திருப்பம்-23
திருப்பம்-23
“அவ பேர்ல சேத்து வச்ச பணம் ஒரு அஞ்சு லட்சம் இருக்கு மாப்ள. அதுபோக தாட்சா பேர்ல சேர்த்து வச்சது ஒரு ரெண்டு லட்சத்தி சொச்சம் இருந்தது. கல்யாணத்துக்கு துணிமணியெல்லாம் அதுலருந்து எடுத்தது போக மிச்சம் எம்பதாயிரத்தி சொச்சம் இருக்கும்” என்று சச்சிதானந்தம் கூற,
“அவ்வளவுக்கா ப்பா டிரஸ் எடுத்தோம்?” என்று ஆச்சரியமாய் கேட்டாள்.
“கல்யாணத்துக்கு முகூர்த்தப் புடவையே நாப்பதாயிரம்டா. அதுபோக மத்த சடங்குகளுக்கு, மாப்பிள்ளைக்கு நம்ம பக்கத்துலருந்து எடுத்துக் குடுக்க வேண்டியது, நம்ம வீட்டு பக்கம் நெருங்கின சொந்தங்களுக்கு எடுக்க வேண்டியதுனு நிறையா எடுத்தோம்ல?” என்று அவர் கூற,
“முகூர்த்தப் புடவை நாப்பதாயிரமா?” என்று அதிர்ந்தாள்.
“இந்தாடி. அவங்க பேசும்போது நீ எதுக்கு வாயப்பாத்துட்டு இருக்க? கல்யாணங்குறது வாழ்க்கைல ஒருக்கா நடக்குறதுதான். அதுக்கு செலவு ஆகும்தான?” என்று தாட்சாயணி தேநீருடன் வந்து அவளை அதட்ட,
“ஏம்மா அதுக்குனு அவ்வளவுக்காமா எடுக்கனும்? ஒருநாள் கூத்துக்கு” என்று ஆயாசமாய் கேட்டாள்.
“முகூர்த்தப் புடவை அன்னையோட நிக்குறதில்லைடா” என்று சச்சிதானந்தம் கூற,
“அவதான் விவரம் புரியாம பேசுறானா நீங்களும் ஏங்க?” என்ற தாட்சாயணி, “இங்க பாரு சங்கு. முகூர்த்தப் புடவை நம்ம எடுத்ததே கம்மி விலைக்கு தான். அது நல்லா பகட்டா எடுத்தாதான் நாலு பேர் பேச்சுக்கு ஆளாகாம இருக்கலாம். அவங்க பக்கம் வசதி வேற அதிகம். முகூர்த்தப் புடவைக்குக் கூட நாலு காசு கூட போடலையேனு பேச்சு வந்துடக்கூடாதுல? நீ ஒன்னும் ஒன்னுமில்லாத குடும்பத்துலருந்து வரலைனு காட்ட வேண்டாமா?” என்று கேட்டார்.
சங்கமித்ரா அதிருப்தியாய் முகம் சுளிக்க, சிறு புன்னகையுடன் அவள் தலை கோதிய அவிநாஷ், கண்கள் மூடித் திறந்து அவளை அமைதிப் படுத்தினான்.
“அதுமட்டுமில்ல. நாளபின்ன தாலிகொடி மாத்துறதுக்கு, பிள்ளை உண்டானா வலைகாப்புக்குனு எல்லாத்துக்கும் முகூர்த்த புடவைதான் உடுத்தனும்” என்று அவர் கூற,
“அய்யோ அம்மா பரதேவதை. ஆளை விடுங்க. நான் ஒன்னுமே கேட்கலை” என்று தலைக்குமேல் கையெடுத்துக் கும்பிட்டாள்.
அதில் அவிநாஷ் பக்கென்று சிரிக்க, தாட்சாயணி மகளை முறைத்துவிட்டு, “இவள வச்சுகிட்டு கணக்கு வழக்கெல்லாம் பேசாதீங்கங்க” என்றபடி சென்றார்.
சச்சிதானந்தம் புன்னகைக்க, செல்லும் அன்னையைக் கண்டு அழகு காட்டியபடி எழுந்து அவருடன் சமையலறை சென்றாள்.
பேச்சு வார்த்தைகள் முடியவும், “பாப்பா” என்று அவிநாஷ் அழைக்க,
“சொல்லுங்க அத்தான்” என வந்து நின்றாள்.
“வாசலுக்கு வா” என்றபடி அவளுடன் வெளியே வந்தவன் தனது மகிழுந்தின் பின் பக்கம் அழைத்துச் சென்று அதைத் திறந்தான்.
“என்னது அத்தான்?” என்று ஆர்வத்துடன் வந்து எட்டிப் பார்த்தவள் அங்கிருந்தப் பொருளைக் கண்டு இன்பமாய் அதிர்ந்து விட்டாள்.
“அ..அத்தான்!” என்று அவள் ஆச்சரியமாய் அழைக்க,
புன்னகையுடன் அவள் முகம் பார்த்தான்.
அவள் அவனிடம் இரண்டு நாட்கள் முன்பு ஆர்வத்துடன் கேட்ட டேப் ரெகார்டர் ரேடியோ அங்கு அழகாய் வீற்றிருந்தது.
“அத்தான்.. கிடைக்காதுனு சொன்னீங்க? எப்படி கிடைச்சது?” என்று அவள் கேட்க,
“புடிச்சிருக்கா?” என்று கேட்டான்.
அவனைத் திரும்பிப் பார்த்தவள் அத்தனை மகிழ்ச்சியோடு, “என்னக் கேள்வி அத்தான் இது?” என்க,
அழகாய் சிரித்தவன், “எனக்குத் தெரிஞ்ச பையன் கிட்டருந்து வாங்கினேன். அவங்க தாத்தா வச்சிருந்தாங்க. இப்ப அவரில்லை. ஆனா அவங்க பாட்டி அதை யாருக்கும் குடுக்காம வச்சிருக்காங்கனு சொல்லுவான். அவங்க பாட்டியும் இப்ப ரீசென்டா தான் இறந்து போனாங்க. நிறைய பழைய பாட்டோட கேசெட்ஸும் இருந்தது. அவ்வளவும் டெய்லி ஈவ்னிங் காஃபி டைம்ல போட்டுவிட்டு கேட்டுட்டே தான் அவங்க நேரம் போகும்னு ரொம்ப ரசிச்சு சொல்லுவான்.
நான் கூட ஒருமுறை நேர்ல போய் பார்த்திருக்கேன். அதான் வச்சிருக்கானா தூக்கிப்போட்டுட்டானானு கேட்டுப் பாப்போமேனு கேட்டேன். இன்னும் வச்சிருக்குறதா சொன்னான். அவங்க தாத்தா பழைய பொருள் எல்லாம் ரிப்பேர் பார்க்கும் வேலைதான் பார்த்துட்டு இருந்தார். பழுதுபோகாம இதை ரொம்ப பத்திரப்படுத்தி, அப்பப்ப புதுப்பிச்சுட்டே இருப்பார். அதான் இன்னும் நல்ல கண்டீஷன்ல இருக்கு. நீ கேட்டனு சொன்னேன். எடுத்துக்கோடா இங்க யாரும் யூஸ் பண்றதில்லைனு சொன்னான். அதான் அந்தப் பழைய கேசட்டோட சேர்த்து தூக்கிட்டு வந்துட்டேன்” என்று நீளமாய் பேசி முடித்தான்.
“அத்தான் யூ ஆர் சோ சுவீட் அத்தான். எனக்கு அவ்ளோ சந்தோஷமாருக்கு. ரொம்ப தேங்ஸ் அத்தான்” என்று அவனை பாவை அணைத்துக் கொள்ள,
தோளைத் தட்டிக் கொடுத்தவன், “பாப்பா ஹாப்பி தானே? அது போதும்” என்றான்.
“அத்தான் இன்னும் ஒரே ஒரு உதவி. இதுல எப்படி ரெகார்ட் பண்றதுனு மட்டும் சொல்லிக் குடுத்துட்டுப் போங்க அத்தான்” என்று அவள் கூற,
“ஓகேடா பாப்பா” என்றான்.
அதன்படி அதைத் தூக்கிக் கொண்டு இருவரும் உள்ளே வர, “என்னதுடி இது?” என்று தாட்சாயணி கேட்டார்.
'ஆத்தீ இப்ப இது எதுக்குனு அம்மா ஆராய்ச்சி பண்ணுவாங்களே?’ என்று விழிகள் விரிய பாவை விழிக்க,
“நான் தான் கொண்டு வந்தேன் அத்தை. வளவன் தம்பிக்கு டேப் ரெக்கார்டர்ல பாட்டு கேட்க புடிக்கும்னு ஒருமுறை சொன்னான். ஆனா இப்ப இல்லையாம். என் பிரெண்ட் வீட்ல ஒன்னு இருக்கு வேணுமானு கேட்டான். அதான் கொண்டு வந்துருக்கேன்” என்று அவிநாஷ் கூறினான்.
“ஓ அப்படியா மாப்பிள்ளை” என்றவர், “பாத்து உள்ள கொண்டுபோய் வைடி” என்று கூற,
“சரிமா” என்று நல்லப்பிள்ளையாய் தலையசைத்தவள் உள்ளே சென்று வைத்தாள்.
தானும் வந்து கேசெட் அடங்கிய பெட்டியை வைத்தவன் அவளை நக்கலாய் நோக்க, “அத்தான் கேலி செய்யாதீங்க” என்று சிணுங்கலாய் கூறினாள்.
அதில் வாய்விட்டு சிரித்தவன், “வாண்டு. என்கிட்டயும் உங்கக்காகிட்டயும் மட்டும் வாய் வாகா பார்டர் தாண்டுது. உங்கம்மா கேட்டதும் திருவிழால தொலைஞ்சுபோன பிள்ள மாதிரி அந்த முழி முழிக்குற நீ?” என்று கேட்க,
“பின்ன, உங்க மாமியார்கிட்ட நான் தான் கேட்டேன்னு சொன்னா நூறு கேள்வி கேப்பாங்க. ஏன் மாப்பிள்ளைய கஷ்டபடுத்துறனு முதல ஒரு பாட்டு பாடுவாங்க. அப்றம் இன்னும் சின்ன மாப்பிள்ளைக்கூட பேசிட்டு தான் இருக்கியானு அடுத்த பாட்டை ஆரம்பிப்பாங்க. ஹப்பா.. அதை முழுசா கேட்டு முடிக்கும் குள்ள என் ஜீவன் ஜீரோ பேலென்ஸ்ல வந்து நின்னுடும்” என்றாள்.
“வாயாடி” என்று செல்லமாய் அவளைக் குட்டிவிட்டு சிரித்தான்.
பின் அதில் எப்படி பதிவு செய்ய முடியும் என்பதையெல்லாம் அவளுக்கு சொல்லிக்கொடுக்க, அனைத்தையும் சிரத்தையுடன் கேட்டுக் கொண்டாள்.
“ஓகேவாடா?” என்று அவிநாஷ் கேட்க,
“ஓகே அத்தான்” என்றாள்.
“ம்ம்” என்ற அவிநாஷ் ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு, “பாப்பா உங்கிட்ட கொஞ்சம் பேசனும். அத்தான் சொல்றதை பொறுமையா கேட்டுக்கோ” என்று கூற,
“என்ன அத்தான் பீடிகை எல்லாம் பலமாருக்கு?” என்றவள், “சொல்லுங்கத்தான்” என்றாள்.
“பாப்பா இதை எல்லாருமே உன்கிட்ட சொல்லத்தான் நினைக்குறாங்க. ஆனா சொன்னா எங்க நீ பயந்துடுவியோனுதான் யாரும் சொல்ல முன்வரலை. ஆனா எல்லாமே தெரிஞ்சு நீ இந்த கல்யாண பந்தத்துக்குள்ள நுழையனும்னு நான் நினைக்குறேன்டா” என்று அவிநாஷ் கூற,
“என்ன அத்தான்?” என்று கேட்டாள்.
“பாப்பா உனக்கே தெரியும். அவங்க அம்மாக்கு கல்யாணத்துல பெருசா உடன்பாடு இல்லை. பிரச்சினைக்குப் பிறகிருந்து எந்த விஷயத்துலயும் அவங்க கலந்து பேசுறதுல வரவேயில்லை” என்றவன் அவளது முகம் மாற்றத்தைக் கண்டு கனிவாய் நோக்கினான்.
“பொறுமையா கேலுடா. பயப்படாத” என்ற அவிநாஷ், “இப்ப நீயும் அவரும் மட்டும் தான் என்ற பேச்சுவார்த்தையில் கல்யாணத்துக்கு முன்ன சண்டைகள் எதுவுமில்லாம எப்பவுமே சந்தோஷத்தோட இருக்குற போலத்தான் இருக்கும். ஆனா கல்யாணத்துக்குப் பிறகும் அப்படியேதான் இருக்கும்னா நிச்சயம் கிடையாதுடா. திருமண பந்தம் அத்தனை ஈசியானது இல்லை. அதுல சந்தோஷம் மட்டுமே கிடையாது. அந்த பந்தம் ஒரு உணர்வுக் குவியல். அதுல துரோகத்துக்கு மட்டும் தான் இடம் கிடையாதே தவிர, கோபம், அன்பு, காதல், சண்டை, வருத்தம்னு அத்தனை உணர்வுகளும் நிறைஞ்சிருக்கும்” என்றான்.
என்ன சொல்ல வருகின்றாய்? என்ற பார்வையோடு சங்கமித்ரா அவனை நோக்க,
“உன் மாமியாரை நினைச்சு நானும் மாமாவும் தயங்கினப்ப, அத்தையும் கீதாவும் சொன்ன விஷயம் இதுதான். குடும்பத்துல எல்லா உறவும் அனுசரினையா அமையாது. மாமியார் நல்லா அமைஞ்சா, நாத்தனார் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பாங்க. நாத்தனார் நல்லாருந்தா மாமியார் கொஞ்சம் அப்படி இப்படி இருப்பாங்க. ரெண்டு பேருமே நல்லா அமைஞ்சா மாமனார் கூட ஒத்து வராது. இப்படி எதாவது ஒரு உறவாது ஒத்துவராமதான் அமையும். எல்லா உறவும் நல்ல விதமா அமையும்படியான ஒரு குடும்பத்தை தேர்ந்தெடுக்குறது ரொம்ப கஷ்டம்னு சொன்னாங்க. அது உண்மையும் கூட. வளவன் அம்மாக்கு உன்னை பிடிக்கலைனு இல்லை. பிடிக்காம இருந்திருந்தா நிச்சயம் எப்பாடுபட்டாவது கல்யாணத்தை நிறுத்தியிருப்பாங்க, அல்லது அதுக்கு முயற்சி எடுத்திருப்பாங்க. அதேசமயம் பிடிச்சிருக்குனும் இல்லை.
நல்லா புரிஞ்சுக்கோ. அவங்களுக்கும் உனக்கும் கல்யாணத்துக்குப் பிறகு ஒத்து வராம போகலாம். ஏன் சண்டைகள் கூட வரலாம். உன் மூத்த நாத்தனார் கூடயும் உனக்கு ஒத்துவராம போகலாம். எது நடந்தாலும் உன்னை நீ ஹர்ட் ஆகாம பார்த்துக்கனும். நிச்சயம் நீ மத்தவங்கள ஹர்ட் பண்ண மாட்ட. அதே அக்கறையை உனக்கும் குடு. என்ன சொன்னாலும் உடனே உடைஞ்சுப் போயிடாத. எல்லாத்துக்கும் தழைஞ்சுபோனு உன்கிட்ட நிச்சயம் நான் சொல்ல மாட்டேன். முடிஞ்சளவு தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்த்துக்கோ. உன்னை கஷ்டப்படுத்தும் வகையில் இருந்தா எடுத்துச் சொல்லப் பாரு. எந்த முடிவானாலும் தைரியமா எடுத்து ஃபேஸ் பண்ணு. அவங்க எப்படினு இப்ப வரைக்கும் உறுதியில்லை தான். இருந்தாலும் சொல்றேன். அதேபோல வளவன் கூடயும் வாழ்க்கை எப்பவுமே ஸ்மூத்தா போகாது. கணவன் மனைவிக்குள் காதல் மட்டுமே இல்லை பாப்பா. சண்டைகளும் வரும். ஆண்கள் நாங்க எப்பவும் ஒரு சண்டை போட்டா அதை அந்த இடமே கட் பண்ணிட்டு கடந்து போயிடுவோம். அதை பற்றின மறுயோசனைகள் எங்களுக்கு இருக்காது. அவர் உன்னை புரிஞ்சு நடக்குற போல நீயும் அவர் இடத்திலிருந்து யோசிச்சு நடந்துக்கனும்டா. வரும் அத்தனையையும் புரிஞ்சு உன்னையும் வருத்தாம, அடுத்தவங்களையும் வருத்தாம நடந்துகிட்டா வாழ்க்கை சுமுகமா இருக்கும். இதையும் நீ தெரிஞ்சுகிட்டு கல்யாண பந்தத்துக்குள்ள நுழையனும்னு தான் உனக்கு சொல்றேன்டா” என்று நீளமாக பேசி முடித்தான்.
முதலில் பயந்து விழித்தவள் முகத்தில் இப்போது ஒரு தெளிவு இருந்தது. சிலநிமிட மௌனத்திற்குப் பின் நிமிர்ந்த சங்கமித்ரா, “நிச்சயம் நான் புரிஞ்சு நடந்துக்க முயற்சிகள் எடுப்பேன் அத்தான்” என்று தீர்க்கமாகக் கூறினாள்.
அவளால் முடியுமா என்று அவளுக்குத் தெரியாதபோதும், முயற்சி எடுப்பேன் என்பதில் உறுதியாகவே இருந்தாள். அந்த உறுதியே அவள் குரலிலும் எதிரொலித்தது.
அதை புரிந்துகொண்டு அவள் தலைகோதிய அவிநாஷ், “நீ புரிஞ்சுப்பனு எனக்கு தெரியும்டா. ஹாப்பியா இருக்கனும் நீ. அதுதான் எங்களுக்கு வேண்டும்” என்று கூற,
“நீங்க என் அப்பாக்கும் மேல அத்தான். உங்க வேண்டுதல் என்னை சந்தோஷமா வச்சிருக்கும்” என்றாள்.
அவளுக்கு அனைத்தையும் விளக்கிவிட்ட திருப்தியுடன் புன்னகைத்த அவிநாஷ் எழுந்து செல்ல, அவனை வழியனுப்பிவிட்டு உள்ளே வந்து அந்த பெட்டியைப் பார்த்தாள்.
ஒரு தம்பதியரின் முதுமைகால காதலைத் தாங்கி வாழ்ந்து கொண்டிருந்த அரிய பொக்கிஷம் தற்போது தங்கள் காதலில் பயணிக்க இருப்பதாய் உணர்ந்தாள்.
'மிஸ்டர் திருமாவளவன் சங்கமித்ரா. உங்களுக்கான பரிசு சீக்கிரம் உங்களைத் தேடி வரும் பாருங்க’ என்று எண்ணிக் கொண்டு புன்னகைத்தவள் அதனை இன்பமாய் வருடி மகிழ்ந்தாள்.
Comments
Post a Comment