திருப்பம்-16
திருப்பம்-16
“மாமா” என்று அவிநாஷ் அவர் தோள் தொட, மருமகன் கரத்ததை அழுந்தத் தட்டிக் கொடுத்தபடி நிமிர்ந்து அமர்ந்தார்.
கண்கள் சிவக்க அமைதியும் அழுத்தமுமாய் நின்றிருந்த வளவன் விழிகள், அவள் அறைவிட்டு வெளியே வந்துவிட மாட்டாளா? என்பதிலேயே படிந்திருந்தது.
அவன் உள்ளம் அவள் அகம் சென்றடைந்ததோ என்னவோ? தற்செயலாகக் கதவைத் திறந்துக் கொண்டு வந்த பாவையவள், கூடத்தில் நிற்பவனை அதிர்வாகக் கண்டாள்.
சச்சிதானந்தம் மற்றும் அவிநாஷ் அவளுக்கு புறம் காட்டி நிற்க, அவளவனும் சுயம்புலிங்கமும் அவள் முகம் பார்க்கும்படி இருந்தனர்.
வெளிப்படையான அதிர்ச்சியோடு நெஞ்சை நீவிக் கொண்டவள் விழிகள் நொடியில் தழும்பியது.
சட்டெனத் திரும்பிக் கொண்டாள்.
ஏறி இறங்கும் நெஞ்சாங்கூட்டை அழுத்தி சமன் செய்தவள், தன் கண்ணீரை அழுத்தமாய் துடைத்துவிட்டுத் திரும்ப, அவளைப் பார்த்த சுயம்புலிங்கம், “மக்ளே வாமா” என்றார்.
அவள் பெற்றோரும் அத்தானும் அவளைத் திரும்பிப் பார்க்க, சிரம் தாழ்த்தியபடி அவ்விடம் வந்து நின்றாள்.
இதழ் கடித்து சிரம் தாழ்த்தி அவள் நின்றிருந்த கோலம், சுயம்புலிங்கத்திற்கு அவள் தவிப்பை உணர்த்தியது. முதலில் தன் மகனுக்காக, ‘இவதான்யா என் மருமவ' என்று முடிவெடுத்திருந்தவர் தற்போது அவளுக்காக அம்முடிவை எடுத்திருந்தார்.
“சம்மந்தி, எம்மூட்டு மவாலட்சுமிய பறிச்சுகிடாதீய” என்று சுயம்புலிங்கம் கூற,
சச்சிதானந்தம் பதறித்தான் போனார்.
நல் மனிதர், பெரிய குடும்பம், குணமான மனிதர் என்று அவர் கேட்டதற்கு சான்றாய், எத்தனை பொறுமையாக வந்து தங்கள் பக்கம் விளக்கி, மனைவியையும் சபையில் விட்டுக்கொடுக்காமல் பேசுகின்றார், என்று வியப்பாகத்தான் இருந்தது சச்சிதானந்தத்திற்கு. காற்றில் வைத்தக் கற்பூரத்தைப் போல் மெல்ல மெல்ல அவர் கோபம் கரைய, “என்னையும் மன்னிச்சுடுங்க சம்மந்தி” என்று கூறினார்.
நடுநடுங்கும் கரங்களுக்கு பிடிமானம் இல்லாமல் அவிநாஷின் கைச்சட்டையை இறுகப் பற்றிக் கொண்டு அவன் முதுகில் மறைந்து நின்றாள் பெண்.
அவிநாஷ் அவளை புன்னகையாய் பார்த்துத் தோளில் தட்டிக் கொடுத்து முன்னே நிறுத்த முயற்சிக்க, ம்ஹும் வருவேனா என்று பின்னே நின்றுகொண்டாள்.
திருமாவளவனுக்கும் நெஞ்சம் குளிர்ந்து போனது.
“நானும் கொஞ்சம் கோவப்படுட்டேன்” என்று சச்சிதானந்தம் கூற,
“சரியான முறையான வெசயத்துக்கு கோவம் தேவதான? போவுது விடுங்க. இனி ஆற காரியத்தப் பாப்போம்” என்று கூறினார்.
சச்சிதானந்தம் புன்னகையாய் வளவனை நோக்க, கரம் கூப்பியவன் மனமார, “ரொம்ப நன்றிங்க மாமா” என்றான்.
அவனது செயல் அவரை வெகுவாய் சங்கடப்படுத்தியது.
“என்ன மாப்ள நீங்க?” என்று அவர் எழ,
அவிநாஷ் மச்சினியை நகர்த்திவிட்டு அவன் அருகே சென்று தோள் தட்டினான்.
“மன்னிச்சுடுவ அண்ணே” என்று வளவன் கூற,
“அட என்னய்யா நீ?” என்ற அவிநாஷ் அவனை ஆறத்தழுவிக் கொண்டான்.
அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்ட வளவன், “தேங்ஸ் ண்ணே” என்று மெல்லிய குரலில் கூறினான்.
அவிநாஷ் அவனைப் புரியாமல் பார்க்க, “எங்களுக்காவ நீங்க நிக்குதீயனு உள்ள வரும்போதே புரிஞ்சுட்டு. அதுக்குதான்” என்று கூறினான்.
புன்னகையாய் அவன் தோள் தட்டி, “என் மூத்த புள்ள அவ. அவ ஆசை அழிய நான் ஆளாவேனா?” என்க,
“மகாராணியாட்டம் பாத்துக்குதேம்” என்று கூறினான்.
மெல்லியக் குரலில் என்றாலும் அவன் கடைசியாக சொன்ன வாக்கியம் அனைவருக்குமே கேட்டது.
தந்தையாய் சச்சிதானந்தத்திற்கு நெஞ்சம் நிறைந்தது.
தாட்சாயணி மனம் நிறைந்துத் தன் மகளைக் காண, அவள் இன்பக்கண்ணீர் சிந்திய வண்ணம் நின்றுகொண்டிருந்தாள்.
அவளால் அவள் நிலையை சொல்லில் வடித்திட இயலாது. அத்தனை ஆனந்தமாக இருந்தது. எங்கே தன் நேசம் தன் கைமீறிப் போய்விடுமோ? என்ற அச்சத்தில் அவள் துடித்தத் துடிப்பு, இதயத்தின் அணுக்களில் எல்லாம் அமிலத்தை ஊற்றியிருந்தது. தற்போது சந்தனத்தை பன்னீரில் குழைத்துப் பூசியதைப் போல் குளிர்ந்து போனது அவள் அகம்.
பெரியவர்கள் மற்ற விடயம் பேசிக் கொள்ள, தாட்சாயணி மகளை அழைத்துக் கொண்டு சமையலறை சென்று, இரவு உணவைத் தயாரித்தார். தனியாகக் கொஞ்சம் எடுத்து வைத்துவிட்டு மீதி சட்னியில் கூட இரண்டு பச்சை மிளகாயை அவள் போட, “காந்தப்போகுது சங்கு. என்ன வேலைப் பாக்குற?” என்று தாட்சாயணி அதட்டினார்.
“அவங்க வீட்ல எல்லாரும் காரமாதான் சாப்பிடுவாங்கம்மா” என்று ஏதோ நினைவில் கூறிவிட்டு பதறிப்போய் அன்னையைப் பார்த்தவள், “அ..அது கார்த்தி அக்கா ஹோட்டல்ல வச்சு சொன்னாங்க” என்று கூற,
“ஓ” என்றதோடு நிறுத்திக் கொண்டார்.
பொழுது கழிய, அனைவருமாக இரவு உணவையும் முடித்துக் கொண்டனர்.
அவன் பார்க்காத நேரமெல்லாம் தன் வண்டெனும் விழிகளால் அவன் முகம் துளைப்பவள், அவன் ஏறிட்டாள் எங்கோ பார்ப்பதைப் போல் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தாள்.
மகன் மற்றும் மருமகளின் தவிப்பைப் புரிந்துகொண்ட சுயம்புலிங்கம், “பிரச்சினைல புள்ளையலுக்கு ஏதும் மனத்தாங்கலிருக்கப்போவுது. நாலு வார்த்த பேசியட்டு” என்று கூற,
மறுப்புக் கூறாத சச்சிதானந்தம், மகளைப் பார்த்தார்.
எதிர்ப்பார்ப்பு சுமந்திருந்தது அவள் விழிகள். அப்போதுதான் மகளைக் குறித்துத் தான் யோசிக்காதிருந்துவிட்டோமோ என்ற வருத்தம் அவரை வதைத்தது.
மெல்ல தலையசைத்து அவர் சம்மதம் கூற,
இருவருமாக வெளியே, திண்ணைக்கு வந்தனர்.
எதுவும் பேசாது கம்பிகளில் சாய்ந்து கரத்தை மார்பிற்குக் குறுக்கே கட்டிக் கொண்டு அவன் நிற்க,
அவன் முன் சிரம் தாழ்த்தியபடி அவள் நின்றிருந்தாள்.
“எதும் பேசமாட்டீயலோ?” என்று அவன் கேட்க,
“சாரி” என்றாள்.
“என்னயப்பாத்து பேசத்தான?” என்று அவன் கேட்க,
அவனை நிமிர்ந்து பார்த்து, “சாரி” என்றாள்.
“எனக்கு என் மித்து நெலம புரியும்” என்று அவன் கூற,
கண்ணீரோடு இதழ் கடித்த வண்ணம் தலை கவிழ்ந்தாள்.
“சங்கடமாருந்தாலும் பரவால. மன்னிச்சுக்க” என்றவன் அவளை இழுத்துத் தன்னுள் பொத்திக் கொண்டு இறுக அணைக்க, முதலில் அதிர்ந்து விழித்தவள், அவன் கைச்சிறையில் உணர்ந்த பாதுகாப்பிலும் இதத்திலும் மனம் நெகிழ்ந்து நின்றாள்.
கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. நடுநடுங்கும் கரத்துடன் தானும் அவனை அணைத்தேவிட்டாள்.
தான் அரவணைக்கும் போது அடையாத சுகந்தத்தை அவள் அணைக்கும் போது உணர்ந்தான். உடல் சிலிர்த்து அடங்க அவளை மேலும் தன் மார்பில் புதைத்தவன், “விட்டுடுவேனா உன்னய?” என்று கேட்டான்.
அவளிடம் மெல்லிய கேவல் ஒலி எழுந்தது. கடினப்பட்டு அடக்கினாள்.
“அழுவய அடக்காத” என்று அழுத்தமாய் அவன் மொழிய,
“உ..உள்ள சத்தம் கேட்கும்” என்றாள்.
“ப்ச்” என்று கோபம் கொண்டவன் அவள் முகம் நிமிர்ந்தி, “அம்புட்டுக்கு பயமா?” என்று கேட்க,
“புரிஞ்சும் கேட்குறீங்களே” என்றாள்.
ஒரு பெருமூச்சு விட்டவன், அவள் முதுகை ஆதரவாய் தட்டிக் கொடுக்க, “அப்பாக்கு எங்க மேல கொள்ள பாசம். ஆனா சில விஷயங்களில் அவங்க எண்ணம் எங்களுக்கு முரண்பட்டு இருக்கும் தானே?” என்று கூறினாள்.
“மாமாவ நான் தப்பாவே நெனக்கல” என்று அவள் எதற்காக அவ்வரிகளைக் கூறினாள் என்று புரிந்தோனாய் தக்க பதில் கொடுத்தான்.
அவளிடம் ஒரு நிம்மதி பெருமூச்சு.
சில நிமிடங்கள் அப்படியே நகர, “யாரும் வந்து பாத்துட்டாவனா என்ன பண்ணுவ?” என்று குறும்பு குரலில் கேட்டான்.
அந்த நொடிதான் அவனோடு ஒட்டிக் கொண்டு கட்டியணைத்து நிற்பதை உரைக்கப் பெற்று பயந்து விலகினாள்.
வேதனையில் கலங்கி சிவந்திருந்த முகம், தற்போது அச்சத்திலும் நாணத்திலும் சிவந்து போயின.
“அம்புட்டுக்கு வெறையலா புள்ள?” என்று அவன் சிரிப்பாகக் கேட்க,
“கேலி பண்ணாதீங்க” என்றாள்.
மென்மையாய் புன்னகைத்துக் கொண்டவன், அவளோடு உள்ளே செல்ல, பெரியோர் இருவரும் பேசி சில முடிவுகளை எடுத்திருந்தனர்.
வளவன் உள்ளே நுழையவும் அவனையும் அமர்த்திக் கொண்ட சுயம்புலிங்கம், “கல்யாணத்துல ஒரு சின்ன மாறுதல்யா” என்று கூற,
'என்ன?’ என்பதைப் போல் பார்த்தான்.
“நிச்சயத்துக்குக் குறிச்சதுக்கு அடுத்த நாளே ஒரு முகூர்த்தம் வருது. தள்ளிப்போடாம அந்த முகூர்த்தத்துலயே கல்யாணத்த வச்சுபுடுவோம்” என்று சுயம்புலிங்கம் கூற,
“எதுக்குப்பா செய்யன (அவசரமாக) செய்தீய?” என்று அதிர்வாய் கேட்டான்.
மூன்று மாத அவகாசம் ஒரே மாதமகா மாறியிருந்தது. தன்னவளின் காதலுக்கான ஆசைக்கு நேரம் குறைந்துவிட்டதே என்ற எண்ணம் அவனுக்கு.
“ஏற்கனவே ஒரு ஒடக்காயிபோச்சுது வளவா. திரும்ப மூனு மாசத்துக்கு என்னவோ ஏதோனு தயங்கித் தயங்கி நவரோனும். அவிய பொண்ண பெத்தவிய. சங்கடத்த கொடுக்க வேணாமே” என்று சுயம்புலிங்கம் கூற,
வளவன் சங்கமித்ராவைப் பார்த்தான்.
'அய்யோ என்ன என்னைப் பாக்குறாரு' என்று பயந்து அவள் தலைகவிழ, ‘சரியான பயப்பத்தி’ என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன், “சரிங்கய்யா” என்றான்.
சங்கமித்ராவிற்கு ஒரு மாதத்திலேயேவா என்று கொஞ்சம் அச்சமும் ஏக்கமும் எழத்தான் செய்தது. அதற்காக பெரிதாக வருத்தமெல்லாம் இல்லை. அவள் முகம் காட்டும் பொழிவே அவள் அகம் உணர்த்திட, மேலும் தடை செய்யாமல் திருமாவளவன் ஒப்புக்கொண்டான்.
பேசி அனைத்தையும் சரிசெய்த திருப்தியுடன் அனைவரும் வெளியேற, சட்டென நினைவு பெற்றோனாய் தனது சட்டைப் பையிலிருந்த கடிதத்தை யாரும் அறியா வண்ணம் அவிநாஷின் கையில் கொடுத்திருந்தான் வளவன்.
அவிநாஷ் நக்கல் சிரிப்போடு அவனை நோக்க, கண்கள் சுருக்கி அவனை அணைத்துக் கொண்டவன், “ப்ளீஸ் அண்ணே” என்றுவிட்டு விலகினான்.
சுயம்புலிங்கத்தை அழைத்துக் கொண்டு வளவன் புறப்பட்டு விட, அனைவரும் உள்ளே நுழைந்தனர்.
பரிவாய் மகளின் தலை வருடிய சச்சிதானந்தத்தின் பார்வை அவளிடம் சொல்ல முடியாத மன்னிப்பைக் கூறியது. புன்னகையாய் தந்தையை அவள் அணைத்துக்கொள்ள, அவள் முதுகை தட்டிக் கொடுத்து விலகினார்.
சில நிமிடங்களில் அவிநாஷ் புறப்படவிருக்க, அவனை வழியனுப்ப வெளியே வந்த சங்கமித்ரா, “தேங்ஸ் அத்தான்” என்றாள்.
“எதுக்காம்?” என்று கேலி பாவனையில் அவன் கேட்க,
அழகாய் சிரித்தவள், “ப்ராமஸ நிறைவேத்திட்டீங்கள்ல?” என்றாள்.
நெஞ்சம் நிறைய புன்னகைத்தவன் அவள் தலைவருடி, தனது சட்டைப் பையிலிருந்து அந்தக் கடிதத்தை நீட்டினான்.
அதையும் அவனையும் அதிர்ந்து பார்த்தவளுக்கு நொடியில் வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது.
“அ.. அத்தான்” என்று அவள் தயங்க,
“உன் அவங்க தான் தந்தாங்க” என்று புன்னகையாய் கூறினான்.
'வெளிய வந்து கட்டிபுடிச்சுட்டு நின்னப்ப இதைக் குடுக்கனும்னு தோனலயா இவருக்கு? அத்தான் கிட்டப் போய் குடுத்துருக்காங்க' என்று உள்ளுக்குள் சிணுங்கியவள் அதை வாங்கிக் கொள்ள, புன்னகைத்துவிட்டுச் சென்றான்.
கதவுகளைப் பூட்டிக் கொண்டு உள்ளே சென்றவள் அக்கடிதத்தைப் பிரித்துப் பார்த்தாள்.
'அன்புள்ள மித்துக்கு,
கோவில்ல வச்சு குங்குமம் வக்காம போயிடுவியோனு பயந்துடேம் மித்து. அப்படி அழுறியேடி. எம்புட்டு கஷ்டமாருந்துச்சு தெரியுமா? விட்டா சாமிகூட சண்ட போட்டுபுடுவ போல? என்னையத்தான வேண்டிகிட்ட?’ என்று வாசித்தவளுக்கு மென்மையான புன்னகை தோன்றியது.
'வேற யார வேண்டிக்கப் போறேன்?’ என்று மனதோடு சொல்லிக் கொண்டு அவள் தொடர,
'அள்ளி அணைக்கனும்போலனு வந்துது. இம்புட்டுக்காடி பதிஞ்சுபுட்ட?’ என்று எழுதியிருந்தான்.
'எனக்கும் அதே சந்தேகம்தான்' என்று சிரித்துக் கொண்டவள் கடிதத்தில் பார்வையை ஓட்ட,
'அந்த கோவிலுக்கு தான வெள்ளிக்கெழமதோரும் வருவ?’ என்று எழுதியிருந்தான்.
'இனிமே அவரும் வருவாரோ?’ என்று உள்ளுக்குள் குதூகலித்தவள், “ச்ச ஒரு மாசம் தான் இருக்கே. நாலு வாரம் தான். அதுலயும் கடைசி வாரம் அம்மா வெளிய அனுப்ப மாட்டாங்க” என்று வருத்தம் கொண்டாள்.
'உன்னைய விட்டுடுவேனாடி? லெட்டர்ல உன் கண்ணீர் தடத்த பாக்கையில என்ன மாதிரி இருந்துச்சு தெரியுமா? எதுவும் யோசிக்காத மித்ரா. எல்லாம் சரியாப்போவும். இந்த லெட்டர நீ படிக்கையில அம்புட்டும் சரியாயிருக்கும். நிம்மதியா தூங்கு. நான் ஒனக்குதேம். எல்லாரையும் விசாரிச்சேன்னு சொல்ல வேணாம். ஆனா விசாரிச்சுக்குறேம்’ என்றதோடு கடிதம் நிறைவடைய, அதை மார்போடு பொத்திக் கொண்டவள் நிம்மதியான புன்னகையோடு தலை சாய்த்தாள்.
Comments
Post a Comment