திருப்பம்-35
திருப்பம்-35
இரு வாரம் இனிதே ஓடியிருந்தது. இந்த இரு வாரத்தில் சங்கமித்ரா தன்மீதான அவ்வீட்டாரின் அபிப்ராயங்களையும், அவர்களது குணநலன்களையும் ஓரளவு கண்டுகொண்டாள். அதிலும் தெய்வநாயகிக்கும், திரிபுராவிற்கும், தன்மீது பிடித்தமென்பது துளியும் இல்லை என்பதையும், வளவனின் வாழ்க்கை தன்னால் சிறக்க வேண்டிய கட்டாயம் ஒன்றிர்காக மட்டுமே தன்னை ஏற்றுள்ளனர் என்பதையும் புரிந்துகொண்டாள்.
அதில் பெருமளவு வருத்தம் ஏற்பட்ட போதும் கூட, காலப்போக்கில் அவர்களின் எண்ணம் மாற்றம் பெறலாம் என்ற ஒரு தைரியத்தோடு வளைய வரத் துவங்கியிருந்தாள். இன்னமும் அவளை சமையல் வேலைகளில் தெய்வநாயகி சேர்த்துக் கொள்ளவில்லை என்றாலும், சுற்று காரியங்களைக் கொடுத்து செய்ய வைத்தார்.
கார்த்திகா திருமணம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகவுள்ள நிலையில் இன்னும் சமையலறையின் பொருப்பை அவளுக்கே கொடுத்திராதவர், வாரம் முன்பு வந்த அவளிடமா கொடுத்துவிடுவார்?
சுயம்புலிங்கம் மீது முன்பே நன்மதிப்புக் கொண்டிருந்த சங்கமித்ராவிற்கு, அவரது பாசமான பேச்சும், அனுசரணையான குணமும் மேலும் மரியாதையையும் அன்பையும் கொடுத்தது.
கார்த்திகா அவளுக்கு மூத்தவளாய் இருந்து, அவளை வழிநடத்தத் துணையாக இருக்க, அவ்வப்போது வந்துபோகும் தீபிகாவும் பாசத்துடனே நடந்து கொண்டாள்.
திருவிக்ரமன் மற்றும் மகாதேவன் கூட அவளிடம் உரிமையுடன் பேசி சிரிக்குமளவு முன்னேரியிருக்க, தனம் மிக நெருக்கமான தோழியாய் அவளுடன் ஒட்டிக் கொண்டாள்.
அதிலும் ஆர்வத்துடன் சென்று அவளது காதல் கதைகளைக் கேட்பதில் சங்கமித்ராவிற்கு தனிப் பிரியம் உருவாகிட, அவளின் ஆர்வத்தில் தனலட்சுமியும் உற்றாகம் பெற்றுப் பேசத் துவங்கியிருந்தாள்.
திருமாவளவனுக்கும் அவளுக்குமான உறவிலும் நல்ல முன்னேற்றம் உருவாகியிருந்தது. அவ்வப்போது அவனுடன் சின்னச் சின்ன சண்டைகள் கூட போடத்துவங்கி, சமரசம் அடையும் அழகிய நெருக்கங்களையும் பழகத் துவங்கியிருந்தாள்.
இரவு, திருமாவளவனுக்குப் பிடித்ததைப் போல் காய்கள் நறுக்காததால் தான் அவன் ஒழுங்காக உண்ணவில்லை என்று தெய்வா திட்டியிருந்த கோபத்தில் சங்கமித்ரா வந்து சண்டை பிடித்து கோபித்துக் கொண்டபடியே உறங்கியிருக்க, காலை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து கண் விழித்தத் திருமாவளவன் தன்னைக் கட்டிக் கொண்டு உறங்கும் மனையாளைக் கண்டு அழகாய் புன்னகைத்தான்.
'ஏங்க நீங்க வடிவேலண்ணேகூட வெளிய சாப்டு வந்ததாலதான் இங்க ஒழுங்கா சாப்பிடலைனு அத்தைட்ட சொல்ல வேண்டியது தானே? சாம்பாருக்கு நான் வித்தியாசமா காய் நறுக்கிட்டேனாம். அது உங்களுக்கு பிடிக்காததால தான் நீங்க சாப்பிடலைனு எனக்கு வேலை செய்ய தெரியலைனு திட்றாங்க’ என்று எல்லார் முன்பும் திட்டு வாங்கியதில் வருந்தி கண்கலங்க அவள் கூறியிருக்க,
'வெளிய சாப்ட்டேன்னா வைவாவனு சொல்லலைடி. உன்னைய இப்புடி அறுப்புவாவனு நான் என்னத்தடி கண்டேம்?’ என்றான்.
'ஆமா நீங்க பச்ச புள்ள. வெளிய சாப்டா திட்டப்போறாங்கனு பயப்பட. ஏற்கனவே பாத்திரத்துக்குலாம் புதுசு புதுசா பேரு வச்சு தெரியலைனா அதுக்கும் திட்டுறாங்கனு பாத்தா இப்ப இதுக்கும்’ என்று கோபம் பாதி, சோர்வு மீதியாய் கூறியவள், ‘ப்ச்.. போங்க’ என்று கடுப்போடு சென்று படுத்துவிட, என்ன செய்து சமாளிப்பதென்று அறியாது தானும் படுத்துக் கொண்டான்.
'நைட்டு அந்த கத்து கத்திப்டு இப்பத எப்புடி படுத்துருக்கா பாரு’ என்று சிரித்துக் கொண்டவன், அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட, அவன் தாடி மீசையின் உரசலில் முகம் சுருக்கிப் பிரண்டுப் படுத்தாள்.
அதில் இன்னும் அழகாய் சிரித்துக் கொண்டவன், அவள் கன்னத்தில் முத்தமிட, “ப்ச்” என்றபடி மீண்டும் பிரண்டுப் படுத்தாள்.
மீண்டும் முத்தம், மீண்டும் சிணுங்கல். முத்தத்திற்கும் சிணுங்கலுக்கும் இடையே நடந்த தொடர் போரில் தூக்கம் தொலைந்துபோக, கோபமாய் “என்னப்பா?” என்றபடி விழித்தாள்.
“குட் மார்னிங் மேடம்” என்று குறும்புடன் அவன் கூற,
தூக்கக் கலக்கத்தில் அவன் கழுத்தடியில் முகம் புதைத்துப் படுத்துக் கொண்டவள், தன்னை இதமாய் அணைத்துக் கொண்டவன் ஸ்பரிசத்தில் சுயம் மீண்டு, திடுக்கிட்டு எழுந்தாள்.
முகம் சிவக்க அவனை முறைத்தவள் சிவப்பிற்குப் பின்னிருப்பது கோபமா, வெட்கமா என்பது அவளுக்கே வெளிச்சம்.
முகத்தைத் திருப்பிக் கொண்டு எழுந்தவள், அவனது அலமாரியில் சேர்ந்துகொண்ட தனது உடைகளிலிருந்து ஒரு சுடிதாரை எடுத்துக் கொண்டு குளியலறை நோக்கி செல்ல, “ஓய்” என்றபடி அவள் முன் வந்து நின்றான்.
கோபத்துடன் அவள் நகர எத்தனிக்க, “இந்தாடி. நீ ஒட்டிகிட்டு படுத்ததுல கோபமெல்லாம் போச்சுது போலனு பாத்தாக்க முகத்த வெட்டிகிட்டு போறவ?” என்று கேட்டான்.
அவனை ஏற இறங்கப் பார்த்தவள், மேஜையின் அருகே சென்று கடிதம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்ட, “இத எப்ப மித்ரா எழுதின?” என்றபடி வாங்கினான்.
பதில் கூறாமல் அவள் குளிக்கச் செல்ல, ‘யம்மா.. ரொம்பத்தான்’ என்றபடி பால்கனிக்கு சென்றவன் அங்கு செடிகளுக்கு தண்ணீர் இறைப்பதற்காக வைத்திருந்த தண்ணீர் குழாயிலிருந்து முகம் கழுவிக் கொண்டு செடிகளில் நீர் பாய்ச்சிவிட்டு கடிதத்தைப் பிரித்தான்.
உரைக்குள் இருந்த சங்கப்பூவைப் பார்த்து சின்னதாய் சிரித்தவன் மடலைப் பிரிக்க,
'அன்புள்ள திருமாலுக்கு,
நல்லா கோபம் வருது. ஆனா என்ன செய்ய? உங்களையும் குத்தம் சொல்ல முடியாதே? அவங்க திட்டினதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? ஆனாலும் என் கோபத்தைப் போக்க உங்களவிட்டா வேற யாரு இருக்கா? இப்பக்கூட பாருங்க. நேர்ல உங்கக்கூட சண்டைப்போட கஷ்டப்பட்டுட்டு நீங்க தூங்கினதும் லெட்டர் எழுதிட்டு இருக்கேன். ஏன் அத்தைக்கு என்னைக் கண்டாலே ஆக மாட்டேங்குதுனு வருத்தமாருக்கு. கல்யாணம் ஆகி ரெண்டு வாரம் தான் ஆகுது. அதுக்குள்ள இப்படி நான் புலம்புவேன்னு எதிர்ப்பார்க்கலை' என்று வாசித்தவன் முகத்திலிருந்த புன்னகை மறைந்து வருத்தம் அப்பிக் கொண்டது.
'உடனே பியூஸ் போன பல்ப் மாதிரி உங்க முகத்தை வச்சுக்காதீங்க. இதுல நீங்களோ நானோ பண்றதுக்கு ஒன்னுமில்ல. இருந்தாலும்… எனக்கு எப்படி சொல்லனு தெரியலை. எங்கம்மா என்னை ஒரு விஷயத்தை மாத்திக்க சொல்லி அடிக்கடி திட்டுவாங்க. சட்டுனு கோவப்பட்டுக் கத்தினா எனக்கு அழுக வந்துடும். எனக்கு புரியும். அது அக்கறைக்கான கோபமா இருந்தாகூட சட்டுனு அதட்டி பேசிட்டா கண்ணு கலங்கிடும். அதை மாத்திக்கோனு சொல்லுவாங்க. ஏனோ என்னால அதை கண்டிரோல் பண்ண முடியலை. ஆனா அத்தை சட்டுனு அதட்டும்போது ஆட்டோமேட்டிக்கா என் கண்ணு கலங்கிடுதா, அப்ப அவங்க அதுக்கும் சத்தம்போடும்போதுதான் அம்மா ஏன் இதை மாத்திக்கச் சொன்னாங்கனு புரியுது. சும்மா சும்மா அழுதா யாருக்குத்தான் கோபம் வராம இருக்கும்? அப்படியிருக்க, அத்தைக்கு நான் அழுறதுல கோபம் வர்றதும் நியாயம் தானே? எனக்கு பழகிக்க நேரமெடுக்குதுங்க. நான் இப்படித்தான். ஆனா முயற்சி பண்ணாம இல்ல. எனக்கு இதெல்லாம் உங்கக்கிட்ட சொல்லனும் தான். ஆனா நீங்க வருத்தப்படுவீங்கனு தான் உங்கள பாத்து சொல்ல முடியல. ஆனா நமக்குத் துணையா நம்ம உணர்வைக் கடத்தத் தான் இந்த கடிதம் இருக்கே. நிஜமா சொல்லவா. இதை எழுதும்போதே உங்கக்கிட்ட சொல்லிட்ட திருப்தி வந்துடுது. பொதுவாவே பொண்ணுங்களுக்கு அவங்க கஷ்டத்தை யார்கிட்டயாது சொல்லிடனும். அதுனால பெருசா எந்த மாற்றமுமே வரலைனாகூட சொல்லிட்டா ஒரு திருப்தி வந்துடும். எனக்கு உங்களைத்தவிர இதை யார்கிட்டயும் சொல்லத் தோன்றலை. உங்களைப் பார்த்து சொல்லும்போது நீங்க ஃபீல் பண்ணிட்டா எனக்கு அடுத்த முறை பேச சங்கடமாகிப்போகும்ல? அதான் லெட்டர்ல எழுதிட்டேன். நான் எப்பவாச்சும் இப்படி அத்தை மேல உள்ள கோபத்தை உங்க மேல காட்டிட்டா சகிச்சுக்கோங்க. என்னடா இப்படி சொல்றானு நினைக்காதீங்க. உங்ககிட்ட கோவப்படத்தானே எனக்கு உரிமை இருக்கு? பெருசா ஒன்னும் பண்ணிட மாட்டேன். இப்படி கொஞ்சம் புலம்பி கத்திட்டு ஆஃப் ஆயிடுவேன். என் கோவமெல்லாம் அம்புட்டுத்தான். எல்லாரையும் நானே விசாரிச்சுப்பேன். அதனால நீங்க விசாரிக்க வேணாம். பிகாஸ் நான் இப்ப மிஸஸ் திருமால்’ என்பதோடு அக்கடிதம் முடிவடைந்திருக்க, பலவகையான உணர்வுகளின் பிடியில் அக்கடிதத்தைப் பார்த்தபடி சாய்ந்து அமர்ந்தான்.
அவனுக்கும் புரிந்தது. தெய்வநாயகி தன் மனக்குமுறலை அவளிடம் இறக்கி வைக்கின்றேன் என்ற போர்வையில் காரணம் கிடைக்கும்போதெல்லாம் திட்டத்தான் செய்கின்றார்.
கார்த்திகாவால் வருத்தப்படதத்தான் முடிந்ததே தவிர எதிர்த்தெல்லாம் பேச இயலவில்லை. தனம் எது பேசினாலும், சிறு பெண் என்று எடுபாடாது போய்விட, விக்ரமனோ, சுயம்புலிங்கமோ, வளவனோ பார்த்து எதிர்த்து பேசினால் தான் அடங்குவார். அதுவும் சிறு முகத்திருப்பலுடன் சென்று, அவர்கள் களைந்த பின்பு துவங்குவார்.
என்ன செய்தும் அவரிடமிருந்து இதில் மாற்றத்தைக் கொண்டு வர முடியாமல் அனைவருமே காலத்தின் கையில்தான் இதை கொடுத்துள்ளனர்.
தன்னவள் தினம் மனம் வருந்தும்படி தாய் நடந்துகொள்வதை தடுக்க இயலாமல் அவனும் திண்டாடித்தான் போகின்றான். திருமணம் முடிந்தால் ஒரு பெண்ணுக்கு புகுந்த வீட்டில் என்னற்ற இன்னல்கள் வருவதைப் போல் ஆண்களுக்கும் இன்னல்கள் வரத்தான் செய்கிறது.
அம்மாவிற்கும், உடன் பிறந்தவர்களுக்கும், மனைவிக்கும் இடையே பூசல்கள் நேர்கையில் எப்பக்கமும் மணம் கோணாமல் முடிவெடுப்பதில் ஆண்கள் தடுமாறவே செய்கின்றனர்.
புதிதாக வந்தவளுக்காக என்னைக் கீழாக பார்க்கின்றாயா? என்று அன்னையோ, அனைத்தையும் துறந்து வந்த என்னை மதிக்கமாட்டாயா? என்று தாரமோ கேட்க நேரிடும் சந்தர்ப்பத்தை தவிர்க்கவே அவர்களும் பெரும்பாடு படுகின்றனர்.
திருமணம் என்ற பந்தம் பல இன்பங்களைக் கொடுப்பதைப் போல், பல சிக்கல்களையும் கொடுக்கத்தானே செய்யும்? எந்த சுகம் தான் சுலபமாய் கிடைத்திடுகிறது இவ்வுலகில்?
இவ்வாறான யோசனையோடு அவன் அமர்ந்திருக்க, குளியலறைக் கதவைத் திறந்துக் கொண்டு பெண்ணவள் வந்தாள்.
புடவையை குளியலறைக்குள் கட்டும் பழக்கம் இல்லை, ஆனால் சுடிதாரை உள்ளேயே உடுத்திப் பழக்கமுள்ளதால் அவ்வாறே உடுத்திக் கொண்டு வந்திருந்தாள்.
அவள் அரவத்தில் நிமிர்ந்தவன் சென்று புத்துணர்ச்சிப் பெற்று வெளியே வர, தனது அளவான சிகையில் எண்ணைத் தேய்த்து பின்னலிடத் துவங்கியிருந்தாள்.
அவள் முன் வந்து நின்றவன், “மித்ரா” என்க,
“ஹும்” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
விளையாட்டு தான் என்று புரிந்தது. அதில் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன், “கோவம் போவ என்ன செய்யனும்?” என்று கேட்க,
“ஒன்னும் வேணாம் போங்க” என்றாள்.
அவள் இருபக்கமும் இடையைச் சுற்றிக் கரமிட்டு அணைத்துக் கொண்டு தன்னை நோக்கி அவளை இழுத்துக் கொண்டவன், “பாவமாச்சே என் மித்ரா. எதாது செஞ்சுதேம் சமாதானம் செய்யனும்” என்று யோசனை போல் கூறி, “என்ன செய்யலாம்?” என்க,
“என்ன? விளையாட்டா? எனக்கு நேரமாகுது விடுங்க” என்று நெழிந்தபடியே கூறினாள்.
“மிண்டாத(பேசாத) நீ. யோசிக்கேம்ல நானு?” என்றவன், “கோவம் போவுமா போவாதா இப்ப?” என்று கேட்க,
“போகாது போகாது போகாது” என்றாள்.
அவள் முகத்தைத் தன் கரங்களுக்குள் பொத்திக் கெண்டவன், “இப்பப் போவும் பாரேம்” என்றபடி அழுங்காமல் அவள் இதழில் இதழ் புதைத்தான்.
Comments
Post a Comment