1.சாராவின் ஜீபூம்பா
அத்தியாயம்-01
சீராய் 'டிக் டிக் டிக்' என்று அடிக்கும் கடிகாரச் சத்தமானது, பிறந்த குழந்தையின் அழுகை, வளர்ந்த குழந்தைகளின் சண்டை, பெரிய பிள்ளைகளின் பள்ளிப் பரபரப்பு என்று அனைத்தினாலும் உருவான சத்தங்களில் மறைந்தே போனது அந்த ஆசிரமத்தில்.
"இப்ப நீ வருவியா மாட்டியா? எனக்கு லேட் ஆகுது சாரா" என்று வெளியே கத்திய சிறுமி சாய்ஷாவின் குரலில் உள்ளே சலித்துக் கொண்ட சாரா, பற்தூரிகையை வாயைவிட்டு எடுத்துக் கொண்டு,
"ஒருநாள் ஸ்கூலுக்கு லேட்டா போனா ஒன்னும் குறைஞ்சுட மாட்டடா சாய்ஷு.." என்றுவிட்டு மீண்டும் பல்லைத் துலக்கினாள்.
"யா அல்லாஹ்" என்று கீழே அமர்ந்த அந்தச் சிறுமி காத்திருக்க, தோழியை மேலும் வருத்தாமல் குளித்து முடித்து தனது பள்ளிச் சீருடையில் வந்த அந்த ஏழு வயது சுட்டி வாண்டு,
"சாய்ஷு நான் எப்படி இருக்கேன்?" என்று வினவ,
"அழகா இருக்க. நான் குளிச்சுட்டு வரேன்" என்றபடி சென்றாள்.
சரியென்ற தலையாட்டலுடன் கீழே சென்ற சாரா,
"சுபி அக்கா.. குடுமி போட்டுவிடுங்க" என்று அங்குள்ள பதினைந்து வயது பெண்ணொருத்தியிடம் கேட்க,
"ஏ குட்டி வாண்டு.. என்ன இவ்ளோ லேட்டு?" என்றபடி அவளது குட்டி முடியை இரண்டாகப் பிரித்து குடுமி போட்டுவிட்டாள்.
அதைக் கண்ணாடி முன்பு நின்று ஆட்டிப் பார்த்துக் கொண்ட சாரா,
"அழகா இருக்கு க்கா" என்று அவளுக்கு முத்தமிட்டுவிட்டு வேகமாக உணவு உட்கொள்ளச் சென்றாள்.
அவள் உண்டு கொண்டிருக்கும்போதே அந்த பிரத்யேக வண்டியின் சத்தம் கேட்டுவிட,
"அச்சோ… போச்சு போச்சு" என்றபடி உணவை அள்ளி வாயில் திணித்தாள்.
அந்த ஆசிரமத்தினை நடத்தும் பிரபாதேவி, "ஏ குட்டி வாண்டு.. அடைச்சுக்காத. அவன் வெளிய பேசிட்டு தான் இருக்கான்" என்று கூற,
"அச்சோ மம்மி.. லேட் லேட்" என்றபடி உண்டு முடித்து தனது பொதிகளைத் தூக்கிக் கொண்டு, "டாட்டா பிரபா மம்மி" என்றுவிட்டு ஓடினாள்.
அங்குள்ள சிறுமி ஒருத்தியுடன் நெடுநெடுவென்று வளர்ந்து அசரடிக்கும் அழகுடனும் அசாத்திய ஆளுமையுடனும் தோற்றமளிக்கும் வாலிபன் பேசிக் கொண்டிருக்க, "லக்கீ.." என்றபடி ஓடி வந்தாள்.
தன் அருகே வந்துவிட்டவளைக் கண்டு முகமெல்லாம் பூரித்துப் புன்னகைத்தவன், மண்டியிட்டு அமர்ந்து அவளைக் கட்டிக் கொள்ள,
"அய்யோ லக்கீ.. காக்கி கரையாகிடும்" என்று அவன் அணிந்திருக்கும் காவலர்கள் சீருடையைக் குறிப்பிட்டுக் கூறினாள், சாரா.
சிரித்தபடி அவள் மூக்கைப் பிடித்து ஆட்டிவிட்டு அவளைத் தூக்கிக் கொண்டவன், "சாரா பேபி சாப்டாச்சா?" என்று வினவ,
"பேபி சாப்டாச்சு. லக்கீ சப்டாச்சா?" என்று கேட்டாள்.
அந்த சிறுமியிடம் பொய் கூறி அவனுக்குத்தான் பழக்கமே இல்லையே! இதழ் பிதுக்கி இல்லை என்று தலையசைத்தவன்,
"பேபிடால ஸ்கூல்ல விட்டுட்டு கண்டிப்பா சாப்பிட்டுட்டு தான் ஸ்டேஷன் போவேன்" என்று கூற,
"ஓகே டன் போலாமா?" என்றாள்.
அவளைத் தனது வண்டியில் முன்னே அமர்த்திக் கொண்டவன், வண்டியைக் கிளப்பிக் கொண்டு புறப்பட, காலையிலிருந்து தான் எழுந்து, குளித்து, வாயடித்து, உண்ட கதைகளைக் கூறிக் கொண்டே வந்தாள். சாராவின் பள்ளி வந்ததும், அவளைக் கீழே இறக்கிவிட்டு சீருடையை சரி செய்தவன்,
"டாட்டா பேபிடால்" என்க,
"மிஸ்டர் இலக்கியன்" என்று அருகே ஓர் குரல் கேட்டது.
அதற்கு அந்த வாலிபக் காவலனும் சாராவும் திரும்ப,
"அய்யயோ போச்சு" என்று சாரா வாய்க்குள் முனுமுனுத்துக் கொண்டாள்.
"சொல்லுங்க மேம்" என்று இலக்கியன் வினவவும்,
சாராவைப் பார்த்து ஒரு முறை முறைத்தவர், "சாரா சேட்டை வரவர அதிகமாகிட்டே வருது. நான் கிளாஸ்ல பாடம் எடுத்துகிட்டு இருக்கேன் பின்னாடி உக்காந்து நோட்ல வரைஞ்சுட்டு இருக்கா. இதுல பேச்சும் சிரிப்பும் வேற" என்று கூற,
சாராவை ஒரு கண்டனப் பார்வை பார்த்தவன், "சாரி மேம். நான் சொல்லி வைக்குறேன்" என்றான்.
அவரும் மேலும் இரண்டு அறிவுரைகளைக் கூறிவிட்டுச் செல்ல, சாராவை நன்கு முறைத்தவன், "ஏ வாண்டு.. என்னதிது?" என்றான்.
"அச்சோ லக்கீ.. மேக்ஸ் ரொம்ப போர். நான் தூங்கினாலும் திட்டுவாங்க. அதான் டிராயிங் வரஞ்சேன். சிரிச்சதும் நான் இல்ல.. எ.. என் பக்கத்துல தான்" என்றவள்,
'ஜுபூம்பா' என்று மனதோடு பல்லைக் கடித்துக் கொண்டாள்.
அவளை முறைப்பது அவனுக்குக் கடினமான செயல் என்று தெரிந்தும் அந்த ‘டாஸ்கை’ அவனுக்குக் கொடுப்பதையே இந்த வாண்டு வாடிக்கையாக வைத்திருந்தது.
"கிளாஸ்ல சேட்டை பண்ணாம இரு சாரா பேபி. இனிமே மேம் இப்படி வந்து சொல்லுறபோல வச்சுக்கக் கூடாது" என்று கூறியவனைப் பார்த்து முகத்தை பாவம் போல வைத்துக் கொண்டவள்,
"சாரீ லக்கீ" என்று கூற, அதற்குமேல் அவனால் கோபம் கொள்ள முடியுமா?
சின்ன சிரிப்புடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டவன், "உடனே முகத்தை இப்படி வச்சுக்காத" என்று கூற,
"லக்கீ குத்துது" என்று கன்னத்தை தேய்த்துக் கொண்டவள், "டாட்டா" என்க, அவள் மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு தானும் கையசைத்தான்.
கிளுக்கிச் சிரித்துவிட்டு சுட்டிக் குழந்தைகளின் கூட்டத்திற்குள் தனது பொதிகளோடு ஓடியவள் மீண்டும் அவனைத் திரும்பிப் பார்த்து சிரித்துவிட்டு ஓடினாள்.
அவள் தன் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்றவனுக்கு அன்றைய தினம் மனதில் வந்துபோனது.
எட்டு வருடங்களுக்கு முன்பு…
அந்த அழகிய ஆசரமத்திற்குள் எங்கும் குழந்தைகளின் சத்தமே கேட்டுக் கொண்டிருந்தது. எப்போதும் போல் தனது பத்தொன்பதாம் வயது பிறந்தநாளை ஆசிரமத்துப் பிள்ளைகளுக்கு உணவிட்டுக் கொண்டாடவேண்டி வந்தான் இலக்கியன்.
அவன் தோளில் பதிந்த ஒரு வலியகரம் தட்டிக் கொடுக்க, அந்த கரத்திற்கான சொந்தக்காரரை அதன் அழுத்தம் மற்றும் ஆளுமையிலேயே புரிந்துக் கொண்டவன், புன்னகையுடன் திரும்பினான்.
"ஹேப்பி பர்த்டே மை பாய்" என்று தனது கணீர் குரலில் கூறிய சக்கரவர்த்தியிடம் தனது ‘டிரேட்மார்க்’ புன்னகையைக் கொடுத்தவன், "தேங்ஸ் மாமா" என்க,
"நீ இங்கதான் வந்திருப்பனு தெரியும். அதான் வந்தேன். வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு வாடா. உன் அத்தை உனக்காக நிறையா செய்துவைத்திருக்கா" என்றார்.
"வரேன் மாமா. இங்க எல்லாரையும் பார்த்துட்டு வரேன்" என்று இலக்கியன் கூற,
அந்த இடத்தினை வருத்தம் கலந்த பார்வையுடன் பார்த்தவர், "உங்க அப்பாக்கும் ரொம்ப பிடிச்ச இடம்" என்று தன்போக்கில் கூறிவிட்டுப் பின் "ஸ்..சாரி இலக்கியா" என்று நாக்கை கடித்துக் கொண்டார்.
"நோ ப்ராப்ளம் மாமா. அவருக்கு பிடித்த இடம் என்பதால் தான் என்னை இங்க விட்டிருந்திருக்காங்க. விதியின் வசம் அத்தை அண்ட் உங்களால நான் இங்கிருந்து வரும்படி ஆயிடுச்சு" என்று அலட்டிக் கொள்ளாமல் கூறியவன் முகத்தில் அதே புன்னகை படர்ந்திருக்க,
"சரி இலக்கியா.. முடிச்சிட்டு வா" என்றுவிட்டுச் சென்றார்.
சென்று தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்து அதை உயிர்ப்பித்தவருக்கு அழையா விருந்தாளியாய் சில நினைவுகள். கண்கள் லேசாய் பனிய, வண்டியை நிறுத்தி வான் நோக்கிப் பார்த்தவர்,
"நான் இருக்கேன்டா.. உன் பிள்ளைய நல்லபடியா ஒரு நிலையில நிறுத்துறதுக்கு முன்ன உன்கிட்ட வரமாட்டேன்" என்று தன் நண்பனிடம் மானசீகமாகப் பேசிக் கொண்டார்.
மனதில் மெல்லிய கனம் கொண்ட அந்தப் பெரிய மனிதருக்கு தன் முன் சிரித்தபடி நின்ற இலக்கியன் முகம் நினைக்க நினைக்க வலித்தது.
‘அன்று தான் இல்லாது போனால்?’ என்று நினைக்கையிலேயே அவருக்கு உள்ளம் பதறியது. தன் நண்பன் அருவமாய் வந்து காட்டிக் கொடுத்ததாகத் தான் இன்றும் அவருக்கு நினைவு.
அங்கு ஆசிரமத்தின் தலைமையாளர் பிரபாவின் அறையில் அமர்ந்திருந்தவன், அவர் காட்டிய இடங்களில் கையெழுத்திட்டுவிட்டு தன்னிடமிருந்த காசோலையை நீட்டினான்.
அவனையும் அதையும் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தவர், "மேல் படிப்புக்கு பார்ட்டைம் ஜாப் அப்படி இப்படினு கஷ்டம் படுற. அதான் இவ்வளவு சொத்து இருக்கே இதிலிருந்து எடுத்தா என்னப்பா உனக்கு?" என்று வினவ,
"இந்த பணம் எனக்கு வேண்டாம் மேடம். இந்த பணம் எனக்கு பிடித்தவர்களை இழக்க வைத்த பணம். என்னுடைய முன்னேற்றம் இதிலிருந்து வேண்டாம். அதுக்குனு இவ்வளவு சொத்தை என்ன செய்யனு யோசிக்கும்போது நான் வந்த இடம் எனக்கு உரைத்தது. எனக்கு இந்த பணம் வேண்டாம்னு நான் துணிந்து வேற வழி பார்த்து போறேன்னா எனக்கு என் மாமாவோட சப்போர்ட் இருக்கு. ஆனா யாருமே இல்லாம இருப்பவர்களுக்கு? அதான் அவங்களுக்கு நான் துணையா இருக்கேன்" என்று நீளமாகப் பேசி முடித்தான்.
அதில் மீண்டும் புன்னகைத்துக் கொண்டவர் அவன் தலைகோதி, "நன்றிப்பா" என்க,
தானும் புன்னகைத்தவன், "குட்டீஸ் பார்த்துட்டு வரேன்" என்றுவிட்டுச் சென்றான்.
கீழே பூங்காவைச் சுற்றியுள்ள குழந்தைகளைப் பார்த்து இதழ் விரிந்த புன்னகையோடே உள்ளே சென்று அப்படியே முதல் மாடி ஏறியவன், அங்கிருந்த அமைதியில் குழந்தைகள் அனைவரும் கீழே இருப்பதாய் புரிந்துக் கொண்டு கீழே செல்ல நினைக்க, ஓர் குழந்தையின் அழுகுரல் அவனை நிறுத்தியது.
அந்த குரலில் ஏனோ அவன் உள்ளம் பதறும் ஓர் உணர்வு எழ, விறுவிறுவென அக்குரல் வந்த திசை நோக்கி தன் கால்களை எட்டி வைத்தான்.
அவ்வறையை நெருங்கிய நேரம் தன்னைப்போல் அந்த வீரிட்டு அழும் கதறலில் தன் நெஞ்சை நீவிக் கொண்டவன் அடுத்த அடி வைக்க, அழுகுரல் நின்றது.
அதில் தானும் அசையாது நின்றவன் வியர்த்திருந்த முகத்தைப் புறங்கையால் துடைத்துக் கொள்ள, அக்குழந்தையின் பொக்கைவாய் சிரிப்பு தற்போது அவன் காதை எட்டியது.
அதில் ஒரு ஆசுவாசப் பெருமூச்சுடன் நுழைந்தவன் கண்ணில் அங்கு தொட்டிலில் கை கால்களை ஆட்டி சிரித்துக் கொண்டிருந்த குழந்தை பட, மெல்லிய புன்னகையுடன் அக்குழந்தையை நெருங்கினான்.
அவனைக் கண்டதும் தன் சிரிப்பை நிறுத்திய குழந்தை அவனைப் பார்க்க, தானும் அக்குழந்தையையே பார்த்தான்.
அவனையே பார்த்திருந்த குழந்தை மீண்டும் கை கால்களை ஆட்டிச் சிரிக்க, உற்சாகம் கொண்டு தானும் சிரித்தவன் பாந்தமாக அக்குழந்தையைத் தன் கைகளில் ஏந்தினான்.
அவன் அரவணைப்பில் அக்குழத்தை தாய்வாசம் உணர்ந்தது போலும். அவனது சட்டையை இறுக பற்றிக் கொண்டு அவன் மார்பில் தன் கால்களை உதைத்து சிரிக்க, "பேபிடால்.." என்றபடி குழந்தைக்கு விளையாட்டு காட்டினான்.
அப்போது குழந்தைக்கான பால் புட்டியுடன் உள்ளே வந்த பெண்மணி ஒருவர், "அட தம்பி எப்ப வந்தீங்க?" என்றபடி முன்னே வர,
"கொஞ்ச நேரம் முன்னதான் சுமதிக்கா" என்றான்.
"ம்ம்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள்பா" என்றவர்,
"அட.. உங்ககிட்ட சிரிச்சுகிட்டு இருக்கா. இவ்வளவு நேரம் அப்படியொரு அழுகை தம்பி. பசிக்குதோனு பால் கலக்க போனேன்" என்று கூற,
"நான் கொடுக்குறேன் க்கா" என்றபடி அமர்ந்தவன் பால் புட்டியை வாங்கினான்.
தன் ஒற்றை கரத்தால் அவன் சட்டையை இறுக பற்றிய அப்பிஞ்சு மற்றைய கரத்தை காற்றில் ஆட்டியபடியே பாலைக் குடிக்க,
"பாவம் தம்பி.. பிறந்து பத்து நாளாகாத பிள்ளை. ஆத்தா அப்பன் ரெண்டு பேரும் ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாங்க. பிள்ளை அது பக்கத்து வீட்டாளுங்க கிட்ட இருக்கவும் தப்பிச்சிருக்கு. அவுக கொண்டாந்து கொடுத்துட்டு போனாங்க" என்று சுமதி கூறினார்.
"பேரு (பெயர்) வச்சாச்சா க்கா?" என்று அவன் ஆர்வமாக வினவ,
"இல்ல தம்பி" என்றார்.
"நான் சொல்ற பெயர் வைக்குறீங்களா க்கா" என்று அவன் ஆசையும் ஆர்வமுமாக கேட்க, மறுக்காமல் ஒப்புக் கொண்டார்.
குழந்தை பால் குடித்து முடிக்கவும் லேசாய் தண்ணீர் தொட்டு வாயைத் துடைத்து அந்த ஈரத்தை தன் சட்டையில் துடைத்தவன், தனது தந்தை சரண் மற்றும் தாய் ராதிகாவின் பெயரின் முதல் எழுத்துக்களை வைத்து "சாரா" என்று பெயரிட்டான்.
"நல்லாயிருக்குத் தம்பி" என்று சுமதி கூற,
"சாரா பேபி" என்று அவன் கூறவும் குழந்தை சிரித்தது.
அதில் மேலும் மகிழ்ந்தவனுக்கு சக்கிரவர்த்தியிடமிருந்து அழைப்பு வர, குழந்தையைக் கொடுத்துவிட்டு புறப்பட்டான்.
குழந்தைக்கு தட்டிக்கொடுத்துவிட்டு தொட்டிலில் இட்ட சுமதி அவ்வறையிலேயே துணிகளை அடுக்கிவைக்க,
"பூஊ..ஈஈ..சிரி பாப்போம்.. சிரி" என்று குழந்தைக்கு சிரிப்புக் காட்டிக் கொண்டிருந்தது, சாராவின் கண்களுக்கு மட்டுமே தெரியும் அவளது ஜீபூம்பா!
Comments
Post a Comment