திருப்பம்-31

 திருப்பம்-31




அறையெங்கும் மணம் வீசும் மலர்களின் வாசமே!


அறை வாசலில் நின்றுகொண்டிருந்த சங்கமித்ராவின் உள்ளங்கால் ஈரத்தில் கல் தரையில் பாதச்சுவடு பதிந்து மறைய, ‘அச்சோ கூல் கூல் சங்கு’ என்று மனதோடு கூறிக் கொண்டாள்.


சற்று முன்புதான், அவளிடம் பால் செம்பைக் கொடுத்த தெய்வநாயகி, “எம்புள்ளைய அனுசரிச்சு நல்லபடியா வாழ்ந்து சீக்கிரமே ஒரு புள்ளைய பெத்தெடு” என்று கூறி அவளை அறைக்கு அனுப்பி வைத்திருக்க, ஏறுவதற்குள் பதட்டத்தில் வியர்க்கத் துவங்கியிருந்தது, பெண்ணவளுக்கு.


அறைவாசலில் நின்று தன் பதட்டத்தைக் குறைத்துக் கொள்ள முயற்சித்தவள், ‘ஒன்னுமில்லடி சங்கு. டேக் அ டீப் ப்ரீத்’ என்று கூறி மூச்சை ஆழ இழுக்க, கதவைத் திறந்துகொண்டு அதில் சாய்ந்து நின்றபடி அவளைப் புருவம் உயர்த்திப் பார்த்தான் திருமாவளவன்.


அவனது திடீர் விஜயத்தில் இழுத்த மூச்சை வெளியிட மறந்தவள், மூச்சு மூட்டும் உணர்வு உரைக்கப் பெற்றப் பின்புதான் அதை வெளியிட்டாள்.


கண்களில் பொங்கி வழியும் குறும்புடன், “எப்பதேம் உள்ளவர்ரதா உத்தேசம்?” என்று கேட்க,


தடுமாற்றமாய் தலையசைத்து உள்ளே நுழைந்தாள்.


அவள் பாத ஈரத்தின் சுவடைக் கண்டு சிரித்துக் கொண்டோனாய் அவன் கதவை அடைக்க, பால் செம்பை மேஜையில் வைத்துவிட்டு அறையை சுற்றிப் பார்வையிட்டாள்.


அழகான விசலமான அறை. நடுநாயகமாய் கட்டில் இருக்க, அதன்மேல் சுவரில் அவர்களது குடும்பப் புகைப்படம் பெரிதாக மாட்டப்பட்டிருந்தது. அறையெங்கும் அவன் மற்றும் திருவிக்ரமனின் சிறுவயது புகைப்படங்கள், குடும்பப் படங்கள், இயற்கைக் காட்சிகளின் படங்கள், அவள் அனுப்பிய அலங்காரப் பொருள் என அழகாய் இருந்தன. அறைக்குள்ளேயே ஒரு குளியலறை மற்றும் கழிப்பறை இருக்க, அறையின் முடிவில் சின்ன பால்கனி இருந்தது.


மெல்ல நடந்து சென்றவள் அந்த பால்கனி கதவினைத் திறக்க, அழகிய மர ஊஞ்சலும், சங்குப்பூ செடியும், கனகாம்பரச் செடியும் அங்கிருந்து.


அவற்றை விழிகள் விரிய கண்டவள் அவனைத் திரும்பிப் பார்க்கும் ஆவலுடன் திரும்ப, அவளுக்கு வெகு சமீபமாய் வந்து நின்றவன் மீது மோதி தடுமாறி சாய்ந்தாள்.


“ஏ பைய்ய (மெல்ல)” என்று அவள் முதுகில் கை வைத்துப் பிடித்தவன் புன்னகையாய் அவளை நோக்க, அவன் ஸ்பரிசத்தில் உடல் சிலிர்த்து நின்றாள்.


மெல்லிய மின்னல் பாய்ந்ததைப் போல் உடலெங்கும் மின்சாரம் ஓடி மறைய, அதைச் சட்டென்று ஏற்கவும் முடியாமல், தடுக்கவும் மனமில்லாமல் படபடப்பாய் தலை கவிழ்ந்தாள்.


அதை புரிந்து கொண்டவனும் சிறு புன்னகையுடன் கரம் எடுக்க, கேட்க வந்த கேள்விகளைக் காற்றுக்குக் கடன் கொடுத்தவளாய் நின்றாள்.


“என்னவோ கேக்க வந்தீய?” என்று அவன் லேசாய் குனிந்துக் கேட்க,


“ஆங்?” என்றாள்.


“இல்ல ஏதோ கேக்க வந்தீயலே அதேம் என்னத்த மேடம் கேக்க வந்தீயனு கேக்கேம்” என்று அவன் விளக்கம் கொடுக்க,


“இ..இந்த செடி” என்று இழுத்தாள்.


“ஆமா செடிதேம். பூச்செடி. அதுக்கென்ன?” என்று அவன் வம்பு வளர்க்க,


லேசாய் அவனை முறைத்தவள், “எப்ப வாங்குனீங்க?” என்று கேட்டாள்.


“எனக்கு உன்னயவிட்டா போக்கிடமிருக்கா பூச்செடி வாங்கிப்போட?” என்று அவனும் விளையாட்டை விடுத்துக் கூற,


கன்னங்கள் செம்மையுற புன்னகைத்தாள்.


“நல்லா பாத்தாச்சா?” என்று அவன் கேட்க, அவனைப் புரியாமல் நிமிர்ந்து பார்த்தாள்.


“ரூம சுத்திப்பாத்தாச்சுனு கேட்டேம்” என்று அவன் கூற,


“ம்ம்” எனத் தலையசைத்தாள்.


“ம்ம்.. வா” என்று அவளை அறைக்குள் அனுப்பியவன் கதவடைக்க, இப்போது விட்டுப்போன படபடப்பு மீண்டும் அவளிடம் ஒட்டிக் கொண்டது.


கரங்களை மார்பிற்குக் குறுக்கே கட்டிக் கொண்டு அவளது இன்ப அவஸ்தையை ரசித்தவனுக்குள் ஆசைகளின் மாயாஜாலம் அழகிய வேலைகளைச் செய்ததுதான் என்றாலும், அவள் தயக்கம் புரிந்து அமைதியாக நின்றான்.


“பா..நா.. நான்” என்று அவள் புடவை முனையை விரல்களோடு சுற்றியபடி பேச வர,


“ஒறங்கலாமா? டயர்டாருக்கு” என்றான்.


அவனை பெண்ணவள் மெல்ல நிமிர்ந்துப் பார்க்க, “திருமாலுக்கு மித்துவைப் புரியும் தான? பேச்சுக்கு அவசியமிருக்கா?” என்று கேட்டான்.


அதில் அழகாய் புன்னகைத்தபடி அவள் தலையசைக்க, “குட் நைட்” என்று கிசுகிசுப்பான குரலில் கூறிவிட்டு விளக்கை அணைத்தான்.


இருவரும் படுத்துக் கொள்ள, புதுயிடம் என்பதால் அத்தனை எளிதில் அவளுக்குத் தூக்கம் வரவில்லை.


அவளைப் பார்த்தவன், “ஒறக்கம் வரலியாக்கும்?” என்க,


“புதுயிடம்ல? மதியமும் தூங்கிட்டேன் வேற. அதான்” என்றாள்.


அவனுடனான இந்தத் தனிமை அவளுக்குப் புதிது. அதனால் இயல்பாகவே அவளுக்குப் படபடப்பாக இருந்தது.


“கண்ண மூடிக்க. காலைலருந்து அலஞ்ச அலச்சலுக்கு நாலு நா ஆனாலும் ஒறக்கம் கலையாதுபோலனு இருக்கு. எல்லு முட்டெல்லாம் நோவுது” என்று படுத்தபடியே உடலை முறுக்கிவிட்டுக் கொண்டு அவன் கூற,


சிறு புன்னகையுடன் தலையசைத்தாள்.


அவன் கூறியதைப் போல் சில நிமிடங்களில் உறங்கிப் போனவளுக்குக் காலைத் தன்னைப் போல் ஆறு மணிக்கு மேல் முழிப்புத் தட்டியது. பொதுவாக அலாரம் இன்றி முழித்து பழக்கமில்லாதவள் தான் எனினும், புது இடம் கொடுத்த ஒட்டாதத் தன்மை அவளைத் தன்னைப்போல் விழித்துக் கொள்ள வைத்தது.


இரவு படுத்ததற்கு நேர் மாறாக அவனோடு ஒட்டிக் கொண்டு அவள் படுத்திருக்க, அவள் பட்டிடையைப் பற்றிக் கொண்டு அணைத்தபடி அவனும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். இரண்டு நாட்கள் முன்புவரை முக்கியமான ஏற்றுமதிக்கு அவன் ஓடி அலைந்து கொண்டிருந்ததும் அவள் அறிந்ததாயிற்றே. கிட்டத்தட்ட ஒருவாரம் சரியான தூக்கமில்லாமல் அலைந்தவனுக்கு அன்று அவளுடனான உறக்கம் நிம்மதியான தூக்கத்தைக் கொடுத்திருந்தது.


அவனோடு படுத்திருக்கும் விதத்தில் வெட்கம் பிடுங்கித் தின்ன, மெல்ல அசைந்து அவன் தூக்கம் கலையா வண்ணம் நகர்ந்தெழுந்தாள்.


சென்று தனது பையிலிருந்த அழகான பச்சையில் அறக்குக்கறைவைத்த சில்க் காட்டன் புடவையையும் அதற்குத் தோதாய் தைத்துக் கொண்ட ரவிக்கையையும் எடுத்து வைத்தவள் சென்று குளித்து வந்து, அவன் முழித்துக் கொள்ளும் முன்பே விரைவாக உடை மாற்றி முடித்தாள்.


திருமணமான முதல் நாள், தனது புகுந்த வீட்டில் தனது பொழுது விடிந்திருப்பதில் கொஞ்சம் பயம் இருந்த அதே சமயம் மனதில் பெரும் ஆர்வம் இருந்தது அவளிடம்.


அதே ஆர்வத்துடன் கீழே வந்தவள் சமையலறைக்குள் நுழைய, உள்ளே தெய்வநாயகி மட்டுமே இருந்தார்.


"அத்தை" என்று அவர் முன் சென்றவள், "நான் ஏதாது பண்ணட்டுமாத்த?" என்று ஆர்வமாய் கேட்க,


அவளைத் தன் ஆராயும் பார்வையால் அளவிட்டார். திருமணம் முடிந்து ஐந்து மகவுகளைப் பெற்ற அந்த அனுபவசாலிக்கு, அவளது முகம், தோற்றம், பேச்சு என்று அனைத்தையும் கொண்டே முந்தைய இரவு எதுவும் நடந்திருக்கவில்லை என்பதை உணர்த்தியிருந்தது. அதில் அத்தனை ஆத்திரமும் பிறந்தது அவருக்கு.


"நடக்க வேண்டியது எதுவும் நடக்காம இங்க என்னத்த நடத்த வந்துட்ட?" என்று அவர் கேட்டது அவளுக்கு சுத்தமாக விளங்கவில்லை.


பழைமை எண்ணங்கள் கொண்ட தெய்வா, 'நாளு நட்சத்திரம் பாத்து நல்ல நேரத்த குறிச்சு குடுத்தா இவ என்ன இப்புடி எம்புள்ள வாழ்க்கைல கல்ல போட்டுட்டு வந்துருக்காவ?' என்றே மனதோடு ஆத்திரம் கொண்டார்.


"அ..அத்தை?" என்று அவள் புரியாமல் விழிக்க,


"இப்புடி ஒன்னும் நடக்காம தூங்கி எழத்தேம் ஒடக்கிழுத்துப் போட்டு எம்புள்ளைய கட்டிகிட்டியா நீயு?" என்று அவர் வெளிப்படையாகவே கேட்டுவிட,


அது அவளை பெரிதும் சங்கோஜப்படுத்தியதென்றால், சரியாக அவர் அக்கேள்வியைக் கேட்கும் நேரம் பார்த்து கார்த்திகாவும், திருவிக்ரமும் சமையலறைக்குள் நுழைந்தது கண்ணீரையே கொடுத்துவிட்டது.


பொதுவாகவே அந்தரங்கம் சார்ந்த விடயங்களைப் பெண்கள் முன்பு பகிர்ந்துகொள்ள மிகவும் சங்கோஜப்படுபவளுக்கு குடும்பத்து ஆணாகவே இருப்பினும் விக்ரமன் காதுபட இப்படி பேச்சு வாங்கியது கூனிக் குறுக வைத்தது.


வந்த முதல் நாளே தன் புகுந்த வீடு குடுக்கும் பரிசா? என்ற கேள்வியோடு ஒருதுளி கண்ணீர் அவள் கன்னம் உருண்டோடியது.


"ம்மா" என்று‌ அதட்டலாய் விக்ரமன் குரல் ஒலிக்க,


தன் மகன் முன்பு இப்படி பேசியதில் அவருமே பெரிதும் சங்கடப்பட்டுப் போனார். அதற்காக அவரது எண்ணத்தையெல்லாம் தவராக நினைக்கவில்லை.


"என்னம்மா பேச்சிது?" என்றவனுக்கு சங்கோஜமும் சங்கடமுமாய் தலை கவிழ்ந்து வெட்கி நிற்கும் சங்கமித்ராவைக் கண்டு அத்தனை பாவமாக இருந்தது.


தான் அங்கு நின்றால் நிச்சயம் அவளுக்கு இன்னும் சங்கடமாக இருக்கும் என்று புரிந்தவன், அன்னையை முறைத்துவிட்டு வெளியேர,


"என்னத்தே இது? வீட்டுக்கு வந்த புள்ளைய மொத நாளேவா இப்படி பேசுறது?" என்று கார்த்திகா கேட்டாள்.


"நீ என்னடியவ இவளுக்கு வக்காளத்து வாங்கரவ? ஒன் பொழப்பப் பாரு. வந்துட்டா நாட்டமப்பண்ண. ரெண்டாதா ஒருத்தி வாரவும் ஒனக்கு அதிகாரம் வந்ததா நெனப்போ?" என்று அவளையும் அவர் வாட்டியெடுக்க,


அதற்குமேல் அவர் அர்ச்சனையைக் கேட்க முடியாது வாய் மூடினாள்.


"ஒழுங்கா எம்புள்ளக்கூட ஒத்து வாழப்பாரு" என்று இரண்டாம் மருமகளின் தோளைத் தட்டிக் கூறியவர், "போய் வெளக்க பொறுத்து" என்க,


மிக பரிதாபமாய் அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.


சுறுக்கென்று பேச்சு வாங்கியதில் அவள் இயல்பைப் போல் கண்ணீர் மலுக்கென்று வந்து நின்றது. அடுத்த நிமிடமே, ‘அத்தை ஓல்ட் ஜெனரேஷன். அவங்க எண்ணம் அப்படித்தானே இருக்கும். இதுக்குலாமா அழுவ? பேட் கேர்ள்’ என்று மனதோடுக் கூறிக் கொண்டு கண்ணீரை அழுந்தத் துடைத்து அவள் நிமிர, திரிபுரா வந்து நின்றாள்.


அவளைப் பார்த்து சட்டென பயம் ஏற்பட்டாலும் அதை வெளிக்காட்டாமல் சங்கமித்ரா புன்னகைக்க, “அதுசரி.. கல்யாணமாயி மொத நாளு வந்து வெளக்க பொறுத்த நின்னுட்டு என்னத்தக் கரிச்சுட்டு இருக்கவ? இப்படி வந்து கரிச்சுட்டு வெளக்கப் பொருத்தினா வீடு வெளங்குமா?” என்று அதட்டலாய் கேட்டாள்.


நின்ற கண்ணீர் மீண்டும் வந்துவிடுவேன் என்று மிரட்ட, “இ.. இல்ல அண்ணி” என்று தடுமாறினாள்.


“அண்ணியா? மைணினு கூப்பிடனுமுனு சொல்லித்தரிலியாக்கும்?” என்று கேட்டவள், அவளை ஏற இறங்க ஆராய்ச்சியாய் பார்க்க, சங்கடத்துடன் நெளிந்தாள்.


“வெளக்கப் பொருத்து” என்று கூறியதோடு திரிபுரா சென்றுவிட, ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவள், பூஜை அறையில் முந்தைய நாள் வைத்த வாடிய பூக்களை நீக்கிவிட்டு, சென்று பின்பக்கத்திலிருந்து புது பூக்களைப் பறித்து வந்தாள். அந்த வலமையை கார்த்திகா நேற்றே அவளிடம் பகிர்ந்திருந்தது அவளுக்கு வசதியாய் போயிற்று.


அவள் பூக்களைப் பரித்துக் கூடையில் போட்டுக் கொண்டிருக்க, அவள் அருகே வந்த கார்த்திகா, “சங்கு..” என்று பரிவாய் அழைத்தாள்.


பாவமான முகத்துடன் புன்னகைத்தபடி அவள் திரும்ப, “அத்தே பேசினதுலாம் மனசுல வச்சுக்காத சங்கு. அவிய இப்படித்தேம் பட்டு கத்தரிச்சப்போல பேசுவாவ. ஆனா மத்தவட்ட விட்டே கொடுக்க மாட்டாவ” என்று ஒரேடியாய் மாமியாரைத் தாழ்த்தாமல் அவள் எடுத்துக் கூற,


“புரிஞ்சுது அக்கா” என்று கூறினாள்.


அவள் தாடைப் பற்றி முகத்தைத் திருப்பிப் பார்த்தவள், கிசுகிசுப்பானக் குரலில், “நெசத்துக்குமே ஒன்னும் நடக்கலியா?” என்று கேட்க,


“அ..அக்கா” என்று தடுமாறினாள்.


அதில் வாய்விட்டுச் சிரித்த கார்த்திகா, “இப்புடி வெக்கபட்டா எப்புடிடியம்மா? கொழுந்தரு பாவந்தேம்” என்க,


“அக்கா…” என்று சிணுங்கலாய் மிரட்டினாள். இல்லை இல்லை.. மிரட்ட முயற்சித்தாள்.


அதில் மேலும் சிரித்து அவளையும் சிரிக்க வைத்த கார்த்திகா உள்ளே சென்றுவிட, பூக்களைப் பரித்துக் கொண்டு, பூஜையறை சென்று சாமிக்கு வைத்தவளும் விளக்கை ஏற்றி முடித்தாள்.


அதையடுத்து காலை சமையல் வேலைகளில் உதவ வேண்டி அவளும் வர, அவளை சமையல் வேலைகளில் ஈடுபடுத்தாமல் மேம்போக்கான வேலைகளை மட்டுமே கொடுத்து தள்ளி நிறுத்தினார், தெய்வநாயகி. 


போதாத குறைக்கு, அவரது மனக்குறையை ஜாடையாய் அவளிடம் பேசுவதும், திரிபுராவிடம் இவளைப் பற்றிப் பேசுவதுமான அவரது செயல்கள் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாய் சோர்வடையச் செய்ய, தீபிகாவும் தனலட்சுமியும் அவ்விடம் வந்தனர்.


அவர்கள் விஜயத்தில் ஓரளவு சிரித்துப் பேசி என அவள் சகஜநிலை திரும்ப, காலை சமையல் முடிந்து மதியத்திற்கான சுற்று வேலைகளையும் முடித்து வைத்தனர்.




Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02