திருப்பம்-28

 திருப்பம்-28



மலையைச் சுற்றியிருந்த எழிலை மொத்தமும் தன் கண்களில் அடக்கியிருந்த அந்த ஜோடியைத் தன் புகைப்படக் கருவிக்குள் நகலாய் பதித்துக் கொள்ளும் முயற்சியில் இருந்தான் அப்புகைப்படக் கலைஞன்.


“ஏட்டி நேரசாமாச்சுல்ல? என்னத்த இம்பூட்டு நேரம் படம் புடிக்காவ?” என்று தெய்வநாயகிக் கேட்க,


“இன்னும் இருக்குத்தானம்ம? வந்தவகளோடதானே இம்பூட்டு நேரம் படம் புடிச்சாவ? இப்பத்தான் எல்லாம் சாப்பிட கலைஞ்சு போனாவனு அந்த போட்டாக்கார பய இவியள தனியா எடுக்க பொறத்தால கூட்டிபோயிருக்கியான்” என்று தீபிகா கூறினாள்.


திரிபுரா ஏதும் கூறுவாளோ? என்ற பயத்தோடு ஓரக்கண் பார்வை ஒன்றை தீபிகா வீச, அவள் வந்தவர்களை கவனிப்பதில் கவனமாய் இருந்தாள்.


அங்கே காடும் வயலும் படர்ந்திருக்கும் காட்சியை ரசித்தபடி நின்றிருந்த புதுமணத் தம்பதியரை அழகாய் படம் பிடித்தான் புகைப்படக் கலைஞன்.


“அண்ணே அப்படியே அண்ணி தோளுல கையபோட்டு புடிச்சுக்கோவ” என்று அவன் கூற,


திருதிருவென கருவிழிகளை உருட்டி அவனைப் பார்த்தாள்.


கீழிதழை உள்ளிழுத்து சிரித்தவன், பட்டும் படாமல் அவள் தோள் மேல் கையிட்டுப் புகைப்படம் எடுப்பவனை நோக்க, பாவையும் நாணம் படர்ந்த புன்னகையுடன் அவனைக் கண்டாள்.


“அண்ணே அப்புடியே நெத்தில முத்தம் கொடுங்க, மைணி லேசா அண்ணேன பாத்து தலைய சாச்சுகிடுங்க” என்று அவன் கூற,


விழிகள் வட்டமடிக்க அதிர்ந்து விழித்தாள்.


“ஏம்லே சவட்டியடிக்கபோதேம் ஒன்னய. கோயிலுக்குள்ள நின்னுகிட்டு என்னதிது? அதெல்லாம் ஒன்னும் வேணாம். சாதாரணமா எடு போதும்” என்று கூறிய திருமாவளவனைப் பார்த்து அருகே கன்னம் தாங்கியபடி பாறையில் அமர்ந்திருந்த தனலட்சுமி, “அண்ணே சுத்த வேஸ்டுபா” என்று கூறி பெருமூச்சு விட,


“அவேம் என்னத்த பொல்லாப்பா சொல்லிட்டியான்?” என்று அவள் அருகே கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்திருந்த வடிவேல் கேட்டான்.


“அதுசரி.. பக்கா நைன்டீஸு கிட்ஸுகிட்ட பெருசா என்னத்த எதிர்பாத்துபுட முடியும்?” என்று நொடித்துக் கொண்ட தனம், “கோவிலுதேம் சாமிதேம் எல்லாஞ்சரி. அந்த சாமிக்குத் தெரியாதா அந்த ஒத்த நெத்தி முத்தத்துல காதலிருக்கா வேறென்னமாதுருக்கானு?” என்று கேட்க,


லேசாய் சிரித்த வடிவேலு, “அதேம் நானும் சொல்லுதேம் புள்ள. இதுலாம் அவிய அவிய காதலிச்சு மனசு உந்தி அவியளா செய்யுறது. ஒனக்கு முத்தம் கொடுக்கனமுனு என் மனசுக்குள்ளார தோனனும். எனக்கா அந்த ஆச வரோனும். யாரோ ஒருத்தரு சொல்லி ஊருக்கு படங்காட்ட கொடுக்குற போல இருந்துகிடக் கூடாதுத்தா” என்று கூறினான்.


“அப்ப அப்படி போட்டோ போடுறவியள குத்தம் சொல்லுவீயலா?” என்று தனம் கேட்க,


“இல்லத்தா. அவியளுக்கு நெசத்துக்குமே அப்படியெல்லாம் போட்டோ புடிக்க ஆசையிருந்தா குடுக்கத்தான? போட்டோ காரன் சொன்னதும் ஒனக்கும் எனக்கும் ஆசவந்து கொடுத்தாகூட சரிதேம். சங்கடமாவோ பயமாவோ இருந்து சும்மா போட்டோகாக பட்டும் படாம கொடுத்தா அதுல என்னருக்கு? இந்த மொத பார்வை, மொத வெட்கம், மொத முத்தத்துக்குலாம் ஒரு தனீ மதிப்பிருக்கு லட்டு. அத நான் மட்டுந்தேம் ரசிக்கோனும். எனக்கு மட்டும் ரசிப்பாருந்தா போதும். அத போட்டோ புடிச்சு பாத்துதேம் நான் ரசிக்கோனுமுனு என்ன? எல்லாத்தையுமே போட்டோ போட்டுதேம் நெனவு வச்சுகிடனும்னா நெனச்சு பாக்குறதுக்கு என்ன இருந்துடும்?” என்று கேட்டான்.


அவன் புறம் லேசாய் தலையை சாய்த்து கண்கள் பிரகாசிக்கப் புன்னகைத்த தனம், “ஹ்ம்..” என்று பெருமூச்சுவிட்டு, “ஆசையாத்தான் இருக்குது” என்று முனக,


“என்ன சொன்ன?” என்று தெரிந்துகொண்டே கேட்டான்.


அதில் வெட்கம் கொண்டு தலைகுனிந்தவளைக் கண்டு ஆடவனுக்கும் வெட்கம் வந்துவிட,


“நம்ம கலியாணத்துக்கு போட்டோ புடிக்க தொணையா வாரேனுட்டு அவிய தனியா லவ்ஸு பண்ணிட்டு திரியுறாவோ பாரேம்” என்று திருமாவளவன் கூறினான்.


“அவங்க லவ் பண்றாங்களா?” என்று பெரும் தயக்கத்துடன் எழுத்துக் கூட்டி வாசிப்பதைப் போல் சங்கமித்ரா கேட்க,


“ஆமா மித்து” என்று புன்னகைத்தான்.


“எல்லாருக்கும் தெரியுமா?” என்று பயத்தோடு அவள் கேட்க,


“அம்மா அப்பா, பெரிய அக்கா குடும்பம் தவிர அம்புட்டுபேருக்கும் தெரியும். எங்களுக்குலாம் தெரியுமினு தொரைக்கு இப்பத கொஞ்ச நாளு முன்னுக்கதேம் தெரியும்” என்று கூறினான்.


“நீங்களாம் ஒன்னும் சொல்லலையா?” என்று அவள் கேட்க,


“என்ன சொல்லனும்?” என்று சிரிப்பாய் கேட்டான்.


அவள் காதல் என்று சென்று நின்றிருந்தால் அவளது தந்தை தோலை உரித்து மொட்டை மாடியில் காய வைத்திருப்பாரே? அதே பயத்தில் மற்ற வீடுகளிலும் அப்படியாகத்தான் இருக்குமென்ற ஒரு எண்ணம் அவளுக்கிருந்தது.


“திட்டமாட்டீங்களா? படத்துலலாம் லவ் மேட்டர் தெரிஞ்சுட்டா திட்டுவாங்க தானே? படத்துலனு இல்ல. நிஜத்துலயும் வீட்ல லவ் மேட்டர் தெரிஞ்சா திட்டுவாங்க தானே?” என்று விழிகளை உருட்டி மருட்சியாய் அவள் கேட்க,


அட்டகாசமாய் சிரித்தவன், “எதுக்குடி திட்டனும்?” என்றான்.


அவள் அவனைப் புரியாமல் பார்க்க,


“அவேம் எங்கக்கூடவே வளந்தவேம் மித்ரா. அவேன எங்களுக்குத் தெரியாதா? தங்கமான மனசுள்ள ஒரு நல்லவனுக்கு எந்தங்கச்சிய கொடுக்க என்னத்த ரோசிச்சு திட்டப்போதேம்? அம்புட்டு ஆசையுங் காதலுமிருக்கு அவியளுக்கு. ஆனா எம்புட்டு வருஷமா சொல்லிக்காமலும், இந்தா ஒரு வருஷமா சொல்லிகிட்டும் காத்திருக்காவ தெரியுமா? அவேம் ஒருநெலையா முன்னுக்கு வந்து எம்புள்ளைய பொண்ணு கேக்கேம்னு சொல்லுறியான். இதவிட வேறென்ன தேவையாயிடுது?” என்று கேட்டான்.


“அத்தை மாமா ஒன்னுஞ்சொல்ல மாட்டாங்களா?” என்று அவள் கேட்க,


“தெரியில மித்ரா. ஆனா சொல்ல மாட்டாவனுதேம் தோனுது. தீபி அக்காவுக்கு காதல் கலியாணந்தான். அத்தான் நேரா அப்பாட்ட வந்தே கேக்க, அத்தான் கொணத்துக்காவ அவியளுக்கே கட்டிவச்சாவ. அப்படியிருக்க எங்கூட்டுக்காரணுக்கு என்னத்த பெருசா மறுத்துட போறாவ?” என்று கேட்டான்.


மெலிதாய் புன்னகைத்தபடி அவள் தலையசைக்க, “நம்ம லவ் மேரஜ வீட்டுல ஒத்துகிட வைக்கலியாக்கும்? அப்படி அவியளோடதையும் சம்மதிக்கு வச்சுபுடுவோம்” என்று கூறி கண்ணடிக்க,


“லவ் மேரேஜா?” என்று வாயில் கை வைத்தாள்.


“இல்லியாக்கும்? நீ என்னைய லவ் பண்ணல?” என்று கண்களில் அத்தனைக் குறும்போடு அவன் கேட்க,


முகம் செஞ்சாந்தாய் சிவந்தது அவளுக்கு. பதில் கூறத் தெரியாமல் அவள் தடுமாறுவதைப் பதறும் அவள் விழிகள் அழகாய் எடுத்துக்காட்ட, “மூச்சுபுடிக்க லவ் யூ, லவ்யூனு உன்ன சொல்ல வைக்கேம் பாரு” என்று சிரித்துக் கொண்டு, “லே மக்கா ஆச்சுதா இல்லியாடா? வயிறு கூவுது” என்று புகைப்படக் கலைஞனிடம் கேட்க, “அண்ணே முடிஞ்சுது ண்ணே” என்று கூறினான்.


தன்னவளைத் திரும்பிப் பார்த்தவன், “பசிக்கிலியாடி ஒனக்கு?” என்று கேட்க,


“பசிக்கலையாவா? படியேறும்போதே பசி கண்ணக் கட்ட ஆரமிச்சுடுச்சுபா” என்றாள்.


அதில் சிரித்துக் கொண்டவன், “அப்ப சொல்லிருக்கலாம்ல? சாப்பிட்டு வந்துகூட ஃபோட்டோ எடுத்துருக்கலாம்ல?” என்று கேட்க,


“பரவலங்க” என்றாள்.


மேலும் பேசி நேரம் கடத்தாமல் திரும்பியவன், தனது அலைபேசியில் ஆசையும், தயக்கமும், பயமும் போட்டிப்போட, சுற்றிமுற்றி பார்த்தபடி வடிவேலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த தங்கையைக் கண்டான்.


தானும் திரும்பி அவர்களைப் பார்த்த சங்கமித்ராவின் இதழ்களில் அழகான புன்னகை உதயமானது.


'ச்ச செம்ம கியூட்ல?’ என்று அவள் மனதோடு ரசித்துக் கொள்ள, “அழகுதேம்” எற்று சிரித்த திருமாவளவன், “ஏலே மக்கா” என்று குரல் கொடுத்தான்.


அதில் திடுக்கிட்டுத் திரும்பிய இருவரும் அவனைக் கண்டு பெருமூச்சுவிட, 


வாய்விட்டு சிரித்தவன், “வாங்கலே. பசியாறப்போவோம்” என்று கூறினான்.


அதன்படி அனைவரும் சாப்பிட அமர, அங்கே ஒரு குட்டிக் குதூகல கலாட்டா நடந்தது. மாப்பிள்ளை மற்றும் பெண்ணை மாறி மாறி ஊட்டிக் கொள்ள சொல்வதும் அதில் அனைவரும் சுற்றி நின்று கேலி செய்து சிரிப்பதும் என மிக அழகான கலாட்டாக்களோடு சென்றது.


“மைணி அண்ணேக்கு அந்த பாதுஷாவ ஊட்டுங்க. ஊட்டனும்முனா எப்புடி ஊட்டனுமுனு நானு சொல்லித்தாரேம். அப்படியே முழுசா உள்ள அமுக்கிடனும். அண்ணே உங்கிட்ட வாயே தொறக்கக் கூடாது. அப்புடிக்கு அமுக்கனும்” என்று தனம் கூறி சிரிக்க, சங்கமித்ரா வளவனைக் கண்டு புருவம் ஏற்றி இறக்கினாள்.


புருவங்கள் உயர அவளைப் பீதியோடு பார்த்தவன், “மித்ரா” என்று மெல்ல அழைத்து இடவலமாய் தலையசைக்க, அவன் பயம் கண்டு அவளும் மற்றோரு வாய்விட்டு சிரித்தனர்.


அனைத்து கலாட்டாக்களும் முடிய, மீண்டும் மலையிலிருந்து இறங்கி, பெண் மற்றும் மாப்பிள்ளையை, அலங்கார வாகணத்தில் அனுப்பி வைத்துவிட்டு மற்றவர்கள் பின்னே புறப்பட்டு வந்தனர்.



வாகனத்தில் செல்லுகையில் மனதோடு சிறு படபடப்புடன், சொல்லொண்ணா மகிழ்ச்சி அவளிடத்தில். செல்வியிலிருந்து திருமதி பட்டத்திற்கு வந்திருப்பது அவளை பூரிப்படைய வைத்த அதே கணம் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.


அவள் நிலை புரிந்து அவள் கரத்தோடு தன் கரம் கோர்த்துக் கொண்டவன், “கல்யாணத்துக்கு ஓன் கூட்டுகாரவனு யாரையும் காணலையே மித்ரா. வரலியா?” என்று கேட்க,


“அதையேன் கேக்குறீங்க?” என்று ஒருமாதிரி குரலில் கேட்டாள்.


“சும்மாதான். ஓன் தோழியனு ஆரும் காணுமேனு கேட்டேம்” என்ற பின்புதான் அவள் முகம் காட்டும் உணர்வு, செல்ல உடைமை என்பது அவனுக்குப் புரிந்தது.


புரிந்த விடயம் அவனுக்குப் பெரும் சிரிப்பைக் கொடுக்க இதழ் மடித்து சிரிப்பை அடக்கியவன், “புதுசா ஆரையும் பாப்பமேனு பாத்தாக்கா ஆரையும் காணலையே?” என்று கேட்க,


பெண்ணவள் பார்த்தாளே ஒரு பார்வை.


அம்மம்மா.. எரித்துவிடுவாள் போலவே என்று சிரித்துக் கொண்டு, “சுட்டுபுதாடி. காந்தலடிக்கு” என்றவன், “ஆரையும் காணுமேனு தெரிஞ்சுக்கத்தேம் கேட்டேம் புள்ள” என்று கூற,


“இங்க வந்து ஏழு மாசம் தாங்க ஆச்சு. வந்த புதுசு ஒரு ரெண்டு மூனு மாசம் வர்க் ஃப்ரம் ஹோம்ல தான் இருந்தேன். அப்றம் தான் ஜாயின் பண்ணேன். ஒரு செக்ஷன்ல போட்டு மூனு மாசத்துல அடுத்த செக்ஷன் மாத்திட்டாங்க. எனக்கு போய் புதுசா பேசனும்னாலே கொஞ்சம் தயக்கமாருக்கும். ஆனா கொஞ்சம் கொஞ்சமா பேசினா பழகிடுவேன். இப்படி சட்டுனு மாத்தவும் அடுத்த செட்ல அட்டேச் ஆக ரொம்ப கஷ்டமாருந்துது. அதுல ரெண்டு பேர்கூட ஒத்துவேற போகலை. இப்பதான் ஓரளவு அட்டாச் ஆயிருக்கேன். கல்யாணத்துக்கு எல்லாருக்கும் பத்திரிகை வச்சேன். ரெண்டு அண்ணா, ஒரு தம்பி, மூனு பொண்ணுங்க. ஒரு பொண்ணும் அந்தத் தம்பியும் நல்லா பேசுவாங்க. மீது ரெண்டு பொண்ணுங்க கூட எனக்கு செட் ஆகாது. அந்த ரெண்டு அண்ணா தேவைக்கு பேசுவாங்க. மத்தபடி பேச்சும் இல்லை பிரச்சினையும் இல்லை. அண்ணாஸ் ரெண்டு பேரும் ஃபேமிலி ட்ரிப் போறாங்க. அந்த ரெண்டு பொண்ணுங்க வரமாட்டாங்கனு எனக்கே தெரியும். தம்பி அம்மாக்கு உடம்பு முடியலைனு லாஸ்ட் மினிட்ல கிளம்ப வேண்டி போச்சு. மீதி உள்ள பொண்ணால வரமுடியலை” என்று கொஞ்சம் சோகத்துடன் கூறி முடித்தாள்.


“ஹ்ம்.. சரி வீட்டுக்கு வேணாகூட வரச்சொல்லு மித்து” என்று அவன் கூற,


“ம்ம் சரிபா” என்றாள்.




Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02