திருப்பம்-43
திருப்பம்-43
மாலை நேரம். அமைதியான அந்த பூங்காவில் காதலர்களின் வரவு சற்றே பலமாகத்தான் இருந்தது.
அந்த கூட்டத்துடன் கூட்டமாய் கல் இருக்கையில் அருகருகே அமர்ந்திருந்த தனலட்சுமி மற்றும் வடிவேலுவிற்கு எப்படித் துவங்குவதென்று புரியவில்லை.
ஆசைதீர காதலித்தவனுக்கு, அவன் மீதும், அவனது தாய் மீது அவள் காரணமில்லாமல் காட்டிய அதிருப்தியைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
அவளை மணந்து கொண்டு, காலமெல்லாம் காதலோடு கரைந்துபோக ஆசை கொண்டவனுக்கு, திருமணமே வேண்டாம் போல என்பதைப் போல் அவள் பேசியதை அத்தனை சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியாததால், அப்போதையத் தருணத்தில் கோவம் வரப்பெற்றவனாகிப்போனதென்னவோ சத்தியம் தான்.
ஆனால் அந்தக் கோபமெல்லாம், அவள் மீதான காதலில் கரைந்துபோனதுதான் அழகே!
அவள் அழைத்த அழைப்புகளை ஏற்க முடியாது கோபம் கொண்டவன், காலை கண்ணீர் வழிய, குரல் உடைய அவள் அனுப்பிய ஒற்றைக் குரல் பதிவில் கோபமெல்லாம் மறந்து, துறந்து போனான் என்றாலும் மிகையாகாது.
'கோவபட்டு கத்திபுட்டமே. இப்புடி இந்த புள்ளைய அழவுட்டுபுட்டமே' என்று மனதோடு வருந்திக் கொண்டே அவனிருக்க,
'அவியள கோவபடுத்துறபடிக்கு பேசிபுட்டமே. அவியள கஸ்டபடுத்திபுட்டமே' என்று அவளிருந்தாள்.
செய்தத் தவறை ஒத்துக் கொள்வதும், தவறிழைக்காமல் விட்டுக்கொடுப்பதும் அழகெனில், அது கள்ளமில்லா காதலில் குழைந்து வெளிப்படுவது பேரழகே!
அந்த அழகையும் பேரழகையும் தாங்கித்தான் அந்த ஜோடிகள் அமர்ந்திருந்தனர்.
“மன்னிச்சுபுடு லட்சு”
“மன்னிச்சுபுடுங்கங்க” என்று இருவரின் குரலும் ஒரே நேரத்தில், ஒரே ராகத்தில் ஒலித்து, அழகிய அலாபனையாய் அவர்கள் காதலை இசைத்தது.
அந்த இன்னிசையின் இனிமையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் விழிகளில் வேதனையின் சாயல் மறைந்து, இதழ்களில் புன்னகைப் பூப்பூத்தது.
“ரோசிக்காம போசிபுட்டேங்க. தப்புதேம். இனிமே பேசயில பாத்து போசுதேம். ஒங்கள வருத்தப்பட வைக்காதபடிக்கு நடந்துக்கேம்” என்று அவள் தழைந்துக் கூற,
அதில் மனம் குளிர்ந்து, அவள் தன்மீது கொண்ட காதலால் இறங்கி வந்ததில் கர்வம் கொண்டவன், அந்த காதலுக்கு செய்யும் மரியாதையாய், “நீ தெரியாமதேம் பேசினனு தெரிஞ்சும் கோவத்துல உங்கிட்ட பேசாதிருந்துட்டேம் லட்சு. நானும் அதுக்கு மன்னிப்புக்கேட்டுக்கேம். இனி என்ன ஒடக்காருந்தாலும் மன்னிப்புக் கேக்க வரயில அதுக்கான மருவாதிய குடுக்கேம்” என்று கூறினான்.
அதில் பெண்ணவளின் உள்ளம், அவன்மீது தான் கொண்ட காதல் தான் எத்தனை உரித்தானதென்ற பெருமையில் நெகிழ்ந்து போனது.
அவர்களது சண்டையும் வெகு சுலபமாய் கரைந்துபோனது.
“இந்த விட்டுக்கொடுக்க பக்குவமும், ஒத்துக்குடுற பக்குவமும் நமக்கு இருக்க வரையில் நமக்கு சங்கடமுனு ஒன்னு இல்லங்க” என்று மனம் நிறையக் கூறியவள், தயக்கமாய் சுற்றி முற்றிப் பார்த்துக் கொண்டு அவன் தோள் சாய, அதில் உள்ளுக்குள் சில்லென்ற உணர்வோடு அவளைத் திரும்பிப் பார்த்தான்.
சிறு தயக்கத்துடன் அவள் தலைகோதியவன், “பொதுவெளியில இப்புடிலாம் சாஞ்சுக்காத லட்சு. ஆரும் பாத்து உங்கப்பாருட்ட சொல்லிடப்போறாவ” என்று கூற,
அவனை முறைத்துக் கொண்டே நிமிர்ந்தவள், “நல்ல வார்த்த வராதாயா?” என்றாள்.
அதில் வாய்விட்டு சிரித்தவன், “சரியான சீனிப்பட்டாசுடி” என்க,
முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டவள் சிலநிமிட இடைவெளிக்குப் பின், “என்னய எப்ப கட்டிக்கப் போறீய?” என்று ஆசையாய் கேட்டாள்.
அவள் முகத்தில் கொட்டிக் கிடக்கும் நாண முத்துக்களில் கோர்க்கப்பட்ட ஆசைகளைக் கண்டு, அவனுக்கு மனம் பிசைந்தது.
“போவட்டும் புள்ள. ரெண்டு மூனு மாசமாவட்டுமே. இப்பத்தான அவேனுக்கு முடிச்சுருக்காவ” என்று அவன் கூற,
“அண்ணேன் கல்யாணத்துக்கு முன்னுக்க, அவேனுக்கு முடியட்டும்முன்னீய. இப்பத கொஞ்சம் போவட்டும்முங்கீய. எப்பத்தேன் கட்டிக்கப்போறீய? அத்த ஒங்கள சும்மாவா விடுறாவ? இம்புட்டு வயசாயிட்டுனு கேக்கமாட்டாவளா?” என்று ஆயாசமாய் கேட்டாள்.
அவனுக்கு அவளைப் பார்க்கவே பாவமாய் இருந்தது.
“எங்கிட்ட என்னமோ மறைக்கீயனு நல்லா தெரியுது. அண்ணேன்டயோ, இல்ல அத்தட்டயோ கூட நேருல போயி கேட்டுகிட எனக்கு பத்து நிமிசமாவாது. ஆனாலும் நீங்களா சொல்லுவீயனுதேம் அமைதியாருக்கேம். ரொம்ப காக்க வைக்காதீய” என்று கூறியவள் குரலில் துளியும் கோபமில்லை. வருத்தம் மட்டுமே!
அதில் வெகுவாய் சோர்ந்துபோனவன் முகம் முற்றுமாய் வாடிபோனது.
அதை பொறுக்க இயலாது, “சரி வுடுங்க. போறவு சொல்லுவ. ஒன்னுமில்ல” என்றவள், “நானு பீ.எச்.டீ பண்ற காலேஜுலயே எங்க கோர்ஸுக்கு டீச்சராவ ஒரு வேகென்ஸி வாருது. நானே அப்லை பண்ணிகிட்டு வேல பாத்துட்டே சைடுல இதப் பண்ணலாமுனு இருக்கேம்” என்று கூற,
அவளை அதிர்வாய் பார்த்தவன், “ஏன் திடீர்னு இந்த முடிவு?” என்று கேட்டான்.
“அதேம் சொல்றேம்லங்க? அங்கன வேலைக்கு ஆளு தேடுறாவ. அதேம் நானே கேட்டுருக்கேம். எனக்கும் ஒரு வேல பாத்தபடிக்கு இருக்குமுல?” என்று அவள் கேட்க, அவளை ஆராய்ச்சியாய் பார்த்தான்.
நிச்சயம் நண்பன் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. அவளும் தன்னை விடுத்து பிறரிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ளப் போவதில்லை. இது தற்செயலாக நடப்பதே என்று அவனுக்குப் புரிய,
“ஒனக்கு எது சரினு படுதோ செய்யு லட்சு” என்றான்.
“எனக்கு இப்பத இறுக்கிக் கட்டிக்கனுமுனு கூடத்தேம் படுது. செஞ்சுபுட முடியுமா?” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு அவள் முனகியபோதும் கூட அவனுக்கு தெளிவாகவே கேட்டது.
அதில் உடல் சிலிர்க்கப்பெற்றவன், “ரொம்ப வருஷமா கட்டுபாடா இருக்கேம் புள்ள. என்னமாது சொல்லி உசுப்பாது கெளம்பு” என்று எழ,
“சரியான சாமியாரு” என்றபடி தானும் எழுந்தாள்.
அவள் வீட்டை அடையும் நேரம் தானும் தனது வண்டியில் வந்து அவள் வீட்டை அடைந்தவன், வண்டியை நிறுத்திவிட்டு வர, தனலட்சுமி உள்ளே தனது வாகனத்தை நிறுத்தி பூட்டிவிட்டுத் திரும்பினாள்.
வீட்டிற்குள்ளும் வெளியேவும் எட்டிப்பார்த்தவன், முல்லைப்பூப் பந்தலுக்குக் கீழ் வண்டியை நிறுத்திவிட்டு நிற்பவளை நெருங்கி, இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.
பெண்ணவள் அவனது செயலில் அதிர்ந்து நிற்க, “சாமியாரா இல்லயானு கல்யாணத்துக்கு பொறவு காட்டுதேம் பாரு” என்று அவள் காதோரம் மூச்சுக்காற்று உரசக் கூறிவிட்டுச் சென்றான்.
அவன் விட்டுச் சென்ற இடத்திலேயே, அவன் வாசத்துடன் தேங்கி நின்றவளுக்கு உடல் சிலிர்த்து உள்ளம் பூரித்தது. அப்படியொரு உவகையை உணர்ந்தவளுக்கு நாணப்புன்னகையும் தோன்ற, ‘அச்சோ’ என்ற சிணுங்கலுடன் உள்ளே சென்றாள்.
உள்ளே கூடத்தில் ஆண்கள் அனைவரும் அமர்ந்திருக்க, உடன் கார்த்திகாவும் தெய்வநாயகியும் தேநீருடன் வந்து அமர்ந்து கொண்டனர்.
வேலை முடித்து உள் நுழைந்த சங்கமித்ராவைப் பார்த்ததும் நினைவு கொண்டோனாய், “ஏ மித்ரா. ஒங்கக்காக்கு வளைகாப்புக்கு தேதி குறிச்சுருக்காவளே. சொல்லிட்டாவளா?” என்று வளவன் உற்றாகமாய் கேட்க,
“ம்ம் அத்தான் ஃபோன் போட்டாங்கங்க” என்று மிகவும் உற்றாகமாய் கூறினாள்.
“ஏ சூப்பரு. அடுத்தடுத்துக்கு வரிசையா விசேஷமாதேம் வருது” என்று கார்த்திகா சந்தோஷமாய் கூற,
“சம்மந்தி சொன்னாவ. மொறையா வந்து அழைக்கோமுனு” என்று சுயம்புலிங்கமும் கூறினார்.
தெய்வநாயகிக்கு அத்தனை ஆத்திரமாகவும் கோபமாகவும் வந்தது. அதுவும் தனது மகனுக்கு இன்னும் மறுவீட்டு விருந்து வைக்காத நிலையில், காரணம் சொல்லி தட்டிக்கழித்துவிட்டு, மூத்த மருமகன் வீட்டு விசேஷத்தை மட்டும் நடத்துகின்றனரா? என்று ஆத்திரம் கொண்டவர், மூன்றாம் வாரமே வைப்பதாகச் சொன்னவர்களை ‘ஒருமாதம் போகட்டும்’ என்று மறுத்ததே தான் தான் என்பதை வசதியாக மறந்துப்போனார்.
ஆத்திரத்துடன் அனைவரையும் முறைத்தவர் மருமகளைத் தீயாய் முறைத்தபடி, “இஞ்சாரு.. உங்கக்காவூட்டு விசேஷத்துக்கு நீயு போவனுமுனா போ. இந்தூட்டுலருந்து வெக்கங்கெட்டுப்போயி ஆரும் வரமாட்டாவ” என்று கத்த,
சம்மந்தமே இல்லாமல் இப்போது எதற்கு இந்த கோபம் என்று புரியாமல் அனைவரும் அதிர்ந்து போயினர்.
“தெய்வா என்ன பேசுறவ?” என்று சுயம்புலிங்கம் அதட்டலாய் கேட்க,
“எல்லாம் என்னயவே வையுங்க. இந்தா நிக்காளே.. வந்த கையோட என்னைய முச்சந்தில நிறுத்திபுட்டாள்ல? அதேம் எம்பேச்சுக்கு மருவாதியில்லாது போச்சு” என்று கத்தினார்.
அவர் குரலில் தெரிந்த அதீத கோபத்திலும் அதட்டலிலும், காரணம் புரியாமல் அதிர்ந்து நின்ற சங்கமித்ரா கண்களில் மலுக்கென்று நீர் கோர்த்துக் கொள்ள, “அம்மா என்னத்துக்கு இப்பத அவோள அறுப்புதீய?” என்று வளவன் கண்டிப்பாய் கேட்டான்.
“நல்லாருக்குடா. என்ன ஏன்னு கேக்காத எம்புள்ளைய கூட முடிஞ்சுகிட்டா” என்று குறைபட்டவர், “இஞ்சாருடி.. உன்னைய போவாதங்க மாட்டேம். ஆனா இந்தூட்டுலருந்து யாரும் வரமாட்டாவ. போயி சொல்லு உங்கப்பாட்ட. மறுவீட்டு செஞ்ச பாடில்ல இன்னும். மூத்த மருமவேன மட்டும் தூக்கி நிறுத்துறாவ. எம்புள்ளைக்கு மருவாதியில்லாது போவுமுனு இதுக்குத்தான தலபாடா அடிச்சுகிட்டேம். சீமையில இல்லாத பொண்ணாட்டம் இவளத்தேம் கட்டுவேன்னு வந்து நின்னியான் பாரு. அவேன சொல்லி என்னத்த செஞ்சி” என்றவர் அடுத்து ஏதும் வார்த்தைகளை விட்டுவிடுவாரோ? என்ற பயத்திலும் கோபத்தில் கையிலிருந்த குவளையைத் தூக்கி வீசிவிட்டு எழுந்தான் வளவன்.
உள்ளே குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த தனலட்சுமி கூட, சப்தம் கேட்டு பதறியடித்துக் கொண்டு ஓடிவர, “சும்மா அவளயே ஏம்மா கரிச்சு கொட்டுதீய? அவோ உங்களுக்கு என்னத்த செஞ்சுபுட்டாங்கேம்?” என்று கர்ஜனையாய் கேட்டான்.
மகனின் அதட்டலில் பயம் கொண்டபோதும், இதுவும் அவளால் தானே? என்ற எண்ணமே அவரிடம்.
“ஆமாடா. ஒங்களுக்கு விருந்து வைச்சாவளா மொறயா?” என்று அவர் அதட்டலாய் கேட்க,
“தெய்வா. அவோ சொன்னாவதான? ஒனக்கென்ன கோம்பயாட்டி? தூரத்து சொந்தமினாலும் நல்ல பழக்கம் அவோளுக்கு. துட்டிக்கு வருந்திகிட்டிருக்கையில விருந்து வச்சா புள்ளைய வாழ்க்க என்னாவ?” என்று சுயம்புலிங்கம் கத்தினார்.
“ஆமா.. மூனு வாரம் போச்சுதுல? மாசமொன்னு ஆவப்போவுது. நம்ம புள்ளைக்கு செய்யுற மொறைய செய்யக்காணும். அவோ மூத்த புள்ளைய சீராட்டப் போறாவளாம்ல? நாம ஏன் போனுமுங்கேம்?” என்று தெய்வா கத்த,
“அறஞ்சேன்னு வையு. பல்லு கில்லுயெல்லாம் நொருங்கிப் போவும்” என்று பெரியவர் கையை ஓங்கி விட்டார்.
“ஐயா” என்று விக்ரமன் பதறி அவர் கை பிடிக்க, தெய்வா அரண்டே விட்டார்.
நேற்று வந்தவளுக்காக, தன்னையே அடிக்க வருகிறாரா தன் கணவர்? என்று அதற்கும் அவளைத்தான் குறை கூறத் தோன்றியதவருக்கு.
“நீயுதான ஒரு மாசம் போன பொறவு வையுங்கன்ன? இன்னொன்னு தெரியுமா? அவிய எனக்குக் கூப்பிட்டு வைச்சுகிடலாமானு கேட்டுகிட்டு, தனியா ஓம் புள்ளையையும் கூப்பிட்டு பேசிருக்காவ. அவேம் சரினு சொன்ன பொறவுதேம் நாளு பாத்து, ரெண்டு நாளை குறிச்சு ஒங்களுக்கு எந்த தேதி தோதுபடுதுனு பாத்து சொல்லுவ மாப்ள அதுல வச்சுப்பம்னு வேற கேட்டிருக்காவ. அந்த புள்ள வெசேஷத்துக்கு நம்ம புள்ள முன்ன நிக்கோனுமுனு மனசு நெறைக்க ஆசையிருக்கப்போயிதேம் அவிய அம்புட்டு செஞ்சாவ. ஒரு வார்த்த பேசுனதும் குதிக்கீயே. என்ன சொல்லுதோம் ஏது சொல்லுதோம்னு முழுசா கேக்க தோனுதா? அவேனுக்கு அவோ குடுக்க மருவாதிக்கு பஞ்சமில்லட்டி. ஒன்னாலதேம் அதுயில்லாம போயிடுமனு எனக்கு பதறுது. ச்சை” என்று அதிருப்தியும் கோபமுமாய் கூறித், தன் துண்டை உதறிக்கொண்டு சென்றார்.
கணவர் கூறிய செய்தியில் அதிர்ந்துபோன தெய்வநாயகிக்கு தன் மீதான தவறு புரியவே செய்தது. ஆனால் அதை ஏற்கத்தான் முடியவில்லை. மு
றையான தாயின் பாசம் தானே தனக்குத் தோன்றிய கோபத்தின் காரணம் என்று, அவரது செயலைத் தாய் பாசமெனும் போர்வையிலேயே மூட முயற்சித்தார்.
Comments
Post a Comment