திருப்பம்-39

 திருப்பம்-39



பகல் மறந்து பள்ளிகொள்ளும் மானுடர்களுக்கு நேரம் குறித்த ஐயமற்று இருக்கலாம். பகலோனவன் தாமதிக்க இயலுமா? ஆதவனவன் தன் ஆதிக்கத்தை பூமிதனில் பரப்பத் துவங்க இருளின் நிசப்தங்கள் நீங்கி, ஒளியின் ஒலி படரத் துவங்கியது.


அறையில் தன்னைப் போல் வெளிச்சம் படர்ந்து இருள் நீங்க, குழந்தைப் போல் வாயைப் பிளந்துக் கொண்டு தன் மார்போடு ஒன்றிப் படுத்திருந்தவளையே விழி எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தான், திருமாவளவன்.


வேதனையின் வீரியத்தில் வேகமெடுத்த உணர்வுகள் மெல்ல தனிந்து கரை கண்டு குளிர்ந்து போனதன் தாக்கம், இனிமை பரப்பிய அதேகணம், வீரியம்மிக்க வேதனையின் சுவடுகள் படிந்தே இருந்தன.


தற்போதைக்கு அதை புறம் தள்ளியவன், தன் புறம் சேர்ந்த, அகம் சேர்ந்தாளை அணைத்துக் கொண்டு தலைகோத, அவள் அசையாது ஆழ்ந்த துயிலில் கட்டுண்டு இருந்தாள்.


நிமிடங்கள் கரைந்தொழுக, மணி ஏழைக் கடந்த பின்புதான் அன்றைய நாளுக்கான பணிகளே அவனுக்கு நினைவு வர, மனமே இன்றி அவளை எழுப்பினான்.


கிட்டத்தட்ட ஐந்து நிமிட முயற்சியின் பலனாய் கண் விழித்தவள் அவனை இன்னும் அணைத்துக் கொண்டு, “அஞ்சு நிமிஷம் படுத்துக்கவா?” என்க,


'அய்யோ கொல்லுறாளே’ என்று மனதோடு செல்லமாய் திட்டிக் கொண்டவன், “மணி ஏழரையாவப்போவுது மித்ரா” என்றான்.


“என்னது?” என்று அரண்டு எழுந்தவள், தன் கோலம் கண்டு மிரண்டு போக, அவளைப் பார்த்துக் குறும்பாய் சிரித்தான்.


அதில் நாணம் பிடிங்கித்தின்ன அவள் போர்வையை நாட, “நைட்டுத்தாம் வெளக்க அணைக்க வச்சுபுட்ட. காலையில சூரியன அணைக்க முடியாதே” என்று படு குறும்பாய் கூறினான்.


“ஏம்(ப்)பா” என்று சிணுங்கியபடி அவள் இதழ் கடிக்க,


அவளை அணைத்துக் கொண்டு, “வெளிச்சத்த மறைச்சுக்குறேம்” என்கவும்,


இன்னும் இன்னும் நாணிக் குழைந்தாள்.


“என்னட்டி பேச்சக்காணும்?” என்று அவள் கூந்தல் ஒதுக்கியபடி அவன் கேட்க,


“வி..விடுங்க” என்று வெகுவாய் தடுமாறினாள்.


“விடத்தான?” என்றவன் மேலும் பிடித்துக் கொள்ள, “ஏங்க லேட்டாச்சு” என்று தவித்தாள்.


அவள் தவிப்பு அவனுக்கு தித்திப்பாய் இனித்தது.


சிலநிமிட மௌனத்திற்குப் பின் அமைதியான குரலில், “வேலைக்கு போயிடுவியா புள்ள? முடியுமா?” என்று அக்கறையுடன் அவன் கேட்க,


சோர்வின் பிடியில் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.


குறும்பை விடுத்த அக்கறை அதில் தெரியவும், “லீவு போட்டு வீட்லருக்க பயமாருக்கு” என்றுவிட்டு தான் பேசிய வார்த்தையில் என்ன நினைப்பானோ என்ற அச்சத்துடன் அவள் கைகொண்டு வாய் மூட, அவளை வேதனையுடன் பார்த்தபடி கரமெடுத்துவிட்டு இடவலமாய் தலையசைத்தான்.


“சாரி” என்று மெல்லிய குரலில் கூறியவள், அடுத்து என்ன பேசவென்று புரியாது விழிக்க,


“முடியாட்டி லீவு போடுமா. நானுங்கூட வீட்ல இருக்கேம்” என்று கூறினான்.


அவனையும் கஷ்டப்படுத்துவதைப் போல் மனம் பிசைந்தது.


அதேபோல் உடலின் மிகுதியான சோர்வு அவளை வேலைக்கு விடுப்பெடுப்பது பற்றியும் யோசிக்க வைத்தது.


“வர்க் ஃப்ரம் ஹோம் வாங்கிக்குறேங்க. நீங்க கிளம்புங்க. நான் பாத்துப்பேன். அக்கா இருப்பாங்களே” என்று சங்கமித்ரா கூற,


அவள் தலைகோதியபடியே, “கஷ்டமாருக்கா?” என்றான்.


ஒரு நொடி விழித்தவள், பாவம் போல், “எதைகுறிச்சு கேக்குறீங்க?” என்க,


பக்கென்று சிரித்தவன், “வாலு” என்றான்.


அதில் தானும் சிரித்துக் கொண்டவள், “நீங்க இருக்கீங்க தானே? தாங்கிப்பேன்” என்று அவன் மார்பில் தலை சாய்த்து, “லவ் மேரேஜ்னா சும்மாவா? திட்டெல்லாம் வாங்கிதான ஆகனும்?” என்று கேட்டு சிரித்தாள்.


அதில் மனம் சிலிர்க்கப் புன்னகைத்தவன், “இஞ்சார்ரா.. ஒத்துகிட்ட?” என்று கேட்க,


“ஒத்துக்க வச்சுட்டீங்களே” என்று கூறி புன்னகைத்தாள்.


அதன்பின் சின்னச் சின்னச் சீண்டல்களுடன் இருவரும் தயாராகிக் கீழே வர, ஏனோ அன்று மற்றவர்களை எதிர்கொள்ள வெகுவாகக் கூச்சப்பட்டாள் பெண்.


அப்போதுதான் எதைகொண்டு தன் மாமியார் தன்னை கண்டுகொள்கின்றார் என்பது அவளுக்குப் புரிந்தது.


அன்றெனப்பார்த்து வீடும் சற்றே பரபரப்பாய் இருந்தது. காரணம் ஒளிசுடருக்கு உடல் சரியில்லாததே.


கூடத்தில் மகளைத் தோளில் போட்டு கவலை படிந்த முகத்துடன் தட்டிக் கொண்டிருந்த கார்த்திகாவின் அருகே வந்த விக்ரம், “ஒன்னுமில்ல கார்த்தி‌. வெசனப்படாத. டாக்டருகிட்ட டோக்கனு வாங்கி வைக்க சொல்லிட்டேம். வேலு வாங்கிருவியான். புள்ளைக்கு ஒருவா என்னமாது ஊட்டு போவம்” என்று கூற,


“நைட்டெல்லாம் கரிச்சுக் கரிச்சு புள்ளைக்கு ஒடம்பெல்லாம் கொதிக்குதுங்க” என்று கூறுகையிலேயே பயத்தில் அவளுக்குக் கண்கலங்கிப் போனது‌.


“ஏட்டிக் கோம்ப. புள்ளைய கொண்டா. மொதல நீ போயி உங்கு” என்று அவன் மகளை வாங்கிக் கொள்ள, அன்னையிடமிருந்து விலகியதில் முதலில் மிரண்டக் குழந்தை பின் தந்தை வாசம் உணர்ந்து அமைதியடைந்தாள்.


அதில் வருத்தம் கொண்டு கண்ணீரை அவள் துடைக்க,


“அக்கா என்னாச்சு?” என்று பதட்டமாய் சங்கமித்ரா கேட்டாள்.


“பாப்பாவுக்கு காச்சடிக்கி சங்கு. பயமாருக்குது. நைட்டெல்லாம் தூங்காது சிணுங்கிட்டே இருந்தா” என்று கார்த்திகா கண்ணீரோடு கூற,


குழந்தையை வாங்கிப் பார்த்தவள், “ஒன்னுமிருக்காதுக்கா. பாப்பா நைட்டுக்கு என்ன சாப்ட்டா?” என்று கேட்டாள்.


“சப்பாத்திதான் சாப்டா. பாலுல ஊரவச்சுத்தான் ஊட்டிவிட்டேம். எப்பவும் சாப்பிடுறதுதான்” என்று கார்த்திகா கூற,


“ஆஸ்பிடல் போய் பாருங்க க்கா. ஒன்னுமிருக்காது” என்று ஆறுதல் படுத்தினாள்.


குழந்தைக்குக் கஞ்சியுடன் தெய்வநாயகியும், கார்த்திகாவிற்கு உணவுடன் தனலட்சுமியும் வர,


“லே எங்கலே வடிவேலு? டோக்கன வாங்கிட்டியானா?” என்று சுயம்புலிங்கம் கேட்டார்.


“வாங்கிட்டியான் ஐயா” என்று விக்ரம் கூறும்போதே, வடிவேலுவும் வந்துவிட,


குழந்தையை வாங்கிய திருமாவளவன், “லே நீயும் உங்கு. நான் புள்ளைய வச்சுகிடுதேம்” என்று இரட்டையனையும் உண்ண அனுப்பினான்.


தெய்வநாயகி குழந்தையை வாங்கி கஞ்சியைப் புகட்ட, இரண்டு மூன்று வாய்க்குமேல் வாங்காது கத்தி விரைக்கத் துவங்கினாள்.


“அத்த வுடுங்கத்த. ஆஸ்பிடல்ல கேட்டுப்பம்” என்று மகள் கண்ணீர் பொருக்காது கார்த்திகா பதற,


“அங்கன ஊசிகீசி போட்டா புள்ளைக்குத்தாங்க தெம்பு வேணாமா? நீ உங்கு. இன்னும் ரெண்டு வாயி ஊட்டிக்குதேம்” என்று அதட்டிவிட்டு குழந்தையை சமாதானம் செய்து மேலும் இரண்டு வாய் உணவை மட்டும் ஊட்டி முடித்தார்.


“லே காருல போயிவா. போயிட்டு சேதி சொல்லுவ” என்று சுயம்புலிங்கம் கூற,


“சரிப்பா” என்றவன் மனைவியைப் பார்த்தான்.


குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவள் செல்ல,


வருத்தத்துடன் செல்பவர்களைப் பார்த்து நின்றனர்.


தன் அருகே நிற்கும் சங்கமித்ராவின் தோள் தட்டிய தெய்வநாயகி, “என்னத்த வாய் பாக்க? வா. வேலைக்கு போவனுமில்ல? சமையல பாப்பம்” என்று கூற,


சிறு தலையசைப்புடன் அவர் பின்னே சென்றாள்.


தனமும் அவளுக்குத் துணையாய் உள்ளே செல்ல, “அவோள கடிச்சாடி திங்கப்போறேம்? போயி காலேஜுக்குக் கெளம்பு” என்று மகளைத் திட்டி அனுப்பியவர், “எப்ப வேலைக்கு போவனும்?” என்று கேட்க,


“வர்க் ஃப்ரம் ஹோம் போட்டுகிட்டேன் அத்தை. பத்து மணிக்கு போனா போதும்” என்றாள்.


“ம்ம்..” என்பதோடு திரும்பியவர் அவளுக்கென்று வேலைகளை ஒதுக்கிக் கொடுத்தபடியே தன் வேலையையும் பார்த்தார்.


சமையலறையின் வெம்மை அவள் உடல் வெப்பத்தை இன்னும் அதிகரிக்க, பகிர்ந்து கொள்ள இயலாத உபாதைகள் அவளை வருத்தியது. வியர்த்து வழிய வேலைகளை செய்தவள் அடிவயிற்றில் வலி எடுக்கத் துவங்கவும், தெய்வநாயகியிடம் சொல்லத் தயங்கியவளாய் வேலையைத் தொடர்ந்தாள்.


நிமிடத்திற்கு நிமிடம் தண்ணீர் பானையை அவள் திறந்து மூடும் சப்தம் கேட்டு, திரும்பிப் பார்த்தவர், நீர் பருகிவிட்டு, இடுப்பில் கரம் வைத்து அழுத்திக் கொண்டு, தேங்காய் திருவியவளைக் கண்டார்.


நொடியில் அவருக்குப் புரிந்துபோக, “இந்தா.. அந்தத் திருவலக் கொண்டா” என்று அதட்டலாய் கூறினார்.


அவரை நிமிர்ந்து பார்த்தவள் புரியாது விழிக்க, “அதைத்தேன் கேக்கேம்” என்று கோபத்துடன் கைகாட்டி குறிப்பிட்டுக் கேட்டார்.


“இந்தோ முடிச்சுடுவேன் அத்தை” என்று அவள் கூற,


“ஒன்னும் வேணாம். கொண்டா. விட்டா பொழுதுக்கும் திருவிகிட்டே கெடப்ப நீயு” என்று சப்தம் போட்டார்.


அதில் முகம் சுறுங்க தலை கவிழ்ந்தபடி அவள் எடுத்துக் கொடுக்க, “அந்த குத்துபோணிலருந்து ஒரு செம்பு மோர எடு” என்றார்.


அவளும் எடுத்து வர, அதில் வெந்தயப் பொடியைக் கலந்துக் கொடுத்தவர், “குடிச்சுட்டுப்போயி ஒக்காரு. வயிறு வெட்டி வெட்டித்தேம் இழுக்கும். கொஞ்சம் போனா சரியாவும்” என்று கூற,


முகம் கன்றி சிவக்க தலைகுனிந்தபடி வாங்கிக் கொண்டாள்.


அவர் தன் நிலை புரிந்து கொடுத்தது சங்கடமான உணர்வைக் கொடுத்ததோடு கொஞ்சம் திருப்தியாகவும் இருந்தது பெண்ணவளுக்கு. அவரிடம் அக்கறை என்பதை பெயருக்கும் உணர முடியவில்லை என்றாலும் கடமையை உணர முடிந்தது.


“தனத்துக்கு சாப்பாட மட்டும் கட்டிவச்சுட்டுப்போ” என்று அவர் கூற, சரியென்ற தலையசைப்போடு சென்றாள்.


மோரைக் குடித்துவிட்டு உணவைக் கட்டிவைக்க, உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு அவ்விடம் வந்தவன், “மித்ரா” என்றான்.


அவனை நிமிர்ந்து பார்த்தவள், சமையலறையை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு, அவனை தயக்கமாய் நெருங்க, அவள் ஏதோ பேச வருகின்றாள் என்று புரிந்தவனாய், “என்னமா?” என்று தன்மையாய் கேட்டான்.


மெல்லிய குரலில் தன் உடல் உபாதைகளைக் கூறியவள், “அ..அத்த மோர் கொடுத்தாங்க” என்றும் கூற,


கீழிதழைக் கடித்துக் கொண்டு, “அப்படி இருக்குமாக்கும்?” என்று கேட்டான்.


அவனை தீயாய் முறைத்தவள், “எனக்கு மட்டும் அனுபவம் பாருங்க” என்க,


லேசாய் சிரித்தவன், “ஆஸ்பிடல் எதும் போவமா?” என்றான்.


சங்கடமாய் அவள் பார்க்க, “ஏட்டி டாக்டர்கிட்ட சொல்ல மாட்டியா? எங்கிட்ட சொன்னத்தான? அவியட்ட சொல்ல என்ன கூச்சம்?” என்று கேட்டான்.


“ப்ச் நீங்களும் அவங்களும் ஒன்னு பாருங்க” என்று முகம் சுருக்கியவள், “மோர் குடிச்சுருக்கேன்ல? பாத்துக்குறேன்” என்க,


“என்னைய கோவக்காரன்னடி. நீதேம் படுபயங்கரமா மொறைக்க, கோவப்படுத” என்று சிரித்தான்.


அவள் மீண்டும் முறைக்கவும், “சரிசரி. முட்டக்கண்ண வச்சு முழிக்காத. பாத்துகிட்டு சொல்லு. முடியாட்டி போவம்” என்க,


சிறு தலையசைப்புடன் வேலையைத் தொடர்ந்தாள்.


நேரம் கடக்க அனைவரையும் அமர்த்தி உணவிட்ட தெய்வா அவளையும் சென்று அமரும்படி கூறி தானே பரிமாறினார்.


அனைவரும் உண்டு முடித்து அவரவர் வேலைக்குச் செல்ல, சங்கமித்ராவும் அறைக்குத் திரும்பினாள்.


வேலை முடித்து மதியம் உணவுக்குக் கீழே வந்தவள் குழந்தையுடன் வந்து சேர்ந்த கார்த்திகாவை விசாரித்தாள்.


“காச்சலாம்டா. ஊசி போட்டிருக்காவ. மருந்தும் கொடுத்துருக்காவ” என்றவள் தோளில் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை ஆதூரமாய் வருடி, “சுடரு மத்த பிள்ளையளாட்டம் சேட்ட கூட பெருசா செய்யாது சங்கு. சமத்தாருப்பா. நைட்டெல்லாம் ஒருநாகூட அழுது அடம்பண்ணதில்ல. பாலு குடிச்சுட்டுருந்தப்ப கூட லேசா சிணுங்குவா, பால கொடுத்தா ஒடனே படுத்துகிடுவா. நேத்து நைட்டு பொட்டு தூக்கமில்ல. எனக்கு பயமாபோச்சுடா” என பயம் ஊரிய குரலில் கூற,


குழந்தையை வாங்கித் தன் மடியில் போட்டுக் கொண்டவள், “வருத்தப்படாதீங்க க்கா. இப்ப ஒன்னுமில்லதான?” என்று கேட்டாள்.


“ஒன்னுமில்லனுதான் சொல்லிருக்காவ” என்று கார்த்திகா கூறிய போதும் அவள் குரலில் பயம் இருக்கவே செய்தது. தாய்க்கே உரித்தான பயம் அது என்று சங்கமித்ராவிற்குப் புரிந்தது.


குழந்தையை மென்மையாய் வருடியவள், “சுத்தி போடுங்க க்கா

 பாப்பாக்கு. கண்ணு பட்டிருக்கும்” என்று கூற,


“ம்ம் ஆமா சங்கு” என்றாள்.


சில நிமிடங்களில் உணவு பொழுது அமைதியாய் முடைய, மீண்டும் அறைக்குத் திரும்பியவள் வேலையைத் துவங்கினாள். 

Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02