திருப்பம்-29
திருப்பம்-29
வண்டி அவனது வீட்டை வந்து அடைய, வண்டியை விட்டு இறங்கியவர்களை அவர்களுக்கு முன்பே வந்து சேர்ந்திருந்தக் குடும்பம் வரவேற்றது.
ஆலம் சுற்றி இருவரையும் உள்ளே அனைவரும் வரவேற்க, சாமி கும்பிட்டு பெண்ணவளை விளக்கேற்ற வைத்தனர்.
பெரிய வாயில், அதையடுத்து பரந்து விரிந்த தின்னை, உள்ளே அழகான, விசலமான, பருத்தத் தூண்கள் கொண்ட கூடம் அமைந்திருந்தது. வலதுபுறம் திரிபுரா மற்றும் சுயம்புலிங்கம்-தெய்வநாயகி அறைகளுக்கு நடுவே சின்ன பாதை செல்ல, அந்த பாதையின் முடிவில் இடது புறம் மேல் தளத்திற்கான படிகளும், வலதுபுறம் பெரிய சமையலறை அதையொட்டிய பூஜையறையும் இருந்தது.
கூடத்தின் இடதுபுறம் தனலட்சுமியின் அறை மற்றும் தீபிகாவின் அறை மற்றும் விருந்தினர் அறை இருக்க, மேல் தளத்தில் நீண்ட உப்பரிகையும் இரண்டு விசலமான அறைகளும் இருந்தன.
ஒன்று திருவிக்ரமன் மற்றும் கார்த்திகாவினது, மற்றொன்று திருமாவளவன் மற்றும் அவனது புதுமனைவிக்கானது. அவர்கள் அறையின் முடிவில் சின்ன வெற்றிடமும், அங்கிருந்து மொட்டை மாடிக்கான கம்பிப் படிகளும் இருந்தன.
காலை எழுந்தது, மலை ஏறியது, கல்யாண பரபரப்பு, மதியம் தாமதமாய் உண்டது, தற்போது வீட்டை சுற்றிப் பார்த்தது என பெரும் சோர்வு தம்பதியரை ஆட்கொண்டிருந்தது.
“மைணி. வா என் ரூமுல ரெஸ்ட் எடு. ஈவினிங் போல சடங்கெல்லாம் இருக்கும். அதுக்கு எழுந்து ரெடியாவோனுமில்ல?” என்று தனம் கூற,
சிறு புன்னகையுடன் தலையசைத்தவள் திருமாவளவனைப் பார்த்தாள்.
அவனும் அவிநாஷும் பேசிக் கொண்டிருக்க, “அவங்கட்ட சொல்லிட்டு வரேன்டா” என்றுவிட்டு எழுந்து சென்றாள்.
அவிநாஷ் அவள் புறம் திரும்பி, “பாப்பா. ரெஸ்ட் எடுடா நீ போய். ஈவ்னிங் தான் அடுத்த சடங்குலாம்” என்று கூற,
“சரியத்தான். அக்கா அம்மா அப்பாலாம் எங்க?” என்று கேட்டாள்.
“கீதாவை அம்மா அப்பாவோட அனுப்பிட்டேன்டா. ரொம்ப டயர்ட் ஆயிட்டா. அதான் அலையவேணாம்னு அனுப்பிட்டேன்டா. ஈவ்னிங் கூட்டிட்டு வரேன்” என்று அவன் கூற,
“ஏன்ணே மைணிய இங்கனயே படுக்க சொல்லிருக்கலாம்ல? இதுதான் அலைச்சலு” என்று வளவன் கூறினான்.
“இருக்கட்டும்டா. இங்க சொந்தம் எல்லாம் நிறையா இருக்காங்க. அவங்களுக்குலாம் ரூம் வேணுமே. நான் ஈவ்னிங் கூட்டிட்டு வரேன்” என்றவன், “அத்தை மாமா வெளியதான்டா இருக்காங்க. லிங்கம் பெரியப்பா, சொந்தகாரங்க கிட்டலாம் இன்டர்டியூஸ் பண்ணிட்டு இருக்காங்க. நீ போய் ரெஸ்ட் எடுடா பாப்பா. ரொம்ப டயர்டா இருக்க” என்று அக்கறையுடன் கூற,
“சரியத்தான். நீங்களும் கூட கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க அத்தான். நைட்டெல்லாம் நாளைக்கு பாப்பா கல்யாணம், நாளைக்கு பாப்பா கல்யாணம்னு தூங்காம உங்க அத்தான் ஒரே புலம்பல்டினு அக்கா குற்றப் பத்திரிக்கை வாசிச்சுட்டா” என்று கூறி சிரித்தாள்.
அதில் புன்னகைத்தவன், “வாசிச்சுட்டாளா? உங்கக்கா சொல்லலைனாதான் அதிசயம்” என்று கூற,
தானும் சிரித்தவள், “சரியத்தான். நான் போய் படுக்குறேன்” என்றுவிட்டு வளவனைப் பார்த்தாள்.
“தனம் ரூமு அந்த பக்கட்டு இருக்குது மித்து. அவோ சமையகூடம் பக்கட்டுதான் போனா” என்று வளவன் கூற,
“சரிபா” என்றபடி சென்றாள்.
அவளைக் கண்டுகொண்டு வந்த தனமும் தன் அறைக்கு அழைத்துச் சொன்றாள்.
அவள் சென்ற திசையைப் புன்னகையுடன் பார்த்துவிட்டுத் திரும்பியவன், “ஒங்களுது லவ் மேரேஜா? அரேன்ஜ் மேரேஜா அண்ணே?” என்று அவிநாஷிடம் கேட்க,
“பக்கா அரேஞ்ச் மேரேஜ்டா” என்று சிரிப்புடன் கூறினான்.
“மித்ராவை முன்னுமே தெரியுமோ?” என்று வளவன் கேட்க,
“இல்லடா. கல்யாணத்துக்கு பிறகுதான்” என்றான்.
“மித்துமேல நிறைய பாசம் போலயே? பாப்பா பாப்பானு அவங்க அப்பாகூட அத்தன மொற கூப்பிடலயே. அதேம் கேட்டேன்” என்று கூறியவன் முகத்தில் கள்ளமில்லா புன்னகையே.
அதைப் புரிந்துகொண்ட அவிநாஷ், “ஒன்னு சொல்லவா வளவா. உன் மித்துக்கு கல்யாண புதுசுல என்னைப் பிடிக்கவே பிடிக்காது” என்று சிரிக்க,
அவனை ஆச்சரியமாய் பார்த்த திருமாவளவன், “என்னண்ணே சொல்றீய?” என்று கேட்டான்.
“ஆமாடா. இவ தர்ட் இயர் படிச்சுட்டு இருப்பானு நினைக்குறேன் எங்க கல்யாணத்தப்ப. அத்தை மாமாவைவிட கீதா கூட ரொம்ப அட்டேச்டா இருப்பா. அப்ப இவங்க எல்லாருமே சென்னைலதான் இருந்தாங்க. எனக்கு இந்த ஊர்தான். கல்யாணம் நிச்சயம் ஆனதிலிருந்து கீதாவை நான் கூட்டிட்டு போயிடுவேன் அப்படிங்குற ஒன்னுதான் அவ மைன்ட்ல பதிஞ்சு போயிருந்தது. அவ்ளோ பொசசிவ். என்னைப் பார்த்தாளே முறைக்கத்தான் தோனும் அவளுக்கும். மாமாக்கு பயந்துட்டு அமைதியா இருப்பா. கல்யாணத்துக்கு முன்னாடி நாள் எல்லாம் அம்மணி தூங்கவே இல்லையாம். ‘சங்கியைக் கூட்டிட்டுப் போயிடுவாங்களாமா?’ அப்படினு கேட்டுக் கேட்டு ஒரே புலம்பல். கல்யாணம் முடிஞ்சு அழுதாளே ஒரு அழுகை. அம்மா இப்ப நினைச்சாலும் பதறும்” என்று நெஞ்சை நீவிக் கொண்டவன், சின்னப் புன்னகையுடன் தொடர்ந்தான்.
“துருதுருனு இருப்பா. இப்பதான் இந்த மெசூரிடிலாம். அதுவும் ரெண்டு வருஷம் அங்க தனியா படிக்கப்போய் வந்தது. பக்கா குழந்தையா இருப்பா. கீதாவை கட்டிக்கிட்டதுல அப்படியே பாப்பாவைத் தத்து எடுத்துக்கிட்ட ஃபீல். கிளம்பும் முன்ன அவளை உக்கார வச்சு பேசினேன். நீ எப்ப பாக்கனும்னாலும் அங்க தாராளமா வா. இல்லைனா மாஸ்டர்ஸ் படிக்க அங்கயே ஏற்பாடு பண்றேன். நீயும் வந்து கூட படினு கேட்டேன். அது அவளுக்கு ஒருமாதிரி ஆயிடுச்சு. நாம ரொம்ப ஆர்ப்பாட்டம் பண்ணிட்டோம்னு ரியலைஸ் ஆகி என்கிட்ட சாரி சொன்னா” என்று அவிநாஷ் சிரிக்க,
வளவன் இதழ்கள் தாமாய் புன்னகைத்தன.
“அப்பதான் பேசினா. கீதானா அவளுக்கு எவ்ளோ முக்கியம்னு கீதாகிட்டக் கூட வெளிப்படுத்தாத அந்த ஏக்கத்தை என்கிட்ட வெளிப்படுத்தினா. கீதாவுமே அவளை ஒரு குழந்தையாதான் பாத்திருக்கானு புரிஞ்சது” என்றவன் கண்களில் மெல்லிய நீர்ப்படல் ஒன்று கோர்த்து நின்றது.
வளவன் அவனைப் புரியாமல் நோக்க, “எங்..எங்களுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷமா குழந்தை இல்ல. வீட்ல வெளிப்படையா பேச மாட்டாங்கனாலும் அவங்களுக்கும் அதுல கொஞ்சம் வருத்தம்னு அப்ப அப்ப காட்டுவாங்க. கீதாவை யாரும் எதும் சொல்லிடக்கூடாதுங்குறதுல ரொம்ப கான்ஷியஸா இருந்தேன். அப்ப ஒருமுறை பாப்பா வந்திருந்தா. கீதாக்கு அப்போ டேட் தள்ளிபோய் மறுபடியும் இல்லனு ஆயிடுச்சு. பாப்பாட்ட ரொம்ப அழுக. 'நீ ஏன் சங்கி அழற? உனக்கு குழந்தை இல்லைனு யாரால சொல்லிட முடியும்? அத்தான் என்னைப் பாப்பானு தானே கூப்பிடுவாங்க? நான் இல்லயா உங்களுக்கு? ஒரு புள்ளை பிறந்துதான் உங்கள பெத்தவங்களா ஆக்கனுமா என்ன? நான் இல்ல? ரெண்டாவது புள்ளை பிறக்க லேட் ஆகுதோ என்னமோ? தேவையில்லாம அழுது உடம்பை கெடுத்துக்காம இரு. அதெல்லாம் நடக்கும்' அப்படினு சொன்னா” என்று தன் விழியோரம் வழிந்தக் கண்ணீரை வேகமாய் துடைத்துக் கொண்டான்.
“அண்ணே” என்று வளவன் அவன் தோள் தொட,
மூச்சை இழுத்துவிட்டுப் புன்னகைத்தவன், “ஒருமாதிரி உடம்பெல்லாம் புல்லரிச்சுடுச்சுடா. எங்களுக்கு பிள்ளையில்லைனு யார் சொல்லிட முடியும்னு ஒரு ஃபீல். என்கிட்ட அவ பேசாம இருந்த இருப்பென்ன தெரியுமா? ஆனா கல்யாணமாகி ரெண்டு மாசத்துலயே அப்படி அட்டேச் ஆயிட்டா. உரிமையா கேட்பா எதுனாலும். அந்த உரிமை தான் அவளை எங்க புள்ள போல பார்க்க வச்சது. அவளே அப்படி சொல்லவும் இன்னும் நெருக்கமான உணர்வு. அவ சொன்ன வாய் முகூர்த்தம் அடுத்த மாசமே கன்சீவ் ஆயிட்டா” என்று மனநிறைவோடு கூற,
வளவன் நெகிழ்வான புன்னகை உதிர்த்தான்.
“பாப்பா ஒருமாதிரி ரொம்ப க்ளோஸ். அம்மா அப்பாவும் பாப்பாட்ட ரொம்ப பாசமாருப்பாங்க. கீதாட்ட கூட அப்படி நான் அவங்கள பார்த்ததில்லை. என்னமோ துறுதுறுனு கண்ணுக்குள்ளயே நிக்குறாடானு தான் சொல்வாங்க” என்று அவிநாஷ் கூற,
“கேக்கவே சந்தோஷமாருக்கு அண்ணே” என்றான்.
அவன் தோள் தட்டிய அவிநாஷ், “நீ அவளை நல்லா பாத்துப்பனு தெரியும்டா. இருந்தாலும் சொல்றேன். பாப்பாவை பத்திரமா பாத்துக்கோ. எனக்குத்தெரிஞ்சு பாப்பா பெருசா அவங்க அப்பாவோட எந்த முடிவுக்கும் மறுத்ததே இல்லை. ஆனா உன் விஷயத்துலதான் மறுக்க முடியாம இருக்கேனு அவ்ளோ அழுதா. அன்னிக்கே புரிஞ்சுது அவ உன்மேல எவ்ளோ எவ்ளோ நேசம் வச்சிருக்கானு. அ..அவள நல்லா பார்த்துக்கோடா” என்று கூற,
அவனை அணைத்துக் கொண்ட வளவன், “கண்ணுக்குள்ளக்க வச்சு பாத்துக்குறேம்ணே” என்று கூறினான்.
அவன் தோள் தட்டிக் கொடுத்த அவிநாஷ் தன் கைசட்டையில் கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொண்டு, “சாரிடா” என்க,
“நீங்க கரிக்கயிலேயே புரிஞ்சுதுண்ணே. ஆருட்டயும் சொல்லாததையெல்லாம் இங்கன கொட்டுதீயனு. சும்மாலாம் அண்ணேனு கூப்பிடல. விக்ரமபோல நீங்களும் எனக்கு ஒட்மபொறந்தவியதேம். அதனால இந்த ஃபார்மாலிடி பேச்செல்லாம் வேணாம்” என்று மனதிலிருந்துக் கூறினான்.
அங்கே ஒரு அழகான உறவு பலம் பெற்று துளிர்த்திட, நேரத்தின் ஜாலத்தோடு மாலை பொழுது வந்தது.
தனத்தின் அறையில் கட்டிலில் சங்கீதா அமர்ந்திருக்க, நாற்காலியில் அமர்த்தப்பட்டிருந்த சங்கமித்ராவுக்கு, கார்த்திகா, தீபிகா, தனம், தாட்சாயணி ஆகியோர் அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.
'நாலு நகை போட்டுவிட்டுப் பூ வைக்க இத்தனைப்போரா?’ என்று மனதோடு நினைத்துக் கொண்டு அவள் சங்கீதாவைப் பார்க்க,
அவள் மனதின் ஓசைக் கேட்டதைப் போல் சிரித்த சங்கீதாவின் முன் ஒரு பழச்சாறு கோப்பை நீட்டப்பட்டது.
சங்கீதா அது யாரென்று பார்க்க, திரிபுரா தான் பழச்சாறுடன் நின்றிருந்தாள்.
“மாசமருக்க பொண்ணு நானும் வந்ததுலேருந்து பாக்கேம் ஒன்னுமே திங்க மாட்டிக்கவ? இதக் குடி” என்று திரிபுரா நீட்ட, உள்ளுக்குள் அவள் பாசத்தில் உற்றாகமும் புன்னகையுமாய் வாங்கிக் கொண்டாள்.
அதைக் கண்ட சங்கமித்ராவிற்கும் திரிபுரா மீது ஒரு வித கரிசனம் உண்டாக, தயக்கம் உடைத்து அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
அவள் சிரிப்புக்குப் பதில் சிரிப்பு சிரிக்கத் தோன்றவில்லை என்பதைப்போல் முகத்தில் அறைந்தார்போல் முகம் திருப்பவும் தோன்றவில்லை. எனவே சிறு தலையசைப்புடன் அவள் நகர்ந்திட, தீபிகாவும் கார்த்திகாவும் பெருமூஞ்சு விட்டுக் கொண்டனர்.
அரிதாரப்பூச்சின்றி அலங்காரங்கள் முடிய, பெண்ணவளை அறையிலிருந்து வெளியே கூட்டிவந்தனர்.
வீட்டுக் கூடத்தில் நடுநாயகமாய் விரிக்கப்பட்ட ஜமுக்காளத்தில் திருமாவளவன் மிகத் தோரணையாய் அமர்ந்திருக்க, பதுமையவள் அவன் அருகே சென்று பவ்யமாய் அமர்ந்துக் கொண்டாள்.
அழகின் இலக்கணம் இன்னதென்று விதிகள் கொள்ளாதவனுக்கு, அவளை மனதில் பதித்த நொடியிலிருந்து அவளே அழகின் இலக்கணமாகிப் போனாள்.
மெல்லிய இளநீலத்தில் கருநீல கரையிட்டப் புடவையும் அளவான நகைகளும், அளவுகடந்த மல்லிகைச் சரமும், அளவில்லா புன்னகையும் என அவள் அமர்ந்திருந்த தோற்றம் இத்தனை நாட்கள் இல்லாத பல ரசாயன மாற்றங்களை அவனுக்குள் ஏற்படுத்தியது.
பெண்ணவளுக்கும் கம்பீரமும் மிடிக்கும் கலந்த நிமிர்வோடும், புன்னகையோடும் அமர்ந்திருந்தவனில் ஒருவித சொல்லில் வடிக்க இயலாத உணர்வுக் குவியல்.
இருவரையும் அமர்த்தி பால், பழம் போன்றவற்றைக் கொடுத்து, பெரியோர் சேர்ந்து கும்மியடித்து என சடங்குகள் முடிய, அனைவரும் இளைப்பாறி அமர்ந்தனர்.
Comments
Post a Comment