திருப்பம்-42

 திருப்பம்-42



அங்கு ரப்பர் தோட்டத்தில் வேலையை மேற்பார்வை பார்த்துவிட்டு, பூந்தோட்டம் வந்த வளவன், பூந்தோட்டத்தில் அமர்ந்துகொண்டு இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்த நண்பனைப் புரியாத பார்வைப் பார்த்தபடி அருகே வந்தான்.


“லே மக்கா” என்று வளவன் அழைத்தது கூட வடிவேலுவின் காதுகளில் விழவில்லை.


'என்னாச்சு இந்தப் பயலுக்கு?’ என்றபடி வந்தவன், அவன் தோள் தட்டி, “லே வேலு” என்க,


சட்டென சுயம் மீண்டு நண்பனை நிமிர்ந்துப் பார்த்தான்.


“என்னம்லே? ஏன் என்னத்தயோ பறிகொடுத்த கணக்காருக்க?” என்று வளவன் கேட்க,


அமைதியாய் தலை குனிந்தான்.


“லே நான் கேக்கேம் நீயு பூமிய பாத்து குனிஞ்சுட்ருக்க?” என்று ஒற்றைக் காலை மடக்கி அமர்ந்தவன் நண்பன் துடையில் தட்ட, லேசாய் கண்கள் சிவக்க நிமிர்ந்தான்‌.


“லே.. வேலு.. என்னம்லே சேதி? அத்தைக்கு ஏதும் சொவமில்லயா?” என்று வளவன் பதற,


“இல்லலே” என்றான்.


“பொறவு?” என்றவன், “என்ன தனத்துக்கூட ஒடக்கா?” என்று கேட்க,


வடிவேலுவின் முகமே வாடிப்போனது.


“சரிதேம்” என்றபடி வேட்டியை மடித்துக் கொண்டு அவன் காலடியில் அமர்ந்த வளவன், “சொல்லு” என்க,


“நேத்துக் கொஞ்சம் ஒடக்குலே. பேசிபுட்டா. அவோ வெவரம் புரியாதவ. சட்டுனு பேசிபுட்டா. எனக்கு மனசாரல. திட்டிபுட்டு வச்சுட்டேம். அம்புட்டு சாரி கேட்டா. கோவம் கண்ண மறச்சுடுச்சு. இன்னும் பேசல. அழுதுட்டே போயிருப்பாலே” என்று கூறியபடி தன் நெஞ்சை நீவிக் கொண்டான்.


“அவோ மேலதான தப்பு?” என்று வளவன் கேட்க,


“இல்லனு சொல்லலலே. தப்பு செஞ்சவியளே அத தப்புனு புரிஞ்சு மன்னிப்பு கேக்கயில அத மன்னிக்கனும்லே. காதலுனு இல்ல. எல்லா ஒறவுலயும் நெசத்துக்குமே தன்னோட தப்ப புரிஞ்சு வாரவன மதிச்சு அவேன மன்னிக்க வாய்ப்பு தரனும். அத செய்யாது கோவத்துல இருந்துபுட்டேம். காலையிலயே கரிச்சு (அழுது) தள்ளிருப்பா. வெசனமாருக்கு” என்று குரல் கமர, நெஞ்சம் பிசைந்துக் கொண்டு கூறினான்.


“சரிதாம்லே. கோவம் வாரது மனுஷ கொணந்தான? நீயு போயி பேசிபுட்டா சரியாவப்போவுது” என்று வளவன் அவனை சமாதானம் செய்ய முயல,


“சீரீயஸா தங்கபுள்ளகூட சண்ட போட்டிருக்கீயாலே?” என்று வேலு கேட்டான்.


“ஏம்லே? ஓம் வாயில வசம்ப வச்சு தேய்க்க” என்று பதறிய வளவன், “சும்மாவே நாளுக்கும் பொழுதுக்கும் வூட்டுல ஒடக்காதேம் இருக்குது. இதுல நாங்க சீரியஸா வேற சண்டய போட்டுகிடனுமா?” என்று நெஞ்சில் கை வைக்க,


“சொல்லயிலயே பதறுது தான? சண்ட போட்டுட்டு வந்துருக்கேம். மனசுக்கு என்னமோ பண்ணுதுலே” என்று வருத்தமாய் கூறினான்.


தற்போது நண்பனின் நிலையை நன்கு புரிந்துகொள்ள முடிந்தது வளவனால். ஒரு பேச்சிற்கே தனக்குப் பதறுகிறது என்கையில், சண்டை போட்டுக் கொண்டு வந்திருக்கும் நண்பனுக்கு அந்த வருத்தம் வாட்டத்தான் செய்யும் என்பது வளவனுக்குப் புரிந்தது.


சில நிமிடங்கள் அவனைப் புலம்ப விட்டுக் கேட்டுக்கொண்டவன், “மோந்திக்கு (சாயும்காலம்) போயி பேசிவா. எல்லாம் சரியாபோவும். நீயு ஒத்தப் பார்வ பாத்தா போதாதாலே? எந்தங்கச்சி உசுரயே குடுக்கும். ஒடக்க முடிச்சுகிடாதா? நீயுந்தான் இருப்பியாக்கும்? அதெல்லாம் தாமு தூமுனு வந்து அவோளே ஒன்னயே தூக்கிச் சாப்ட்டுட்டுப் போயிடுவா” என்று நண்பனை அணைத்துக் கொண்டு கூற,


“தேங்ஸ்லே” என்று புன்னகைத்தான். நண்பனிடம் பேசியதும், அவன் ஆறுதலைப் பெற்றதும் அப்போதைய பொழுதை வலியின்றி கடக்கப் போதுமானதாய் இருந்தது அவனுக்கு.


“காதலு ரொம்ப வித்தியாசமானதுல மாப்பு?” என்று வடிவேல் கேட்க,


சமீபமாய் காதலில் திழைக்கும் வளவனும் மந்தகாசப் புன்னகை ஒன்றை உதிர்த்தான்.


“ஓந்தங்கச்சிய எப்புடித்தேம் புடிச்சுப்போச்சுனு பலநாளு ரோசிச்சுருக்கேம்லே” என்று வடிவேல் கூற,


“ஏன்டா இவகிட்ட வந்து மாட்டினோமுனு தான? அந்த சண்டக்கோழியக் கட்டப் போறவேம் அப்புடித்தேம் நெனப்பான்னு அடிக்கடி தீபியக்காட்ட சொல்லுவன்லே” என்று வளவன் சிரித்தான்.


“சவட்டியெடுக்கப்போறேம் ஒன்னய” என்று கை ஓங்கிய வடிவேல், “என் லச்சுவப் பாத்தா ஒனக்கு சண்டக்கோழி கணக்காருக்காக்கும்?” என்று கேட்க,


அழகாய் கன்னங்கள் குழைய புன்னகைத்த வளவன், “இல்லியா பின்ன?” என்று கேட்டான்.


“இல்லங்கேம்லே” என்றவன், மரத்தில் சாய்ந்து அமர்ந்து, வானைப் பார்த்தபடி, “என் லச்சு தங்கம்லே. படபடனு பேசுமே தவிர மனசுல ஒன்னுமே வச்சுகிடாதுலே. பட்டாசு கணக்கா. படபடனுதேம் வெடிக்கும். வெடிச்சு முடிஞ்சுட்டா திரும்ப அதுக்கு மறுக்கா வெடிக்காது. தேவையில்லாமலாம் ஆருகூடயும் ஒடக்கிழுக்காது. ஆனா வர்ற ஒடக்க ஒருகையு பாக்காம விடாது” என்று கூறி புன்னகைக்க,


“ஆஹாங்?” என்று கேட்டு கண்கள் சுருங்க புன்னகைத்தான்.


“ஒருக்கா அது ஸ்கூல் படிக்கயிலனு நெனக்கேம்லே. டப்பாவ மறந்து வச்சுட்டுப் போயிடுச்சுனு அத்தே எங்கிட்டக் கொடுத்துவிட்டாவ” என்று வடிவேல் கூற,


“பாரு அம்மாகூட ஒங்கக் காதலுக்கு ஒதவிருக்காவ” என்று வளவன் அட்டகாசமாய் சிரித்தான்.


அதில் புன்னகைத்துக் கொண்டவன், “அங்கன பஸ் ஸ்டான்டுல ஒரு பயகூட கத்திட்டு இருந்துச்சு. என்னமோ ஏதோனு பதறிகிட்டுப் போனியேம்” என்றவனிடம் இன்றும் அந்நிமிடம் உணர்ந்த பதட்டம் பிரதிபலித்தது.


“ம்ம்..” என்று வளவன் கன்னத்தில் கரம் வைத்து, அவனைப் பார்த்து ம்ம் கொட்ட,


“பாத்தா வகுப்புல ஏதோ ஒடக்குல டெஸ்டு பேப்பர கிழிச்சுபுட்டியான்னு வஞ்சுட்டுருந்துருக்கு” என்று பெருமூச்சு விட்டான்.


“எதுக்குத்தா ரோட்டுல வச்சு ஒடக்குனு கேட்டேம். நானா போலியே அவேம்தான் வாத்தியாருட்ட அடிவாங்கிக்குடுத்துட்டேம்னு வம்புக்கு வந்தியாம். எம்மேல தப்பிலாதபடிக்கு ஒடக்கிழுத்தா சும்மாருப்பனா? அடுத்த மொற வரட்டும் மண்டைய பொழக்கேம்னு சொல்லிட்டா” என்று வடிவேல் நெஞ்சில் கைவைத்துக் கொண்டு, “ஏட்டி எதுக்கு இம்புட்டு வரத்து வார. வகுப்புல கேட்டா ஆத்தா அப்பனக்கூட்டு வுட்டுட போறாவுன்னா, ஏங்கூப்பிட்டா நீய எனக்காவ வந்து பேசமாட்டீயளோனு கேட்டுப்டா” என்க,


“பொறவு?” என்று வளவன் சுவாரஸ்யமாய் கேட்டான்.


“பொறவு என்ன? எனக்குத்தேம் வெறயலாபோச்சு. சொல்லுங்கனு மெரட்டவும் வருவேம் வருவேம்த்தா. அதுக்குனுலாம் மண்டைய பொழக்காது பள்ளிக்குப் போய் சேறுனு ஓட்டமா ஓடி வந்துட்டியேம்” என்று வடிவேல் கூற,


கைகளைத் தட்டிக் கொண்டு வளவன் வெடித்து சிரித்தான்.


“நீயுதாம்லே பயந்தாரி. எந்தங்கச்சிப்பாரு சிங்கப்பொண்ணாருக்குது” என்று வளவன் சிரிப்பினூடே கூற,


“ஒருத்தவக இப்புடி ஒருத்தவக அப்புடினு இருந்தாதாம்லே நல்லாருக்கும். இந்தா தங்கப்புள்ள வெறயலாருக்குது. நீயு சிலிர்த்துகிட்டு போவலியா? அப்புடித்தேம்” என்று உணர்ந்து கூறினான்.


அப்பேச்சுவார்த்தையால் மனதிற்குக் கொஞ்சம் இதமாய் இருக்க, இருவரும் அன்றைய வேலையில் கவணம் வைத்து, வேலையைப் பார்த்தனர்.


அங்கு வீட்டில் தெய்வநாயகியுடன் அமர்ந்திருந்த திரிபுரா, “எங்க இந்தூட்டு மருமவளுக ஒருத்தியயும் காணல?” என்று கேட்க,


“கார்த்தி விக்ரமோட மில்லுக்கு போயிருக்கா. இவ வேலைக்குப் போயிருக்கா” என்று கீரையை ஆய்ந்தபடி கூறினாள்.


“ம்ம்.. என்னமா? ஓம் மவேனோட ஒத்து வாழுறாளா?” என்று திரிபுரா சந்தேகமாய் கேட்க,


“ம்ம் ம்ம்.. வாழ ஆரமிச்சுட்டாவடி. எனக்கு அதுவே கொஞ்சம் திருப்தியாதேம் இருக்குது. அவேன நல்லா வச்சுகிட்டா சரிதேம். நம்மூட்டுப் புள்ளைய சொவமா பாத்துகிடனும்ல?” என்று கூறினார்.


“அவேன நல்லா வச்சுகிட்டா சரிதேம் ம்மா” என்றவள், “அவிய வீட்டுலருந்து சீரு செனத்திலாம் எப்புடி வந்துச்சுனு கணக்குப் பாத்தியா?” என்று ரகசியம் போல் கேட்க,


“கணக்குலாம் பாக்கலட்டி. ஆனா செய்யுறேன்னு சொன்னதயெல்லாம் சரியாவே செஞ்சுபுட்டாவ. கூடவேதேம் செஞ்சாவனு நெனக்கேம். ஆட்டும் போ. அவ வந்துதேம் இந்தூடு நொறயனுமாக்கும் எனக்கு? அதெல்லாம் ஏம் வீட்டுக்காரரு காலத்துலயே நெறஞ்சு போச்சு. எம்புள்ளைய அதுக்கும் மேல நெறச்சுட்டானுவ” என்று கூறினார்.


“அதுவும் சரிதேம்மா” என்றவள், “விருந்துலாம் வச்சாவளா?” என்று திரிபுரா கேட்க,


“அதுதேம் வெக்கலட்டி இன்னும்” என்று பெரும் அதிருப்தியோடு கூறினார்.


“ஏவாம்?” என்று திரிபுரா அவசரமாய் கேட்க,


“என்னவோ அவிய பக்கட்டு தூரத்து சொந்தத்துல துட்டியாம். மூனு வாரம் நாலு வாரம் போவவிட்டு செனத்தியா வைக்கோமுன்னாவ. துட்டிய வச்சுட்டு ஆக்கிப் போட நம்ம புள்ளைக்கென்ன போக்கிடமா இல்ல? அதேம் ஒரு மாசங்கூட போவட்டும்முனுட்டேம்” என்று கூறினார்.


“அதுசரி.. நல்லாத்தெரியுமா? மூத்த மருமவேனுக்கு நேரங்கூடி வரலனு வெக்காம இருக்கப்போறாவ” என்று திரிபுரா கூற,


அப்போதே அந்த கோணத்தில் தெய்வாவும் யோசித்தார்.


“என்னமா யோசிக்க?” என்று திரிபுரா கேட்க,


“இல்லட்டி.. மூனு வாரம் போவவும் வைக்கேன்னு யோசனையா சொன்னாவ. பொறவு நானே ஒரு மாசங்கவும் வெரசாவே சரினுட்டாவ. உங்கப்பாருட்டதேம் பேசினாவ. நானு என்ன பேசினாவனு கேட்டேம். மூனு வாரமின்னா அந்த தம்பிக்கும் நேரம்னு என்னமோ சொல்ல வந்துட்டு சுதாரிப்பா நிறுத்திகிட்டாவ. அப்பத ஏதோ வேல வரவும் நானும் பொறவு கேட்டுப்பம்னு போயிட்டியேன். இப்பத நீயு கேக்கவுந்தேம் எனக்கு இது நெனவு வருது” என்று தனது யூகங்களை யோசித்தபடியே கூறினார்.


“அதான பாத்தேம். காரண காரியமில்லாது செய்வாவலா? நம்மூட்டு புள்ளைக்கு ஆக்கிப் போட அந்தத் தம்பிக்கு ஏன் நேரங்கூடனுமுங்கேம்? அவிய வீட்டு வெசேஷமுனா நம்ம புள்ளைட்ட கேப்பாவலா? என்னவோமா. இந்த வீட்டுல கட்டிகொடுக்கவே அதேம் அம்புட்டு யோசனையா சொன்னேம். நம்மூட்டு பையலுக்கு மருவாதியிருக்குதா பாரு. ஒருவா சோறுபோட எம்புட்டு யோசிக்காவ? இதுல அந்தத் தம்பியோட ஆலோசன வேற” என்று திரிபுரா கூற,


தெய்வாவின் முகமே வாடிப்போனது.


“என்னம்மா?” என்று திரிபுரா அன்னையை நெருங்கிப் பரிவாய் கேட்க,


“எம்மூட்டு புள்ளைக்கு நல்ல மருவாதியோட, நல்லவெதமா வாழ்க்கைய கொடுக்கத்தேம் ரோசிச்சேம். இப்பத அதுவே அவேன என்னவுட்டு தள்ளி கூட்டிட்டு போயிடுச்சு போல. சரியான சொல்லு தாங்கா செல்லகுமாரியாருக்காடி இவ. ஒன்னு சொல்லிட்டா யாரையாது சண்டைக்குக் கூட்டிட்டு வாராமா. என்னத்த வளத்தாவியளோ போ. இவள பேசினா அவேனும் எங்கிட்ட வந்து சண்டைக்குல்ல நிக்காம். நானும் அவோள தாங்கனும்முனில்ல எதிர்ப்பாக்குறியான் ஓன் தம்பியும். வந்த ரெண்டு வாரத்துல நல்லா ஆட்டிவச்சுருக்காமா” என்று குரல் கமர குறை பாடினார்.


அவரைப் பொருத்தவரையில் அவர் சரியாகத்தான் செயல்படுகின்றார், சங்கமித்ரா தான் சரியில்லை என்ற எண்ணம் ஆரம்பத்திலிருந்தே பதிந்து போனது.


சங்கமித்ராவை பிடித்தமின்மையின் போர்வையிலேயே பார்த்து வந்த திரிபுராவுக்கும் அவளது நற்குணங்களை நோக்கத் தோன்றவேயில்லை. அவளது குறைகள் மட்டுமே கண்களுக்கு தெளிவாய் விளங்க, அதைகுறித்தே பேசிப் பேசி அன்னையிடமும் அவள்மீதான அதிருப்தியை வளர்த்துக் கொண்டிருந்தாள்.


சரி தவறு என்பதையெல்லாம் கடந்த நிலையில், தான், தனது எண்ணம் என்பதிலேயே அந்த இரண்டு பெண்களும் இருந்தனர். அது எத்தனை தூரம் அந்த குடும்பத்தின் மனநிலையை பாதிக்கும் என்று இருவருமே யோசிக்கத் தவறிப் போனதுதான் விதியின் ஆட்டம்!


“நீவுடுமா. நாம இருக்கயில தம்பிக்கான மருவாதிய விட்டுக்குடுத்துப் புடுவமா? அதெல்லாம் ஒன்னும் ஆவாது” என்று அன்னையை சரிசெய்து

விட்டுத் திரிபுரா செல்ல, மகளின் யோசனையிலேயே இருந்தவர், அன்று இரவு தன்னை வந்தடைந்த செய்தில் பெரும் ஆட்டம் ஒன்றை ஆடியிருந்தார்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02