திருப்பம்-49
திருப்பம்-49
உவர் காற்றின் இதம் அவள் தேகமெங்கும் தீண்டிச் செல்ல, அதை கண்கள் மூடி ரசித்தபடியே தன்னைச் சுற்றியிருக்கும் கடலை ரசித்து அதன் ஓசையைக் காதின் வழி மூளையில் நிறப்பிக் கொண்டிருந்தாள், சங்கமித்ரா.
இயற்கை அன்னையை ரசித்துக் கொண்டிருந்த அவளது அழகிய விழிகளை, மறவோனது விழிகள் ரசித்துக் கொண்டிருந்தது.
உற்றாகம் பொங்கும் அந்த விழிகளில், அவள் உணரும் உவகையை காணும் நொடி, அவன் உணரும் சந்தோஷத்தையும், கண்ணீர் ததும்பிநின்று, சிவப்பேறி துடிக்கும், வலிகளை விழுங்கிய அவள் விழிகளைக் காணும் நொடி, அவன் உணரும் வேதனையையும் ஒப்பிட்டுப் பார்த்தவனுக்கு உள்ளத்தில் சொல்லொண்ணா உணர்வு.
தன்னை வான்புகழுக்கே ஒப்புவித்த வள்ளுவனின் சிலைக்கடியில் நின்றிருப்பதாலோ என்னவோ? அந்த தருணம், அவன் உணர்ந்த ஒப்பீட்டிற்கு நிகராய் ஒரு குறள் அவனுக்கு நினைவு வந்தது.
“இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து” என்று அவள் கேட்கும்படி அக்குறளை அவன் உச்சரிக்க,
அவனை மகிழ்வும், குழப்பமும் கலந்த பார்வையோடு ஏறிட்டாள்.
“அவளுடைய கருணைமிகுந்த கண்களுக்கு இரண்டு பாத்திரமுண்டு. ஒன்று கொல்வது, இன்னொன்று குணப்படுத்துவது” என்று அவன் விளக்கம் கொடுக்க,
அவள் விழிகள் மகிழ்வோடு விரிந்தன.
“சீனிபட்டாசு, என்னத்துக்கு இந்த விழி விழிக்கவ?” என்று அவன் கேட்க,
“திருக்குறள் இவ்வளவு மனப்பாடமா சொல்றீங்களே” என்றாள்.
“புடிக்குந்தா. ஒன்னு ரெண்டு இப்புடி மனனம் பண்ணி வச்சிருப்பியேன். எல்லாமுல்லா மனப்பாடமா தெரியாது. ஆனா பஸ்ஸுலலாம் ஏறினாக்கா, அதுல போட்டுருக்க திருக்குறள வாசிக்காது எறங்கமாட்டேம்” என்று சின்ன சிரிப்போடு அவன் கூற,
“செம்மங்க” என்றாள்.
“இங்கனலாம் வந்ததில்லயா புள்ள நீயு?” என்று வளவன் கேட்க,
“சின்ன வயசுல ஸ்கூல் ட்ரிப்ல வந்திருக்கேங்க. பெருசா நினைவுகள்னு எதுவும் இல்லை. ஆனா ஃபோட்டோஸ் இருக்கு. அதைப் பார்த்து தான் இங்க வந்துருக்கேன்னே எனக்கு தெரியும்” என்று கூறினாள்.
“அதுசரி” என்று சிரித்தவன், “நம்ம கன்னியாகுமரில சுத்திப்பாக்க பஞ்சமேயில்ல மித்ரா. இப்புடி நேரங்கிடக்கையில கூட்டிவாரேம்” என்று கூற,
சிறுபிள்ளையின் உற்சாகத்துடன், “சரிங்க” என்றாள்.
அவ்விடம் ரசித்து முடித்த திருப்தியுடன் கரைக்குத் திரும்பிய இருவரும் துணி கடைக்குச் சென்றனர்.
கடைக்காரரும் பத்து பதினைந்து புடவைகளை எடுத்து விரிக்க, சங்கமித்ராவுக்குத்தான் எதை எடுக்கவென்றே தெரியவில்லை.
“எதாது செலெக்ட் பண்ணுங்க” என்று அவள் கூற,
அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தவன், “ஒனக்கு புடிச்சதா எடுக்கத்தான?” என்றான்.
“அதான் தெரியலை. எனக்கு ஒரு புடவை பார்க்கும்போது அது நல்லாத் தெரியுது. அடுத்தத பாக்கும்போது அது நல்லா தெரியுது. அப்றம் எப்படி எடுக்க? கன்பியூஸ்டாருக்கு” என்று அவள் கூற,
“அட கோம்ப” என்று சிரித்தவன், அவள் நிறத்திற்கும், கார்த்திகா நிறத்திற்கும் எடுப்பாய் இருக்கும்படி நான்கைந்து புடவைகளை எடுத்து வைத்தான்.
அவற்றைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு கார்த்திகாவிற்கு அனுப்பியவள் அழைப்பு விடுத்துத் தெரியப்படுத்த, அவளும் புகைப்படங்களைப் பார்த்துவிட்டு, மருதாணி நிறத்தில், அறக்கு நிற கரைவைத்த புடவையை தெரிவு செய்தாள்.
“புடவை எடுத்தாச்சு. அடுத்து சட்டை எடுக்கப் போகலாமா?” என்று அவள் கேட்க,
“ரெடிமேட் ப்ளௌஸ் எடுக்க போறியா?” என்று கேட்டான்.
“ஹலோ மிஸ்டர் திருமாவளவன். நான் உங்களுக்கு சட்டை எடுக்கப்போறதைப் பத்தி சொன்னேன்” என்று மிரட்டல் தொணியில் அவள் கூற,
“எனக்கெதுக்குட்டி?” என்றான்.
“நானும் அக்காவும் ஒன்னுபோல போட்டுக்குறோம் தானே? அதேபோல நீங்களும் விக்ரமத்தானும் ஒன்னுபோல போட்டாதான நல்லாருக்கும்?” என்று சங்கமித்ரா கேட்க,
“இஞ்சார்ரா.. இதென்னடி கணக்கு? நீங்க கட்டிக்க விருப்பப்படுதீய. கட்டிகிடுவ. நாங்க என்னத்துக்கு?” என்றான்.
“ப்ச்” என்று சப்தம் போட்டவள், “ரெட்டப் பிறவிங்கதான நீங்க? ஒன்னுபோல சட்டைலாம் எடுத்தது இல்லையா?” என்று கேட்க,
“பொறந்தநாளுக்கு எடுக்கையில அப்புடி எடுத்துப்போம். மத்தபடி தெனத்துக்குமுலாம் அப்புடி போடுறதில்ல மித்ரா. அம்புட்டுக்குலாம் எங்களுக்கு பொரும இல்ல” என்று சிரித்தான்.
“விசேஷத்துக்குதானங்க?” என்று அவள் கொஞ்சலில் இறங்க, அதை ரசித்துப் பார்த்தவன், “வா” என்று அவளுடன் சட்டை எடுக்கச் சென்றான்.
அவர்கள் புடவையின் கறையிலுள்ள அரக்கு நிறத்தில் தேடி பிடித்து அவள் இரண்டு சட்டைகளை எடுக்க, அதை ரசித்து புன்னகைத்துக் கொண்டவன் அவனது வங்கி கணக்கு அட்டையை நீட்டினான்.
அதை அவனிடமே திருப்பிக் கொடுத்தவள், அவளது சம்பாத்தியத்தில் அந்த சட்டைகளுக்கு பணம் கொடுக்க, தன் பச்சரிசிப்பற்கள் பிரகாசிக்க புன்னகைத்துக் கொண்டான்.
இருவரும் வெளியே வர, கடை வாசலில் ஒரு வயோதிகர் வண்ண வண்ண நிறங்களில் கோழிக் குஞ்சுகள் விற்றுக் கொண்டிருந்தார்.
அதை ஆர்வமாய் பார்த்த சங்கமித்ரா, “ஐ கலர் கோழிக்குஞ்சு” என்று குதூகலமாய் அவனிடம் கூற,
“போயி பாத்துட்டு வரதோட இருக்கட்டும். அத வாங்கித்தானு என்ட கேட்டுபுடாத மித்ரா” என்றான்.
“ஏங்க?” என்று இறங்கிய குரலில் அவள் கேட்க,
“பாக்க அழகாத்தேம் இருக்கும் மித்து. வாங்கி வளக்க முடியாது” என்றான்.
“ஏன் வளக்க முடியாது? ரொம்ப சேட்டை பண்ணுமா?” என்று அவள் கேட்க,
“இல்லமா. செத்துபோயிடும்” என்றான்.
“செத்துடுமா?” என்று அதிர்வாய் அவள் கேட்க,
“ஆமாடி. ரெண்டு மூனு நாளுகூட தங்காது. பொக்கு பொக்குனு செத்துடும். தேவிகா வாங்கியே ஆவேம்னு அடம் பண்ணினானு ஒன்னு வாங்கி தந்தேம். அதோட அப்புடியொரு வெளாட்டு. அதுக்கு பேரு வைக்கேம் சோறு வைக்கேம்னு அந்த ரெண்டு நா அவ பண்ண அட்டூழியமிருக்கே. யப்பா.. ஆனா அது செத்துபோனதுதேம் போச்சு, துட்டி வீடு போல ஆவிபோச்சு வீடே. என் கோழிகுட்டி செத்துபோச்சுனு உருண்டு உருண்டு கரிச்சு, உங்காம கொள்ளாம, காச்சல இழுத்துவிட்டுகிட்டு ஆஸ்பத்ரில டிரிப்ஸ ஏத்திதேம் புள்ளைய தேத்தி கூட்டிகிட்டு வந்தோம். நாம வாங்கியாராம இருந்தா புள்ளைக்கு இப்புடி ஆயிருக்காதேனு ரொம்ப வெசனமா போச்சு. அதுலருந்து இந்த கோழிக்குஞ்ச பாத்தாலே ஓட்டந்தேம்” என்றான்.
“அம்மாடீ. இத்துனூண்டு கோழிக்குஞ்சுல இப்படியொரு ஃப்ளாஷ்பேக்கா? வேணாம் சாமி வேணாம். எனக்கு கோழிக்குஞ்சே வேணாம்” என்று சங்கமித்ரா கூற,
வாய்விட்டு சிரித்தவன், அவளை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
அப்போதே வேலை முடித்து கார்த்திகா மற்றும் விக்ரமும் வீடுவர, வாங்கி வந்த உடைகளை அவர்களிடம் காட்டினாள்.
“எனக்கெதுக்குடா புதுத்துணி?” என்று விக்ரமன் கேட்க,
“நான் வாங்கலலே. அவோ வாங்கினது. நீயாச்சு அவளாச்சு” என்று வளவன் கூறினான்.
“அத்தான் என் ஆசைக்காக வாங்கினேன். நானும் அக்காவும் மேட்சிங் போல, நீங்களும் அவங்களும் ஒன்னுபோல போட்டாதானே நல்லாருக்கும்?” என்று ஆசையாய் அவள் கூற,
அதில் புன்னகைத்துக் கொண்டவன் சட்டையைப் பிரித்துப் பார்த்து, “ரொம்ப அழகாருக்குத்தா” என்றான்.
“தேங்ஸ் அத்தான். அக்கா உங்களுக்கு புடவை ஓகே தானே? அரக்கு ப்ளௌஸ் உங்கட்ட இருக்குல? அதான் நான் தனியா ரெடிமேட் ப்ளௌஸ் எடுக்கலை. இதுக்கு சட்டை பிறகு கூட தெச்சுப்போம்” என்று சங்கமித்ரா கூற,
“ம்ம் இருக்குது சங்கு. நானுமே அத ரோசிச்சுதேம் இத செலெக்ட் பண்ணேம்” என்று கார்த்திகா கூறினாள்.
“சூப்பர் க்கா. நாளைக்கு நாம ஜமாய்க்குறோம்” என்று சங்கமித்ரா கூற,
“நீங்க மட்டுமா? நாங்க சிஸ்டர்ஸ் மூனுபேரும் கூட ஒன்னுபோல புடவை கட்ட ப்ளான் போட்டிருக்கோம்” என்றபடி தனலட்சுமி வந்தாள்.
“பாருடா! மைணி இப்பதேம் பொடவ எடுத்தேம்னாவ” என்று கார்த்திகா கூற,
“அதுக்கு சட்ட தெச்சு வரலியாம். நாந்தேம் அக்காட்ட, முன்ன பொங்கலுக்கு நானு, திரிக்கா, தீபிக்கா ஒன்னுபோல எடுத்தத போடுவம்னு .ரோசனை சொன்னேம். வீட்டு மருமவளுவ ஒருபக்கம் கலக்கட்டும், நாம ஒரு பக்கம் கலக்குவோமின்னேன்” என்று தனம் உற்சாகமாய் கூறினாள்.
“பாருடா.. கலக்குங்க கலக்குங்க” என்ற கார்த்திகா, “பாத்தியா சங்கு? நமக்கு போட்டியா வாராவ. நம்ம கெட்டப்தேம் நாளைக்கு பலமாருக்கனும்” என்று கூற,
“ஆமா ஆமா க்கா” என்று அவளும் ஒத்து ஊதினாள்.
“இஞ்சார்ரா.. அப்புடி போவுதா கதை? இருங்க இருங்க, நாங்களும் பந்தோஸ்தா கெளம்பி வரோம் ஒங்களுக்கு டஃப் குடுக்க” என்று கூறி தனலட்சுமி சிரிக்க, அவள் பேச்சில் அனைவருமே சிரித்துக் கொண்டனர்.
“ஏத்தா ஏதோ வேல வந்துருக்குனு சொன்னியே. என்ன சொல்றாவ?” என்று வளவன் கேட்க,
“அடுத்த வாரமிருந்து சேரச் சொல்லி இப்பதேம் சொன்னாவ அண்ணே. அதச்சொல்லத்தேம் வந்தேம். பேச்சு பொடவ பக்கட்டு வந்துடுச்சு” என்று கூறினாள்.
“சோலிக்கு நடுல படிக்க ஒனக்கு தோதுபடுமா தனம்?” என்று விக்ரமன் கேட்க,
“பெருசா பிரெச்சன வாராதுனுதேம் தோனுதுன்னே. எறங்கி பாத்தாதான தெரியும்?” என்றாள்.
அதில் புன்னகைத்துக் கொண்டவன், “சரிதாம்தா. ஒனக்கும் நாலு காசு சம்பாதிக்குற தெம்பு வாருமில்ல. கொஞ்ச நாளுக்கு கஸ்டமாருந்தாலுங்கூட வேலை பாத்துபோட்டுட்டு கூட மறுக்கா படிக்கப் போ. கூட ஒருவருஷமானா ஆவட்டுமே” என்று கூற,
“அதேதாம் அண்ணே என் ரோசனையும்” என்றாள்.
இந்த பேச்சு வார்த்தை நிகழும்போதே வடிவேலும் உள்ளே நுழைந்தான்.
அவனையும் தன் தங்கையையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்ட வளவன், “ஏம்லே வேலா, நீ நாளைக்கு விசேஷத்துக்கு என்னம்லே உடுத்தப்போற?” என்று கேட்க,
ஓரவிழியால் தனத்தைப் பார்த்துக் கொண்டு, “சந்தனக்கலருலே” என்றான். அவள் புடவை பச்சை மற்றும் சந்தனம் நிறம் கொண்டதாயிற்றே!
“அட என்னம்லே நீயு? நல்லா நெறமாருக்கவேன் என்னத்துக்கு சந்தனக்கலர உடுத்திகிட்டு. செவப்பு உடுத்திட்டுவா. நாம ஒரே கலருல உடுத்துவோம்” என்று வளவன் கூற,
“செவப்பா?” என்றபடி தனத்தைப் பார்த்தான்.
வளவன் கண் காட்டியதிலேயே அவனது குறும்பை புரிந்துகொண்ட விக்ரம், “ஆமாலே. செவப்பு உடுத்து. நானும் வளவேனும் இதோ, இதேம் உடுத்தப்போறம்” என்று சட்டையைக் காட்ட,
தனம் அவனை தீயாய் முறைத்தாள்.
'சரினு சொல்லிடுவியலோ?’ என்ற அப்பட்டமான மிரட்டல் அவள் பார்வையில் தெரிய, ‘ஆத்தீ கண்ணாலயே எரிச்சுபுடுவா போலியே’ என்று தனிச்சையாய் நெஞ்சில் கைவைத்து நீவிக்கொண்டு மூச்சுவிட்டான்.
“என்னம்லே தெனயா வருதா?” என்று அவன் செயலில் சிரிப்பை கடினப்பட்டு அடக்கியபடி விக்ரமன் கேட்க,
“இருக்காதா பின்ன அனலாருக்குதுல்ல? அதேம் அண்ணேனுக்கு காந்துது போல” என்று கார்த்திகாவும் தன் பங்கிற்கு கேலியில் இறங்கினாள்.
முதலில் இவர்கள் விளையாட்டு புரியாது விழித்த சங்கமித்ரா, தனலட்சுமியின் கோபப் பார்வையைக் கண்டபின் வந்த சிரிப்பை இதழ் மடித்து அடக்கிக் கொண்டு, “ஆமாண்ணா நீங்களும் செகப்பு கலர் போடுங்க” என்றாள்.
'நீயுமாடா தங்கபுள்ள?’ என்பதாய் அவளைப் பார்த்தவன் தன் குரலை செறுமிக் கொண்டு, “இல்ல இல்ல. நான் அந்த சட்டதேம் போடுவேம். அந்த சட்ட புதுசுதேம். நல்லாருக்கும்” என்க,
“ஏம்லே மக்கா.. யாரும் அதுதேம் போடனும்முனாவளோ?” என்று விக்ரமன் படு நக்கலாய் கேட்டான்.
தற்போது தன் அண்ணனை முறைத்தவள், “ஏன் எல்லாம் அவியள நளியடிக்கீய?” என்க,
“பாருடா! சப்போர்டு” என்று சங்கமித்ரா கூறினாள்.
“அண்ணேனுக்கு நீங்க சப்போர்ட் பண்ண மாட்டியளாக்கும்?” என்றவள், “அவிய நாஞ்சொன்னதத்தேம் உடுத்துவாவ” என்று சட்டமாய் கூற,
“எவியட்டி நீ சொன்னத உடுத்தோனும்?” என்றபடி வெளியே சென்றிருந்த தெய்வநாயகி நுழைந்தார்.
அவர் வருகையில் ஒருநொடி சர்வமும் ஆட்டம் காண, ஒரு பெருமூச்சில் தன்னை சமன் செய்தவள், “அக்காவ சொன்னேம்மா. இவியளாம் அக்காவ வேற சீல கட்டவைப்பேம்னு நளியடிக்காவ. அதேம் நாஞ்சொன்னததேம் அக்கா உடுத்துவாகன்னே” என்று கூற,
“நீயு சொல்லி அவிய ரெண்டேரும் மறுப்பாவளா? அதெல்லாம் உடுத்துவாவட்டி” என்றவர், “எய்யா வேலு எப்ப வந்த?” என்றார்.
அவளைப்போல் அவனால் சட்டென்று அதிர்விலிருந்து வர முடியவில்லை.
“அ..அத்த” என்று அவன் தடுமாற,
'சரியான பயப்பத்தி' என்று மானசீகமாய் தனம் தலையில் அடித்துக் கொண்டாள்.
“என்னம்லே ஆடு திருடினவனாட்டம் முழிக்க” என்று தெய்வா கேட்க,
“ஆடுதாம்மோய் நம்மூட்டு ஆட்டத்தேம் திருடிபுட்டியாம்” என்று வளவன் நக்கலாய் கூறினான்.
அதில் வடிவேலு இன்னும் பதற, “அய்யோ அண்ணே ஏதோ சோலி வெசயமா பேச படபடத்துட்டு வந்துச்சு. மாத்தி மாத்தி கேள்வியா கேட்டு இன்னும் தெனயாவுது பாருங்க. இருங்கண்ணே நான் காபி தண்ணி கொண்டாரேம்” என்று சூழலை சரிசெய்தபடி கார்த்திகா உள்ளே சென்றாள்.
தெய்வநாயகி பார்வை தற்போது சங்கமித்ரா கையிலுள்ள புடவைக்குத் திரும்ப, அவர் பார்வை புரிந்து வாங்கிவந்த உடைகளை காட்டினாள்.
அவள் தனக்கு மட்டுமாய் வாங்கியிருப்பதாக நினைத்தவர், “வீடுங்குற வீட்டுல ஓங்கூட இம்புட்டு பேரு இருக்காவ. இப்புடி போயி மினுக்க ஒனக்குனு வாங்கிட்டு வந்தியாக்கும்?” என்று கேட்க,
“அம்மா வாய்க்கு வந்தத பேசாதீய. அவோ மைணிக்கு, எனக்கு விக்ரமனுக்குனு சேத்துதேம் வாங்கிருக்கா. அப்புடியே அவளுக்கு மட்டுமா வாங்கினாலுந்தான் என்ன தப்புருக்கு? அவோ அக்கா விசேஷம். அவ புதுத்துணி உடுத்தத்தான?” என்று வளவன் பொறிந்தான்.
அவன் செய்தியில் சற்றே அதிர்ந்தாலும் அதை காட்டிக் கொள்ளாதவர், “ஓம் பொண்டாட்டிய ஒன்னும் சொல்லலைய்யா. ஆனா ஒன்னு கையும் கணக்குமா இருந்துகிடு. அவோ ஆடுதானு நீயும் செலவ வாரி எறைக்காத” என்றுவிட,
கோபமாய் பேசவந்தவனைக் கெஞ்சுதலான பார்வையில் பெண்ணவள் தடுத்தாள்.
அதில் ஆத்திரம் கொண்டு, “ச்சை.. இந்தூட்டுல எம்பொண்டாட்டிக்குனு ஒரு மருவாதியில்ல” என்ற முனகலுடன் அவன் எழுந்து செல்ல,
“சும்மா அத என்னமாத வைய்யாதீய ம்மா. அதுபாட்டுக்கு செவனேனு கெடக்கு” என்ற விக்ரம், “ஏத்தா நீயு போயி துணிக்கு மஞ்சவச்சு எடுத்துட்டுப்போ” என்று அவளை அவ்விடம் விட்டு அப்புறப்படுத்தினான்.
Comments
Post a Comment