திருப்பம்-36
திருப்பம்-36
முதல் இதழ் தீண்டல்… அவ்வப்போது சோகமான தருணங்களில் நெற்றி முத்தமும், குறும்பு செய்யும் நேரங்களில் கன்னத்திலும் என அவன் வழங்கியதுண்டு.
தற்போது புதிதாய் கிடைக்கும் இத்தீண்டலில் அதிர்ந்து, விழித்தவள் மெல்ல கண்களை மூடிக் கொள்ள, பொய் கோபம் கூட இருந்த இடம் தெரியாமல் மறைந்தே போனது.
கையில் வைத்திருந்த சீப்பைத் தவறவிட்டவள், அவன் புஜத்தினைப் பற்றிக் கொள்ள, விளையாட்டாய் செய்த செயல் கொடுத்த உவகையில் ஆடவனும், அவளில் ஆழப்புதைந்தான்.
நிமிடங்களின் இனிமையில் இதழ்கள் கரைய, மெல்ல அவளிலிருந்து பிரிந்தவன், அவள் முகத்தைத் தன் மாரோடு அணைத்துக் கொண்டான்.
மூச்சுக்காற்றின் ஓசை மட்டுமே அவ்விடம் ஆட்சி புரியும் அரசனாய்…
அவளுக்கான அவகாசத்தைக் கொடுத்து முடித்தவன், “கோவம் போச்சுதா?” என்க,
சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவன் கண்களை நேர்கொண்ட நொடி, நாணம் வந்து அணைத்துக் கொள்ள, “வி..விடுங்க. நேரமாகுது” என்று தடுமாறினாள்.
“கோவம் போச்சுதுனு சொல்லு போவேம். இல்லனா மறுபடியும் கோவத்த போக்கிடுவோம்’’ என்று அவன் குனிய,
அவன் மார்பில் கரம் வைத்துத் தடுத்தவள், “போச்சு போச்சு” என்றாள்.
“என்னது போச்சு?” என்று சிரிப்பாய் அவன் கேட்க,
“கோவந்தான் போச்சுங்க. போங்களேன்” என்றாள்.
“எங்கப் போவனும்?” என்று மீண்டும் அவன் வம்பு செய்ய, ‘ப்ச்.. எனக்கு ஷையாருக்குனு வேணும்னே வம்பு பண்றாரு' என்று மனதோடு சிணுங்கினாள்.
அவள் அகம் படித்ததைப் போல் சிரித்தவன் அவள் கன்னம் கிள்ளித் தன் விரல்களுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டு, “மாமா குளிச்சுட்டு வாரேம்” என்றுவிட்டுச் செல்ல, செல்பவனைக் கண்டு கட்டுப்படுத்த இயலாமல் புன்னகைத்துக் கொண்டு கண்ணாடி பார்த்தாள்.
'அச்சோ' என்று தன் முகம் மூடி வெட்கம் கொண்டவள், “இப்பத நேரமாவலையாக்கும்? வெக்கப்பட்டதெல்லாம் போதுமுங்க மேடம்” என்றவன் குரலில் சட்டென நிமிர்ந்து, குறும்புடன் கண்சிமிட்டிச் செல்பவன் பார்த்து முறைக்க முயன்று தோற்றவளாய் சிரித்தாள்.
இருவரும் தயாராகிக் கீழே வர, பரபரப்பாய் வேலைகளிலும் கொஞ்சம் உதவி செய்து, தனக்கான உணவையும், தனத்திற்கான உணவையும் கட்டி முடித்தாள்.
“என்ன மைணி மொகம் பல்ப் மாதிரி மின்னுது காலையிலயே பெரிய ரோமான்ஸோ?” என்று விளையாட்டாய் தனம் வந்து கேட்க,
'இவளுக்கு எப்படித் தெரிஞ்சுது?’ என்பதைப் போல் அவளைத் திடுக்கிட்டுப் பார்த்தாள்.
“என்ன மைணி ஷாக்காவுற? நான் சும்மா சொன்னேமுனு பாத்தா நெசத்துக்குமே ஏதோ பலமா நடந்துருக்கு போலியே?” என்று தனம் கேட்க,
“ஷ்ஷ் தனம். போ அந்தபக்கம்” என்றபடி டப்பாவை அவளிடம் கொடுத்து நகர முற்பட, நல்லெண்ணை வைத்திருக்கும் சின்னக் கண்டாடி கின்னம் தட்டி அவள் காலில் விழுந்து தரையில் உருண்டது.
சற்றே கனமான கின்னம் என்பதாலும், அவள் காலில் விழுந்து தான் கீழே உருண்டது என்பதாலும் கின்னம் உடையவில்லை, எனினும் பெரிய விரிசல் ஒன்று விழுந்தது.
சப்தம் கேட்டு தெய்வநாயகி வர,
“ஸ்ஸ் ஆ..” என்று பெண்ணவள் தன் காலைப் பிடித்தாள்.
“அய்யோ மைணி பாத்து” என்று தனம் கீழே குனிந்து அவள் காலை ஆராய, “ஏ தனம் எழுந்திரி” என்று நிமிர்த்தினாள்.
அங்கு வந்த தெய்வநாயகி, கீழே சிந்திக் கிடக்கும் எண்ணை மற்றும் விரிசல் விட்டக் கின்னத்தைப் பார்த்து, “சரியாபோச்சுடி. வெள்ளிக்கெழமையும் அதுவுமா கண்ணாடிய போட்டு ஒடச்சா குடும்பம் வெளங்குமா?” என்று கத்த,
“அம்மா அது ஒடையலமா. மைணி காலு” என்று பேச வந்த மகளையும் நிறுத்தினார்.
“கின்னத்துல இந்த பெரிய கோடு தெரியாதளவு ஒங்கம்மைக்கு கண்ணு அவிஞ்சு போயிடல” என்று அவர் கத்த, மற்றவர்களும் வந்துவிட்டனர்.
“என்னத்த வளத்தாங்களோ? நாலும் பொழுதுமா இப்படித்தேம் கண்ணாடிய ஒடைச்சுபோடுவா போல? வீடு வெளங்கின கணக்காதான்” என்று அவர் கத்த,
“அம்மா தேவையில்லாத பேசாதம்மா” என்று தனம் கூறினாள்.
அவள் தோளை அழுத்திப் பிடித்த சங்கமித்ரா, ‘வேண்டாம்’ எனும்விதமாய் தலையசைத்து கின்னத்தை எடுத்தாள்.
“ஏட்டி கின்னந்தான? ஒடஞ்சா போச்சு? அப்படியே போனாதான் போட்டுமே? இந்த வீட்டுல கின்னத்துக்கு பஞ்சமாவி போச்சுதா? சும்மா அந்த புள்ளைய என்னமாது அறுப்பாதிருக்க மாட்டியா?” என்று சுயம்புலிங்கம் கடிய,
“என்னாச்சு தனம்?” என்று வளவன் கேட்டான்.
“டப்பால கின்னந்தட்டி மைணி கால்ல விழுந்து போச்சுது” என்று தனம் கூற,
“ஏ கால்ல விழுந்துச்சா?” என்றபடி வளவன் அருகே சென்று பார்த்தான்.
கனமான கின்னம் என்பதால் கால் சிவந்து போயிருந்தது.
“ஆத்தே செவந்துபோச்சுது புள்ள. அப்படி ஒக்காரு நான் உப்ப வறுத்து கட்டிக்கொண்டாரேம்” என்று கார்த்திகா ஓடினாள்.
இதில் அனைவரும் தெய்வநாயகியை மறந்தே போக, அதில் எரிச்சல் கொண்டு புசுபுசுவென மூச்சுவிட்டபடி உள்ளே சென்றுவிட்டார்.
“ஒன்னுமில்லபா” என்று அவள் வளவனை நகர்த்த முற்பட,
“ஏம்பா கன்னி போனதாட்டம் செவந்துகெடக்கு ஒன்னுல்லங்குற?” என்று விக்ரமன் கேட்டான்.
“டேய் புள்ளைய அந்த முக்காலில ஒக்காத்த வையுவடா” என்று சுயம்புலிங்கம் கூற,
அவளை அருகே இருந்த முக்காலியில் அமர்த்தினர்.
“மைணி நல்ல அடியோ? செவந்து தெரியுதே?” என்று தனம் வருத்தமாய் கேட்க,
“லேசா கடுக்குது தனம் வேற ஒன்னுமில்ல” என்றாள்.
கல்லுப்பை வறுத்துத் துணியில் கட்டிக் கொண்டு வந்த கார்த்திகா லேசாக அவள் காலில் வைக்க, “ஸ்ஸ் அக்கா” என்று அலறிவிட்டாள்.
“சூடு பொறுக்கத்தான் இருக்குது புள்ள. செத்த இரு. நாலு அமுக்கு அமுக்கியெடுத்தாதேம் வீங்கிப்போவாது” என்று கூறிய கார்த்திகா, மெல்ல மெல்ல வைத்து எடுக்க, அஸ் உஸ் என்று கத்திக் கொண்டே ஒத்தடம் வைத்துக் கொண்டாள்.
“ஏன்டி பாத்து எடுக்கக் கூடாதா?” என்று பொறுக்க மாட்டாது அதட்டிய வளவன், அவளை வாகாய் பிடித்துக் கொள்ள,
விழும்பொழுது தெரியாத வலி தற்போதுதான் உரைக்கப்பெற, கார்த்திகா கொடுக்கும் ஒத்தடம் வேறு இன்னும் வலி கொடுத்ததாய் உணர்ந்தாள்.
“அக்கா போதும் க்கா விடுங்க” என்று அவள் கூற,
“வீங்கிபோவும் சங்கு. செத்தப் பொரு. சூட்டோட சூட்டா வச்சு எடுத்துடுறேம்” என்று கூறினாள்.
மீண்டும் மறுக்க வந்தவளைக் கண்டு வளவன் முறைக்க அடுத்த நொடியே கப்சிப் ஆனாள்.
அவளது கலங்கிய விழிகளைக் கண்டு “ஏ மக்கா ரொம்ப வலி இருந்தா ஓரெட்டு டாக்டர பாத்துபோட்டு வாயேம்” என்று சுயம்புலிங்கம் கூற,
“அச்சோ இல்ல மாமா. அவ்ளோ வலி இல்ல” என்றாள்.
கார்த்திகா ஒத்தடம் கொடுத்து முடிக்க, ஒரு வலி நிவாரணி களிம்பைக் கொண்டு வந்த விக்ரம், “லேசா போட்டதும் காந்தும். பொறவு சரியாபோவும்த்தா” என்றான்.
அவனிடமிருந்து களிம்பை வாங்கிய வளவன், அவள் காலில் தேய்க்க,
“ப்பா வேணாம். கொடுங்க நான் தேச்சுக்குறேன்” என்று மெல்லிய குரலில் கூறினாள்.
“மித்ரா என்னைய உசுப்பேத்தாத. பொறவு எனக்குக் கெட்டக்கோவம் வந்துபுடும்” என்று கோபத்தைக் கட்டுப்படுத்தி அமைதியாகவும், அழுத்தமாகவும் கூறியவன் களிம்பைப் போட்டு முடித்துவிட்டு எழுந்தான்.
அனைவரும் மாறி மாறி அவள் நலன் விசாரிக்க, “அதேம் ஒன்னுமில்லங்கால? மாறி மாறி கேட்டாப்ல ஆமாங்க போறாளா? வந்து வரிசைக்கா பசியாற ஒக்காருங்க. அவிய அவியளுக்கு சோலி கெடுக்குல?” என்று தெய்வநாயகிக் கூறினார்.
மனைவியை முறைத்த சுயம்புலிங்கம் பார்வையில், ‘ஒரு வார்த்தை அந்த பிள்ளையை விசாரிக்கக் கூடாதா நீயு?’ என்ற கண்டிப்பு தெரிந்தது. அது புரிந்தும் கேட்க மனமில்லாது அவர் நிற்க, கோபத்துடன் தன் துண்டை உதறிக் கொண்டவர், “விக்ரம். நான் வயலுக்கு போறேம். பொறவு நீ சாப்பிட்டுபோட்டு எனக்குக் கொண்டா” என்றுவிட்டுச் சென்றார்.
“சரியாபோச்சு. பசி தாங்காத மனுஷன். அலப்பறைய கூட்டி அவிய நேரத்த ஓச்சுபுட்டா” என்று முனகியபடி தெய்வநாயகி சமையலறைக்குள் சென்றிட, காயத்தை விட அவர் பேசிய வார்த்தைகள் தான் அதிகம் வலித்தது.
அவள் தோளை ஆதரவாய் பற்றிய கார்த்திகா, “விடுபுள்ள. நீ மதியத்துக்கு கட்டிகிட்டல்ல? நான் காலைலைக்குக் கொண்டு வரேம். உங்கிட்டு ஓன் வேலைய பாத்து போ” என்று கூறிச் செல்ல,
“வலியிருந்தா சொல்லுமா. ரொம்ப வேதனையாருந்தா லீவு போட்டுகிடு” என்று விக்ரமும் நகர்ந்தான்.
“மைணி” என்று தனம் அழைக்க,
“ஒன்னுமில்ல தனம். நீ போய் ரெடியாகு. உன் வண்டி சர்விஸ் குடுத்திருக்கல்ல. உன்ன பஸ் ஸ்டான்ட்ல விட்டுட்டு நான் அப்படியே கிளம்புறேன்” என்று அவளை அனுப்பி வைத்தாள்.
அனைவரும் போனதும் அவ்விடத்தில் அவளும், அவளவனும் மட்டுமே எஞ்சியிருக்க,
அவனை நிமிர்ந்து பார்த்து, “முறைக்குற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க. எனக்கும் முறைக்க வரும். நானும் கோவப்படுவேன்” என்று கண்களில் கண்ணீருடன் பல்லைக் கடித்துக் கொண்டு மிரட்டலாய் கூறினாள்.
அந்தக் கண்ணீர் தன் அன்னையின் குற்றச்சாட்டால் என்பது புரிந்து வருத்தம் மேலிட, அதை வெளிக்காட்டி அவளை சங்கடப்படுத்தாமல், “இஞ்சார்ரா. கோவம் வருமாமுல? காலையிலதேம் பாத்தேனே அம்மணி கோவத்த. ஒங்க கோவமும் தெரியும். அத எப்படி அணைக்கோனுமுனும் தெரியும்” என்று கூறி கண்ணடித்தான்.
அதில் பதில் கொடுக்க இயலாது தடுமாறி அவள் முகம் திருப்ப, கார்த்திகா உணவுடன் வந்தாள்.
தட்டை வாங்கிய திருமாவளவன், அவளுக்கு ஊட்டுவதற்காக நீட்ட,
“கொழுந்தரே அடி காலுலதான?” என்று கார்த்திகா கேலி செய்தாள்.
அதில் இதழ் மடித்துச் சிரித்துக் கொண்டவன், “ஏம் மைணி?” என்க,
“ம்ம்.. நீங்க நடத்துங்க கொழுந்தரே. நடத்துங்க” என்றுவிட்டு சென்றாள்.
அவன் உணவை நீட்ட, வாய் திறந்து வாங்கிக் கொண்டாள்.
நாலு இட்லி உண்டதும், “போதுங்க” என்று அவள் கூற,
“இன்னும் ஒன்னிருக்குடி” என்றான்.
“வயிறு ஃபுல். நாலு சாப்டேனே. எங்க வீட்டு இட்லி குட்டியாருக்கும். அதுவே நான் நாலுதான் சாப்டுவேன். இங்க எல்லாம் குண்டு குண்டா இருக்கு. இதுக்கு மேல சத்தியமா முடியாது. அத மட்டும் நீங்க சாப்டுடுங்களேன்” என்று அவள் கெஞ்சலாய் கூற,
இட்லியை பிட்டு தன் வாயில் வைத்தவன் முகம் அஷ்டகோனலானது.
“ஏட்டி சப்புனில்லியா?” என்று அவன் கேட்க,
“நீங்க இந்த காரம் சாப்டுறதால தான் அந்த கோவம் வருது போல” என்று முனகியவள், “எனக்கு சரியா இருக்கு” என்றாள்.
அவள் முனகியதையும் நன்கு கேட்கப் பெற்றவன், சின்ன சிரிப்புடன் இட்லியை மென்று விழுங்கிவிட்டு கைகளைக் கழுவிக் கொண்டு வந்து அவள் வாய் துடைத்துவிட்டு நீர் கொடுத்தான்.
தனமும் தயாராகி வர, “பாத்து போயிடுவியாடி?” என்று கேட்டான்.
“அதெல்லாம் போயிடுவேங்க. ரொம்பலாம் வலி இல்ல” என்றவள் உள்ளே கார்த்திகாவிடமும் தெய்வாவிடமும் கூறிக் கொண்டு புறப்பட்டாள்.
செல்பவளையே பார்த்து நின்றவன், ஒருமுடிவோடு தன் அன்னையிடம் சென்றான்.
Comments
Post a Comment