திருப்பம்-24
திருப்பம்-24
“ஏம்லே. ஒனக்கு தானலே சோலி. என்னையும் ஏம்லே இப்படி இழுத்தடிக்குறவ?” என்று வடிவேலு சோதனையாய் அவனுடன் கிருஷ்ணர் கோவிலின் வாசலில் நடந்துகொண்டே கேட்க,
“ஏம்லே கோவப்படுத? அடுத்த வாரம் அவோளே கோயிலுக்கு வரமாட்டா. இன்னிக்கிதானலே?” என்று வளவன் கேட்டான்.
“அடேய், அதுக்கு அடுத்த வாரம் அவோ ஓன் வீட்டுக்கே வந்துபுடுவாலே. ஏம்லே வம்பு செய்யுத?” என்று வடிவேலும் கேட்க,
“விடு மச்சான். ஓன் மாப்ளைக்காவ” என்று வளவன் கூறுகையில் பெண்ணவள் ஆட்டோவில் வந்து இறங்கினாள்.
“என்னம்லே ஓன் ஆளு ஆட்டோல வருது. வண்டி ஏதும் ரிப்பேரா?” என்று வடிவேலு கேட்க,
“தெரிலியே” என்றபடி அவளைப் பார்த்து நின்றான்.
ஆட்டோவிலிருந்து இறங்கியவள் ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு திரும்பி அவர்களைத் தேடினாள்.
“லே.. நம்மலத்தேம் தேடுதா” என்று வளவன் கூற,
“தெரியுதுல? போய் என்னனு கேலுலே” என்று வடிவேலு கூறினான்.
“நீயும் வா” என்றபடி அவனையும் இழுத்துக் கொண்டு வளவன் செல்ல,
“சுத்த வெவரங்கெட்ட பயலாருக்கானே ஆண்டவா” என்று தலையில் அடித்துக் கொண்டான்.
இருவரும் பெண்ணவளை நெருங்கிவர,
அவர்களைக் கண்டு மெல்ல புன்னகைத்துக் கொண்டாள்.
“தங்கபுள்ள, என்ன வண்டில வரிலியா?” என்று வடிவேலு கேட்க,
“இதை கொண்டுவரனுமே அண்ணா. அதான் ஆட்டோல வந்தேன்” என்றவள், “நீங்க வண்டில வச்சு பத்திரமா கொண்டு போயிடுங்க அண்ணா” என்று நீட்டினாள்.
“என்னது தாயி இது?” என்று பெட்டியை வடிவேல் வாங்க,
சின்ன சிரிப்புடன் “வீட்டுக்குப் போய் பாருங்க அண்ணா” என்று வளவனைப் பார்த்தபடி கூறினாள்.
“சரிமா சரிமா” என்று அவன் கூற,
வாசலில் தாங்கள் வந்த வண்டி பக்கமாகவே வடிவேலையும் அந்த பெட்டிக்குக் காவலாய் நிற்கவைத்துவிட்டு இருவரும் உள்ளே சென்றனர்.
'கடசில உங்க போதைக்கு நான் ஊறுகாயாடா?’ என்றவன் அலைபேசி ஒலிக்க, எடுத்துப் பார்த்தான்.
'லட்சுமா' என்று ஒளிர்வதைக் கண்டு அவன் முகம் ஆயிரமாய் ஒளி பெற,
“லட்சு” என்றபடி அழைப்பை ஏற்று அவளுடன் கடலை வறுக்கத் துவங்கினான்.
உள்ளே எப்போதும் போல் சென்று அந்த குழந்தைக் கண்ணனை தரிசித்துவிட்டு இருவரும் பிரகாரம் சுற்றி வந்தனர்.
ஓரிடத்தில் நின்று மெல்ல அவனைத் திரும்பிப் பார்த்தவள், அவனை நெருங்கி சென்று குங்குமத்தை அவன் நெற்றியில் இட்டாள்.
கீற்றாய் ஒரு புன்னகையைக் கொடுத்தவன்,
“இன்னும் பத்து நாளுதான். நம்ம கல்யாணம்” என்று கூற,
அவள் உடல் சிலிர்த்தடங்கியது.
“ம்ம்..” என்று மெல்லிய குரலில் அவள் கூற,
“பொஞ்சாதிக்கு என்ன வேணும் கல்யாண பரிசா?” என்று கேட்டான்.
“பரிசா?” என்று புன்னகையுடன் அவள் கேட்க,
“வேணாமாக்கும்? என்னைய கட்டிக்குறதே பெரிய பரிசுதாங்குறியோ?” என்று கண்ணடித்தபடி கேட்டான்.
அதில் சிரித்துக் கொண்டவள், “ஆமா ஆமா” என்க,
“ரோசிச்சு சொல்லு புள்ள” என்றான்.
“ஆனா நான் தரமாட்டேன். ஏன்னா இப்பவே நான் உங்களுக்குப் பரிசு குடுத்துட்டேன். வெல குடுத்துத் திருப்ப முடியாத பரிசு. பத்திரமா வச்சுகிடுங்க” என்று சங்கமித்ரா கூற,
“ஆட்டுங்க மகாராணி” என்றான்.
அதில் சிரித்துக் கொண்டவள், “வரேன்” என்று கூற,
புன்னகையாய் தலையசைத்தான்.
இருவரும் வெளியே வர, வடிவேல் இன்னும் தன் சட்டி கருகிபோனதுகூட அறியாமல் கடலை வறுத்துக் கொண்டிருந்தான்.
“வரேன்” என்று அவள் கூற,
“இரு மித்ரா” என்றவன் சென்று பூ வாங்கி சுற்றி முற்றிப் பார்த்துக்
கொண்டு அவள் கையில் கொடுத்தான்.
அதை புன்சிரிப்புடன் வாங்கிக் கொண்டவள் செல்ல,
“ஆட்டோவ அனுப்பிட்ட. எப்படிப் போவப்போற?” என்று கேட்டான்.
“வேற ஆட்டோ பிடிச்சுப்பேங்க” என்று அவள் கூற,
“இரு” எனச் சென்று கோவில் வாசலில் இருந்து ஒரு ஆட்டோவை பேசி அழைத்து வந்து அவளைப் பார்த்தான்.
அவள் வந்து ஏற, “பாத்து கூட்டுப்போங்கண்ணே” என்று ஓட்டுனரிடம் இத்தோடு பத்தாவது முறையாகக் கூறினான்.
“ஏ மக்கா, அம்பூட்டு சந்தேகமானா நீயே கூட்டுப் போயா” என்று அவர் கூற,
பாவை பக்கென்று சிரித்து விட்டாள்.
அதில் அவளைச் செல்லமாய் முறைத்தவன், “போங்கண்ணே” என்க,
“வண்டிய விட்டாத்தான போவ?” என்றார்.
வண்டியை விட்டு அவன் இரண்டடி பின்னே செல்ல, அவரும் வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு சென்றார்.
தெருமுனையில் வண்டி திரும்பும் வரை பார்த்து நின்றவன், தனது இருகசக்கர வாகனத்திடம் வர,
“படிக்க இல்லியா புள்ள ஒனக்கு? மாமன் கூட இன்னிக்கு இம்புட்டு நேரம் கடலை வருக்குறவ?” என்று வடிவேல் கேட்கும் குரல் கேட்டது.
'யாருட்ட பேசுறியான்' என்று எண்ணியபடி வளவன் நெருங்க,
“உங்கொண்ணங்காரன் கூடத்தேம். அவேம் ஆளுகூட பேசாமலே படம் ஓட்டிகிட்டு இருப்பியான். இன்னும் காணும்” என்றபடி திரும்பினான்.
தனது கரங்களை மார்பிற்குக் குறுக்கே கட்டிக் கொண்டு வளவன் நின்றிருக்க,
அதிர்ந்து எழுந்தவன், “மா..மாப்ள” என்றான்.
“அச்சுச்சோ. அண்ணா கேட்டுட்டாங்களா? மாட்டிகிட்டீங்களா?” என்று எதிர்முனையில் கேட்ட தனாவிற்கு பயமென்பதெல்லாம் கிஞ்சித்தும் இல்லை. அவள் குரலில் ஏகத்துக்கும் நக்கல் இருந்தது.
“என்னம்லே நடக்குது இங்கன?” என்று கேட்ட வளவன் முகத்திலிருந்து அவன் மன உணர்வை வடிவேலால் புரிந்துகொள்ள இயலவில்லை.
'கேட்டியானா இல்லியா?’ என்ற யோசனையுடன், “தங்கபுள்ள?” என்று வடிவேல் கேட்க,
“கெளம்பிட்டா” என்றான்.
“ஓ சரிலே. வீட்டுக்குப் போவமா?” என்று வடிவேல் கேட்க,
“ம்ம். நீ வண்டியெடு. நான் பின்னுக்க உக்காந்துக்குறேன்” என்றான்.
சரியென்ற வடிவேல் யோசனையுடன் வண்டியை எடுக்க,
பெட்டியை வாங்கிக் கொண்டு வளவன் பின்னே அமர்ந்துகொண்டான்.
இருவரும் அமைதியாய் வீட்டை அடைய,
வண்டி நிறுதத்தின் இருமருங்கிலும் வைக்கப்பட்டிருக்கும் பூந்தொட்டிகளுக்கு தனலட்சுமி நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள்.
“வாண்ணே” என்று புன்னகையாய் அழைத்தவள் நக்கல் சிரிப்புடன் வடிவேலுவை நோக்க,
அவன் பயந்து போனவனாய் அவளைத் திரும்பியும் பார்க்கவில்லை.
“என்னத்தா. காலேஜ் போலியா?” என்று கேட்டபடி வளவன் இறங்க,
“மதியத்தோட வேலை முடிஞ்சுதுனு வந்துட்டேன்ணே” என்றாள்.
“ம்ம்” என்றபடி அவன் உள்ளே செல்ல,
வடிவேலு அச்சத்துடன் விழித்தான்.
“என்னங்க? மொகமெல்லாம் வேர்த்து போயிருக்குது?” என்று தனலட்சுமி ஓரடி அவனை நெருங்க,
“ஆத்தா” என்று பதறி நகர்ந்தவன் உள்ளே ஓடியே விட்டான்.
அதில் பக்கென்று சிரித்தவள், “நியாயத்துக்கு எங்கய்யாக்குதேம் இப்படி அச்சப்படோனும். இந்தாளென்ன கூட்டுக்காரணுக்கு இம்பிட்டு நடுங்குறாவ?” என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்.
மேலே தனதறைக்குச் சென்ற வளவன் மேஜையில் பெட்டியை வைத்துவிட்டு அதை பத்திரமாய் பிரித்தான்.
உள்ளே அழகாய் அந்த ஒலிப்பதிவு கருவி அமர்ந்திருக்க, “ஹே” என்ற உற்சாகத்துடன் அதை பதமாய் வெளியே எடுத்து வைத்தான்.
அதனுடன் நிறைய பாடல் கேசெட்டுகளும் இருந்தன. அனைத்தும் எம்பதுகளில் துவங்கி தொன்னூறுகளின் பாதி காலம் வரையிலான பாடல்களைத் தாங்கிய கேசெட்டுகள்.
அதில் ஒன்று மட்டும் தனியாக வண்ண கயிறு கொண்டு கட்டிவைக்கப்பட்டு அதனில் ஒரு கடிதம் சொருகிவைக்கப் பட்டிருந்தது.
அதை எடுத்துப் பார்த்தவன் கடிதத்தைப் பிரிக்க,
'அன்புள்ள திருமாலுக்கு,
நீங்க என்னைப் பாட்டு பாடி அனுப்பச் சொல்லி கேட்டிங்கள்ல? அதான் இந்த ஏற்பாடு. நாம தான் எயிட்டீஸ் காலத்தாலுங்க போல காதல் பண்றோமே? அதான் பாட்டையும் பழைய முறையில் அனுப்பி வைப்போம்னு இதை யோசிச்சேன். நான் சின்னப் பொண்ணா இருக்கும் சமயம்லாம் எங்க வீட்ல டேப் ரெக்கார்டர் உண்டு. அதுல தான் பாட்டெல்லாம் போட்டு கேட்போம். அப்பா அம்மாக்கு அந்த டேப் ரெக்கார்டர்ல பாட்டு கேட்கனா ரொம்ப பிடிக்கும். டென்த் படிக்கும்போது வீட்ல டீவி கனெக்ஷன அப்பா கட் பண்ணிட்டாங்க. அப்பலாம் சாயிந்தரம் பத்து நிமிஷம் அம்மாட்ட கெஞ்சி கேட்டு அதுல பாட்டு கேட்டுட்டுப் போய் படிப்போம் நானும் சங்கியும். என்னவோ இப்பலாம் எவ்ளோவோ மாறின பிறகும் அந்த டேப் ரெக்கார்டர்ல கேட்குற ஃபீல் ஒருமாதிரி சூப்பரா இருக்கும். வீடியோலாம் இல்லாம பாட்டையும் அதோட வரிகளையும் மட்டுமே ரசிச்சு, டீ குடிச்சுட்டே, வானத்தைப் பார்த்து பாடல் வரிகளை முனுமுனுக்குற ஃபீல் செம்மயா இருக்கும். அதான் இதுல அனுப்ப ஆசைப்பட்டேன். ஆனா இப்ப இதோட மேனுஃபேக்சரே நிறுத்திட்டாங்களே. அத்தான்கிட்ட கேட்டு வச்சு அவங்க ஃபிரெண்டு தாத்தாவோடதுனு வாங்கிட்டு வந்தாங்க. அந்த தாத்தா பாட்டிக்கு மாலை நேரம் இதோடதான் போகுமாம். தாத்தா போன பிறகும் பாட்டி பத்திரமா வச்சிருந்தாங்கலாம். இப்ப அந்த பாட்டியும் இல்லை. ஆனா ரெகார்டர் இருக்கு. இதுக்கு இப்ப உயிர் குடுக்க நம்ம காதல் இருக்கு’ என்று வாசித்து உடல் சிலிர்த்துப் போனான்.
'தனியா கலர் ரிப்பன் கட்டின கேஸட்ல நான் பாடின பாட்டுலாம் இருக்கு. அத்தான் குடுத்து ஒரு வாரம் ஆச்சு. இந்த ஒரு வாரத்தில் தினம் காலைல ஹனி வாட்டர் குடிச்சு குரலை கிளியர் செஞ்சு கிளியர் செஞ்சு எனக்குப் பிடிச்ச பாட்டெல்லாம் லிஸ்ட் எடுத்து ஒரு இருபது பாட்டு பாடி ரெகார்ட் பண்ணிருக்கேன். வீட்டுல யாருமில்லாத நேரம், யாரும் இருந்தாங்கனா மாடிக்கு போய்னு எவ்ளோ கஷ்டபட்டு ரெகார்ட் பண்ணேன் தெரியுமா? உஃப்' என்று அவள் எழுதியதை வாசித்தவனுக்கு அவள்விட்ட பெருமூச்சு தன்னைச் சுற்றி அனல் மூட்டியதைப் போல் இதம் அளித்தது.
மெல்லிய புன்னகையுடன் அவன் தொடர,
'இனி இந்த ரெகார்டருக்கு நாமலும் நம்மக் காதலும் உயிர் குடுப்போம். நான் பெரிய பாடகிலாம் கிடையாது. அதனால பெரியளவுலலாம் எதிர்ப்பார்க்காம கேளுங்க. அதேநேரம் மோசமாவும் இருக்காது. சொல்லிக்குற அளவு பாடுவேன்' என்று எழுதியிருந்தாள்.
‘'பரிசு வாங்குறதுல மட்டுமில்ல பரிசு குடுக்குறதுலயும் ஒரு அலாதி சந்தோஷம் இருக்கும்னு சொல்வாங்க. அதை மனப்பூர்வமா இதை உங்களுக்குக் குடுக்கும்போது உணர்ந்தேன். உண்மைதான். ஒரு பரிசை நாம ஆசைப்பட்டு, அதுக்காக மெனக்கெடுத்து, ரொம்ப மனநிறைவோட குடுக்கும்போது ஒரு ஃபீல் வருது பாருங்க. ஹப்பா.. அவ்ளோ ஹாப்பியா இருக்குங்க. இதுக்கு நான் பெருசா செலவுலாம் எதுவும் பண்ணலைங்க. ஆனா ஒருமாதிரி நல்லாருக்கு. வேற என்ன சொல்லனு தெரியலை. எல்லாரையும் விசாரிச்சேன்னு சொல்ல வேணாம். ஆனா விசாரிச்சுக்குறேன்' என்று கடிதம் முடிந்திருக்க மனம் நிறைய புன்னகைத்தான்.
நிஜம் தானே? பரிசு கொடுப்பதில் தான் எத்தனை சந்தோஷம் உள்ளது? அந்த பாக்கியத்தைத் தானும் பெருவதற்கு எதாவது நல்ல பரிசாக திருமணத்தன்று அவளுக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தபடியே அவள் பாடிய கேசெட்டை எடுத்து அதில் பொருத்தினான்.
மிகுந்த ஆர்வத்துடன் அவன் அதை அழுத்த அவள் குரலில் அழகிய பாடல் ஒலித்தது.
Comments
Post a Comment