திருப்பம்-19
திருப்பம்-19
அட்டகாசமான சிரிப்பலைத் தொடர,
அங்கு வந்த தீபிகா, “என்னலே இங்கன இம்புட்டு அனக்கம்? ஏங்க புள்ளையல கூட்டு வரனும் சீக்கிரம் வாங்கனு சொன்னேம் தான?” என்று சத்தம் போட்டாள்.
“அய்யோ மறந்துட்டேம்டா. இந்த பயலுவோதேம் புடிச்சு வச்சுட்டானுவ. அர நாளுனு மறத்துபோச்சுது” என்று அவன் கூற,
“நல்லா மறந்தீய. நானே கூட்டிகிட்டு வந்துட்டேம்” என்று கோபமாய் கூறினாள்.
“அட என்னக்கா ரப்பர் சார திட்டுத? பாவமில்ல அவிய?” என்று விக்ரம் கூற,
அதிர்வாய் தன் கணவனைப் பார்த்தாள்.
அதில் இதழ் மடித்து சிரித்த மகா, “சும்மாருக்கியளே ஒங்க கதைய சொல்லுவனு கேட்டானுவோ” என்று இழுக்க,
'ஆண்டவா' என்று உள்ளுக்குள் செல்லமாய் சிணுங்கி வெட்கம் கொண்டவள், “வேல சோலி இல்லியாலே உங்குளுக்குலாம்? போங்கலே” என்று மூவரையும் அதட்டினாள்.
“லே சும்மாருங்கலே. மைணிக்கு வெக்கம் வந்துடுச்சு” என்று வடிவேலு கூற,
“அடிங் ஓடுடா படவா” என்று கை ஓங்கினாள்.
அதில் சிரித்துக் கொண்டே மூவரும் வெளியே செல்ல,
“என்ன வேல பாக்கீய? நளி அடிச்சே கொல்லுவானுவ” என்று கணவனிடம் செல்லக் கோபம் கொண்டாள்.
“சும்மா சொல்லாத தீபு. இந்த கன்னமெல்லாம் செவ செவனு மின்னுலியாக்கும்?” என்று மகா தானும் மனைவியைக் கேலி செய்ய,
“அதுசரி. புள்ள இல்லாத வீட்டுல கெழவன் துள்ளி எழுந்தானாம். அங்கனக்குள்ள நம்ம புள்ளையல விட்டுபோட்டு இங்கன விருந்து கேக்குதோ?” என்று கூறினாள்.
“ஆருடி கெழவன்? புள்ளைய வந்துட்டா ஆசையிருக்கக்கூடாதாக்கும்?” என்று மகா கேட்க,
“அய்யோ என்ன பேச்சு நடு கூடத்துல வச்சு?” என்று முற்றிலும் நாணம் கொண்டு கூறினாள்.
“அப்ப நடைக்கு(வாசற்படி/ தின்னை) போயி பேசுவமா?” என்று அவன் கேட்க,
“கொழுப்பு கூடிப்போச்சுது. இவனுவல சொல்லனும்” என்று திட்டிவிட்டு சமையலறைக்குள் சென்றாள்.
வெளியே, “விக்ரம் போவியாலே?” என்று வளவன் கேட்க,
“ஒடம்பொறந்து போயிட்ட. என்ன செய்ய? குடு போயி வாரேம்” என்றான்.
அதன்படியே சென்று தலைகவசத்தில் தன் முகம் மறைத்து அவள் வீட்டு வாசலில் காத்திருந்தான் விக்ரம்.
வேலை முடித்து வீட்டிற்கு வந்தவள் வீட்டு வாசலில் குரியர் காரர் போல் நின்றிருக்கும் ஆணைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டபடி வண்டியை நிறுத்தினாள்.
“உங்களுக்கு குரியர்” என்ற குரல் கேட்க,
திடுக்கிட்டு வண்டியை விட்டு எழுந்தவள் திருதிருவென விழிக்க,
வந்த சிரிப்பை சிரமப்பட்டு அடக்கியபடி, “தம்பியா போயிட்டியான். குரியர் வேலையும் பாத்து குடுக்கத்தான?” என்று கேட்டது நம் திருவிக்ரமனே தான்.
பெண்ணவளுக்கு பெரும் சங்கடம் சூழ்ந்துக் கொண்டது. 'என்ன இவங்க இப்படி பண்றாங்க? அத்தானப்போய்' என்று அவள் சங்கடத்துடன் நெளிய,
“என்னமா? ஏன் சங்கடப்படுத? அவேம் என் ஒடம் பெறந்தவன். ம்ஹும்.. ஏம் ஒடனே பொறந்தவேம். அவேனோட சந்தோசத்துக்காவ செய்யுற எதுலயும் நான் சங்கடப்படல. என்னைய குடுக்க சொல்லிடியானேனு வெசனப்படாத. என்னிய ஓம் அண்ணேனபோல நெனச்சுகிடுனு சொல்ல முடியல. என் தம்பிக்கு சம்சாரமாவப்போறவ. வேண்ணா ஓங் கூட்டுகாரணா நெனச்சுகிடேம்” என்று கூறினான்.
'மாமா முத்து முத்தா தான் புள்ளைகள பெத்து போட்டிருக்காரு போல. எவ்வளவு அழகான தெரிவு செய்த வார்த்தைகளில் பேசி என் சங்கடம் போக்குறாரு' என்று வியப்பாய் அவள் நினைக்க,
அவளுக்குத் தன் மொழிநடை புரியவில்லையோ என்ற எண்ணத்தில், “புரியிலியாமா? பிரெண்டா பாத்துகிடுனு சொன்னியேம்” என்றான்.
“அச்..அச்சோ அதெல்லாம் புரியுது அத்தான்” என்று அவள் கூற,
புன்னகையாய் பூ பொட்டலத்தைக் கொடுத்தான்.
அதை வாங்கிக் கொண்டவள், “தேங்ஸ் அத்தான்” என்க,
“நீ ஏதும் தரிலியா?” என்று கேட்டான்.
பெண்ணவள் புரியாது நோக்க, “அவேந்தாம்மா சொல்லிவிட்டான். குடுத்துட்டு குடுகுடுனு வந்துபுடாதடா. அவ ஏதும் தராளானு பாரு. தந்தா வாங்கிட்டு வானு சொன்னியான்” என்று அடக்கப்பட்ட சிரிப்போடு கூறினான்.
'அச்சோ. மானத்த வாங்குறாரு' என்று வெட்கம் கொண்டு அவள் தலை கவிழ, விக்ரம் சிரித்தேவிட்டான்.
“அத்தான்..” என்று சங்கோஜமாய் அவள் விழிக்க,
“சாரி சாரி மா” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
தனது பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து, “ஒரு நிமிஷம்” என்றபடி வீட்டினுள் சென்றவள் வாசல் தோட்டத்தில் இருக்கும் சங்குப்பூ செடியிலிருந்து ஒரு மலரைப் பிடுங்கி அதனுள் போட்டுவிட்டுக் கொடுத்தாள்.
புன்னகையாய் வாங்கிக் கொண்டவன், “என் தம்பிய நல்லா பாத்துகிடு புள்ள. உம்மேல உசுரா இருக்கியான்” என்று கூற,
புன்னகையாய் தலையசைத்தாள்.
“வாரேம்மா” என்று அவன் செல்ல,
அவனை வழியனுப்பி விட்டு வீட்டினுள் சென்றாள்.
கையில் பூ பொட்டலத்துடன் வரும் மகளைக் கண்டு, “ஏது சங்கு பூ?” என்று தாட்சாயணி கேட்க,
“அ..அம்மா” என்று முதலில் தடுமாறினாள்.
பின், “அ..அவங்க வீட்லருந்து குடுத்து விட்டிருக்காங்கமா” என்று அவள் கூற,
“உன் மாமியாரா?” என்று ஆச்சரியம் கொண்டு கேட்டார்.
“ஆமா ம்மா” என்று அவளும் அவசரத்துக்குக் கூறியிருக்க, தாட்சாயணிக்கு மனம் குளிர்ந்தது.
“பரவால்லயே சங்கு. இவ்வளவு பிரச்சினைக்கு அப்பறமும் வரப்போற மருமகனு உனக்குப் பூ குடுத்துருக்காங்களே? அப்பாட்ட சொல்லுடி. ரொம்ப சந்தோஷப்படுவாரு. முதல்ல போய் முகம் கைகால் கழுவிட்டு வா. வச்சு விடுறேன்” என்று மகளை அவர் அவசரப்படுத்த,
புன்னகையாய் அறைக்குள் சென்றவள், ‘சில பொய்கள் கூட நல்லதுக்குதான் போல’ என்று எண்ணிக் கொண்டாள்.
சென்று புத்துணர்வு பெற்று வந்தவளுக்கு தாட்சாயணி பூவை சூடிக் கொண்டிருக்க, வேலை முடித்து வீட்டிற்கு வந்த சச்சிதானந்தம், “என்ன தாட்சா. பொண்ணுக்கு பூவலங்காரம் பலமாருக்கு?” என்று கேட்டார்.
“இல்லாம என்ன? அவ மாமியார் கொடுத்தனுப்புன பூவாச்சே?” என்று தாட்சாயணி சந்தோஷமாய் கூற,
சச்சிதானந்தமும் ஆச்சரியமாய் பார்த்தபடி, “நெஜமாவா?” என்று கேட்டார்.
“ஆமாங்க. அவங்கதான் குடுத்துவிட்டிருக்காங்க. உங்கப்பா நம்ப மாட்டாரு. சொல்லேன்டி” என்று தாட்சா மகளின் தோள் தட்ட,
“ஆமா ப்பா” என்று அவளும் கூறினாள்.
“சந்தோஷம்மா” என்று அவர் கூற,
“இதெல்லாம் அத்தைகிட்ட கேட்டுட்டு இருக்காதீங்கம்மா” என்றாள்.
“ஏன்டி?” என்று தாட்சாயணி புரியாது கேட்க,
'என் குட்டு விளங்கிடாம இருக்கனுமே' என்று உள்ளுக்குள் கூறிக் கொண்டவள், “அ.. அவங்க பாசமிருந்தாலும் அவ்வளவா வெளிய காட்டிக்க மாட்டாங்கலாம் ம்மா. நீங்க பாட்டுக்கு கேட்டு அவங்களுக்கு அது ஒருமாதிரி ஆயிடப்போகுது” என்று கூறினாள்.
“பாத்தீங்களாங்க? உங்க மக ரொம்ப பெரிய மனுஷியாகிட்டா” என்று தாட்சாயணி மகளுக்கு நெற்றி வழித்து திருஷ்டி எடுக்க, சச்சிதானந்தம் புன்னகைத்துவிட்டுச் சென்றார்.
மிகுந்த சந்தோஷத்துடன் இரவு பொழுதை முடித்துவிட்டு அறைக்குத் திரும்பியவள், சில நிமிடங்களை பொழுதுபோக்கு செயலிகளில் கழித்துக் கொண்டிருந்தாள்.
அழகாய் வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டு ஒரு பரிசு பொருள் செய்யும் காணொளியைக் கண்டாள்.
ஒரு அட்டையில் வண்ணம் தீட்டி, அதில் இரு பொம்மைகள் கைகோர்த்திருக்கும்படி வரைந்திருந்து, சுற்றி காகிதப் பூக்களை ஒட்டவைத்து, அந்த ஜோடியின் பெயரையும் மேலே ஒட்டி வைத்து சுற்றி சின்னச் சின்ன வண்ண விளக்குகளையும் ஒட்ட வைத்திருப்பதைப் போன்றிருந்தது.
சின்ன வயதிலிருந்தே சங்கமித்ராவிற்கு கலை பொருட்கள் செய்வதில் அதிக ஆர்வம் உண்டு. தேவையான பொருட்கள் பெரும்பாலும் அவளது பெட்டியில் இருக்கும்.
இக்காணொளியைக் கண்டதும் அதை செய்திடும் ஆர்வம் அவளுக்குள் எழுந்திட, விரைந்து எழுந்து தன்னிடம் உள்ள பொருட்களையெல்லாம் எடுத்து வைத்தாள்.
சின்ன அட்டை ஒன்றை வெட்டி எடுத்து, அதில் முழுதும் கருப்பு நிறம் தீட்டி, வெள்ளை நிறத்தில் இரு பொம்மைகள் வரைந்து, காகிதப் பூக்களைத் தனித்தனியாய் உருவாக்கி அவ்வட்டையின் ஓரங்கள் தோரும் ஒட்டி வைத்தாள்.
அடுத்து இன்னொரு அட்டையை எடுத்து அதேபோல் வண்ணம் தீட்டி, காகிதப் பூக்களை ஒட்டி நடுவே அவர்களது பெயரை அழகாய் எழுதினாள்.
இன்னொரு அட்டையிலும் இதே வேலைபாடுகள் செய்து நடுவில் காகிதத்தால் செய்த இதயத்தினை ஒட்டினாள்.
அவ்விதையம் திறக்க இயலும்படி இருக்க, அவ்விதயத்தினுள் ‘T♡S’ என்று எழுதியிருந்தாள்.
மூன்று அட்டைகளையும் வண்ணக் கயிறுகளால் ஒன்றன் கீழ் ஒன்றாக இணைத்து உருவாக்கியவள், பத்திரமாய் ஒரு குரியர் கவரினுள் வைத்தாள். தற்போது அவளுக்கு அதிகம் தேவையாகப்படுவதால் மொத்தமாகவே குரியர் கவர்களை வாங்கி வைத்திருந்தாள்.
இவற்றை முடிப்பதற்கே மணி பதினொன்றரையானது.
அறைக்கதவு தட்டும் சப்தம் கேட்டு பெண்ணவள் சென்று கதவைத் திறக்க,
“லைட்ட போட்டு வச்சுட்டு இன்னும் என்னடி பண்ற?” என்று தாட்சாயணி கேட்டார்.
“அ..அது அம்மா.. ஒரு வேலை இருந்துச்சு. அதான்” என்று தடுமாற்றத்தை மறைத்து அவள் கூற,
“சீக்கிரம் படு. மணியாச்சு. கல்யாணம் நெருங்குற நேரம். தூக்கம் முழிச்சு உடம்ப கெடுத்துக்காத” என்று கூறிவிட்டுச் சென்றார்.
அனைத்தையும் பத்திரப்படுத்திவிட்டு விளக்கை அணைத்தவள், “இத யாருகிட்ட குடுத்துவிட?” என்று யோசிக்க, “என்னமா கல்யாணப் பொண்ணு இன்னும் தூங்கலையா?” என்று கார்த்திகாவிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.
தனது இலக்கங்களைக் கொடுத்த கார்த்திகா அவ்வப்போது அவளிடம் பொதுவான நட்புறவில் பேசி கொஞ்சம் போல் நெருங்கியிருந்தாள்.
இருவருக்குமே புதிதாக பேசுவதற்கு தயக்கமாகத்தான் இருந்தது முதலில். ஆனால் சங்கமித்ரா வைக்கும் நிலைபாடுகளுக்கு கேலி செய்தே அவளுடன் ஒரு நல்ல நட்புறவை கொண்டு வந்திருந்தாள்.
“இதோ தூங்கனும் அக்கா. நீங்க தூங்கலையா?” என்று சங்கமித்ரா கேட்க,
“எங்க? நான் பெத்த மவராசி கண்ண அசராம கொட்டு கொட்டுனுல்ல முழிச்சிருக்கு” என்று புலம்பலாய் பதில் கொடுத்தாள்.
சிரிக்கும் இமோஜிகளை அனுப்பியவள், “கஷ்டம்தான் க்கா உங்க நெலம” என்று கூற,
“மாம் சோதனைகள்மா” என்றவள், “நாளைக்கு பாப்பாக்கு தடுப்பூசி போட ஹாஸ்பிடல் போறேம். உன் ஆஃபிஸ் பக்கம் தான். மீட் பண்ணுவோமா?” என்று கேட்டாள்.
ஆடு தானாக வந்து வெட்டிக்கொள் என்பதைப் போல் கார்த்திகா தானாய் வந்து சிக்கிக் கொள்ள, உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட சங்கமித்ரா, “ஓ கண்டிப்பா மீட் பண்ணலாம் அக்கா” என்றாள்.
“சரிடா. ஈவ்னிங் போலதான் வரேம். காலைல அவங்களோட வயலுக்கு போனும். கணக்கு வழக்கு பாக்க வேண்டியது நிறைய இருக்கு. ஈவ்னிங் அவங்களும் வெளிய வேலை விஷயமா போறாங்க. மோஸ்ட்லி நானும் தீபி மைணியும்தான் வருவோம். நான் வந்துட்டு உனக்கு கால் பண்றேம்” என்று கார்த்திகா கூற,
“ஓகே அக்கா” என்றாள்.
“சரிமா ரொம்ப லேட்டாச்சு. போய் தூங்கு. கல்யாணப் பொண்ணுக்கு ஹெல்த் முக்கியமில்ல?” என்று உண்மையான அக்கறையுடன் கார்த்திகா கூற,
“ஓகே அக்கா. குட் நைட்” என்றுவிட்டு படுத்துக் கொண்டாள்.
Comments
Post a Comment