திருப்பம்-17

 திருப்பம்-17



“ஏம்லே அங்கன அம்புட்டு வேல சோலி கெடக்குதுனு அல்லாடுதோம். இப்பத என்னத்துக்குடா கோவிலுக்கு கூட்டியாந்துருக்க? இன்னிக்கு என்ன சிறப்புனு சாமி கும்பிட வந்துருக்கவ?” என்று வேலு கேட்க,


“ஏம்லே கோயிலுக்குக்தான கூட்டியாரேம்? நானென்ன நாத்தீயவாதியா? ஏம் போட்டு அறுப்புத?” என்று நண்பனைக் கிள்ளியபடிக் கேட்டான், திருமாவளவன்.


“ஆ நுள்ளாதல்லே” என்று அவன் கிள்ளிய இடத்தைத் தேய்த்துக் கொண்டவன், “என்னலே சிறப்பு இன்னிக்கு? உள்ளாரையும் போவாம எதுக்கு இங்கனகுள்ளயே நிக்க?” என்றபடி தற்செயலாக திரும்பிப் பார்த்தவன், “ம்ம் இதான் சிறப்பாக்கும்?” என்று கேட்டான்.


அவன் கேள்வியில் சட்டெனத் திரும்பிப் பார்த்தவன், தனது வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிவரும் சங்கமித்ராவைக் கண்டான்.


வண்டியை நிறுத்தும்போதே அவனைக் கண்டுவிட்டவளுக்கு மனதிற்குள் பெரும் மத்தாப்பு ஓசைதான். பங்குனி மாதத்தில் குளுகுளுவென இளநீர் குடிப்பதைப் போன்றிருந்தது அவனைக் காணும் நேரம். முகம் விகசிக்க வந்தவள், கோவிலுக்கான பூஜை சாமான்களை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றுவிட, “வாலே” என்று நண்பனையும் இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.


“என்னம்லே நடக்குது இங்கன?” என்று வடிவேலு புரியாது கேட்க,


“அனக்கத்த காட்டாம வாலே” என்றான்.


அங்கு சந்நிதியின் முன் சென்று அவள் நிற்க, அவளுக்கு எதிரே சென்று தன் நண்பனோடு நின்று கொண்டான்.


ஐயரிடம் பூஜை சாமான்களைக் கொடுத்தவள், கை கூப்பி கண் மூடி இறைவனை வேண்டிக் கொள்ள, திருமாவளவன் புன்னகையாய் அவள் முகம் பார்த்தான்.


கண்கள் திறந்து அவனைப் பார்த்தவள் சிறு கோபப் பார்வையுடன், ‘சாமி கும்பிடுங்க’ என்று சைகை செய்ய, 


தன் பச்சரிசிப் பற்கள் பிரகாசிக்கப் புன்னகைத்தவன், கரம் கூப்பி கண்மூடி இறைவனை வேண்டினான்.


'ரொம்ப தேங்ஸ். நான் கேட்டுட்டு போன உடனே எனக்குதான் அவர்னு காட்டிட்டீங்க. அவ்ளோ அவ்ளோ சந்தோஷமா இருக்கு. எங்க வாழ்க்கை சிறப்பா அமைய நீங்கதான் துணை புரியனும் கண்ணா’ என்று அவள் வேண்டிக் கொள்ள,


'அவ வேண்டுதல நெறவேத்தி வச்சதுக்கு நன்றி. எங்க வாழ்க்க நல்லபடியா அமைய நீதேம் ஒதவனும்’ என்று வேண்டிக் கொண்டு இறைவனை தரிசித்தான்.


அவளிடம் பூஜை சாமானைத் திரும்பிக் கொடுத்த ஐயர், “பகவான் நல்லதே பண்ணுவார்மா” என்று கூற,


“நன்றி சாமி” என்று அதை வாங்கிக் கொண்டு நகர்ந்தாள்.


பிராகாரத்தை அவள் சுற்ற, நண்பனை இழுத்துக் கொண்டு அவள் பின்னே சுற்றினான்.


“ஏம்லே.. எள்ளுதான் எண்ணைக்குக் காயுது. கூடவே ஏம்லே எலி புலுக்கையும் காயுது?” என்று கேட்க,


“என்னம்லே?” என்று சிரிப்பாய் நண்பனிடம் கேட்டவன் பார்வை என்னவோ தன்முன்னே செல்பவளிடம் தான்.


“முப்பது வயசுல இந்த டீனேஜு பசங்கமாதிரி அலம்பலு பண்ணுதனு சொல்லுதேம்” என்று வடிவேலு சிரிக்க,


“காதலுக்கு வயசு ஒரு பொருட்டில்லடா மாப்ள” என்றான்.


பாதி பிரகாரத்தை அடைந்தவள் தனது பையிலிருந்து கடிதத்தை எடுத்து வைத்துவிட்டுச் செல்ல,


சென்று அக்கடிதத்தை எடுத்துக் கொண்டு, அவனுடைய கடிதத்தை அங்கு வைத்தான்.


அடுத்த சுற்றில் அவன் கடிதத்தை எடுத்துக் கொண்டவள், தனது கையிலுள்ள குங்குமத்தை ஒரு தாளில் தட்டி அங்கே வைத்துவிட்டுச் செல்ல,


அந்தத் தாளை எடுத்துக் கொண்டு அதிலிருந்த குங்குமத்தைத் தன் நெற்றியில் வைத்துவிட்டு மீதியை மடித்து சட்டைப் பையினுள் போட்டுக்கொண்டான்.


மூவருமாய் கோவிலுக்கு வெளியே வர, அங்குள்ள பூக்கடையைப் பார்த்தவனுக்கு சட்டென அவள் வரிகள் நினைவு வந்தது.


“லேய் லேய் அவள நிறுத்துடா” என்று வளவன் கூற,


“ஏம்லே நீ கூப்டா நிக்காத ஓன் சம்சாரம்?” என்றான்.


'சம்சாரம்' என்ற வார்த்தையே அவனுக்கு அப்படியொரு குளுமையைக் கொடுத்தது.


'கோம்பப் பயலே நல்லா நேரம்பாத்து சொல்றியே. ரசிக்க நேரமிருக்கா?’ என்று உள்ளுக்குள் நண்பனை செல்லமாய் வருத்தெடுத்தவன், “நீ போய் நிப்பாட்டுடா” என்று கூற,


“சிவசிவா.. இந்த லவ் பண்ணுறோவக்கூட திரியக்கூடாதுனு இதுக்குதேம் சொல்றாவ போல?” என்று வானம் பார்த்து அவன் புலம்ப, ‘நீ லவ் பண்றது தொரைக்கு தெரிஞ்ச பொறவு இருக்குதுடி மாப்ளோய்' என்று அவன் மனசாட்சிக் கூறியது.


வேகமாய் சென்ற வடிவேலு, “தங்கபுள்ள” என்று கத்தி அழைக்க, பெண்ணவள் திடுக்கிட்டுத் திரும்பினாள்.


ஓட்டமாய் அவளிடம் வந்தவன், நண்பனைத் திரும்பிப் பார்க்க அங்கு அவனில்லை. 'எங்க போனியான்?’ என்று யோசித்தவன் பூக்கடை பாட்டியிடம் அவன் பேசுவதைக் கண்டுவிட்டு, “செத்த நில்லு புள்ள” என்று சங்கமித்ராவிடம் கூறினான்.


புரியாத பார்வையோடு அவள் விழிக்க, “நான் வடிவேலுமா” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.


“தெரியும் அண்ணா. சொல்லிருக்காங்க” என்று அவள் கூற,


“இஞ்சார்ரா. என்னனு சொன்னியான்மா? எப்படியும் நல்லவிதமா சொல்லியிருக்க மாட்டியான். எந்த கூட்டுக்காரந்தேம் கூட்டாளிய பெருமையா சொல்லிடுதாவ” என்று கூறினான்.


அவன் பேச்சு நடையை புரிந்துகொள்ளவே அவளுக்கு சில நொடிகள் பிடித்தது.


“நீங்க அவங்களோட க்ளோஸ் பிரெண்டுனு சொன்னாங்க. கிட்டதட்ட அவங்களுக்கு நீங்க ஒரு கை, உங்களுக்கு அவங்க ஒரு கைனு சொன்னாங்க. என்னைய விக்ரமுக்கடுத்து நான் வாயத்திறக்காம என்ன நினைக்குறேன்னு புரிஞ்சுக்குற ஒரு ஜீவன்னு சொன்னாங்க” என்று புன்னகையுடன் அவள் கூற,


அதிர்வாய் அவளைப் பார்த்தவன், “ஏ மக்கா அப்படியாச் சொன்னியான் இந்த பய?” என்று கேட்டான்.


உள்ளுக்குள் தன் நண்பன் தன்னை எப்படியான நிலையில் வைத்திருக்கின்றான் என்பதை நினைத்துப் பூரிக்கவே செய்தான்.


அவன் அலைபேசி ஒலிக்க, எடுத்து காதில் வைத்தவன், “என்னம்லே பண்ணுது? இங்கனக்குள்ள நின்னுகிட்டு என்ன அலும்ப கூட்டுத?” என்று கேட்க,


“பேசிட்டனா கெளம்பி வா. வண்டிய எடுத்துட்டேம்” என்று கூறினான்.


“இஞ்சார்ரா. அந்த புள்ளைக்கு பூவாங்க போவலியா நீ?” என்று வேலு கேட்க,


“வாலே நீ” என்றுவிட்டு வைத்தான்.


“இந்த பயலுக்கு கோம்பத்தான் புடிச்சுருக்குமா” என்ற வடிவேலு, “பாத்து போயிவா தங்கபுள்ள” என்க,


“சரிண்ணா” என்று புன்னகையாய் கூறிவிட்டு வண்டியின் அருகே சென்றாள்.


வண்டியின் மேல் இலையில் சுற்றப்பட்ட பொட்டலம் ஒன்று இருக்க, புன்னகையாய் அதைப் பிரித்துப் பார்த்தாள்.


சரம் சரமாய் கனகாம்பரப்பூ இருந்தது.


அந்த பூவிற்கு இணையாய் அவள் முகம் மலர்ந்து ஜொலித்தது.


தூரத்தில் நின்றபடி இதைப் பார்த்த வடிவேலுவிற்கு, மனதில் நண்பன் வாழ்வை நினைத்து ஒரு இதம் தோன்ற, கூடவே, ‘அத அந்த புள்ள கையிலக் குடுத்தா என்னடா?’ என்றும் தோன்றியது.


பூவை நான்காய் மடித்துத் தன் பையிலிருந்து ஊக்கை எடுத்துக் தலையில் சூடிக் கொண்டவள் கண்ணாடியில் தன்னை அழகுபார்த்துக் கொண்டு புறப்பட, வண்டியில் அமர்ந்தபடி இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த திருமாவளவனும் பூரித்துப் போனான்.


நண்பன் அருகே வந்த வடிவேலு அவன் தோளில் கரம் வைக்க, புன்னகையாய் திரும்பியவன் முகமே பிரகாசித்தது.


“மின்னுதுடி மாப்ளோய்” என்று வேலு கேலி செய்ய,


சிறு வெட்கப் புன்னகையுடன் தலைகேதியவன், “ஏருலே” என்று கூறினான்.


இருவருமாய் ரப்பர் தோட்டத்திற்குச் சென்றனர். அங்குள்ள மிச்ச வேலைகளை முடித்துக் கொண்டு, மாட்டுக் கொட்டகைக்கு வந்து மாடுகளோடு இருவரும் அமர்ந்திருக்க,


“அம்புட்டுக்கு புடிச்சுடுச்சாடே அந்த புள்ளைய?” என்று வடிவேலு கேட்டான்.


அமைதியாய் வானம் வெறித்துக் கொண்டிருந்த அவன் முகம், பிறை நிலவுக்கு இணையாய் ஜொலித்தது அக்கேள்வியில்.


“தெரில மாப்ள. எப்புடி இப்புடினு தெரில” என்றவன் நண்பன் முகம் கண்டு, “பொண்ணு பாக்க போனப்பக் கூட ஆர்வத்தத் தவிர பெருசா எந்த உணர்வும் இல்ல. போட்டோவெல்லாம் பாத்து முடிவாயிதேம் போனது. ஆனா அவகூட பேசின பொறவு” என்று நெஞ்சை நீவிக் கொண்டான்.


அவன் முகம் மேலும் மலர்ந்தது. சின்ன சிரிப்போடு நண்பன் முகம் பார்த்து அமர்ந்தான் வடிவேல்.


“காதலிக்கக் கொள்ள ஆசையாம்டா அவோளுக்கு. ஆனா மாமாக்கு காதலுனா புடிக்காது போல. அதேம் இவளும் சின்ன புள்ளைலருந்து காதலுனா ஏதோ ஆகாத வார்த்தைனு நெனச்சுட்டு இருந்திருக்கா. ஸ்கூல்ல லவ் பண்ணவோள திட்டியெல்லாம் இருக்காலாம்லே” என்று வளவன் சிரிக்க,


வேலுவும் அட்டகாசமாய் சிரித்தான்.


“ஆனா காலேஜு போன பொறவாட்டி காதலு மேல இருந்த எண்ணமெல்லாம் மாறி ஆச வந்துருக்கு. சரியான பயப்பத்திடா. அவோ அப்பாக்கு ரொம்ப பயம். அதனால காதலிக்கலங்குறா. ஆனா மாப்ள, இந்த காதலிருக்குல அதுக்கு பயமெல்லாம் தெரியாதுடா. கோம்பத்தனமாதேன் நடந்துக்க வைக்கும். கரச்சி (அழுது) ஒறக்கமில்லாம தவிக்க வைக்கும். சரியான சின்னப்புள்ளத்தனம் தான் இந்த காதல். அவோளுக்கு யாருமேலயும் காதல் வரலை, என்ன பாக்கும்வர” என்று சற்றே கர்வமாய் கூறியவன், நண்பன் தோள் சாய்ந்து, “காதலிக்கலாமானு கேட்டாலே. காதலிச்சு கல்யாணம் முடிப்பமானு கேட்டா. ஒருமாதிரி என்னமோ பண்ணிடுச்சுலே அந்தக் கேள்வி” என்க,


நண்பன் தோளைத் தட்டிக் கொடுத்தான்.


“அவ்ளோ ஆசலே அவ கண்ணுல. இப்பத யோசிச்சா ஒருமாதிரி பெருமையாருக்கு. அவோ மொத்த காதலும் எனக்குதேம். அவோ என்ன விரும்புதானு நெனக்க அப்புடி இருக்குது” என்று உற்சாகமாய் வளவன் கூற,


“ஆனா மாப்ள. ஒன்னு புரிஞ்சுகிடனும் நீ. காதலுல ஜெயிக்குறது கல்யாணம் கட்டுறதுல இல்ல. அதுக்கு பொறவு வாழுற வாழ்க்கைலதான் இருக்கு” என்று அமைதியான குரலில் வேலு கூறினான்.


வளவன் நண்பனின் தீவிரக் குரலில் நிமிர்ந்து அமர, “தெய்வா அத்தைக்கு கண்ணாலத்துல விருப்பமில்ல. மொத தடுக்கனும்முனு அத்தை நெனக்கல. தப்புதேம். அத்தே அவுகட்ட பேசின விதம் தப்புதேம். ஆனா கல்யாணத்த நிறுத்த யோசிக்கல. அந்த புள்ள அப்பா நிறுத்திபுடுவோமுனு சொன்னது அவிய ஈகோவ தட்டிவிட்டு பிடியா நின்னுட்டாவ. மாமா இதபத்தி மூச்சவிடாதீயனு சொன்ன பொறவுதேம் அத்தே அமைதியாச்சே தவிர இப்பவும் விருப்பமில்லதேம். போதாத குறைக்கு திரி மைணி வேற. மைணிக்கும் என்னமோ உன் ஆளு குடும்பமினா ஆவல. தப்பா நினைச்சுகிடாதலே. ரெண்டேருமா சேந்து ஒன்னுத்த எதுத்தா முன்னுக்க நிக்குறவோ அம்புட்டுக்கு வருந்தனும். அந்த புள்ளைய என்னமாது பேசத்தான் செய்வாவ” என்றான்.


“என்னலே என்னென்னமோ சொல்லுத?” என்ற திருமாவளவனுக்கே ஒரு நொடி பயம் வரத்தான் செய்தது. நண்பன் கூறும் வார்த்தைகள் யாவும் சத்திய வார்த்தைகள் தான். காதல் போதையில் இருந்தவன் இது பற்றியெல்லாம் யோசித்திருக்கவில்லை. தற்போது நண்பன் கூறுகையில் சற்றே பயமாகத்தான் இருந்தது. அவளை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டுமே என்ற தவிப்புதான் அந்த பயமும்.


“உன்னைய பயங்காட்ட சொல்லலலே. நடக்கும்முனு குறிப்பு சொல்லுதேம். என்னமாது பேசுவாவ. அது அப்புராணியாருக்கு. பொறந்த வீட்டுலயே வாயக்காட்ட தெரியாத புள்ள இங்கன ஒன்னுத்தியும் பேசாது மாப்ள. உன்னய கட்டிகிட்டா போதுமுனு அது ஆசப்படுறத, ஒத்த மொலம் பூவ நீ குடுத்து அது முகம் செவக்கையிலயே படமாச்சு. கட்டிகிட்ட பொறவும் அந்த சிரிப்புல குறையிருந்துடக்கூடாதுல? அனுசரிச்சு போ. குடும்பஸ்தனா மாறிபுட்டா, வீட்டு பொம்பளைக அம்புட்டு பேரையும் அனுசரிச்சு போவ தெரிஞ்சுக்கணும். கூட பொறக்குற அக்கா தங்கச்சீய எண்ணமே எகன மொகனயாதேம்‌ இருக்கும். என்ன, நம்ம அக்கா, நம்ம தங்கச்சினு யாரோ ஒருத்தரு விட்டுகுடுத்து போவாவ. வேற வேற சூழலுல வளந்த பொம்ளைங்க ஒட்டுக்கா கூடுற வீட்டுல ஒடக்கு வரத்தான் செய்யும். எல்லாத்துலயும் தலைய குடுத்து நாட்டாமையும் பண்ணக்கூடாது. எதுலயும் தலையிடாத தாந்தோனித்தனமாவும் சுத்தக்கூடாது. புரிஞ்சு இருந்துகிடனும்லே” என்று வடிவேலு நீளமாய் பேச, திருமாவளவன் அமைதியாய் கேட்டுக் கொண்டான்.


அவனது முகத்தில் தோன்றிய குழப்பம் மற்றும் யோசனை ரேகைகள் கண்ட வேலுவிற்கு, நல்ல மனநிலையில் இருந்த நண்பனின் மனதை பயம் கொள்ள வைத்துவிட்டோமோ? என்று தோன்றியதுதான். ஆனால் இதையெல்லாம் நண்பன் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. அவன் வாழ்வு சிறக்க அனைத்தையும் அவன் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவற்றைப் பேசியிருந்தான்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02