திருப்பம்-26

 திருப்பம்-26



‘காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்…

தேடிப்பிடிப்பதுந்தன் முகமே…

தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி…

காட்சிக்குள் நிற்பதும் உன்முகமே…


என்னைப் பற்றி எனக்கே…

தெரியாத பலவும் நீ அறிந்து நடப்பதை வியப்பேன்…

உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்…

நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்…


போகின்றேன் என நீ பல நூறு முறைகள்…

விடை பெற்றும் போகாமல் இருப்பாய்…

சரியென்று சரியென்று உனைப் போகச் சொல்லி…

கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்…

கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்…’


என்று அவனவள் குரல் அந்த கேசெட்டில் ஒலித்தது.


நாளைய நாள் அவர்கள் வாழ்வின் பொன்னான நாள். ஆம்! அவர்களது திருமண நாள். 


அன்றைய காலை அவளுக்கு எதிரே தன் குடும்பம் சூழ அமர்ந்து திருமணத்தினை நிச்சயித்திருந்த தருணம் அவனை அத்தனை இதமாய் உணர வைத்தது.


எதிரெதிரே இரு குடும்பமும் அமர்ந்திருக்க, சுயம்புலிங்கம் அருகே அவர் மனைவி என்ற ஒரே உறவிற்குக் கட்டுப்பட்டவராய் தெய்வநாயகி அமர்ந்திருந்தார்.


அவரது பிடித்தம் பிடித்தமின்மை என இரண்டையும் வெளிப்படுத்தாத முகத்தில் மனம் சுனங்கி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட சச்சிதானந்தம் மற்றும் தாட்சாயணிக்கு, எள்ளும் கொள்ளும் வெடித்துவிடும் முகத்துடன் நின்றிருந்த திரிபுராவைக் கண்டு பயமே வந்துவிட்டது.


ஆனால் அனைத்தையும், பூரிப்பும் நாணமும் ததும்ப சபைக்கு வந்து கரம் கூப்பி வணக்கம் வைத்துவிட்டு அமர்ந்த மகளைக் கண்டதும் காற்றாய் போனதென்றாலும் மிகையாகாது.


அவர்கள் இருவருக்கும் உடன்பாடு இல்லை என்பது தெரிந்தாலும் விருப்பமின்மையும் இல்லை என்பது புரிந்தது தான் என்றாலும் பெற்றவர்களாய் மகனிள் வாழ்வு புகுந்த வீட்டில் சிறப்பாய் அமைய வேண்டுமே என்ற ஐயமும் இருக்கத்தான் செய்தது. பலர் பலவித உணர்வுகளை உள்ளை அடைத்துக் கொண்டு அமர்ந்தபோதும் நடக்க வேண்டியவயை அனைத்தும் சரிவர நடந்துகொண்டேதான் இருந்தது.


“சுயம்புலிங்கம் மற்றும் தெய்வநாயகியின் மகனான திரு. திருமாவளவனுக்கும், சச்சிதானந்தம் மற்றும் தாட்சாயணியின் மகளான செல்வி. சங்கமித்ராவுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது” என்று பத்திரிக்கை வாசிக்கப்பட்ட நிமிடம், இரு உள்ளங்களும் விழிகள் வழித் தங்கள் நேசத்தைப் பரிமாறிக் கொள்ள, அது வடிவேலின் புகைப்படத்தில் அழகிய நகலாய் இடம் பெற்றது.


“ம்ம்.. கணக்கு வெச்சுகிடுதேம். எங்கண்ணே நம்ம கல்யாணத்துக்கு இப்படிலாம் போட்டோ புடிக்கனும் ஆமா” என்று மெல்லிய குரலில் தனலட்சுமி கூற,


“அதெல்லாம் என் கூட்டுகாரன் படியா செய்வியான். அப்பிடியே செய்யிலினாலும்தான் பிரச்சினை என்னங்கேம்?” என்று வடிவேலு கூறினான்.


“இஞ்சார்ரா.. விட்டுகுடுக்க மாட்டீயலே” என்று அவள் சிரிக்க,


“ஏங்கூடக்காரன நான் எப்பவுமே விட்டுக்குடுக்க மாட்டேம்தேம். ஆனா அங்கன உங்கக்கா நம்மளத்தேம் பாக்குறாவோ. இப்பத நீயு கம்மினு போறியா?” என்றுவிட்டு நகர்ந்தான்.


'அக்கா' என்றதும் பதறித் திரும்பியவள் தன்னைக் குறுகுறுவென நோக்கும் தீபிகாவைக் கண்டு பெருமூச்சு விட்டு, ‘ஈ’ எனப் பல்லைக் காட்டி அசடுவழிந்துவிட்டு நகர்ந்தாள்.


நிச்சயம் முடிவானதும் அனைவருக்கும் உணவிடப்பட, அந்த இடைவெளியில் அவர்களது காதல் கடிதங்கள் பரிமாறப்பட்டது. திருமணத்திற்கு முன் பரமாறப்படும் கடைசி கடிதம் என்பதால் அக்கடிதங்கள் கூடுதல் சிறப்புப் பெற்றது.


அந்த நினைவுகளோடு திருமாவளவன் கடிதத்தைப் பிரிக்க,


'அன்புள்ள திருமாலுக்கு,


அனேகமா இதுதான் நாம்மிடயே கல்யாணத்திற்கு முன் பகிரப்படும் கடைசி கடிதமா இருக்கும். கொஞ்சம் பழைய டயலாக்கா இருந்தாலும் என் மனசுலருந்து வரும் வார்த்தைகள்தான்.. மனதால் ஏற்கனவே உங்களுக்கு மனைவியா என்னை உருவகிச்சுட்டேன். அந்த பந்தத்திற்கு தாலியால் உருவம் கொடுத்து ஊரறிய உங்கக் கை பிடிக்கப் போறேன்’ என்று வாசித்தவனுக்கு அழகிய பைந்தமிழில் தன் இன்பம் மொத்தமும் விளக்கிட ஒரு வரி இல்லையே என்ற எண்ணமே.


‘அனேக முரண்பாடுகளோட பயணம் செய்து இன்னிக்கு திருமணத்தில் வந்து நிற்குது. நாளைத் தொடரவும் போகுது. எனக்கானவரை இப்படி இப்படிலாம் பார்த்துக்கனும்னு எனக்கு ஏகப்பட்டக் கனவுகள் உண்டு. அதேபோல என்னை நீங்க இப்படி இப்படி பார்த்துக்கனும்னு கொஞ்சம் ஆசைகளும் இருக்கு. என்னதுனு கேட்காதீங்க. தினம் தினம் கல்யாணத்துக்குப் பிறகு பகிர்ந்துக்கலாம். நமக்குதான் இனி வாழும் வாழ்க்கை மொத்தமும் இருக்கே' என்று வாசித்தவன் தன் பச்சரிசிப் பற்கள் பிரகாசிக்கப் புன்னகைத்து, ‘இல்லாமையா? இனி வாழும் காலம் எல்லாம் உனக்காக, உன்னோடதான்டி' என்று நினைத்துக் கொண்டான்.


'ரொம்ப ஆர்வத்தோடு காத்திருக்கேன். நாளைக்கு நாள் எப்படிலாம் உணரப்போறேன்னு அத்தனை பூரிப்பா இருக்கு. அதேநேரம் கொஞ்சம் பயமாவும் இருக்கு. பதினைந்து வயது வரை அழகழகா தெரிந்த திருமண பந்தங்களுக்குப் பின்னாடி இருக்கும் பரபரப்புகளைத் தெரிஞ்சுகிட்டப் பிறகு இயல்பாவே அதுல கொஞ்சம் பயமும் உருவாகியிருக்கே. நீங்க நல்லா பாத்துப்பீங்களானுலாம் பயமில்லைங்க. நா..நம்ம வாழ்க்கைய எப்படி கொண்டும் போவோம்? எனக்கு சொல்லத் தெரியலைபா. அத்தைக்கு வேற விருப்பம் இல்லாம நான் அத்தையைத் தப்பா சொல்லலைபா. எனக்கு எப்படி சொல்லனு தெரியலை. அவங்களுக்கு என்னைப் பிடிக்காம போயிடாதுல? என்னவோ நாளைக்குக் கல்யாணம்னு வந்து நிற்கும்போது ரொம்ப தடுமாற்றமா இருக்கு. நிச்சயம் நீங்க என்கூட இருப்பீங்க என்பது எனக்கு உறுதி. இருந்தாலும் கொஞ்சம் நர்வஸ்’ என்று வாசித்தவனுக்கு அவளது அச்சம் தெளிவாகவே புரிந்தது.


'எனக்குமே இத நெனைச்சுக் கொஞ்சம் பயமாதான் இருக்குடி' என்று எண்ணிக் கொண்டு அவன் தொடர,


'ஆனா அத்தனையையும் தாண்டி ரொம்ப ஆர்வமாருக்கு. தாலி கட்டும்போது என் கண்ணைப் பார்த்துட்டே கட்டுங்க. நான் சங்கியை ஃபோட்டோ எடுக்க சொல்லிருக்கேன் அதை' என்று வாசித்து பக்கென்று சிரித்தான்.


பிறகு ஏதேதோ எழுதி மீண்டும் எழுத்தே தெரியாத வண்ணம் அடித்து வைக்கப்பட்டு பல கிறுக்கல்கள் நடந்திருந்தது. 


'ஷ்ஷ்.. எவ்வளவு அடித்தல் திருத்தல் பாருங்க. எனக்கு ரொம்ப தடுமாற்றமா இருக்கு இதை சொல்ல. பேப்பர்லயே இவ்வளவு லட்சனம்னா சத்தியமா நேர்ல வார்த்தை வராதுங்க. தப்பா எடுத்துக்காதீங்க. கல்யாணத்துக்கு அப்றம் மித்தது எல்லாம் நாம கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிப்போமா? தப்பா எடுத்துக்காதீங்க. உங்க மேல நம்பிக்கை இல்லாம எல்லாம் இல்லை. தப்பா எடுத்துக்காதீங்க. எனக்குக் கொஞ்சம்.. தப்பா எடுத்துக்காதீங்க' என்று வாசித்தவன் கண்களில் நீர் வர வாய்விட்டு சிரித்தான்.


'ஆத்தே.. பயப்பத்தி. எம்புட்டு ‘தப்பா எடுத்துக்காதீங்க'? கோம்ப. போடி’ என்று சிரித்தவன் வாசிப்பைத் தொடர,


'எனக்கு எப்படிச் சொல்லனு தெரியலை. ஆனா உங்களுக்குப் புரியும்’ என்று எழுதியிருந்தாள்.


தான் தெளிவாகக் கூறவில்லை என்று புரிந்தும் தன்னுணர்வை தன்னவன் புரிந்துகொள்வான் என்று அவள் நினைப்பதெல்லாம் எப்படியான நம்பிக்கை? தன்னவள் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை உணரப்பெற்றவனுக்கு உலகை கொடுத்து ஆளச் சொன்னால் கூட, கையளவிருக்கும் என் காரிகையின் இதயம் போதும் ஆளுவதற்கு என்று கூறிடத்தானே தோன்றும்?


‘அடடா.. காதல் எத்தனை அழகானது?’ என்று உணர்ந்தவன் நிறைவாய் புன்னகைத்தான்.


'வேற என்ன சொல்லனு தெரியலை. எல்லாரையும் விசாரிச்சேன்னு சொல்ல வேண்டாம். ஆனா விசாரிச்சுக்குறேன்' என்பதோடு அவள் கடிதம் முடிய, அதைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு சாய்ந்து அமர்ந்தான்.


மனதில் அத்தனை நிம்மதி ஊர்வலம் வந்தது. நாளைய நாள் தங்கள் வாழ்வின் பொன்னான நாள் என்ற எண்ணம் ஒன்றே போதும் இவ்வுயிரில் இன்ப ஊற்று ஜீவித்திட என்பதே அவன் அகமெங்கும் வியாபித்த உணர்வு.


அங்கே காரிகையைப் பற்றித்தான் சொல்லவும் வேண்டுமா?


அவனைப் போலவே அவன் கொடுத்தக் கடிதத்தை நெஞ்சோடு பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.


'நாளைக்கு இந்த திருமாவளவனோட திருமதியா வாரயிருக்க சங்கமித்ராவுக்கு திருமண நாளக் கொண்டாட பொன்னான தாலி காத்துட்டு இருக்குன்ன? கழுத்து ரெடியா?’ என்ற கேள்வியோடு முடிந்திருந்த அவன் கடிதம் கொடுத்த உணர்வின் தித்திப்பு அவள் உடலெங்கும் எதிரொலித்து அடங்கியது.


உடனே மனதில் ஒரு பாடல் தோன்ற அதை இணையத்தில் பதிவிறக்கம் செய்து தனது புலனத்தில் நிலைபாடாக வைத்திருந்தாள்.


ஐந்து நிமிடம் அவன் பார்ப்பானா மாட்டானா என்று கூட காத்திருக்க பொறுமையற்றவளாய் அவனுக்கு அழைப்பு விடுத்திட, அதிர்ந்து ஒலித்த அலைபேசியை அவன் கையிலெடுத்த நேரம் அழைப்பைத் துண்டித்திருந்தாள்.


அவள் செயலின் காரணம் அறியாமலே காரியம் புரிந்தவனாய் திருமாவளவன் அவளது நிலைபாடை காணவேண்டி புலனம் வந்தான்.


‘அடி நீ இங்கே…

அடி நீயிங்கே…

நீ இங்கே… நீ இங்கே…

பூ சூடும் ஆள் எங்கே…

தாலி கட்ட கழுத்து அரிக்குதே…

இந்த சிறுக்கி மக உசிர உருக்கி குடிக்க…

அந்த முரட்டு பயலும் வருவானே… இந்த சேலை வாங்கிக்கொண்டு…

சேலை வாங்கிதான்…

சொந்தச்சேலை தருவானே…’ என்று ஒலித்தப் பாடலைக் கேட்டு மந்தகாசமாய் புன்னகைத்தவன், இதய வடிவங்களை அந்த நிலைபாட்டிற்கு பதிலாய் அனுப்பினான்.



அந்த இன்பமான மனநிலையோடு இருவரும் அடுத்த நாள் நிகழ்த்தப் போகும் தங்களின் அரும்பெரும் காதல் அங்கீகாரத்தை எதிர்நோக்கியபடி உறங்கினர்.

மறுநாள் காலை மிக அழகாய் புலர்ந்தது. காலை அவரவர் வீட்டிலிருந்து திருமண கோலத்தில் மிகுந்த பரபரப்போடு தயாராகினர் இருவீட்டாரும்.


“ஏ திரிபுரா எங்க போற நீ? எங்க ஓன் வீட்டுக்காரரு? ரெண்டேரும் மணைக்கு நிக்கனுமில்ல? சட்டுபுட்டுனு போயி ரெடியாகிட்டு வா” என்று தெய்வநாயகி கூற,


“ஆமா அதுவொன்னுதேமா கொற. சவட்டியெடுக்காத கொறையா மருவாத கொடுத்துப்புட்டீய இந்த கல்யாணத்துக்கு. இதுல நாங்க மணைக்கு வேற நிக்கோனுமாம்” என்று நொடித்துக் கொண்டாள்.


“இப்ப பேசுற பேச்சா க்கா இது?” என்று அங்கு வந்து நின்ற தீபிகா பதட்டத்தை மறைத்தக் குரலில் கேட்க,


“ஒனக்கென்னடியம்மா? ஓம் மருவாதிக்கும் ஓம் புருஷன் மருவாதிக்குமென்ன கொறையிருக்குது? என்னையும் எங்கம்மாவையுந்தான அவிய மதிக்காம போயிபுட்டாவ? கட்டிக்கிட்டு வாரவ எங்கம்மாவ என்னத்தனு மதிக்கப்போறாளோனு எனக்குத்தேம் வெசனமாருக்கு” என்று திரிபுரா கூறினாள்.


'அட ராமா.. இருந்து இருந்து இந்தக்கா இன்னிக்குத்தான் ஒடக்கக் கூட்டனுமாக்கும்?’ என்று மனதோடு நொந்தவள், “ம்மோவ் அங்கன ஐயா உன்னையத்தேம் தேடுறாவ. நீ போ” என்று அன்னையை விரட்டிவிட்டு, “அக்கா அந்த புள்ள அப்படியெல்லாம் இல்லக்கா. தங்கமான புள்ளக்கா. நீ பேசித்தேம் பாறேம். பொறவு ஒனக்கே புடிச்சுப்போவும் அவோள” என்று திரிபுராவிடம் கூறினாள்.


அடுத்தும் ஏதோ பேச வந்தவள், “அம்மா” என்று அவள் அருகே ஓடிவந்த மகிழ்வானன், “அம்மா புது டிரஸ்ஸு” என்று தன் ஆடையைக் காட்டவும் மனம் உருக தங்கை மகனை அள்ளி முத்தமிட்டு, “ஒனக்கென்னடா கண்ணா கொற? ராசகுமாரனாட்டம் இருக்கவ” என்று கொஞ்சினாள்.


மகன் வந்து அக்காவின் மனதை திசை திருப்பியதில் பெருமூச்சு விட்டவள் அடுத்தடுத்த வேலைகளைத் தொடர, அனைவருமாய் புறப்பட்டு வெள்ளிமலை முருகன் கோவிலுக்குச் சென்றனர்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02