திருப்பம்-48
திருப்பம்-48
“ஏ தீபி க்கா. வா வா” என்று விக்ரமன் கூற,
“வாரம்லே” என்றபடி வந்தாள்.
“மாமா” என்று அவனை ஓடிச்சென்று மகிழ் கட்டிக்கொள்ள,
“அம்மாடி. வாலே ராசா” என்று தன்மீது வந்து பொத்தென்று விழுந்தவனைத் தாங்கிக் கொண்டான்.
“அத்தே” என்றபடி உள்ளே ஓடிய தேவிகா கண்ணில் பட்ட இரண்டு அத்தைகளையும் கட்டிக் கொண்டு, “இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?’ என்று கேட்க,
“வாடி ராஜாத்தி” என்று அவளை அள்ளி முத்தமிட்ட கார்த்திகா, “ஒங்க பாட்டிதேம் செய்றாவ. போயி கேளு” என்று கூறினாள்.
“பாட்டீ” என்று உள்ளே ஓடியவளை வைத்து சீராட்டிய தெய்வநாயகி, உணவு பட்டியலையும் கூறி அனுப்பினார்.
தனம் அறையின் உள்ளே ஒளிசுடர் அழும் குரல் கேட்க,
“ஆத்தா சிங்காரி ஆரமிச்சுட்டாளே” என்று கார்த்திகா அழுப்பாய் கூறினாள்.
“இருங்க நாந்தூக்கிட்டு வரேன்” என்று சங்கமித்ரா கூற,
“ஒனக்கு கொடுத்த வேலைய மொத செய்யு. வந்து நாஞ்செய்யுறேம் நாஞ்செய்யுறேமுனு ஒக்காந்துட்டு ஒன்னுத்த நவட்டக்காணும். அங்கன அத்தனப்பேரு இருக்காவ புள்ளைய பாத்துகிட. இங்க தூக்கிட்டு வருவ, அவ என்னத்தையாது அள்ளி மேல கீழ கொட்டிகிட்டானா நீயா பாப்ப? அவதேம் அல்லல் படோனும்” என்று தெய்வநாயகி அதட்டினார்.
குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்த தீபிகா, “ஏம்மா கொஞ்சமாது மனசோட பேசுதியா நீயு? அந்த புள்ள நா வந்த பொறவாட்டிலருந்தே அம்புட்டு மறக்கறிய நறுக்கி போட்டிருக்கா. ஒன்னுத்தியும் நவட்டலனு சொல்றீயே? அது தேங்க துருவிபோட்ட கொட்டாங்குச்சிய பாத்தே எனக்கு எல்லு நோவுது. அத என்னமாது போசாம போயி சோற ஆக்கு. எம்புள்ளைய பசினுட்டு வந்துடுவாவ” என்று அதட்டலாய் கூறினாள்.
அவர் அமைதியாக உள்ளே செல்ல வேண்டும் என்பதற்காகவே தனது பிள்ளைகளை உள்ளிளுத்து அவள் பேசியது சரியாய் வேலை செய்ய, முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டு உள்ளே சென்றார்.
முகம் வாடிப்போன சங்கமித்ராவின் அருகே அமர்ந்த தீபிகா, “இந்தாரு சங்கு.. எங்கம்மாட்ட இப்புடி எதாது அவிய மறுக்காதபடிக்கு பேசி அனுப்பினாதேம் உண்டு. இல்லனா ஒன்னிய சவட்டியெடுக்காது ஓய மாட்டாவ. நீ வெசனப்படாதுரு” என்று கூற,
மெல்லிய இதழ் விரிப்போடு புன்னகைத்தாள்.
“மைணி, நானும் சங்கும் அவிய அக்கா வளகாப்புக்கு ஒன்னா பொடவெடுக்கருக்கோம். நீயளும் வாரியலா?” என்று கார்த்திகா கேட்க,
“ஒங்க அண்ணே இப்பததான்டி ரெண்டு பொடவ ஊருலருந்து எடுத்துருக்காவ. அந்த தம்பி வந்து அழக்கையிலேயே அதுக்கு ப்ளௌசு தெக்க போட்டேம். நீங்க ரெண்டேரும் எடுத்து கண்ணுக்கு நெறவா உடுத்தி போலாந்தான? சீக்கிரமே அடுத்து நம்மூட்டுலயும் ஓம்மவகூட சண்டபோட ஒன்னு வரட்டும்” என்று கூறிய தீபிகா, சங்கமித்ராவின் தோளிடித்தாள்.
முகம் பூரித்து புன்னகைத்தவள் கண்டு கொள்ளெனச் சிரித்த கார்த்திகா, “மைணி வெக்கத்த பாத்தீயளா? சீக்கிரமே அடுத்து எம்மவகூட வம்பிழுக்க ஆளிழுத்துட்டு வந்துடுவா போலயே” என்க,
“அக்கா..” என்று சிணுங்கியவள் அதற்கு மேலும் தொடர்ந்த அவர்களது கேலி பேச்சுக்களைத் தாங்க இயலாதவளாய், குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியேறி இருந்தாள்.
வெளியே வளவன் மார்போடு சாய்ந்துக் கொண்டு தன் அழகிய மொழியில் கதை பேசிக் கொண்டிருந்த தேவிகாவின் கதைகளை துளியும் சலிப்பில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தான், திருமாவளவன்.
அவன் முகம் அவள் பேச்சுக்கேற்ற உணர்வுகளின் ஏற்ற இறக்கங்களைக் காட்டிக் கொண்டிருக்க, ஒரு நிமிடம் அப்படியே அதை ரசித்து நின்றவள், ஒளிசுடரின் அசைவில் தான் சுயம் பெற்றாள்.
அவள் வரும்போதே கவனித்திருந்த வளவன் அவள் தன்னை ரசித்து நின்றதையும், தற்போது சுயம் மீண்டதையும் உணர்ந்தோனாய் அவளைப் பார்த்து விஷமமாய் சிரித்துக் கொண்டு திரும்பினான்.
அவன் அருகே சென்று அமர்ந்தவள், “நாளைக்கு சண்டே தானே? நீங்க ஃப்ரீயா?” என்று கேட்க,
“தொழில் பண்றவேனுக்கு சண்டே மண்டேலாம் ஒன்னுதேம்டி” என்று கூறினான்.
அதில் அவள் முகம் வாடிவிட, “ஒனக்கு என்ன வேணுமின்னு சொல்லு, அதுகேத்தபோல நேரத்த வச்சுகிடுதேம்” என்று கூறினான்.
பளீரென்ற புன்னகையுடன், “சங்கி வளைகாப்புக்கு நானும் கார்த்தி அக்காவும் ஒன்னுபோல புடவை கட்டலாம்னு இருக்கோம். அதான் நாளைக்கு போலாமானு கேக்க கேட்டேன்” என்று அவள் கூற,
“எடுப்போமின்ன. மைணீட்ட எப்பனு கேட்டுட்டு சொல்லு. போவம்” என்றான்.
“தேங்ஸ்ங்க” என்றுவிட்டு குதூகலமாய் எழுந்தவள் மீண்டும் உள்ளே செல்ல,
“என்ன போன வேவத்துல வந்துட்டவ? நளி போதலையாக்கும்?” என்று கார்த்திகா வம்பிழுத்தாள்.
“ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும் க்கா. எனக்கும் உங்கள கேலி பேச ஒரு வாய்ப்பு அமையும். அப்ப பாத்துக்குறேன்” என்று அமர்ந்தவள், “நாளைக்கு புடவையெடுக்க போவோமா க்கா?” என்று கேட்க,
“நாளைக்கேவா?” என்று கார்த்தி கேட்டாள்.
“ஏட்டி பொறவு எப்பத போவீய? விசேஷம் திங்கக் கெழம” என்று தீபிகா கேட்க,
“ஆத்தே இது நெனவில்லாது போச்சே. நாளைக்கு மில்லுல சோலி கெடக்கே எனக்கும் அவியளுக்கும்” என்று கார்த்திகா கூறினாள்.
“அச்சுச்சோ” என்று சோகமாய் சங்கமித்ரா ராகமிழுக்க,
அவளை மன்னிப்பாய் பார்த்தாள்.
“சரிவிடுங்க க்கா. அடுத்த முறை எதும் பங்ஷனுக்கு நாம ஒன்னா எடுப்போம்” என்று சங்கமித்ரா கூற,
“ஏம்புள்ள? நீயு போயி எடுத்தா” என்று கார்த்திகா கூறினாள்.
“அக்கா உங்களுக்கு புடிச்ச போல பார்த்து எடுக்க வேணாமா?” என்று சங்கமித்ரா கூற,
“நீயு எது எடுத்தாலும் எனக்கு பிடிக்கும் சங்கு” என்று புன்னகையாய் கூறினாள்.
இருந்தும் சங்கமித்ரா யோசிக்க, “நீயு அங்கன போயி நல்ல பொடவையா பாத்து போட்டோவ இவளுக்கு அனுப்பு. இவ பாத்து சொல்லட்டும். அம்புட்டுதேம் ஆச்சு” என்று தீபிகா யோசனை சொல்ல,
“அதான? நீயு போயி படம் புடிச்சு அனுப்பு சங்கு. நானு பாத்து சொல்லுதேம்” என்று கார்த்திகாவும் கூறினாள்.
அவளுக்கும் அதுவே நல்ல யோசனையாய் பட, “சரிக்கா” என்று ஒப்புக்கொண்டாள்.
அதன் பின் பேச்சும் கலகலப்புமாய் மதிய உணவு வேளையும் செல்ல, பரிமாறுகையில் தெய்வநாயகி தவறுதலாய் காரம் அதிகமுள்ள குழம்பை சங்கமித்ராவிற்கு ஊற்றிவிட்டார்.
அவளும் கறிகுழம்பின் மீதுள்ள ஆசையில் அதன் நிறத்தையெல்லாம் கவனியாமல் பிசைந்து, ஆர்வத்துடன் வாயில் போட்டுவிட, அவள் வாய் வயிறெல்லாம் வெந்துவிடுவேன் என்று தவித்தது.
சைவ உணவில் போட்ட காரத்திற்கே அவள் பட்ட பாடு சொல்லில் அடங்காது. அசைவம் பொதுவாகவே காரம் அதிகமாக சேர்த்து சமைக்கப்படும் பட்சத்தில், அவ்வீட்டில் வெகு தூக்கலாகவே இருக்கும். அத்தனைக் காரமாக இருந்தால்தான் அவ்வீட்டில் அனைவருக்குமே உணவு இறங்கும்.
வாயில் வைத்த உணவின் சாறு உள்ளே சென்றதற்கே அவளுக்குக் காதில் புகைவந்துவிட, அனைவருக்கும் பரிமாறிவிட்டு பாத்திரத்தை உள்ளே வைக்கும்போதுதான் அருகிருந்த அவளுக்காக தனியாக வைத்த குழம்பு பாத்திரம் தெய்வா கண்ணில் பட்டது.
“ஆத்தே” என்று அவர் வெளியே பதட்டமாய் வர,
வாயில் வைத்த உணவோடு எழுந்து ஓடக்கூட முடியாமல் தவித்து கண்களிலிருந்து கண்ணீர் பொழிய உணவை கண்டு விழித்தாள்.
“ஏட்டி கோம்ப, எந்திச்சு போயி துப்பு” என்று தெய்வநாயகி அதட்ட,
அதிர்ந்து மூச்சிழுத்தபடி நிமிர்ந்தவளுக்கு உணவு மூக்கில் ஏறியது.
வாயை சட்டென பொத்தியவள் எழுந்து இருமியபடியே பின்கட்டிற்கு ஓட,
அனைவருமே அவள் சென்ற திசையை புரியாது பார்த்தபடி தெய்வாவைப் பார்த்தார்கள்.
“என்னத்த புள்ளையோ?” என்று தலையில் அடித்துக் கொண்டவர், ஒரு டம்பிளர் பாலை எடுத்துக் கொண்டு அவள் பின்னே செல்ல,
வளவனுக்கு என்ன நடந்ததென்று புரிந்து போனது.
தானும் எழுந்தவன் பின்கட்டிற்குச் செல்ல, காதுகளைப் பிடித்துக் கொண்டு காரம் மூக்கில் ஏறிய எரிச்சல் தாங்காமல் இருமிக் கொண்டிருந்தாள்.
கண்ணிலிருந்தும் மூக்கிலிருந்தும் நீர் வழிய, எரிச்சலைத் தாங்கவே முடியவில்லை அவளுக்கு.
“மித்ரா” என்று அன்னைக்கு முன்னே ஓடியவன் அவளைத் தாங்கிக்கொள்ள, அவளுக்கு அழுகையாய் வந்தது.
அவன் சட்டையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கால்களைத் தரையில் உதைத்துக் கொண்டு அழுதவளுக்கு எரிச்சலைத் தாங்க முடியவில்லை.
“ஏட்டி வாயில போட்டதும் ஒரப்புன்னு தெரியுதுதான? ஓடிபோயி துப்புறத விட்டுட்டு சொவச்சுட்டே இருப்பியாக்கும்? இப்பத தையா தக்கானு குதிக்கவ?” என்று கத்தியபடி வந்தவர் பாலை நீட்ட,
அதை வாங்கிக் கொண்டவன், “டேய் பாலக்குடிடா. ஒரப்பு மட்டுப்படும்” என்றான்.
அவளால் அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை. எரிச்சலின் மிகுதையைத் தாங்க முடியாமல் அப்படி அழுகை வந்தது.
“ஏட்டி பால குடி. அப்பதேம் ஒரப்பு மட்டுப்படும்” என்று அதட்டிய தெய்வா, “ஏன்டா அவளுக்கு பால குடுனு கொடுத்தா பச்ச புள்ளக்கு சமாதானம் சொல்லுறவேம் போல கெஞ்சிட்டிருக்கவ?” என்று மகனையும் திட்ட,
“ம்மா இருங்கம்மா. அவளே கரிச்சுட்டுருக்கா. இதுவும் பொறக்கேறிட போவுது” என்று கூறினான்.
“ஓம் பொண்டாட்டி கரிக்காமருந்தாதேம் அதிசயம்” என்றவர் அவளை அங்குள்ள கல் மேடையில் உட்காரவைத்து, பாலைக் கொடுக்க, மெல்ல மெல்ல அதை குடித்தாள்.
தலையெல்லாம் வின் வின் என்று தெரிக்காத குறையாய் வலித்தது.
முழு பாலையும் குடித்து முடித்தவளுக்கு, எரிச்சல் முற்றுமாய் குறையாதபோதும் கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது.
“கொஞ்ச நேரத்துக்கு காந்தலாதேம் இருக்கும். இப்பத தண்ணிய குடிச்சுபுடாத” என்று கூறியவர், “போயி உங்குடா நீயு” என்க,
கையைக் கழுவிக் கொண்டு வந்தவன், “நீங்க போங்க வரேம்” என்றான்.
அவனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டவர், “நல்லா வந்த பாரு? இம்புட்டூண்டு ஒரப்பு ஆவுதா?” என்று அவளிடம் புலம்பியபடி உள்ளே செல்ல,
அவர் அவர்கள் பார்வையிலிருந்து மறைந்ததும், அவனை மிக இறுக்கமாய் கட்டிக் கொண்டு, “சத்தியமா முடியலங்க” என்று அழுதாள்.
மிகுந்த வருத்தத்தோடு, “வாயில போட்டதும் தெரிஞ்சுட்டுதான? வெரசா எழுந்து போயி துப்ப என்னட்டி ஒனக்கு?” என்று அவன் கேட்க,
“எல்லாரும் சாப்பிட உங்காந்துருக்குற இடத்துல அப்படி எப்படிங்க எழுந்துஓட?” என்று இரும்பியபடி கூறினாள்.
“இதென்னடி வம்பு? இப்பத அவஸ்த ஒனக்குதான?” என்று வருந்தியவன் அவளை நோக்க, “நீங்களாம் மனுஷங்களே இல்ல தெரியுமா? குடல் வெந்துபோயிடும்போல இருக்கு” என்று அறற்றினாள்.
சிரிப்பதா அழுவதாயென்று புரியாத நிலை அவனுக்கு.
“சாரிடி” என்று அவள் முகத்தைத் தன் கையில் பொத்திக் கொண்டவன், இடம் பொருளெல்லாம் யோசிக்காது அவள் இதழை சிறைபிடித்தான்.
மறுப்பின்றி ஏற்றுக் கொண்டவளுக்கு, இருக்குமிடம் பின்புதான் உறைத்தது. கழுவப்பட்டாத கரத்தை வைத்துக் கொண்டு அவனை நகர்த்தவும் முடியாதவளுக்கு அவன் பிடியில் வெட்கம் பிடுங்கித் தின்றது.
தானாக துவங்கி, தானாய் முடித்து வைத்தவன் அவள் முகம் காண, அத்தனை வெட்கம் கொண்டு தவித்தாள்.
மெலிதாய் சிரித்தவன், “போச்சா?” என்க,
பட்டென நிமிர்ந்து பார்த்தாள்.
“எரிச்சலு போச்சா?” என்று அவன் சிரிக்க,
“ப்..பச்ச புள்ளைங்க இருக்க வீட்டுல இப்படியா வெட்ட வெளியில வச்சு” என்றவள் மேலும் பேச முடியாமல் தவிப்பாய் இதழ் கடித்தாள்.
கடிபடும் இதழை விரல் கொண்டு எடுத்துவிட்டவன், “அம்புட்டு பேரும் உங்கிட்டு இருக்காவ. வந்து பாத்தா அம்மாதேம் பாக்கோனும். பாத்துட்டு போவட்டுமே” என்று லஜ்ஜையே இன்றி கூற,
“ச்சி” என்று முகம் சுழித்துவள் அவனை விட்டு நகர்ந்து சென்றாள்.
கையைக் கழுவிக் கொண்டு வந்தவளிடம், “மோரு ஏதும் குடிக்கியாடி?” என்று அவன் கேட்க,
“ஆசையா கறிக்குழம்பு சாப்ட வந்தேன். இப்ப காரமில்லாத குழம்பைக்கூட சாப்பிட முடியாதபடிக்கு இருக்கு” என்று மனம் பொறுக்காமல் புலம்பிவிட்டவள், பேசியபின்பே தன் வார்த்தைகள் உணர்ந்து அவனை அதிர்ந்து பார்த்தாள்.
அவளைப் பாவம் போல் பார்த்தவன் பேச வரும் முன், “சாரி செல்லி சங்கடப்படுத்திடாதீங்க” என்று அவள் கூற,
மெலிதாய் புன்னகைத்தவன், “வந்து உங்கு” என்று அழைத்துவந்தான்.
அழுததில் அவள் முகம் நன்றாகவே சிவந்திருந்தது.
தெய்வாவிற்கே என்னவோபோலானது. உணவு விஷயத்தில் எப்போதும் யாருக்கும் வஞ்சகம் செய்யக்கூடாது என்பதில் திண்ணமாய் இருப்பவர் அவர். இன்று ஆசையாக உண்ண வந்தவள் உண்ண இயலாதபடியாகிப்போனதே என்று வருந்தினார். ஆனால் அதுவும் அவளால் தான், அவள் உணவை துப்பியிருந்தால் இத்தனை பிரச்சினை இல்லை என்றே தனக்குள் கூறிக் கொண்டார்.
“ஏத்தா காந்தலடங்கிச்சா?” என்று தீபிகா பரிவாய் கேட்க,
“பரவால்ல அண்ணி” என்றாள்.
அவளிலை எடுக்கப்பட்டு புதவிலை வைக்கப்பட்டிருக்க, தற்போது அத்தனை பண்டம் இருக்கும்போது, தயிர் சாதம் போதும் என்று கூறவும் சங்கடப்பட்டாள். அவள் நிலை புரிந்து “தயிர் சோறா சாப்புடு. ரவைக்கு மத்தத உங்கிக்கலாம்” என்று வளவன் கூற,
சிறு தலையசைப்போடு அத்தையைப் பார்த்தாள்.
அவரும் ஏதும் பேசாமல் தயிர் சாதம் எடுத்துவந்து இலையிலிட, தயிரின் குளுமை ஓரளவு அவளை சமன் செய்தது. கலகலப்பாய் துவங்கிய உணவு பொழுது ஒருவித அமைதியோடு முடிந்து அவளை சங்கடத்திற்கும், மற்றோரை அவள்மீதான வருத்தத்திற்கும் ஆட்படுத்தியது.
Comments
Post a Comment