திருப்பம்-37

 திருப்பம்-37



கைகளைப் பிசைந்துக் கொண்டு நின்றிருந்த கார்த்திகாவிற்கு, மாமியாரின் குமுறல்களை எப்படி அடக்கிட என்றுதான் தெரியவில்லை.


“அத்தே எதுக்கு அந்த புள்ளய இம்புட்டு பேசுதீய?” என்று அவள் கேட்க,


“பெய்யாதட்டி. நான் இவட்டதேம் பேசுதேம். நீ கம்மினு இரு. முன்னமே சொல்லிட்டேம். ரெண்டாதா ஒருத்தி வந்துட்டானு நீயு ராஜ்ஜியம் பண்ணலாமுனு பாக்காத” என்று அவளையும் அதட்டி அடக்கிவிட்டு கண்ணீர் மல்க நிற்கும் சங்கமித்ராவைப் பார்த்தார்.


“காலையில எங்கிட்டயே வந்து எம்புள்ள அந்த பேச்சு பேசுதாம். ஒரு வார்த்த ஒன்னய கேக்கலியாம். ஏன் இந்தூட்டுல அம்புட்டு பேரும் ஓன் கால புடிச்சது போதாதபடிக்கு நான் வேற புடிக்கனுமா?” என்று அவர் கத்த,


“அத்த..” என்று சங்கமித்ரா ஏதோ பேச வந்தாள்.


“மிண்டாதங்கேம்ல (பேசாதங்குறேன்ல)? கட்டிவந்து ஒரு மாசமாவள. என்னைய அதிகாரம் பண்ணுதியோ? எம்புள்ளையவே எனக்கு எதிரா அனுப்புதியா? எம்புள்ளைக்கு மருவாதியில்லாத வீட்டுல பொண்ணு எடுக்க வேணாமுனு இதுக்குதாம் தலபாடா அடிச்சுகிட்டேம். இந்தா ஓன் வரவுல இந்தூட்டுல ஏம் மருவாதி தேயுதுல்ல?” என்று அவர் கூற,


“அத்த நான் எதுமே சொல்லலை அத்த. அவங்க பேசினாங்கனு கூட நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியும்” என்று குரல் கமரக் கேட்டாள்.


கன்னம் தாண்டி கண்ணீர் வழிய, உணர்ச்சிப் பிரவாகத்தால் அவளால் பேச இயலவில்லை. மூச்சுக்குழாயில் மூச்சு ஏகத்திற்கும் அடைத்துக்கொள்ள, வார்த்தைகளைக்கூட ஸ்திரமாய் உச்சரிக்க இயலவில்லை அவளால்.


“அத்தே” என்று கார்த்திகா ஏதோ பேச வர, “இந்தாருடி. அவளுக்கு வருஞ்சுகிட்டு வந்தனா அடுத்து ஓம் பொட்டியத்தேம் கட்டிவைப்பேம்” என்று அதட்டினார்.


தனக்காக பேச வந்து கார்த்திகா திட்டு வாங்குவதில் மனம் வருந்தியவள் கார்த்திகாவை மன்னிப்பாய் ஒரு பார்வை பார்க்க, “ஏம்மா ஒனக்கு மைணிய என்னமாது சொல்லனுமா ம்மா? ஏம்மா இப்படிலாம் பேசுத? அவோ அப்பாவி ம்மா. சும்மா என்னமாது அறுப்பிட்டே இருக்க” என்று தனம் கூறினாள்.


“ஆமாடி எனக்கு தலவிதி பாரு அவோள பேசனுமுனு. அவ நடத்துறத நீங்க ஆரும் பாக்கலியே. எங்கண்ணுக்குல அம்முடுது. என்னமாது அவேன்ட சொல்லிருப்பாடி. இம்புட்டு நாளுல என்னிய பேசாத எம்புள்ள இப்ப வந்து பேசிருக்கானுல?” என்று அவர் கூற,


“காலையில நீ நடந்துகிட்டது மட்டும் சரியாக்கும்? அவிய காலுக்கு என்னமானு பாத்துருப்பியாமா? கொற மட்டும் சொல்லுதியே. அண்ணே எம்புட்டு வெசனப்பட்டிருக்கும்? நாள நாம்போற வீட்டுல எம்மாமியா என்னய இப்புடி நடத்தினா ஒனக்கு எப்புடி இருக்கும்?” என்றாள்.


தனக்காக தனம் அவள் அன்னையிடம் சண்டையிடுவது பொருக்காமல் அவள் கரம் பற்றிய சங்கமித்ரா, ‘வேணாம்டா’ என்று இறைஞ்சுதலாய் தலையசைக்க, “பேசுடி. ஒனக்கும் சொல்லித்தந்தா போலருக்கு. இந்தா இவளியும்தேம் நான் பேசிருக்கேம். அப்போலாம் கேக்காதவிய இவளுக்குனு வரிஞ்சுட்டு வாரியலே. அப்பனா சும்மா வருவியளாக்கும்? கோலு மூட்டிருப்பா. குச்சிக்கொழுத்த எம்புட்டு பழக்கமோ? எம்புள்ளைய அம்புட்டு பேரையுமில்ல எனக்கு எதிராக்குறா” என்று அவர் பிடியிலேயே நிலையாய் நின்றார்.


வீட்டில் அப்போதென்று பார்த்து ஆண்கள் யாருமே இல்லை. அனைவரும் வேலையென்று இன்னும் வீடு வராதிருக்க, தனம் மட்டுமே தான் தைரியமாக அவள் அன்னையை எதிர்த்துப் பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் அவளின் பேச்சையெல்லாம், ‘சங்கமித்ரா சொல்லிக் கொடுத்துப் பேசுகின்றாய்' என்ற வரியிலேயே அடக்கிக் கொண்டிருந்தார் தெய்வநாயகி.


சங்கமித்ராவின் எந்த ஜென்மத்துப் புண்ணியமோ அந்நேரம் பார்த்து மகாதேவன் வர, “இவோ வந்ததுலருந்துதேம் எம்புள்ள என்னையவிட்டு தூரமான போலாட்டு ஆவிபோச்சு” என்று தெய்வா குறைபாடியது கேட்டது.


“அத்தே” என்று அதிர்ந்த குரலில் கூறியபடி அவன் உள்ளே வர,


அவனை அந்நேரம் எதிர்பாராத அனைவரும் ஒவ்வொரு வகையில் அதிர்ந்தனர்.


திருமணத்தன்று பூரிப்பும் புன்னகையுமாய் இருந்த சங்கமித்ராவின் முகம் தற்போது வாடி வதங்கியிருப்பதைக் கண்டு, உடன்பிறவா அண்ணனாய் வருத்தம் கொண்ட மகாதேவன், “என்னத்தே வார்த்தையெல்லாம் பலமா வந்து விழுது?” என்று அழுத்தமானக் குரலில் அமைதியாய் கேட்டான்.


“மா..மாப்ள” என்றவருக்கு அவனிடம் வெளிப்படுத்த சங்கடமாய் இருந்தது. வீட்டு மருமகன் முன், தன் வீட்டுப் பிரச்சினையைக் கடை பரப்புவதை அவமானமாய் கருதுபவருக்கு அவன் நேரடியாய் கேள்வியில் இறங்கியதும் என்ன கூறவென்றே தெரியவில்லை.


'மாப்பிள்ள முன்னுக்கவும் தலயெறக்கத்தக் குடுத்துப்புட்டா' என்று அதற்கும் அவளையே மனதில் அம்மியில்லாமல் அறைத்துக் கொண்டிருந்தார்.


“என்னத்தா தனம்? என்னமாச்சு?” என்று அவன் தனத்திடம் கேட்க,


“என்னமோ அத்தான். எங்கம்மாக்கு பேயுதேம் புடிச்சுபோச்சுது. காலையில அண்ணே என்னமோ பேசிடுச்சாம். மைணிதேம் காரணம், கோலு மூட்டுதாவ, குச்சி கொழுத்துராவனு வசையா பாடுது” என்று அதிருப்தியுடன் தனம் கூறினாள்.


“அப்படி என்னத்தா சொன்னியான் அவேம்?” என்று மகாதேவன் கார்த்திகாவைப் பார்க்க, அவள் கொஞ்சம் பயத்தோடு தெய்வாவைப் பார்த்தாள்.


“அத்தே ஒன்னும் சொல்ல மாட்டாவ? நாந்தான? சொல்லு” என்று அவன் கூற,


“காலையில சங்கு டப்பா தட்டி எண்ணக்கிண்ணம் உருண்டுடுச்சுண்ணே. அவோ காலுலயே நச்சுனு விழுந்துருக்கும் போல. செவந்து கெடந்தது. அத்தே வெள்ளியும் பொழுதுமா கண்ணாடிய விரிசலாக்கிபுட்டானு அறுப்பினாவ. அடியப் பாக்கவும் எல்லாம் அவோள கவனிக்கப் போயிட்டோம். அத்தே உள்ளப் போயிட்டாவ. அதேம் கொழுந்தரு வந்து ஒருவார்த்த எம்பொண்டாட்டிக்கு என்னனு கூட கேக்க‌ தோனலியாமானு கேட்டாவ” என்றாள்.


“நாயமாதான கேட்டாம். பொறவு வேறென்ன சொன்னியாம்?” என்று அவன் கேட்க,


தெய்வாவின் கன்றி சிவக்கும் முகத்தைப் பயத்துடன் பார்த்தபடி, “எங்கம்மையிக்கு இம்புட்டு க..கல்லுமனசுனு அறியாது போயிட்டேம்னு சொல்லிட்டு போனாவ” என்று கூறினாள்.


“அவேம் அப்போகூட ஒங்கள ஒசரத்துல பாத்துபோட்ட நெனப்போடத்தேம் பேசிறிக்கியான் அத்தே. நீங்க அவேம் எண்ணத்துக்குக் கொடுக்க மருவாதி இதானா? மவேம் மனசுல கோபுரத்தக் கட்டி வச்சுருக்கியாம். அத நீங்களே இடிச்சா ஆச்சா சொல்லுவத்தே?” என்று மகா கேட்க,


அவருக்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது.


தான் பேசும் பேச்சுக்கள் அவரது கோபத்திற்குத் தூபம் போட்டு, சங்கமித்ராவைத்தான் மூச்சடைக்க வைக்கும் என்பது அவனுக்குப் புரிந்தது. அத்தனை காலம் அவ்வீட்டை ஆண்டு கொண்டிருப்பவர் தான் என்றாலும் இப்படி அநாவசியமாக சண்டை இழுத்ததில்லை. அதனால் அவரை பிறர் பேசிடும்படியான சந்தர்ப்பங்கள் வந்திருக்கவில்லை.


ஆனால் தற்போதும் அப்படியில்லையே? சங்கமித்ராவை அவர் பேசும் பேச்சை அனைவரும் வேடிக்கைத்தான் பார்க்க வேண்டும் என்று அவர் நினைப்பது நடக்காமல் போவது, அவரது ஈகோவைச் சீண்டிக் கொண்டே இருப்பதைப் போலத்தான் உணர்ந்தார்.


“ஆச்சுது போவ. வூடுனா நாலு ஒடக்கு வாரத்தான? ஏத்தா சங்கு. போத்தா. போயி மூஞ்சி கழுவிட்டு என்னமாது பலகாரம் உங்கிட்டு போ. காலுக்கு ஏதும் மருந்து கிருந்து போட்டியா?” என்று அவன் கூற,


சிறு தலையசைப்புடன் இதழ் கடித்துத் தன் கேவலை அடக்கினாள்.


“மாப்ள ஒங்களுக்கு என்னமாது கொண்டு வரவா? காபி தண்ணி குடிக்கீயலா?” என்று தெய்வா பேச்சை மாற்ற முற்பட,


“மருமவேனபோலத்தேம் மருவோளும். அந்த புள்ள ஓஞ்சு தெரியுது. என்னமாது கொடுத்து தேத்திபுடுங்கத்த. ஒங்க பக்குவத்த ஊரு மேச்சிட்டு போவட்டும். அது மனசும் ஆரிட்டுப்போவட்டும்” என்று நயமாய் பேசினான்.


அவருக்குப் புரிய வைத்திடும் வகையில், அதேநேரம் அவரை பதம் பார்க்காத வார்த்தைகளுடன் அவரிடம் செய்தியை அவன் கடத்த முற்பட்டது மற்றவர்களுக்கும் புரிந்தது. தெய்வா உட்பட…


அதற்குமேல் ஏதும் பேசாமல் தெய்வா அவனுக்குப் பலகாரம் எடுக்க உள்ளே சென்றுவிட, 


பற்களுக்கிடையில் தன் இதழ்களை படுகொலை செய்தவள், நடுநடுங்க மகாதேவனைப் பார்த்து கரம் கூப்பிவிட்டு விடுவிடுவென்று மேலே சென்றாள். படிகளில் ஏறும்போது பொத்திவைத்தக் கேவல் லேசாய் கசிய, மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டே அதனை உள்ளே விழுங்கியபடி அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.


அதில் அப்பட்டமான வருத்தத்தை முகத்தில் தேக்கியபடி அனைவரும் அவள் சென்ற திசை நோக்க, “நீய நாலு வார்த்த நறுக்குனு கேட்டிருக்கோனும் அத்தான்” என்று தனம் மனம் பொருக்காது கூறினாள்.


“அத்தே ஏற்கனவே காந்திட்டு இருக்காவ. நான் ஏதும் பேசினா இன்னுந்தேம் அந்த புள்ளைய அறுப்புவாவ. செத்த வுடுங்கலே. அவியளா புரிஞ்சுப்பாவ. இப்பத என்னத்த பேசினாலும் எரியுற கொல்லியில எண்ணைய ஊத்தின கணக்காதேம் இருக்கும்” என்று அவன் கூற,


இரு பெண்களும் பெருமூச்சுடன் தலையசைத்தனர்‌.


தெய்வா அவனுக்கான தேநீர் மற்றும் முறுக்குடன் வர,


“விக்ரமு இன்னும் வரலியாமா?” என்று கேட்டான்.


“ஆருமே வரலைங்கண்ணே. எல்லாம் சோலியாதேம் இருக்காவ” என்று கார்த்திகா கூறினாள்.


தேநீரை அவன் குடித்து முடிக்கும் நேரம், ஆண்கள் மூவரும் ஒன்றாய் வந்துசேர, சண்டைக்குத் தயாரான தனலட்சுமியை அடக்கி கார்த்திகா உள்ளே அனுப்பினாள்.


சென்று மற்ற ஆண்களுக்கும் தேநீர் தயாரித்து வந்த கார்த்திகா அவர்களுக்கும் கொடுக்க, வேலை விடயமாக ஆண்கள் யாவரும் கலந்து பேசிக் கொண்டிருந்தனர்.


கார்த்திகாவின் அலைபேசிக்கு சங்கமித்ராவிடமிருந்து, ‘அக்கா தப்பா எடுத்துக்காதீங்க. நான் படுக்குறேன். தலைவலிக்குது. நைட்டுக்கு சாப்பாடு எதும் வேணாம்' என்று குறுஞ்செய்தி வர, கட்டியணைக்கும் பொம்மைகளை அனுப்பிவிட்டு சமையலைத் தொடர்ந்தாள்.


அறைக்குள் படுத்துக் கிடந்தவளுக்கு அப்படி அழுகை வந்தது. தான் என்ன செய்துவிட்டோமென்று இத்தனைப் பேச்சுக்கள்? என்று கோபமும் கூட வந்தது. அதையும் அழுதுதான் கரைத்துக் கொண்டிருந்தாள் பேதைப் பெண்.


அவ்வீட்டிற்கு மருமகள் என்று வந்து இரண்டு வாரங்களுக்குள் இத்தனை சிக்கல்கள் வருமெனத்தான் அவளும் நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லையே!


கீழே வளவன் அவ்வப்போது படிகள் பக்கமாகத் திரும்பித் திரும்பிப் பார்க்க, உள்ளே சமையலறைக்கு வந்த தெய்வா, “எங்கட்டி அவ? போனவ அறயே கதினு கெடக்காலாக்கும்?” என்று காட்டமாய் கேட்டார்.


“தலவலினு படுத்துருக்காத்த” என்று கார்த்திகா சமையலில் குறியாக இருந்தபடியே அவர் முகம் நோக்காது கார்த்திகா கூற,


“ஒத்த வார்த்த பேசிபுட்டா ஒடனே கரிச்சுபுடுறா. பொறவு தலைய வலிக்காம என்ன செய்யும்?” என்று பாலைக் காய்ச்சி, “கொண்டோயி பாலக்குடு. இந்தூட்டுக்கு நேத்து வந்தவளுக்கு அல்லாரும் பணிவிட செய்ய வேண்டி கிடக்கு. போயி கொடு. இல்லாட்டி எம்பொண்டாட்டிய பட்டினி போட்டுப்புட்டீயளானு இதுக்கும் வந்து குதிக்கப் போறாம்” என்று கூறினார்.


கார்த்திகாவிற்கே ஆயாசமாக இருந்தது. சம்மந்தமே இல்லாமல் இல்லாத திட்டெல்லாம் திட்டிவிட்டு அக்கறை போல் என்ன செயலிது என்றே தோன்றியது அவளுக்கு. இதே சங்கமித்ராவின் நிலையில் தான் இருந்தால்? என்று யோசிக்கக் கூட முடியவில்லை கார்த்திகாவாள். அதுவும் திருமண் ஆன புதிதிலேயே இந்த பிரச்சினை எனில், மனம் எத்தனை பயம் கொள்ளுமென்று யோசித்து, தன் உடன் பிறவா தங்கைக்காக மனம் வருந்தினாள்.


பேசி மனம் நோகவும் செய்கின்றார், பிறகு அக்கறை போலும் நடந்துகொள்கிறார். இவரைப் புரிந்துகொள்வே இயலவில்லையே என்று யோசித்தபடியே பெண்ணவள் அறை நோக்கிச் சென்றாள்.


Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02