திருப்பம்-30
திருப்பம்-30
“ஏய்யா.. நம்ம லச்சு கண்ணு வேற போட்டிருந்துச்சுல்ல? போயி லச்சுவயும் நந்தியையும் கும்பிட்டுவாங்க. ஏலே வேலா.. நீயு கூட்டிட்டு போய்வா” என்று சுயம்புலிங்கம் கூற,
“சரிங்க மாமா” என்ற வடிவேலு இருவரையும் அழைத்துச் சென்றான்.
தம்பதியர் இருவரையும் அழைத்துக் கொண்டு நடந்தவன், “இங்கனருந்து பத்து நிமிச நடதேம் தங்கபுள்ள” என்க,
“சரிண்ணா” என்றாள்.
சற்று நேரத்தில் அழகிய வயல்வரப்புகள் கண்களுக்குப் புலப்பட, மாலைநேர மஞ்சள் வெயிலில் அத்தனை அழகாய் காட்சியளித்தது அங்கு விளைந்திருந்த சாமை பயிர்கள்.
“இந்தா கண்ணுக்கெட்டுன தூரம் வார தெரியுறது அம்பிட்டும் நம்ம விக்ரமனோட வயலுதேம். அந்தா அக்கன ஒரு மாமரம் தெரியுதுல்ல? அதுவார அவேம் பாட்டன் காலத்துலருந்தே இருந்தது. அதுக்கு பொறத்தாலருக்குறது அவேம் இப்பத வாங்கி போட்டது. அந்தா தெரியுது பாரு.. அது நம்ம கார்த்தியோட மில்லு” என்று வடிவேல் கூற,
“நான் இப்படி வயல்லாம் பாத்ததே இல்லை அண்ணா” என்று கண்களில் ஆச்சரியம் மின்னக் கூறியவளை வளவன் ரசனையோடு பார்த்தான்.
“அந்தா தென்னந்தோப்பு தெரியுதா?” என்று வடிவேல் கைநீட்டிக் குறிப்பிட்டுக் கேட்க,
“ஆமாண்ணா” என்று தலையசைத்தாள்.
“ம்ம்.. அது அம்புட்டும் ஓம் புருஷனோடது” என்று வடிவேல் கூற, ‘அப்படியா?’ என்ற ஆச்சரிய பாவத்தில் அவனைப் பார்த்தவள், “அப்ப அந்த ரப்பர் தோட்டம்?” என்று கேட்டாள்.
“அதுவும் நம்மதுதேம் மித்ரா” என்றவன், “விக்ரம் இந்த அம்புட்டு வயலயும் கட்டி மேய்க்குறியான். போதா குறைக்கு நம்ம லச்சு குடும்பத்தோட பாலு வியாபாரமும் அமோவமா போவும். மில்ல மைணி பாத்திடுதாவ. நானும் வேலனும் தென்னந்தோப்பு, ரப்பர் தோட்டம், பூந்தோட்டம், ஏற்றுமதி எறக்குமதிலாம் பாத்துகிடுதோம்” என்று கூற,
“சூப்பருங்க” என்று கண்கள் பளபளக்கக் கூறினாள்.
“இருட்டிபோவப்போவுது. நீயி பொறவு ஒருநா பூந்தோட்டம் கூட்டிப்போயி காமிச்சுட்டுவா. சாமந்தி பூத்திருக்கையில போனா ரொம்ப அழகாருக்கும்” என்று வடிவேல் கூற,
“சரிலே” என்று கேட்டுக் கொண்டான்.
வயல் வரப்புகளில் அவர்கள் இறங்கி நடக்க, அவ்விடங்களில் நடக்க பழக்கமில்லாதவள் சற்றே தடுமாறினாள்.
அதை புரிந்துகொண்டு அவளை தனக்கு முன்னே நிறுத்திக் கொண்ட வளவன், அவள் கரம் பற்றிக் கொள்ள, சிறு தீண்டலே அவளுள் குறுகுறுப்பாய் எழுந்து தித்தித்தது.
அவர்களை சங்கடப்படுத்தாத வகையில் வடிவேல் முன்னே நடக்க, “கீழ பாத்து நட மித்ரா. பெரட்டி விட்டுபுடும்” என்று வளவன் கூறி, அவளை வழிநடத்தினான். கைப் பற்றிய அவன் கரம் அவள் தோள் பற்றித் தாங்கி முன்னே நடத்த, இன்பமாய் உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டே அவ்வழி நடந்தாள்.
அவர்கள் வயல் முடிந்து, வயலின் முடிவிற்கும், தென்னந்தோப்பின் துவக்கத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் இருந்த கொட்டகையை அடைந்தனர்.
“மாடுலாம் இங்கயா இருக்கு? இப்படி தனியா கொண்டுவந்து போட்டிருக்கீங்க?” என்று மித்ரா கேட்க,
“மொத வீட்டு பின்னுக்கத்தேம் இருத்தாவ மித்ரா. அப்றம் கூட ரெண்டு மூனு மக்கா வாங்கிப்போடவும் மொத்தமா வயலு பக்கத்துல கொட்டா கட்டிபுட்டம். நம்ம நந்தியிருக்கானுல? பொறவு என்னத்துக்கு பயமின்னு விட்டாச்சு. விக்ரம் எப்புடியும் காலைக்கு வந்துபுடுவியான். ரவைக்கு பொறப்படுங்குள்ள ஒரு மேச்சலுக்கு ஆளுவுட்டு அனுப்பிப்போட்டுட்டு வந்துடுவியாம்” என்று வளவன் கூறினான்.
லாந்தர் விளக்குகள் வெளிச்சத்திற்காக ஆங்காங்கே தொங்கவிடப்பட்டிருக்க, மேலும் சில விளக்குகளையும் பொருத்தி வெளிச்சமூட்டினர்.
கொட்டகையை வடிவேல் திறக்க முற்பட, உட்புறமிருத்து யாரோ தடுப்பதைப் போலிருந்தது.
“எய்யா நந்தி நாந்தேம்” என்று வடிவேல் குரல் கேட்கவும், அக்கத்தவை தடுத்து படுத்துக் கொண்டிருந்த நந்தி எனும் காளைமாடு எழுந்து நகர, கதவைத் திறக்க முடிந்தது.
சங்கமித்ரா இதனை ஆச்சரியத்தோடு பார்க்க, “இவேன தாண்டியாத்தா ஆரும் நம்ம தங்கங்கள களவானப்போறாவ?” என்று வடிவேல் கேட்டான்.
மூவருமாக உள்ளே செல்ல, நான்கு காளை மாடுகளும், ஐந்து பசு மாடுகளும், இரண்டு கன்றுகளும், ஒரு பிறந்த கன்னுக்குட்டியும் இருந்தது.
“ஏ அப்பா..” என்று அவள் விழிகள் விரிக்க,
“கண்ணு போட்டுடாத மித்ரா” என்று வளவன் பதட்டமாய் கூறினான்.
“அச்சோ.. சாரிங்க” என்று அம்மாடுகளுக்கு உடனே அவள் திருஷ்டி எடுத்திட, வடிவேல் சிரித்துக் கொண்டான்.
கருகருவென்று திடமான திமிலோடு, திடகாத்திரமாக இருட்டில் பார்ப்பதற்கே பயம் கொள்ளும் வகையில் நிற்கும் காளை மாட்டைக் காட்டிய வடிவேல், “இவேம்தாம் நந்தி தங்கபுள்ள” என்க,
அதனை மருட்சியாய் பார்த்தபடி, “ஓ..” என்றாள்.
அதில் சிரித்துக் கொண்ட வளவன், “இவேம் நந்தி, இவேம் கருப்பன், இவேம் முனியன், இவேம் சுடலை” என்று அம்மாடுகளின் பெயரைக் கூற,
“ஜல்லிக்கட்டுக்குலாம் அனுப்பிருக்கீங்களாங்க?” என்று கேட்டாள்.
“அனுப்பிருக்கீங்களாவா? நீவேற எந்த்தா? அதெல்லாம் படியா போயி ஜெயிச்சுட்டு வந்திருக்கானுவ. இங்கருந்து மருதைக்கு கூட்டிப்போவ ஆளுயில்லாமதேம் ரெண்டு வருஷமா போவல. இல்லாங்கட்டி நம்ம முனியனும் நந்தியும் ஒரு காட்டு காட்டிடுவானுவ. நம்ம பயலுவ நாலு பேருமே நல்லா ஆடுவானுவ. ஆனா நந்திக்கும் முனியனுக்கும் பக்கட்டு ஒருத்தேம் வாரதுக்கில்ல. முனியன்னா நம்ம விக்ரமுக்கும் கார்த்திக்கும் கொள்ள பிரியம். ஒருத்தவியள பக்கத்துல விட்டுக்க மாட்டியான். ஆனா அவோ வந்துட்டா போதும். கொழந்தபுள்ள கணக்கா நிப்பியான்” என்று வடிவேல் கூற,
“நந்தி நம்ம பய. நல்லா ஒட்டிக்கும். பொழுதுக்கும் எங்கூட தோப்புக்கு அப்பப்ப கூட்டிகிட்டு போயிடுவேம். செலநேரத்துக்கு சோகமாருந்தா இவேம்ட ஒக்காந்து பொலம்புவேம்” என்று வளவன் நந்தியை தடவிக்கொடுத்தபடியே கூறினான்.
மாடுகளுக்கும் இம்மனிதர்களுக்கும் இடையான ஆத்மார்த்த பந்தத்தைக் கண்டு நெக்குருகி அவள் நோக்க, “அதுக்காக கருப்பனும் சுடலையும் புடித்தமில்லனு இல்லத்தா. இவேனுவள போல இல்லாது அம்புட்டு போரயும் சேத்துப்பானுவ” என்று வடிவேல் கூறினான்.
“போயி தடவிகொடு மித்ரா” என்று வளவன் கூற,
“ஆஹாங் எனக்கு பயம்” என்று வேகமாய் மறுத்தாள்.
“அய்ய தங்கபுள்ள… எல்லாம் நம்ம பயலுவதேம். நீயு வா” என்று வடிவேல் அழைக்க, அவள் பயம்கொண்டு மறுத்தாள்.
அதில் சிரித்துக் கொண்ட வளவன், “நாங்கதாம் இருக்கோம்ன? சும்மா தொட்டுப்பாரு” என்று கூற,
பயம் கலந்த தயக்கத்துடன் மெல்ல அம்மாடின் தலையை வருடிக் கொடுத்தாள்.
அவளை நிமிர்ந்து தன் பளபளக்கும் இருமணிகளால் ஏறிட்ட கருப்பன், அவள் கரத்தை முகர்ந்து பார்த்துத் தன் நாவால் வருட, “ஆ..” என்று பயம்கொண்டு நகர்ந்தாள்.
அதில் ஆடவர்கள் இருவரும் சிரிக்க, “எனக்கு பழக்கமில்லங்க” என்று பாவம் போல் கூறினாள்.
“விடுத்தா.. போவப்போவ பழகிடும்ன” என்ற வடிவேல் பசுமாடுகள் பக்கம் கூட்டிச் சென்று, “இவோ அம்சா, இவோ திலகம், இவோ லச்சு, இவோ பத்துமா, இவோ பாமா. இந்த குட்டி நம்ம அம்சாக்கும் முனியனுக்கும் பொறந்தவேம், சடையன். இது நம்ம லச்சுக்கும் நந்திக்கும் பொறந்தவோ, மாரி, இந்த குட்டியும் நம்ம லச்சு குட்டிதேம். போன வாரந்தேம் பொறந்தான்” என்று கூறி குழந்தைப்போல் அம்மாடை ஏந்திக்கொண்டான்.
“அச்சோ கியூட்டு” என்று ரசனையாய் கூறியவள், “பேரு வச்சாச்சா?” என்று கேட்க,
“இல்ல தங்கபுள்ள. இனிதேம் வக்கோனும். தொர கல்யாணபாட்டுல இந்த குட்டிக்கு பேரு வைக்க முடியில” என்றான்.
“பசுவா காளையான்னா?” என்று மித்ரா ஆசையாய் கேட்க,
“களதேம்த்தா” என்றான்.
அந்த உறங்கும் கன்றுக்குட்டியை ஆசையாய் வருடிக் கொடுத்தவள், “ரொம்ப அழகாருக்கான் அண்ணா” என்க,
“அப்படியே நம்ம லச்சு நெறம்” என்று வளவன் கூறினான்.
“சரிலே. நேரமாவுது. கொண்டாந்த விபூதிய மாடுவளுக்கு பூசிட்டு விழுந்து கும்பிட்டுக்கோங்க” என்று வடிவேல் கூற,
மித்ராவை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு மாட்டுக்கும் விபூதி பூசிவிட்டான் வளவன்.
சில மாடுகளுக்கு அவளும் பயத்துடனும் ஆசையுடனும் பூசிவிட்டு முடிய, மாடுகளை விழுந்து கும்பிட்டனர்.
நந்தியின் திமிழைத் தட்டிக் கொடுத்த வளவன், “வாரோம்லே. பாத்துகிடு” என்க,
அவன் பேசியவை புரிந்தது போல் மாடும் தலையாட்டியது.
மனம் நிறைந்த புன்னகையுடன் கொட்டகையைப் பூட்டிக் கொண்டு அவர்கள் வீடு வரவும், இரவு உணவு இனிதே முடிய, தூரத்து சொந்தங்கள் கலைந்து செல்வதும், நெருங்கிய சொந்தங்கள் அவர்களுக்கென்று வகுக்கப்பட்ட பண்ணை வீடுகளுக்குச் செல்வதுமாய் இருந்தனர். இறுதியில் அவ்வீட்டார் மற்றும் சச்சிதானந்தம் குடும்பம் மட்டுமே எஞ்சியிருக்க, அவ்விடத்தில் ஒரு ஆழ்ந்த அமைதி நிலவியது.
இனி தன் வீடென்றிருந்த ஒன்று பிறந்தவீடாகிப் போகும் என்ற நிதர்சனம் முன்வந்த மோத, சற்றே தடுமாறித்தான் போனாள் பெண்.
கண்கள் தழும்ப, தன்னவன் கைபற்றி ஏதோ பேசிக் கொண்டிருக்கும் தந்தையைப் பார்த்தவளுக்குக் கண்கள் தாமாகக் கலங்கி நின்றது.
அவள் அருகே வந்த தாட்சாயணி, “சங்கு.. சந்தோஷமாருக்கனும்டா. எதுனாலும் அப்பா அம்மாட்ட சொல்லு. நீ எல்லாரையும் அனுசரிச்சு நடப்பனு அம்மாக்கு தெரியும். இருந்தாலும் சொல்றேன். பார்த்து அனுசரணையா நடத்துக்க” என்று கூற,
“ம்..ம்மா” என்றாள்.
“ச்சு.. எதுக்கு அழுக? இந்த இருக்கு வீடு. நினைச்சா வந்து பார்க்கப் போற. அழாம இருக்கனும். ஒரு வீட்டோட மருமகங்குற பதவிக்கு வந்திருக்க. பொறுப்பா பக்குவமா நடந்துக்கனும்” என்று அவர் கூற,
கண்ணீரோடு தலையசைத்தாள்.
வளவனிடம் பேசிவிட்டு வந்த சச்சிதானந்தம் இளைய மகளின் தலையை வருட, “ப்பா” என்று குரல் கமர அழைத்தாள்.
“சந்தோஷமா இருடா பாப்பா” என்று அவர் கூற,
“அப்பா” என்று அவரை அணைத்துக் கொண்டு அழுதாள்.
பெரியவரும் கண் கலங்கி மகளை அணைத்துக் கொண்டார்.
இரு மகள்களையும் திருமணம் முடித்துக் கொடுத்தாயிற்று.. இனி தன் வீட்டின் வெறுமையை எங்கு தூக்கிக் கொடுப்பது? மகள்கள் வலைய வந்த அவ்வீட்டின் உயிர்ப்பை யாரிடம் சென்று பெறுவது? மகள்களைப் பெற்ற பெற்றோருக்கே உரித்தான சோகம் அவர்களை வருந்தச் செய்த அதே கணம், கல்யாண கோலத்தில் மகளைக் காணும்போது பெரும் நிறைவும் எழவே செய்தது.
அவர்களுக்கான நேரத்தைக் கொடுத்து அனைவரும் அமைதியாய் நிற்க,
அவளைத் தாங்கிக் கொண்ட சங்கீதா, “சங்கு.. போதும்.. எதுக்கு இவ்ளோ அழுக?” என்று பாசமாய் கேட்டாள்.
அக்காவையும் அணைத்துக் கொண்டவள் அவளைக் காண, “டெய்லி பேசலாம். நினைக்கும்போதுலாம் மீட் பண்ணலாம். அழாதடா” என்று சங்கீதா கூற,
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தலையசைத்தாள்.
இவற்றைக் கண்களில் சிவப்போடும், இதழில் சிரிப்போடும், முகத்தில் தவிப்போடும் அவிநாஷ் பார்த்து நிற்க, அவன் அருகே சென்றாள்.
இதழை உள் மடித்துத் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்திய வண்ணம் அவிநாஷ் நிற்க, “அத்தான்” என்று அழைத்தவள், அவன் பாதம் பணிய குனிந்தாள்.
“டேய் பாப்பா” என்று அவளைப் பதறிப் பிடித்து நிமிர்த்தியவன், இடவலமாய் தலையசைத்து, “நீ நல்லாருப்படா” என்று கூற,
“என் அப்பாக்கும் மேலத்தான் நீங்க. உங்க ஆசிர்வாதமும் வேண்டுதலும் எங்களை நல்லா வச்சுக்கும்” என்றாள்.
மனம் நெகிழ்ந்து கண்ணீர் வடித்தவன், அவள் கண்ணீரைத் துடைத்து, “கண்டிப்பா சந்தோஷமா இருப்ப” என்று கூறி, வளவனைப் பார்த்து, “தம்பி உன்னை சந்தோஷமாதான் வச்சுப்பான்” என்று நிறைவாய் கூற,
தன் நெஞ்சில் கைவைத்துக் கொண்டு தலைசாய்த்து புன்னகைத்து அவன் கூற்றை வளவன் ஆமோதித்தான்.
Comments
Post a Comment