திருப்பம்-22
திருப்பம்-22
அழகாய் காகித அட்டைகளில் இலை வடிவத்தில் வெட்டி, நிறம் கொடுத்து, நூல் கொண்டு பூக்கள் செய்து, அவற்றை சில முத்துக்களுடன் சேர்த்துக் கோர்த்து வாசலின் இரு புறமும் தொங்க விடுவதற்கு வசதியாய் தோரணம் போல் அமைத்து உருவாக்கியிருந்தாள், சங்கமித்ரா. அதை குரியர் கவரில் பத்திரப்படுத்தி, அனுப்பி வைத்திருந்தாள்.
அவள் நேரமோ என்னவோ? வந்த குரியரை தெய்வநாயகி தான் வாங்கும்படி நேர்ந்தது.
“என்னதிது? பேரையுங் காணும் ஒன்னயுங் காணும்? ஆருக்கு ஆரு அனுப்பினாவனே இல்ல?” என்றபடி அதை பிரித்துப் பார்த்தவர் அதில் இருக்கும் அழகான தோரணத்தைக் கண்டார்.
“அட எம்புட்டு அழகாருக்கு. ஆரு அனுப்பினாவனு தெரிலியே?” என்றபடி அதை மேஜையில் வைத்துவிட்டார்.
மதியம் உணவுக்காக வடிவேலும் வளவனும் வீட்டிற்கு வர,
“அத்தே.. தெவக்கமாருக்கு கொஞ்சம் மோரு கீரு இருந்தா கொண்டாங்களேம்” என்று வடிவேலு குரல் கொடுத்தான்.
“இந்தா வாரேம்லே மக்கா” என்றபடி அவரும் உள்ளிருந்து குரல் கொடுக்க,
“காந்தலாருக்குலே” என்று சட்டை பொத்தான்களைக் கழட்டியபடி கூறிய வளவன் தற்செயலாக மேஜையைப் பார்த்து அதிர்ந்தான்.
வடிவேலுவிற்கும் மகனுக்கும் மோருடன் வந்த தெய்வானை, “இந்தாம்லே” என்று நீட்ட,
“ம்மோவ். அ..அது?” என்று மேஜையைக் காட்டிக் கேட்டான்.
நண்பன் காட்டும் திசையில் திரும்பிப் பார்த்த வடிவேலும், ‘ஏ ஆத்தே. இந்த அத்தையா பிரிச்சு பாத்தாவ? மாப்ளைக்கு இன்னிக்குத் தீபாளிதேம் போலயே’ என்று அதிர்ந்து நோக்க,
“ஆமாலே. காலையில வந்துச்சு. ஆருக்குனு பேரையுங் காணும் சோறையுங் காணும். உச்சிக்கு யாரும் பசியாற வருவீய. அப்பத கேட்டுப்பம்னுதேம் இருந்தேம். ஒனக்கு வந்ததாயா? யாரு அனுப்புனாவ?” என்று கேட்டார்.
'போடு சக்க. மாப்ள.. மாட்டுனடி’ என்று உள்ளுக்குள் நக்கலடித்த வடிவேலு அடிக்காத அலைபேசியை எடுத்துக் கொண்டு, “யாருங்க? அமேரிக்க அதிபரா? நான் இங்க ஒரே பிஸி” என்றபடி வெளியே செல்ல,
‘அடப்பாவி பயலே' என்று எண்ணியபடி தன் தலையைக் கோதிக் கொண்டு, சிறு தயக்கத்துடன், “ஓம் மருமவ அனுப்பிருக்கா ம்மா” என்றான்.
தெய்வானை அவனை அதிர்வாய் பார்த்தார். பெரியோர் யாருக்கும் தான் இவர்களது கடிதப் பறிமாற்றம் பற்றியெல்லாம் தெரியாதே? அதுவும் தெய்வாவிற்குத் தெரிந்தால் அவ்வளவே தான். கிடைத்தது அடுத்த சாக்கு அவளைக் குறைக் கூற என்று பிடித்துக் கொள்வாரே.
“அவோ எதுக்கு இதெல்லாம் அனுப்பிருக்கா?” என்று ஒருமாதிரி குரலில் அவர் கேட்க,
“அவோ இப்படிலாம் கை பொருளு செய்வாலாம் ம்மா. அதேம் செஞ்சு நம்ம வூட்டுக்கு மாட்ட அனுப்பிருக்காவ” என்று கூறினான்.
“ஓ..” என்று அவர் அவனை மேலும் கீழுமாய் பார்க்க,
எங்கே சங்கமித்ராவை ஏதும் தவராக நினைத்துவிடுவாரோ என்று அஞ்சியவன், “அவிய அப்பாட்ட சொல்லி எங்கிட்டு கேட்டுகிட்ட கேட்டுதேம் அனுப்பினாவோ ம்மா” என்றான்.
“ம்ம்.. சரிலே” என்றபடி அவர் சமையலறை செல்ல, ‘உப்’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
உள்ளே வந்த வடிவேலு, “என்னம்லே? அத்தே என்ன சொன்னாவ? ஓம் சங்கோட சங்கு தப்புச்சுதா?” என்று கேட்க,
“கழண்டுகிட்டு போயிட்டு வந்து சேதி கேக்கியாக்கும்?” என்று அவனை எட்டி உதைத்தான்.
“அத்தாடீ” என்று விழுவதைப் போல் சாய்ந்தவன், “கொப்புறானே. கொன்னு போடாதலே. இன்னும் கல்யாணங் காட்சி பாக்க வேண்டியிருக்கு” என்று கூற,
“போலே கோம்பப் பயலே” என்றான்.
“சரிலே. பொங்காத. அத்தே என்ன சொல்லினாவ” என்று வடிவேலு கேட்க,
“ஒன்னும் சொல்லல. ஒருமாதிரி பாத்தாவ. அவிய அப்பாட்ட சொல்லி எங்கிட்ட கேட்டுகிட்டுதேம் அனுப்பினாவனு சொன்னியேம். சரினுட்டு போயிட்டாவ” என்றான்.
“அத்தே ஒன்னுஞ்சொல்லாம போனவரைக்குமே சந்தோஷமுன்னு நெனச்சுகிடுலே. இல்லனா இந்நேரதுக்கு ஓம் பொதறு மண்டய ஆஞ்செடுத்தெருப்பாவ” என்று வடிவேலு கூற,
“சரிதாம்லே” என்று பெருமூச்சு விட்டான்.
அதையடுத்து இருவருக்கும் உணவை எடுத்து வைத்த தெய்வானை, “பேசுவியலோ அந்தப் பிள்ளையோட?” என்று கேட்க,
“நேருலலாம் பேசிகிடுறதில்ல ம்மா” என்றான்.
“அதுசரி.. நான் ஃபோனுல கேட்டேம்” என்று அவர் கூற,
“இல்லமா. ஃபோனுலலாம் பேசிகிடுறதில்ல. அவோ அச்சப்படுதா” என்றான்.
அதுதானே உண்மையும். அவர்கள் கடிதத்தில் தானே பேசிக் கொள்கின்றனர்.
‘நிஜமா?’ என்பதைப் போல் தெய்வானை வடிவேலுவைக் காண,
“அதெல்லாம் அவேம் ஃபோனுலைலாம் பேசிகிடுறதில்ல த்தே. நானே அதையச்சுதேம் நளியடிப்பேம். இப்பமிருக்கக் காலத்துக்கு அவோ அவோ ஊரயே சுத்திபுடுதாவ. இவிய இன்னும் நாலு வார்த்த ஃபோனுல பேசிக்கக்கூட இல்லியேனுதேம் நளியடிப்பேம்” என்று வடிவேலு கூறினான்.
அவர்களுக்கு கூட்டை அள்ளி வைத்தபடி, “பொறவு எப்புடிலே கட்டுனா அவோளத்தேம் கட்டுவேன்னு வந்து நின்னியானாம்? பேசிகிடாமலயா புடிச்சுப்போவுது?” என்று தெய்வானை நொடித்துக் கொள்ள,
“ஃபோனுல மணிக்கணக்கா பேசிகிட்டாதேம் அவள புடிச்சு போவனும்னு இல்லியேலே? அவள பாத்துட்டு வந்த அன்னிக்கே கட்டுனா அவளத்தேம் கட்டனும்முனு முடிவாயிட்டேம்லே. புடித்தம் பேசிதேம் வாரனுமுனா ஐயாகூட எம்புட்டு பேசிட்டு கட்டிகிட்டாவளாம்?” என்று உணவை வாயில் அள்ளிவைத்தபடியே கேட்டான்.
தெய்வானை மகனை ஆச்சரியமாய் பார்த்தார். தற்போதும் அவர்களது திருமணம் நின்றுவிட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கில்லை. அதேநேரம் நடக்காமல் போனால் அவருக்கு வருத்தமும் வரப்போவதில்லை. இருந்தும் மகன் தன்னை மீறிய ஒரு முடிவை எடுத்ததில் உள்ளுக்குள் பெரிதாக அடிவாங்கி நின்றார்.
அன்னையை நிமிர்ந்து பார்த்தவன் நண்பனை நோக்கி, “ஒருத்திக்கி வாழ்க்கைய பகிர்ந்துப்பேம்னு வாக்கக் கொடுத்துபோட்டு ஏமாத்திட்டு வர என்னால முடியாதேலே? நாந்தேம் ஓம் புருஷன்னு சொல்லிட்டு வேற எவனயாது பாத்துகிடுனு சொல்ல வாயி வருமாலே எனக்கு? எங்கம்மா என்னைய அப்படியொன்னும் வளக்கலியே. செய்யுற அம்புட்டுலயும் பெத்தவிய மருவாதியிருக்குனுதேம் சொல்லி எங்கைய்யா என்னைய வளத்தாவ. அதுக்கு நல்லவிதமாதேம் நடுந்துருக்கேம் இனியும் நடந்துப்பேம்” என்றுவிட்டு தட்டை எடுத்துக் கொண்டு செல்ல,
தெய்வா செல்லும் மகனையே வித்தியாசமான உணர்வோடு பார்த்தார்.
“அத்தே, சொல்லுறேனேனு தப்பா நொனக்காதீய. அவேம் அந்த புள்ள மேல எம்புட்டு ஆச வச்சுருக்கான்னு புரிஞ்சுகிடுவ. வேற புள்ளைய கட்டினா ஒங்க புள்ள வாழ்க்க செழிக்குமா?” என்று வடிவேலு கேட்க,
“என்னம்லே? என்னைய பாத்தா அவேம் குடிய கெடுக்க திட்டம் போடுறாப்ல இருக்கா? அவேம் எம்மவன். அவேம் வாழ்க்க நெலச்சா எனக்கு சந்தோஷந்தான?” என்று அதட்டலாய் கேட்டார்.
“பொறவு எதுக்கு அவேம் கல்யாணத்துல மூனாது ஆளாட்டம் சிரத்தயில்லாம வேலை பாக்குறீய? உரிமயா எடுத்து காரியங் கண்ணு செய்யத்தான?” என்று வடிவேலு கேட்க,
“அதுக்கு எனக்கு உரிமையிருக்கனும்லே. முடிவெடுக்க உரிமையில்லாதப்ப காரியங்கண்ணு பாத்து என்னம்லே?” என்று ஆதங்கமும் கோபமுமாய் கேட்டார்.
வடிவேலுவிற்கு ஆயாசமாய் வந்தது. அவன் வாழவேண்டும். அவன் விருப்பம் நிகழ வேண்டும். ஆனால் தனது ஆதிக்கம் அதில் இல்லையே என்பதே அவரை இப்படியெல்லாம் நடந்துகொள்ள வைத்தது. திரிபுராவிற்கு எங்கிருந்து இந்த எண்ணம் வந்தது என்றும் வடிவேலுவிற்கு தற்போது நன்கு புரிந்தது. காலப்போக்கில் அவராக அவர் எண்ணங்களைத் திருத்திக் கொண்டால் தான் உண்டு, என்ற எண்ணத்துடன் வடிவேலுவும் உண்டு முடித்து எழுந்து சென்றான்.
கூடத்திற்கு வந்த திருமாவளவன் மேஜையை நோக்க, அந்த அலங்காரப்பொருள் அங்கில்லை. சட்டென பதட்டமாய் அவன் திரும்ப, தெய்வநாயகி அதை வீட்டு வாசல் கதவின் இருமருங்கிலும் தொங்கவிட்டிருந்தார். அதை கண்டவனுக்கு மனதில் சொல்லொன்னா நிம்மதி ஒன்று எழுந்தது. இனி அனைத்தும் சுபமே என்று நினைத்தவன் திருமணத்திற்குப் பிறகு தினம் தினம் வெடிக்கவிருக்கும் பூகம்பங்களை அறிந்திருக்கவில்லை.
நண்பனுடன் மீண்டும் தென்னந்தோப்பிற்குத் திரும்பியவன், “அம்மாக்கு அவோள புடிக்காம இல்லலலேய்?” என்று கேட்க,
“புடிக்காம இல்லலே.. அதுக்குனு புடிச்சுமில்ல” என்றான்.
“என்னம்லே கொழப்புத?” என்று அவன் புரியாமல் கேட்க,
“ஒங்கம்மாக்கு நீயு நல்லா சந்தோசமாதேம் இருக்கனும். ஆனா அது அவிய பாத்து முடிச்சு வைக்குத கல்யாணமா இருக்கோனுமுனு ஆச. அவிய ஆதிக்கமில்லாது நீயா கட்டிகிடுறதா நெனக்காவ” என்று வடிவேல் ஆயாசமாய் கூறினான்.
நண்பனை சோர்ந்து போய் பார்த்தவன் “அவோள அம்மா ஏதும் அறுப்புவாவளாலே?” என்று பயத்துடன் கேட்க,
நண்பன் முகத்தை வேதனையுடன் பார்த்தான்.
நிச்சயம் அவளுக்கும் அவன் அன்னைக்கும் மனஸ்தாபம் வரயிருப்பது உறுதி என்றே வடிவேலுவிற்குத் தோன்றியது. ஆனால் கூறி நண்பனின் மனதை தற்போது பயம் கொள்ளவும், வருந்தவும் வைக்கத்தான் மனமில்லை.
அவன் தோளில் தட்டிக் கொடுத்தவன், “அறுப்பினா நீயு தொணையா இருலே. புள்ளைய பெருசா என்னத்த எதிர்ப்பார்த்துடப்போறாவ. நீயு அவோளுக்குத் துணையாருந்தா அவோளும் ஓங்கூட சந்தோஷமாதேம் இருப்பா” என்று கூற,
பெருமூச்சுடன், “சந்தோஷமா வச்சுகிடனும்லே” என்றான்.
நாட்கள் இரண்டு கடந்து செல்ல, தனக்கு வந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்த சங்கமித்ரா அதனை ஆர்வத்துடன் பிரித்தாள்.
‘அன்புள்ள மித்துக்கு,
ஓய். இந்த முறை நீ அனுப்பின தோரணம் எங்க இருக்கு தெரியுமா? நம்ம வூட்டு வாசல் கதவு பக்கம்’ என்று வாசித்தவள் அரண்டு போய் விழித்தாள்.
'ஆமா மித்ரா. ஷாக்கக் கொற. இன்னும் ஒரு பெரிய ஷாக்கு இருக்குது. நீ அனுப்பின குரியர பிரிச்சதே எங்கம்மாதேம்’ என்பதை வாசித்தவள் அரண்டுபோய் எழுந்தே நின்று விட்டாள்.
'ஆத்தாடீஈ.. அத்தையா?’ என்று வேகமாய் அவள் வாசிப்பதைத் தொடர, நடந்த சம்பவத்தை விவரித்திருந்தான்.
'அம்மாக்கு அவிய முடிவ மீறின கோவந்தேம். ஆனா பிடிக்காமயில்ல' என்று வாசித்தவள் இதழ்கள் மெல்லிய புன்னகையில் விரிய,
'தெனம் வீட்டுக்குள்ள வாரப்ப உன் தோரணத்த பாக்கையில அம்புட்டுக்கு சந்தோஷமாருக்குது மித்ரா. ஒருமாதிரி மனசுக்கு எதமாருக்கு. ஒரு பொருளால மனுஷப்பய உணர்வ ஆள முடியுமானு ரோசிச்சிருக்கேம். முடியும்முனு தெனம் இந்த அட்டத் தோரணம் உணர்த்திபுடுது புள்ள. தேங்ஸ்டி' என்று அக்கடித்தத்தை முடித்திருந்தான்.
உயிரற்றப் பொருட்களும் கூட உயிரானவர்களின் நினைவுகளை சுமக்கையில் உயிருள்ளவையாய் மாறிவிடும் விந்தையை உணர்ந்தவனின் உணர்வு அந்த வரிகளில் அவளால் உணர முடிய, மனம் குளிர்ந்து புன்னகைத்தாள்.
அழகான சிரிப்புடன் அதை மூடி வைத்தவள், ‘உங்களுக்கு புடிச்சா சந்தோஷம் தான' என எண்ணிக் கொண்டு புன்னகைக்க,
“சங்கு. அத்தான் வந்திருக்காங்கடி” என்று தாட்சாயணி வெளியிருந்து குரல் கொடுத்தார்.
கடிதத்தை மடித்து உள்ளே வைத்தபடியே, “வரேம்மா” என்று குரல் கொடுத்தவள் வெளியே வர,
கூடத்தில் சச்சிதானந்தத்துடன் திருமண ஏற்பாடுகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தான், அவிநாஷ்.
“ஹாய் அத்தான். அக்கா வரலையா?” என்றபடி அவளும் வந்து அமர,
“ஹாய்டா பாப்பா. கீதா வீட்ல இருக்காடா. நான் வேலை முடிச்சு நேரா இங்க வந்துட்டேன்” என்றான்.
“ஓ ஓகே அத்தான்” என்று அவள் கூற, மீண்டும் சச்சிதானந்தமும் அவிநாஷும் தங்கள் உரையாடலைத் துவங்கினர்.
Comments
Post a Comment