திருப்பம்-41

 திருப்பம்-41



'ஏய் முட்டக்கண்ணி, கோவக்காரி, சீனிப் பட்டாசு. வந்தேம்னு வையு நல்லா நச்சு நச்சுனு கடிச்சு வச்சுபுடுவேம். என்னாமா கோவப்படுதடி. இதுல என்னிய கோவக்காரங்குற. காரத்த கொறச்சுக்க சொல்லுத. கோம்பக் கழுத. என்னடி இப்பத? தப்புதேம். தெரியாம பேசிபோட்டேம். வேணுமின்னா பெய்யுறாவ? அதுவும் நீ அழுதீயேனு மனசு தாங்கது தான பேசினேம். கையக்கூட போட விடாது தட்டிவிடுத. கொழுப்பெடுத்தவளே. தெரியாது பேசிபுட்டேம். மிண்டாதல்லாம் (பேசாதெல்லாம்) திரியாத தாயே. இனிமே இப்படி பேச மாட்டியேம். அதேபோல நீயும் எங்கிட்ட பேசலாம் பயப்படாதடி. மனசெல்லாம் என்னமோ பெணையுது கெடந்து’ என்று வாசித்தவள் இதழில் வருத்தம் படர்ந்த ஒரு மெல்லிய புன்னகை தோன்றியது.


'ஒன்னிய பத்தி எனக்கு தெரியாதா மித்ரா? ஒத்துகிடுதேம். மிஞ்சிப்போனா ஒன்னய எனக்கு ரெண்டு மாசந்தேம் தெரியும். ஆனா பாரு புள்ள. காலத்துக்கும் காதலுக்கும் சம்மந்தமே கெடயாது. காதலு ஒரு மின்னலு மாதிரி. மின்னி மறையுத ஒத்த நொடியில பூத்து, ஒத்த பூ கூட இல்லாத பொட்டலு காட்ட பூஞ்சோலயா மாத்திபுடும். அப்படித்தேம் மித்ரா நம்ம காதலும்’ என்று வாசித்தவள் கண்களில் ஆனந்தமாய் நீர் கோர்த்துக் கொண்டது.


'காதலுதேம் மித்ரா. நம்மது பக்கா லவ் மேரேஜுதேம். அதுக்கான அறிகுறிதேம் நம்ம வாழ்க்கையில பலமா தெரியுது. நீ எதுக்கும் வெசனப்படாதடி. ஓங்கூட வாழுற ஒத்த வாழ்க்கையவே பகிந்துகிட்டது சந்தோஷத்த மட்டுங் கேட்டுகிட இல்லடி. நீ அழுதாலும் அரவணச்சு ஆறுதல் சொல்லத்தேம் இருக்கேம். என்னமாது நெனச்சு நீயா கத கட்டாத மனசுக்குள்ளார. நான் இருக்கேம் ஒனக்கு. எப்பதும் இருப்பேம்’ என்றதோடு அக்கடிதம் முடிந்திருந்தது.


புன்னகையுடன் அக்கடிதத்தை மடித்து வைத்தவள் மேஜையிலிருந்து பேணாவையும் ஒரு தாளையும் எடுத்தாள்.


'அன்புள்ள திருமாலுக்கு,


கோவமெல்லாம் பலமாதான் இருக்கு. என்ன முட்டக்கண்ணி, கோவக்காரினு ரொம்பத்தான் திட்டுறீங்க? நடுவில ஏதோ புது புது வார்த்தை வேற. இதப் பாருங்க. உங்கள என்கிட்ட நார்மலா பேசுங்கனுலாம் கேட்க மாட்டேன். அதேபோல உங்க அக்கா மாதிரி நீங்களும் என்னை உங்க பாஷைய பழகிக்கவெல்லாம் சொல்லாதீங்க. அதுவா வந்தா தான் உண்டு. சத்தியமா வரும்னு தோனவும் இல்லை. நீங்க பேசினா புரிஞ்சுக்கப் பழகிக்குறேன். அதுக்காக என்னாலலாம் அதேபோல பேச முடியாதுங்க. சாரி. சரி நம்ம கதைக்கு வருவோம். ரொம்பத்தான் திட்டிருக்கீங்க. இருந்தாலும் கடைசில காதல், காலம், இடி மின்னல்னு கொஞ்சம் உருகினதால போனா போகுதுனு விடுறேன்.


நான் உங்களுக்கு சத்தியம் பண்ணித்தரேன். நிஜமாவே எதையும் உங்கக் கிட்ட மறைக்க மாட்டேன். எதுவானாலும் உங்கக்கிட்ட சொல்லிடுவேன். நீங்க தப்பாவே நினைச்சாலும் பரவால்லனு சொல்லிடுறேன். ஓகேவா? அப்றம் நீங்க சொன்ன வரிகள் உண்மை தான்.. காதல் ஒரு ஸ்பார்க் தான். இல்லைனா காதலே வேணாம் சாமினு பயந்துட்டு இருத்த எனக்கு இப்படி உங்கக்கிட்ட தலைகுப்புற விழும் அளவு காதல் வந்துருக்குமா? கல்யாணம் முதல் காதல்னு நம்ம கதைக்கு பெயர் வச்சுடுவோம். ஆனா ஒன்னு.. கடைசில ‘வரை’ அப்படினு சேர்க்க வேணாம். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ள அடக்கக் கூடியாதா இந்த நேசம்? சரிசரி லேட்டாச்சு. வேலைக்குப் போகனும். நீங்க யாரையும் விசாரிக்க வேணாம். கீழ போய் நானே விசாரிப்பேன்' என்றதோடு கடிதத்தை எழுதி முடித்தவள் அதனை உறைக்குள் வைத்துவிட்டு பலகனிக்குச் சென்றாள்.


அங்கு அழகாய் காலை வெயிலில் தன் உடல் உளர்த்திக் கொண்டிருந்த பூச்செடிகளைப் பார்த்து புன்னகைத்தவள், அதற்கு நீர் பாய்ச்சிவிட்டு ஒரு சங்குப்பூவை பறித்துக் கொண்டு உள்ளே வந்தாள்.


கடிதத்தின் உரையில் அந்தப் பூவையும் வைத்துவிட்டுத் திரும்ப, தன் சுருள் கேசத்திலிருந்து ஈரம் சொட்ட அவள் முன் நின்றிருந்தான்.


முதலில் பதறிப் போனவள், அவனது ஈரக்கூந்தலைக் கண்டு பக்கென்று சிரித்துவிட, அவளைத் தன்னை நோக்கி இழுத்துக் கொண்டவன் தன் தலையை வேகமாய் ஆட்டவும் நீர்மணிகள் அவள்மேல் பட்டுத் தெரித்தன.


“அச்சோ என்னப்பா இது விளையாட்டு?” என்று அவள் கேட்க,


“இது தெரியாதாக்கும்? இது ஒரு புது வெளாட்டு. இப்படி வந்து உன்னைய இழுத்துப் பிடிச்சுகிட்டு தண்ணிய தெரிச்சேனா?” என்று இழுத்தான்.


அவன் பிடியில் நாணம் கொண்டு நெழிந்தபடி அவள் விழிக்க, “இப்பத இதயே நான் தொடைச்சுவிடுவேம்” என்று அவள் கன்னத்து ஈரத்தில் இதழ் ஒற்றி, “இப்புடி” என்றான்.


அவனை விழிகள் அகலப் பார்த்தவள், “அதுசரி.. காலங்காலையிலயே ஆரமிச்சாச்சா? அதுக்கு நான் ஆளில்லை. வேலைக்கு நே..” என்று அவள் முடிக்கும் முன்,


“நீ ஆளுயில்லயா? பொறவு நான் வேற ஆளுக்கு எங்கன போவ?” என்று அவள் மூக்கில் துளிர்த்திருந்த ஈரத்தை இதழ் கொண்டு துடைத்தான்.


அவனைத் தீயாய் முறைத்தவள், அவன் வெற்று புஜங்களில் கரம் அழுத்தி அவனை நகர்த்தி விட்டு, “வேற ஆளுதான? வருவாங்க. போயி ஆடுங்க உங்க விளையாஆஆட்ட” என்று நொடித்துக் கொண்டு குளிக்கச் சென்றாள்.


அவள் சென்ற திசைகண்டு வாய்விட்டுச் சிரித்தவன், மேஜையில் அவள் வைத்திருக்கும் கடிதத்தைக் கண்டு எடுத்து வாசித்தான். அவன் முகத்தில் அவள் வரிகள் தாங்கிய ஒவ்வொரு உணர்வுக்கும் பதிலுணர்வு பிரதிபலித்துக் கொண்டிருந்தது. பரிபூரண புன்னகையுடன் அதை மூடி வைத்தவன் அன்றைய நாளுக்காகத் தயாராக, பெண்ணவளும் தயாராகிக் கீழே வந்தாள்.


எப்போதும் போல், மாமியாரின் சின்னச் சின்ன திட்டுகளுக்கு இடையே அவள் வேலையைச் செய்ய, கார்த்திகாவும் வந்து சேர்ந்தாள்.


“புள்ளைக்கு நோவு பரவாலியாட்டி?” என்று தெய்வா கேட்க,


“நல்லா தூங்கிட்டாத்தே. காச்சலும் விட்டுருக்கு கொஞ்சம் போல” என்று பதில் கொடுத்தாள்.


“மருந்தெல்லாம் முழுசா முடியும்வர குடுத்துடுங்க க்கா. காய்ச்சல் விட்டு போச்சு தானேனு விட்டுடாதீங்க. முழுசும் குடுத்தாதான் உள்ள இருக்குற மொத்த கிருமியையும் அழிக்கும்” என்று சங்கமித்ரா விளக்கம் கொடுக்க,


கார்த்திகாவும் “சரி சங்கு” எனக் கேட்டுக் கொண்டாள். இருவரும் உணவைத் தயார் செய்து மதியத்திற்கும் கட்டிமுடிக்க, மிகுந்த சோர்வுடன் தனலட்சுமி அவ்விடம் வந்தாள்.


“தனம் என்ன இம்பூட்டு நேரம்? வெரசா கிளம்பத்தான?” என்று கார்த்திகா கேட்க,


“ஒரே மண்டியிடியாருக்குது மைணி. அதேம் திராணியில்லாது படுத்துட்டேம்” என்று சோர்வாய் கூறினாள்.


“கண்ணெல்லாம் சிவந்துருக்கு. தூங்க முடியாதளவு வலினா எதும் மாத்திரை போட்டிருக்கலாம்ல தனம்?” என்று சங்கமித்ரா கேட்க,


“இஞ்சாருடி, இந்தூட்டுல மாத்தர மருந்தெல்லாம் ரொம்ப நோவுன்னாதேம் எடுப்பாவ. மண்டயிடிக்குலாம் மாத்தர போட்டுகிட்டிருந்தா ஒடம்பு என்னத்துக்கு ஆவ?” என்று தெய்வா கத்தினார்.


“சின்னச் சின்ன பிரச்சினைனா சரிதான் அத்தை. அவ நைட்டெல்லாம் தூங்கலையேனு சொன்னேன்” என்று சங்கமித்ரா கூற,


“டீயு போட்டுத்தாரேம். குடிச்சுபோட்டு சாப்டு படு பேசாம” என்று மகளிடம் கூறினார்.


“இல்லமா. காலேஜுல வேலகெடக்கு. நான் போறேம். பசியேயில்ல” என்று விட்டேற்றியாய் அவள் பதில்கூற, கார்த்திகாவிற்கு அவளது மனநிலைக்கான காரணம் பிடிபட்டது.


“சாப்புடாம போவாத. ஒத்த தோசயாது ஊட்டுறேம். உங்கிட்டுப்போ” என்ற கார்த்திகாவின் குரலில் கனிவு தெரிந்தாலும், பார்வையில் ஒரு அழுத்தம் இருந்தது. அதற்குக் கட்டுப்பட்டு அமர்ந்தவளுக்கு தோசையும் சாம்பாரும் எடுத்து வந்தவள், “என்னவாம்?” என்றபடி ஊட்ட, மலுக்கென்று அவள் கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது.


“ஆத்தே புள்ள என்னாச்சு?” என்று மெல்லிய குரலில் கார்த்திகா பதற,


உணவை வாயில் வைத்துக் கொண்டு விசும்பியதில் அவளுக்குப் புறையேறியது.


“இந்தா புள்ள. அவோ இரும்புறால்ல? அந்த குண்டானுலருந்து தண்ணிய கோரிக்(மொண்டு) குடு” என்று தெய்வா கூற,


விறுவிறுவென்று தண்ணீரை எடுத்து வந்த சங்கமித்ராவும் அவள் முகம் கண்டு அதிர்ந்து நின்றாள்.


அவள் பேசும் முன் கண்களாலேயே அமைதிப் படுத்திய கார்த்திகா, “என்னத்தப் பேசின?” என்று கேட்க,


தனம் சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.


கண்ணிலிருந்து ஒற்றைத் துளிக் கண்ணீர் உருண்டு ஓட,


அதைத் துடைத்துவிட்டபடி, “அவிய பேசினதால சண்டனு வையு, மூஞ்சில நாலு கடுக அள்ளி போட்டாக்க வெடிக்குற கணக்கத்தாம் இருப்ப. நீயு என்னத்தயோ பேசிருக்க. அதேம் கரிச்சுட்டு கெடக்க” என்று கார்த்திகா கூறினாள்.


தனலட்சுமியை அவள் துள்ளியமாய் கணித்திருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்த சங்கமித்ரா, தனத்தை நோக்க,


“நைட்டு கூருகெட்டு போயி பேசிபுட்டேம். கோச்சுகிட்டாவ. அடுத்து அம்புட்டு காலடிச்சேம் மைணி. ஒத்த கால எடுக்கல” என்று அழுகையில் பொழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே கூறினாள்.


அவள் மறைக்க நினைத்ததை கார்த்திகாவும் துருவி கேட்கவில்லை.


“ம்ம்” என்றபடி கார்த்திகா உணவை ஊட்ட,


“காலையிலயும் கூப்பிட்டேம். எடுக்கல. மெசேஜ் போட்டேம். பாத்தாவ ஆனா பதிலு போடல. ரொம்ப கோவமாருக்காவ” என்றவளுக்குக் கட்டுப்படுத்த இயலாத அளவு கண்ணீர் வந்தது.


காதலின் ஆழம், சின்னக் கோபங்களில் கூட எப்படித் துடிக்க வைக்கின்றது? என்று சங்கமித்ரா வியந்துப் பார்த்தாள்.


“ம்ம்” என்று கார்த்திகா அவளைப் பேச ஊக்கப்படுத்த,


“நாந்தேம் தப்பு மைணி. தெரியாம பேசிபுட்டேம். மன்னிப்புக் கேக்கத்தேம் கூப்பிடுதேம். எடுக்க மாட்றாவ. இவ்வளவு கோவமெல்லாம் பட்டதேயில்ல. ரொம்ப கஸ்டபடுத்திபுட்டேம் போலருக்கு. நேருல போயி பேசினாதேம் மனசாரும் மைணி” என்று குரல் உடையக் கூறினாள்.


“சரித்தா. ஒனக்கே தெரியுதுதான நீதேம் பேசி கோவபடுத்திட்டனு. அவியளுக்கு அந்த ஆத்திரம் ஆரத்தேம் கொஞ்சம் நேரத்தக் கொடேம்” என்று கார்த்திகா கூற,


“கஸ்டமாருக்குதுல மைணி. என்னால கஸ்டபட்டுபுட்டாவளே” என்றாள்.


“ஏட்டிக் கோம்ப” என்று அவள் கண்ணீரைத் தன் முந்தியில் அழுந்தத் துடைத்தவள், “என்னத்தயாது ரோசிக்காத. சாப்பிட்டத்தான? காலேஜுக்குக் கொளம்பு. மோந்திக்குப் (சாயிங்காலம்) போயி பேசு. அதெல்லாம் நீயு ஒத்த லுக்குவுட்டாளே அண்ணே லச்சுனுட்டு கரஞ்சுடும்” என்று கூற,


“ஹ்ம். கோவம் போச்சுதுனா அவியளே நேருல பாக்க வருவாவ” என்று கூறினாள்.


தனலட்சுமி வடிவேலுவிற்காக கண்ணீர் சிந்துவதும், இத்தனை துயரத்திலும் அவன் புறம் யோசிப்பதும், விட்டுக் கொடுக்காமல் பேசுவதும் சங்கமித்ராவை பெரிதும் ஆச்சரியப்படுத்தியது. காதலில் எத்தனை ஆழமாய் ஒன்றியிருந்தால் இப்படியிருக்க இயலும் என்று வியந்துப் பார்த்தாள்.


அவள் பேச்சைக் கேட்டபடி கார்த்திகா உணவை ஊட்டி முடிக்க, அவளை அணைத்துக் கொண்டு, “தேங்ஸ் மைணி” என்றாள், நெகிழ்வாய்.


“ஏட்டி மண்டு. என்னத்துக்கு இந்த தாங்ஸு? எங்கிட்ட சொல்லிபுட்டதான? செத்த நேரம் போயி அறையில முகத்த கழுவி ஃபிரெஷ்ஷாயிட்டுக் கெளம்பு. எல்லாம் சரியாப்போவும்” என்று அவளை அனுப்பிவைத்தக் கார்த்திகா, சங்கமித்ராவைப் பார்த்து, “தனம் படபடனு பேசுந்தேம். ஆனா கொழந்த மனசு சங்கு. வாயி துடுக்குத்தாம் கூட. அதுவும் பேசத்தெரியாது பேசித்தேம் இப்புடி வாங்கிக் கட்டிக்கிடும்” என்க,


“அவள ரொம்ப நல்லா புரிஞ்சு வச்சுருக்கீங்க அக்கா” என்று சங்கமித்ரா கூறினாள்.


“புள்ளைய போல பாத்துபுட்டேம்ல? மைணி, மைணினு பாசமாருப்பா. அம்புட்டயும் எங்கிட்ட மறைக்காது சொல்லிப்புடும். உசுராருப்பா. இப்புடி அண்ணேங்கூட என்னமாது சண்டனா எங்கிட்டத்தேம் அழுது வடியும். ஆனாலும் என்ன சண்டனு மூச்சு காட்ட மாட்டாளே. பூடகமாதேம் பேசும். அது சொல்ல நெனக்காதத நானுங் கேட்டுகிட மாட்டேம்” என்று கார்த்திகா கூற,


“அதான் உங்கக்கிட்ட எதையும் மறைக்காம சொல்றா” என்று சங்கமித்ரா புன்னகைத்தாள்.


“தங்கமான புள்ள சங்கு. இந்தூட்டுல எனக்கு மொத ஒட்டிகிட்டத அவோளத்தேம். புதுசா வாரவியட்ட எப்புடித்தேம் அம்புட்டு நம்பிக்கையானாளோ இப்பவர தெரியில எனக்கு. அண்ணேன விரும்புறத ஆருட்டயும் சொல்லாத புள்ள எங்கிட்டத்தேம் அம்புட்டயும் சொல்லினா. நானும் அது ஆச புரிஞ்சு, அது பக்குவம் அறிஞ்சு அதுபோக்குலயே விட்டுட்டேம். தப்பு பண்ணுற புள்ளைய கண்ணப்பாத்தா தெரியாதாக்கும்? அதெல்லாம் இவோளுக்குச் சுட்டுப்போட்டாலும் வராது. அதுவும் அண்ணே இருக்கே.. பாத்தாளே வெறையலாவும் அவியளுக்கு” என்று கார்த்திகா சிரிக்க,


சங்கமித்ரா தானும் பக்கென்று சிரித்தாள்.


“ஏட்டி ரெண்டேரும் என்னத்தக் கதையளக்கீய? இங்கன நான் ஒருத்தி வெந்துகிட்டு இருக்கேம். அங்க ஒங்களுக்கு என்ன பேச்சும் சிரிப்பும் வேண்டிகிடக்கு?” என்று உள்ளிருந்தபடியே தெய்வா கத்த,


“அடுப்படிய எங்கட்டக் குடுங்கனாலும் குடுக்க மாட்டாவ. அடுப்படி யாரு கைல இருக்கோ, அவியதேம் வீட்டோட மொதலாளியாம். நம்ம கைக்கு வந்தா வீடு அவிய கைய மீறிப் போவுமாம்” என்று நொடித்துக் கொண்ட கார்த்திகா, “வரோம் அத்தே” என்றபடி சங்கமித்ராவையும் இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.


காலையுணவு முடிய, அனைவரும் அவரவர் வேலைகளுக்குச் சென்றனர்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02