திருப்பம்-46

 திருப்பம்-46



“அவேம் என்னயபோல இல்ல கார்த்தி. நானுகூட சண்டகிண்டலாம் அப்பைக்கு அப்பை போட்டுபுடுவேம். அவேம் ரொம்ப பாசமாருப்பாம். ரொம்ப அட்டாச்டா இருப்பாம் குடுமத்தோட. அப்படியொரு நெலயில குடுமத்துக்கும், அந்த புள்ளைக்கு நடுவுல அவேம் அல்லாடனுமில்ல? அவேம் இல்லாம நம்மாலதேம் இருந்துகிட முடியுமா சொல்லு?” என்ற விக்ரமன் கண்கள் சிவந்து போக,


“ஏங்க” என்று அவன் கன்னத்தில் கை வைத்தாள். 


அவள் கரத்தின் மேல் தன் கரம் வைத்தவன், “தெனத்துக்கும் அற கதவ தொறந்துகிட்டு வாரயிலயே அவேம் கொரலு கேட்டுபுடும்ல கார்த்தி. அவேம் இந்தூட்டுல இல்லாம போனா.. எ..எப்புடி?” என்று தடுமாற,


“ஷ்ஷ்” என்று அவன் இதழில் விரல் வைத்தாள்.


விக்ரமன் அவளை பரிதாபமாய் நோக்க, 


அவனைப் பரிவாய் பார்த்தவள், “ஏன் நடக்காததயெல்லாம் நெனச்சுகிட்டு வெசனப்படுதீய?” என்று கூறினாள்.


விக்ரம் ஏதோ பேச வர, “ஷ்ஷ்” என்று மீண்டும் அதட்டலாய் கூறி அவனைத் தடுத்தவள், “அப்புடியொன்னு நடந்தா தடுப்பமுனு சொல்ல வாயி வரல. அத்தே செய்யுற அலுசாட்டியமப்புடி. ஆனா அந்த அளவுக்கு முத்தாதுனு நம்புவமே. ரெண்டு மூனு மாசம் போயோ, இல்ல அந்த புள்ள உண்டாயியோ போனா எல்லாந் தனிஞ்சுபுடும்” என்று கூற,


சிறுதலையசைப்புடன் அவள் தோள் சாய்ந்தான்.


அவனது சோகம் தீர்ந்ததாய் தெரியவில்லை அவளுக்கு.


எழுந்து அவன் முன் சென்று நின்றவள் “எல்லாம் சரியாபோவுமுனு சொல்றேம்ல? அதென்ன என்னைய நம்பாது வெசனப்படுதீய?” என்று மிரட்டல் போல் கேட்க,


அவளை இடையோடு கட்டிக் கொண்டவன், “நம்புறேம் தாயி. நம்புறேம்” என்றான்.


அதில் சிரித்துக் கொண்டவளும், அவன் சிகை கோதிவிட,


“ஏம்லே உள்ளார வரலாமா இல்ல அப்படியே வெளிய நிக்கவா?” என்ற வளவனின் அதீத நக்கல் குரல் கேட்டு, கார்த்திகா திடுக்கிட்டு விலகுவதைக் கண்டு,

“ஏங்க சும்மாருங்க” என்று வளவனின் தோளில் லேசாய் அடித்தாள், சங்கமித்ரா.


அதில் சிரித்துக் கொண்டவன், “அன்னிக்கு என்னைய மட்டும் கலாய்ச்சாம். நானாது சமையகூட வாசலுல மறவாதேம் நின்னுட்டுருந்தேம். பய நடூ கூடத்துல படம் ஓட்டிகிட்டிருக்கியான். நான் நளியடிக்கக் கூடாதாக்கும்?” என்று கூற,


கார்த்திகா நாணம் கொண்டு விக்ரமனைப் பார்த்தாள்.


கீழதழைக் கடித்தபடி சிரித்தவன், “ஏம்லே ஒனக்கு வார வேற நேரமே கிடக்கலியாக்கும்?” என்று கேட்க,


“சிவபூஜையில கரடி பூந்துடுச்சுனு சொல்றீங்கங்களோ?” என்று சங்கமித்ராவுமே கேலியில் இறங்கிவிட்டாள்.


“பாத்தீங்களா கொழுந்தரே.. ஒங்க பொண்டாட்டி ஒங்கள கரடிங்குறா” என்று கார்த்திகா கூற,


விழிகள் விரிய தன்னவனைத் திரும்பிப் பார்த்தவள் வேகமாய், ‘இல்லை’ என்பது போல் தலையாட்டினாள்.


அதில் மற்ற மூவரும் சிரித்திட, “ப்ளேட்ட மாத்துறாங்க. நீங்க அவங்கள கேலி பண்ணுங்க” என்று சங்கமித்ரா குறைபடிக்க,


“யாரு என் பாப்பாவ கேலி பண்ணது?” என்று வாசலிலிருந்து குரல் கொடுத்தான், அவிநாஷ்.


“அத்தான்” என்று ஆனந்த அதிர்வோடு அவள் வாசல்படிக்கு ஓடிவர,


“பாப்பா மெல்ல” என்றபடி, சச்சிதானந்தம் மற்றும் தாட்சாயணியுடன் உள்ளே நுழைந்தான், அவிநாஷ்.


விக்ரம் மற்றும் கார்த்திகா மரியாதையுடன் வணக்கம் கூறி, அவர்களை வரவேற்க, கோவிலுக்குச் சென்ற தனலட்சுமி, ஒளிசுடர் மற்றும் சுயம்புலிங்கமும் வந்தனர்.


“பாப்பா எப்பிட்றா இருக்க?” என்று சச்சிதானந்தம் விசாரிக்க, முகம் மலர்ந்த புன்னகையுடன், “எனக்கென்னப்பா குறை? சந்தோஷமா இருக்கேன்” என்று கூறினாள்.


நொடிபொழுது அவ்வீட்டார் அனைவரின் முகமும் கசந்து நிலைபெற்றது, யாரும் கவனியா வண்ணம்.


சுயம்புலிங்கம் சமையலறையிலிருந்துகொண்டே இன்னும் வெளிவராத தன் மனைவி செயலில் வருத்தமுற்று, “அத்தேய வரச்சொல்லுத்தா” என்று கார்த்திகாவிடம் கூற,


அவள் திரும்பி உள்ளே செல்லும் முன், அனைவருக்கும் தேநீருடன் வந்த தெய்வா, “வாங்க சம்மந்தி, வாங்க தம்பி” என்று வரவேற்றார்.


அதில் சுயம்புலிங்கம் கொஞ்சம் நிம்மதி கொள்ள, வந்தவர்கள் புன்னகையாய் அவர் வரவேற்பை ஏற்றனர்.


“கீதாக்கு வளைகாப்புக்கு நாள் குறிச்சிருக்கோம். எல்லாரும் கண்டிப்பா வரனும்” என்று அவிநாஷ் முகம் நிறைந்த புன்னகையுடன் கூற,


சங்கமித்ராவிற்கு முந்தைய நாள் அத்தை கூறியது நினைவு வந்து நெஞ்சம் நடுங்கியது. 


தன் பெற்றோரையும் அத்தானையும் மனம் நோகும்படி ஏதும் பேசி விடுவாரோ? என்று அவள் அஞ்ச,


“எல்லாரும் கண்டிப்பா வாரோம்யா” என்று தெய்வா கூறினார்.


அவ்வீட்டார் அனைவருமே அவரது பேச்சில் அதிர்ந்து தான் போயினர்.


முந்தைய நாள் அவர் செய்த ஆர்ப்பாட்டம் என்ன? தற்போது அவர் பேசும் விதமென்ன? என்று யாராலும் நினைக்காதிருக்க இயலவில்லை.


“அதெல்லாம் எல்லாரும் வந்துடுவோம்யா. நம்மூட்டு புள்ள விசேஷம். வாராதிருப்பமா?” என்று சுயம்புலிங்கம் கூற,


அவிநாஷ் சங்கமித்ராவைப் பார்த்தான்.


முத்து முறல்கள் மின்னி, கண்கள் சுருங்க புன்னகைத்தவள், “எல்லாரும் வரோம் அத்தான்” என்க,


“ரொம்ப சந்தோஷம்டா” என்றான்.


“அண்ணே மொதமொற வாரோமுல்ல? தம்பதியா வார எங்களுக்கு என்ன தரப்போறீய?” என்று திருமாவளவன் வம்பு செய்ய,


“உனக்கென்னடா வேணும்? சொல்லு ஜமாய்ச்சுடுவோம்” என்று அவிநாஷும் புன்னகையுடன் கூறினான்.


“பேச்சு மாறிப்புடக்கூடாது பொறவு. நான் என்னமும் கேப்பேம்” என்று அவன் சிரிக்க,


“வெவகாரமா என்னமோ கேக்க போற போலயே? அண்ணனால குடுக்க முடியுமா?” என்று அவிநாஷ் கேட்டான்.


வாய்விட்டு சிரித்த திருமாவளவன், “அப்புடிலாம் ஏதும் கேட்டுட மாட்டேம். வெசனப்படாதீய” என்று கூற,


அவன் தோள்தட்டி சிரித்துக் கொண்டான்.


“சம்மந்தி, திரிபுரா வீட்லயும், தீபிகா வீட்லயும் எப்ப போய் அழைச்சா எல்லாரும் இருப்பாங்கனு சொன்னீங்கனா அங்கயும் அழைச்சுடுவோம்” என்று தாட்சாயணி கேட்க,


தன் பெண் வீட்டாரைக் கூட நேரில் சென்று அழைக்கும் அவர்கள் செயலில் தெய்வநாயகி அதிர்ந்துதான் போனார். உள்ளுக்குள் ஏதோ போல் அகிப்போனது அவருக்கு. 


மனைவியை ஓரவிழியில் ஒரு பார்வை பார்த்துக் கொண்ட சுயம்புலிங்கம், “எதுக்கு சம்மந்தி அலையுறீய? நாங்க சொல்லிகிடுதோம்” என்று கூற,


“ச்ச அது முறையாருக்காதுங்க பெரியப்பா. நாங்களே போய் அழைச்சிடுறோம்” என்று அவிநாஷ் கூறினான்.


அதில் புன்னகைத்தவர், “ரெண்டேருமே மோந்திக்கு வீட்டுலருப்பாவ. போயி பாருங்க” என்று அவர் கூற,


“சரிங்க சம்மந்தி” என்றனர்.


சிலநிமிடம் பேச்சுகள் தொடர, “சரிடா நாங்கக் கிளம்புறோம்” என்று அவிநாஷ் கூறினான்.


அத்தனை நேரம் பூவாய் மலர்ந்திருந்த சங்கமித்ராவின் முகம், வெண்ணீர் ஊற்றிய அல்லிக்கொடிபோல் ஆனது.


அதைக் கண்ட திருமாவளவன், “அண்ணே சாப்டு போலாந்தான?” என்க,


“இல்லடா இன்னும் நெறயா எடம் போவனும். அவ வேற பேச்சைக் கேட்கவே மாட்றா. தூங்குடினா நான் வரும்வர முழிச்சிருக்கா. என்னமோ வரவர ரொம்ப பயப்படுறா” என்று அவிநாஷ் கூறினான்.


சங்கீதாவைக் காரணமாய் நிறுத்தவும் வளவனுக்கு வற்புறுத்தி கேட்கத் தோன்றவில்லை.


தன் மனையாள் முகத்தை அவன் நோக்க, “பாத்து போங்கத்தான். அக்காவை, அத்தை மாமாவெல்லாம் கேட்டதா சொல்லுங்க” என்றாள்.


அவர்களை அனுப்ப மனமே இல்லை என்றாலும் இருத்திவைக்கும் சூழலும் இல்லையே என்று புரிந்தது.


வாசல் வரை சென்ற திருமாவளவன் மற்றும் சங்கமித்ரா அவர்களை வழியனுப்ப, அவள் தலைகோதிய அவிநாஷ், “எல்லாம் ஓகேயாயிடுச்சா இங்க உனக்கு? எப்புடியிருக்க?” என்று ரகசிய விசாரணை நடத்தினான்.


சச்சிதானந்தத்திடம் பேசிக்கொண்டிருந்த திருமாவளவன் அவர்களை ஒரு பார்வை பார்த்துக் கொண்டான். அவனுக்கு அவிநாஷ் என்ன கேட்டிருப்பான் என்பது அவன் முகபாவத்திலேயே புரிந்தது.


“எனக்கென்னத்தான்? சந்தோஷமா இருக்கேன்” என்று மனம் நிறைந்த புன்னகையுடன் கூறினாள்.


“நிம்மதியாருக்கியா?” என்று அவிநாஷ் அழுத்திக் கேட்க, திருமாவளவனைத் திரும்பிப் பார்த்தாள்.


தன் கண் பார்த்து காரியம் நிகழ்த்தும், இவன் ஒருவனின் நேசத்திற்கு, இந்த வீட்டில் தெய்வாவிடம் வாங்கும் வசவுகள் எல்லாம் தூசுக்குச் சமானம் என்பதை அவள் காதல் கொண்ட மனம் முரசிட்டுக் கூறியதை, அவள் விழிகளும் வெளிச்சம் போட்டன.


“அவரிருக்காருத்தான். எனக்கும், என் சந்தோஷத்துக்கும், என் நிம்மதிக்கும் எந்த குறையும் வர விடமாட்டாரு. அதுலதான அவரோட நிம்மதியும், சந்தோஷமும் அடங்கிருக்கு? அந்த நிம்மதியை பாதுகாக்க என் நிம்மதியையும் நான் பராமரிக்கனும் தானே?” என்று அவனைப் பார்த்தபடியே அவள் கூற,


அவள் பார்வை உணர்ந்து நிமிர்ந்தவனும், மனையாள் விழி வீச்சில் மெல்ல புன்னகைத்தபடி, புருவம் உயர்த்தி இறக்கினான்.


இடவலமாய் தலையசைத்து சிரித்துக் கொண்டவள் அவிநாஷை நோக்க, அவள் கன்னம் தட்டி புன்னகைத்தவன், “எப்பவும் இப்படியே இருங்கடா. நல்லாருப்ப” என்று கூறினான்.


அதில் சிரித்துக் கொண்டவளும், அவர்களுக்கு பத்திரம் கூறி அனுப்பிவைக்க, “என்னட்டி பார்வ அது?” என்று அவர்கள் வாகனம் கண்ணை விட்டு மறைந்த நொடி, அவளைத் தன்னோடு சேர்த்திழுத்துக் கொண்டு கேட்டான்.


அவனது திடீர் செயலில் திடுக்கிட்டவள், “என்ன விளையாட்டிது? விடுங்க” என்க,


“என்ன பார்வடி அது?” என்று பதில் கேள்வி கேட்டான்.


“ஏன் எனக்கு பார்க்க உரிமையில்லயா?” என்று அவள் கேட்க,


“எனக்கு பிடிக்க உரிமையில்லயா?” என்று அவன் கேட்டான்.


“அச்சோ வம்பு பண்றீங்க. வாசல்ல நிக்குறோம்” என்று அவள் நெழிந்தபடி கூற,


“இருட்டிருச்சு. ஆருமில்ல அக்கம் பக்கம்” என்று கூறியவன் அவள் காதோரம் குனிந்து, “முன்ன பின்ன வேணா பாத்து கன்பார்ம் பண்ணிட்டு ஒரு முத்தம் வைய்யேன்” என்றான்.


“ஏத்தம்தான். விடுங்க சொல்றேன்ல? ஆளைக்காணுமேனு தனம் தேடிட்டு வந்துடுவா பிறகு. மானமே போயிடும்” என்று சங்கமித்ரா மன்றாட,


“புதுசா என்ன போவவேண்டிகிடக்கு?” என்று நமட்டு சிரிப்புச் சிரித்தான்.


அதில் அவனை முறைத்தவள், “யாரும் வந்துடப்போறாங்க. இப்ப விடப்போறீங்களா இல்லயா?” என்க,


“சீனிபட்டாசு” என்று அவள் நெற்றி முட்டியவன் அவளை விட்டான்.


‘போதும்டா சாமி’ என்ற முனகலோடு அவள் உள்ளே ஓடிவிட, சிரித்தபடியே அவள் பின்னோடு சென்றான்.


உணவு பொழுது இனிதே முடிந்திட, இரவு தண்ணீர் செம்புடன் அறைக்குத் திரும்பிய தெய்வநாயகியைக் கண்ட சுயம்புலிங்கம், “அவியட்ட சரினு சொல்லுவனு நெனச்சுப்பாக்கலத்தா” என்றார்.


“ஏனாம்?” என்று அவர் கேட்க,


“அதுசரி” என்று துண்டை உதரி அருகேவுள்ள நாற்காலியில் போட்டவர், கட்டிலில் சாய்வாய் அமர்ந்து, “நேத்து ஆரும் போவக்கூடாதுனு நீ ஆடின ஆட்டத்துக்கு அவியள என்னமாது பேசிடுவியோனு அச்சமா போச்சுது எனக்கு” என்று கூறினார்.


“வெவரம் புரியாம நேத்து பேசிபுட்டேம்தேம். திரிபுராட்ட சொன்னப்ப வஞ்சுபுட்டாளே ஒங்க மவ” என்று தெய்வா கூற,


“இதெப்ப?” என்று ஆச்சரியமாய் கேட்டார்.


“காலையில வந்தாள்ல? அப்பத சொன்னியேன். கூரிருக்காமா ஒனக்குனுட்டா. ஏன்டிங்கேன், வைத்து புள்ள வெசேஷத்துக்கு நாலு பேரு வாழ்த்தத்தேம் அழைக்குறது. அதுக்கு போவாதனு அச்சாணியமா போசுதீயே நல்லாருக்கானு கேட்டா. பொறவுதேம் எனக்குமே அந்த வெசேஷமுனு நெனவு வந்துது. அவளோடவே பக்கத்துல கோயிலுக்கு போயி ஒரு வெளக்க போட்டுகிட்டு வந்தேம். அதாம் அவிய கேட்டதும் சரினுட்டேம். அதுமட்டுமில்லாம, வீட்டுக்கு வந்த சம்மந்திக்காரவள சங்கடபடுத்தி அனுப்புறது எம்புருஷனுக்குதேம் மருவாதி கொறவுனு எனக்குந் தெரியும்” என்று தெய்வா நொடித்துக் கொள்ள,


“ம்க்கும்..” என்று குரல் செறுமியவர், “இம்புட்டுக்கு சொல்லுதீய. அந்த புள்ளட்ட ஒரு வார்த்த பேச என்ன? நீயு பாத்து கட்டிவச்ச புள்ளத்தான?” என்று கேட்டார்.


“நானு பாத்தேம்தான். ஆனா கட்டிவைக்கலிங்க. கல்யாணமுனு வந்தா பத்து பொண்ணு பார்க்கத்தான? அதுக்குனு பத்தையுமா கட்டிவைக்கோம்? பொண்ணு பாக்கையில பாத்த பொண்ணாதேம் நெனச்சு அவோள வேணாமுன்னது. ஐயாவும் மகனுமில்ல பிடியா கட்டிவச்சீய? அவளால எம்மருவாதி தோயாத கொறையாதேம் போவுது” என்று தெய்வா அழுத்துக் கொள்ள,


அவரை ஆயாசமாய் பார்த்தவர், “அந்த புள்ள வெகுளிடி” என்றார்.


“அப்புடினு நீங்கதேம் மெச்சுக்கனும்” என்று அவர் கூற,


“ஒனக்கு புரியல தெய்வா. ஆனா ஒருநா பாரு.‌ ஒனக்கு புத்தி சொல்லவே அந்த முருகேசன் என்னமும் நடத்துவியான். அப்பத புரிஞ்சுப்ப” என்றுவிட்டு படுத்துக் கொண்டார்.


படுத்துக் கொண்ட கணவரைப் பார்த்தபடி அவர் கூறியதை அசைபோட்ட தெய்வாவும் உறங்கிப் போனார்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02