திருப்பம்-18

 திருப்பம்-18



குழம்பிய முகத்துடன் இருக்கும் வளவனைப் பார்த்து “மாப்ளே” என்று வேலு அழைக்க, மீண்டும் நண்பன் மடியில் சாய்ந்தவன், 


“சமாளிச்சுபுடுவேனா மாப்ள?” என்று கேட்டான்.


“முன்ன பின்ன செத்தாதேம் சுடுகாட்டுக்கு வழி தெரியும்டா. ஆனா ஏற்கனவே செத்துபோனவேன் இருப்பியான் பாரு. அவனுக்கு அனுபவம் உண்டு” என்று வேலு கூற,


“என்னம்லே பேசுத?” என்று புரியாமல் கேட்டான்.


“ஓன் ரெட்டக்கதிர புடி. குடும்பஸ்தன் அவதாரத்துல அவியளுக்கு எக்ஸ்பீரியன்ஸு சாஸ்தி. நாலு டிப்ஸு கேட்டா சொல்லித்தரப்போறியான்” என்று வடிவேலு கேலியாய் கூற,


“ஏம்லே?” என்று, வளவன் வாய்விட்டு சிரித்தான்.


சில நிமிடங்கள் அங்கு சிரிப்பொலியே பரவியது. சிரிப்பு ஓய்ந்த பின் நண்பன் தோள் தட்டியவன், “எல்லாம் சமாளிச்சுகிடுவலே. அந்த புள்ளைய உனக்கு புடிச்சுருக்குத்தான?” என்று கேட்க,


“என்னம்லே கேள்வியிது?” என்றான்.


“ம்ம்.. பொறவென்ன? உண்மையான நேசத்துக்கு வழிகாட்ட தெரியும்ல? அது உங்க வாழ்க்கைய நல்லபடியா கொண்டோவும்” என்று வடிவேலு கூற,


மென்மையாய் புன்னகைத்துக் கொண்டான்.


சிலநிமிட மௌனத்திற்குப் பின், “கோம்பத்தனமா பேசினாலும் பல நேரத்துல பெரிய மனுஷனாயிடுதலே” என்று வளவன் கூற,


“இஞ்சார்ரா. வஞ்சப்புகழ்ச்சி அணியாக்கும்?” என்று தானும் சிரித்து நண்பனையும் சிரிக்க வைத்தான்.


“விக்ரமுக்கடுத்து உங்கிட்டத்தாம்லே அம்புட்டயும் மனசுவிட்டு பேசமுடியுது” என்று வளவன் கூற,


“அப்பறம் உங்க சம்சாரம் வந்துபுட்டா நாங்கெல்லாம் தெரியமாட்டோம்டி மாப்ளோய்” என்றான்.


“அப்புடியில்ல மாப்ள. இந்த ஒலகத்துல யாராலயும் அம்புட்டு கஸ்டத்தயும் ஒரே மக்காகிட்ட பகிர முடியாது. இந்தா விக்ரம் இருக்கியான். சில கடவிய (ரகசியத்தை) அவனால மைணிட்ட மட்டுந்தேன் பேசிகிட, சொல்லிகிட முடியும். சிலத அவியட்டயும் சொல்லிக்க முடியாது. அவுக சங்கடப்படுவாவோ, வருந்துவாவோனு கூட மறைக்கலாம். அத மனசுக்குள்ளாற வச்சுகிட முடியாம அவேன் உன்டயோ என்டயோ சொல்லலாம். நீயு எங்கூட கூட்டா சுத்துத. உன்னாலகூட எங்கிட்ட சொல்ல முடியாத என்னத்தையாது அவேன்ட சொல்ல முடிஞ்சுருக்கலாம். இது இயல்புலே. எல்லா நேரமும் அம்புட்டையும் ஒருத்தகட்ட மட்டுமே சொல்லிகிட முடியாது. அதேன் ஆண்டவன் அம்மா ஐயா அண்ணே தம்பி பொண்டாட்டி 

கூட்டுகாரன்னு இம்புட்டு ஒறவு தாரியான்” என்று வளவன் கூற,


தன் காதல் விடயத்தை தன் நண்பனிடம் கூறாமல் இருக்கின்றோமே என இத்தனை நாள் அவன் மனதில் அழுத்திய பாரம் சற்றே குறைந்தது.


'ஆமாதான? இது இயல்புதான?’ என்று வேலுவிற்குமே தோன்றியது.


“சரிதேம்லே” என்று வேலு கூற,


“ம்ம்” என்று பெருமூச்சு விட்டான்.


“பொறவென்ன மாப்ள? வீட்டுக்கு போறத்தான? இல்ல இந்த கைத்து கட்டிலுலயே மல்லாந்து நந்தியோட கனா காணபோறியா?” என்று வேலு கேட்க,


“அவகூட உக்காந்து விட்டத்துல நிலா நச்சத்திரத்த ரசிக்க வேண்டியது. ஓங்கூட இருக்கியேம்..” என்று புலம்பினான்.


“நாங்கூடதாம்லே ஆளு கூட இருக்க வேண்டியது. ஓங்கூட இந்த கொண்டாலும் படுத்து கெடக்கேம்” என்று வடிவேலு கூற,


வளவன் வாய்விட்டு சிரித்தான்.


ஒருவருக்கு ஒருவர் சிரித்து, அனுசரித்து, அக்கறை கொண்டு, அறிவுரை கூறிக் கொள்ளும் ஆரோக்கிய உறவில் தான் எத்தனை பலம் உள்ளது? என்பதை அந்த பொழுது அவர்களுக்கு உணர்த்திவிட்டு, அர்த்தமுள்ள பொழுதாய் கடக்க, அதை அனுபவித்து திருப்தியுற்றோரும் வீட்டை நோக்கிச் சென்றனர்.


அழகிய மதிய வேளையது. தற்செயலாக ஒரு வேலை விடயமாக விக்ரம் சங்கமித்ராவின் வீட்டுப் பக்கம் செல்லவுள்ளதைக் கூற,


“லே பூ வாங்கிதாரேம் குடுத்துட்டுப் போயேன்” என்று பிடறி முடியைக் கோதிக் கொண்டு சற்றே வெட்கத்துடனும் சங்கோஜத்துடனும் தான் கேட்டான், திருமாவளவன்.


அவளுக்காக, தனக்கு தோன்றும்போதெல்லாம் கனகாம்பரப் பூ வாங்கிக் கொடுத்துவிடுவதை வலமையாக வைத்திருந்தான்.


முடிந்தால், தானே சென்று அவள் வண்டியில் வைத்துவிட்டு வருவான். இல்லையேல் நண்பனிடம் கொடுத்து அனுப்புவான். தற்போது தன் இரட்டையன் அவ்விடம் செல்லவிருக்கவும் கேட்டுவிட்டான்.


“அதெல்லாம் நீ தரனும்லே” என்று விக்ரம் அட்டகாசமாய் சிரிக்க,


“ஏம்லே நீ வேற. அவேம் போனாகூட வண்டிலதேம் வச்சுட்டு வருவியான். இல்லனா நான் போய் குடுத்தாந்துட்டு வருவேம்” என்று வடிவேலு கூறினான்.


“அடங்கொக்கா மொக்கா” என்று விக்ரம் கூற,


“இஞ்சார்ரா நளி அடிக்காதீய” என்று கூறினான்.


“ஏம்லே நீ தரமாட்ற” என்று விக்ரம் கேட்க,


“அது அப்டிதாம்லே. நீ போய் தருவியா மாட்டியா?” என்று கேட்டான்.


“நீ சொல்லுலே போதேம்” என்ற விக்ரம் அவனை விடுவதாக இல்லை.


"அது தெரிலலே. அப்படித்தேம். நானா போய் குடுக்க முடியாட்ட கூட அவளுக்கு குடுக்கேன்ல? அது ஒருமாதிரி. லவ் பண்ணிகிடுதவ நேரடியா பேசிகிடாட்டியும் இப்படி சின்ன தொடர்புல கடத்துவாவோல்ல காதல? அப்புடி” என்று கூறுவதற்குள் தான் அந்த ஆறடி ஆண்மகனுக்கு எத்தனை தடுமாற்றம்.


காதல் காளையையும் குழந்தையாய் மாற்றிவிடும் என்பது சத்தியம் தான் என்பதை அவன் முகம் கண்டு புரிந்துகொண்டனர் இருவரும்.


தன் இரட்டையன் தோள் தட்டிய விக்ரம், “அம்புட்டு புடிச்சுடுச்சாலே அந்த புள்ளைய?” என்று கேட்க,


“என்ன சேதி ஓடுது இங்கன?” என்றபடி மகாதேவன் வந்தார்.


“வாங்க வாங்க அத்தான். நீங்கதேம் பாக்கி” என்று விக்ரம் சிரிக்க,


'அய்யோ கூட்டு சேந்துட்டாவளே’ என்று மனதோடு செல்லமாய் வெட்கம் கொண்டான் வளவன்.


“எல்லாம் நம்ம வளவனோட லவ்ஸ பத்திதேம் அண்ணே” என்று வடிவேல் கேலி செய்ய,


“இஞ்சார்ரா” என்று மகாதேவன் சிரித்தார்.


“அத்தான் உங்களுது லவ் கம் அரேஞ்சு தான?” என்று வளவன் கேட்க,


“இஞ்சார்லே என்னத்துக்கு இப்ப அத கேக்குறவ?” என்று கேட்ட மகாதேவன் முகத்தில் சொல்லில் வடிக்க இயலாத பிரகாசம்.


“சும்மா சொல்லுவண்ணே. கத கேக்கத்தான? இன்னும் தங்கபுள்ள சோறாக்கல. அதுவர கேப்போமின்ன?” என்று வடிவேலு கூற,


“ஒனக்கு கத கேக்க நான் என் காதல் கதேய சொல்லனுமாக்கும்?” என்று கேட்டபோதும் அவனுக்குப் புன்னகை குறையவில்லை.


திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் ஈன்ற பிறகும், காதலைப் பற்றிப் பேசுகையில் அவன் முகம் பிரகாசிப்பதே அவர்கள் வாழ்வின் திருப்தியை உணர்த்தியது.


“அட சும்மா சொல்லுவ அத்தான்” என்று வளவனும் கேட்க,


அதில் சிரித்துக் கொண்டவன், “அதெல்லாம் ஒரு ஃபீலுலே” என்கவும், ஆண்கள் மூவரும், “ஓஓஓ” என்று கோரஸ் போட்டனர்.


“லேய்” என்று சிரித்தவன், “இங்கன உங்க ரப்பர் தோட்டம் வாங்கிப் போடத்தான் பாத்தேம். ஆனா மாமா அந்தத் தோட்டம் அவியளுக்கு புகுந்தூட்டு சீரா வந்ததுனு விக்கவே மாட்டேனுட்டாவ” என்க,


“இஞ்சார்ரா, மாமாவுக்கு புகுந்தூட்டு சீர கூட விக்க மனசில்லயாக்கும்? அங்கனயும் ஏதோ லவ்ஸு ஓடிருக்கும் போலாட்டு” என்று வடிவேலு கேலி செய்தான்.


அதில் அனைவரும் கலகலவென சிரிக்க, 


“அத்தான கதையச் சொல்ல விடுவலே” என்று விக்ரமன் கூறினான்.


தானும் சிரித்து ஓய்ந்த மகாதேவன், “சரி ரப்பரு தோட்டத்தத்தான் விக்க மாட்டீய. நான் பேக்டரி ஆரமிச்சுடுதேம், எனக்கு பிஸ்நஸ் பாட்னரா இருந்துகிடுவ, தோட்டத்துலருந்து எடுக்குற ரப்பர எனக்கு குடுக்க போவ வெளிய வித்துகிடுங்கனு சொன்னேம். சரினு ஒத்துக்கிட்டாவ” என்று கூற,


“ம்ம்.. பிஸ்நஸ் பார்ட்னரா வந்து லைஃப் பாட்னரா எங்க அக்காவ ஆட்டய போட்டுகிட்டீய” என்று வளவன் கேட்டான்.


மீண்டும் அனைவரும் சிரிக்க, “ஏம்லே? போலே அங்கிட்டு. நான் போறியேன்” என்று எழுந்து செல்லப்பார்த்த மகாவைப் பிடித்து அமர்த்தி சமாதானம் செய்து கதையைத் தொடரச் செய்தனர்.


“பொறவு அடிக்கடித்தான் வீட்டுக்கு வார போக இருந்தேனே? உங்கக்கா மேலு படிப்பு படிச்சு முடிக்குற வயசுலருந்தா அப்பத. வார போக இருக்கையில தோ அந்த தூணுகிட்டத்தேம் உக்காந்து படிச்சுகிட்டு இருப்பா. நான் வந்தேன்னா வாங்க ரப்பர் சார்னு நளியடிச்சுட்டே மாமாவ கூப்பிடுவா” என்று புன்னகை முகமாய் மகாதேவன் கூற,


“நளியடிச்சதுல இப்படி பலியாயிட்டீயலே?” என்று விக்ரமன் சிரித்தான்.


“ஆமாலே. காதலும் ஒருவகையில பலிதேம். உனக்குள்ள இருக்குற ஈகோ, கெட்ட எண்ணம், வேண்டாத சவகாசம்னு அம்புட்டயும் பலி குடுக்க வச்சுபுடும், நீ காதலிக்குறவக உன் வாழ்க்கைக்கு சரியான ஆளா இருந்தா” என்ற மகா, “அப்படி வார, போக, பாக்க, அவ நளியடிக்க, பதிலுக்கு நான் நளியடிக்கனு அது ஒருமாதிரி நல்லாதேம் போவும். ஒருநா உங்கக்கா மொவமே வாட்டமாருந்துச்சு. எப்பவும் நான் வந்தா வாயிக்கு வாயி பேசுறவ அன்னிக்கு மூச்சு காட்டாம கிடந்தா. இந்த பொடிப்பயதேம் நான் வந்தத பாத்து மாமாவ கூப்பிட்டான்” என்று விக்ரமன் தோளில் தட்டினான்.


“அப்றம் தான் தெரிஞ்சுது மாமா அவோளுக்கு பொண்ணு பாத்துகிட்டு இருக்காவனு. நேரமெல்லாம் கூட்டாம அப்பதே கேட்டுபுட்டேம். எனக்கு புடிச்சுருக்கு கட்டித்தரீயளானு” என்று மகா கூற,


“போடு” என்று அனைவரும் குதுகலமாய் கத்தினர்.


“உங்கக்கா அப்படியே வெறையலா முழிச்சுது. ஆனாலே அவோ கண்ணுல ஒரு இது தெரிஞ்சுது” என்று மகா கூற,


“ஒரு எது தெரிஞ்சுதுங்கண்ணே?” என்று வடிவேலு கேட்டான்.


“ஒரு நிம்மதிலே. அம்புட்டு நேரத்துக்கு சோவமா இருந்தவ அந்த கேள்வியில அரண்டு போனதென்னவோ மொகத்த பாத்தாளே புரிஞ்சுகிடும். ஆனா அவ கண்ணுல ஒரு எதிர்ப்பார்ப்பு இருந்துச்சுலே. சரி அவோளுக்கும் புடிச்சுருக்குதுனு புரிஞ்சுது. மாமாட்ட அதையெதையும் காட்டிக்கிடாம நான் பேசினேம். ரோசனை பண்ணி சொல்றேன்னு சொன்னாவ” என்று அவன் கூற,


“பொறவென்ன? டும் டும் டும் தான்” என்று வளவன் கூறினான்.


“கட்டிக்கிட்டு அவோள கூட்டி வாரயில அப்புடி இருந்துச்சுலே… என்னத்தயோ சாதிச்சு தங்கப்பதக்கம் வாங்கின கணக்கா உள்ளாற ஜிவ்வுனுருந்துச்சு” என்று மகா கூற,


“பொறவு டெய்லி லவ்ஸா அண்ணே? மைணி சண்டலாம் போடுவாவளா?” என்று வடிவேல் கேட்டான்.


விக்ரமனும் மகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு வெடி சிரிப்பு சிரிக்க,


“என்னத்தக் கேட்டுப்புட்டேம்னு இப்புடி சிரிக்கீய?” என்று வடிவேல் கேட்டான்.


“ஒடக்கில்லாத வாழ்க்க எங்கனடே இருக்கும்? அதெல்லாம் கோவம்முனா அறுப்பித் தல்லிடுவா. வட்டலு சிப்பலு குத்துப்போணியெல்லாம் உருலும்” என்று மகா கூற,


ஆடவர்கள் மூவரும் வாய்விட்டு சிரித்தனர்.


“ஆனா எம்புட்டு ஒடக்குனாலும் அடிச்சமா அணச்சமானு முடிச்சுடும். அதெல்லாம் தீபு ரோசிக்கவே ரோசிக்காது. ஒடக்கிழுத்தது நானாருந்தாலுஞ் சரி, அவோளாருந்தாலுஞ்சரி.. அவளே வந்து மன்னிப்புக் கேட்டு முடிச்சுடும்” என்று மனைவியை நினைத்துக் காதலும் பெருமிதமுமாய் மகா கூற,


“அண்ணே ட்ரீம்ஸ் மோடுக்குப் போயிட்டாவ போல. கனவுலயே டூயட்டுதேம்” என்று கூறிய வடிவேல் கலகலவென்று சிரிக்கவும், “டூயட்டுல வட்டிலு பறக்கோ சிப்பலு பறக்கோ?” என்று வளவனும் சிரித்தான்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02