திருப்பம்-27
திருப்பம்-27
அங்கு இவர்களுக்கு முன்பே கீழே பெண் வீட்டார் தயாராக நிற்க, அனைவரும் புன்னகையாய் ஒருவரை ஒருவர் வரவேற்றுக் கொண்டனர்.
“சொந்தபந்தமெல்லாம் வர ஆரமிச்சுட்டாங்களோ?” என்று தீபிகா கேட்க,
“ஆமாந்தாயி. இன்னும் நேரமிருக்கு. இருந்தாலும் வெரசா போயிடுவோம்” என்று சுயம்புலிங்கம் கூறினார்.
மேலே கோவிலுக்கு வாகனத்தில் செல்ல சாலை வசதி இருந்தும், படியேறி செல்வதையே பெரியோர் விரும்பினர்.
அதன்படி அனைவரும் படிகளில் ஏறத் துவங்க, முன்னே சென்றுகொண்டு அவ்வப்போது அவளைப் பின்புறம் திரும்பிப் பார்க்க இயலாது தவித்துக் கொண்டிருந்தான் திருமாவளவன்.
ஆனால் அவனுக்கு நேர்மாறாக சங்கமித்ரா அழகுபட தயாரான தன்னையும் ரசிக்கவில்லை, தன்னைக் கண்களால் பருக ஆசைகொண்டு தவித்த அவளவனையும் ரசிக்கவில்லை.
சூரியன் மெல்ல எட்டிப் பார்க்கத் துவங்கி, குளிர் காற்று உடலெங்கும் அணைத்துக் கொண்டு இதமான உணர்வைக் கொடுத்த அந்த இயற்கை எழிலையே ரசித்துக் கொண்டிருந்தாள்.
அவள் அருகே வந்த தனலட்சுமி, “மைணி அம்சமா இருக்கீய’’ என்று கூற,
நாணப் புன்னகையுடன், “தேங்ஸ்” என்றாள்.
தீபிகாவிடம், கார்த்திகாவிடம், ஏன் திருவிக்ரமனிடம் கூட ஓரளவு நன்றாகப் பேசப் பழகியிருந்தாள். ஆனால் தனாவுடன் பேசும் வாய்ப்பு பெரும்பாலும் அமைந்திராததால் அவள் தன்னைவிட சிறியவளா பெரியவளா என்பது கூட சங்கமித்ராவிற்குத் தெரிந்திருக்கவில்லை.
“ஒங்கக்கூட பெரிய மைணி சின்னக்காலாம் ராசியாயிட்டாவ. எனக்குத்தேம் பேச நேரமமையலையாட்டு” என்ற தனலட்சுமி, “நான்தேம் இந்த வீட்டோட கடகுட்டி தனம். உங்க வயசுதேம் எனக்கும். ஒங்களவிட ஒன்னு ரெண்டு மாசந்தேம் எளையவளாருப்பேம். இன்கம் டேக்ஸ்ல பீ.எச்.டீ பண்றேம்” என்று படபட பட்டாசாய் பேச,
அழகாய் புன்னகைத்த சங்கமித்ராவிற்குதான் என்ன பதிலாற்றவென்று தெரியவில்லை.
ஆனால் தனத்திற்கு அதைப்பற்றிய கவலையெல்லாம் இல்லை போலும். அடுத்துக் கேள்விகளைத் தொடுக்கத் தயாராகியிருந்தாள்.
“நீங்க எங்கன படிச்சீய மைணி?” என்று தனம் கேட்க,
“மெட்ராஸ்லங்க” என்றாள்.
“அடடே இதென்ன வாங்க போங்கன்னுட்டு? வா போனு சொல்லத்தான? 'டி' போட்டு கூப்பிடாலுந்தான் என்னத்தச் சொல்லப் போறேம்?” என்று தனம் கேட்க,
லேசாய் புன்னகைத்தவள், “அப்ப நீங்களும் என்னை ‘வா’ ‘போ’னே சொல்லலாம் தானே?” என்று கேட்டாள்.
“எனக்கொன்னும் பிரச்சினையில்ல. ஒங்களுக்கு சரினா நான் ரெடி” என்று தனம் சிரிக்க,
அவள் தலையில் செல்லமாய் குட்டிய கார்த்திகா, “அவோள ஏம்புள்ள பயப்படுத்துறவ?” என்று கேட்டாள்.
“ஆரு நானா? நீங்கதேம் மைணி பொறத்தால குட்டிவச்சு பயங்காட்டுதீய. எங்களுக்கும் ஆளுருக்கு. போட்டுத் தந்துபுடுவம் ஆமா” என்று முதலில் சத்தமாக பேசியவள் பின்பாதியை மெல்லமாய் சொன்னபோதும் சங்கமித்ராவிற்கு அது கேட்கவே செய்தது.
கார்த்திகா சத்தமாய் சிரித்து, “இதயும் சத்தமா சொல்லத்தான?” என்று கேட்க,
முன்னே செல்லும் வடிவேலைப் பார்த்து பெருமூச்சு விட்டவள், “அவிய சரினு கண்ண காட்டிபுடட்டும்.
கோவில் உச்சில நின்னு ஊரகூட்டி சொல்லிபுடுதேம்” என்றாள்.
“என்னட்டி சொல்லப் போறவ?” என்று தீபிகா கேட்படி அவள் அருகே வர,
“கேளுங்க மைணி. ஒங்க தங்கச்சி என்னத்தையோ சொல்லப்போறாளாம்ல?” என்று கார்த்திகா நக்கலடித்தாள்.
பேய் விழி விழித்த தனம், சட்டென்று, “இந்தா புது மைணி எங்கண்ணாவ லவ்ஸு பண்றாவனுதேன் சொல்லப்போதேம்” என்று கூற,
பௌர்ணமி நிலவைப் போல் விழிகள் வட்டமாய் விரிய, தனத்தையும் மற்றவர்களையும் திகைத்துப் போய் பார்த்தாள்.
அதில் பெண்கள் மூவரும் பக்கென்று சிரித்துவிட,
“பாத்தீயாமா? வாரக்குள்ள எப்புடி காக்கா புடிச்சுபுட்டானு? ஓம் புள்ளையையும் அப்படி புடிச்சு வச்சதாலத்தான அவேன் நம்ம பேச்ச கேக்கல” என்று திரிபுரா தன்னுடன் அவள் இப்படி சிரித்துப் பேசவில்லையே என்ற ஆதங்கத்தில் அன்னையிடம் இவ்வாறு பேச, அவரும் தன்னிடம் அவள் வந்து பேசவில்லையே என்ற ஆதங்கத்துடன் முகத்தைச் சுளித்துக் கொண்டார்.
“இந்த கோவிலுக்கு வந்துருக்கீயலா மைணி?” என்று தனம் கேட்க,
“வாங்க போங்க சொல்ல வேணாம்னு சொன்னீங்க?” என்று பதில் கேள்வி கேட்டாள்.
“இஞ்சார்ரா! மைணி வந்ததுலருந்து இப்பத்தேம் தெகிரியமா நாலு வார்த்தை எங்கிட்ட பேசிருக்காவ” என்று தனம் கூற,
“அவோளுக்கு பேச நேரமில்லாதபடிக்கு நீயே பேசிபுடுதீயே” என்று தீபிகா கூறினாள்.
“அதுசரி” என்று நொடித்துக் கொண்டவள், “இந்த கோவிலுக்கு வந்துருக்கீயா மைணி?” என்று கேட்க,
“இல்ல வந்ததில்லைடா” என்றாள்.
“நீ எப்போ இந்தூருக்கு வந்த?” என்று கார்த்திகா கேட்க,
“நான் படிச்சதெல்லாம் வெளியூருலதான். படிச்சு முடிச்சிட்டு அங்க ஒரு மூனு மாசம் ஒரு ஸ்கூல்ல வேலைப் பார்த்துட்டு அப்றம் மெடிகல் கோடிங் பண்ணி இங்க வேலைக்கு வந்தேன். ஏழு எட்டு மாசம் தான் இருக்கும் இங்க வந்து” என்று கூறினாள்.
“அம்புட்டுத்தானா? சரி வா. இந்தூரோட மகிமய நாங்க சுத்தி காமிக்கோம் இனி” என்று தனம் கூற,
புன்னகையுடன் தலையசைத்தாள்.
“இந்த மலையில வெயில் பட்டு மினுங்கும்போது வெள்ளி மாதிரி இருக்குமாம். அதான் இந்த மலைக்கு வெள்ளிமலைனு பேரு வந்ததா சொல்லுவாவ” என்று கார்த்திகா கூற,
“இந்த கோவிலுக்கு பக்கத்துல ஒரு மடம் இருக்கு. அங்கருந்து விசுவநாதருனு ஒரு பக்தரு சாமி கும்பிட வந்தாகலாம். இங்கன மலயுல எங்கேயும் தண்ணியே கிடையாது. அவரு தண்ணி குடிக்க வைக்க கீழதான் போய் வருவாராம். ஒருநா ரொம்ப தெவக்காமருந்துதுனு மனசு நொந்து அந்த முருகனுட்ட தண்ணி கேட்டு வேண்டிகிட்டதால கனவுல வந்த முருகன் கெணறு வெட்ட எடம் பாத்து சொன்னாவலாம். அந்த கெணத்து தண்ணியத்தான் இங்கன தீர்த்தமா தருவாவ. இங்கன முருகனே கொஞ்ச காலத்துக்கு துறவியா வந்திருந்ததாலாம் வரலாறு இருக்குது மைணி” என்று தனம் கூறினாள்.
“இந்த மல உச்சிக்கு போயி பாத்தா குருஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்னு நாலு வக நெலத்தையும் பாக்க முடியும் சங்கு. இங்கன புள்ளையலுக்கு கர்நாடக பாட்டு, பஜன பாட்டுலாம் கூட கோயிலாலுவ சொல்லித்தாராவ” என்று தீபிகா கூற,
அனைவர் கூறுவதையும் சிரத்தையுடன் கேட்டபடி மலையேறினாள்.
மேலே சென்றதும் மிதமான சூரிய ஒளி, குளிர்ந்த காற்று, தீபிகா கூறியதைப் போல், மலை, காடு, வயல், கடல் என அகத்திணை கூறும் நான்கு வகை நிலங்களையும் கண்டு ரசிக்கும் காட்சி என அத்தனை ரம்மியமாய் இருந்தது அந்த சூழல்.
கண்களில் அத்தனை ரசனையோடு சங்கமித்ரா சுற்றிலும் பார்க்க, தனது மனைவியுடன் முன்பே வண்டியில் மேலே வந்து ஏற்பாடுகளை சரிபார்த்திருந்த அவிநாஷ் அவள் அருகே சென்றான்.
அவனை பாதியிலேயே பிடித்துக் கொண்ட திருமாவளவன், “அண்ணே” என்க,
“டேய் தம்பி” என்று அவன் தோள் தட்டி, “ஜம்முனு இருக்கடா. ஒனக்கு இந்த சுருள் முடிதான் செம்ம” என்று கூறினான்.
“அட ஏன்னே நீங்க வேற” என்று தலைமுடிக்குள் கை நுழைத்துக் கோதிக் கொண்டவன், “என்ன எப்புடியிருந்து என்னத்த பிரயோசனம்? ஒங்க மச்சினி திரும்பிக்கூட பாக்கலியே என்னைய?” என்று சற்றே ஏக்கம் பூசிய குரலில் கூற,
அவிநாஷ் வாய்விட்டு சிரித்துவிட்டான்.
“நளியடிக்காதீய அண்ணே” என்று வளவன் கூற,
“ரொம்பத்தான் உருகுறடா தம்பி” என்றவன், “நான் போய் கூட்டிட்டு வரேன். பாப்பாக்கு இப்படி இயற்கை எழில் கொஞ்சுற எடம்னா ரொம்ப பிடிக்கும். அதான் உன்னத் திரும்பி பாக்காம சுத்திட்டு இருக்கா” என்று கூறினான்.
“சரிண்ணே” என்று அவன் புன்னகைக்க,
மீண்டும் அவன் தோள் தட்டிவிட்டுச் சென்றான்.
அவள் அருகே சென்ற அவிநாஷ், “பாப்பா” என்க,
“அத்தான்” என்று உற்சாகமாய் திரும்பியவள், “ரொம்ப அழகாருக்கு அத்தான். இத்தனை மாசம் இங்க வராம இருந்திருக்கோமேனு இருக்கு” என்று கூறினாள்.
அதில் புன்னகைத்தவன், “ஆற அமர ரசிக்கலாம் பாப்பா. நீ ரசிக்கலையேனு அங்க பாவம் ஒருத்தன் தவிச்சுகிட்டு இருக்கான்” என்று குறும்பு சிரிப்புடன் கூற,
சட்டெனக் கண்களால் வளவனைத் தேடியவள், கூட்டத்தில் தனது அப்பா மற்றும் மாமனாரிடம் பேசிக் கொண்டிருந்தவனைப் பார்த்தாள்.
கருகருவென்ற சுருள் கேசம் தொப்பிப் போல் அவன் தலைமேல் வீற்றிருக்க, அடர்த்தியான கண்கள், அதன்கீழ் நேரான நாசி, அதன் கீழே சிவந்த, செதுக்கி வைத்த இதழ்கள், அதன் இடையில் பச்சரியை அடுக்கி வைத்தார் போன்ற பற்களும் அதனில் அழகோவியமாய் ஒரு புன்னகையும்… நடுநடுவே அவன் சிரிக்கும்போதும், பேச்சினை கவனிக்கும்போதும் சுறுங்கி விரியம் அவன் புருவச் சிக்கலில் அத்தனை வாகாய் அவள் மனம் சிக்கிக் கொண்ட உணர்வு..
பட்டு வேட்டி சட்டையில் மிடுக்காய் கைகளை மார்பிற்குக் குறுக்கே கட்டிக் கொண்டு இரு பெரியவர்களிடமும் பவ்யமாய் பேசிக் கொண்டிருந்தான்.
பணிவில் கூட எத்தனை நிமிர்வு உள்ளதென்று வியந்து அவனை ரசித்தவள் கன்னங்கள் அவள் அனுமதியின்றி சிவந்து மிளிர்ந்தது.
அங்கு வந்த சங்கீதா “அஹம் அஹம்..” என்று தன் குரலை செறும, திடுக்கிட்டு சுயம் மீண்டதைப் போல் திரும்பியவள் முன், அவள் அக்காவும் அத்தானும் நக்கல் சிரிப்புடன் நின்றிருந்தனர்.
அதில் வெட்கம் கொண்டு நாக்கைக் கடித்தபடி அவள் தலைகுனிய, “வாயாடி.. வாடியம்மா. அம்மா கூப்பிடுறாங்க” என்று சங்கீதா கூறி அவளை அழைத்துச் சென்றாள்.
இருபக்க சொந்தங்களும் வரத் துவங்கிட, சில நிமிடங்களிலேயே கோவில் நிறைந்து வழியத் துவங்கியிருந்தது. அத்தனை அத்தனை சொந்தங்கள் நாயகன் வீட்டுப் பக்கம்…
ஒருகட்டத்தில் பெண் வீட்டாரே விழி பிதுங்கி தவிக்கத் துவங்கிடும் அளவு இருந்தது வந்த கூட்டம்.
இதில் போதாத குறைக்கு திருமணத்திற்கு வந்தோமா, உண்டோமா என்று இல்லாமல், ஆங்காங்கே மாப்பிள்ளை பக்க சொந்தம், சீர்வரிசை மற்றும் பெண்வீட்டு வசதிகளைப் பற்றியும், மாப்பிள்ளை வீட்டு வசதியைப் போல் அவர்கள் குணமுண்டா? பெண்ணை எப்படி நடத்துவர்? என்ற அதிமுக்கிய சந்தேகங்களைப் பற்றி பெண்வீட்டு சொந்தமும் புறணி பேசிக் கொண்டிருந்தனர்.
அதில் சில சின்னச் சின்ன வாய்சண்டைகளும் ஆங்காங்கே வெடிப்பதும் அணைவதுமாக இருந்தது. அவற்றை மணமேடியில் அமர்ந்துகொண்டு ஒருவித மிரட்சியுடன் சங்கமித்ரா நோக்க, “ஓய்” என்று அவள் அருகே அமர்ந்தவன் குரல் கொடுத்தான்.
சட்டென அவன் அழைத்ததில் திடுக்கிட்டு அவள் திரும்ப, அவள் மருண்ட விழிகளை ரசித்த வண்ணம், “கல்யாணம்முனா நூறு ஒடக்கு வாரதுதேம். அதெல்லாம் அங்கங்க இருக்கறவிய பாத்துப்பாவ. நீ, நாம, நம்ம கல்யாணம், இத பத்தி மட்டும் ரோசி. இந்த நொடிய மீட்டுத் தார தெம்பு நம்ம நினைவுகளுக்கு மட்டுந்தேம் உண்டு” என்று கூறினான்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள்!
அதில் தன்னவன் கைதேர்ந்தவன் தான் என்று மனதோடு மெட்சிக் கொண்டு அவள் புன்னகைக்க, ஐயர் மாங்கல்யம் அடங்கிய தட்டைக் கொடுத்துவிட்டார்.
சலிக்காமல் அனைவரிடமும் சென்று சங்கமித்ரா தங்கை முறைப் பெண் ஆசிர்வாதம் வாங்கிவர, இறைவன் சந்நிதியிலும் ஐயரிடம் வைத்து பூஜிக்கப் பட்டு கொண்டுவரப் பட்டது.
இருவரும் மங்கல வாக்கியங்களை ஐயர் உபயத்தில் பிழையின்றி உச்சரித்து, தங்கள் திருமணத்தினை அக்னி சாட்சியில் ஒப்புவித்துக் கொண்டனர்.
“கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்று கூறிய ஐயர், தாலியைத் தூக்கி அணைவரிடமும் காட்டி மாப்பிள்ளை கையில் கொடுக்க,
இரு கரங்களிலும் அதை பூபோல் தாங்கிக் கொண்டவன், எழுந்து நின்று அவள் புறமாய் குனிந்து, “காதலிச்சுதேம் கட்டிகிட்டிருக்கேம். அம்புட்டு ஒடக்கையும் அணைச்சு, நீதேம் வேணுமினு பிடியா நின்னது அம்புட்டுக்கும் நீதேம் புள்ள காரணம். என்னைய மனசார ஏத்துகிட்டியானு கேட்க மாட்டேம். அதுக்கு பதிலு எனக்கே தெரியும். எந்த பயமுமில்லாது வா. எனக்கு ஓம்மேலயும் ஒனக்கு எம்மேலயும் நம்பிக்க இருக்கவர நம்ம வாழ்க்கைய ஆராலயும் ஒன்னும் செய்யமுடியாது” என்று கூறியபடி அவள் கழுத்தில் மங்கல நாணயத்தினை அணிவித்தான்.
உணர்ச்சிப் பிராவகத்துடன் கண்கள் தளும்பி அவனைப் பார்த்தவள் இதழில், அவள் சொற்களால் வடிக்க இயலாத சந்தோஷம் பூத்திருந்தது.
அந்த காட்சி, அவள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சங்கீதா அலைபேசியில் நகலாய் பதிவானது.
சுற்றியிருந்த அனைவருமே மனமார அவர்கள் வாழ்க்கை செழிக்க இறைவனைப் பிரார்த்தித்தனர், தெய்வநாயகி, திரிபுரா உட்பட.
அனைவரின் ஆசிர்வாதத்துடன் அக்னியை வளம் வந்து தங்களில் சரிபாதையாய் தங்களை இணைத்துக் கொண்ட இருவரும், சென்று கருவறையில் நின்றிருந்த முருகனிடம் தங்கள் வாழ்வு சிறக்க மனமாற வேண்டிக் கொண்டனர்.
ஐயர் குங்குமத்தினையும் விபூதியையும் நீட்ட, விபூதியை அள்ளித் தன் நெற்றியில் பட்டையிட்டுக் கொண்டவன், அவள் நெற்றியில் கீற்றாய் பூசிவிட்டு, குங்குமத்தை தன் நெற்றியில் பொட்டாய் இட்டுக் கொண்டு அவள் வகுட்டில் அழுத்தமாய் பூசிவிட்டான்.
குங்குமத்திற்கு இணையாய், சிவந்து, பூரித்து, அந்த வாழ்வின் துவக்கத்தை மனப்பூர்வமாய் உள்வாங்கி, அவளவனுக்கும் அவ்வுணர்வுகளை விழிவழி கடத்தி, கண்களாலேயே அவனோடு கலந்து நின்றாள், அவ்வெள்ளி மலை முருகன் சாட்சியாய்.
Comments
Post a Comment