திருப்பம்-40
திருப்பம்-40
கார்த்திகா உடன் இல்லாத போதும் வீட்டிலிருந்து வேலைப் பார்ப்பது ஓரளவு அவளை மாமியாரிடமிருந்து காப்பாற்றியது என்றே கூறலாம்.
மாலை வேலை முடித்து மிகவும் சோர்ந்துபோன சங்கமித்ரா கட்டிலில் படுத்திட, சோர்வின் மிகுதியில் அப்படியே உறங்கிப் போனாள்.
மணி இரவு ஏழைத் தொட்ட நேரம், உடன் வேலை பார்க்கும் பெண் அழைத்ததில் அடித்துப் பிடித்து எழுந்தவள், அப்பெண் கேட்ட தகவல்களைக் கொடுத்துவிட்டு மணியை நோக்க, இரவு ஏழைத் தாண்டியிருந்தது.
“போச்சு” என்று தலையில் தட்டிக் கொண்டவள் சென்று முகம் கழுவி வர, அரை தூக்கத்தில் எழுந்ததில் அவள் கண்கள் நன்கு சிவப்பேரி இருந்தது.
தன்னையே நொந்துகொண்டு பெண்ணவள் கீழே செல்ல,
திரிபுராவும் அமர்ந்திருந்தாள்.
'அய்யயோ அண்ணியா? பேசாம அப்படியே மேல போயிடுவோமா?’ என்று அரண்டு விழித்தபடி அவள் யோசிக்க, இரவு உணவை சமைக்கவாது உதவ வேண்டுமே என்று தோன்றியது.
'என்ன பேசினாலும் கம்முனு இருந்துடு சங்கு. எதுவும் பேசக்கூடாது’ என்று மனதோடு கூறிக் கொண்டவள் கூடத்திற்கு வர,
அவள் தோற்றம் கண்டு முகம் சுழித்த திரிபுரா, “ஏ மக்கா. வீடுங்குற வீட்டுல வெளக்கு வைக்குற நேரம் இப்படித்தேம் ஒறங்கிட்டு வருவியா? வீடு வெளங்கினதாட்டந்தேம்” என்று கூற,
“கொ.. கொஞ்சம் உடம்பு முடியல அண்.. அ..மைணி” என்றாள்.
“ரெண்டு வாரம்மேல ஆச்சுது. இன்னும் மைணினு கூப்பிட வரல. என்னத்த படிச்சு பட்டமெல்லா வாங்கினியோபோ” என்று இடக்காய் அவள் பேச,
“அவிய படிப்ப சோதிக்கனுமுனா அவிய படிச்சதுலருந்து கேள்வி கேட்டுப்பாக்கத்தான க்கா? அதவுட்டுபுட்டு எகன மொகனயா பேசுறவ? அவியளுக்கு ஒடம்புக்கு முடியில. முடிஞ்சா விசாரி இல்ல கம்மினு கெட” என்று கூறியபடி தனலட்சுமி வந்தாள்.
“வாடியம்மா வா. ஆனா என்னமோடி. இந்தூட்டுல இவோளுக்கு எல்லாம் நல்லா கூஜா தூக்குறீய” என்று நக்கலாய் திரிபுரா கூற,
“ஏன்? ஓன் வீட்டுல ஒன்னிய யாரும் பேசினா அத்தான் வந்து கேக்க மாட்டாவளா? கேக்காமருந்தா நீதேம் சும்மாடுவியா?” என்று தனமும் அக்காவிற்கு சலைக்காமல் பேசினாள்.
இவற்றை ஒருவித சோர்வுடன் பார்த்த சங்கமித்ரா சமையலறை செல்ல, கோபத்துடன் பாத்திரத்தை உருட்டிக் கொண்டிருந்த தெய்வா, “வாடியம்மா வா. வெத்தல பாக்க வச்சு அழைக்கனுமோனு பாத்தேம். மகாராணியே வந்துட்டீய. ஒன்னிய ஒன்னும் சொல்லவும் முடியில பாரு. யாரையாது கூட்டிகிட்டு வந்துடுவ” என்று காய்ந்தார்.
திரிபுராவின் சிறப்பான வேலை தான் அந்த அர்ச்சனை என்று புரிந்தது அவளுக்கு.
அமைதியாய் அனைத்தயும் கேட்டுக் கொண்டு அவள் நிற்க, திட்டி முடித்தவர் வேலையையும் கொடுத்து செய்ய வைத்தார்.
இரவு உணவு தயாராகும் வேளை ஆண்கள் அனைவரும் வீடு வந்து சேர, வடிவேலுவும் அவர்களுடன் வந்திருந்தான்.
உணவு பொழுது வடிவேலுவின் உபயத்தால் கொஞ்சம் கலகலப்பாக செல்ல, உண்டு முடித்து அனைவரும் உறங்கச் சென்றனர்.
உடன் பிறந்தவன் அறைக்குச் சென்று குழந்தையைப் பார்த்துவிட்டு, “மைணி அதெல்லாம் ஒன்னியும் ஆவாது. வெசனப்படாதீய. பாப்பாக்கு ஒன்னுமிருக்காது. அதாம் தூங்குறால? காலையில ஜம்முனு முழிச்சுபுடுவா” என்று கார்த்திகாவிற்கும் ஆறுதல் கூறிவிட்டு வந்தான், வளவன்.
அறைக்குத் திரும்பியவன், குளித்து இரவுடைக்கு மாறி கட்டிலில் சாய்ந்தமர்ந்த மனையாளை நெருங்கி அவளைத் தன்மீது சாய்த்துக் கொண்டு, “என்னட்டி இன்னும் முடியிலயா?” என்று கேட்டான்.
“இப்ப பரவாலதாம்பா” என்று கூறியவள் அவன் மடியில் முகம் புதைத்துப் படுத்துக் கொள்ள, அவள் தலையை மென்மையாய் கோதிக் கொடுத்தான்.
அவள் விழியோரம் உவர்நீர் மினுமினுத்து மறைய, “மித்ரா” என்று பரிவாய் அழைத்தான்.
“ஏங்க.. உ.. உங்கக் கிட்ட நா.. நான் பேசினா.. அ..அது அத்தைய நான் உங்கட்ட தப்பா பேசுறதாகிடுமா?” என்று மிக தயக்கமாய் அவள் கேட்க,
அவளை நிமிர்த்தி தன் முகம் பார்க்கச் செய்தவன், “என்ன மித்ரா?” என்று ஆற்றாமையாய் கேட்டான்.
கண்ணீரோடு அவனை அணைத்துக் கொண்டவள், “நான் அப்படிலாம் இல்லாததை சொல்லி குறைபேச மாட்டேங்க” என்று கூற,
“என்னடி? ஏன் இப்படிலாம் பேசுத? எனக்கு ஒன்னய தெரியாதா?” என்று வருத்தமாய் கேட்டான்.
“எ..எனக்கு உ.. உங்கக்கிட்டயும் சொல்லலைனா பைத்தியம் பிடிச்சுடும்பா. நான் சத்தியமா இல்லாததையெல்லாம் சொல்லி சண்டை மூட்ட மாட்டேன்” என்று கமரும் குரலில் அவள் கூற,
“மித்ரா என்னைய அழ வச்சுபுடாதடி” என்று கூறுகியவனுக்குக் கண்கள் சிவந்து போனது.
அதில் மனமுடைந்து அவன் மார்பில் சாய்ந்தவள் தேம்பியழ, “என்னாச்சுமா?” என்று வருத்தமாய் கேட்டான்.
மாலை நடந்த வசைபாடுகளைக் கூறி முடித்தவள், “அ..அவங்க எல்லாம் சொல்லிட்டு நா.. நான் யாரையாது சண்டைபோட கூட்டிட்டு வருவேன்னு சொல்றாங்க. எனக்கு உங்கக்கிட்ட சொல்லக்கூட பயமாருக்கு. நான் வந்ததுலருந்து ஒருமுறையாது அப்படி பண்ணிருப்பேனா? ஏ..ஏன் அப்படி சொல்றாங்க?” என்று அழ,
அவனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
தன் அன்னையா இப்படி என்று பெரும் வருத்தமாகவும் இருந்தது.
“அ..அத்தைக்குக் கடைசிவர என்னை பிடிக்காமலே போயிடுமாங்க?” என்று அழுதபடி அவள் கேட்க,
“டேய்” என்று அவள் கண்ணீர் துடைத்தான்.
“நி..நீங்க அ..அப்படி நினைச்சுட மாட்..மாட்டீங்க தானே? உ..உங்க கிட்டயும் ஷேர் பண்ணிக்கலனா எ..என்னால..எ..எனக்கு” என்று அவள் விசும்பியபடி தடுமாற,
“மித்ரா” என்று உடைந்த குரலில் கூறியபடி அவளை தன் மார்பில் புதைத்துக் கொண்டான்.
“சாரிங்க. உங்களயும் அழ வைக்குறேன்ல?” என்று அவள் தேம்பியபடியே கூற,
“என்னைய வெசனப்பட வைக்காதடி இப்படி பேசி” என்றான்.
“எனக்கு நிஜமா என்ன பண்றதுனே தெரியலங்க. உங்கக்கிட்ட சொல்லாம சத்தியமா முடியாது. ஆ..ஆனா” என்று அவள் தடுமாற,
“ரொம்ப யோசிக்குற மித்ரா” என்றான்.
பெண்ணவள் அவனை நிமிர்ந்து பார்க்க,
“நான் ஒன்னய தப்பா நெனப்பனாடி? ஏன்டி இப்படிலாம் யோசிக்க? ஒனக்கு நானியிருக்கேம்னு சும்மாலாம் சொல்லல. எழுதி குடுத்த கடிதாசியெல்லாம் பேச்சுக்கும் எழுத்துக்குமில்ல மித்ரா” என்றவன் தன் நெஞ்சை நீவிக் கொண்டே, “இங்கருந்துதாம் எழுதினேம்” என்றான்.
அவன் கன்னத்தில் கரம் வைத்தவள் அவன் நெற்றியோடு தன் நெற்றி முட்டியபடி தலை சாய்க்க, “யாரு வந்து என்ன சொன்னாலும் எங்கிட்ட எதையுமே மறைக்க மாட்டனு எனக்குச் சத்தியம் பண்ணிக் குடு மித்ரா” என்றான்.
“நீங்கதான் இப்ப என்ன அழ வைக்குறீங்க” என்று அவள் கூற,
“ஆமா தான?” என்றவன், “ஏன்டா இங்க வந்தோம்னு இருக்கா மித்..” என்று முடிக்கும் முன் அவன் வாயைத் தன் கைகொண்டு மூடியிருந்தாள்.
கண்கள் கலங்கி சிவந்து போக, இத்தனை நேரம் இல்லாதொரு கோபம் அவளிடம்.
“கல்யாணமாகி முழுசா ஒரு மாசமாகல. என்ன பேச்சு பேசுறீங்க? இன்னொரு முறை இப்படி எதாது உங்க வாய்லருந்து வந்துச்சு நான் மனுஷியாருக்க மாட்டேன்” என்று ஆத்திரமாய் கூறிவிட்டு பட்டென எழுந்தாள்.
“ஏ மித்து” என்று அவள் கரம் பற்றி அவன் இழுக்க, வீம்பாய் அவனைத் தள்ளிவிட்டவள், “பேசாதீங்க” என்று அதட்டிவிட்டு தலையணை போர்வையை எடுத்து வந்து படுத்துக் கொண்டாள்.
“ஏ சரிடி. தெரியாம சொல்லிட்டேம்” என்று அவளைத் தன்னை நோக்கித் திருப்ப,
அவன் கரத்தை தட்டிவிட்டவள், “பேசாதீங்கனு சொல்லிட்டேன். போங்க. போயி தூங்குங்க” என்று கோபமாய் கூறிவிட்டுப் போர்வையை முகம் வரை மூடிக் கொண்டாள்.
“ஆத்தே” என்று நொந்துக் கொண்டவன் கட்டிலைவிட்டு எழுந்து மேஜையின் அருகே சென்று அமர்ந்துகொண்டான்.
சில நிமிடங்களுக்குப் பின்பும் விளக்கு அணைக்கப்படாததில் அவள் போர்வையை விலக்கிவிட்டு நோக்க,
மேஜையில் அமர்ந்து தீவிரமாய் எதையோ எழுதிக் கொண்டிருந்தான்.
“என்ன பண்றீங்க?” என்று அவள் குரல் கொடுக்க,
“அதாம் பேசமாட்டனுட்டள? நான் என்னமும் பண்றேம் போடி” என்றான்.
அதில் கோபம் வரப்பெற்றவள், “அதுசரி உங்களுக்காக ஒன்னும் கேட்கலை. எனக்குத் தூக்கம் வருது. விளக்க அணைச்சுட்டு வந்து படுங்க” என்று கூற,
“அதேம் மூஞ்சிவர போத்திருக்கல? படு” என்றான்.
“கொழுப்பு கொழுப்பு” என்று முனகியபடி அவள் படுக்க,
“ஒனக்குத்தான? அதாம் நேத்தே பாத்தனே. நெறையாத்தான் இருக்குது” என்றான்.
“பேச்சப் பாரு” என்று முகம் சுழித்தவள் அமைதியாய் படுத்துவிட, சில நிமிடங்களில் கடிதத்தை எழுதிமுடித்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு வந்து படுத்தான்.
அதேநேரம் அங்கு, தனலட்சுமியின் அறையில் காரசாரமான விவாதம் ஓடிக் கொண்டிருந்தது.
தெய்வநாயகி சங்கமித்ராவை வசைபாடும் கதைகளைக் கூறி முடித்த தனம், “வரவர அம்மா போக்கே பிடிபடல. எகன மொகனயா பேசுறாவ. அதுவும் இந்த அக்கா இருக்கவோளே. அக்கா வந்துட்டாளே அம்மாக்கு பேயி புடிச்சுபோவுது” என்று கூற,
“அந்த புள்ளதேம் பாவம் லட்சு. அவேன அம்புட்டு ஆசையா கட்டிகிட்டு வந்துச்சு. இப்பத பாரு. நெதம் கரிச்சுட்டுருக்கு” என்று வருத்தமாய் வடிவேலு கூறினான்.
“இந்த மைணியும் வாய்த்தொறக்கத்தான? இப்பிடி ஆளுவட்டலாம் ஏட்டிக்கு போட்டிக்கு நின்னாதேம் ஆவும்” என்றவள், “வரவர பயந்துதேம் வருது கண்ணாலத்த நெனச்சாவே” என்று ஒரு வேகத்தில் அவள் கூறிட,
“என்ன சொன்ன?” என்று கூர்மையாய் கேட்டான்.
“பின்ன என்னங்க? நெதம் மாமியா மருமவ சண்டதேம். ஒங்கள கட்டிக்கிட்டு வந்து அத்த என்னையும் இப்புடித்தேம் வைவாவளோனு பயந்துதேம் வருது” என்று படபடவென்று அவள் கூறிட,
“லட்சு என்ன பேசுத நீயு? நெனவோடத்தேம் பேசுதியா? ஒங்கம்மாக்கு அந்த புள்ளைய புடிக்கல. ஒங்க அக்காவும் வந்து நெதத்துக்கும் மூட்டி குடுக்காவ. எங்கம்மாக்கு ஒன்னய புடிக்காமயா?” என்று கேட்டான்.
“எங்கம்மாக்குந்தேம் மொத மைணிய புடிச்சுது. அவோ பாத்துதேம் சம்மதமே முடிச்சாவ. இந்தா இப்ப புடிக்கலதான?” என்று தனம் மேலும் அவன் கோபம் புரியாது கூற,
“இப்பத என்னட்டி சொல்ல வார? எங்கம்மாக்கும் ஒருநா யாரோ வந்து பேசி ஒன்னய புடிக்காம போவுங்கியா? நெதம் திட்டுவாங்க ஒன்னிய கட்டிக்க எதுக்குங்கியா?” என்று கத்தினான்.
அதன் பிறகுதான் அவளுக்குத் தனது பேச்சின் பொருளே விளங்கியது.
'அய்யோ தனம் அவசரப்பட்டு பேசிபுட்டியேடி' என்று நெற்றியில் அடித்துக் கொண்டவள், “இ..இல்லிங்க” என்க,
“போதும் லட்சு போதும். நெறயா பேசிட்ட. போயி தூங்க” என்று காட்டமாய் கூறினான்.
“ஏங்க தெரியாம பேசிபுட்டேம். நான் அப்பிடியெல்லாம் நெனக்கலங்க” என்று அவள் கூற,
“நெனக்காமத்தேம் வாயிக்கு வாயி வாதாடுனியாக்கும்? என்னிய பேச வெக்காத புள்ள. என்னமாது சொல்லி சங்கடப்படுத்திடப் போறேம். போயி படு” என்று கத்தினான்.
“ஏங்க நெஜமா சாரிங்க” என்று அவள் கூற,
“நல்லா நெறைக்க பேசிட்டத்தா” என்றுவிட்டு வைத்தான்.
அத்தனை நேரம் இல்லாத ஏதோ ஒன்று அவள் தொண்டையில் வந்து அடைக்க, ‘அவசரப்பட்டு பேசிட்டனே’ என்று தன்னையே நொந்துக் கொண்டாள்.
Comments
Post a Comment