திருப்பம்-32
திருப்பம்-32
அவ்வீட்டு ஆண்கள் அனைவரும் குழந்தைகளையும் தயார்செய்து கூட்டிவரவும், “ஏம்லே நாளைக்கு எங்கனயும் சோலியிருந்தா பொறவு வச்சுக்கோ. அங்க நம்ம வீட்டுல விருந்து வைக்கேம்” என்று தீபிகா கூற,
“அதுசரி.. பொறவு நான் என்னத்த செய்யவாம்? நான் நாளைக்கு விருந்து வைக்கேம் அவியளுக்கு. நீ அடுத்த நா வச்சுகிடு” என்று திரிபுரா கூறினாள்.
“யக்கா அடுத்த நா எம்மாமியா பக்கட்டு விருந்தாளியலாம் வாராக. கெளம்ப மூனு நா அவிப்போவும். நான் நாளைக்கு வைக்கேம், நீ அடுத்த நா வச்சுகிடேம்” என்று தீபிகா கூறியது தான் தாமதம்.
திரிபுரா கோபத்துடன், “மூத்தவ நானு.. நான் ரெண்டாதா வெக்கனுமா?” என்று ஆரம்பிக்க, அடுத்துப் பேச வந்த தீபிகாவை நிறுத்தி, “நீங்களே வச்சுகிடுவ மைணி. நாங்க பொறவு வச்சுகிடுதோம்” என்று மகாதேவன் கூறினான். இவற்றைப் பார்த்தபோதும் திரிபுராவின் கணவன், சிவா எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவனிடம் பிரச்சினை என்று வராதவரை எதிலும் எப்போதுமே தலையிட்டுக்கொள்ள மாட்டான் என்பதால் பெரிதுபடுத்தாமல் மகா முடித்துக் கொண்டான்.
அதில் நொடித்துக் கொண்ட திரிபுரா, “புள்ளையல அனுப்பிவிடு. அவியளும் நாளைக்கு நம்மவீட்லயே சாப்பிட்டுகிடட்டும். ஒன்னைய பொறவு செஞ்சுக்க சொன்னேம்னு கோவத்துல புள்ளையல புடிச்சுவச்சுக்கிடாதவ” என்று வெடுக்கெனக் கூறிட,
“என்னக்கா பேசுற நீயு?” என்று வளவன் அதட்டலாய் கேட்டான்.
“என்னடா பேசிபுட்டேம்?” என்று திரிபுரா குரல் உயர்த்த,
“தீபி அக்காவ பத்தி தெரிஞ்சுகிட்டே இப்புடி பேசுதியே. அது மனசு வெசனப்படாதா?” என்று விக்ரமன் கேட்டான்.
“அதெல்லாம் அவோளுக்கு ஒன்னும் வெசனமாருக்காது. அவோள தூக்கி பிடிக்கேம்னு வந்து என்னைய தள்ளிபுடாதீய” என்று கூறிவிட்டு திரிபுரா எழுந்து செல்ல,
ஏதோ பேச வந்த விக்ரமனைத் தடுத்த தீபிகா, “அக்கா பத்தி தெரியாதாலே? போவுது வுடு” என்றாள்.
“நீ வெசனப்படாத அக்கா. மூனு நா கழிச்சு சாப்டா என்ன? வரமாட்டோமுனு சொல்லப்போறமா? ஓன் நெரத்த போல வையுக்கா” என்று வளவன் கூற,
“ஒனக்கு விடுப்பிருக்குமா சங்கு?” என்று தீபிகா கேட்டாள்.
சிறு புன்னகையுடன், “ஒரு வாரத்துக்கு லீவுதான் அண்ணி” என்று அவள் கூற,
“சரிடா” என்றாள்.
பேச்சை முடித்துக் கொண்டு அனைவரும் சாப்பிடச் செல்ல, பரிமாறச் சென்ற சங்கமித்ராவை அமர்த்திய கார்த்திகா, “நீ இன்னிக்கு ஓன் அவியளோடத்தேம் ஒக்காந்து சாப்பிடனும் சங்கு. ஒக்காரு” என்று வளவன் அருகே அமர்த்திவிட்டுப் பாத்திரங்களை எடுத்துவர உள்ளே செல்ல, திருமாவளவன் மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினான்.
சமையலறைக்கு முன் இருக்கும் நீண்ட நடைபாதையில் தான் அனைவரும் அமர்ந்திருத்தனர்.
அனைவருக்கும் இலைபோட்டு உணவு பரிமாறப்பட, உணவு பொழுதும் இனிதே துவங்கியது. இட்லி, காரசட்டினி, தேங்காய் சட்டினி, பொங்கல் சாப்பார் மற்றும் வடைதான் காலை உணவாகப் பரிமாறப்பட, இட்லி கார சட்டினியை ஆசையுடன் எடுத்து வாயில் வைத்த சங்கமித்ராவிற்கு காதில் புகை வராத குறையாக இருந்தது.
காரத்தின் இலக்கணம் அறியாமல் உணவு உண்பவளுக்கு அவ்வீட்டுக் காரத்தை முதன்முறை சுவைப்பதில் வாயே வெந்துபோய்விடும் போல் இருந்தது.
அனைவரும் அமர்ந்து அமைதியாக உண்டுகொண்டிருக்க, வாயில் போட்ட ஒரு வாய் இட்டிலியை மென்று விழுங்குவதற்குள் அவளுக்குப் பாதி உயிர் தொண்டைக்கு வந்துவிட்டது.
சரி கார சட்டினி தான் இப்படி போலும் என்று தேங்காய் சட்டினி தொட்டு சாப்பிட்டுப் பார்க்க, அதுவும் அத்தனைக் காரமாய் இருந்தது.
கண்கள் ரத்த நிறத்தில் சிவந்து கலங்கிவிட, அமைதியாய் தலைகுனிந்து இலையை அளந்துகொண்டிருக்கும் மனைவி புறம் திரும்பி, மெல்லிய குரலில், “மித்ரா” என்றழைத்தான்.
சட்டென நிமிர்ந்தவள் கண்கள் கலங்கி, இதழ் துடித்துக் கொண்டிருக்க, அப்போதே நினைவு வந்தோனாய் உணவைத் திரும்பிப் பார்த்தான்.
'அச்சோ' என்று மனதோடு அவளுக்காக வருத்தம் கொண்டவன், “எண்ணை ஊத்திக்குறியா?” என்க, இடவலமாய் தலையசைத்து சிரிக்க முயற்சித்தபடி குனிந்தாள்.
வெறும் இட்டிலியை மட்டும் அவள் உண்ண, பொங்கலிலும் மிளகுக் காரம் சற்றே தூக்கலாக இருந்தது.
இலையை வெறித்துக் கொண்டே மெல்ல உண்ணும் சங்கமித்ராவை அதிருப்தியுடன் கவனித்த தெய்வநாயகி, “ஏம்மா போட்டதையே இம்புட்டு நேரத்துக்கு அளந்துட்டுருக்கவ? அள்ளி உங்கத்தான?” என்று கேட்க,
“ம்ம் அத்தை” என்று தலையை அசைத்தாள். அவர் முகம் கண்டால், தன் கலங்கிய விழிகளைக் கண்டுகொள்வாரோ என்று அவள் தலை கவிழ்ந்தபடி கூற,
“ஏ மக்கா.. அம்மா பேசுறாவ என்ன நீ மொகம் பாக்காம தலையாட்டுறவ?” என்று திரிபுரா கேட்டாள்.
தற்போது அனைவருமே சங்கமித்ராவை நோக்க, ‘போச்சு’ என்று மனதோடு முனகியபடி, நிமிர்ந்தாள்.
நாசி, இதழ் காதுமடலெல்லாம் சிவந்திருக்கும் அவள் முகம் கண்டு முதலில் அதிர்ந்தவர், “என்ன தாயி?” என்க,
“ஒன்னுமில்லத்த” என்று தயக்கமாய் வளவனைப் பார்த்தாள்.
“ம்மா அவோளுக்கு ஒரப்பு பழக்கமில்லமா” என்று அவன் கூற,
“சரியாபோச்சு. இந்தூட்டுக்கு வாக்கப்பட்டு வந்து ஒரப்பு ஆவாதுனா அம்புட்டுத்தான். பழகிகிடு புள்ள” என்று கூறிய திரிபுரா சென்று குளிர்ந்த தயிரை எடுத்து வந்து அவள் இலையில் வைத்தாள்.
“புதுசா ஒரப்பு சாப்பிட்டா ஆவாதுத்தா. பழகவெல்லாம் வேணாம். சுடருக்குக் காரம் கூட போடுமுன்ன எடுத்த வப்போம்ன? அதுல கூட இந்த புள்ளைக்கும் சேத்து எடுத்து வையுங்க” என்று சுயம்புலிங்கம் கூற, அவரை நன்றியாய் ஒரு பார்வை பார்த்தபடி தயிரை அள்ளி வாயில் வைத்தாள்.
எரிச்சல் கண்ட நாவிற்கு அந்த குளிர் தேவையானதாகவே இருந்தது.
கண்கள் மேலும் கலங்கிவிட, தன்னையே அனைவரும் பார்ப்பதில் பெரும் சங்கோஜத்துடன் தலை கவிழ்ந்தாள்.
'ச்ச மொதலயே மைணிட்ட சொல்ல மறந்தனே?’ என்று வளவனுக்கு பெரும் வருத்தமாகிப் போனது.
வைத்த இட்லியை மட்டும் சாப்பிட்டவள், பொங்கலை சாப்பிட இயலாமல் வளவனைப் பார்க்க, அவள் இலையிலிருப்பதை எடுத்துத் தன் இலைக்கு மாற்றிக் கொண்டான்.
அவள் இலையில் இட்லியையும் தயிரையும் வைத்த கார்த்திகா, “சாரி சங்கு. ஒனக்கு ஒரப்பு ஆவாதுனு நெனவே இல்ல. அடுத்து செய்யயில சுடருக்கு எடுத்து வைக்குறதோடு சேத்து வச்சுடுறேம்” என்று கூற,
மூக்கை உரிந்துக் கொண்டு, “சரிக்கா” என்று தலையசைத்தாள்.
உணவு பொழுது எப்படியோ முடிய, குடம் குடமாய் தண்ணீரைக் குடித்துவிட்டு மேலே அறைக்குத் திரும்பினாள்.
காரம் சாப்பிட்டே பழக்கப்படாதவளுக்கு கொஞ்சமேனும் சாப்பிட்டக் காரமே பெரும் அவஸ்தையாய் இருந்தது.
வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு உள்ளே வந்த வளவன், “மித்ரா” என்க, “ம்ம்” எனக் குளியலறைக்குள்ளிருந்து குரல் கொடுத்தாள்.
ஆடவன் வெளியே நிற்க, வாய் கொப்பளித்து முகம் கழுவிவிட்டு வெளியே வந்தாள்.
அவளை நெருங்கி நின்றவன், “மித்ரா சாரிடி. மறந்துபுட்டேம். ஒருவார்த்த எங்கிட்ட சொல்லத்தான?” என்று கேட்க,
“இல்லங்க இவ்ளோ காரம் சாப்பிடுவீங்கனு நான் எதிர்ப்பார்க்கவே இல்ல. எ..எல்லாரும் இருந்தாங்க. எனக்கு எப்படி சொல்லனு தெரியல” என்று தயக்கத்துடன் கூறினாள்.
அவள் முகத்தைக் தன் கரங்களுக்குள் பொத்திக் கொண்டவன், “மித்தவியட்டதேம் சொல்ல தயக்கம். என்கிட்ட என்னடி?” என்று பரிவாய் கேட்க, மனதில் இனம் புரியாத சிலிர்ப்பு ஒன்று பரவியது.
அனைவர் முன்பும் கூற சங்கடப்பட்டுத்தான் அமைதியாக இருந்தாளே தவிர, அவனிடம் கூற அவளுக்குத் தயக்கமில்லை. அதையே அவள் வெளிப்படுத்தியிருக்க, “எல்லாம் நம்ம குடும்பந்தேம் மித்ரா. வெசனப்படாம சொல்லுன்ன?” என்றவன், கட்டைவிரல் கொண்டு மிக மெல்லமாய் அவள் கீழிதழ் வருடி, “எரியுதா?” என்று கேட்டான்.
அவன் ஸ்பரிசத்தில் அவள் உடல் ஒருநொடி அதிர்ந்து நிலைபெற, மெல்ல சிரித்துக் கொண்டான்.
“லே..லேசா” என்று அவள் பதில் கொடுக்க, “ஒன்னு தரவா? காந்தல் நின்னுப்போவும்” என்று கேட்டான்.
அவன் கேள்வியின் சொல்லுக்கு அவளாய் ஒரு பொருளை உருவகித்து படபடப்பாய் விழிக்க, அவளுக்குள் மெல்லிய ஆசைகள் கிளர்ந்தெழுந்தது.
“ஓய்.. ஒன்னத்தான்” என்று கள்ளத்துடன் கூறி அவன் சிரிக்க, தலைகவிழ்ந்தபடி, “என்னது?” என்றான்.
“துப்பாக்கி படம் பாத்துருக்கியா?” என்று சம்மந்தமில்லாமல் அவன் கேட்க,
குழப்பமான பார்வையுடன், “ம்ம்” என்றாள்.
“ம்ம்.. ஐஸ் க்ளோஸ். லிப்ஸ் ஓபன்” என்று அவன் கூற,
அதிர்ந்து விழித்தாள்.
“சொன்னத செய்யனும்” என்று அவன் அதட்டல் போல் கூற,
“எதுக்கு?” என்று தடுமாறினாள்.
“சொன்னத செய்யனுமுனு சொல்லுதேம்ல? செய்யு” என்று அவன் கூற,
சிறு நடுக்கத்துடன் கண் மூடியவள் இதழ், அவன் மெல்லிய வருடலுக்குத் தாமாய் திறந்து கொண்டது.
அவள் தவிப்பை அழகாய் ரசித்தவன், திறந்திருந்த இதழ்களுக்கு இடையே ஒரு இனிப்புக்கட்டியை வைக்க, பட்டெனக் கண் திறந்தாள்.
“என்னது?” என்றபடி அவள் சுவைக்க,
“சாக்லேட்டு. காந்தலாருக்குல? அதேம்” என்று சிரித்தான்.
அதில் முகம் சிவந்தவளுக்கு கொஞ்சம் ஏமாற்றமாய் இருக்க, “போங்க” என்று அவனை நகர்த்திவிட்டு நகர முற்பட்டாள்.
விடாகண்டன் அவன் அவளை விடாது பிடித்துக் கொள்ள, “எ..என்னங்க” என்று தடுமாறினாள்.
“என்னங்க?” என்று அவனும் அவளைப் போல் கேட்க, தன்னை வளைத்துப் பிடித்திருப்பவனின் நேசமும் வாசமும் இன்ப அவஸ்தையாய் இருந்தது.
அதை தாள இயலாது அவனைத் தள்ளியவள், “நான் கீழோ போறேன் போங்க” என்று ஓடிவிட, வளவன் வாய்விட்டுச் சிரித்தான்.
அன்றைய நாள் கோவில் செல்வதும் வருவதுமாய் கழிய, இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்குத் திரும்ப இருந்த சங்கமித்ராவை தெய்வநாயகி நிறுத்தினார்.
“இந்தாருமா. நாளு நச்சத்திரமுனு குறிச்சு வச்சு அனுப்புறது எல்லாம் நல்லபடிக்கு நடக்கத்தேம். மொதல பயமாதேம் இருக்கும். அதுக்குனு வெலகியிருக்குறதா?” என்று கேட்க,
தையலவள் அவரை சங்கடமாய் ஏறிட்டாள்.
“ஜோசியக்காரரு சம்சாரம் எனக்கு தெரிஞ்சவியதேம். இன்னிக்கு பதினொன்னு பத்துக்கு மேல நல்ல நேரமாதேம் இருக்காம். ஒழுங்கா எம்புள்ளையோட ஒத்து வாழப்பாரு. நாளைக்கும் என்னைய பேசவச்சுபுடாத” என்று சற்றே காட்டமாய் பேசிவிட்டுச் செல்ல,
'என்ன கூறுகிறார் இவர்?’ என்று அதிர்ந்து நின்றாள்.
அந்த யோசனை அவளை வெகுவாக பாதிக்க, நாளைய பொழுது விடிந்து அவரை எப்படி சந்திக்கப் போகின்றோம்? என்ற அச்சம் அவளை மேலும் பயம் கொள்ள வைத்தது.
மிக அமைதியாய் வந்து அறையின் கதவடைத்தவள் விளக்கை அணைத்து அவனுடன் சென்று படுத்தாள்.
அமைதியாக தன் அலைபேசியைப் பார்த்தபடி அவன் படுத்திருக்க, அவ்வப்போது அவளையும் ஓரக்கண்ணால் கவணித்துக் கொண்டிருந்தான்.
மாமியார் பேசியதை அசைபோட்டபடி மெல்ல அவனை ஒட்டி வந்தவள் தயக்கத்துடன் அவன்மீது கையிட்டுப் படுக்க,
இயல்பாய் தானும் அவளை அரவணைத்துக் கொண்டான்.
அவன் மார்பில் தலைசாய்த்துக் கொண்டு படுத்தவளுக்கு படபடவென்று வந்தது. அடுத்த அடியை எப்படி வைத்திட என்ற தயக்கமும் அச்சமும் அவளை வாட்டியது.
அலைபேசியை வைத்துவிட்டு அவள் புறமாய் திரும்பி அவன் கண்மூட, கண்களை முட்டிக் கொண்டு அவளுக்குக் கண்ணீர் வந்தது.
தெய்வா பேசிய வார்த்தைகள் அவளுக்குள் உறுத்திக் கொண்டே இருக்க, வந்த முதல் நாளே அவனிடம் சொல்லிப் பிரச்சினை வந்துவிடுமோ என்ற பயத்தில் எதையும் கூறாது அமைதியாக இருந்துவிட்டாள்.
மறுநாளும் அவரது ஆராய்ச்சிப் பார்வை தன்னைத் தொடரும்.. என்னவென்று கூறிட இயலும் அவரிடம்? தயக்கமாக உள்ளது கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையைத் துவங்கவுள்ளேன் என்று அவரிடம் விளக்கிடத்தான் இயலுமா?
கண்ணீர் பொங்கிவர அவன் சட்டை பட்டனில் நடுநடுங்க அவள் கைவைக்க, "என்னய அசிங்கப்படுத்திபுடாத மித்ரா" என்று கண்கள் மூடியபடியே அழுத்தமாய் மொழிந்தான்.
அந்தக் குரலே அவனுக்கு விடயம் தெரிந்திருப்பதை உணர்த்தியது. பின் யோசனையே வேண்டாம். நிச்சயம் விக்ரமன் தான் கூறியிருப்பான் என்பதையும் புரிந்துகொண்டாள்.
கண்ணீரோடு சேர்ந்து கேவல் ஒலி பிறக்க, அவன் மார்பில் தன் முகத்தை அழுத்தமாய் புதைத்துக் கொண்டாள்.
அவன் வேதனையோடு அவள் தலையை அழுத்திக் கொள்ள, சில நிமிடங்களுக்கு அவளது கண்ணீர் தொடர்ந்தது.
அழுவதற்குக் கூட அச்சமாகவும் இருந்தது. காலையில் கண் கலங்கியதற்கே திரிபுரா 'வாழவந்த வூட்டுல மொத நாளே கரிச்சுட்டியா?' என்று கேட்டுவிட, அன்னை கண்ணீரைக் கட்டுப்படுத்தப் பழகு என்று பாடம் எடுத்ததன் அர்த்தம் விளங்கியது.
கேவலை அடக்க அவள் தன் வாயைப் பொத்த, அவள் கரத்தை எடுத்துவிட்டவன் இரவு ஒளியில் பளபளக்கும் அவள் கண்ணீர் முகம் கண்டு, "எம்முன்ன ஒனக்கென்னடி நடிப்பு வேண்டிகிடக்கு?" என்றான்.
அவனைத் தாவி அணைத்துக் கொண்டாள்.
"சாரிங்க" என்று அவள் கூற,
"மித்ரா.." என்றான்.
"இ..இல்லங்க.. வ..வந்த முதல் நாளே உங்கக் கிட்ட எதும் சொன்னா பிரச்சினையாயிடுமோனு ப..பயந்துதான் சொல்லலை.. நா.. எ..எனக்கு" என்று விளக்கம் கொடுக்க இயலாமல் அவள் தடுமாற,
"சாரி மித்ரா" என்று வருத்தமாய் கூறினான்.
அவன் மன்னிப்புக் கேட்டதில் பதறியவள், "நீங்க என்ன பண்ணுவீங்க அவங்க பேசினதுக்கு?" என்க,
அவன் அமைதியாய் அவளைப் பார்த்தான்.
சில நிமிடம் அவ்வறையில் அமைதியே ஆட்சி புரிந்தது.
"நா..நாம பேசிகிட்டோம் தானே.. அ..அத்தை கொஞ்சம் ஓல்ட் ஜெனரேஷன்னால எல்லாம் அப்பவே நடக்கனும்னு எதிர்ப்பார்க்குறாங்க. அ..அவங்கள நாம குறை சொல்ல முடியாது. அன்ட் வேணும்னேலாம் அவங்க அத்தான் முன்ன பேசலை. அத்தான் உள்ள வந்தது அவங்களுக்கே சங்கடமா போச்சு. அவங்கள எதும் சொல்லிடாதீங்க" என்று மித்ரா கூற,
பரிவாய் அவள் தலைகோதினான்.
அதற்குமேல் என்ன பேச, என்ன விளக்கவென்று அவளுக்குத் தெரியவில்லை.
"சாரி மித்ரா. அம்மாவோட எண்ணம் கொஞ்சம் பழைமையானதுதான். அன்ட் அவங்களுக்கு விருப்பமில்லாம நடந்த கல்யாணம் வேற. நம்ம கல்யாணம் நின்னுபோகவிருக்க அவங்களும் காரணம். ஐயா பேச்சுக்குக் கட்டுப்பட்டுத்தான் மறுத்து பேசாம ஒத்துகிட்டாவ. அதுக்காக இப்பவும் கல்யாணம் வேணாமுனு எண்ணமில்ல. ஆனா அவிய பேச்சை மீறி நடந்திருக்கேனு ஒரு ஆதங்கம். அவியளுக்கு அது கொஞ்சம்.." என அவளுக்கு எப்படி விளக்கவென்று அவன் தடுமாற, அவன் கூற வருவது அவளுக்குப் புரிந்துபோனது.
"அ..அத்தைக்கு என்னைப் பு..புடிக்கலையா?" என்று அவள் தடுமாற்றமாய் கேட்க,
"உன்னைய புடிச்சுருக்குனும் இல்ல புடிக்கலைனும் இல்ல" என்றான்.
சோர்வாய் அவனைப் பார்த்தாள். இதென்னடா வம்பாகவுள்ளது என்று அச்சம் பிறந்தது அவளுக்கு.
"நீ பயப்படாதடா. இப்படி ஏதும் சொல்வாங்க தானேத் தவிர கொடுமபடுத்துற அளவுலாம் அம்மா மோசமில்ல" என்று கூற,
"ச்ச நான் அப்படிலாம் சொல்லலைங்க" என்றாள்.
"இல்லமா நான் சொல்றேம். இதேம்னு புரிஞ்சு அதுக்கேத்தபோல நீய இருந்துக்கனுமேனு சொல்றேம்" என்று அவன் கூற,
"ம்ம்" என்றாள்.
பேச்சு வார்த்தைகளின் முடிவில் அவளுக்குத் தலை கோதிக் கொடுத்தபடி அவன் தட்டிக் கொடுக்க, மெல்ல மெல்ல உறக்கம் கொண்டாள்.
'ஒன்னய கட்டின மொத நாளே கண்ணு கலங்க வச்சுபுட்டேனேடி. காலம்பூர ஒழுங்கா பாத்துகிடுவனா?’ என்ற அச்சத்துடன் ஆடவன் தானும் கண்ணயர்ந்தான்.
Comments
Post a Comment