திருப்பம்-33
திருப்பம்-33
முந்தைய நாள் போல் இன்றும் பெண்ணவள் தான் முதலில் விழித்துக் கொண்டாள். முந்தைய நாளைப் போல் அன்றைய காலையை அவளால் அத்தனை ரசிக்க முடியவில்லை.
'எப்படிக் கீழப் போக? இன்னிக்குக் கேட்டா என்ன சமாளிக்க? எ.. எல்லாம் முடிஞ்சுடுச்சுனு சொல்லிடலாமா? முதல இதெல்லாம் எப்படி அவங்க கண்டுபிடிக்குறாங்க?’ என்று மனதோடு புலம்பியபடி சென்று தனது புடவையை எடுத்து வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள்.
'ஒருவேள டயர்டா இல்லனு கண்டுபிடிச்சாங்களோ? இன்னிக்கு முகத்த சோர்வா வச்சுப்போமா? ப்ச்.. அதெப்டி அப்படி கான்ஷியஸோட சோர்வா இருக்க?’ என்று யோசித்தப்படி குளித்து வந்தவள், புடவையை உடுத்தத் துவங்கினாள்.
முன் மடிப்புகளை வைத்தபடியே யோசித்துக் கொண்டிருந்தவள் ஏதோ உறுத்தவும் கட்டிலைத் திரும்பிப் பார்க்க, பள்ளிகொண்ட பெருமாளைப் போல் கரத்தில் தலையைத் தாங்கிக் கொண்டு, கள்ளப் புன்னகையுடன் அவளைப் பார்த்தபடி படுத்திருந்தான்.
விழிகள் வட்டமடிக்க அதிர்ந்துபோனவள் சட்டெனத் திரும்பிக் கொள்ள, மனதின் தால லயம், காதுகளை அடைக்கும் அளவு பேரிரைச்சலுடன் கேட்டது.
அவனுக்கு புறம் காட்டி நின்றவள் மனம் வேகமெடுத்துத் தடதடக்க, படபடப்பாகவும் வேகமாகவும் புடவையை உடுத்திக் கொண்டாள்.
வெடித்துவிடும் சிரிப்பை மீசையோரம் கட்டிவைத்து அடக்கிய திருமாவளவன், “மித்து” என்று மெல்லிய குரலில் அழைக்க, அவள் உடல் அதிர்ந்து அடங்கியது.
கன்னங்கள் செம்மையுற நின்றவள் அவனைத் திரும்பியே பார்க்கவில்லை.
“ஓய் ஒன்னத்தேம் கூப்பிட்டேம்” என்று அவன் கூற,
ஆழ மூச்சிழுத்து விட்டவள், “ம்ம்” என்றாள்.
கட்டிலிலிருந்து குதித்தெழுந்து அவளிடம் வந்தவன், “கால வணக்கமெல்லாம் சொல்ல மாட்டீயலா?” என்க,
“க..காலை வணக்கம்” என்றாள்.
“இதென்ன பள்ளிகூடத்துல வாத்தியாருட்ட சொல்லுற போல? பள்ளியறையில பரந்தாமனுக்கு எப்புடி சொல்லோனுமுனு தெரியிலயாக்கும்?” என்று அவன் நக்கலடிக்க,
'இப்படியெல்லாம் பேசுவீங்களா?’ என்ற ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள்.
“பேசுவேம் பேசுவேம்” என்றபடி சோம்பல் முறித்தவன், அவள் தவிப்பை ரசித்தபடி, “அழகாருந்..அழகாருக்க” என்று கூற, புன்னைக்க இயலாது தடுமாறினாள்.
நாணம் தடா போட்டு மறைத்தபோதும் அவள் மனதின் உவகையை அவனால் உணர முடிந்தது.
அவளை இலகுவாய் அணைத்துக் கொண்டவன் அவள் காதுமடலில் தன் மீசை உரச, “கொஞ்ச கொஞ்ஞமா பழகிக்க. இப்படியும் பேசுவேம்னு” என்று நிறுத்தி நிதானமாய் கூற,
உடல் சிலிர்த்து நின்றாள்.
அவளை மேலும் சோதிக்காமல் விடுத்தவன், “குளிச்சுட்டு வாரேம்” என்று செல்ல,
அப்படியே பொத்தென்று இருக்கையில் அமர்ந்தாள்.
நெஞ்சில் கைவைத்து மூச்சை இழுத்து விட்டவள், ‘அம்மாடீஈ என்ன வேகமா துடிக்குது' என்று எண்ணிக் கொள்ள, ஆசுவாசம் அடைந்த பின் ஆசைகளின் துளிகள் துளிர்விட்டது. தன்னை மறந்த நிலையில் புன்னகைத்தவள், சிறு நாணப் புன்னகையுடன் கீழே சென்றாள்.
கீழே வந்த மருமகளை ஆராயும் பார்வை பார்த்த தெய்வா, அவள் முக பாவத்திலும் உடல் பாவத்திலும் உள்ள முரண்பாட்டில் குழப்பம் கொண்டார். நேற்றைப் போல் எதுவும் பேசி யார் காதிலும் விழாதிருக்க வேண்டும் என்று அவர் அமைதி காக்க, அப்போதே அவரை கவனித்தவளும் தன் மாயையிலிருந்து வெளி வந்தாள்.
அவளிடம் ஏதோ பேச வந்தவர் தனலட்சுமி உள்ளே வரவும் வாயை மூடிக் கொள்ள, வயது பெண் இருக்கும்பொழுது கேட்க வேண்டாம் என்று தவிர்க்கின்றார் என்பதைப் புரிந்துகொண்டாள்.
அதில் அவள் முகம் பளீரிட, “தனம்.. பின்னாடி பூப்பறிக்கக் கூட வரியா?” என்று கேட்டு அவளையும் அழைத்துச் சென்றாள்.
“என்னமா மைணிகாரி காலையிலயே என் வால புடிச்சு சுத்துரவ?” என்று தனம் கேட்க,
அவளிடம் மறைக்கத் தோன்றவில்லை சங்கமித்ராவிற்கு. ஒரே வயது பெண் என்பதால் தோழியைப் போல் பாவித்து நேற்றைய நிகழ்வை அவள் கூற, “ம்ம் தெரியுந் தெரியும். விக்ரமண்ணே வெசனபட்டுட்டுருந்துச்சு வளவன் அண்ணேட்ட” என்று கூறினாள்.
“கல்யாணம் ஆகாத வயசு பொண்ணு முன்ன கேக்க வேணாம்னு அத்தை நினைக்குறாங்க போல. நீ வந்ததும் ஏதும் கேட்காம அமைதியானாங்க. அதான்..” என்று சங்கமித்ரா இழுக்க,
“அப்ப இன்னிக்கு நீ எஸ் ஆவ என்னைய யூஸ் பண்ணப் போற?” என்று கேட்டாள்.
அதில் முகம் உடைந்த விளக்காய் தொங்கிப் போக, “சாரி தனம்.. எ.. எனக்கு” என்று அவள் தடுமாற,
“என்னையலாம் கட்டிகொடுத்தாவனு வையு, அன்னிக்கு நைட்டே அவிய கதைய முடிச்சுருப்பேம்” என்று ரகசியம் போல் கூறினாள்.
விழிகள் தெறிக்க, வாயில் கரம் வைத்த சங்கமித்ரா விழிக்க, “தயிர்ச்சோறா இருப்பப் போலியே நீயு. சரி அது கெடக்கு. எங்கம்மாத்தேம் கூறுகெட்டு போய் நேத்து கேட்டாவனா நீயு வாயத்தொறக்கத்தான? இந்த ஜெனரேஷன்ல புள்ளைய அவியள போல கட்டினா போதுமுனு இருக்க இல்ல. பேசோனும் பழகோனுமுனு நம்ம பக்கட்டு நெறயா உணர்வுயிருக்கு. அது அவியளுக்குப் புரியாதுதேம். அதுக்காவ நைட்டு அப்பிடிப் பேசி அனுப்பிருக்காவனும்போதே நீயு கொஞ்ச நாளு போவட்டுமுனு முடிச்சுகிட்டுப் போலாந்தான? நானெல்லாம் ஒன்னியப்போல இருக்கமாட்டேம் மைணி. எம்மாமியா ஒன்னுன்னா நான் ரெண்டும்பேம் ஆமா” என்று பட்டாசாய் வெடித்தாள்.
சங்கமித்ரா பதில் ஆற்றத் தெரியாமல் விழிக்கவும், “எங்கம்மாதேம். இல்லனுலாம் சொல்லலை. அதுக்காவ சிலது தப்புனா தப்புதேம் இந்தத் தனத்துக்கு. அதுக்குனு ரொம்ப நல்லவனுலாம் நெனச்சுபுடாத மைணி. செல நேரம் சுயநலமாவும் இருப்பேம்” என்று தனம் வெளிப்படையாய் கூற, அவள் பேச்சில் வெகுவாகக் கவரப்பட்டாள்.
“உனக்கு, தீபி அக்காக்கு, விக்ரம் அத்தானுக்கு, அவங்களுக்குலாம் அப்படியே மாமா போலதான் பேச்சு குணம்” என்று சங்கமித்ரா கூற,
“ஏவாம்?” என்று சிரித்தபடி கேட்டாள்.
“பெரிய விஷயத்தையெல்லாம் ரொம்ப சுலபமான வார்த்தை கோர்வைல, வலிக்காம பேசிடுறீங்க. மாமாவும் அப்படித்தான் பேசுறாங்க. அதான்” என்று அவள் கூற,
புன்னகையுடன், “நெசந்தேம். பேச்சுல அப்பாவ அடிச்சுகிட முடியாது. அவியள போல சரியான நேரத்துக்கு சரியான வார்த்தைக் கோர்வையில ஆராலும் பேச முடியாது மைணி. வக்கீலுக்கு போயிருக்கலாமுனு அடிக்கடி சொல்லுவேம்” என்றாள்.
அதில் சிரித்துக் கொண்டவள் பறித்தப் பூக்களுடன் உள்ளே சென்று முந்தைய தினம் போல் பூஜையறையை அலங்காரம் செய்வித்து விளக்கேற்றினாள்.
அவள் சங்கடம் புரிந்து தனமும் அவளுடனே ஒட்டிக் கொண்டு சுற்றினாள்.
அதில் எரிச்சலுற்ற தெய்வநாயகி, குறைபட அன்று தன் மூத்த மகளும் இல்லாத கடுப்பில், சமையல் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த மூத்த மருமகளிடமே காட்டினார்.
“என்ன வேல பாக்க நீயு? போயி வெரசா அந்த மறக்கறிய (காய்கறி) வெட்டிக் கொண்டா” என்று அவர் அதட்ட, ‘இன்னிக்கு எந்த பேயு பூந்துச்சுனு தெரிலியே’ என்று மனதோடு முனகியபடி எழுந்து சென்றாள்.
அங்கு வந்த சங்கமித்ரா, “அக்கா நானும் எதாது செய்றேனே” என்று கேட்க,
அவர்கள் மாமியார் உள்ளே கரண்டியை கீழே போடும் சப்தம் கேட்டது.
அதில் சங்கமித்ராவின் முகம் வாடிவிட,
“இந்த காயெல்லாம் மட்டும் வெட்டி வைடா. நான் போய் பாப்பா முழிச்சுட்டாளானு பாத்துட்டு வரேன்” என்று கூறிவிட்டுச் சென்றாள்.
சரியென்று வாங்கிக் கொண்டவள், காய்கறிகளை நறுக்கத் துவங்க தனலட்சுமியும் அவளுடன் பேசியபடி அமர்ந்திருந்தாள்.
சில நிமிடங்களில் அவளது அலைபேசி ஒலிக்கத் துவங்க, தனது தோழியின் அழைப்பென்று கண்டுகொண்டவள், “மைணி இரு வாரேம். பிரெண்டுதான். ஒரு நோட்ஸு அனுப்ப கேட்டிருந்தா. மறந்தே போனேம்” என்று கூற,
“சரிடா நீ என்னனு பாரு” என்றாள்.
தனம் எழுந்து செல்லவும் தெய்வநாயகி வெளியே வந்து, “இந்தா பொண்ணே” என்க,
சரியாக அவ்விடம் வந்த திருமாவளவன், “ம்மா” என்றான்.
மகனின் திடீர் வரவில் அவர் திடுக்கிட்டுப் போக, “என்னம்மா பேயப்பாத்ததாட்டம் முழிக்குறவ? நாந்தேம்” என்று அவன் கூற,
“கால வேளையில சமயகூடத்து பக்கட்டு ஒனக்கென்னடா சோலி?” என்று கேட்டார்.
“ஏன் சமயகூடத்து பக்கட்டு நான் வரக்கூடாதாக்கும்?” என்று கேட்டவன் ஓரக்கண்ணால் சங்கமித்ராவை நோக்க,
அவன் பார்வையிலேயே சிவந்து தலை தாழ்த்தியபடி வேலையை சிரத்தையுடன் செய்து கொண்டிருந்தாள்.
மகன் மற்றும் மருமகளின் செல்லச் சீண்டல்களைக் கண்டவர், தாமாக ஒரு கணக்கை நினைத்துக் கொண்டு ஆசுவாசம் பெற்றவராய், “என்ன வேணுமுனக்கு?” என்று கேட்க,
“கொஞ்சம் மோரு கொண்டா. தெவக்கமாருக்கு. குடிச்சுபோட்டு வேலன ஓரெட்டு பாத்துட்டு வாரேம். ஒரு சோலியா பேசனும். உச்சிக்கு மூத்தக்கா வீட்டுக்கு வேற பசியாறப் போவனுமில்ல. வார நேரமாயிப்போவும். அதேம்” என்று அவன் விளக்கம் கொடுத்தான்.
சரியென்று தலையாட்டியவர், “ஏட்டி அவேம் மோரு கேக்கான்ல? கொண்டாந்து குடு” என்று சங்கமித்ராவிடம் கூற,
தலை நிமிர்ந்து பார்த்தவள், சிறு தலையசைப்புடன், உள்ளே சென்றாள்.
மோர் எங்கே இருக்கும் என்று தெரியாமல் விழித்தவள், “அத்தை மோரு?” என்க,
“அந்தா குத்துபோணில இருக்கும் பாரு” என்று அடுப்பில் கவனம் வைத்தபடி கூறினார்.
'குத்துபோணியா?’ என்றபடி அவளும் வேறு பாத்திரங்களைத் திறந்துப் பார்க்க, அதைக் கண்டு கோபத்துடன் பெருமூச்சு விட்டவர், அருகே வந்து பெரிய அளவிலுள்ள ஒரு பித்தளைப் பாத்திரத்தின் மூடியைத் திறந்து தட்டை நங்கென்று வைத்துவிட்டுச் சென்றார்.
அதில் அரண்டு போனவள், ஒரு பெருமூச்சு விட்டுத் தன்னை ஆசுவாசம் செய்தபடி மோரை எடுத்துச் சென்றாள்.
வாடிய அவள் முகத்தைக் கொண்டும், உள்ளே நடந்த பேச்சுவார்த்தைக் கொண்டும் என்ன நடந்திருக்கும் என்று யூகித்த திருமாவளவன், மோரை வாங்கி, ஒரு மடக்குப் பருகிவிட்டு, “மித்து” என்றான்.
“திருமாலுக்கு மட்டுமில்ல. மித்துக்கும் திருமாலைப் புரியும். சும்மா சும்மாலாம் சாரி கேக்க வேணாம்” என்று அவள் கூற,
வருத்தம் மறைக்கும் புன்னகை ஒன்றைக் கொடுத்தான்.
அவளது சோர்ந்த முகம் போக்கும் முயற்சியில், “காலையில எனக்கு முன்னுமே முழிச்சுடுறியே? வெரசா எழுந்து பழக்கமோ?” என்று கேட்க,
“இல்லங்க. அலாரம் இல்லாம எழவே மாட்டேன். என்னமோ இங்க முழிப்பு வந்துடுது” என்றாள்.
“ம்ம்.. எனக்கு வசதியாதேம் இருக்கு அதுவும்” என்று அவன் கூற, பின்பு தான் எதைக் குறிப்பிட இந்த பேச்சு வார்த்தை என்றே அவளுக்குப் புரிந்தது.
முகம் சிவந்து போக இதழ் கடித்துத் தலை கவிழ்ந்தவள், “ச்..சும்மாருங்க” என்று கூற,
“சும்மாதான இருக்கேம்” என்று ஓரடி அவளை நெருங்கி நின்றான்.
அதில் பதட்டம் கொண்டு அவள் சுற்றிமுற்றிப் பார்க்க,
“ஆருமில்ல” என்று கள்ளச் சிரிப்புடன் கூறினான்.
மெல்ல அவனைத் நிமிர்ந்து பார்த்தவள் குறும்பு கொப்புளிக்கும் அவன் விழிகளையும், அவன் சுருள் கேசத்தையும் கண்டு, அதைத் தொட்டுப் பார்க்கும் ஆர்வத்துடன் பார்த்தாள்.
“என்னட்டி பாக்கவ?” என்றபடி வளவன் தன் கேசத்தை சிலுப்பிக் கொள்ள,
“அழகாருக்கு” என்றாள்.
“என்னது?” என்று சிரிப்போடு அவன் கேட்க,
“உங்க முடிதான். புறா கூடு மாதிரி இருக்கு” என்று கூறி கிளுக்கிச் சிரித்தாள்.
“அடிப்பாவி. நளியடிக்கியாக்கும்?” என்று மிரட்டல் போல் அவன் கேட்க,
“அப்படினா?” என்று விழித்தாள்.
“கேலி பேசுதியானு கேட்டேம்” என்றவன், “பேச்ச மாத்தாத. என் மண்டையப் பாத்தா புறா கூடாட்டம் இருக்கா?” என்று கேட்க,
சுற்றிமுற்றிப் பார்த்துக் கொண்டு அவன் முடியில் கைவைத்தவள், மேலும் கீழுமாய் தலையாட்டி, “நல்லா புசுபுசுனு அப்படித்தான் இருக்கு” என்றாள்.
“இந்தாடி கொழுப்புத்தான ஒனக்கு?” என்று கேட்டபடி அவளைத் தன்னோடு சேர்த்து இழுத்துக் கொண்டவன், தன் முடி கொண்டு அவள் மூக்கில் உரச, அவன் தீண்டலிலும் செயலிலும் கூச்சம் கொண்டு, “யாரும் வந்துடப்போறாங்க” என்று தடுமாற்றமாய் மொழிந்தாள்.
“வந்தா வரட்டுமே? ஏதும் நடக்கலையா நடக்கலையானு கேக்காங்க தானே? ஃப்ரீ ஷோ பாத்துட்டு போவட்டும்” என்று அவன் கூற,
“ச்சை என்ன பேச்சிது” என்று முகம் சுழித்தாள்.
அதில் இதழ் மடித்து சிரித்தவன், சமையலறை வாசலில் நிழலாடவும், அவளைவிட்டு விலக,
'அச்சோ.. படுத்துறாறே' என்று மனதோடு சிணுங்கியபடி, தலைகுனிந்து நகர்ந்து நின்றாள்.
மோரைக் குடித்து முடித்தவன், “வாரேம்” என்க,
“ம்ம்” என்ற தலையசைப்போடு உள்ளே ஓடினாள்.
அதில் சிரித்துக் கொண்டே திரும்பியவன் கூடத்திற்குச் செல்ல, தன் தொண்டையை கணைத்துக் கொண்ட விக்ரமன், “மோரு குடிச்சுட்டியாலே?” என்று கேட்டான்.
“குடிச்சம்லே” என்றவன், “நானு மோரு குடிக்கத்தேம் போனேமுனு ஒனக்கு எப்புடித் தெரியும்?” என்று கேட்க,
“அதாம் பார்த்தேனே. நீ மோரு குடிச்சதையும் பாத்தேம், பீரூ அடிச்சதையும் பாத்தேம்” என்று நக்கலாய் கூறினான்.
முதலில் புரியாது விழித்தவன் சட்டென விடயம் பிடிபட்டோனாய் விழிக்க,
வாய்விட்டு சிரித்த விக்ரமன், “ஆனாலும் ஒனக்கு தெகிரியம் தாம்லே. உள்ளார அம்மாவ வச்சுகிட்டே படம் ஓட்டுத பாத்தியா?” என்று கூறினான்.
“லே போலே அங்கன” என்று கூறிய வளவனுக்கே வெட்கம் வந்துவிட்டது போலும். மேலும் சிரித்து அவனை கேலி செய்துவிட்டே விட்டான் விக்ரமன்.
Comments
Post a Comment