவாக வைத்திருந்தாள்.
அப்பூவைத் தன் உள்ளங்கையில் கசக்கிப் பிடித்துக் கொண்டவன், கடிதத்தைப் பிரிக்க, கண்ணீர்த் துளியின் தடங்கள் அக்காகிதத்தில் தெரிந்தது.
என்னென்னவோ எழுதத் துடித்தவளது வார்த்தைகளையெல்லாம் அக்கண்ணீர் உணர்த்திட, ‘விட்றாதீங்க’ என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே அந்த முழு காகிதத்தின் உச்சியோரத்தில் இருந்தது.
நெஞ்சோடு பொத்திக் கொண்டான்.
அவள் கண்ணீர் தடங்கள் அவன் சட்டையை நனைத்து நெஞ்சம் ஊடுறுவியதாய் அவன் உள்ளம் தகித்தது.
'விட்டுடுவேனாடி உன்ன?’ என்று மனதோடு கேட்டுக் கொண்டவன், ஒரு முடிவெடுத்தோனாய் வெளியேறினான்.
வீட்டிற்கு வந்து சேர்ந்த சங்கமித்ரா அமைதியாக அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.
கூடத்து நீள்விருக்கையில் தலை சாய்த்து குழப்பமான மனநிலையோடு அமர்ந்திருந்த சச்சிதானந்தம் அருகே வந்தமர்ந்த தாட்சாயணி, “என்னங்க” என்க,
பெரியவர் மெல்ல தலை நிமிர்ந்து பார்த்தார்.
“கேட்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நடந்தது அவங்க பேசினதுலாம் கொஞ்சம் அதிகப்படி தான். நம்ம மாப்பிள்ளைக்கு மரியாதைத் தரக்கூடாதுனு அவங்க பேசினது தப்புதான். ஆனா அதுக்காக கல்யாணத்த நிறுத்தியே ஆகனுமா?” என்று தாட்சாயணி கேட்க,
“நம்ம மாப்பிள்ளைய பேசினாங்கனு மட்டுமில்ல தாட்சா. அந்தம்மா கோபத்தைப் பார்த்தியா? எல்லா இடத்திலும் தனக்கான முன்னுரிமை கேட்டு சண்டை போடும் ஒருத்தங்க வீட்டில் மருமகளை எப்படி நடத்துவாங்கனு யோசிச்சுப் பாரு. இத்தனைக்குப் பிறகு நம்ம பொண்ணு அங்க போனா, என் மகனுக்கு மரியாத குடுக்காத வீட்டுல வளந்தவ தானே நீனு அவள கஷ்டப்படுத்திட மாட்டாங்களா?” என்று கேட்டார்.
நியாயமானக் கேள்வியாகத்தான் பட்டது அவருக்கு. ஆனால் மகளின் வேதனைக்கு முன் இந்த நியாய, அநியாயங்களையெல்லாம் யோசிக்க முடியவில்லை அவராள்.
“நான் சொல்றேன்னு நினைக்காதீங்க. நம்ம கல்யாணமெல்லாம் எப்படி நடந்தது. உப்பு புளிக்கெல்லாம் சண்டை வந்தது தானே? நான் உங்களைக் கட்டிகிட்டு சந்தோஷமா இல்லையா? பொண்ணுக்குப் போற வீட்ல புருஷனத்தான்டி மத்த உறவுகளோட அனுசரனை முக்கியம் தான். அதுக்காக இருக்குற அத்தனை உறவுமே அனுசரனையா இருக்கனும்னு ஆசைப்பட்டா அது பேராசையாயிடாதா? இப்ப வர அவங்க மட்டும் தான் நம்மகிட்ட சண்டை போட்டதெல்லாம். அவங்க வீட்டு மத்த ஆட்கள் யாருமே இதுபற்றி பேசலையே?” என்று தாட்சாயணி கேட்க,
சச்சிதானந்தம் குழப்பமாய் விழித்தார்.
அந்த நேரம் பார்த்து, அவிநாஷ் உள்ளேவர, “வாங்க மாப்பிள்ளை” என்று இருவரும் எழுந்து நின்றனர்.
“என்ன முடிவு எடுத்துருக்கீங்க மாமா” என்று கேட்டபடி அவன் அமர,
சச்சிதானந்தம் யோசனையாய் இரு விரல் கொண்டு நெற்றியை வருடிக் கொண்டார்.
“மாமா நம்ம பாப்பா வாழ்க்கை. இவர்தான்னு முடிவு பண்ணி அவளுக்கு ஒருத்தர காட்டிட்டு, இல்லைனு சொன்னா சட்டுனு அவளாலயும்தான் எப்படி கடந்துவர முடியும்? பாப்பா முகத்தை கவனிச்சு பார்த்தீங்களா நீங்க?” என்று அவிநாஷ் கேட்க,
சச்சிதானந்தம் அப்போதே மகளின் உணர்வற்ற முகத்தை மனதில் நிலைநிறுத்தினார்.
“அவ அப்பா, நீங்கக் காட்டி இவன்தான்னு சொல்றவன் தான் தனக்கு எல்லாம்னு இருந்தவ. வெளிய சொல்லிக்கலைனாலும் இயல்பா மனசுக்குள்ள வர கனவெல்லாம் ஒருத்தனோட சேர்ந்து கண்டுட்டு இப்ப அந்த இடத்துக்கு வேற ஆள நிறுத்தப்போறதா நீங்க சொன்னா அவளால எப்படி மாத்திக்க முடியும்?” என்று அவிநாஷ் கேட்க,
“அதுக்காக அவங்கள ஏத்துக்க சொல்றீங்களா மாப்ள?” என்றார்.
“ஏத்துக்கோங்க மாமா. தப்பென்ன இருக்கு? உங்க மக வாழ்க்கை முக்கியமில்லையா உங்களுக்கு? உங்களுக்கு எப்படியோ மாமா. ஆனா எனக்கு என் பாப்பா வாழ்க்கை தான் முக்கியம்” என்று அவன் கூற, வாசல் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது.
தாட்சாயணி சென்று கதவைத் திறக்க, அமைதியான மற்றும் எளிமையான தோற்றத்துடன் சுயம்புலிங்கமும், அவர் அருகே அழுத்தமான முகத்துடன் திருமாவளவனும் நின்றிருந்தனர்.
தாட்சாயணி திகைத்துப் பார்த்ததெல்லாம் இரு விநாடிகள் தான்.
“வாங்க சம்மந்தி. வாங்க மாப்பிள்ளை” என்று கூறியவர் வழிவிட, இருவருமாக உள்ளே நுழைந்தனர்.
வந்தவர்களைக் கண்டு அதிர்வாய் சச்சிதானந்தம் எழ, ஏதோ ஒரு நல்லது நிகழப் போவதை உணர்ந்து ஆனந்தமாய் அவிநாஷ் எழுந்தான்.
தோளில் போட்டிருக்கும் துண்டை சரிபார்த்த சுயம்புலிங்கம், கையெடுத்து கும்பிட்டு வணக்கம் வைக்க, தானும் வணக்கம் வைத்த சச்சிதானந்தம், “உட்காருங்க” என்று கூறினார்.
பெரியவர்கள் இருவரும் எதிரெதிரே அமர, அவிநாஷும் வளவனும் நின்றுகொண்டனர்.
வளவனின் பார்வை மங்கையவள் அறையைத்தான் நொடிக்கொருமுறை தொட்டுக் கொண்டிருந்தது.
ஒரு ஆழ்ந்த அமைதியை பெருமூச்சுவிட்டுக் களைத்த சுயம்புலிங்கம், “என்னைய மன்னிசுடுக சம்மந்தி” என்று கூற,
சச்சிதானந்தம் அவரை வியப்பாய் பார்த்தார்.
அவிநாஷைப் பார்த்து, “நீயலும் மன்னிசுடுவ மக்கா. என் சம்சாரம், புள்ளையனு வந்துபுட்டா இப்படித்தேம். அந்த வேகத்துலதான் பேசிபுட்டாவ. நேத்தே பேசுவோமானுதேம் பாத்தேம். எல்லாருமே கோபமாதேம் இருந்துருப்பீய. அதேம் ஆறப்போட்டு பேசுவம்னு இன்னிக்கு வரேம்” என்று அவர் கூற,
அவிநாஷ் சச்சிதானந்தத்தை அர்த்தமாய் ஒரு பார்வை பார்த்தான்.
“எனக்கும் ரெண்டு மருமவேன் இருக்காவ. இந்தா இன்னொரு மோளேயும் வச்சுருக்கேம். எனக்கு எம் மருமவேன் எல்லாமே ஒசத்திதேம். அப்படியிருக்க என்னைய யாரும் இப்படி கேட்டுகிட்டாலும் கோவம் வாரத்தேம் செய்யும். ஒரே வெப்றாளமா (மனப்புழுக்கமா) போச்சு” என்று சுயம்புலிங்கம் கூற,
சச்சிதானந்தத்திற்கு என்ன பதிலாற்றுவது என்றே புரியவில்லை.
தன் மகனைப் பார்த்த சுயம்புலிங்கம், “எம்மோனே கோபமெல்லாம் பட்டு பாத்தது இல்ல சம்மந்தி. எப்போதாவதுதேம் வரும். ஆனா வார கோவத்துக்கு அர்த்தம் இருக்கும். இந்த ஒடக்குத் தெரிஞ்சு கோபப்பட்டதோட அவேம் கண்ணுல வேதனைய பாத்தேம். எம்புள்ளைக்கு எது சரினு புரிஞ்சுது” என்று கூறி அவரைப் பார்த்து, “ஏம் மக்கா ஏதும் பேசமாட்டிக்கீய? கோபம் போலியாக்கும்? நான் என் சம்சாரத்த வேணுமின்னா அந்த தம்பிகிட்ட மன்னிப்பு கேக்க சொல்லுதேம்” என்று கூற, “அய்யோ பெரியப்பா” என்று அவிநாஷ் பதறினான்.
“ஏம்லே பதறுரவ? தப்பு செஞ்சா ஆரும் மன்னிப்புக் கேக்குறதுதேம். வயசென்னருக்கு அதுல?” என்று அவர் கூற,
“உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு பெரியப்பா” என்று கனிவான புன்னகையுடன் கூறினான்.
அதில் சிரித்துக் கொண்டவர் சச்சிதானந்தத்தைப் பார்க்க, அவர் முகத்தில் குழப்ப ரேகைகள் தாண்டவமாடியது.
Comments
Post a Comment