திருப்பம்-38

 திருப்பம்-38



பாலை வாங்கிக் கொண்டு மேலே வந்தக் கார்த்திகா கதவைத் தட்ட,


“ஆங்” என்று குரல் கொடுத்தாள்.


“சங்கு நாந்தேம்” என்று இவள் குரல் கொடுக்க, “உள்ள வாங்கக்கா” என்றாள்.


பாலுடன் அவள் உள்ளே செல்ல, அத்தனை நேரம் அழுத தடம் மறையா முகத்துடன் நின்றிருந்தாள்.


“ஏம்புள்ள இம்புட்டு அழுவ?” என்று கேட்டு, அவள் கண்ணில் நிற்காமல் வழியும் கண்ணீரை துடைத்துவிட, “நா.. நான் நெஜமாவே அவங்கட்ட எதும் சொல்லலை க்கா” என்று பாவம் போல் கூறினாள்.


“ப்ச் எனக்கு தெரியாதா சங்கு?” என்று அவளை நீள்விருக்கையில் அமர்த்திப் பாலைக் கொடுத்தவள், வற்புறுத்தி குடிக்க வைத்தாள்.


அவள் முழுதாய் குடித்து முடிக்கும் வரை காத்தவள், “அத்தைய ஓன் வெசயத்துல புரிஞ்சுக்க முடியல சங்கு. அவியளுக்கும் திரி மைணிக்கும் ஒன்னய பிடிக்கல. இன்னும் சொல்லப்போனா மைணிக்குப் பிடிக்காது போனதாலதேம் அத்தைக்கு வழுக்கட்டாயமா உன்னைய பிடிக்காம போயிருக்கு” என்று கூற, சங்கமித்ரா புரியாது விழித்தாள்.


“திரி மைணி பொறந்தூட்டுல புகுந்தூட்டுலனு அம்புட்டுலயும் மொத ஆளு. அவிய பொறந்த நேரம் தான் குடும்ப ராசினு மாமாவும் அத்தையும் சொல்லாத நாளில்ல. அதுல அவியளுக்கு தன்னபோல தலகணம் வந்துபுடுச்சு. எதுவானாலும் அவியளுக்கு முதலுரிமை தரனுமுனு நெனப்பாவ. இல்லாட்டா அந்த வெஷயத்த கடசிவர ஏத்துகிட மாட்டாவ. அத்தே என்ன நெனப்புல ஒன்ன பொண்ணு பாத்துச்சோ தெரியில. அத்தேயேதேம் ஒன்னய புடிச்சாவ. எல்லாம் பேசிகிட்டு முடிவான பொறவு மைணிட்ட சொன்னாவ. அதுவே அவியளுக்கு பிடிக்காது போச்சு. அவியளோடு புகுந்தூட்டு பக்கட்டு பொண்ணு ஒன்னு கொழுந்தருக்குக் கட்டிவக்க யோசிச்சிருந்துருக்காவ. எதுவும் கேக்காது அத்த பொண்ணு பாத்துட்டாவனு கோவத்துலதேம் பொண்ணு பாக்கக் கூட வரல. அத்தைக்கு அவிநாஷ் அத்தான, சச்சிதாப்பா தாங்குறதுல அவிய புள்ளைக்கு மருவாதி கொறஞ்சு போவுமோனு கொஞ்சம்போலத்தேம் எண்ணமிருந்துருக்கு. திரி மைணி அவியளோட அதிருப்திய கொட்டிக் கொட்டி, ரெண்டேருக்குமே சம்மதம் புடிக்காது போச்சு. அந்த பிரச்சினையில அம்புட்டு பேரும் ஓம் பக்கட்டு நின்னது அவிய ஈகோவ தூண்டிவிட்டுடுச்சு. அவியளுக்கு புடிச்சுபோன ஒன்னுதேம்னு அம்புட்டு பேரும் எடுத்து சொல்லியும், ‘இப்பப் புடிக்கல’ அப்படினே பிடிவாதமா மறுத்தாவ. பொறவு நடந்த கதையெல்லாம் ஒனக்கே தெரியுந்தானே?” என்று நீளமாய் எடுத்துக் கூறிய கார்த்திகா, கண்ணீர் பொங்கிவழிய தன்னைப் பரிதாபமாய் பார்ப்பவளைப் பார்த்தாள்.


மேலும், “காலையில கொழுந்தரு பெருசா ஒன்னும் பேசல. காலுல அடின்னதுக்கு ஒருவார்த்த கேக்கலியேனுதேம் கொறபட்டுட்டுப் போனாவ. ஓன் நேரத்துக்கு மைணி வந்துட்டாவ. மதியம் வர கூடவேருந்து அவோளும் தம்பியா இப்படி பேசினியான்னு கேட்டுக் கேட்டே கடுப்பாக்கிட்டாவ. அதேம் அத்தே வெடிச்சுபுட்டாவ” என்க,


“நான் எதுமே பண்ணலக்கா” என்றாள்.


“டேய் உன்னிய எனக்கு தெரியாதா?” என்று ஆதூரமாய் அவள் தாடை பற்றிய கார்த்திகா, “எனக்கு உன்னிய பேச்சு வாங்க வுட்டது அம்புட்டு வருத்தமாருக்கு புள்ள. ஆனா நானும் ஒன்னயபோல ஒண்ட வந்தவதேம். வருத்தப்படத்தேம் முடியுது. ஒனக்காக ஏதும் பேசுற எடத்துல நானில்லடா” என்று கூற,


“இல்லக்கா எனக்காக பேசவந்ததுக்கே நீங்களும் சேந்து திட்டு வாங்கிட்டீங்க. நான் அப்படிலாம் எதுவும் நினைக்கலை” என்று கூறினாள்.


“நீ நெனச்சுகிட மாட்டடா. ஆனா நான் சொல்லுறேம். என் நெலயும் இங்கன இதேம். ஓன் அளவுலாம் அத்தை என்னிய எதுமே பேசினதில்ல. நான் அசலூருகாரினு மட்டுந்தேம் அவியளுக்கு கொறையே தவிர பெருசா எதுவும் பிரச்சினையா இருந்ததில்ல. அவிய‌ளுக்கு இருக்க ஒரே பிரச்சினை பிள்ளையல அவுக காலம் வரிக்கும் அவுக கையுக்குள்ளயே வச்சுகிட நெனக்குறதுதேம். எனக்கும் சுடரப்பாக்கும் கூட சண்டை அதுக்குதேம் வரும். காலம்பூரா அவிய கையிலயே இருக்க எதுக்கு என்னைய கட்டி கொடுத்தாவ ஒங்களுக்குனுதேம் கத்துவேம். பாவம் அவியளும் நாந்திட்டுர வர கேட்டுட்டு பேசாம போயிடுவாவ. இதெல்லாம் மாறுற கொணமில்லடா. இன்னுமும் செல பெத்தவக புள்ளையல கையுக்குள்ளயே வச்சுகிடத்தேம் நெனக்காவ. எங்க மருமகனு ஒருத்தி வந்து புள்ள அவுக கையுகுள்ள போயிட்டா பெத்தவியள விட்டுபுடுவாவளோனு அவியளுக்கு அச்சம் புள்ள. மாத்த முடியாது. நம்ம வரம் அப்புடி” என்று கார்த்திகா கூற,


பயம் கலந்த பார்வை ஒன்றை வீசினாள்.


“எனக்குமே பயமாத்தான் இருந்துச்சு புள்ள. என்ன எனக்கு கட்டிகிட்டு ரெண்டு மாசம் பொறவுதேம் திட்டுகிட்டலாம் பலப்பட்டுச்சு. ஒனக்கு வந்த நா தொட்டு இருக்குது. எனக்கு இதுக்கு என்ன சொல்லனு தெரியல. அட்ஜஸ்ட் பண்ணிக்கனு மனசார சொல்லிட முடியல. ஓன் எடத்துல நானிருந்தா இப்புடி கம்முனு இருந்துருப்பேனானு தெரியல” என்று கார்த்திகா கூற,


ஒரு பெருமூச்சுடன் தலை குனிந்தாள்.


அவள் தலையை பரிவாய் கோதியவள், “போவப் போவ சரியாவுதானு பாப்பம்ன?” என்க,


சிறு தலையசைப்புடன் அவள் தோள் சாய்ந்தாள்.


நிமிடங்கள் சில கடக்க, “சரித்தா. நீ படு. நான் கீழ போறேம்” என்று கூறிய கார்த்திகா கீழே செல்ல,


“ஒத்த டம்புளரு பாலு கொடுக்க இம்புட்டு நேரமா?” என்று தெய்வநாயகி அடுத்தப் பாட்டைத் துவங்கினார்.


ஒருவித சளிப்புடன் சென்று அனைத்தையும் எடுத்து வைத்தவள், உணவிடுவதற்கான ஆயத்தங்களை செய்யத் துவங்கினாள்.


“மைணி மித்ரா வரல?” என்று வளவன் கேட்டான்.


“எப்புடி வருவாவ?” என்று தனம் வாய் திறக்க,


“அவளுக்கு பசியில்லனு சொன்னா கொழுந்தரே. பால கொடுத்துட்டுதேம் வந்தேம்” என்று கார்த்திகா கூறினாள்.


அண்ணியையும் தங்கையையும் மாறி மாறி பார்த்தவன், “ஏன் பசியில்லயாம்? மோந்திக்கு எதும் சாப்டாளா?” என்க,


“எல்லாம் எதாது உங்கிருப்பா. அதேம் பசியில்லங்கால? நீ சாப்பிடு” என்று தெய்வா கூறினார்.


எதுவோ சரியில்லாததைப் போல் தோன்ற, தட்டிலிட்ட இரண்டு சப்பாத்தியோடு முடித்துக் கொண்டு எழுந்தான்.


“கொழுந்தரே என்னதிது?” என்று சப்பாத்தியுடன் வந்த கார்த்திகா கேட்க,


அவளை ஆழ்ந்த பார்வை பார்த்தவன், “பசியில்ல மைணி” என்றுவிட்டு விடுவிடுவென்று மேலே ஏறினான்.


செல்பவனையே வருத்தமாய் பார்த்தவள் விக்ரமனை நோக்க, மனைவியின் பார்வையிலேயே அன்னை ஏதோ ஆட்டம் ஆடியுள்ளார் என்பது அவனுக்குப் புரிந்தது.


மேலே அறைக்குள் வந்த திருமாவளவன், பரிதாபமான நிலையில் நீள்விருக்கையில் தலைசாய்த்து அமர்ந்திருந்த மணையாட்டியைக் கண்டு, “மித்ரா” என்க,


அவனை நிமிர்ந்து பார்த்தாள்.


சட்டென மூண்ட கோபத்துடன் எழுந்து நின்றவள், “உங்கம்மா என்‌ கால பாத்து என்னனு நலம் விசாரிக்கலைனு உங்ககிட்ட வந்து கேட்டேனா?” என்று கேட்க,


“ஏ என்னட்டி ஆச்சு?” என்று புரியாமல் கேட்டான்.


“இல்ல நான் கேட்டேனானு கேக்குறேன்? எதுக்கு அத்தைட்ட போய் பேசினீங்க?” என்று அவள் கேட்க,


“நான் என்னடி பேசினேன்?” என்று புரியாது விழித்தான்.


“காலைல நீங்க கேட்டுட்டு போயிட்டீங்க நாலு வார்த்தை. அதுக்கு இப்ப என்னை நல்லா வச்சு செஞ்சுட்டாங்க. நான் கோல் மூட்டுறேனாம். க்..கு..குச்சி கொழுத்துறேனாம். அவங்க புள்ளைய அவங்களுக்கு எதிராவே திருப்பி விடுறேனாம்” என்று கோபமாய் ஆரம்பித்தக் குரல் இறுதியில் முற்றுமாய் உடைந்து போக,


“அம்மா சொன்னாவளா?” என்று கோபத்துடன் பற்களைக் கடித்தான்.


சோர்வாய் நீள்விருக்கையில் அமர்ந்தவள் விழியோரம் பொங்கி வெடித்தக் கண்ணீரை துடைத்துக் கொண்டு மேலும் அழ, கோபத்துடன் நகர எத்தனித்தான்.


சட்டெனப் பதறி எழுந்து அவன் கை பற்றியவள், “வேணாங்க” என்று உடைந்த குரலில் அழுகையோடு கூற,


அவளை ஆத்திரத்துடன் முறைத்தான்.


“ப்ளீஸ்ங்க. வேணாம். எனக்காக பேசி எல்லாருமே திட்டு வாங்கிக்குறாங்க” என்றபடி அவள் அவன் கையில் முகம் புதைத்து அழுதேவிட,


அவளை வேதனையோடு பார்த்தான்.


“இ..இப்ப நீங்க போய் பேசினீங்கனா ம.. மறுபடியும் தி..திட்டுவாங்கபா. வேணாம்” என்று பயமும் கண்ணீருமாய் அவள் கூற, திருமாவளவனின் விழிகள் வேதனையில் குளித்துச் சிவந்து போனது.


“வேணாங்க ப்ளீஸ். போகாதீங்க” என்று அவள் அழ,


அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.


அந்த இறுகிய அணைப்புக்கு அவள் உடல் அத்தனை நேரம் ஏங்கியது போலும். அதில் பாந்தமாய் பொருந்திக் கொண்டவள் அவன் நெஞ்சில் முகம் புதைத்து விசும்பி அழ, அவள் தலையைக் கோதியபடி, “சாரிடி” என்றான்.


அழுதபடியே நடுநடுங்கும் கரங்களுடன் அவன் வாய் பொத்தியவள், இடவலமாய் தலையசைக்க, அவன் அனுமதியின்றி, விழிகளுக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒற்றைத் துளிக் கண்ணீர் கன்னத்தில் உருண்டு ஓடியது.


“நா.. நான் ஏன் அப்படிலாம் சொல்லி சண்டை இழுக்கப் போறேன்? உ..உங்கள அவங்கட்டருந்து பிரிச்சு எனக்கென்ன?” என்றவள் அவனை நிமிர்ந்து பார்த்து, “அ..அவங்களுக்குத்தான் என்னை பிடிக்காது. எனக்கு அவங்கள பிடிக்கும் தான். அப்றம் ஏன் நான் அப்படிலாம் ப..பண்ணப் போறேன்?” என்று வெகுநேரம் அழுதததில் விசும்பியபடி அவள் கூற,


அவன் கண்ணீர் சேமிப்பின் அடுத்தத் துளியும் வெளியேறியது.


அதைக் கண்டு மனமுடைந்தவள், “உ..உங்களையும் கஷ்டப்படுத்துறேன்ல?” என்க,


அவள் முகத்தைத் தன் கரங்களுக்குள் பொத்திக் கொண்டவன், அவள் இழதில் புதைந்து போனான்.


கண்ணீரில் ஊரிய இதழிலிருந்து உவர்ப்பை நீக்கிவிடும் முனைப்போடு இதழ் பூட்டினான் போலும். அவன் செய்கையைத் தன் நொந்துபோன மனதிற்கு மருந்தாய் ஏற்றவள், நொடிகளின் நகர்வில் கரைந்து நின்றாள்.


இதழ் தீண்டி கன்னம் தாண்டியவன், அவள் முகம் பூசிய கண்ணீர் கோலத்தை, தன் இதழ் கொண்டு அழிக்கத் துவங்கினான்.


நீரில் நெருப்புண்டா? என்றால் ஆம்! அவள் கண்ணீரின் வெம்மை, அவன் இதழின் ஈரத்துடன் சங்கமித்து, மோகத்தீயை அங்கே பற்ற வைத்தது.


பிடிகள் உருக, மென்மை பூசிக் கொண்ட கைகள், அவளை ஆதுரமாய் பற்றிக் கொண்டது.


கால்கள் தளர அவன் தீண்டலில் உருகியவள் அவன் சட்டைக்காலரை இறுகப் பற்றிக் கொண்டு, “ப்பா” என்று மூச்சுக்காற்றாய் இசைத்தழைக்க,


அவளை அப்படியே அள்ளிக் கொண்டு மஞ்சத்தை அடைந்தான்.


அவளுக்குள் தித்திப்பாய் பூகம்பம் வெடிக்க, அதன் தாக்கத்தில் மேனி சிலிர்த்து நடுங்கியது. 


“எ..ஏங்க” என்று நடுக்கமாய் அழைத்தவள் அவன் சுருள் கேசத்திற்குள் தன் கரம் நுழைந்து இறுக்கமாய் பற்றிக் கொள்ள,


“மித்து” என்று அவள் காதோரம் இசைத்து காதுமடலில் முத்தமிட்டான்.


வெட்கம் பாதி, அச்சம் மீதியாய் அவள் தடுமாற, அதை ஆசை பாதி, காதல் மீதியாய் வென்றது.


அவளை அள்ளி அணைத்துத் தன் ஆலாபனைகளை அவன் துவங்க, மின்விளக்கின் ஒளி இம்சிப்பாய் மிளிர்ந்தன. இறுக பூட்டப்பட்ட விழிகளை மீறி அதன் ஒளியை உணர முடிய, அவன் மார்பில் முகம் முட்டி தடுமாறி நின்றாள் பெண்.


அதன் ஒளியிலிருந்து தப்பிக்கத் தவித்தவள் தவிப்புகளுக்கு முற்றுப்புள்ளியிடும் விதமாய் விளக்கணைத்தவன், அவர்கள் தேடலுக்கான தொடக்கப்புள்ளியிட்டான் காதல் கடந்து தாபமாய்…




Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02