திருப்பம்-34

 திருப்பம்-34



நேரே வடிவேலுவின் வீட்டிற்கு திருமாவளவன் வந்து சேர, அவனது தாய் சுந்தராம்பாள், “வாயா வளவா” என்று வாஞ்சையுடன் அழைத்தார்.


“அத்தே” என்றபடி நுழைந்தவன், “அவேன எங்கத்த?” என்று கேட்க,


“காலையிலயே தோட்டத்துக்கு போயிட்டியான்யா. ஒன்னய ஒரு வாரத்துக்கு தோட்டப்பக்கம் வரவேணாமுனுருக்கானாமுல? அதேம் போய் பாத்துபோட்டு வாரேமுனு போனியான்” என்று கூறினார்.


“சரித்தே சரித்தே” என்று அவன் கூற,


“ஏதும் சாப்புடுதியாயா?” என்று கேட்டார்‌.


“மோரு குடிச்சுபுட்டுதேம் வந்தேம் (அ)த்தே” என்று கூறியவன், “நீங்க சாப்டீயளா?” என்று விசாரிக்க, சில நிமிடங்கள் அங்கே நல விசாரிப்புப் படலம் ஓடியது.


“ஏ மக்ளே. அவேனுக்கு தெரிஞ்ச ஒறவுக்கார வீட்டுலருந்து ரெண்டு மூனு சம்மந்தம் வந்திருக்குது. எத காட்டினாலும் வேணாமிங்கான். இந்தா பதவீசா வீட்டையும் கட்டிபோட்டு அதுக்கு வாங்கின கடனயும் அடைக்கப் போறாம். இன்னும் ஏன் தட்டிகழிக்கான்னே புரியில சாமி. ஓங் கூட்டுக்காரன் என்னத்தான் நெனைக்குதான்னு பேசுயா. ஏங்காலம் இன்னும் எம்புட்டோ? ஒரு கல்யாணம் காட்சி பாத்துபுடுவோமின்னா பிடி கொடுக்க மாட்டிக்கானே?” என்று அவர் கூற,


“ஏந்த்தே கண்ணாலம் கட்டிக்குறத பத்தி பேசுதீய சரி. அதென்ன ஒங்க காலம் முடியிதுனு பேச்சு. நல்லாவாருக்கு கேக்க?” என்று உரிமையுடன் அதட்டினான்.


“அப்பிடியில்ல சாமி. வயசாயிட்டு. தவமா தவங்கெடந்து இல்லாத பேச்செல்லாம் வாங்கிபோட்டு பெத்த புள்ள. ஒத்த புள்ளைய கொடுத்துபுட்டு கட்டிகிட்டவரும் போய் சேந்துபுட்டாரு. ரெண்டு பக்கட்டு சொக்காரவியளும் ஏன்னு சீந்தல. அவேனும் நோவ, நானும் நோவனு வளத்த புள்ளைக்கு சாமி புண்ணியத்துல ஓஞ் சவகாசம் கிடச்சது. பட்ட கஸ்டத்துக்குலாம் அவேன நல்ல நெலயில வீடு காடுனு பாத்துபுட்டேம். எஞ்சினது ஒரு கல்யாணந்தான். அதயும் பாத்துட்டா மனசு ஆருமில்ல சாமி. முன்ன நீயு சொன்னாலும் கேட்டுகிட மாட்டியானாருக்கும். இப்ப ஒனக்கு கண்ணாலமாச்சுதுல. புதுசா கட்டிகிட்டவிய சொன்னாவாச்சு பய சரிங்குறானானு பாப்பமுனுதேம் சொல்லுதேம்” என்று அவர் கூற,


“ஆரமிச்சுட்டியாத்தா நீயு?” என்றபடி வடிவேலு உள்ளே நுழைந்தான்.


“நான் என்னத்தடா தொவங்கினேம்?” என்று ஆற்றாமையாய் அவர் கேட்க,


“செத்த சும்மாருத்தா. கண்ணாலந்தான? கட்டிக்குறேம். வேலையினு வந்தவியன புடிச்சுவச்சு புலம்புதியே” என்று மனத்தாங்களாய் கூறினான்.


“ஏ மக்ளே. அத்தே போற வாரவட்டியா பொலம்பினாவ? எங்கிட்டத்தானம்லே? ஒனக்கு எங்கன காந்துதுங்கேம். மிரட்டுற சோலியெல்லாம் வச்சுக்காத. சவட்டிபுடுவேம்” என்ற திருமாவளவன், “அவேம் கெடக்கான் த்தே. நான் பேசிக்குறேம். நீங்க வெசனப்படாதீய” என்று கூற,


“சரிய்யா சாமி” என்றார்.


வேலுவை முறைத்தபடி வெளியே கூட்டிவந்தவன், சாலையோரம் நடந்தபடியே, “ஏம்லே அவியள வெசனப்படவைக்க? அதேம் தனத்த புடிச்சுருக்குல? கட்டிகிட என்னவாம்?” என்று கேட்டான்.


“இன்னுமொரு ரெண்டு மூனு மாசம் போவட்டும்லே” என்று வளவன் கூற,


“அதாம் எதுக்குனு கேக்கேம்” என்றான்.


வடிவேலு வெகுவாய் தயங்க, “என்னம்லே? எதும் பிரச்சினையா? தனம் வேண்டாங்குதா?” என்று கேட்டான்.


“ச்ச ச்ச. அதெல்லாம் வேணாங்கலலே” என்றவனுக்கு அவளது ஆசை பொங்கும் முகம் மனதில் தோன்றி மறைந்து மெல்லிய புன்னகை உதயமானது.


“ஒனக்கு புதுசாலே இந்த சேதி? அப்பாரு ஏகப்பட்ட கடன வச்சுட்டு போயிருக்காவ. படிப்பு வேலையினு பாத்து அம்புட்டயும் அடைச்சு கொஞ்சக் கொஞ்சமா வீட்டையும் கட்டி முடிச்சிருக்கேம். இன்னும் கடனு மிச்சங் கெடக்குதுலே. வாரவள கூட்டு சேத்துகிட்டு நான் கடன கட்டிகிட்டு இருக்கனுமா? அவோ உங்க வீட்ல ராசகுமாரியாட்டம் வளந்தவோலே. எங்கிட்ட வந்து அவதிப்பட வேணாம். போவட்டும். அம்மாக்கு தெரிஞ்சா ஒடனே வந்து தெய்வாத்தைட்டயோ மாமாட்டயோ பேசிபுடும். கடன கட்டி முடிச்ச பொறவாட்டி நானே வந்து கேக்கேம்.” என்று வேலு கூற,


நண்பனை பெருமிதத்துடன் பார்த்தான்.


“இதுல நான் பேசிகிட ஒன்னுமில்லலே. ஆனா ஒருவார்த்த நீயே தனாட்ட பேசி பாரேம்” என்று வளவன் கூற,


“அதுசரி.. அம்புட்டுதேம். ஓந்தங்கச்சி இந்தா இன்னிக்கே வேலைக்குப் போறேம்.‌ வா சேந்து கடன கட்டி முடிச்சு சட்டுபுட்டுனு கட்டிகிடுவோம்னு வந்து நிப்பா” என்று சிரித்தான்.


“அதுல என்ன தப்பிருக்குங்கேம்? இந்தாருலே. நீயா போயி நீயும் வேலைக்கு போ, கடன அடைப்பம்னு கேட்டுகிட்டா கூட அது தப்பாவே நெனக்காது. அதுட்ட ஒனக்கில்லாத உரிமையானுதான் நெனைக்கும். அப்படியிருக்க அவோளா வேலைக்கு போவ என்னம்லே பிரச்சின?” என்று வளவன் கேட்க,


“அது ஆசபட்டு படிக்குதுலே. படிக்கட்டும். எம்பொண்டாட்டி கூட நாலு படிப்புப் படிச்சு பேரு வாங்கிருக்கானா எனக்கு மருவாதி தானே?” என்று கேட்டான்.


“இல்லனு ஆரு சொன்னா? அவோ படிப்ப நிப்பாட்ட போறதில்லயே? இந்தா பீ.எச்.டீ பண்ற காலேஜுலயே டீச்சரு வேலை கேட்டுகிட்டா தரப்போறாவ? பார்டைம்ல பீ.எச்.டீ பண்ணிகிட போறா” என்று வளவன் கூற,


“அது ரொம்ப இழுக்கும்லே” என்றான்‌.


“கூட ரெண்டு வருஷமாகுமா?” என்ற வளவன், “இதுநா(ள்) வர இதுபத்தி உங்கிட்ட நா பேசிகிடாததுக்குக் காரணம் இது ஓன் வாழ்க்க, ஒன்னட முடிவுனு நெனச்சதாலதேம். இப்பத அப்படி விட தோனமாட்டிக்குதுலே. தனத்த மட்டுமே ரோசிச்சு அத்தைய வெசனப்படுத்தாத” என்று கூற,


வடிவேல் யோசனையாய் தலையசைத்தான்.


“இதெல்லாம் லட்சுட்ட சொல்லாதலே” என்று வேலு கூற,


“நீயா சொல்லிகிட்டா நல்லது. ரோசிச்சுக்கோ” என்று முடித்துக் கொண்டான்.


பின் வேலை விடயமாக அவர்கள் பேச்சு செல்ல, “சரிலே. எல்லாம் முடிச்சுபோட்டு சொல்லுதேம். நீ ஒரு வாரம் போகவும் வா” என்று வடிவேலு கூறினான்.


பின் மணியைப் பார்த்த வளவன், “ஆத்தே எம்புட்டு நேரமாச்சு?” என்று பதற,


“ஏவாம்? தங்கபுள்ள காத்துகெடக்குமாக்கும்?” என்று வேலு கேலி செய்தான்.


“லே பெரியக்கா வீட்ல விருந்து வைக்காவ. அதுக்கு பொறப்படனும்” என்று மீண்டும் அவனோடு வீடு நோக்கி நடந்தவன், “நான் வாரேம்லே. அத்தேட்ட சொல்லிபுடு” என்று கூற,


“அம்மாவும் ஒங்களுக்கு விருந்து வைக்கோனுமுனு பேசிகிச்சுலே. ஓன் சொக்காரவ வச்சு முடிச்ச பொறவாட்டி நாளு பாத்து சொல்லு” என்று வடிவேல் கூறினான்.


“சரிலே நான் தேதி பாத்துபோட்டு சொல்லுதேம். அத்தேய ஒரப்ப மட்டும் கொறச்சு சமைக்கச் சொல்லு” என்று வளவன் கூற,


“ஏம்லே ஒனக்கு ஒரப்பாருந்தாதான பிடிக்கும்?” என்று கேட்டான்.


“அவோளுக்கு ஒரப்பு ஆவாதுலே. மொத நாளு நம்மூட்டு சட்டினிக்கே கரிச்சுபுட்டா பாவம்” என்று வருத்தமாய் அவன் கூற,


சிரித்தபடி நண்பன் தோள் தட்டியவன், “மாப்ள பீலிங்ஸுலாம் பலமாருக்குடா” என்றான்.


“நளியடிக்காது போயி சோலிய பாருடா வெளக்கெண்ண” என்ற வளவன், “வாரேம்” என்று புறப்பட்டான்.


வளவன் வீட்டை வந்து அடைய, “ஏன்டா வெவரங்கெட்டவனே கூரிருக்காடா ஒனக்கு? காலையிலயும் உங்காம போயிட்ட. அக்கா ரெண்டு மொற கூப்பிட்டு எப்ப வருவியான் எப்ப வருவியான்னு கேட்டுடுச்சு” என்று விக்ரமன் கூற,


“வேலையா பேச போனேன்டா. நேரம் போனதே தெரியில. இப்பத என்ன? அங்கனதான போயி சாப்பிடப் போறேம்?” என்றவன், “மித்ரா” என்று குரல் கொடுத்தான்.


தனலட்சுமியின் அறையிலிருந்து வெளியே வந்தவள், அவனை நோக்க, “ரெடியா? போவமா?” என்று கேட்டான்.


அவனை முறைக்க முயன்று விக்ரமன் இருப்பதால் அமைதி காத்தபடி அவள் தலையசைக்க, “வா போவம்” என்றான்.


“போயிட்டு வரேன் தனா” என்றவள் மாமியாரிடம் கூற பின்பக்கம் செல்ல, துணிகளை உளர்த்திக் கொண்டிருந்தவர், “அவேந்தேம் வர லேட்டாக்குறான்னா ஒரு போனடிச்சு கூப்பிடத்தான? ஒங்கவீட்டுல விருந்து வச்சு அவேம் வராமருந்தா கல்லுபோல ஒக்காந்துருப்பியா?” என்று திட்டிவிட்டே அனுப்பி வைத்தார்.


அமைதியாக வந்தவள் கார்த்திகா மற்றும் விக்ரமனிடமும் கூறிக் கொண்டு புறப்பட, வண்டியில் ஏறி அமர்ந்தவன், “சாரிடி நேரத்தையே பாக்கல” என்றான்.


“உங்க ஃபோன் எங்க?” என்று அவள் கேட்க,


அலைபேசியை எடுத்துப் பார்த்தவன் அவள் இரண்டு முறை அழைத்திருப்பதைக் கண்டு, “ஏ ஃபோன் போட்டியா?” என்றபடி ஆராய, அலைபேசியை முந்தைய நாள் ஒலியணைப்பு செய்தது நினைவு வந்தது.


“சைலென்டுல போட்டிருக்கேம் மித்ரா. கவனிக்கவேயில்ல” என்று அவன் கூற,


“நேரமாகுது போங்க” என்றாள்.


வண்டியை எடுத்தவன் கண்ணாடியில் அவ்வப்போது அவள் முகத்தைப் பார்த்தபடி, “அம்மா ஏதும் சொன்னாவளா?” என்று கேட்க, அமைதியாக அமர்ந்திருந்தாள்.


“உன்னத்தான் கேக்கேம்” என்று அவன் குரல் உயர்த்திக் கேட்க,


“என்ன சொல்லுவாங்க? நான் ஃபோன் போட்டு கூப்பிடலயேனு சங்கடப்பட்டாங்க. அவங்க அருமை புள்ள ஃபோன சைலென்டுல வச்சிருக்குறதும், நான் கூப்பிட்டதும் அவங்களுக்கு தெரியலையே” என்று கூறினாள்.


“சாரிடாமா. நிஜமா மறந்துட்டேம்” என்று கூறியவன் விரைவே திரிபுரா வீட்டை அடைய,


அவனுக்காக காத்திருந்தவள், “ஓன் அக்காவ தட்டிகழிச்சுபுட்டு நான் வைக்கேன்னு வராம விட்டுபுடுவியோனு நெனச்சேன். பரவால வந்துட்ட” என்று இடக்காக பேசினாள்.


“எக்கா நேரத்த பாக்கல. எகன மொகனயா பேசாத எலைய போடு. பசிக்கு” என்று அவன் கூற,


அதற்குமேல் பேச்சு வளர்க்காமல் இலையை போட்டாள்.


தீபிகாவின் பிள்ளைகளும் அங்கே விளையாடிக் கொண்டிருக்க, “மாமா அத்தை” என்று ஓடி வந்து அவர்களைக் கட்டிக் கொண்டனர்.


“ஏ குட்டி இங்க தான் இருக்கீங்களா?” என்று சங்கமித்ரா தேவிகாவைக் கொஞ்ச, 


“ஆமா அத்தை. அம்மா சூப்பரா கறி குழம்பு வச்சு ஊட்டி விட்டாங்க” என்று கூறினாள்.


“சூப்பர்டா பாப்பா” என்று அவள் கூற,


“போதும் போதும். வந்ததே இம்புட்டு நேரமாச்சு. புள்ளையல பொறவு கொஞ்சு. அவேம் பசிக்குதுங்கான்ல?” என்று திரிபுரா கூறினாள்.


“பிள்ளைய கொஞ்சுற நேரத்துல என்ன முழிகிபோவுது? நீ போய் எலைய போடுக்கா” என்று வளவன் கூற,


முகவாயை தோளில் இடித்துக் கொண்டு சென்றாள்.


இருவரும் சென்று அமர, குழந்தைகளும் அருகே அமர்ந்துகொண்டு கதைகள் பேசினர்.


வளவனுக்கு முதலில் அனைத்தையும் பரிமாறின திரிபுரா, சங்கமித்ராவிற்குத் தனியே எடுத்துவர, முந்தைய நாள் நிகழ்வில் தனக்குக் காரம் குறைவாக உள்ள உணவை எடுத்து வைக்கின்றார் என சங்கமித்ரா புரிந்துகொண்டாள்.


அதில் புன்னகைத்துக் கொண்டவள் வளவனைப் பார்க்க, அவனும் புன்னகையாய் உணவை உண்டான்.


“என்ன மாப்ள ஒங்கக்கா நல்லா சமச்சுருக்காளா?” என்றபடி சிவபாதசேகரன் வர, “அக்கா கைபக்குவத்துக்கு என்னத்தான்? அருமையாருக்கு” என்றான்.


“என்னமா ஒனக்கு புடிச்சுருக்கா? ஒரப்பு சரியாருக்கா?” என்று அக்கறையுடன் சங்கமித்ராவிடம் விசாரிக்க, 


“நல்லாருக்கு அண்ணா. காரமும் கம்மியாவே இருக்கு” என்றவள், “ரொம்ப நல்லாருக்கு அ..ண்.. மைணி” என்றாள்.


“ம்ம் சாப்டுங்க” என்று கூறியவள் பார்த்து பரிமாற, உணவு பொழுது இனிதே முடிந்தது. திருப்தியான உணவும், மனக்கசப்பற்ற பேச்சும் என பொழுதை கழித்துவிட்டு இருவரும் புறப்பட, “ரெண்டு நாளா யார் வீட்டுக்காது போக சாப்பிடனுதான் இருக்கோம்” என்று சங்கமித்ரா சிரித்தாள்.


“இன்னும் ஒருவாரத்துக்கு இதேம் ஓடும். இங்கன கண்ணாலமானவியளுக்கு விருந்து வைக்குறத ரொம்ப செரத்தயா செய்வாக மித்ரா. சின்னக்கா கூப்பிட்டிருக்கு, வடிவேலு கூப்பிட்டிருக்கியான், எங்கப்பா பக்கட்டு சொக்காரவக ரெண்டு பேரு அழைச்சுருக்காவ. இது ஒருவகையில மொறை செய்யுற போல” என்று அவன் எடுத்துக் கூற,


“சாப்பாடு போடுறதுல இவ்ளோ இருக்கா?” என்றாள்.


அதில் புன்னகைத்தவன், “நெறையா இருக்கு” என்றான்.


இரவு பொழுதும் இனிதே முடிய, காலையிலிருந்து அதிக உணவு எடுத்துக்கொண்டதால் சங்கமித்ரா பாலுடன் முடித்துக் கொண்டாள்.


“ஏன்டி இவ ஆளுபோல திங்க மாட்டா போலயே? இப்படி கொறிச்சுட்டும் குடிச்சுட்டும் இருந்தா எங்கனு தெம்பு வரும்?” என்று தெய்வானை அதற்கும் கார்த்திகாவிடம் ஒரு பாட்டு பாட, அவளும் பாவம் அமைதியாகக் கேட்டுக் கொண்டதோடு நகர்ந்துவிட்டாள்.




Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02