திருப்பம்-20
திருப்பம்-20
அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று இறைவனைத் தரிசித்து முடித்த கார்த்திகா, தீபிகா, சங்கமித்ரா மற்றும் ஒளிசுடர் ஆகியோர் பிராகத்தில் அமர்ந்திருந்தனர்.
“பாப்பாக்கு என்னக்கா ஊசி?” என்று தன் மடியில் உறங்கிக் கொண்டிருக்கும் ஒளிசுடரை மெல்ல வருடியபடி சங்கமித்ரா கேட்க,
“ஒரு வயசுல தடுப்பூசி போடனும்லடா? அது இன்னும் போடலவேயில்ல. அதேம் போட்டு வரேம்” என்று கார்த்திகா கூறினாள்.
சரியென்று அவள் தலையசைக்க,
“வேலையெல்லாம் எப்படி போவுது மக்கா?” என்று தீபிகா அக்கறையுடன் விசாரித்தாள்.
“நல்லா போகுது அண்ணி” என்று அவள் கூற,
கார்த்திகா பக்கென்று சிரித்து வைத்தாள்.
அவள் சிரிப்பின் காரணம் புரிந்த தீபிகாவும் லேசாய் சிரிக்க, ஒன்றும் புரியாத சங்கமித்ரா திருதிருவென விழித்தாள்.
“ஒன்னுமில்லடா. நானும் அசலூரு தான். விருதுநகர் பக்கம். கல்யாணமான புதுசுல இவங்க யார் பேசுறதும் புரியாது. என்னடா பேசுறாங்கனு திருதிருனு முழிப்பேன். அண்ணினுதான் இவியளையும் மூத்தவகளையும் கூப்பிட்டேன். இவிய ஒன்னும் சொல்லல. ஆனா பெரியவக அதென்ன அண்ணினு வேத்தாலாட்டம்? ஒழுங்கா மைணினு கூப்பிடுனுட்டாங்க. பொறவு அவுகள மைணினு கூப்பிட இவியள வச்சுதான் ஒரு மாசம் பிராக்டிஸ் பண்ணேன்” என்று கார்த்திகா கூற,
தீபிகா வாய்விட்டு சிரித்தாள்.
ஆனால் சங்கமித்ராவிற்கு அவள் பேச்சில் பயம் தான் எழுந்தது. தனக்கு இந்த பாஷை புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமமாக இருந்தாலும், ஏதோ சில மாதங்களவாது இங்கே வாழ்ந்ததில் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் நிச்சயம் பேச இயலாது. எப்படி அங்கே சென்று தனது பேச்சு வழக்கை மாற்றிக் கொள்ளப் போகிறோம்? என்ற அச்சம் அவள் மனதை வந்து கவ்விக் கொண்டது.
கார்த்திகாவிற்கு அது புரியவில்லை என்றாலும் தீபிகாவிற்கு அவள் முகம் கண்டதும் புரிந்துபோனது.
அவள் தோளில் கரம் வைத்த தீபிகா, “பயப்படாத புள்ள. அக்கா மூத்தவக. அதனால கொஞ்சம் அவிய சொல்றது எடுபடனும்னு நெனப்பாவ. அதுக்காக நீ வெசனப்படுத போலயெல்லாம் வைய மாட்டாவ” என்று தன் அக்காவின் குனத்தை அவளை விட்டுக் கொடுக்காத வகையில் விளக்க,
சங்கமித்ரா பயம் நீங்கா புன்னகை ஒன்றை மட்டும் கொடுத்தாள்.
தற்போது ஆறுதல் கூறிய தீபிகா வரும் நாட்களில் அக்கா, தன் தம்பி மனைவி வாழ்வில் ஆடப்போகும் ஆட்டத்தை அறிந்திருக்கவில்லை.
“அட பயப்படாதடா. நீ அங்க வந்த பொறவு நாம சேந்து நல்லா என்ஜாய் பண்ணலாம்” என்று கார்த்திகா அவளை சமாதானம் செய்ய,
அதில் தெளிந்த புன்னகை ஒன்றை சிந்தினாள்.
சிலநிமிட பேச்சு வார்த்தைகளுக்குப் பின் அனைவரும் எழுந்து கோவிலை விட்டு வெளியே வர,
குழந்தையை வாங்கிக் கொண்ட கார்த்திகா, “சரிடா. பார்த்து போ” என்று கூறினாள்.
“நீங்க எப்படி போறீங்க க்கா?” என்று சங்கமித்ரா கேட்க,
“மகா அண்ணே வருவாங்கடா” என்று கூறினாள்.
அவள் கூறிக் கொண்டிருக்கையிலேயே, “கார்த்தி அவிய வந்துட்டாவ” என்று தீபிகா கூற,
சிறு புன்னகையுடன், “சரிடா நாங்க வரோம்” என்றாள்.
“பாத்து போடா. போயிசேந்துட்டு ஒரு வார்த்த சேதி சொல்லு” என்று தீபிகா கூற,
“சரிங்கண்ணி” என்றவள் சிறு தயக்கத்துடன் கார்த்திகாவைப் பார்த்து, “அக்கா ஒரு உதவி” என்றாள், இழுவையாய்.
“என்னது சங்கு?” என்று அவள் கேட்க,
தனது பையிலிருந்து பார்சலை எடுத்தவள் அவளையும் தீபிகாவையும் வெட்கம் பாதி தயக்கம் மீதியாய் பார்த்து, “அ..அவங்கட்ட குடுக்கனும்” என்றாள்.
“இஞ்சார்ரா.. என்னமா? நீயும் ஓன் அவங்களும் சேந்துகிட்டு என்னையும் என் அவியளையும் அமேசான் டெலிவரி மேனா மாத்திட்டு இருக்கீயலா?” என்று கேலியாய் கார்த்திகா கேட்க,
இவள் இதழ் கடித்து, “அக்கா..” என்று சிணுங்கினாள்.
கார்த்திகா தோளில் வலிக்காது தட்டிய தீபிகா, “வெளாடாத புள்ள. அவளே கூச்சபட்டுகிட்டு கேக்கா” என்று கூற, அதில் இன்னும் தான் வெட்கம் வந்தது அவளுக்கு.
சிரித்தபடி அதை வாங்கிக் கொண்ட கார்த்திகா, “குடுத்துபுடுதேம் தாயி. வெசனப்படாதுபோ” என்று கூற,
புன்னகையாய், “தேங்ஸ் க்கா” என்றாள்.
மகாவும் அவளிடம் இரு வார்த்தைகள் பேசி நலம் விசாரித்து முடிக்க, மூவரும் புறப்பட்டுச் சென்றனர்.
தானும் தன் வீடு வந்து சேர்ந்தவளுக்கு அவன் அந்த பரிசைக் கண்டு எப்படி உணர்வான் என்பதை அவன் வரிகள் வழி உணர ஆசையாய் இருந்தது.
நேரம் சிறகில்லாமல் பறக்க, இரவு வெகு தாமதமாய் வேலைகளை முடித்து மிகுந்த சோர்வுடன் வீடு வந்து சேர்ந்தான், திருமாவளவன்.
அனைவரும் உறங்க சென்றிருக்க கார்த்திகா கூடத்தில் குழந்தையை மடியில் போட்டுத் தட்டியபடி அமர்ந்திருந்தாள்.
சமையலறையிலிருந்து அவளுக்காக பாலை ஆற்றியபடி திருவிக்ரமன் வர, தூக்கம் சொக்க மகளைத் தட்டிக் கொண்டு அமர்ந்திருந்த கார்த்திகாவைப் பார்த்து, பரிவாய் சிரித்தபடி மகளைத் தான் தூக்கிக் கொண்டிருந்தான் திருமாவளவன்.
அந்த அசைவில் அவள் விழித்தெழ, “மைணி மைணி நாந்தேம்” என்று அவன் கூற,
சோபையாய் புன்னகைத்தாள்.
“போய் ஒறங்கத்தான? இப்படி திராணியில்லாம தூங்கி விழனுமா?” என்று மெல்லிய குரலில் கேட்டவன், “ஏம்லே புள்ளைய நீ வச்சுகிட்டு மைணிய ஒறங்கச்சொல்லத்தான?” என்று விக்ரமிடம் கேட்க,
“சரிதாம்லே. நீ சொல்லுவ” என்றவன் அவளிடம் பாலை நீட்டினான்.
அதில் புன்னகைத்தவள், “சும்மாருங்க கொழுந்தரே. அவியதான் இம்புட்டு நேரம் வச்சுருந்தாவ” என்று கூற,
“அதேம் பொங்குறானாக்கும்?” என்றவன், “ஊசி போட்டாச்சா?” என்று குழந்தையின் கையில் பார்த்தபடிக் கேட்டான்.
“ம்ம் போட்டாச்சு” என்று அவள் கூற,
“அழுதாளாடி ரொம்ப?” என்று விக்ரமன் கேட்டான்.
“ஊசி போட்டா சிரிப்பாவளா? அழத்தான் செய்வா” என்று கார்த்திகா கூற,
“ப்ச். அழுவானு தெரியாதா? ரொம்ப தவிச்சுதோ புள்ளனு கேட்டேம்” என்றான்.
“ஆமா ஆமா. தவிச்சு போறாவ” என்று நொடித்துக் கொண்ட கார்த்திகா பாலைக் குடிக்க,
“ஒனக்கு பொறாமத்தான்” என்றான்.
முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டவள், “ஆமாங்கேம். இப்ப என்ன?” என்க,
இவர்கள் செல்ல சண்டையை அழகிய புன்னகையுடன் வேடிக்கைப் பார்த்து நின்றான் வளவன்.
“கொழுப்பெடுத்தவ” என்றவன், “சாப்டியாலே? ஒனக்கு போடத்தான் அம்மா உக்காந்துருந்தாவ. பொறவு இவதேம் அவியள போவச்சொல்லிட்டு வந்து உக்காந்தா” என்று கூற,
“ஏம்மைணி? நான் போட்டுக்க மாட்டியனா?” என்று கேட்டான்.
“அதெல்லாம் நீங்க போட்டுப்பீய கொழுந்தரே. ஆனா உங்கட்ட நான் ஆத்த வேண்டிய கடமனு ஒன்னுருக்குல?” என்று கார்த்திகா சூசகமாய் கூற,
“என்னது மைணி?” என்று புரியாமல் கேட்டான்.
தனக்கு அருகே உள்ள பையை எடுத்து அதிலிருந்து குரியர் கவரை அவள் நீட்ட, விழிகளில் மின்னல் தெரிக்கப் பார்த்தான்.
“என்னம்லே பெருசாருக்கு? கடிதாசிலருந்து கதையெழுத ஆரமிச்சுட்டீயலா ரெண்டேரும்?” என்று விக்ரம் கேலி செய்ய,
“ஏம்லே?” என்று சிரித்தவன், “வையுங்க எடுத்துக்குறேம்” என்றான்.
“புடிங்க புடிங்க கொழுந்தரே. உங்க அவியட்ட நான் சேதி சொல்லனும்ல?” என்று அவன் கையில் குடுத்தவள், “பாத்துகிடுங்க. இவிய ரெண்டேரும் கல்யாணத்துக்கு நம்மல நல்லா கவினிக்கனும். நாமதேம் இவியளுக்கு குரியர் சர்விஸ் வேலையெல்லாம் பாத்துருக்கோம்” என்று கணவனிடம் கூற,
“ஆமா கார்த்தி” என்று சிரித்த விக்ரமன், “கணக்கு போட்டு உங்கல்யாணத்துல காட்டுதோம் பாரு” என்றான்.
“எல்லாம் படியா செஞ்சுபுடுவோம்” என்று அமர்ந்தவன் குழந்தையைக் கொடுத்துவிட்டு அந்த கவரை வாங்கிப் பிரித்தான்.
“பாத்து கொழுந்தரே. எங்க முன்னுக்க பிரிச்சு பொறவு என்னமாது இருந்து நாங்க நளியடிக்கோம்னு கரிச்சுபுடாதீய” என்று கார்த்திகா கேலி செய்ய,
“அவோள பத்தி நல்லா தெரிஞ்சதாலதேம் இங்கனகுள்ளயே பிரிச்சு பாக்கேம் மைணி” என்று சிரித்தபடி பிரித்தான்.
அழகாய் அவள் கைவண்ணத்தில் உருவான அந்த அலங்காரப்பொருளைக் கண்டவனுக்கு அப்படியொரு சந்தோஷம். பத்து பைசா செலவில்லாது, பெரிய ஆடம்பரமில்லாத பரிசு தான் அது. ஆனால் அதற்காக அவள் எடுத்த முயற்சியும், அந்த முயற்சியை எடுக்க வைத்த அவளது நேசமும் அந்தப் பரிசில் தாங்கித் தேங்கி நிற்பது அவன் அகமெல்லாம் தித்தித்தது.
“அழகாருக்குலே” என்று விக்ரமன் கூற,
“சங்கு கைவெனபொருள் எல்லாம் சாய்வாளா? ரொம்ப அழகா பண்ணிருக்காளே?” என்று கார்த்திகாவும் கூறினாள்.
“அதென்னட்டி அந்த புள்ளய சங்கு நொங்குனுட்டுருக்க?” என்று விக்ரமன் செல்லமாய் அதட்ட,
“அவிய வீட்ல அப்படித்தேம் கூப்பிடுவாவனு அவதேம் சொன்னாங்க” என்று கூறினாள்.
இவர்கள் பேச்சு வார்த்தையெல்லாம் வளவனுக்கு காதில் விழவேயில்லை.
அவள் கொடுத்த பரிசை மென்மையாய் வருடியபடி பார்த்தவன் கண்களில் மின்னலின் ஒலியோடு பார்வையிட்டான்.
அவர்களது பெயர், இரண்டு பொம்மைகள், பெயர்களின் முதல் எழுத்து எனச் சின்னச் சின்ன அழகான மேற்கோள்கள் அவர்களது காதலுக்கு மகுடம் சூட்டியது.
“கொழுந்தரு வேற ஒலகத்துக்கு போயிட்டாருபோல. போய் சாப்பாடு போட்டு கொண்டாங்க அவியளுக்கு” என்று கார்த்திகா கூற,
“எங்கம்மா இருக்குற வரிய நானே பாக்கேம், நானே செய்யுதேனுட்டு, அவிய தூங்கப் போனதும் அதக்கொண்டாங்க இத எடுத்தாங்கனு நல்லா வேல வாங்குறட்டி” என்று கூறினான்.
“ம்க்கும்” என முகவாயைத் தோளில் இடித்தவள், “உங்கம்மா முன்னுக்கயே வேல வாங்க ஆசதேம். பொறவு உங்கம்மாவும் அக்காவும் மாநாடு நடத்தி என்னைய பொட்டிய கட்டவச்சுபுட்டா என்ன செய்ய? எகன மொகனயா பேசாம போய் சாப்பாடு போட்டு கொண்டாங்க அவியளுக்கு” என்று கூற,
சிரித்தபடியே, “வாயாடி” என்றுவிட்டுச் சென்றான்.
உணவை எடுத்து வந்த விக்ரமன், “ஏம்லே.. ரசிச்சது போதும். இந்தா. சாப்டு போய் ஒறங்கு” என்று கூற,
சிரித்தபடி அதை மீண்டும் உள் வைத்து, உணவை உண்டான்.
பேச்சும் சிரிப்புமாய் உண்டு முடித்தவன் மறக்காமல் அவள் பரிசை எடுத்துக் கொண்டு தனதறைக்கு வந்து, அதை சுவரில் இருந்த ஆணி ஒன்றிலே தொங்கவிட்டுப் புகைப்படம் எடுத்தான்.
அதைப் பார்க்கவே அவனுக்குப் பரவசமாக இருந்தது. உடனே அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பிட அலைபேசியை திறந்தவன் பின் யோசனையோடு அதை அணைத்து வைத்தான். அவன் இதழில் மென்னகை ஒன்று படர, மேஜையின் அருகே சென்று காகிதத்தைக் கையிலெடுத்தான்.
'அன்புள்ள மித்துக்கு,
ஏ மித்து. பரிசு நல்லாருக்குமா. அம்புட்டுக்கு புடிச்சுருக்கு. அழகா பண்ணிருக்கு. ஒனக்கு இதெல்லாஞ் செய்ய வருமா? ரொம்ப நல்லாருக்குனு மெசேஜ தட்டிவிடத்தேம் போனேம். ஆனா காத்துகெடக்கட்டுமேனு தோனிடுச்சு. நம்ம உணர்வ இந்த தாளுதேம் சரியா கடத்திக் கொண்டுபோவுதுல்ல? அதேம் இதுலயே எழுதி போட்டுவுடுவமுனு எழுதுறேம். வெறிச்சுட்டுருந்த வானத்துல திடுதிப்புனு மழமேகம் கூடினமாறி குளுகுளுனுதேம் இருக்குது இத சொவத்துல பாக்க. ரொம்ப அழகாருக்குமா. நன்றி' என்று எழுதி முடித்தவன் புன்னகையுடன் அதை மடித்து வைத்துவிட்டுச் சென்று படுத்தான்.
Lovely 😍😍😍😍
ReplyDelete