திருப்பம்-47

 திருப்பம்-47



காலை வேளை, தன்னுடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மனையாளின் முகம் பார்த்தபடியே படுத்திருந்தான், திருமாவளவன்.


அவிநாஷின் நலவிசாரிப்புகளையும், அதற்கு அவள் கூறிய பதிலையும் கேட்டுத் தெரிந்துகொண்டவனுக்கு மனதில் சொல்லொண்ணா உணர்வு.


மெல்ல எழுந்து மேஜைக்கு வந்தவன், காகிதத்தையும் பேனாவையும் எடுத்தான்.


'அன்புள்ள மித்துக்கு,


அடியே சீனி பட்டாசு. மனசுக்குள்ள ஏன்டி கண்ட நேரத்துல வெடிக்குறவ? உன்னால ஆர அமர எழுந்துட்டுருந்தவேன் அதிகாலக்கு எழுந்து தவிக்கேம். நீயே என்னைய நெறயா லவ்வு பண்ணினா, நானு லவ் பண்ண பொறவு என்னருக்கும் சொல்லு? என்னையவுட நீயு நெறையா காதலிக்க புள்ள. போவப்போவ ஓன் காதலு முன்னுக்க ஏங் காதலு குட்டியாப்போவும் போல. மலையும் பள்ளமுமாதேம் தெரியபோவுது போ.


அம்புட்டுக்கு பொறவும் எப்புட்ரி அண்ணேன்ட ஓன் நிம்மதிக்குக் கொறவில்லங்குற? மிந்தாநேத்து நீயு பயத்துல நடுங்கினதுலாம் கண்ணுக்குள்ளாரயே நிக்கிடி.’ என்றெழுதி நெஞ்சை நீவிக் கொண்டு தொடர்ந்தான்.


'மித்ரா, வீட்டுல இப்புடியே இருக்காதட்டி. அம்மா ஏதும் ஆகாத ஒடக்கிழுத்தா பதிலு பேசிபுடு புள்ள. என்ன நானே இப்புடி சொல்லுறேமுனு நெனக்காதட்டி. நீயு எங்கம்மாவ மருவாத கொறவா நடத்த மாட்டனு நல்லா தெரியும் எனக்கு. அவியளுக்கு நீ கொடுக்க மதிப்ப ஒனக்கு அவிய கொடுக்காட்டியும் பரவால. வெசனபடுத்தாதிருக்கனுமேனுதேம் மனசு தவிக்குது. நீ கம்மினுருந்து ஒன்னியும் சாதிக்கப்போறதில்ல. கொறஞ்சது பேசினாவாது அவோ அமைதியானா சரிதேம்ல? ஒன்னயும் ஒடக்கிழுக்கச் சொல்லலட்டி. ஒம் மேல தப்பில்லங்குறதயாது வாயத்தொறந்து பேசு. என்னையும் பேசவுடு. அழுதுட்டே கைய புடிச்சுட்டு வேணாங்குற. நல்லா சவட்டியெடுக்கனும்போலனு வருது. போ புள்ள. காலையிலியே என்னைய பொலம்ப வுட்டுபுட்ட' என்று அவன் எழுதி முடிக்க, வானமும் மெல்லிய கதிர் பரப்பத் துவங்கியிருந்தது.


படுக்கையில் பிரண்டு படுத்தவளும், சூரிய ஒளியால் கண் விழிக்க, காகிதத்தை மடித்து வைத்துவிட்டு அவளிடம் வந்தான்.


அவனையும் மேஜையையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டவள், “காலையிலேயே லவ்ஸா?” என்க,


“அம்புட்டுக்கு ஆசையாருக்குனா சொல்லு. என் லவ்ஸ காட்டுறேம்” என்று அவளை அணைத்துக் கொண்டான்.


“யப்பா நான் ஒன்னும் கேக்கல சாமி. ஆளை விடுங்க” என்று அவள் நகர முற்பட, “எட்டி என்னமோ ஒன்னயா நாளு விடாம தெனம் படுத்தியெடுக்கப் போலத்தேம் சளிச்சுக்குறவ?” என்றான்.


முகம் சிவக்க அவனை முறைத்தவள், “என்ன பேச்சிது?” என்க,


அவள் மூக்கை கிள்ளியவன், “பேச்சுக்கே சரசரனு செவக்குது பாரு என் சீனி பட்டாசு” என்றான்.


“இதுக்கொரு கொறச்சலில்ல. கல்யாணத்துக்கு கிஃப்ட் வாங்கித்தரேன்னு கல்யாணத்துக்கு முன்னவே சொல்லிருந்தீங்க. நினைவிருக்கா?” என்று அவள் கேட்க,


அவளை அதிர்ந்து பார்த்தவன், “ஏ மறந்துபுட்டேம் புள்ள” என்றான்.


“ம்ம்.. நல்லா மறக்குறீங்க. நானும் மறந்தேபோனதால சரியாபோச்சுனு இருந்துகிட்டீங்கன்ன? நேத்து லெட்டர்லாம் அடுக்கி வைக்குறச்சதான் பாக்குறேன். கல்யாணமாகி ஒரு மாசம் ஆகப்போகுது. இன்னும் கிஃப்ட் வரல” என்று கோபம் போல் அவள் கூற,


“நெசத்துக்கே மறந்துட்டேம்டி. கொடுக்கத்தேம் இருந்தேம். வாங்க மறந்துட்டேம். சரியென்ன? மன்த் ஆனிவர்ஸரிக்கு வாங்கியாரேம்” என்று கூறினான்.


“பாப்போம் பாப்போம்” என்று நொடித்துக் கொண்டபடி எழுந்தவள் சென்று காலைக்கடன்களை முடித்து வந்தாள்.


தானும் சென்று பூச்செடிகளுக்கு வணக்கம் கூறியவன், நீர் பாய்ச்சிவிட்டு ஓய்வறை சென்றுவர, சங்கமித்ரா அந்தக் காகிதத்தை எடுத்துப் படித்தாள்.


முழுதாய் படித்து முடித்தவள் முகத்தில் மென் சிரிப்புத் துள்ளிக் குதித்தது.


“ரேடியோ கொடுத்தேனே அதை எங்க வச்சிருக்கீங்க?” என்று மிரட்டல் போல் அவள் கேட்க,


“யம்மாடி” என்று கூறியபடி எழுந்தவன் பரண் மேலிருந்து எடுத்து மேஜையில் வைத்தான்.


“இப்பிடி பரண் மேல போட்டு வைக்கத்தான் குடுத்தேனா நானு?” என்று அதிருப்தியுடன் அவள் கேட்க,


“ஏட்டிக் கோம்ப. நிச்சயத்தன்னிக்கு மோந்திவார கீழதேம் வச்சுருந்தேம். அடுத்து ரவைக்கு அம்புட்டுபேரும் என் ரூமுலதேம் வந்து படுத்தாவ. அதேம் யாரும் என்னமாது நோண்டிவச்சுடப்போறாவனு பரணுல போட்டேம். கலியாண பரபரப்போட ரெண்டு வாரமோடிபோச்சுது. பொறவு வேலையுனு ஓடிபோச்சுது. அதுல மறந்துட்டேம்” என்று கூறினான்.


அவன் பேசியதையெல்லாம் கேட்டபடியே அதில் ஆராய்ந்தவள், தான் பாடி பதவு செய்த டேப்பை எடுத்து, அதில் கொஞ்சம் பொத்தான்களையெல்லாம் திருகினாள்.


‘உன் பேரை சொன்னாலே

நான் திரும்பி பார்க்கிறேன்

உன் பேரை மட்டும்தான்

நான் விரும்பி கேட்கிறேன்


இருவர் ஒருவராய்

இணைந்து விட்டோம்

இரண்டு பெயர் ஏனடி


உனக்குள் நான் என்னை கரைத்துவிட்டேன்

உன்னையே கேளு நீ

அடி உன்னை நான் மறந்த வேளையில்

உன் காதல் மாறுமா


விடிகாலை தாமரை பூவிது

விண்மீனை பார்க்குமா


உன் மேல் நான் கொண்ட காதல்

என் மேல் நீ கொண்ட காதல்

எதை நீ உயர்வாக சொல்வாயோ


போடா பொல்லாத பையா

நம் மேல் நாம் கொண்ட காதல்

அதை நீ ரெண்டாக பார்ப்பாயா' என்று அவளது குரலில் அப்பாடல் ஒலிக்க, மேஜையில் கரங்களைக் கட்டிக் கொண்டு சாய்ந்து நின்றபடி அவனைப் பார்த்தாள்.


'நீ என்னய நெறயா காதலிக்க புள்ள. நம்ம காதலு மலையும் பள்ளதாக்கும் போலருக்கு' என்ற அவன் வரிகளுக்கு இசையால் அவள் கொடுத்த பதிலதென்று புரிந்தது.


மனம் நிறைந்த புன்னகை, அவன் அகத்திலிருந்து பயணித்து முகம் வந்து சேர்ந்தது.


அவன் கன்னம் ஸ்பரிசித்த அவளது கரங்கள் தலைகோதியபடி, “வேண்டாத பேச்செல்லாம் பேசக்கூடாது. ரெண்டு பேருமே காதலிக்குறோம்தான? பிறகென்ன உங்கக் காதல் என் காதல்னு பிரிச்சு பேசிக்கிட்டு? இது நம்ம காதல். எங்க சொல்லுங்க பாப்போம்” என்ற கூற,


அவள் முகத்தைத் தன் கரத்தில் தாங்கிக் கொண்டவன், “சொல்லிட்டா போச்சு” என்றபடி அவள் இதழை சிறையெடுத்தான்.


தீண்டலின் வழியே அவள் கேட்கத்துடித்த வார்த்தைகளைக் கடத்திவிட்டு அவன் நிமிர, நாணம் கொண்டு அவன் மார்பில் குத்தியவள், “இப்புடிதான் சொல்லுவாங்களா?” என்று மெல்லிய குரலில் சிணுங்கலாய் கேட்டாள்.


“வேற வழியெல்லாம் கூட இருக்குது. சொல்லட்டுமா?” என்று அவன் கேட்ட நக்கல் குரலே, அவளுக்கு புரிந்துகொள்ள போதுமானதாய் இருக்க, 


“ஆள விடுங்க சாமி” என்று குளிக்க ஓடியவளை அவனது வெடி சிரிப்பின் இன்னிசை பின்தொடர்ந்து வந்தது.


பெண்ணவள் குளித்துமுடித்து வெளியே வர, அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.


அவன் நின்று பேசும் தோரணையே வேலை விடயமாகப் பேசுகின்றான் என்பதை அவளுக்கு உணர்த்த, நகர எத்தனித்தவளை அவனது நுனிநாக்கு ஆங்கிலம் ஆணி அடித்தார் போல் நிற்க வைத்தது.


“I will add what you need as always, sir. The payment details were discussed earlier. All the items will arrive on time. Send someone to collect them (உங்களுக்கு தேவையானதை நான் எப்போதும் போல சேர்த்து விடுகிறேன், ஐயா. கட்டண விவரங்கள் முன்பே விவாதிக்கப்பட்டன. எல்லா பொருட்களும் சரியான நேரத்தில் வந்து சேரும். அவற்றை சேகரிக்க யாரையாவது அனுப்புங்கள்.)” என்று சரலமாய் அவன் பேசியதைக் கேட்டு அவளுக்கு உண்மையில் ஆச்சரியம் தான்.


நல்ல மேல்தட்டு ஆங்கிலத்தில் ஒலித்த அவன் உச்சரிப்புகளைக் கேட்டு வியந்தவள், அவன் பேசி முடிக்கும் வரை காத்திருந்தாள்.


அழைப்பைத் துண்டித்ததும், “ஏம்லே ஓம் புருஷேன் அம்புட்டுக்கா அழகாருக்கேம்? குளிக்கக் கூடயில்ல இன்னும். அப்புடி பாக்குறவ?” என்று வளவன் கேட்க,


“ஏங்க வெளிநாட்டுல ஏதும் போய் படிச்சுட்டு வந்தீங்களா?” என்று வியப்பாய் கேட்டாள்.


“ஏன்டி? என்னத்துக்கு கேக்க?” என்று வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வந்தபடி அவன் கேட்க,


“யப்பா.. இவ்ளோ ஃப்லூயன்டா எப்படிங்க பேசுறீங்க?” என்று கேட்டாள்.


“ஏன்? கிராமத்து காரவ பேசக்கூடாதாக்கும்?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி அவன் கேட்க,


“அப்படி நினைக்கும் ஆள் நான் இல்லைங்க. உங்களுக்கு ஆங்கிலம் தெரியாதுனு நான் நினைக்கலை. அதேநேரம் இவ்வளவு ஃப்லூயன்டா பேசுவீங்கனும் நினைக்கலை” என்று கூறினாள்.


அதில் பச்சரிசிப்பற்கள் மின்ன புன்னகைத்தவன், “படிச்சு முடிச்ச பொறவுலாம் இம்புட்டு பேச வாரலை மித்ரா. பேசி பழகினதுதேம். நம்மட்ட ஒரு ரெண்டு வருஷம் முன்னுக்க வர ஒரு வெளிநாட்டு டீலரு இருந்தாவ. அவியட்ட பேசிப் பேசிதேம் பழகிச்சு. வேலு இன்னும் நல்லா பேசுவியான். வெள்ளக்காரவ போல பேசுவியான். ஆனா ரெண்டேரும் ஊருக்குள்ளாரல்லாம் ஆங்கிலத்துல பேசிகிட மாட்டோம்” என்று கூற,


“ஏன்?” என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்டாள்.


“வேற மொழிய கத்துக்குறது அந்த மொழிகாரவட்ட பேசிக்குறதுக்குதேம். இங்கன எல்லாம் தமிழ் பேசுறவியதேம். பொறவு என்னத்துக்கு சீனுக்கு இங்கிலிஷ பேசிக்கிட்டு?” என்று அவன் கேட்க,


“ச்ச ஒரு பிரின்ஸிபலோட வாழுறீங்கங்க” என்று அவன் கன்னம் கிள்ளி முத்தமிட்டாள்.


“ஆஹாங்?” என்று கேட்டபடியே அவன் அவளை நோக்கி சாய, அவன் பின்னந்தலையில் கைவைத்து சிகையை இறுக்கிக் கொண்டவள், “இந்த ஆஹாங் ஓஹாங்கெல்லாம் வேணாம். போயி குளிச்சுட்டு வாங்க. அழுக்கு மூட்ட” என்றாள்.


“ஆ ஏட்டிக் கோம்ப. முடிய வுடுடி. வலிக்கி” என்று அவன் கூற,


“புறா கூடுபோல இருக்குறதும் நமக்கு யூஸ்ஃபுல்லாதான் இருக்கு” என்று கைகளைத் தட்டிக்கொண்டு சென்றாள்.


“கொழுப்புடி ஒனக்கு” என்று கூறிக் கொண்டவன் குளிக்கச் செல்லப் போக, அவன் அலைபேசிக்கு அவிநாஷிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.


‘காலை வணக்கம் டா. நேற்றே போய் திரிபுரா அக்கா வீட்டுலயும் அழைச்சோம். ஆனா அவங்க வர ரொம்ப தயக்கப்படுற போல தெரிஞ்சுது. நானோ மாமாவோ அந்த இடத்தில் ஆறுதலா பேசினாலும் அது நல்லாருக்காது. அவங்க விசேஷத்துக்கு வந்து எங்க பிள்ளைய வாழ்த்தனும். அவங்களையும் கூட்டிட்டு வாடா தம்பி’ என்ற குறுஞ்செய்தியை வாசித்தவன் இதழ்கள் பூவாய் மலர்ந்தன.


'கண்டிப்பாண்ணே. அவியளையும் விசேஷத்துக்கு கூட்டிகிட்டு வாரது எம்பொருப்பு' என்று அவன் பதில் அனுப்ப, புன்னகைக்கும் பொம்மைகளை அனுப்பி வைத்தான்.


'ச்ச! எவ்வளவு நல்ல மனசு இவியளுக்கு. அம்மா இவியட்ட போயி என்னைய போட்டியா நிறுத்துறாவளே' என்று அவன் மனம் வேதனை கொள்ளவும் செய்தது.


சிலர் இப்படித்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டால், அவர்கள் செய்யும் நல்லவைகூட தீயதாய் தான் விளங்கும். தெய்வநாயகியும் அப்படியான கட்டத்தில் தான் இருக்கின்றார்.


அவர் இன்னார் இப்படித்தான் என்ற எண்ணத்தைத் தன் மனதில் பதிய வைத்துவிட்டார். அதனால் அவரது எண்ணங்களுக்கு சாதகமான செயல்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்படுகின்றார்.


எப்போதும் எந்த செயலிலும், விடையை தெரிந்துகொள்ளாமல் அனைத்தையும் உள்வாங்கி நல்லவை கெட்டவைகளை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்வதில் தான் சாமர்த்தியம் என்று நம்பும் வளவனுக்கு, அன்னையின் மாறுபட்ட குணத்தை மாற்ற இயலவில்லை.


தான் கடலளவு பாசமும் மரியாதையும் கொண்ட தன் அன்னை, தான் உயிராய் பாவிக்கும் தன்னவளின் மனம் கோண நடந்துக்கொள்வதையும் எப்படி சரிசெய்வதென்றே தெரியவில்லை.


இப்படியான யோசனைகளோடு அமர்ந்திருந்தவனுக்கு, அவளுக்கு பரிசு கொடுக்காது விட்டது பிறகே நினைவு வந்தது.


தனது அலைபேசியை எடுத்தவன் சில பல தகவல்களை அனுப்பிவிட்டு, தனது அலமாரியிலிருந்து ஒரு பெட்டியை எடுத்து அதையும் தயார் செய்து வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றான்.


கீழே காய்கறிகள் நறுக்கும் பணியை செவ்வனே செய்துகொண்டிருந்த சங்கமித்ராவிடம் வந்து, “கூட நறுக்கு. தீபா பிள்ளையளும் சாப்புட வாராவ” என்று தெய்வநாயகி கூற,


“குழந்தைங்களுக்கு லீவா அத்தை?” என்று கேட்டாள்.


“ஏன்? என் பேரப்புள்ளைய ஏன் சாப்பிட வாராகனு கேக்கியாக்கும்?” என்று நொடித்துக் கொண்டவர், “லீவுதேம்” என்க,


“ச்ச குழந்தைங்க சாப்பிடவர நான் ஏன் அப்படி கேக்க போறேன்?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.


“கேட்டுத்தாம் பாரேம். திருவலுல போட்டு திருவிட மாட்டேம்?” என்றவர் உள்ளே செல்ல, “அவியட்ட ஏன்டி வாயகுடுத்து வாங்கிக்குறவ? என்னமாது சொன்னா சரினுட்டு வேலையப்பாரேம்” என்று கார்த்திகா கூறினாள்.


“அப்றம் எப்படித்தான் நான் அவங்களோட பேசிப்பழக க்கா?” என்று பாவம் போல் அவள் கேட்க,


சின்னதாய் சிரித்த கார்த்திகா, “போடி இவளே. இவியளுக்கே இந்த தாங்கு தாங்குற. ஒனக்குலாம் நல்லா பாத்துக்குடுற மாமியா வந்துருந்தா சொகமா வாழ்ந்துருப்பாவோ” என்று கூறினாள்.


அதில் சிரித்துக் கொண்டவள், “அக்கா, சங்கி வளைகாப்புக்கு நாம ஒரே கலர்ல புடவை கட்டிப்போமா?” என்று கேட்க,


“ஒரே கலரென்ன? பேசாம ஒரே புடவையா எடுப்போமா?” என்று கார்த்திகாவும் கேட்டாள்.


“நல்ல ஐடியாவாருக்கே” என்று அவள் கூறுகையிலேயே, விக்ரமனும் வளவனும் அவ்விடம் நுழைந்து, “என்ன ஐடியா?” என ஒன்றுபோல் கேட்டனர்.


அவர்களைத் திரும்பிப் பார்த்த சங்கமித்ரா, “என்ன டிவின்ஸ்னு காட்ட கோரஸ் போடுறீங்களா?” என்று சிரித்தபடி கூறி, “இந்த புறாகூடு மட்டுமில்லனா அடையாளமே கண்டுபிடிக்க முடியாது போங்க” என்று கூற,


“புறா கூடா?” என்று கார்த்திகாவும் விக்ரமனும் ஒன்றுபோல் கேட்டனர்.


'அச்சுச்சோ உளரிட்டோமே?’ என்று நாக்கைக் கடித்துக் கொண்டு திருமாவளவனை அவள் நோக்க,


செல்லமாய் முறைத்தபடி அடிக்க வாகாய் ஏதும் கிடைத்திடுமா என்று சுற்றி முற்றித் தேடினான்.


மேஜையில் கிடந்த முறுங்கை காய் ஒன்றை எடுத்து தம்பியிடம் நீட்டியவன், “வேணுமாலே?” என்க,


“கொண்டா” என்று பிடுங்கிக் கொண்டான்.


“அம்மாடி அத்தான்! இப்படியா அடிக்க ஆயுதம் தருவீங்க?” என்று அவள் அலற,


“அய்யோ தரக்கூடாதா?” என்று சிரித்தவன், “டேய் குடுடா அத” என்றான்.


“அவளுக்கு சப்போட்டாக்கும் நீயு? கூட பொறந்தவேன் தலைய புறாகூடுங்கா. நீயும் பாத்துகிட்டு நிக்கவ” என்று வளவன் அதட்ட,


“இருக்குறத தானலே சொல்லுறா” என்று அவன் சிகை கலைத்தான்.


“மைணி… சொல்லி வையுவ. ஒங்க வீட்டுக்காரவ ரொம்ப ஒடக்கிழுக்காவ” என்று வளவன் அண்ணியிடம் மிரட்டலைத் தொடர,


“நீயளாச்சு, அவியளாச்சு” என்று நொடித்துக் கொண்டபடி கூறினாள்.


“அடப்பாவியளா” என்று இரட்டையர்கள் இருவரும் வாயில் கைவைக்க, அவர்களது மனைவிமார்கள் கொள்ளென்று சிரித்து, கைகளைத் தட்டிக் கொண்டனர்.


சில நிமிடங்களிலேயே இவர்களது கலகலப்பினுள் தீபிகா தன் பிள்ளைகளுடன் வந்து ஆஜர் ஆனாள்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02