திருப்பம்-21

 திருப்பம்-21



அவளுக்கு பதிலளிக்காமல் படுப்பதும் அவனுக்கே சற்று அவஸ்தையாக இருக்கவும், அலைபேசியில் ஒருமுறை அவளது சுயவிவரப் புகைப்படத்தைப் பார்க்க அவன் எடுக்க, அவள் நிலைபாடு வைத்திருப்பது தெரிந்தது.


உள்ளே சென்று பார்க்க, ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி’ என்ற பாடலை வைத்திருந்தாள். பார்த்ததும் பக்கென்று சிரித்து விட்டான். “கொழுப்பெடுத்த கழுத. வாடி வா. கொழுப்பெல்லாம் அடக்கியாளுதேம்” என்று முனகியப் பின்புதான் கூறிய வார்த்தைகளின் சுவை அவன் நரம்பு மண்டலம் வழி பாய்ந்து மூளைக்குச் சென்றது.


ஒருநொடி உடல் சிலிர்த்து அடங்கியது. இதுவரையில் அவர்கள் பெரிதாக அந்தரங்கப்படிக்குள் நுழைந்து எதையும் பேசியிருக்கவில்லை. அவளது நிலையும் சங்கோஜமும் அவனுக்குப் புரிந்த ஒன்று என்பதைவிட, அவன் வளர்ந்த இடமும் சூழலும் கூட அவனுக்கு இது பற்றியெல்லாம் பேசவேண்டும் என்ற உந்துதலைக் கொடுக்கவில்லை.


தற்போது வாய் வார்த்தையாக கூறிவிட்ட ஒன்று சற்றே பரவசத்தைக் கொடுத்தது. அதில் சிரித்துக் கொண்டான். 'கொழந்தபுள்ள மெரண்டுபோவும்' என்று அவளை நினைக்கையில் இன்னும் தான் சிரிப்பு வந்தது. 


ஒரு நிமிடம் மீண்டும் கற்பனைக்குச் சென்று, அவளும் அவனும், அவளைப் போலொரு ஆண் குழந்தையும், தன்னைப் போலொரு பெண் குழந்தையும், என்று கற்பனை செய்துப் பார்த்தான்.


அத்தனை அழகாய் அமைந்தது அவன் கற்பனை. 'அவோ சின்ன புள்ளையில எப்புடி இருந்திருப்பா?’ என்று ஆர்வம் மேலிட, அதையும் அவளுக்குக் கடிதத்தில் எழுத வேண்டும் என்று மனதோடு நினைத்துக் கொண்டான்.


மேலும் ‘நீலவானம்’ பாடலில் வரும், ‘என்னைப் போலே பெண் குழந்தை, உன்னைப் போலொரு ஆண் குழந்தை’ என்ற வரியும் நினைவு வர, இணையத்தில் தேடிப் பிடித்து, அவ்வரிகள் இடம் பெற்றிருக்கும் காணொளியை எடுத்து அவளுக்கு அனுப்பிவைத்தான்.


கற்பனையில் பார்ப்பதற்கே மிகவும் அழகாய் இருந்த காட்சி நினைவில் உதிக்கையில் எப்படி இருக்கும்? என்று யோசித்தவனுக்கு உடல் சிலிர்த்து உள்ளம் பூரித்தது.


அந்த இன்பமான மனநிலையோடு அவன் உறங்கிப் போக,


அவனாலும் அவன் அனுப்பிய பாடலாலும் உறக்கம் தொலைத்தவள், “பாத்துட்டு ஒரு வார்த்தையும் சொல்லலை. லெட்டர்ல தான் குடுக்கனுமா? எப்ப லெட்டர் இங்க வந்து நான் படிக்க? சோதிப்பாருயா மனுஷன்” என்று செல்லமாய் அவனை வருத்தெடுத்தபடி படுத்தாள்.


அக்காணொளியை மீண்டும் திறந்துப் பார்த்தவள் ‘காதல் என்று பெயர் சூட்டியே காலம் தந்த சொந்தமிது’ என்ற வரிகளில் தன்னைத் தொலைத்து ரசனையில் மூழ்கினாள்.


நிஜம் தானே? இந்த காலம், கணவனாகப் போகின்றவன் என்றில்லாமல் காதல் என்ற பெயர் சூட்டியல்லவா தனக்குக் கொடுக்க விளைகிறது என்று யோசிக்கையிலேயே அவளுக்கு உள்ளம் பூரித்தது.


அதேநேரம் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. ஆனால் அதை செயலாற்றத்தான் பெரும் பிரச்சனை ஒன்று உள்ளது. அதை எப்படி சரிசெய்வதென்று யோசித்தவளுக்கு சட்டென்று ஒரு எண்ணம்.


சட்டென தனது அலைபேசியை எடுத்தவள் அவிநாஷுக்கு அழைத்துவிட்டாள். பின்பு தான் நேரத்தையே கண்டாள். 'அச்சோ சங்கு' என்று தலையில் தட்டிக் கொண்டு உடனே அழைப்பைத் துண்டித்து விட்டாள்.


ஆனால் அடுத்த நிமிடம் அவனிடமிருந்து அழைப்பு வந்தது. இத்தனை தாமதமாக அவள் அழைத்திருக்கவும், எதுவும் அவசர உதவியாக இருக்குமோ என்ற எண்ணத்தில் உடனே அழைத்திருந்தான்.


சிறு சங்கோஜத்துடன் அழைப்பை ஏற்றவள், “சாரி அத்தான். நேரத்த பாக்கலை” என்க,


“பரவால பாப்பா. நான் முழிச்சு தான் இருக்கேன்” என்றான்.


“இன்னும் தூங்கலையா? ஏன் அத்தான்? அக்கா என்ன பண்றா?” என்று அக்கறையாய் சங்கமித்ரா வினவ,


“தூங்கிட்டாடா. ரொம்ப டயர்டாயிடுறா. ஆறாது மாசம் கம்ப்ளீட் ஆகப்போகுதுல? அடுத்த வாரம் செக்கப் இருக்கு. நல்லாதான் சாப்பிடுறா. இருந்தாலும் அவ டயர்டாகுறதைப் பார்த்து எனக்குதான் கஷ்டமாருக்கு” என்று மனைவியிடம் வெளிப்படுத்தாத அவனது உண்மையான பயத்தை, மச்சினியிடம் வெளிப்படுத்தினான்.


“அச்சுச்சோ. அதுக்கா அத்தான் தூங்காம இருக்கீங்க?” என்று அவள் கேட்க,


“இல்லடா. ஒரு ப்ராஜெக்ட் லீட் பண்றேன் சொன்னேனே? அந்த வேலையா தான் முழிச்சிருந்தேன். இப்பதான் முடிச்சேன்” என்றான்.


“ஓ.. ஓகே அத்தான். சாப்டீங்களா?” என்று அவள் கேட்க,


“ஆச்சு பாப்பா. நீ சாப்பிட்டியா? என்ன விஷயமா கால் பண்ணடா?” என்று கேட்டான்.


“சாப்டேன் அத்தான்..” என்றவள் அடுத்துப் பேச தயங்க,


“லெட்டர் எதும் டெலிவரி பண்ணனுமோ?” என்று நமட்டு சிரிப்போடு கேட்டான்.


“அத்தான்..” என்று அவள் வெட்கம் கொண்டு சிணுங்க, அதில் மெல்ல சிரித்தவன், “சொல்லுடா பாப்பா” என்றான்.


“எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் அத்தான். முடியுமா?” என்று அவள் கேட்க,


“நீ என்னனு சொல்லு. முடியுமா முடியாதானு நான் சொல்றேன்” என்றான்.


“நான் சின்ன பொண்ணா இருக்கரச்ச, அப்பா வீட்ல ஒரு டேப் ரெக்கார்டர் வச்சிருப்பாங்க. எனக்கு அது போல ஒன்னு வேணும். ரெகார்ட் பண்ணி ஸ்டோர் பண்ணி வச்சு திரும்ப போட்டு கேட்குற போல” என்று ஆர்வம் ததும்பும் குரலில் அவள் கேட்க,


“சரியா போச்சு. டேப் ரெக்கார்டர் எல்லாம் இப்ப மேனிபேக்சரே பண்றதில்லடா” என்றான்.


“அச்சுச்சோ..” என்று சுருதி பிசகிய ராகத்தில் அவள் கூற,


சற்றே யோசித்தவன், “பழைய கடைல கூட இருக்குமானு சந்தேகம் தான்டா. பழைய ஆளுங்க வீட்டில் வச்சுருந்தாதான் உண்டு. அதுவும் என்ன கண்டீஷன்ல இருக்குமோ தெரியலையே?” என்றான்.


“அப்படியா அத்தான்..” என்று மெல்லிய ஒலியில் கேட்டவள், “சரி ஓகே அத்தான். இப்ப எங்கும் கிடைக்குமானு தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்” என்று கூற,


“எனக்கு தெரிஞ்சவரை டேப் ரெக்கார்டர் இப்ப இல்லைடா. நான் எதுக்கும் யார்கிட்டயும் விசாரிச்சுப் பார்க்குறேன்” என்றான்.


“ஓகே அத்தான். சாரி இவ்ளோ லேட் நைட் கால் பண்ணி தொல்லை பண்ணிட்டேன்” என்று அவள் கூற,


“ம்ம்.. என்ன பாப்பா. வரவர பெரிய வார்த்தை எல்லாம் பேசுற?” என்றான்.


“அட அத்தான். ரொம்ப நேரமாச்சேனு சொன்னேன்” என்று சங்கமித்ரா கூற,


“இன்னும் நாலு மாசம் கழிச்சு எங்களுக்கு இன்னொரு பாப்பா வரும். அப்ப தூங்கக் கூட நேரமிருக்காது. அதை தொல்லைனு சொல்லிட முடியுமா என்ன?” என்று அமைதியான குரலில் கேட்டான்.


மனம் நிறைந்த புன்னகை அவள் முகத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்தது. 'இவங்கட்ட நாம காட்டும் உரிமைக்கு அன்பால் இன்னும் இன்னும் அடித்தளம் போடுறாங்க’ என்று மனதோடு நெகிழ்ந்தவள், “நாளைக்கு பன்னிரண்டு மணிக்குக் கால் பண்றேன் பாருங்க” என்று கூற,


'ஹாஹா' என்று வாய்விட்டு சிரித்தான்.


தானும் சிரித்தவள், “ரொம்ப நேரமாச்சு அத்தான். உடம்பை கெடுத்துக்காம தூங்குங்க” என்று கூற,


“உனக்கும் அதேதான். சீக்கிரம் படுடா. நைட் இப்படி ரொம்ப நேரம் முழிக்காத” என்று கூறினான்.


“ஓகே அத்தான். குட் நைட்” என்று அவள் கூற,


“குட் நைட் டா பாப்பா” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு மனைவி அருகே சென்று படுத்தான்.


மெல்ல தன் வயிற்றை தாங்கியபடி அவன் பக்கமாகத் திரும்பிப் படுத்தவள் அவன்மீது கைபோட்டுக்கொள்ளவும், “கேடி.‌ இன்னும் தூங்கலையா நீ?” என்று அவிநாஷ் கேட்க,


“மூத்த புள்ளைகூட பேசிட்டு இருக்கும்போதே முழிச்சுகிட்டேன்” என்றாள்.


“சத்தம்போட்டு எழுப்பிட்டோமா?” என்று அவிநாஷ் கேட்க,


“பாசத்தால் மூழ்கடிச்சுட்டீங்க” என்று சங்கீதா மனமார கூறினாள்.


அவள் சிகை கோதி நெற்றியில் முத்தமிட்டவன் அவள் மணி வயிற்றை வருட, உள்ளே குழந்தை மெல்ல அசைந்துக் கொடுத்தது.


அதில் உடல் சிலிர்க்கப் புன்னகைத்தவன், “பாப்பா அசைவு ஃபீல் பண்ண ரொம்ப நல்லாருக்குல?” என்று கேட்க,


அவன் கன்னம் கில்லியவள், “என் புருஷன் அதை ரசிக்குறது இன்னும் அழகா இருக்கு” என்றாள்.


புன்னகையாய் அவள் தலைகோதியவன் அவளை அணைத்துக் கொண்டு தட்டிக் கொடுத்தபடி, “இன்னும் மூனு வாரம்தான் இருக்கு பாப்பா கல்யாணத்துக்கு” என்று ஆழ்ந்தக் குரலில் கூறினான்.


அவன் முகத்தையே சங்கீதா அமைதியாய் பார்க்க,


“அவங்க அம்மாவை நினைச்சாதான் பயமாருக்கு. நீ சொன்னது உண்மைதான். குடும்பத்தில் எல்லா உறவுமே அனுசரணையா அமையாது தான். ஆனா பாப்பா ரொம்ப சாதுடி. சட்டுனு கத்தி பேசினாகூட பயந்துடுவா. சூழ்நிலையை அனுசரிச்சு நடந்துக்கும் அளவு பக்குவமான பொண்ணு என்பதில் சந்தேகமே இல்லை தான். அ..ஆனா.. எப்படி சொல்ல? ரொம்ப சாது” என்று தன் மனைவியிடம் அவள் தங்கையைப் பற்றித் தான் அவளிடம் விளக்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதையே மறந்தவனாய் கூறிக் கொண்டிருந்தான்.


சங்கீதா இதழ்கள் மிதமாய் விரிந்தன.


“அவங்க எதும் பேசி, இவ கஷ்டப்படுட்டுட்டா?” என்று உள்ளார்ந்த பதட்டமாய் அவிநாஷ் கேட்க,


“கஷ்டத்துலருந்து எப்படி சமாளிக்கலாம்னு கத்துப்பா” என்று கணவன் மூக்கைப் பிடித்து ஆட்டியபடி கூறினாள்.


அவிநாஷ் அமைதியாய் அவளை நோக்க, “அவ சாது தான். பயந்த சுபாவம் தான். ஆனா எப்பவும் எதுலயும் தேங்கி நின்னுட மாட்டா. கஷ்டம் வந்தா அழுவா. நிறைய அழுவா. ஆனா அதுக்கடுத்து அதை எதிர்கொண்டு கடந்துபோக முயற்சி பண்ண ஆரமிச்சுடுவா. நிச்சயம் அவ புகுந்த வீட்டுலயும் போனதும் கொஞ்சம் சிரமப்பட்டாலும், போகப் போக புரிஞ்சுப்பா” என்று சங்கீதா கூறினாள்.


தான் பெறாத, தனது பிள்ளைக்காக மனதில் அவனுக்கு எழுந்த பயம் நீங்காத போதும், சற்றே மனைவியின் வார்த்தைகள் ஆறுதல் கொடுத்தது.


“அவகிட்ட பேசனும் கீதா. எல்லாரும் அவ கல்யாண சந்தோஷத்தில் இருப்பதால இதுபத்தியெல்லாம் பேசாம இருப்பாங்க. பேசி பயப்படுத்திட வேணாம்னு நினைப்பாங்க. ஆனா நான் அவளுக்கு இதையும் சொல்லி, இதுக்கும் தயார்படுத்தி அனுப்பனும்னு நினைக்குறேன். இப்ப அனுபவிக்கும் சந்தோஷம் மட்டுமே கல்யாணத்துக்குப் பிறகு இருக்காது. எல்லா வகையான உணர்வுகளையும் கடக்க வேண்டி இருக்கும். எல்லாத்தையும் அனுசரிச்சு, ஏற்று அதுக்கேற்றப்போல் வாழ துணிவோட இருக்கனும்னு அவளுக்கு சொல்லி அனுப்பனும் கீதா” என்று அவிநாஷ் கூற,


“நம்ம குழந்தை ரொம்ப ரொம்ப லக்கி தெரியுமா?” என்றாள்.


எங்கோ பார்த்துப் பேசிக் கொண்டிருத்தவன், மனைவியின் கூற்றில் அவள் முகம் நோக்க,


“பெறாத மகளுக்காகவே இத்தனை துடிக்கும் மனுஷன். பெத்த பிள்ளைக்கு எவ்வளவு பாத்து பாத்து சொய்வீங்க?” என்று கேட்டாள்.


“பெத்தா என்ன? பெறாட்டி என்னடி? அவளும் நம்ம பொண்ணுதான்” என்று உண்மையாய் மனமார அவன் கூற,


“உங்களுக்கு பொண்டாட்டினு காலர தூக்கிவிட்டு நான் பெருமைப்பட தினம் தினம் ஓராயிரம் காரணம் கொடுத்துட்டே போறீங்க” என்றாள்.


அதில் புன்னகையாய் அவளை அணைத்தவன், அவள் நெற்றியில் முத்தமிட்டு, “குட் நைட்” என்க,


தானும் கணவனை அணைத்துக் கொண்டு, “குட் நைட்” என்றாள்.




Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02