திருப்பம்-44
திருப்பம்-44
வீட்டிற்கு வந்து ஒருவாய் நீர் கூட அருந்திடாத நிலையில், ஜீரணிக்க இயலாத வார்த்தைகளைக் கேட்ட சங்கமித்ராவிற்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. கால்கள் எல்லாம் நடுக்கத்தில் தடுமாற, அவள் தள்ளாடுவதைக் கண்டு, “ஏத்தா” என்று பதறி வந்து பிடித்தான் விக்ரமன்.
அவன் பதட்டத்தில் அனைவரும் சங்கமித்ராவை நோக்க, பயத்தில் உடல் நடுநடுங்க நிற்க இயலாமல் விக்ரமனின் கையைப் பிடித்துக் கொண்டு தடுமாறினாள்.
“ஏ மித்ரா” என்று தானும் நெருங்கிவந்த வளவன் அவளை மொத்தமாய் தன்மேல் தாங்கிக் கொள்ள, தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அத்தையைக் கண்டு மேலும் நடுக்கம் கொண்டாள்.
கண்களில் கண்ணீர் மழையாய் பொழிய அவள் பயம் கொள்ள, தெய்வானைக்கே என்னவோ போல் ஆனது.
“ஏத்தா அந்த புள்ளைக்குக் கொஞ்சம் தண்ணி கொண்டா” என்று வடிவேலு சத்தமாய் கூற,
தனலட்சுமி சமையலறைக்குள் ஓடினாள்.
“மித்து” என்று பரிவாய் வளவன் அழைக்க, தனது பயமும் கண்ணீரும் அத்தையை மேலும் தவறாக சித்தரித்து, அவர் கோபத்தை அதிகரிக்குமோ என்று இன்னும் பயந்தாள்.
'அழுது அழுதே மத்தவிய முன்னுக்க என்னைய கெட்டவளாக்கிபுடுதியே' என்று அவர் அடுத்து அதற்கும் ஏதும் பேசுவாரோ என்று பெரும் அச்சமாக இருந்தது அவளுக்கு.
தன்னவனைக் கண்ணீரோடு பார்த்தவள் கெஞ்சுதலாய் விழிக்க, அவளை அமர்த்தித் தன் அன்னை பார்வையிலிருந்து மறைக்கும்படி வந்து நின்றான்.
விக்ரமனும் அவள் புரிந்து அரண் போல் வந்து நிற்கவும், “எ..எனக்கு அழனும்” என்று குரல் தந்தியடிக்க அவள் மெல்லமாய் கூற,
வளவனுக்கு கண்ணீரே வந்துவிட்டது.
அவள் அழுகையைக் கட்டுப்படுத்துவது ஏறி இறங்கும் அவள் தொண்டைக்குழியே பறைசாற்றியது. கேவலை அடக்கிக் கொண்டு இதழ் கடித்தபடி அமர்ந்திருந்தாள்
“வா ரூமுக்கு போலாம்” என்றவன் தனம் கொடுத்தத் தண்ணீரை வாங்கிக் அவளுக்குப் புகட்டிவிட்டு அவளை அறைக்கு அழைத்துச் சென்றான்.
'எனக்கு அழனும்' என்று அவள் குரல் உடையக் கேட்டது விக்ரமனுக்கே அத்தனை வருத்தமாய் இருந்தது. நாளைத் தன்னவளுக்கு இப்படியொரு நிலை வருகையில் தன்னால் தாங்கிக் கொள்ளத் தான் இயலுமா? அவளை இப்படியொரு நிலையில் தன்னால் பார்த்திடத்தான் இயலுமா? என்று யோசிக்கையிலேயே அவன் நெஞ்சம் விம்மியது.
தன் தாயா இப்படியெல்லாம் நடந்துகொள்கின்றார்? என்று அவனுக்கு அதிகம் வருத்தமாகவும் இருந்தது. கேவலைக்கூட வெளியிட பயந்து அவள் நடுங்கியதை நினைக்கையில் இன்னும் வருத்தமாக இருந்தது.
“எங்கம்மானு மனசுக்குள்ள ஒங்களுக்கு பெரிய மருவாதி வச்சிருந்தோம்மா. ஒரு புள்ளைய இம்புட்டு நீங்க அழ வச்சுருக்க வேணாம். நாள எம்பொண்டாட்டிக்கும் இப்புடி ஒரு நெல வருமோனு மனசுக்கு பயந்து வருதுமா. அவளயெல்லாம் இப்புடி பாக்க எனக்கு தெம்பில்லமா” என்று வேதனை பொங்கும் விரக்தியான குரலில் கூறிவிட்டு விக்ரமன் செல்ல,
தெய்வநாயகி விக்கித்து நின்றார்.
தன் வீட்டாரே தன்மீது அதிருப்தி கொள்ளும்படி நடந்துகொண்டோமே என்று மனம் வெதும்பியது தான். ஆனால் அதுவும் கூட அவளால் தான் என்றும் உள்ளூர ஒரு எண்ணம் மின்னிக்கொண்டுதான் இருந்தது.
கார்த்திகா தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு மேலே சென்றுவிட, தனலட்சுமி அன்னையை அதிருப்தியாய் பார்த்தாள்.
“அத்த” என்று பரிவாய் வடிவேலு அழைக்க, தெய்வநாயகி அவனை நோக்கினார்.
“ஒங்களுக்கு அந்த புள்ளைய ஏம்புடிக்கலனு தெரியிலத்தே. ஒங்களுக்கு திட்ட வைக்க உரிமையில்லனு சொல்லலயே. பேசயில நாலு சேதி கேட்டு தெரிஞ்சுட்டு பேசுனீயனா ஒங்க புள்ளைய முன்னுக்க இப்படி வெசனமாவ வேணாமில்ல?” என்று அவர் போக்கிலியே சென்று புத்திமதி கூற முற்பட்டான்.
அவர் என்ன பதிலாற்றுவது என்று புரியாது விழிக்க, “லட்சு.. அத்தேக்கு தண்ணி கிண்ணி கொண்டா” என்று தனத்திடம் கூறினான்.
விருப்பமற்றபோதும், அவன் சொல்லுக்கு அடிபணிந்து அவள் செய்ய, தண்ணீரைக் கொடுத்து அவரை அருந்தச் செய்தவன், “போயி சோலிய பாருவ. ஆனது ஆச்சுது. அந்த புள்ள கீழ வந்த பொறவு கொஞ்சம் எடுத்துப் பேசுவ” என்றுவிட்டு, “வாரேம் புள்ள. பாத்துகிடு” எனச் சென்றான்.
அன்னையைப் பார்த்து நின்ற தனம், “ரோசிச்சுப் பேசுவம்மா. ஒங்களுக்கும் ஒன்னுக்கு மூனு பொம்பள புள்ளைய இருக்காவ” என்று கூற,
மகள் கூற்றில் அதிர்ந்து போய் அவளைப் பார்த்தார்.
அன்னையின் அதிர்வும் பயமும் தாங்கிய விழிகள் வருத்தம் கொடுத்தபோதும்கூட அவரது செயலை தனத்தால் ஏற்க இயலவில்லை. அதை தன் முக அபிநயங்களிலேயே வெளிப்படுத்தியவள் அறைக்குள் சென்றுவிட, யாருமற்றக் கூடத்தில் தனித்து நின்றார்.
அங்கு அறைக்குள் வெடித்து அழுதுக் கொண்டிருந்தாள், சங்கமித்ரா.
அவளால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. தான் மதிப்பும், மரியாதையும், பாசமும் கொண்ட ஒருவரான தனது அத்தான் மீது, அத்தை வளர்த்திருக்கும் அதிருப்தி ஒருபக்கம் அவளை வருத்தியதென்றால், எதுவுமே செய்யாதபோதும் அத்தையின் கோபத்திற்கு ஆளாகி நிற்கின்றோமே என்று மேலும் மனம் வெதும்பியது.
இதுவரையில் தன்னை வெறுக்கும் மக்கள் என்று யாரையும் கண்டு வந்திடாதவளுக்கு, முதன்முறை கிடைக்கும் அதீத வெறுப்பு அத்தனை வலித்தது.
அதுவும் அவர் முன் அழ கூட பயந்து கண்ணீரை அடக்க அவள் பட்ட பாட்டில் தொண்டை வலிப்பதைப்போல் இருந்தது.
“நா.. நான் என்ன பண்ணேன்?” என்று அவள் விசும்பியழ,
அவள் முகத்தை நெஞ்சோடு புதைத்துக் கொண்டவன், “ச்சு.. ஏதும் பெய்யாத. ஒனக்கு பாரம் குறையுற வார அழு. ஒனக்கு வடிக்குற கண்ணீர தொடைக்க நானிருக்கேம்” என்று கூறினான்.
அதில் அவனை இன்னும் இறுக அணைத்துக் கொண்டவள், “வலிக்குது” என்று கூற,
'எனக்கும்தான்டி. ஒன்னய அழவைக்கேனேடி. ஒன்னய இப்படி தவிக்க வைக்கவா கட்டிகிட்டேம்' என்று மனதோடு வருந்தியவனது இறுக மூடிய விழிகளிலிருந்து கண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
தன் மனபாரம் தீரும்வரை அழுது ஓய்ந்தவள், மூச்சு வாங்க அவன் மார்பில் சாய்ந்தாள்.
சோர்வில் கண்கள் சோர்ந்து தளர்ந்தன.
அவள் முகத்தைத் தன் கைகளில் அடக்கிடவன் அவள் இதழில் புதைய, கண்களை இதமாய் மூடிக் கொண்டு அதை ஏற்றாள்.
அவளை விடுவித்தவன், “சாரி..” என்று கூறவர, அவன் சற்றுமுன் செய்த செயலை தனதாக்கினாள்.
அவளாய் வைக்கும் முதலடி கொடுத்தத் தித்திப்பை சுவைத்து விலகியவன் அவளை நோக்க, “மித்துக்கு கஷ்டமின்னா திருமால் நெஞ்சுல சாஞ்சு வெடிச்சு அழுதுடுவா. திருமாலுக்கு மனசுக்குள்ள இருக்க குற்ற உணர்ச்சியக்கூட மித்துட்ட சொல்ல முடியலயே. இதுல சாரி வேறயா?” என்று அவனை புரிந்தவளாய் அவள் மொழிந்த சொற்கள், அவனை நூறாய் நொறுக்கி, பாகாய் உருக்கி, இழைத்து மீண்டும் உருவம் கொடுத்தது.
“மி..மித்து” என்றவன் கண்ணீரோடு அவளை அணைத்துக் கொள்ள, தற்போது அவனை ஆற்றுப்படுத்துவது அவள் முறையானது.
“அவங்க பேசினதுக்கு நீங்க என்னங்க பண்ண முடியும்? எதிர்த்து பேச நீங்களே தயாரா இருக்கீங்க. ஆனா எனக்கு அது வேணாமே” என்று அவன் தலைமுடியை அலந்தபடியே கூறியவளை புரியாத பார்வையோடு அவன் நோக்க,
“சண்டை போட்டு இன்னும் இன்னும் விலகிப்போக நான் விரும்பலைங்க. அவங்கக்கிட்ட எனக்காக சண்டைபோடுங்கனு நான் கேட்டா, நீங்க நிச்சயம் போடுவீங்க. ஆனா எனக்கு அது வேணாம். அத்தைக்கு சும்மாவே என்னைப் பிடிக்கலை. இன்னும் இன்னும் விலகிப்போக நான் விரும்பலை. மூனே வாரத்துல பட்டதெல்லாம் அதிகம்தான்னாலும் எனக்கு சண்டை போடனும் போகனும்னு தோனலை. நான் தியாகிலாம் இல்லங்க. ஆனா எனக்கு புடிச்சவங்களுக்காக அவங்க வருந்தாதபடி இருக்க முயற்சிப்பேன். அத்தைகூட சண்டைபோட்டுட்டு வந்துட்டு நீங்க சத்தியமா நிம்மதியாருக்க மாட்டீங்க. யாருக்காருந்தாலும், ஏன் எனக்காருந்தாலும் எவ்வளவு குறையிருந்தாலும் எங்க அம்மாவை புடிக்கும். வெறுக்க முடியாது. என்னை பேசி அத்தை மேல கோவப்பட்டு, அய்யோ நம்ம அம்மா இப்படி இருக்காங்களேனு நீங்க இன்னும் கஷ்டப்படுவீங்க. அந்த கஷ்டத்த உங்களுக்குக் குடுக்க விரும்பலை. ரெண்டாவது எனக்கும் அவங்க வேணும். பாசம் காட்டலைனா கூட, இந்தக் குடும்பத்தை இத்தனை வருஷம் வழிநடத்தின மனுஷி அவங்க. அவங்களை என்னால எல்லாருமே எதிர்த்தா, இன்னும் தான் அவங்கக் கோபம் அதிகமாகும். அந்த வேதனை அவங்களுக்கு வேணாம்னு தான் அமைதியாருக்கேன். சண்டை போட்டுட்டு போக பத்து நிமிஷம் ஆயிடாதுங்க. ஆனா சண்டையால ஏற்படும் மனக்காயம் இருக்கு பாருங்க. அது ஆற பல காலம் கேட்கும். ஒருநாள் நான் அமைதியா போறதே அவங்களுக்கு உறுத்தும். அன்னிக்கு புரிஞ்சுப்பாங்க. பாசமா மாறுவாங்களானு தெரியலை. ஆனா இப்படி திட்டாமவாது இருப்பாங்க. அந்த நாளுக்குக் காத்திருப்போமே?” என்றாள். இத்தனை பேசிய தானே ஒரு காலத்தில் தன் அத்தையை எதிர்த்துப் பேசத்தான் போகின்றோம் என்று தான் அவள் அறிந்திருக்கவில்லை.
கண்களில் கண்ணீர் வழிய அவளைப் பார்த்தவன், “ஏன்டி இம்புட்டு தாங்கிக்குறவ? அம்புட்டுக்கு நான் என்னடி பண்ணேம்?” என்று கேட்க,
திருமணம் முடிவானதிலிருந்து அவளுக்காக அவன் செய்த செயல்கள் நொடியில் அவளுள் இசைமீட்டிச் சென்றது. கடிதம் எழுதியது, இரவு வண்டியில் சென்றது, பூ வாங்கித் தந்தது, கோவிலைச் சுற்றி அழைந்தது என்று வரிசைபடுத்தியவள் இதழ் பூவாய் மலர்ந்தது.
தனது என்னற்ற ஆசைகளை நிறைவேற்றியவன் அவனே. தனக்காக, தன்னிடம் காதல் புரியலாம் என்று கூறிய ஒரே ஒரு வார்த்தைக்காக, அவன் அன்னையிடமே சண்டையிட்டுத் தன் கரம் பற்றியவன் அவனே. தன் பயம் உணர்ந்து தன்னை வழிநடத்துபவன் அவனே. மரியாதையையும் காதலையும் அளவின்றி கொட்டிக் கொடுப்பதைத் தவிர வேறென்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு?
“என்ன செய்யல நீங்க? காதலிச்சிட்டீங்களே? உயிர் வர தீண்டின உங்க காதல் ஒன்னு போதாதா?” என்று அவள் கேட்க,
“மித்ரா” என்று கரைந்தபடி அவள் மடியில் முகம் புதைத்துக் கண்ணீர் வடித்தான்.
கொண்டவன் கண்ணீர் பொறுக்காத கோதையவள், நிலையைத் தன் கையில் எடுத்து, அவனைத் தன்னில் ஆட்படுத்தத் துவங்கினாள்.
முத்தங்களின் மீறல்களில் சத்தங்கள் அடங்கிப்போக, வேதனைகளின் முடிவிழியில், தாபங்களின் தாத்பரியம் உணர்ந்து அதற்கான தடைகள் உடைத்துத் தரணி மறந்து திழைத்தனர்…
மோகத்தின் முடிவில் தன்னை மறந்து உறங்கிப்போன பாவையின் முகம் கண்டவன், அவள் விழிகளில் முத்தமிட்டு அமைதியாய் படுக்க, அறைக்கதவு தட்டப்பட்டது.
அப்போதே மணி இரவு ஒன்பதென்பதைக் கண்டு அடித்துப்பிடித்து எழுந்தவன் வேட்டியை இழுத்துக் கட்டிக்கொண்டு தலைமுடியை அவசரமாய் சரி செய்தபடியே, மெல்லமாய், “வாரேம்” என்று குரல்கொடுத்துவிட்டு கதவைத் திறக்கப்போனான்.
மங்கையவள் மஞ்சத்தில் படுத்திருப்பதைக் கண்டு, ‘ஆத்தீ’ என்று அவளுக்கு முழுதாய் போர்த்திவிட்டவன் கதவைத் திறக்க, கார்த்திகா, “சாப்ட வாங்க கொழுந்தரே” என்றாள்.
“அவோ தூங்கிட்டா மைணி. நீங்க போங்க நான் வாரேம்” என்று படபடப்பாய் கூறிவிட்டு கதவடைத்துக்
கொண்டான்.
தன் மூச்சோடு இணைந்திசைக்கும் உறங்குபவளின் மூச்சுக்காற்றே அவ்வறையில் ஆட்சி புரியும் அரசியாய்.
Comments
Post a Comment