திருப்பம்-25

 திருப்பம்-25



‘காத்துல சூடம் போல

கரையுரேன் உன்னால...

கண்ணாடி வல முன்னா..டி விழ

என் தேகம் மெலிஞ்சாச்சு

கல்யாண வரம் உன்னால பெறும்

நன்னால நெனச்சாச்சு…

சின்ன வயசுப்புள்ள கன்னி

மனசுக்குள்ள வன்னக்கனவு வந்ததேன்...

கல்யாணம் கச்சேரி எப்போது..

உனக்கு

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து

வெச்சேனே.. என் சின்ன ராசா

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து

வெச்சேனே... என் சின்ன ராசா

உன் தோளுக்காகத்தான்...

இந்த மாலை ஏங்குது...

கல்யாணம் கச்சேரி எப்போது...

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து

வெச்சேனே... என் சின்ன ராசா' என்று அவள் பாடியது ஒலித்து அடங்க அவனுக்குள் அப்படியொரு சந்தோஷம்.


மனமார சிரித்தான்.


சுருதி பிசிறியது தான் என்றாலும் அவள் கூறியதைப் போல் கேட்க இயலாதபடியெல்லாம் இல்லை. நன்றாகவே பாடியிருந்தாள். மனதிற்குள் அவள் பாடியதை மனமார பாராட்டியவனுக்கு முகத்தில் இன்னும் புன்னகை குறையவில்லை.


காதுமடல் சிவந்தும் போனது. 'என்னடி பண்ணுற என்னைய? ஆத்தே’ என்று சிரித்தபடி பெருமூச்சு விட்டுக் கொண்டவனுக்கு புது ரத்தம் பாய்ந்த பரவசம். அனைத்தையும் மேஜையில் அடுக்கி வைத்துவிட்டுக் காகிதம் ஒன்றை எடுத்தான்.


‘அன்புள்ள மித்ராவுக்கு,

  

பசியாற வந்தவியளுக்கு வக தொகயா விளம்பின (பரிமாறிய) கணக்கா அம்புட்டு நெறவாருக்குடி. என்னய ஓங் காதலால மலத்தி (கவிழ்த்து) போட்டுபுட்டுகிட்டே இருக்க. இந்த டேப் ரெகார்டரு எனக்கு அம்புட்டுக்குப் புடிச்சுருக்கு. இங்க நம்மூட்டுலயும் மின்ன இருந்துச்சு. பொறவு பராமரிக்க முடியாத போச்சுது. சரி பண்ணக்கூட ஆளு கெடக்கல. அம்புட்டுக்கு வருத்தமாருக்கும். அதுல பாட்டு கேக்க எனக்குமே ரொம்ப புடிக்கும். டீ கடயில வச்சிருப்பாவ. நானு காலேஜு படிக்கயிலயெல்லாம் வேலுவ கூட்டிகிட்டு மோந்திக்கு டீக்கடயில ரெண்டு பாட்டு கேக்கனே போயி வருவம். வீட்டுல டீவியெல்லாம் இருந்தாலுங்கூட அதுல கேக்கயில ஒருமாரி நல்லாருக்கும். இந்த ரெகாடரே எனக்கு ரொம்ப ஸ்பெஷலுனா அதுல கேக்க ஓங் கொரலு ரொம்ப ஸ்பெஷலு. நல்லா பாடிருக்க மித்ரா. தோளுக்காவ மால ஏங்குதாக்கும்? கட்டி வையு.. பத்து நாளுல வந்து போடுதேம்' என்று எழதியவன் முகம் தன்னைப்போல் புன்னகைத்தது.


'நெசத்துக்குமே பரிசு குடுக்குறதுல இம்புட்டு சந்தோசமிருக்குமானு நானுங்கூட அனுபவிச்சுப்பாக்கேம் மித்ரா. நம்ம கல்யாணத்தன்னிக்கு ஒனக்கு நானும் என்னமாது தாரேம்' என்று எழுதியபடி மனதோடு தான் கொடுக்க ஆசைகொள்ளும் பொருளை கற்பனை செய்துப் பார்த்தான்.


'டெய்லி ஓம் பாட்டுதேம் எனக்கு சுப்ரபாதம் போலியே இனிமே. ஒருமாதிரி நல்லாருக்குது.. கண்ணாம்மண்டையில (உச்சந்தலை) ஐசு வச்ச கணக்காருக்கு. ரொம்ப நன்றிடி. நீயு ஆசபட்டபோல இந்த ரெகாரடுக்கு நம்ம காதல கொடுத்து இத இன்னுங்கொஞ்ச காலம் உசுருகொடுத்து உயிரப்போடு வச்சுப்பம்’ என்று எழுதி முடித்தவன் புன்னகையும் சிலிர்ப்புமாய் அதைப் பார்த்தான்.


அந்த கருவியை மெல்ல வருடியவன், அழகியதோர் புன்னகைப் பூத்து, அதனைப் பத்திரப்படுத்திவிட்டுக் கீழே வர,


கூடத்தில் விக்ரமனும் வடிவேலும் அமர்ந்திருந்தனர்.


சமையலறையில் கார்த்திகாவிற்கு உதவுகிறேன் என்று சொல்லிக் கொண்டு அவ்வப்போது வெளியே தனலட்சுமி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க,


“இந்தாடியம்மா. நீயு பேசாட்டு போய் உங்கண்ணே பக்கத்துல ஒக்காந்துகிட்டு கன்னத்துல கையவச்சுகிட்டு ஓன் ஆள சைட் அடிச்சுட்டு வாரியா? நான் செத்த இந்த சமையலை நிம்மதியா முடிக்குறேம். ஒங்கம்மா எப்பவாதுதேம் அடுப்படியவே எம்பக்கட்டு ஒப்படைப்பாவ. நல்லா செய்யாதுபோயி அவியட்டு அறுப்பு வாங்கிக் கட்டிக்கிட வச்சுப்புடாத” என்று கார்த்திகா கூறினாள்.


“மைணி” என்று சிணுங்கியவள், “நான் என்ன செய்றேம் ஒங்கல?” என்று கேட்க,


“இங்கனைக்கும் அங்கனைக்கும் அம்புட்டு மொற நடையா நடக்குறியே. எனக்கு வேல ஆவமாட்டுதுடியம்மா” என்று கூறினாள்.


இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே வளவனும் வந்து கூடத்தில் அமர்ந்துவிட,


“மைணி மைணி மைணி” என்று கார்த்திகா தோளைச் சுரண்டிய தனா, “அண்ணே வத்துடுச்சு” என்றாள்.


“சரிட்டி இப்ப என்ன?” என்று கார்த்திகா கேட்க,


“அவுக மொகத்த பாருங்களேம். எம்புட்டு வெறயலாருக்காவ? அதேம் விக்ரம் அண்ணாக்கே தெரிஞ்சுருச்சே வளவன் அண்ணாட்ட சொல்லிடுவனு அம்புட்டு மொற சொன்னியேனே கேட்டாவலா? இப்பத பயத்த பாருங்களேம்?” என்றாள்.


“அப்படியில்லட்டி. தெரியாதவோட்ட எதையும் தைரியமா சொல்லிபுடலாம். தெரிஞ்சவியட்ட சொல்லத்தேம் தயக்கமாருக்கும். அவியளும் அண்ணேனும் தெரியாதவக இல்லனாலும் கொழுந்தரோட இருக்குறாப்ல அவியளோட என்னேரமும் இருக்குறதில்லையே? இம்புட்டுநா கூடவே ஒண்டிகிட்டு இருத்தானே இதுக்கானு நினைச்சுபுடுவாவளோனு பயமாருக்குமில்ல? பாவம் அண்ணேனே கொழுந்தருட்ட பேச அச்சப்பட்டுகிட்டு இருக்காவ. நீ அவியள நளியடிக்குற?” என்று கார்த்திகா கேட்க,


“இஞ்சாருடா. அண்ணேனுக்கு சப்போட்டா பழத்த” என்று நொடித்துக் கொண்டு வெளியே எட்டிப் பார்த்தாள்.


அங்கு பயத்துடன் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் நண்பனைப் பார்த்த வளவன், “என்னம்லே ஒனக்கு? ஏன் பேயடிச்சதாட்டும் விழிக்குறவ?” என்று கேட்க,


வடிவேலு தயக்கத்துடன், “மாப்ள.. ஓங்கிட்ட ஒன்னு சொல்லனும்” என்றபடி சுற்றி முற்றிப் பார்த்தான்.


சுயம்புலிங்கமும், தெய்வநாயகியும் பத்திரிக்கைக் கொடுக்கும் விடயமாக சென்றிருந்தனர். இருந்தும் யாரும் வந்துவிடுவரோ என்ற அச்சத்துடன் பார்த்துக் கொண்டான்.


அவன் செயல்களைப் புன்னகையுடன் வேடிக்கைப் பார்த்த வளவன், “ரொம்பத்தான் அச்சப்படுறலே. எங்கூட்டுக்காரனுக்கு எந்தங்கச்சிய கொடுக்க நான் ஏம்லே வில்லன் வேலையெல்லாம் பாக்கப் போறேம்? தெரிஞ்சா எனக்கு சந்தோஷம்தானலே?” என்று கூறிவிட, வடிவேல் அதிர்ந்து எழுந்தான்.


சமையலறையில் பெண்கள் ஆச்சரியமாய் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்துக்கொள்ள, விக்ரமன் மெல்ல புன்னகைத்தான்.


“மைணி உங்க அவியளும் சிரிக்காவ. விக்ரமண்ணேக்கு, வளவன் அண்ணேக்கு தெரியுமுனு தெரியுமா?” என்று உள்ளே தனம் கேட்க,


“தெரிலியேட்டி. அவோளுக்கு தெரியுமோ?” என்று கார்த்திகா பதில் கேள்வி கேட்டாள்.


அங்கே வடிவேல் அதிர்வாய் நோக்க, “ஏம்லே மக்கா எனக்கு எப்பவோ தெரியும்லே உன் லவ்சு. நீயா சொன்ன பொறவு கேட்டுப்பம்னுதேம் அமைதியாருந்தேம். லவ்ஸ மறைக்கானாம். எங்கூடவே சுத்துறவேன் எந்தங்கச்சிய எப்படி பாக்கான்னு கூடவாலே கவனிக்காமருப்பியேன் நானு?” என்று வளவன் கேட்டான்.


வடிவேல் அவன் சொற்களில் பதற,


“ஓம் பார்வைல தப்பா ஒன்னுத்தையும் காணாததாலதாம்லே நீ இன்னமும் எங்கூட்டுக்காரனா இருக்கவ. நாயமான ஆசையோட நீங்க ரெண்டேரும் காத்திருக்கீயனும் எனக்குத் தெரியும். அப்றம் எங்கல்யாணத்துக்கு துணி எடுக்கப் போனப்ப கடைய ரெண்டகம் பண்ணி எந்தங்கச்சிக்கு சீலையெடுத்தியே அதுவும் எனக்குத் தெரியும்” என்று கூறினான்.


வடிவேல் விக்ரமை நோக்க, “எனக்கும் உன் லவ் மேட்டரு தெரியும், அவேனுக்கும் தெரியும். ஆனா அவேனுக்குத் தெரியும்னு எனக்கும் எனக்குத் தெரியும்னு அவேனுக்கும் பொடவை எடுத்த பொறவுதேம் தெரியும். நீ பண்ண அலுச்சாட்டியத்தையும் ஓங்கூட நானும் சுத்துனதையும் வச்சே கண்டுகிட்டு கேட்டியான். நானும் ஆமான்னுட்டேம்” என்று விக்ரம் கூறினான்.


கண்களில் சிரிப்புடன் நண்பன் முன் வந்து நின்றவன், “கூடவே சுத்துனது இதுக்குத்தானானு கேக்குறளவு ஓங்கூட்டுக்காரன் ஒன்னைய புரிஞ்சுக்காம இல்லலே” என்று கூற,


உணர்ச்சிப் பிரவாகத்துடன் நண்பனை வடிவேல் அணைத்துக் கொண்டான்.


சமையலறையிலிருந்து இக்காட்சியைக் கண்ட தனலட்சுமிக்குக் கண்கள் கலங்கிப் போனது.


அவளைத் தோளோடு அணைத்துக் கொண்ட கார்த்திகா, “வாயாடி மங்கம்மா, என்ன கண்ணெல்லாம் கலங்குறவ?” என்று கேட்க,


சிரிப்பும் கண்ணீருமாய், “சந்தோஷமாருக்குது மைணி” என்றாள்.


“ஏம்லே?” என்று வளவன் நண்பன் தோளில் அடிக்க,


“சந்தோஷமாருக்குலே” என்றான்.


“இஞ்சார்ரா, ஒன்னு போல பேசுதீயலோ?” என்றபடி கார்த்திகா தனாவைத் தள்ளிக்கொண்டு வர,


ஆண்கள் மூவரும் அவர்களை நோக்கினர்.


“ப்ச் மைணி” என்று செல்லமாய் அண்ணியிடம் தனா கோபம் போல் சிணுங்க,


இரட்டையர்கள் சிரித்தனர்.


வடிவேலு தன்னவளை புன்னகையுடன் நோக்க, தனாவை அவன் அருகே நிறுத்திவிட்டு விக்ரமன் அருகே சென்று நின்றாள்.


மூவரும் அந்த ஜோடியை புன்னகையுடன் நோக்க,


“பொறவென்ன? அடுத்தக் கல்யாணத்துக்குத் தேதிய குறிக்கத்தான?” என்று வாசல் பக்கம் குரல் கேட்டது.


அதில் பதறிக் கொண்டு தனாவும் வடிவேலும் நகர,


உள்ளே வந்த மகாதேவன், புன்னகையுடன் அவர்களை நோக்கினான்.


காதல் ஜோடி அவனை பதட்டமாய் நோக்க, மற்ற மூவரும் குழப்பமாய் நோக்கினர்.


“என்னம்லே? ஏன் அப்படி பாக்கீய என்னைய?” என்று கேட்ட மகாதேவன், வடிவேல் தோளில் கையிட்டு, “தம்பி நாங்களும் லவ்ஸு பண்ணி கட்டிகிட்டவக. ஓன் லவ்ஸு எனக்கு எப்பவோ தெரியும்” என்க,


“ஆகமொத்தம் அம்புட்டுபேருக்கும் தெரிஞ்சுருக்குது. நாந்தேம் தெரியலை போலருக்குனு நினைச்சுட்டு இருந்துருக்கேம்” என்று வடிவேல் கேட்டான்.


அதில் அனைவரும் கலகலவென்று சிரிக்க,


“அத்த மாமாக்கு தெரியாதுலே. அதுல சந்தேகம் வேணாம். இல்லாட்டி எங்கிட்ட அடுத்த தனத்துக்கு மாப்பிள்ளை தேடனும் மாப்ள. உங்க பக்கட்டு ஆளிருந்தா விசாரிச்சு சொல்லுவனு கேட்டிருக்க மாட்டாவ” என்று மகா கூறினான்.


அதில் அதிர்ந்து போன தனா, “என்ன அத்தான் சொல்றீய?” என்று கேட்க,


“ஆமாந்த்தா. ரெண்டு நா முன்னுக்கதேம் கேட்டாவ. நான் பாத்து சொல்லுதேம், மொதல வளவனுக்கு முடியட்டும் பொறவு பாப்பமுனு சொல்லி வச்சிருக்கேம்” என்றான்.


“ஆத்தே” என்று நெஞ்சில் கைவைத்துக் கொண்டு அவள் வடிவேலை நோக்க,


“பயப்படாத புள்ள‌. அப்படியெல்லாம் ஒன்னைய ஆருக்கும் கொடுத்துபுட மாட்டேம்” என்று வடிவேல் கூறினான்.


“ஓஹோ” என்று மற்றவர்கள் கோஷம் போட,


பெண்ணவள் வெட்கம் கொண்டு அவனைக் கண்டு சிரித்தாள்.


“போதும்லே. எங்கத்தையும் மாமாவும் வந்துபுட போறாவ” என்று மகாதேவன் கூற,


“வந்தா என்ன? எங்கூட்டுக்காரனுக்கு எந்தங்கச்சிய தரத்தானனு கேட்டுடப்போறோம்” என்று விக்ரமன் கூறினான்.


“இரும்லே. அவோ படிக்குறா. படிக்கட்டும்” என்று வடிவேல் கூற,


“சரிதாம்லே. முப்பத்தஞ்சு வயசுலதேம் பொறவு ஒனக்கு கல்யாணம்” என்று வளவன் கூறினான்.


“சரிதாம்லே” என்று சிரித்தவன், “ஓங் கல்யாணம் மொதல ரணகலமில்லாம முடியட்டும். பொறவு எங்கபக்கம் வாங்க” என்று கூற,


“அதுவும் சரிதேம்” என்று ஆயாசமான குரலில் அனைவருமே ஒன்றுபோல கூறினர். அதில் மீண்டும் சிரிப்பளைத் தொடர்ந்து அந்நாளை மிக அழகாய் மாற்றியது.


“அம்புட்டு பேருக்கும் ஓங் கல்யாணம் முடியுறதுல எம்புட்டு ஆயாசம் பாரு” என்று மகாதேவன் சிரிக்க,


“எனக்கே அப்புடித்தேம் இருக்கு அத்தான். எங்கிட்டிருந்து எப்ப என்ன வெடிக்குமோனு வெறயலாருக்குது” என்று வளவன் கூறினான்.


“கண்ணாலமுன்னா அப்புடித்தேம் இருக்கும்லே. இந்தா எங்கக் கல்யாணத்துல வாராத ஒடக்கா? ஓங்கூடப் பொறந்தவேன் கல்யாணத்துல இல்லாத வம்பா? நாங்கெல்லாம் கட்டிகிட்டு இப்பத சந்தடிப் படல? ஒனக்கும் அதெல்லாம் அந்த புள்ள கையால வாரியாலயே எள்ளு கில்லுயெல்லாம் அடிவாங்குற குடுப்பன இருக்கும். அதெல்லாம் வெசனப்பாடத காத்திரு” என்று மகாதேவன் கூற,


அனைவரும் கலகலத்து சிரித்தனர்.


“அப்ப ஏங்கூட்டுக்காரனுக்கு குத்துபோனிலருந்து சிப்பலு வட்டிலு வார அம்புட்டுலயும் அடிதேம்னு சொல்லுவ அத்தான்” என்று சந்ததி சாக்கில் வளவன் வடிவேல் காலை வார,


“நான் ஏம் அவியள அடிக்கப்போறேம்?” என்று தனம் கேட்டாள்.


“இப்புடித்தேம் ஒங்க அக்காவும் கேட்டுச்சு” என்று மகா பெருமூச்சுவிட, அவன் அலைபேசி அதிர்ந்து ஒலித்தது.


“எங்க இருக்கீய? சுட்டு வச்ச தோச ஆரிகிட்டு கெடக்கு. வாரியலா இல்ல வாரியலாலயே நாலு போடவா?” என்று அவள் கத்தியது ஒலிபெருக்கியே இல்லாமல் அனைவருக்கும் கேட்க, தலைதெரிக்கக் கிளம்பிச் சென்ற மகாதேவனைக் கண்டு அனைவரும் மீண்டும் வெடி சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02