திருப்பம்-45
திருப்பம்-45
மறுநாள் காலை சூரிய ஒளியின் தாக்கத்தால் கண்களை மெல்ல பிரித்த சங்கமித்ரா, தன்முன் குழந்தைபோல் படுத்து உறங்கிக் கொண்டிருப்பவனைப் பார்த்தாள்.
இதழோரம் புன்னகை மலர, அவன் மீசையில் பட்டும் படாமல் கைவிரல் கொண்டு கோலம் போட்டவள், ‘கியூட்டு’ என்று மனதோடு கூறிக் கொண்டாள்.
அப்போதே விடியத் துவங்கியிருந்ததை பறைசாற்றும் மெல்லிய சூரிய ஒளியும், இதமான வானிலையும் அவளை படுக்கையைவிட்டு எழவிடவில்லை. மேலும் கட்டியணைத்துக் கொண்டு உறங்குபவனை விட்டு விலகவும் மனமில்லை.
சில நிமிடங்களில் தூக்கம் கலைந்து எழுந்த திருமாவளவனும், தன்னையே பார்த்தபடி படுத்திருக்கும் மனையாளைக் கண்டு, “சைட் அடிக்கீயளாக்கும்?” என்று கேட்க,
“எம்புருஷன நான் சைட் அடிச்சா என்ன தப்பு?” என்றாள்.
“இஞ்சார்ரா” என்றவன், “என்னட்டி? ஆளே ஒரு தினுசாருக்க? பார்வ பேச்சு செயலுயெல்லாம் பயங்கரமாருக்கு” என்று கேலி செய்ய,
அவன் கேலி புரிந்துவளாய், “பேட் பாய். போய் குளிச்சுக் கிளம்புற வழியைப் பாருங்க” என்று எழுந்து குளியலறைக்குள் ஓடி மறைந்தாள்.
இதமான சிரிப்போடு எழுந்தவனுக்கு மனதில் மீண்டும் கனம் கூடியது. தினம் தினம் ஒரு பிரச்சினை என்று தன்னவள் வாடி வதங்குவதைக் காண சகிக்கவில்லை. இதற்கு என்ன தீர்வைக் கொடுப்பதென்றும் அவனுக்குத் தெரியவுமில்லை. ‘காலத்தின் கையில் எத்தனை நாட்களை ஒப்படைப்பது? அத்தனை நாட்களின் காத்திருப்பிற்குத்தான் பலன் கிடைக்குமா? தான் எத்தனை எடுத்துக்கூறினாலும் தனது அன்னையின் மனம் மாற மறுக்கின்றதே?’ என்று நினைத்து அச்சம் கொண்டவன் மேஜைக்குச் சென்று தாளை எடுத்தான்.
'அன்புள்ள மித்துக்கு,
நலமானு கேக்க முடியலடி. ரொம்ப வெசனமாருக்கு. எனக்கு என்ன செய்யனே தெரியிலடி. ஏந்தாம் அம்மா இப்புடி கோவபடுதாவனு புரியல. ஒன்னய நெதம் அழவைக்கேனா புள்ள? இப்புடிலாம் கேக்கேம்னு எம்முன்னுக்க அழாமருந்துபுடாதடி. ஆயிரந்தான்னாலும் ஒனக்கு அழ எம்மடிதாங்குறபோல, எனக்கு தாங்கவும், தோளு கொடுக்கவும் நீதான இருக்கவ? எப்புடி புள்ள இம்புட்டுக்குப் பொறவும் அமைதியாருக்க? வேற யாருமினா தனிகுடுத்தனமே வச்சா ஆச்சுனு நின்னுருப்பாவோ. நீயி இன்னுமுங்கூட எங்கம்மா மனசு மாறுமினு காத்திருக்க. எனக்கு என்ன சொல்லனே தெரியில மித்ரா. ஒன்னிய நிம்மதியா வச்சுகிட முடியிலயோனு வருத்தமாருக்குதுடி' என்றதோடு முடித்து வைத்தான்.
அவன் மொத்த வலியை விளக்க அந்த சொற்ப வார்த்தைகளே அவனுக்குப் போதுமானதாய் இருந்தது.
மடித்துக்கூட வைக்கத்தோன்றாது அதை அப்படியே வைத்துவிட்டு, பூச்செடிக்குத் தண்ணீர் ஊற்றச் சென்றான்.
குளித்து முடித்து உடைமாற்றி வந்தவள், மேஜையிலிருக்கும் காகிதத்தை வாசித்துவிட்டு அதன் கீழேயே, ‘மித்துக்கு திருமால பிடிக்குமே. நிம்மதிங்குறது எம்மனசை நான் எதுல செலுத்தி, எந்த உணர்வுகள அனுமதிச்சுக்குறேங்குறதுலதான் இருக்கு. நான் அழுவேன்தான். ஆனா அதோட முடிஞ்சுடும். ஏன்னா என் மனசுல என் திருமாலத்தவிர நினைக்க, வேற நினைப்புக்குக்கூட அந்த பொல்லாத மனுஷன் இடமே விட்டு வைக்கல’ என்று எழுதிவிட்டுச் சென்றாள்.
அவள் சென்ற பின் உள்ளே வந்தவன், கடிதத்தில் அவள் தீட்டிய வார்த்தைகளைக் கண்டு அப்படியே கண்களை மூடி அமர்ந்துகொண்டான்.
அவளது ஆழமான காதலை சுவாசித்து, சுகித்து, சுவைக்க அவனுக்கு அந்த பொன்னான நிமிடங்கள் தேவைப்பட, அப்படியே அமைதியாய் அமர்ந்து நேரமெடுத்துக் கொண்டு அவ்வுணர்வை அனுபவித்தான்.
அந்த இனிமையுடன் அந்நாளைக் கடத்தியவன், மாலைநேரம் அவளுடன் அவர்களது இஷ்டமான கோவிலை அடைந்தான்.
ஆம்! அன்று வெள்ளிக்கிழமை. கடந்த நான்கு வாரங்களாய் சந்திக்க இயலாத அந்த பால கிருஷ்ணரைச் சந்திக்க தம்பதியராய் வந்திறங்கினர், சங்கமித்ராவும் திருமாவளவனும்.
“திருட்டுத்தனமா லவ்ஸ் பண்ணிட்டு வந்தது. இப்பத ஜோடியா வாரம்” என்று சின்ன சிரிப்போடு வளவன் கூற,
முகம் மலர புன்னகைத்தவள், “போன வாரமே போகனும்னு இருந்தேன். ஆனா உங்களுக்கு வேலையிருந்தது. கல்யாணத்துக்கு பிறகு முதல் முறை வரோம். உங்களோடவே வருவோம்னு விட்டுட்டேன்” என்று கூறினாள்.
அதில் புன்னகைத்துக் கொண்டவன் அவளுடன் நடக்க, வாசலில் கடையிலிருந்து அர்ச்சனைக்குத் தேவையான பொருட்களை எப்போதும் போல் வாங்கினாள், பெண்.
அவளைப் பார்த்து புன்னகைத்த பெரியவர், “கலியாணம் ஆச்சுதா தாயி?” என்று கேட்க,
“ஆமா தாத்தா” என்று வளவனைத் திரும்பிப் பார்த்தாள்.
தானும் அவனைப் பார்த்தவர், விஷம சிரிப்போடு “சரித்தா. நல்லாருங்க” என்று அர்ச்சனை சாமான்களைக் கொடுத்தார்.
அனைத்தையும் வாங்கிக்கொண்டு, உள்ளே சென்ற இருவரும் கிருஷ்ணனை தரிசிக்க, மனம் நிறைந்துபோனது இருவருக்கும்.
இதே கோவிலில் சில வாரங்களுக்கு முன் கண்ணீர் கரைபுரண்டு ஓட, அவனை நாடி அவள் நின்ற நிலையென்ன? அவளை வேதனை முள்ளாய் தைத்திடும் மனதோடு பின் தொடர்ந்து, அவள் துயர் தீர்க்க அவன் தவித்த தவிப்பென்ன?
இன்று அந்த ஆழமான தவிப்பிற்கு ஈடு செய்திடும் விதமாய், காதலோடும், நிறைவோடும் வந்து நின்றவர்கள், மனம் நெகிழ்ந்து இறைவனை தரிசித்தனர்.
பூஜை தட்டை வாங்கிச் சென்று மீண்டும் கொண்டு வந்து தந்த ஐயர், “கல்யாணம் ஆயிடுத்தாடாமா?” என்று கேட்டபடி வளவனைக் கண்டு வித்தியாசமான உணர்வைக் காட்டினார். அது அதிர்வாகத்தான் இருக்கக் கூடும் என்று அத்தம்பதியரின் எண்ணம்.
இதே கோவிலில் அவன் அவளைச் சுற்றித் தொடர்வதை கண்டும் காணாதது போல் கடந்தவரல்லவா அவர்? இன்று இருவரும் தம்பதியராய் வந்து நிற்கவும், முதலில் அதிர்ந்தவர் பின் அவர்கள் வாழ்க்கை சிறக்க பிரார்த்தித்துக் கொண்டார்.
“ஆமா சாமி. இவர்தான்” என்று தன் கணவனை அறிமுகம் செய்து வைத்தவள், கண்மூடி வேண்டுதலை வைக்க, தன்னவளின் முகம் கண்டு புன்னகைத்தவன், ‘எப்பவும் கோயிலுக்கு வாரயில அப்ப அப்ப என்னமாது வேண்டிப்பேம். இப்பத இவிய வேண்டுதல நீ நெறவேத்தி குடுனுதேம் வேண்ட தோனுது. மித்ராவ நிம்மதியா வச்சுகிட எனக்கு ஒதவு. எங்கம்மாக்கு அவோள பிடிச்சு போவாட்டியும் போட்டும். அவோள கஸ்டபடுத்தாதபடிக்கி இருந்துகிட வெய்யி’ என்று வேண்டிக் கொண்டு கண் திறந்தான்.
அவன் நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டவள், கரம் நீட்ட, அவள் செயல் புரிந்தவனாய், அவள் உள்ளங்கையிலிருந்த குங்குமத்தை எடுத்து, அவள் நெற்றி வகுட்டில் இட்டான்.
ரம்மியமான சூழலில், அவன் தீட்டிய சிறிதளவு குங்குமம் கூட, அவளுக்கு அளவிட இயலா செல்வத்தைக் கொடுத்தது போல் இருந்தது. அந்த இதத்தை அனுபவித்தபடி இருவரும் வெளியே வர,
“மித்ரா இங்கன வா” என்று அவளைக் கூட்டிக் கொண்டு பூ விற்கும் பாட்டியிடம் வந்தான்.
அவனைப் பார்த்ததுமே, பாட்டி ஏதும் கேட்காமல் கனகாம்பரம் இரண்டு முழம் வெட்டிக் கொடுத்து ஒரு மார்க்கமாய் சிரிக்க, “என்ன ஆத்தா? சிரிப்பா கொடுக்கீய?” என்று கேட்டான்.
“நீயு அந்த புள்ளைய சுத்தி சுத்தி வந்து பூவா வாங்கிக் கொடுக்கயிலேயே கட்டிகிடுவனு நெனச்சேம்லே மக்கா. இந்தா கட்டிகிட்டு சோடி போட்டு வந்துட்டீயல்ல?” என்று பற்கள் தெரிய சிரித்தபடி அவர் கூற,
சங்கமித்ரா நாணம் படர்ந்த புன்னகையுடன் அவனைப் பார்த்தாள்.
அதில் சிரித்துக் கொண்டவன், “ஆமா ஆமா. அம்புட்டு ல்வஸுல்ல? கட்டிகிடாமருந்துடுவேனா?” என்றபடி பூவை வாங்கியவன் அவளிடம் நீட்ட,
“என்னய்யா நீயு? கட்டிக்க முன்னத்தேம் வாங்கி வண்டியில வச்சுட்டு போவ. இப்பதேம் பொஞ்சாதியாச்சுதுல? நீயே வச்சு விடுத்தான? சுத்த வெவரங்கெட்டப் பயலாருக்கியே?” என்று பாட்டி முகவாயைத் தோளில் இடித்துக் கொண்ட வண்ணம் கூறினார்.
சங்கமித்ரா அவர் பேச்சில் பக்கென்று சிரித்துவிட, அவளை புருவம் உயர்த்தி முறைப்பதைப் போல் பார்த்தவன், அவளைத் திருப்பி, கூந்தலில் பூவைச் சூடினான்.
பெண்ணவள் முகம் காட்டும் பூரிப்பின் அழகை, ஒரு பெண்ணாய் உணர்ந்து ரசித்த மூதாட்டி, “நல்லாருப்பீய சாமிகளா” என்று வாழ்த்தி, “கூட இம்முட்டு பூவ வாங்கி வைக்கத்தான?” என்று தன் வியாபார உக்தியையும் இறக்கிவிட,
“வாங்கி வைக்க அவ தலையில எடமில்ல ஆத்தா. ரவைக்கு நெறைக்க நெறைக்க வச்சுட்டு படுத்தா தலவலினு சிணுங்குவா” என்று கூறினான்.
“ஏங்க மல்லிப்பூ கொஞ்சம் வாங்குங்க” என்று சங்கமித்ரா கூற,
“ம்ம்.. பொம்பள புள்ள சூசகமா பேசுது. ஒனக்கு வெவரம் பத்தலியே” என்றபடி, “எம்புட்டுத்தா பூவு வேணும்?” என்று பாட்டியம்மா கேட்டார்.
அவர் பேச்சின் பொருளில் விழிகள் விரித்தவள், பரபரப்பாய், “இல்ல இல்ல” என்றுவிட்டு அவனைப் பார்த்து, “அத்தைக்கும் அக்காவுக்கும் குடுப்போம்” என்று கூற, அவனுக்கு அப்படி சிரிப்பு வந்தது.
சிரமப்பட்டு மீசைக்குள் அதை பூட்டி வைத்தவன், அவள் கேட்டதைப்போல் வீட்டு பெண்மணிகளுக்கும் பூவை வாங்கிக் கொள்ள, “மவராசி புருஷம் வாங்கயில வீட்டு மனுஷிக்கு வேணுமின்னு வாங்கிட்டு போற பாரு. ஓம் மனசுக்கு நல்லாருப்ப” என்று வாழ்த்தியபடி பூவைக் கொடுத்தார்.
அவர் வியாபாரத்தில் இப்படியான பேச்செல்லாம் ஒரு யுக்திதான் என்றாலும் கூட, மனமாரவே கூறினார். அதை உணரப்பெற்ற பெண் புன்னகைக்க, அதை ரசித்துக் கொண்டவன், ‘இது வீட்டுல உள்ளவியளுக்கும் புரிஞ்சா நல்லாருக்கும்' என்று மனதோடு நினைத்துக் கொண்டு புறப்பட்டான்.
அங்கு வீட்டுக் கூடத்தில் சோர்வாய் கண்கள் மூடி தலைசாய்த்து, நீள்விருக்கையில் அமர்ந்திருந்த விக்ரமன் அருகே வந்து அமர்ந்த கார்த்திகா, “ஏங்க” என்க,
மெல்ல கண்களைத் திறந்தான்.
அவனுக்கான தேநீரை நீட்டியவள், “ஏம் மொவமே சரியில்ல?” என்று கேட்க,
தேநீரை வாங்கி தன் முன்னிருக்கும் கண்ணாடி மேஜையில் வைத்தவன், “பாப்பா எங்கனருக்கா?” என்றான்.
“மாமாவும் தனமும் கோயிலுக்குத் தூக்கிட்டு போயிருக்காவ” என்றவள், “என்னாச்சுங்க? மில்லுல ஏதும் ஒடக்கா?” என்று கேட்க,
அவள் கரத்துடன் தன் கரம் கோர்த்துக்கொண்டு அவள் தோளில் தலை சாய்ந்தான்.
விக்ரமனுக்கு கார்த்திகா என்றால் கொள்ளை பிரியம். ஆனால் அதை வெளிக்காட்ட அறியாதவன். பொதுவாகவே அனைவர் மீதும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வான் தான் என்றாலும், அக அன்பை புறத்தில் வெளிக்காட்ட அறியாதவன். அதனாலேயே அவனுடைய நட்பு வட்டம் கூட வெகுவாய் சுருங்கியிருக்கும். வீட்டில் அவனை குறும்பாய் மாற்றியதே கார்த்திகா தான் என்றாலும் மிகையில்லை.
அமைதியாய் காட்டப்படும் பாசம், கண்களுக்குப் புலப்படாமல் போவதாலேயே, அவனுக்கு அன்பு வைக்கத் தெரியாதென்ற பெயரும் உண்டு.
திருமணம் என்று வருகையில், அவன் பயந்ததும் அதை குறித்துதான்.
சிலநேரங்களில் அவனே அப்படியிருப்பதை மாற்றிக்கொள்ள நினைத்ததும் உண்டு. ஆனால் இயல்பை மாற்ற வெகுவாக சிரமப்படவே செய்தான்.
கார்த்திகாவைத் திருமணம் செய்துகொண்டபோதும் கூட, தன்னால் அன்பை வெளிப்படுத்த இயலாமல் போகும் பொழுது, அவளுக்குத் தன்னுடனான வாழ்வு சளிப்புத்தட்டிவிடுமோ? என்று அச்சம் கொண்டதும் உண்டு.
ஆனால் அவன் அச்சங்களுக்கு நேர்மாறாய் அமைந்தது அவன் வாழ்க்கை. பலரால் கண்டுகொள்ளப்படாது கடந்துசென்ற பாதைதனில் புதையுண்டிருந்த பொக்கிஷத்தைக் கண்டெடுத்த அகழ்வாராய்ச்சியாளரைப்போல், பலரால் அறிந்துகொள்ள முடியாத அவனது அமைதியான அன்பின் வெளிப்பாட்டை அவள் புரிந்துகொண்டாள்.
நாலு பேர் மத்தியில், அணைத்தும் முத்தமிட்டும், மானே தேனே என்று பாராட்டியும் புகழ்ந்தும் தான் அன்பை வெளிகாட்ட இயலுமா என்ன? முகம் பார்த்து, அகம் அறிந்து, அதற்கான விருந்தாய், மருந்தாய் தன் செயலில் அமைதியாய் பதில் கொடுத்துவிட்டுச் செல்லும் அவனது இயல்பும், அரிதாய் எப்போதாவது தான் கண்ணீர் சிந்துபோது அதை தாங்க இயலாது கோபமாய் ஒரு அதட்டல் போட்டு, அவள் மனநிலையை மாற்றிவிட்டு, அதில் நிம்மதி கொள்வதும், அவள் ஆசைபடும் பொருட்களை எப்போதாவது வெளியே காணும்போது அவள் கேட்காமல் வாங்கிவந்து அறையில் வைத்திருப்பதுமென்று சின்னச் சின்ன செயல்களில் பீறிட்டு வெளிப்படும் அவனது அலாதியான நேசங்களின் ஆழத்தை அவள் ஒருத்தியே அறிந்திருந்தாள்.
அவள் அறிந்தும் புரிந்தும் நடந்துகொள்வதில் தன்னைப்போல் அவனது அன்பு வெளிப்பட்டு வெளிப்படையான செயல்களில் அவ்வப்போது மிளிர்வதும் கூட அவள்மீதான அவனது நேசத்தின் ஜாலங்களால் தான் என்றால் அந்த நேசத்தை எப்படி வர்ணித்திட?
அதில் அவளுக்கும் அத்தனை கர்வம். எப்போதும் அமைதியாய், வெளிப்படும் அவனது உணர்வுகளுக்குள் இன்று ஏதோ போர் மூண்டிருப்பதே, அவள் கரம் கோர்த்து தோள் சாய்ந்து அவன் அமர்ந்திருப்பதென்று கார்த்திகாவிற்குப் புரிந்தது.
“என்னாச்சுங்க?” என்று மென்மையாய் அவன் தலைகோதியபடி அவள் வினவ,
“ரொம்ப வெசனமாருக்குது கார்த்தி” என்றான்.
“ஏங்க?” என்று பெண்ணவள் கேட்க,
“அம்மா ஏன்டி அந்த புள்ளைய புரிஞ்சுக்கவே மாட்றாவ?” என்று கேட்டான்.
“ஹ்ம்.. என்னமோங்க. உங்கம்மாக்கு ஏந்தாம் அந்த புள்ளய புடிக்குதில்லயோ போங்க. அம்புட்டு தங்கமது. இம்புட்டுக்கு பொறவுங்கூட அத்தைய அனுசரிச்சுல்ல நடக்க பாக்கா” என்று கார்த்திகா வருத்தமாய் கூற,
“அம்மா பேசுற பேச்சுக்கு மத்த புள்ளையனா பொட்டியகட்டிட்டு போயிருக்கும் போலத்தா. இந்த புள்ளையாருக்க கம்மினு இருக்கு. அதுவும் எம்புட்டு காலத்துக்குனு ரோசி” என்றவன், புரியாத பார்வை பார்ப்பவளைக் கண்டு, “ஒன்னய அம்மா இப்புடி வஞ்சாவனா என்னால சும்மாருக்க முடியுமா கார்த்தி?” என்றான்.
“என்ன சொல்ல வாரீயனு புரியுதில்லயே” என்று அவள் கூற,
“இப்புடி அம்மா வைய, அந்த புள்ள அழுவனுருந்தா வளவேன் தனியாதேம் பாத்து குடிபோவாம்” என்று குரல் கமர விக்ரம் கூறினான்.
அவனை அதிர்வாய் பார்த்தவள், “ஏங்க! என்ன பேச்சிது?” என்க,
“ரோசி கார்த்தி. ஒன்னய அம்மா பேச, வுட்டுபுட்டு என்னால கம்முனு இருக்க முடியுமா? ஒரு கட்டத்துல யாரானும் வெடிச்சுபுட மாட்டமா? அப்புடி ஒன்னு நடந்து அவேம் அந்த புள்ளையோட பொட்டிய கட்டிட்டான்னா?” என்று கேட்டான்.
கார்க்திகாவிற்கு அவன் கேள்விக்கு பதில் கூறத் தெரியவில்லை. நியாயமான கேள்விதான்.. ஆனால் அதற்கான பதில்?
Comments
Post a Comment